அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

வளவ துரையன்



“ஒரு நவீன கவிதை, அதற்குப்பின் அக்கவிதையின் மையத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உணர்த்துவது போல் ‘நச்’சென்று ஒரு ஹைக்கூ” இதுதான் ஹைபுன்னின் வடிவம்.

அன்பாதவனின் ‘மாயவரம்’தான் தமிழில் வெளிவந்துள்ள தனிப் படைப்பாளியின் முதல் ‘ஹைபுன்’ தொகுதி. இதற்கு வரவேற்புக் கூறுவதோடு இம்முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

‘கவிஞனை சூழலின் கைதி’ என்பார்கள். பெரும்பாலும் அவனுடைய கவிதையின் கருப்பொருள் இயற்கையாகவோ செயற்கையாகவோ அவனுக்கு விதிக்கப்பட்டுள்ள சூழலைப் பொருத்தே அமையும். 96 கவிதைகள் உள்ள இத்தொகுப்பில் சுமார் 59 பாடல்கள் தன்னுணர்ச்சிப் பாக்களாக அதிலும் அகத்துறை சார்பாக இருக்கின்றன. ஏனெனில் பணியின் நிமித்தமாக சொந்த பந்தத்தை விட்டு வெகுதூரம் விலகி மும்பையின் இயந்திர வாழ்வில் அவர் உழன்று கொண்டிருப்பதால் இவ்வாறு அமைந்துள்ளன போலும்.

ஆனால் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. மகுடேசுவரனின் காதல் காமக் கவிதைகள் முகத்தில் அறைவது போல இருக்கும். அன்பாதவனின் கவிதைகளைப் படிக்கையில் மெல்லிய மயிலிறகால் வருடிப்பெறும் இனிய சுகத்தை உணர முடிகிறது.

தலைவியின் மென்காந்த விரல் பிசைந்து தரும் சோறு அமுதமாய் இனிக்கிறது தலைவனுக்கு. இது சங்ககாலம் தொட்டு வரும் நிகழ்வு. “மென்விரல்கள் காதலையும் பிசைந்தூட்ட/துளித்துளியாய் இறங்குகிற தென்னுள்/அன்பின் சாரம்” என்று அன்பாதவன் எழுதுகிறார். தலைவியின் இவ்வினைக்குத் தலைவன் எதிர்வினை புரிகிறான். அதைக்கண்டு “விழிமூடிப் பறக்கின்றன வெட்கத்துடன்/வெளி கடக்கும் பறவைகள்” அவன் என்ன எதிர்வினை செய்தான் என்பதை ஊகிக்க விடுகிறார்.

இந்தச் சம்பவத்தைக் கவிதையாக்கி உணவு தொடர்பான ஹைக்கூ எழுவது போல மறைமுகமாகக் காதலைக் காட்டுகிறார் அன்பாதவன்.

“விரதமிருக்கிறாய்/நானோ பட்டினியாய்/சேர்ந்துன்போம் விருந்து வா”. ஆனால் 57ஆம் கவிதையிலும் “முடிவுக்கு வரட்டும் உன் விரதமும் என் பட்டினியும்” என்பதைத் தவிர்த்திருக்கலாம்.

தலைவனின் வலது கன்னத்தில் தலைவி முத்தமொன்று இடுகிறாள். தலைவன் கேட்கிறான் கவிதையில் “சாலையைக் கடக்கும்போது கவனிப்பது/இருபுறமும்தானே/ இப்போது மட்டுமென்ன ஒருபக்க நீதி/இடது கன்னம் உன்மீது/முத்த நஷ்ட வழக்கு தொடர்ந்திட்டால்/காப்பாற்ற முடியாதென்னால்/” மேலும் கவிஞரின் தலைவன் “இடது கன்னமென்ன ‘விலக்கப்பட்ட கனி’யா'” என்று கேட்கிறான். இந்த உவமை மிகப் பொருத்தமானது. இறுதியில் விலக்கப்பட்ட கனியும் சுவைக்கப்படுகின்றதன்றோ. இதற்குப் பொருத்தமாக “தாமதமும் மறுக்கப் படுவதே/நீதியில் மட்டுமல்ல/ காதலிலும் கூடத்தான்” எனும் ஹைக்கூ அமைந்துள்ளது.

இன்னும் பல முத்தக் கவிதைகளும் ஊடல் கவிதைகளும் தொகுப்பில் விரவி கிடக்கின்றன.

ஒரு சமூகப் பொறுப்புள்ள படைப்பாளன் தன்னைப் பாதிக்கும் புறச்சூழல்களைக் கண்டும் காணாதது போல் ஒதுக்கி விட முடியாது. இதில் உள்ள பல கவிதைகள் இதை உணர்த்துகின்றன.

“நாற்காலிகளுக்காக நாற்காலிகளால்/நாற்காலிகள் பறக்கும்/கூட்டங்களைப் பார்த்திருக்கிறோம்” என்று நகராட்சிக் கூட்டங்கள் குறித்து வேதனையுறுகிறார்.

“பூத்தொடுத்து சூட்டிக் கொள்வதையும்/புடவை பண்ட வகைகளிலுமே/ சுதந்திரம் சுவைக்கிறாய் நீ” என்று பெண்ணைப் பார்த்து பரிதாபம் கொள்ளும் கவிதையும்

“காலமெல்லாம் சுவடுகளைப் பதிக்கின்றன/நடுநிசி நாய்கள்” என்று சிற்றிதழ் மோதல்களைச் சாடும் கவிதையும் தொகுப்பிற்குக் களம் சேர்க்கின்றன.

உயிர்பலி தடைச்சட்டம் வருகிறது. ஆனால் கோயிலிலேயே உயிர்பலி விழுகிறது. அந்த உயிர்பலி குறித்து எள்ளல் கவிதை வருகிறது. “கட்டளையிட்டது மடம்/ கைமாறியது பணம்/ காமாட்சி மடியில் பிணம்”

இன்னும் அரசு ஊழியர், ஆசிரியர் வேலை நீக்கம் குறித்து, கும்பகோணத்தில் பள்ளிக் குழந்தைகள் கருகியது குறித்து, கண்ணுக்குப் புலனாகா பண்பாட்டுப் படையெடுப்புகள் குறித்து எல்லாம் தாக்கப்பட்ட கவிஞர் அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.

ஊடகங்களின் விளம்பரங்கள் மனித வாழ்வைச் சீர்குலைப்பது பற்றி “பொய்யை நிறம் மாற்றிச் செழிக்கிறது/ஊடக விபச்சாரம்” எனும் கவிதை அடிகளில் உள்ள ஊடக விபச்சாரம் எனும் சொற்றொடர் கவிதையை மனத்தில் அழுத்தமாகப் பதிய வைக்கிறது. இதற்கான ஹைக்கூ இது.

“விளம்பரங்களில் தொலைந்து/விமர்சனங்கள் ஏதுமின்றி/கழியும் வாழ்வு” இன்னும் துனைவியை இரண்டாம் தாய், மகா மனுஷி, பிரிய பிசாசு, மோக வழிகாட்டி, காமச்சூறாவளி என்றெல்லாம் எழுதும் போது அக்கவிதைகளுடன் வாசகனும் போதை ஏறி தள்ளாடுகிறான்.

ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணும் 31ஆம் கவிதையும், 38ஆம் கவிதையாக ஆசைகளை அடுக்கி வைத்திருப்பதும், பால், பால் என அடுக்கும் 69ஆம் கவிதையும் தொகுப்பில் ஒட்டாமல் தனித்து நிற்கின்றன. தவிர்த்திருக்கலாம்.

நூலை மிகச்சிறப்பாய் வெளியிட்டுள்ள இருவாட்சிக்குப் பாராட்டுகள்.

(வெளியீடு: இருவாட்சி, பெரம்பூர், சென்னை – 11. பக்: 102; விலை : ரூ.50)


valava_duraiyan@yahoo.com

Series Navigation

வளவ.துரையன்

வளவ.துரையன்