கடித இலக்கியம் -47

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

வே.சபாநாயகம்


(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்’)

கடிதம் – 47

திருப்பத்தூர்.வ.ஆ.
19 – 7 – 97.
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் கடிதம் கிடைத்தது. உடனடியாகப் பதில் எழுதாமைக்குக் காரணம், உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டு என்று, அதற்காக நாளூம் வேளையும் பார்த்தது தான்.

தங்களுக்கு ஏற்பட்ட பாரிசவாயு பாதிப்பினை அறிந்து அனவருமே அதிர்ச்சியடைந்தோம். நல்ல வேளையாக உடனே சென்னை சென்று மருத்துவ சிகிச்சை பெற்றதால் பெரும் பாதிப்பின்றி மீண்டிருப்பது பெருத்த நிம்மதியை அளிக்கிறது.
இறைவனருளால் வந்த ஆபத்து இவ்வளவோடு தவிர்ந்ததே என்று அவனுக்கு நன்றி செலுத்தினோம். பழையபடி கை நன்றாக எழுதமுடிகிறது என்பதறிய மகிழ்ச்சி.

அஞ்சற்க – சபா! நிமிர்ந்து நில்லுங்கள். நம் புண்ணியங்கள் நம் முதுகெலும்பைத் தாங்குகின்றன. நமது சிந்தனைகள் நமது மூளையைச் சேமப்படுத்துகின்றன. வாழ்வை ரசித்து ரசித்து உருகினோமே, அந்த ரசனை நம் உயிர்வாழ்வை இன்னும் நெடுங்காலம் ரட்சிக்கும். அஞ்சற்க!.

வைத்தியர்கள் வகுத்த விதிப்படி நடவுங்கள். உணவுக் கட்டுப்பாடு வெகு எளிது! “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” எனக் கருதிய மரபில் வந்த நமக்கு எல்லாமே எளிது!

படிப்பதையும் எழுதுவதையும் தொடருங்கள். தியானம் எப்பொழுதுமே புரிகிறீர்கள். உங்கள் வாழ்வு மிக அருமையாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்கிற அபூர்வமான திருப்தியும் தைரியமும் எஞ்ஞான்றும் நெஞ்சில் நிலவட்டும்.
இவையே நோயை விரட்டும் மந்திரங்கள்.

இறைவன், எப்பொழுதும் போல் இனியும் தங்களைக் காத்தருள்வான். அதற்கான பிரார்த்தனைகளை எங்கள் பூஜாவேளைகளின் போதெல்லாம் நாங்கள் புரிகின்றோம்.

விரைவில் நண்பர்களுடன் வந்து தங்களை நேரில் சந்திக்கிறேன்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

( இத்துடன், திரு.பி.ச.குப்புசாமி வே.சபாநாயகத்துக்கு எழுதிய கடிதங்கள் முடிவுறுகின்றன. அடுத்து இன்னொரு நண்பர் கவிஞர் ஆதிராஜ் அவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்கிறது. )

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்