கடித இலக்கியம் – 39

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

வே.சபாநாயகம்



(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் – 39

திருப்பத்தூர்.வ.ஆ.
30-7-89
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி குழந்தைகளுக்கு எழுதும் புத்தகத்திற்காக – அதற்கான குறிப்புகளைத் தரும் கடிதங்களை இனி நான் நிறைய எழுத முடியும் என்று நம்புகிறேன்.

எனவே, எடுத்த உடனேயே அந்தக் காரியத்தைத் தொடங்குகிறேன்.

உங்கள் நூலின் மேலான பலனும் திறனும் எவ்வாறாய் இருக்க வேண்டும் என்றால், கடவுள் என்றும் பக்தி என்றும் மதம் என்றும் ஆன்மிகம் என்றும், அதற்கப்புறம் குரு சிஷ்ய உறவென்றும் சொல்லப் படுகிற – பல பெரியவர்களுக்கே
தெளிவாக அத்துபடியாகாத – அவற்றின் அனுஷ்டானங்களில் பல பெரும் குருட்டுப் பிழைகள் செய்கிற அளவுக்கு, அர்த்தமாகாத, அந்த அற்புதமான விஷயங்களை எல்லாம், குழந்தைக்கு அதற்குப் பிடித்தமான பண்டத்தை – அதே நேரத்தில் ஆரோக்கியமும் ஆற்றலும் அளிக்கிற பண்டத்தை, அது விரும்பி வாங்க, நாம் எப்படி ஆர்வத்துடன் ஊட்டுவோமோ – அது போல் ஊட்டுவதாயிருக்க வேண்டும்!

இந்த நூலுக்கு இப்பொழுது அவசியம் என்னவென்று கேளுங்கள். இது இந்தக் காலத்துக்கு நாம் செய்கிற நாம் கற்ற வைத்தியம். மதங்களின் பேராலும், வகுப்புகளின் பேராலும், தத்தம் கடவுள் நம்பிக்கைகளின் பேராலும் இன்றைக்கு இந்தியாவிலும் உலகிலும் தலையெடுக்கிற எத்தனையோ விபரீதப் போக்குகளுக்கு ஆட்படாமல் நமது இளைய தலைமுறைக் குழந்தைக¨ளைக் காக்க வேண்டும் என்கிற ஆழ்ந்த உளமார்ந்த அக்கறையே இந்த அவசியத்தை உண்டாக்குகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர், மஹாமேதாவியான விவேகாநந்தருக்கே, கடவுளை துளைத்துத் துளைத்து கேள்வி கேட்ட அவருக்கே, கடவுளை அவர் ஒப்புக்கொள்ளும் வண்ணம் உணர்த்த இயன்றது. ராமகிருஷ்ணர் பற்றிய செய்திகள், ஒவ்வொருவராலும்
நன்கு உணர்ந்து கொள்ளப்படுகிற அவரது வாழ்க்கை, எல்லாருக்கும் அந்த நலத்தை அளிக்க முடியும்.

பல மஹான்களின் வாழ்க்கை பற்றி நிறையப் பேசி இருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்; சிறிது படித்துமிருக்கிறோம். ஆனால், கண்ணெதிரில், (கண்ணெதிரில் என்றால் காலத்தின் கண்ணெதிரில்) பல நுட்பத் தகவல்களோடும், அழகான காட்சி
மாற்றங்களுடனும் கவனிக்கப்பட்டு, காலம் செய்த பெரும் பாக்கியத்தின் காரணமாக அவையெல்லாம் பதிவு செய்யப்பட்டு, நமக்குக் காணக் கிடைக்கிறபொழுது, அந்த வாழ்க்கையை உணர்ந்து கொள்கிறபோது, அவர் மஹான் அல்லர், கடவுளின் அவதாரமே என்று அவரது அந்த அத்யந்த சிஷ்யர்களைப் போலவே நாமும் ஒப்புக் கொண்டோம்.

எனக்குத் தோன்றுகிற விஷயமிது. அவர் கடவுளைச் சுலபமாகக் காட்டியருளுகிறார். ஓடிப்போய் நாம் அவனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறோம்.அப்புறம் அவர் நமது பக்தியில் இருக்கிற வெட்கப்பட வேண்டிய விஷயங்களை யெல்லாம் கழிக்கிறார். இவர் எல்லா மதங்களிலும், அவற்றின் ஆசாரியர்களின் ரூபத்தில் பிறந்திருக்கிறார். இவரின் சீடர்கள் எல்லாம், அந்த ஆசாரியர்களின் சீடர்களாக ஏற்கெனவே பிறந்தவர்கள்தாம் என்று அதை உறுதியாய் உணர்ந்து அனுபவிக்கிறோம். கதை, கதை, கதை, கதை என்று இவர்போல் கதைகளின் அலைகளை உண்டாக்கிய இன்னொரு உலக எழுத்தாளர் இல்லை, ஆனால் இவர் எழுதவே இல்லை. அன்னை சாரதாமணி தேவியாரின் வாக்கில் “ஒருமுறை ஸ்ரீராம கிருஷ்ணரின் பிடியில் சிக்கியவர்கள், வீழ்ச்சி அடைவது என்பதே இல்லை!”

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணாமடம் ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்’ என்னும் நூலின் மூன்று பெரிய பாகங்களை வெளியிட்டுள்ளது. அந்த மூன்று பாகங்களையும் வாங்கிப் படியுங்கள். மகேந்திரநாத் குப்தா என்பவர், ஸ்ரீராமகிருஷ்ணரை அருகிருந்து தரிசித்த சம்பவங்களும், அப்பொழுது நிகழ்ந்த பல அற்புதமான சிறுசிறு விவரக் குறிப்புகளும் கூட – அந்தக் காலத்தின் ஒரு டயரி போல் அதில் உள்ளன. அவற்றை நீங்கள் படித்து விட்டீர்களானால், அப்புறம் வேறு என்னென்ன படிக்க வேண்டும், அறிய வேண்டும் என்கிற வேட்கை உங்களுக்கு ஆரம்பமாகி விடும். நீங்கள் எழுதப் போகிற நூலுக்கு இவ்வாறு அற்புதமான உபகரணங்கள் எல்லாம் உள்ளன.

தங்கள் – பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்