உராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

சந்திரவதனா



முந்தைய நாயன்மார்களின் தேவாரங்களையும், புறநானூற்றுக் காவியங்களையுமே பாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்த எம்மை வியக்க வைக்கும் படியாக இன்று எம்மிடையே புதிய புதிய கவிஞர்களும், கதாசிரியர்களும் உருவாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிக மிக இளவயதினர்கள் கூட கவி புனையும் ஆற்றல் கொண்டு கவிதைகளிலேயே தமது உணர்வுகளைக் கொட்டிக் கொண்டிருப்பதும் யாவரும் அறிந்ததே.

போர் தந்த பாதிப்பிலும், புலப்பெயர்வு தந்த சோகத்திலும், அநியாயங்களைக் கண்டு மனசு கொதித்ததிலும், சமூகத்தின் கோட்பாடுகளோடு முரண் பட்டதிலும்… என்று ஆர்ப்பரித்து எழுந்த, ஆற்றல்களை வெளிக் கொணர்ந்த… இளங் கவிஞர்களில் இளைஞன் என்ற சஞ்சீவ்காந்தும் ஒருவன்.

சஞ்சீவ்காந், இளைஞனாய் என்னுள் வியப்பை ஏற்படுத்தியவன். புலம் பெயர்ந்த இளைஞர்கள் அனைவருக்கும் உள்ள இரு மொழிகளோடும், இரு கலாச்சாரங்களோடுமான போராட்டம் சஞ்சீவ்காந்துக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும். புலம்பெயர் மண்ணின் மொழியோடும், கலாச்சாரத்தோடும் தன்னை இணைத்து தனது வாழ்நிலையை வளம் படுத்த வேண்டிய கட்டாயத்தின் மத்தியில் ஒரு இளைஞன் தழிழோடும் ஒன்றி நின்று தமிழில் இலக்கியம் படைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனாலும் இவைகளின் மத்தியில் நின்று தான் எதிர் கொண்ட ஒவ்வொரு முரணோடும் எழுத்தால் முட்டி மோதியவன் சஞ்சீவ்காந். இவனது தமிழின் ஆற்றலும் ஒவ்வொரு கருத்தை முன் வைக்கும் போதும் அதில் இருந்த தெளிவும், சிந்தனா சக்தியும் என்னை மட்டுமல்லாமல் பலரையும் வியக்க வைத்திருக்கின்றன.

இவன் கவிதைகளில் ஒன்று வானலையில் பாடலாக ஒலித்த போதும், தானே வந்து தன் குரலில் ஐபிசி வானொலியில் கவிதைகளை மிக அழகாக வாசித்த போதும் நான் மனம் வியந்து மிகவும் ரசித்தேன். இப்போது இவனின் கவிதைத் தொகுப்பு ஒன்று என் கரங்களில் தவழும் போது மகிழ்வாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

உராய்வு அழகு, கவித்துவம் என்று சொல்ல முடியாத, ஆனால் ஒருவித ஈர்ப்பைத் தன்னுள்ளே கொண்ட தலைப்பு.

“புதிய சிந்தனைகள், அவற்றை முதலாக்கிய செயற்பாடுகள், காணும் வெற்றிகள் என்று ஒழுங்கமைத்து முன்னேறும் மனித சமுதாயத்தின் நீண்டு நெடுத்திருக்கும் வாழ்வியற் கோட்பாட்டோடும், வரலாற்றோடும் முரண்பட்டு முட்டி மோதியும், உடன்பட்டு ஒட்டி உரசியும் உருவான சிந்தனைகளைக் கருவேற்றுப் பிரசவித்தவையே எனது கவிதைகள்” என்று சொல்லும் சஞ்சீவ்காந்தின் இக் கவிதைத் தொகுப்பில் மிகச் சிறியதாயும், அளவில் பெரியதாயும் என்று 54கவிதைகள் உள்ளன. கவிதைக்கு அழகும், மெருகும், கருவோடு கூடிய பொருளும், உணர்வும் தரக்கூடிய விதமாக மூனாவின் 41ஓவியங்களும், கணினியில் வடிவமைக்கப்பட்ட 14 ஓவியங்களும் கூடவே உள்ளன. 128 பக்கங்களைக் கொண்ட கைக்கு அடக்கமான சிறிய புத்தகம். 2005இல் பதிப்பாகி இருக்கிறது.

முதற் பக்கத்தைத் திறந்த உடனேயே, மதிப்புரையாகவோ அன்றி முகவுரையாகவோ ஒரே ஒரு வரியில் அமைந்த காலத்தின் கவிக்கூர் இவன் என்ற திரு.தாசீசியஸ் அவர்களின் வரி கவிதைகளுக்கும், புத்தகத்துக்கும் அழகையும், அர்த்தத்தையும் சேர்த்திருக்கின்றது.

திரு.கி.பி.அரவிந்தன் அவர்கள் தனது பார்வையை ஒரு கடிதம் போல அழகிய முகவுரையாகத் தந்துள்ளார்.

வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப் பட்ட தேசத்திலிருந்து பிடுங்கி எறியப் பட்ட ஒருவனின் சீற்றத்தோடு ஆரம்பிக்கிறது இத் தொகுப்பின் முதற் கவிதை.
வருகவென வரவேற்று
வாழ வைத்த ஆண்டுகளே
வரலாற்றில் நீர் எங்கு போனீர்?

திரும்பிப் பார்த்தால் நடந்து வந்த பாதையெங்கும் படிந்திருக்கும் போரின் சுவடுகளே இன்றைய எமது நிலையில் வரலாறாகியுள்ள கோபத்தைச் சொல்கிறது, வருக 2004 என்ற கவிதை.

இக் கவிதையிலேயே, யதார்த்தமான வாழ்வு மட்டுமே வேண்டும் என்ற மனதின் யாசிப்பு
வெள்ளை நிழல் வேண்டாம்
வெளிச்ச இரவு வேண்டாம்
சூரிய நிலவு வேண்டாம்
சுடாத வெயில் வேண்டாம்

என்ற வரிகளில் அழகாக வெளிப் படுகிறது.

தொடரும் கவிதைகள் விடுதலையின் வேட்கை, புலப்பெயர்வின் அவலம், சமூதாயத்தின் மூடக்கொள்கைகள் மீதான வெறுப்பு, கலாச்சாரம் என்ற பெயரிலான அறியாமைகள், பெண்விடுதலையின் மீதான ஆர்வம், பெண்கள் மீதான அழுத்தங்களில் எழுந்த கோபம், சமூகச் சிக்கல்கள், சமூகத்தின் மீதான மாற்றத்தின் வேண்டுதல்கள், அறிவியல் வளர்ச்சி, கணினி மொழி, காதல்… என்று பல்வேறு பட்ட விடயங்களைக் கருப்பொருளாகக் கொண்டு புதிய சிந்தனைகளை வேண்டி நிற்பவையாகவே இருக்கின்றன.

மொத்தத்தில் சமுதாய வளர்ச்சியிலும், வாழ்வியல் முன்னேற்றங்களிலும் அக்கறை கொண்ட ஒரு இளைஞனின், உணர்வுகளின் குவியல்களாயும், ஒரு இளைஞனுக்கே உரிய துடிப்புகளின் வெளிப்பாடுகளாயும்… கவிதைகள் அமைந்துள்ளன.

கவிதைக்கு எது அழகு? என்று கேட்டால், சரியாகச் சொல்ல முடியாத படி இன்றைய கவிதைகள் எதுகை, மோனை, அணி, நயம்… என்று எதுவுமே இல்லாமலும் கூட ஏதோ ஒரு வகையில் அழகு பெற்று பலரையும் கவர்கின்றன.

இத்தொகுப்பில் இடம் பெற்ற கவிதைகளில் எதுகை, மோனை, நயம்… என்று அழகிய வடிவிலான கவிதைகளும் உள்ளன. அந்த எந்த வடிவங்களும் இல்லாமல் நல்ல கருப்பொருட்களை மட்டும் தமக்குள்ளே புகுத்தியுள்ள கவிதைகளும் உள்ளன.

அவைகளில் மிகுந்த நயத்தோடும், கருத்தோடும் மட்டுமல்லாமல், இத் தொகுப்புக்கே மகுடமாகவும் அமைந்தது போன்ற கவிதை கடிதம்
ஏர் பிடித்த கைகளிலே
போர் கொடுத்த ஆயுதமோ
நேர் நிமிர்ந்த மார்பினிலே
யார் பதித்த குண்டுகளோ

நான் நடந்த தெருவினிலும்
வான் அளந்த வடக்கினிலும்
ஏன் இந்த சோதனையோ
என் மனசில் வேதனையே…

புலம் பெயர்ந்த இளைஞன் ஒருவன், போரிலே தகித்திருக்கும் தாயகத்தையே தாயாக உருவகித்து எழுதும் கடிதம் போல அமைந்த இந்தக் கவிதை எல்லோர் மனதையும் தொடக் கூடிய ஒரு கவிதை. மிகவும் அழகாகவும், மனதை ஆழமாகத் தொடக் கூடியதாகவும் கோர்க்கப் பட்ட வார்த்தைகள். அன்புள்ள தாயகமே ஆசை மகன் எழுதும் மடல்… என்று தொடங்கும் இக்கவிதை பாடலாக்கப் பட்டு ஒரு அழகிய பாடலாகவும் வெளி வந்து பலர் மனதையும் கவர்ந்தது குறிப்பிடத் தக்கது.
அன்புள்ள தாயகமே…
ஆசை மகன் எழுதும் மடல்

நானிங்கு நலமம்மா
நீயங்கு நலம் தானா?
எழுத மனம் நினைக்கிறதே
கண்ணீர் அதை நனைக்கிறதே….

….நில்லாமல் ஓடி வரும்
நிலவொளியும் காண்பீரோ
சொல்லாமல் பாடல் தரும்
குயிலோசை கேட்பீரோ

ஆராரோ கீதம் படிக்க
ஏணையும் அசைகின்றதா
ஊரெல்லாம் ஓலம் ஒலிக்க
உறவுகளும் அழுகின்றதோ…

ஏக்கமும், தாயகத்தின் மீதான தாபமும் மனதின் அடிநாதத்திலிருந்து ஆற்றாமையோடும், அழகாகவும் வெளிப்படுகின்ற அருமையான கவிதை. இது இளைஞனின் கவிதை உணர்வை அழகாக வெளிப்படுத்திய கவிதையும் கூட.

குறிப்பிடத்தக்க கவிதைகளில் திலீபன் என்ற கவிதையும் ஒன்று. நயமாக எழுதப்படும் கவிதைகளுக்கு உள்ள கவர்ச்சி போலவே, திருக்குறள் போல நறுக்கென்று சொல்லி விடும் கவிதைகளிலும் ஒரு வித கவர்ச்சி இருக்கிறது.
உண்ணாவிரதத்தின் பசிக்கு
தன்னை உணவாய் கொடுத்தவன்

நீட்டி முழக்காமல் நறுக்கென்று சொல்லி விட்ட அழகான கவிதை.

சில கவிதைகள் மற்றவர்களுக்கு ஆணையிடுவது போலவும், போதிப்பது போலவும் அமைந்துள்ளமையும் கண்டிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அந்தத் தொனிகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம். உதாரணமாக
இருட்டைக் கவிழ்த்து
வேளிச்சத்தின் மேல் ஏறி நில்

சுதந்திரத்தை விரி
உலகை அதில் கிடத்து
பண்பாட்டால் போர்த்து

சமுதாயத்தை நிர்வாணப்படுத்து
அதன் காயங்களில் முத்தமிடு
அழுக்குகளை நக்கு…

என்று தொடரும் செயற்படு(பொருள்)என்ற கவிதை
ஆசைகளோடு உறவு கொள்
தேவைகளைக் கருத்தரி
தேடல்களைப் பிரசவி

பழசை மென்று
புதுசாய் துப்பு
(பக்-54)

என்று முடிகிறது. இக்கவிதை சொல்ல வந்த விடயத்தை போதனை போலவோ அன்றி கட்டளை போலவோ இல்லாமல் கொஞ்சம் வேறு விதமாகச் சொல்லியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

ஓரிரு கவிதைகளில் கருப்பொருள் பிசகுவது போன்ற பிரமை ஏற்படுகிறது. உதாரணமாக ஈழம் என்ற நான்காவது கவிதை
குருதி
கண்ணீர்
வியர்வை
நீருற்றி

என்பு
சதை
அங்கம்
பசளையிட்டு

ஏக்கம்
தவிப்பு
எதிர்பார்ப்பு
காவல்
வைத்து

நிழலுக்காய்
வளர்க்கும்
மரம்

இக்கவிதையைப் படிக்கும் போது, குருதி, கண்ணீர், சதை, அங்கம், உயிர்… இத்தனையையும் பயிரிட்டு வெறுமே நிழலுக்காக மட்டுமா எமக்கு ஈழம்? என்ற கேள்வி எழுகிறது. தாயகத்தின் விடுதலை என்பதும் அதற்காகக் கொடுக்கப் படும் விலையும் வெறும் நிழல் என்ற வார்த்தைகளுக்குள்ளோ அல்லது அர்த்தத்துக்குள்ளோ அடங்கி விடாது. ஆனாலும் இளைஞனின் பார்வையில் இதன் கருப்பொருள் வேறு விதமாகக் கூட இருக்கலாம். நான் பார்க்கும் கோணம் வேறாக இருக்கலாம்.

இவைகளோடு அதிகமான கவிஞர்களால் தொடப்படாத அறிவியல் சம்பந்தமான சில கவிதைகளையும் இளைஞன் படைத்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது. அப்படியான ஒன்றான மரபணு என்ற கவிதையிலிருந்து சில வரிகள்
பாய் படுக்கை பாலின்றி
கரு ஒன்று உருவாகும்
தாய் தந்தை உறவின்றி
ஒரு பிள்ளை உருவாகும்

நிறம் என்ன திறம் என்ன
அத்தனையும் தேர்ந்தெடுத்து
யார் யாரைப் போலென்று
அற்புதமாய் அச்செடுத்து….

இப்படி பல்வேறு திசைகளிலும் விரிவு பட்ட சிந்தனைகளோடு உதித்த கவிதைகளின் தொகுப்பு இது. இதனோடு ஓய்ந்து விடாமல் இளைஞன் இனியும் கவி படைக்க வேண்டும். குறைகளைத் திருத்தி இன்னும் நிறைவாக எழுத வேண்டும். அத்தோடு நின்று விடாமல் படைப்புக்களைத் தொகுத்து பதிப்பாக்கி விடவும் வேண்டும்.

சந்திரவதனா
ஜேர்மனி
18.12.2006

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா