போரின் தடங்கள்

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

பாவண்ணன்



எளிமை, தன்னிறைவு, ஆன்மிக எழுச்சி ஆகிய கருத்தாக்கங்களை மையமாகக்கொண்டு புதிய தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளில் காந்திய வழியைப் பின்பற்றும் இளைஞர்களுக்கு இருந்த ஆர்வம் மகத்தானது. ஜெகந்நாதனும் கிருஷ்ணம்மாளும் அத்தகு ஆர்வ எழுச்சியுடன் அறவழிப்போரில் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து தோன்றி தம்மை இணைத்துக்கொண்டவர்கள். சில சந்திப்புகளைத் தொடர்ந்து தம்பதியினராகவும் மலர்ந்தவர்கள். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அவர்கள் நம் நாட்டின் அடித்தட்டு மக்கள் உயர்வுக்காக ஆற்றிவரும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. தொண்டர்களாக பொதுவாழ்வில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இவர்களுடைய வாழ்க்கைமுறை மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது. இந்தத் தமிழ்த்தம்பதியினரின் வாழ்க்கைவரலாறு உண்மையில் தமிழர் ஒருவரால் தமிழில்தான் முதன்முதலாக எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக அப்படி நிகழவில்லை. இவர்களுடைய தொண்டுவாழ்வை அறிந்து இத்தாலியிலிருந்து வந்து இவர்களோடேயே மாதக்கணக்கில் தங்கி உரையாடி தகவல்களைக் கேட்டறிந்து ஒருங்கிணைத்த லாரா கோப்பா என்னும் பெண்மணியின் முயற்சியால்தான் இவர்களுடைய வாழ்க்கை வரலாறு வெளியானது. இதைத் தொடர்ந்து இந்த நு¡லால் கவரப்பட்டு இத்தாலியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் ஆல்பர்ட். அதை இப்போது தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் மகாதேவன். வெளியிட்டிருப்பவர் விகடன் பிரசுரத்தார்.

அன்பர்களால் அம்மா என்றும் அப்பா என்றும் பாசத்தோடு அழைக்கப்படும் கிருஷ்ணம்மாள் -ஜெகந்நாதன் தம்பதியினரைச் சுருக்கமாகவும் கவனமாகவும் சமுதாய வரலாற்றுப் பின்னணியுடன் நூலின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்துகிறார் லாரா கோப்பா. அதைத் தொடர்ந்து அவர்களுடைய போராட்ட வாழ்க்கை முன்வைக்கப்படுகிறது. ஆசிரம வாழ்க்கை, பாதயாத்திரை, யாசகம் பெறுதல் ஆகிய செயல்பாடுகளில் இருக்கும் நுட்பமான உட்பொருளை முழு அளவில் உள்வாங்கிக் கொண்டதோடு மட்டுமின்றி பொருத்தமான இடங்களில் அவற்றை வெளிப்படுத்தவும் செய்கிறார் லாரா கோப்பா. பழங்கால ஆசிரம வாழ்வுக்கு நவீன வடிவம் கொடுத்தவர் காந்தியடிகள். ஆசிரமம் சில வாழ்க்கை முறைகளை முன்வைக்கிறது. கூடி உழைத்தல், ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல், போராட்டங்களில் பங்கெடுத்தல், போராட்டங்களில் பங்கெடுப்பவர்களின் குழந்தைகளுக்குப் பாதுகாப்பளித்தல் என்பவை அவ்வாழ்வின் சில நெறிகள். இந்த உலகில் இருந்துகொண்டே , இதற்கு வெளியில் இருக்கும்வகையிலான ஒரு வாழ்க்கையை அமைத்துத் தருகின்றன இந்த ஆசிரமங்கள். பாத யாத்திரை என்பது ஒரு விஷயம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க மேற்கொள்ளப்படும் அரசியல் செயல்பாடாகும். யாசகம் பெறுதல் என்பது பிச்சை எடுத்தலல்ல. நில உடைமையாளர்களைத் தனிமைப்படுத்துவதுமல்ல. கிராமம் முழுவதுமான ஒன்றை சமுதாய அமைப்புக்குள் அனைவரையும் கொண்டுவருதல் என்பதே இந்த முயற்சியின் அடிப்படை எண்ணம். மனத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதே முக்கிய நோக்கம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீக அம்சத்தை வெளியே கொண்டுவருதல். அதன் மூலம் மழையையும் செல்வந்தர்களையும் சமுதாயம் என்னும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாக உணரவைத்தல். இப்படி பின்னணிகளுடன் விளக்கங்களைக் கொடுக்கும்போதே தம்பதியினரின் வாழ்க்கை வரலாற்றின் திசையை நுட்பமாக வாசகர்களுக்கு உணர்த்திவிடுகிறார் லாரா கோப்பா.

தம்பதியினருடன் மாறிமாறி நிகழ்த்திய உரையாடல்கள் வழியாகவும் பிள்ளைகளாகிய சத்யா, பூமிகுமார் ஆகியோரின் நினைவுகள், வழக்கறிஞர் மாரியப்பன், மற்றொரு காந்தியவாதியான நடராஜன், லீலா ஆகியோரின் தன்னுரைகள் வழியாகவும் இருபது அத்தியாயங்களாக போராட்டவாழ்க்கை முன்வைக்கப்படுகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் காந்திய வழியில் போராடியவர் என்றாலும் சாதியளவில் ஒதுக்கப்பட்டு வறுமையில் தவிக்கும் அடித்தள மக்களுக்கு அரசியல் விடுதலையால் பெரிய அளவில் விளையப் போவதில்லை என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜெகந்நாதன். அவர்களுக்கு பொருளாதார விடுதலை கிடைத்து சொந்தமாக நிற்க முடிந்தால்தான் அவர்களுடைய ச்முக மதிப்பு உயரும். அவர்களுக்கு துண்டு நிலமாவது சொந்தமாக இருந்தால்தான் அந்த ச்முக மதிப்பை அவர்களால் அடையமுடியும். விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் பொருளாதார மேம்பாடு என்பது நிலங்களைக் கைவசம் வைத்திருந்தால்தான் முடியும். இப்படிப்பட்ட சிந்தனைகள் அவர் மனத்தில் ஆழமாக வேரோடத் தொடங்கியிருந்ததால் பூதான இயக்கத்தை முன்னின்று நடத்திய வினோபா பாவேயுடன் இணைந்து இயங்கினார்.

வினோபாவின் பூதான இயக்கத்தைப்பற்றிய குறிப்புகள் பரவசமூட்டும் வகையில் நூலில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு நாற்பது கி.மீ. தொலைவை தொண்டர்களுடன் பாத யாத்திரையாகவே கடந்து , வழியில் தென்படும் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி நிலமுடையவர்களையும் சந்தித்து உரையாடி, அவர்களுடைய நெஞ்சில் இரக்க உணர்வு சுரக்கும்படி செய்கிறார் வினோபா. உரையாடலின் முடிவில் அவர்கள் தாமாகவே தமக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களைத் தானமாக வழங்குகின்றனர். தானமாகக் கிடைத்த அந்த நிலங்களை அந்தக் கிராமத்துச் சொத்தாக மாற்றி நிலமற்றவர்களுக்கு அவற்றை வழங்குகிறார். அனைவரும் கூடி உழைத்து, பயன்களை பொதுவில் பிரித்து எடுத்துக்கொள்ளும் வகையாக சொல்லித் தருகிறார். வினோபா பாவேயுடன் சில ஆண்டுகள் தங்கிப் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அந்த இயக்கம் §வ்ருன்றப் பாடுபடுகின்றனர் ஜெகந்நாதன் தம்பதியினர்.

வினோபா முன்வைத்த நடவடிக்கைகளோடு தன் பட்டறிவின் அடிப்படையில் மேலும் சில நடவடிக்கைகளை ஜெகந்நாதன் இணைத்துக்கொள்கிறார். நிலங்களைப் பிரித்து நிலமற்றவர்களுக்கு அளிப்பதோடு தொடக்கக்காலத்தில் விதைத்துப் பயிரிடத் தேவையான செலவுகளுக்கு அவசியமான பணஉதவியைப் பெற்றுத் தருவதும் பாசனத்துக்கு வழிவகுப்பதும்கூட முக்கியப் பணிகளாகவே அவருக்குத் தோன்றுகிறது. எனவே அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்வதையும் இயக்கத்தின் நடவடிக்ககைகளில் ஒரு பகுதியாகவே அவர் நினைத்தார். பண உதவிக்காக அவர் நாடிய இடங்கள் அரசு மற்றும் வங்கிகள். விண்ணப்பக் கடிதங்களை வாங்கிவைக்கும் அரசுக் கோப்புகள் ஒருபோதும் திறக்கப்படுவதில்லை. வங்கிகளோ விவசாயத்தை ஒரு தொழிலாகவே கருதுவதில்லை. செயல்முறை சார்ந்த இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட வெளிநாட்டு நண்பர்களின் பணஉதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. விரிவாக்கத்தின் முதல் கட்டம் இது. நிலத்தைத் தானமாகப் பெறும்போது, பணத்தைத் தானமாகப் பெற்று அந்த நிலத்தை மேம்படுத்த உழைப்பதில் பிழையில்லை. தரிசு நிலத்தை அல்லது பாசன வசதியில்லாத நிலத்தைப் பெற்று, எல்லா வகைகளிலும் அதன் மேம்பாட்டுக்கு உழைப்பதைவிட எல்லா வசதிகளும் உள்ள விவசாய நிலங்களையே நேரிடையாக குறைந்த விலைக்கு வாங்கி , உடனடியாக உழைத்துப் பயன்தரத்தக்க வகையில் நிலமற்றவர்களுக்குத் தானமாக வழங்குவதால் விளையும் பயன்கள் மிகுதி. விரிவாக்கத்தின் இரண்டாவது கட்டம் இது. இந்த மாற்றங்களில் வினோபாவுக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. மனிதர்களின் நெஞ்சில் உறைகிற ஆன்மிக உணர்வை மீட்டியெழுப்பி, நிலமுள்ளவர்கள், நிலமற்றவர்கள் அனைவரையும் ஒரே தரத்தினராக உணரவைத்து, நிலங்களைக் கிராமத்தின் சொத்தாக மாற்றி அவற்றில் உழைக்கிறவர்களாக அனைவரையும் மாற்றுவதே அவர் எண்ணம். செயல்முறை சார்ந்த இந்த முரண்பாட்டின் விளைவாக குமரப்பா போன்ற தொண்டர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேறக் காரணமாகிவிடுகிறது. ஆனால் அதற்கிடையில் தமிழ்நாட்டில் பலமடங்கு அளவு முன்னேறி, இயக்கத்தை ஆழமாக §வ்ருன்றவைத்து, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை நிலமற்றவர்கள் பெறக் காரணமாக அமைந்துவிட்டதால் தம்பதியினரின் தொண்டு வாழ்வுக்கு எந்தக் குறையும் ஏற்படவில்லை.

இயக்கப்பட்டறிவே இந்த மாற்றங்களை அறிமுகப்படுத்தத் தம்பதியினருக்குத் தூண்டுகோலாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் நிலமுள்ளவர்கள் வழியாக கிராம தானமாகப் பெற்ற நிலத்தில் நிலமற்றவர்கள் அனைவரும் கூடி கூட்டுப் பண்ணைபோலச் செயல்பட முடிவுசெய்கிறார்கள். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மாதங்களில் எல்லாம் சுமுகமான விஷயமாகத் தோன்றுகிறது. உழுவது, விதைப்பது போன்ற உடல் உழைப்பு சார்ந்த பணிகளை இணைந்து செய்கிறார்கள். விதைகள், உரம், உழுவதற்கான கருவிகள் வாங்குவதற்குத் தேவையான பணத்தை அக்கம்பக்கத்தில் உள்ள நகரங்களுக்குச் சென்று நன்கொடையாகப் பெறுகிறார்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல உழைப்பாளிகளின் உற்சாகம் குறையத் தொடங்கியது. முன்பு கூலிக்கு பிறர் நிலங்களில் உழைத்தபோது மாலையில் கையில் பணம் கிடைத்துவிடும். கூட்டுப்பண்ணையில் உணவு கிடைத்ததே தவிர, கையில் பணமாக எதுவும் கிடைக்கவில்லை. அது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தைத் தந்தது. அதோடு சிலர் சோம்பேறிகளாக மாறத் தொடங்கினர். வேலைகள் சுணங்கின. ஒரே வருடத்தில் சோதனை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. “வேளாவேளைக்கு சோறு கிடைத்தால்மட்டும் போதுமா? இது என்ன சிறைக்கூடமா?” என்று கேட்ட உழைப்பாளிகளுக்குப் பதில் சொல்ல இயலவில்லை. மனிதமனம் நன்கு பக்குவப்படும்போதுதான் இதுபோன்ற முயற்சிகளில் பயனைக் காணமுடியும் என்கிற முடிவுக்கு வருகின்றனர் தம்பதியினர். ஒவ்வொரு மனிதனும் தனது சுயநலம் சார்ந்த ஆசையை ஒதுக்கித் தள்ளிவிட்டு பொது நலனைக் குறித்து சிந்திக்க ஆரம்பிக்கும்போதுதான் அது வெற்றியைப் பெறமுடியும் என்று தோன்றுகிறது. இதனால் நிலங்களை அனைவருக்கும் பிரித்துக்கொடுத்துவிடுகிறார்கள். அறுவடை முழுதும் தமக்கே கிடைக்கும் என்ற எண்ணத்தில் உழைப்பாளிகள் மிகவும் உற்சாகத்தோடு உழைக்கத் தொடங்குகிறார்கள். லட்சியத் திட்டத்திலிருந்து சற்றே விலகி செயல்பட்டுத்தான் மக்களை அடுத்த நிலைக்கு உயரத்தமுடியும் என்று தோன்றுகிறது. இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே வினோபா பாவேயின் திட்டம் சற்றே விரிவாக்கிக் கொள்ளப்பட்டது.

வலிவலம், வத்தலகுண்டு, கீழ்வெண்மணி ஆகிய இடங்களில் நிகழ்ந்த போரட்டங்களைப்பற்றிய குறிப்புகள் மனஎழுச்சி மிகுந்தவை. பல அசாதரண செயல்கள் மிகவும் சாதாரண முறையில் தன்னம்பிக்கையோடு நிறைவேற்றிட்டு தம்பதியினர் அடுத்த களத்தைநோக்கி நகர்ந்துவிகின்றனர். கீழ்வெண்மணியில் அரைப்படி அரிசி கூடுதலாகக் கேட்டுப் போராடிய 74 குடும்பங்களுக்கு நல்ல விளைச்சலைத் தரக்கூடிய 74 ஏக்கர் நிலங்களை வாங்கிக் கொடுத்ததை மிகப்பெரிய புரட்சி என்றே சொல்லவேண்டும். ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய வேலையை இவர்கள் செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உழைத்துக்கொண்டிருந்த தம்பதியினருக்கு ஜெயப்பிரகாஷ்மூலம் பீகாரில் சேவை செய்ய அழைப்பு வருகிறது. ஒரு மூன்று மாதகாலம் தங்கியிருந்து சேவைக்கான முன்மாதிரித் திட்டமொன்றை வடிவமைத்துக் கொடுத்துவிட்டுத் திரும்புவதுதான் தொடக்கத்தில் அவர்கள் நோக்கமாக இருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அவர்கள் அங்கேயே மாதக்கணக்கில் தங்கி களப்போரில் இறங்கவேண்டியிக்கிறது. ஒருபுறம் கயாவில் சங்கரமடம் உருவாக்கும் நெருக்கடிகள். மறுபுறம் மாறிய அரசியல் சூழலால் அரசு தீவிரப்படுத்திய நெருக்கடிச் சட்டத்தில் துரத்தல்கள். தம்பதியினர்மட்டுமல்ல, சேவை செய்ய சென்ற பலநு¡று தொண்டர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளமானவை. அவற்றின் உச்சக்கட்டமாக சிறைவாசத்தில் ஜெகந்நாதன் ஒரு கண் பார்வையை இழந்ததைச் சொல்லலாம். போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தம்பதியினர் காட்டிய அசாத்திய மனஉறுதி மெய்ச்சிலிர்க்கவைக்கிறது.

ஆங்கிலேய அரசாங்கம், நெருக்கடி நிலை காலகட்டம், அதற்குப் பின்பான உறவுகள் என வெவ்வேறு பொழுதுகளிலும் வெவ்வேறு விதமான ஆட்சியாளர்களைச் சந்தித்திருக்கும் தம்பதியினர் முன்வைக்கும் கூற்று நு¡லின் இறுதிப்பகுதியில் பதிவாகியிருக்கிறது. அந்தக் கால அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லவைக்கிற அளவுக்கு அடுத்தடுத்த காலத்துக் கொடுமைகள் மாறி விடுகின்றன. பொய்வழக்கு என்பது அடக்குமுறையின் இன்னொரு வடிவமாக மாறி இன்று செயல்படுகிறது. பணமுள்ளவர்களின் மெய்க்கவசமாக இயங்குகிற காவல்துறை ஏழைகளுக்கான சேவையாளர்களை அராஜவாதிகளாக எண்ணும் விசித்திரங்கள் இன்று நாடெங்கும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. என்னைக் கைநீட்டி அடித்தார் அல்லது என்னைக் கொல்ல முயற்சி செய்தார் என்று நாக்கூசாமல் ஒரு பணக்காரர் சொல்கிற பொய் எவ்வளவு பெரிய தேசத்தொண்டனையும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நிற்கச் செய்துவிடும். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் ஆங்கிலேயர் தொடுத்த பல நு¡று வழக்குகளை காந்தி எதிர்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவற்றில் ஒன்றுகூட கொலைப்பழியை அவர்மீது சுமத்தியதில்லை. இன்றோ நிலைமை வேறு. ஒரு காந்தியவாதியின்மீது அல்லது ஒரு செயல்வீரர்மீது நம் அரசு தொடுக்கிற முதல் வழக்கே கொலைவழக்கு அல்லது அடிதடி வழக்கு.

அந்தக் கால அரசையும் இந்தக் கால அரசையும் ஒப்பிட்டு எண்ணிப் பார்க்க இந்த நூலில் ஏராளமான சம்பவங்கள் உள்ளன. ஒரே ஒரு சம்பவத்தைமட்டும் முன்வைக்கத் தோன்றுகிறது. இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பொறுப்பை நேரு ஏற்றதும் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைத் தீட்டும் முயற்சியில் இறங்குகிறார். அத்திட்டத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்களை அலசி ஆய்வு செய்யவும் சரிபார்க்கவும் தொகுத்துக்கொள்ளவும் அரசின் நியமனக்குழு இயங்குகிறது. அதன் பல உறுப்பினர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். நாடுமுழுக்க நடைமுறைப்படுத்தப்படும் இம்மாபெரும் திட்டத்தின் சாதகபாதக அம்சங்களை மக்கள் தொண்டு முயற்சிகளில் நேரிடையாகவே இறங்கிச் செயற்படும் சேவையாளர்களையும் கலந்தாலோசிக்கவேண்டும் என்று எண்ணுகிறார் நேரு. அதற்காக வினோபாவை அணுகுகிறார். பூதான இயக்கத்தின் பாத யாத்திரையில் நாட்டின் இன்னொரு கோடியில் செயற்பட்டுக்கொண்டிந்த வினோபா பாவேவுக்கு தகவலை அனுப்புகிறார். தலைநகருக்கு உடனே திரும்ப விமானத்தில் ஏற்பாடு செய்வதாகச் சொல்லி அழைக்கிறார். ஆனால் புறப்பட்ட வேலை முழுமையடையாமல் செல்வது வினோபாவுக்கு விருப்பமில்லை. ஆலோசனை வழங்கச் சம்மதித்தாலும் மற்ற வசதிகளை நிராகரிக்கிறார். வேலை முடிந்ததும் நடந்தே தலைநகருக்குத் திரும்பி விடுவதாகவும் மூன்று மாத காலம் காத்திருக்கவேண்டும் என்றும் சொல்கிறார். மக்களிடையே நேருக்குநேர் பணியாற்றும் ஒருவருடைய ஆலோசனை அவசியம் என்று கருதியதால் நேரு அத்தாமதத்தைப் பொருட்படுத்தாமல் காத்திருந்து அவருடைய ஆலோசனைகளைப் பெறுகிறார். இந்த மண்ணில் அப்படி ஒரு தலைவர் இருந்தார், அப்படி ஒரு அரசும் இயங்கியது என்பதை நம்பமுடியாதபடி சூழல் மாறிவிட்டது இப்போது. இன்றைய அரசின் கண்கள் சேவையாளர்களை வேண்டாத எதிரியாகமட்டுமே பார்க்கின்றன. அவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படவேண்டியவர்களாகவும் பொருட்படுத்தத் தேவையில்லாதவர்களாகவும் தென்படுகிறார்கள். மிகப்பெரிய துரதிருஷ்டம் இது.

சேவை மனப்பாங்கு கொண்டவர்களுக்கு மக்கள் சேவைதான் முதல் இலக்கே தவிர, மொழி, நாடு, இனம் என்கிற பாகுபாடுகள் எதுவும் முக்கியமில்லை. ஒருபுறம் வினோபாவும் இன்னொரு புறம் கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதன் தம்பதியினரும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இவர்களுக்காவது இந்தியா நமது நாடு என்று சொல்லிக்கொள்ள ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் தொடக்கத்திலிருந்து இவர்களுடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றிய ராலே கெய்தான் போன்ற வெளிநாட்டவர்களுக்கு என்ன காரணம் சொல்லமுடியும்? தன்னலமற்ற சேவையால் வாழ்க்கைக்கு ஒரு பொருளைத் தேடிக்கொள்வதைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்? ராலே கெய்தான் இப்படி ஒரு நு¡லை எழுத ஜெகந்நாதனைப்போலவே எந்த முன்முயற்சி யும் எடுக்கவில்லை. லாரா கோப்பா போல வேறு யாராவது ஒருவர்தான் கெய்தானைக் கேட்டு எழுதவேண்டும். அப்படி ஒரு நு¡ல் உருவானால், போராட்டங்கள்பற்றியும் சேவைகள்பற்றியும் வேறொரு பார்வையை நாம் அறிந்துகொள்ள இயலும்.

( கத்தியின்றி ரத்தமின்றி- லாரா கோப்பா, தமிழில்: மகாதேவன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. விலை ரூ95)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்