அக்காவின் சங்கீத சிட்சை

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

அ.முத்துலிங்கம்


நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தச் சமயம் பாகிஸ்தானில் ஒரு வழக்கு நடக்கிறது. இப்பொழுது பிரபலமான ஒரு பாடல் பாகிஸ்தானின் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலிக்கிறது. அஆந்தப் பாடல் வரிகள் இப்படி செல்கின்றன:
‘ஓ, பர்வீன் நீ உப்பு மிகுந்தவளாக இருக்கிறாய். ‘ இளம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் பிடித்த இந்தப் பாடல் ஒரேயொரு பெண்ணுக்கு மாத்திரம் பிடிக்கவில்லை. இந்தப் பாடலைப் பாடிய பாடகரின் பெயர் ஆப்ரார் உல்ஹக். அவர்மீது வழக்குத் தொடுத்திருக்கிறார் அந்தப் பெண். அந்தப் பாடல் தன்னையும், பெண்குலத்தையும் இழிவுபடுத்துவதாகக் கூறுகிறார். வழக்கு அவள் பக்கம் தீர்ந்தால் ஆப்ரார் உல்ஹக் தன் மீதி வாழ்நாளின் பெரும் பகுதியை பாடுவதில் கழிக்காமல் சிறையில் உப்பில்லாத ரொட்டி தின்பதில் கழிப்பார்.

என் அக்காவுக்கும் அவர் சிறுவயாதாயிருந்தபோது ஒரு பாடல் பிடிக்காமல் போனது. அப்பொழுது அவருக்கு பல பெயர்கள் வழங்கின. வீட்டிலே அக்கா, தங்கச்சி, மேனை, இராசு, இராஜேஸ்வரி என்ற பெயர்களால் அறியப்பட்டார். ஆனால் குடிசனத்தொகை கணக்கெடுப்பாளர் வந்தபோதுதான் அவருடைய உண்மையான பெயர் என்ன என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. பர்வதராசகுமாரி. என்னுடைய பெற்றோர் இந்தப் பெயரை தேர்ந்தெடுப்பதற்கு எவ்வளவு பிரயத்தனப்பட்டிருப்பார்கள் என்று இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பு வருகிறது.

ஒருநாள் பர்வதராசகுமாரியாகிய, இராஜேஸ்வரியாகிய, இராசு என்ற என் அக்கா பள்ளிக்கூடத்திலிருந்து பாதியில் தலைதெறிக்க வீட்டுக்கு ஓடிவந்தார். அவர் கொண்டுபோன புத்தகங்கள்கூட திரும்பிவரவில்லை. எல்லோரும் பதறிப்போக அம்மா மட்டும் எங்களை கிட்ட அண்டவிடாமல் ‘ஓடு ஓடு’ என்று கலைத்தார். அக்கா பெரியபிள்ளையாகிவிட்டார் என்ற செய்தி எங்கள் பின்னாலேயே வந்தது. சாமத்தியச்சடங்கு முடிந்தபின்னர் அக்கா இனிமேல் பள்ளிக்கூடம் போகத்தேவையில்லை என்பதை ஐயா அறிவித்தார். அப்பொழுது அக்காவின் முகத்தில் தோன்றிய சந்தோசத்தை நான் அதற்கு முன்னர் ஒருபோதும் கண்டதில்லை.

ஆனால் ஐயாவிடம் ஒரு ரகஸ்யத் திட்டம் இருந்தது. அது தெரிந்திருந்தால் அக்கா பள்ளிக்கூடத்துக்கு ஓட்டமாய் ஓடிப் போயிருப்பார். நாள் முழுவதும் தோட்டத்தில் அலைந்து புளியங்காய் பிடுங்கலாம், மாங்காய் சாப்பிடலாம், கொக்கான் விளையடலாம், ஒருவரும் கண்டுபிடிக்கமுடியாத மூலையில் குந்தியிருந்து கதைப் புத்தகம் படிக்கலாம் என்றெல்லாம் அக்கா கனவு கண்டுகொண்டிருந்தார்.

ஒரு நாள் உயரமான, மெலிந்து எலும்பு தெரியும் ஒருத்தர் ஐயாவைப் பார்க்க வந்திருந்தார். விபூதி பூசி, பொட்டு வைத்து, கக்கத்தில் குடையை வைத்துக்கொண்டு அவர் ஒற்றைக் கையை வீசி வீசி நடந்துவந்தது விசித்திரமாக இஆருந்தது. அவர் தன்பாரத்திலேயே நுனியிலே வளைந்துபோய் இஆருந்தார். அவசரமாக உட்கார்ந்தால் நடுவிலே முறிந்துவிடுவார் போலவும் பட்டது. நாங்கள் எங்களுக்குள் பந்தயம் கட்டினோம். மாட்டுத்தரகர். சாதகம் பார்ப்பவர். குடை திருத்துபவர். எல்லா ஊகங்களுமே பிழைத்துவிட்டன. அவர்தான் அக்காவின் கனவுகளை நிர்மூலமாக்க ஐயாவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பாட்டு வாத்தியார். பெயர் பாலகிருஷ்ணன். அடுத்த நாலு வருடங்களும் அக்கா என்ன என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு ஆந்த நெடிய மனிதரிடம் விடப்பட்டது.

அம்மா ஆகக்குறைவாகக் கிழிந்த பாயை விரித்துப் போட்டார். பாட்டு வாத்தியார் உட்கார்ந்ததும் அவருக்கு ஒரு லோட்டா நிறையத் தண்ணீர் கொடுக்கவேண்டும். வழக்கமாக அதை நான்தான் செய்வேன். வாத்தியார் தலையை பின்னால் வளைத்து முகட்டைப் பார்ப்பார். மந்திரவாதி வாய்க்குள் வாளை நுழைப்பதற்கு முன் தலையை பின்னால் சாய்ப்பதுபோல அது இஆருக்கும். பிறகு லோட்டா தண்ணீரை இரண்டு கைகளாலும் நேராகத் தூக்கி தலைக்குமேலே பிடித்து மெள்ள சரித்து ஊற்றுவார். அது நீர்வீழ்ச்சிபோல நேராக அவர் வாய்க்குள் சென்று இறங்கும். ஒரு சொட்டு நீர் இந்தப்பக்கம் அந்தப் பக்கம் சிந்தாது. ஒரே மூச்சில் முழு லோட்டாவும் முடிந்துவிடும். இதனிலும் பெரிய பாத்திரம் என்றால் அதையும் குடித்து தீர்த்துவிடுவார் என்றே நினைக்கத் தோன்றும்.

அக்காவின் சித்திரவதை ஸ்வர வரிசைகளில் ஆரம்பித்தது. வீடு நிறைய ஸ்வரங்கள் சத்தம் போடும். காலை, பகல், மாலை எல்லாம் அதே சத்தம்தான். அக்காவுக்கு சங்கீதத்தில் இயற்கையான ஈடுபாடு கிடையாது. குரலையும் ‘கருக்கு மட்டைக் குரல்’ என்று அம்மா வர்ணித்திருக்கிறார். வாத்தியார் கொடுத்த வேலையை செய்து முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் அக்கா, பாவம், கத்தினார். நிலம், கூரை, சுவர் எல்லாம் சங்கீதமாக அதிர்ந்தது.

அருமையான மாலைப் பொழுதுகளில் அக்கா தோட்டத்தில் அலையாமல், கொக்கான் விளையாடாமல், கதைப் புத்தகம் படிக்காமல் ஆர்மோனியப்பெட்டியை முன்னுக்கு வைத்து இழுத்துக்கொண்டு சரளி வரிசையை பாடினார். அது முடிவை எட்டியபிறகும், இடத்தை விட்டு அசையாமல்
ஸஸ ரிரி கக
ஸஸ ரிரி கக மம
ரிரி கக மம
ரிரி கக மம பப
என்று ஜண்டை வரிசையை ஆரம்பித்தார். சதா இப்படி சாதகம் பண்ணிக்கொண்டு ஆஇருப்பது பார்க்க பரிதாபமாக இஆருக்கும். நான் அக்காவை முன்பக்கமாகவோ, பின்பக்கமாகவோ தாண்டும்போது குனிந்து ஆர்மோனியத்தின் வெள்ளைக்கட்டையையோ, கறுப்புக்கட்டையையோ அமத்துவேன். அது புதுவிதமான சத்தத்தையும், விநோதமான சங்கீதத்தையும் எழுப்பும். அக்கா கைகளை வளைத்து எட்டி என் மணிக்கட்டில் தட்டி ‘சீ, போடா’ என்று விரட்டுவார்.

பாலகிருஷ்ணன் இந்தியாவில் நாலுவருடம் தங்கி சங்கீதம் பயின்றவர். மேடையில் கச்சேரி செய்யும் அளவுக்கு அவர் சங்கீத ஞானத்தை வளர்க்கவில்லை. அந்தக் காலத்தில் பிரபலமான கீர்த்தனைகள் சிலவற்றை பாடமாக்கியிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்தபோது வீடு வீடாகப் போய் சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்குத்தான் அவருக்கு அறிவு கூடியிருந்தது.
அக்காவுக்கு ஸ்வர வரிசைகளில் ஒருவித சாமர்த்தியம் வந்ததும் பாட்டுவாத்தியார் ‘யாரோ, இவர் யாரோ’ என்ற கீர்த்தனையை சொல்லிக்கொடுத்தார். இது பைரவி ராகத்தில் அமைந்தது. அருணாசலக்கவிராயர் அல்லும்பகலும் பாடுபட்டு அருமையாக எழுதிய பாட்டு. அக்கா அதைச் சப்பு சப்பென்று பாடமாக்கி உருத்தெரியாமல் ஆக்கிவிட்டார். பாட்டு வாத்தியாருக்கு திருப்தியில்லை. ‘அம்மா, இஆது ராமரும் சீதையும் முதன்முதலாக சந்திக்கும் இடம். ராமன் ஆர் என்று தெரியாமல் சீதை இரங்கிப் பாடுவது. நீ பாடும்போது குரலில் ஏக்கம் இருக்கவேண்டும்; உருகிப்பாடம்மா, உருகு’ என்று சொல்வார்.

அக்கா அதைப் பிடித்துக்கொண்டு மெழுகுவர்த்திபோல உருகினார். ‘யாரோ இவர் யாரோ’ என்று அக்கா காலை, மாலை என்று பார்க்காமல் உருகுவது வீட்டிலும், வளவிலும், ரோட்டிலும் கேட்டது. தெருவிலே போகிற யாரோ ஒருத்தன் ஒருநாள் பாட்டைக்கேட்டுவிட்டு ‘அது நான்தான்’ என்று உரக்கக் கத்திவிட்டு மறைந்தது ஐயாவுக்கு பிடிக்கவில்லை. அந்த ஆள் யார் என்பதையும் ஐயாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றே அந்தப் பாடலுக்கு தடை விழுந்தது. ஐயா விதித்த முதல் தடை அதுதான்.

பாட்டு வாத்தியார் ஐயா ஏன் அந்த தடையை போட்டார் என்பதைக்கூட கேட்டுத் தெளியாமல் அடுத்த கீர்த்தனையை ஆரம்பித்தார்.
காரணம் கேட்டுவாடி – சகியே
காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத
காரணம் கேட்டுவாடி.
பந்துவராளியில் அமைந்த இந்தக் கீர்த்தனை பந்துபோல பல இடங்கள் சுற்றி அலைந்தபின் அக்காவிடம் வந்து சேர்ந்தது. அக்கா ஆஇரவும் பகலும் சாதகம் பண்ணினார். எல்லாம் நல்லாகவே நடந்தது, எல்லாம் நல்லாகவே நடக்கிறது, இனிமேலும் நல்லாகவே நடக்கும் என்று நம்பிக்கை பிறந்தபோது திடீரென்று அந்தப் பாட்டுக்கும் ஐயாவிடம் இருந்து தடைவந்தது. சிதம்பரநாதன் என்று ஓர் இளம்பையன் எங்கள் கிராமத்தில் எங்கோ வசிக்கிறான் என்ற தகவல் ஐயாவுக்கு வந்து சேர்ந்திருந்தது. உடனே தடைச் சட்டத்தை ஐயா பிரயோகித்தார். பாட்டு வாத்தியாருக்கு அப்பவும் என்ன விசயம் என்று தெரியாது. ஐயாவும் சொல்லவில்லை, அடுத்த பாடலை ஆரம்பிக்கச் சொன்னார். பாட்டுவாத்தியாருக்கு எரிச்சலான எரிச்சல். இஆப்படிக் காரணம் தெரியாமல் வரிசையாக பாடல்களை அரைவாசியில் நிறுத்துவது அவருக்கு அவமானமாகப் பட்டது. ஒவ்வொரு பாடலாக இஆப்படி தாவிக்கொண்டே போனதால் அக்காவுக்கும் தன் வித்துவத்தை காட்டும் சந்தர்ப்பம் தள்ளிக்கொண்டு போனது.
அடுத்த கீர்த்தனையில்தான் ஐயாவுக்கும், பாட்டுவாத்தியாருக்கும் இஆடையிலான சச்சரவு உச்சநிலையை அடைந்தது. பாட்டுவாத்தியார் மிகவும் கவனமாகவே தனது அடுத்த பாட்டை தெரிவு செய்தார். கோபாலகிருஷ்ணபாரதியாரின் கீர்த்தனை. அது இஆப்படித் தொடங்கியது.
எப்போ வருவாரோ
எந்தன் கலிதீர ஆ ஆ ஆ ஆ
எப்போ வருவாரோ
இதுதான் பல்லவி. அக்காவும் அனுபவித்துப் பாடினார். ஒருமாதமாக பல்லவி அப்பியாசம் நடந்தது. பல்லவி முடிந்ததும் அநுபல்லவியை ஆரம்பித்தார். அநுபல்லவியில் ஒரு குண்டு வந்து இறங்கப்போவது ஐயாவுக்கோ, பாட்டுவாத்தியாருக்கோ தெரியாது. அக்கா, பாவம் அவருக்கும் தெரியாது.
எப்போ வருவாரோ
எந்தன் கலிதீர ஆ ஆ ஆ ஆ
எப்போ வருவாரோ
செப்பியதில்லை சிதம்பரநாதன்.

ஐயாவுக்கு தலை சுற்றியது. ஒருமாத காலமாக அநுபல்லவியை ஒளித்துவைத்துவிட்டு இப்பொழுதுதான் வெளியே எடுத்து விடுகிறார் என்று. பாட்டுவாத்தியாரை பிடிபிடியென்று பிடித்துவிட்டார். ‘என்ன காணும் பிறகும் சிதம்பரநாதன், சிதம்பரநாதன் என்று சொல்லிக்கொடுக்கிறீர்?’ என்றார் ஐயா. ‘நான் என்ன செய்ய. எனக்கு தெரிந்த பாடலைத்தானே நான் சொல்லிக்கொடுக்கமுடியும். இது கடவுளின்ரைஆ பேர். இது போனால் இன்னொரு பேர். நானா பாடலை எழுதினேன். இது தோதுப்படாது.’ அவர் சால்வையை உதறி தோளிலே போட்டுக்கொண்டு திடீரென்று எழும்பி நின்றபோது கூரையை இஆடித்துவிடுவார்போல தோன்றியது. பிறகு எப்படியோ இருவரும் சமாதானமானார்கள்.

பாட்டுவாத்தியாருடைய கையிருப்பு வேகமாகக் குறைந்தது. அடுத்த பாடலை தொடங்கு முன்னரே ஐயாவுக்கு முழுப்பாடலையும் படித்துக் காட்டினார். அதிலே ஒரு ஆணின் பெயர் வந்தது. ஆனால் அந்தப் பெயரில் ஒரு ஆண்பிள்ளையாவது எங்கள் ஊரில் கிடையாது என்று தீரவிசாரித்து உண்மை அறிந்துகொண்டுதான் ஐயா அனுமதி கொடுத்தார்.
கனகசபாபதி தரிசனம் ஒருநாள்
கண்டால் கலி தீரும்.
அக்கா சாதகம் செய்த அத்தனை பாட்டுக்களிலும் அக்கா உருகி, உணர்ந்து, அனுபவித்துப் பாடியது அந்தப் பாட்டுத்தான். பல மாதங்களுக்கு இந்தப் பாடலை அக்கா திறம்பட சாதகம் செய்து குறைவில்லாமல் வெளிப்படுத்தினார். அக்கா பாவத்தோடு பாடும்போது மகிழ்ச்சியாக இருந்தார்; துக்கமாகவும் இருந்தார். யாராவது விருந்தினர் வரும்போது அக்கா அந்தப் பாடலையே பாடிக் காண்பித்தார். அந்தச் சமயங்களில் அக்கா உருகியதுபோல நந்தனார்கூட உருகியிருக்கமாட்டார்.
ஒருநாள் எதிர்பாராத இஆடத்திலிஆருந்து தடை வந்தது. பாட்டுவாத்தியார் கேட்டபோது அக்கா அந்தப் பாட்டை பாட மறுத்துவிட்டார். அம்மா கேட்டபோதும் இல்லையென்றார். ஐயாவுக்கும் அதேதான். திடீரென்று என்ன நடந்தது, காரணம் கேட்டபோது அதற்கும் அக்கா வாயை திறக்கவில்லை. ஆர்மோனியப் பெட்டியை பிடித்தபடி தலையைக் குனிந்து கீழ் சொண்டுகளை மேற்பக்களால் கவ்விப் பிடித்துக்கொண்டு, அசையாமல் உட்கார்ந்திருந்தார். அன்றும், அதற்கு அடுத்த நாளும். அடுத்த வாரமும். அடுத்த மாதமும் அக்கா அந்தப் பாட்டை பாடவில்லை. ஏனோ அவருக்கு அந்தப் பாட்டு திடீரென்று பிடிக்காமல் போய்விட்டது. அக்காவின் பாட்டு அகராதியில் இஆருந்து அது என்றென்றைக்குமாக அகற்றப்பட்டுவிட்டது.

இஆது எல்லாம் நடந்து ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டன. சமீபத்தில் ஒருநாள் அக்காவிடம் சிறுவயதில் சங்கீதம் கற்ற சம்பவத்தை நினைவூட்டினேன். அவருக்கு ஞாபகமில்லை. ‘யாரோ இஆவர் யாரோ’ பாட்டு நினைவிருக்கிறதா என்றேன். இஆல்லை என்றார். ‘எப்போ வருவாரோ எந்தன் கலிதீர’, ‘காரணம் கேட்டுவாடி’ ஒன்றுமே அவருக்கு ஞாபகம் இஆல்லை.

‘கனகசபாபதி தரிசனம்’ என்றேன். இஆருட்டில், எதிர்த் திசையிலிருந்து வேகமாக வந்த காரின் வெளிச்சம் முகத்திலே பட்டதுபோல ஒரு பிரகாசம் தோன்றி மறைந்தது. பாகிஸ்தான் பெண்ணின் கதையை சொன்னேன். அவளுக்கு ஒரு பாட்டுப் பிடிக்காமல் அதற்கு வழக்குப் போட்டிருக்கிறாள் என்றேன். ‘அவளுக்கு என்ன பிரச்சினையோ’ என்றார். ‘அது சரி, அவளுக்கு ஒரு காரணம் இருந்தது. பெண்களை அந்தப் பாடல் கேவலப் படுத்துகிறதாம். ‘இனிப்பு கூடியவளே’ என்று பாடியிருந்தால் வழக்கு போடுவாளா’ என்றேன். அக்கா கொஞ்சம் யோசித்துவிட்டு ‘இனிப்பு கூடியவளே’ என்றால் அது பொய். உப்பு என்றால்தான் உண்மை, உண்மைதான் சுடும்’ என்றார். ‘ஆனால் நீங்கள் எதற்காக கனகசபாபதி பாட்டை பாட மறுத்தீர்கள். எல்லோரும் கெஞ்சிக் கேட்டார்களே?’ என்று வினவினேன். உடனே ‘நீ என்ன கதை எழுதப்போறாயோ?’ என்று என்னை நிமிர்ந்து கடுமையாகப் பார்த்தார்.

அக்காவின் கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆகியிருந்தன. பிள்ளைகள் எல்லாம் மணமுடித்து நல்லாயிருந்தார்கள். ‘யோசிக்க இனிமேல் என்ன இருக்கு, என்னிடம் சொல்லலாம்தானே, என்ன நடந்தது?’ என்று மறுபடியும் துளைத்தேன். அக்காவின் பார்வை அவருக்கும் எனக்கும் இருந்த தூரத்தின் நடுவில் நின்றது. தன்னுடைய 68 வயது கீழ் சொண்டை மேற்பற்களால் இழுத்து கடித்தபடி யோசித்தார். ‘என்ன, காதலா?’ என்றேன். அக்கா தன் கைகளை வளைத்து எட்டி என் மணிக்கட்டில் தட்டி ‘சீ, போடா’ என்றார்.

கனகசபாபதி பாட்டை பாட மறுத்த பிறகும் அக்காவின் சங்கீத சிட்சை தொடர்ந்தது. மாரிமுத்தாப்பிள்ளையின் ‘காலைத்தூக்கி நின்று’ பாட்டை வாத்தியார் சொல்லிக்கொடுத்தபோது ஒருவித எதிர்ப்பும் எந்தப் பக்கத்திலிருந்தும் கிளம்பவில்லை. அதிலே ஆண் பெயர்கள் இல்லை என்பதை சலித்துப் பார்த்து உறுதிசெய்த பிறகுதான் ஐயா அனுமதித்தார். அக்காவும் தன் சக்திக்கு இயன்றமாதிரி அந்தப் பாடலை திறமையாகப் பாடினார். ‘வேலைத்தூக்கும் பிள்ளை’ என்று வரும் இடத்தில் மூச்சைப் பிடித்து உச்சத்தில் எடுக்கும்போது அக்காவின் தொண்டை நரம்புகள் நீலமாக மாறி தள்ளிக்கொண்டு நிற்கும். ஆனாலும் ‘கனகசபாபதி தரிசனம்’ போல உருக்கத்துடனும், உணர்ச்சியுடனும் ஒன்றிப்போய் அக்காவால் பாடமுடியவில்லை. அதுவே அக்கா பாடம் கேட்ட கடைசிப் பாட்டு என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு சங்கீதத்தின் கரையை அக்கா கண்டுவிட்டபடியாலோ என்னவோ அப்பா பாட்டு வாத்தியாரை நிற்பாட்டினார்.

அக்காவுக்கு கடைசிப் பாட்டு என்றாலும் எங்கள் கிராமத்துக்கு அதுவே முதல் பாட்டாக அமைந்தது. கொக்குவிலிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அந்தப் பாடலின் பிரபலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. அன்று தூக்கிய கால் இன்றுவரை கீழே இறங்கவே இல்லை.


amuttu@gmail.com

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்