கடித இலக்கியம் – 38

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

வே.சபாநாயகம்



கடிதம் – 38

திருப்பத்தூர்.வ.ஆ.
24-7-89
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் அன்பான கடிதத்துக்குச் சிலநாட்கள் தாமதமாகப் பதில் எழுதுகிறேன். இந்த நாட்களில் தங்களுக்கு ஆரஅமர எழுதுகிற ஒரு தருணத்ததிற்காகக் காத்தி ருந்தேன்.

ஆகஸ்ட் மாதம் மூன்றாவது சனிக்கிழமை தாங்கள் எங்கள் ஆசிரியர் சங்கத்தில் உரையாற்ற இயலுமா என்பதை உடனடியாகத் தெரிந்து கொண்டு எனக்குத் தெரிவியுங்கள்.

எனது பேராசை என்னவென்றால், ஒரு Decade க்குப் பிறகு இங்கெல்லாம் நல்ல மழை பெய்துள்ளது. எங்களது ஜவ்வாதுக் குன்றுகளில் உள்ள ரம்யமான இடங்களையெல்லாம் நானும் அருணாசலமும் மட்டுமே ஓடோடிச் சென்று பார்த்து
உல்லாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உரையை ஆற்றும் சாக்கில், தாங்களும் -நாங்கள் அனைவரும் விரும்புகிறபடி தம்பதி சமேதராய் வந்தால், ஒரு நிர்ப்பந்தத்தின் காணமாகவாவது, நாம் எல்லாரும் நமது குடும்பங்களுக்குத் தரவேண்டிய – அவசியம் தரவேண்டிய – மாற்றுச் சூழ்நிலைகளையும், மறக்க முடியாத பொழுதுகளையும் உண்டாக்கித் தருவோமே என்பதுதான்.

தங்களது பணிமாற்றம் மகிழ்ச்சி தருகிறது. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டு வடலூர் ஆசிரியர்பயிற்சி நிலையத்துக்கு முதுநிலை விரிவுரையாளராகச் செல்வது அறிந்தேன். மாணாக்கர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி போரடிக்காமல், புதிது புதிதாக அவ்வப்பொழுது மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பேசப்போனால், எந்த விஷயம் பற்றியும், எந்தத் தலைப்பின் கீழும், அவர்களுக்குச் சொல்லப் புதிது புதிதான அல்லது சுவை மிகுந்த விஷயங்கள் உங்களிடம் இருக்கின்றன.

பிறர் கேட்க நாம் நமது கருத்துக்களை – எண்ணங்களைச் சொல்கிற நிலை, ஒரு சன்னதம் வந்த நிலை என்பது என் சொந்த அனுபவம்! எனவே, தாங்கள் புதிய பணியில், எதுவும் சள்ளை இல்லை என்பதோடு கூட, சுவையும் மிகுந்திருக்க வேண்டுமென்று நான் கணிக்கிறேன்.

ஆகஸ்டு மூன்றாம் வாரம் இயலவில்லை எனில், எந்த மாதத்தின் மூன்றாவது வாரச் சனிக்கிழமையும் தாங்கள் இங்கு பேச வரலாம். பேசுவதையே பிரதானமாகப் பிரஸ்தாபிக்கக் காரணம், தாங்கள் இப்போது ஆற்றுகிற பணி, ஆசிரியர்களாகிய எங்களால் நிச்சயம் தவறாது அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதானே? ஒரு சிறந்த வாக்குமூலம் எங்களுக்கெல்லாம் தங்களையன்றி யாருண்டு? எனவே, பேசவருகிறோம் என்கிற திட்டத்துடனேயே வருவது பற்றி எழுதுங்கள்.

வருவதை, மழைக்காலம் பனிக்காலத்திற்குள்தான் நான் மிகவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான், மலையும் மேகமும் மழையும் பனியும் பச்சையும் பயிருமாய், எங்கள் காய்ந்த வடார்க்காடு உங்க¨ளைக் கவர முடியும்.

எந்தக் காரியத்தை ஒழுங்காகச் செய்தோம் என்று பார்த்தால், பேசுகிற காரியத்தைத்தான் சிறப்பாகச் செய்திருக்கிறோம். இது பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஒரு பெருமிதம் வேறு சில பாக்யங்களை இழக்கும் போலும். திருவேறு தெள்ளியராதல் வேறுதானே?

பரவாயில்லை என்றும், உத்தமமே என்றும் எல்லாவற்றையும் ஜீரணித்துக்
கொள்ள ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பயிற்றுவித்திருக்கிறார். நீங்கள், குழந்தைகள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அதே நேரத்தில் பெரியவர்களும் வியக்கும் வண்ணம், அவரைப் பற்றி ஒரு புத்த்தகம் எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி ஒரு புத்தகம் எழுதுகிற முயற்சியில் பத்துநாள் இங்கேயே வந்து தங்கவேண்டும்.

இது ரொம்பப் பெயர் பெறும். இந்தக்காலத்துக்கு, இப்பொழுது, இப்பொழுது என்றால் இதோ இப்பொழுதே, எதிரே இருக்கும் பிரச்சினைக்கு மாற்றுச் சொல்லும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சங்கதி. இதைக் குழந்தைகளுக்குச் சொல்ல முற்படுகையில்,
ஓர் ஆன்மீக வாழ்க்கையின் வேதாந்தப் புதிர்களெல்லாம் கூட விலகி, ஸ்ரீராமகிருஷ்ண
சத்தியம் எளிதும் தெளிவும் உடையதாகும் என்று நான் நம்புகிறேன். இந்தக் காரியத்
தில் நீங்கள் இறங்குகிற க்ஷணத்திலிருந்து, நாங்கள் உங்களுக்கு எல்லா சேவைகளும் செய்யத் தயாராக உள்ளோம்; உண்மை என்னவெனில், அத்தகைய முயற்சியில்
ஸ்ரீராமகிருஷ்ணரே தங்களுக்கு உதவுவார்.

இதைக் கருதுக.

சென்ற ஆண்டு, எனது 25 வருஷ சர்வீஸைக் கொண்டாட, முதல் வகுப்பை
எடுத்துக் கொண்டு, அதே மாணவர்களுக்குத் தொடர்ந்து இப்போது இரண்டாம்
வகுப்பு எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். நான் பணியாற்றிய ஆண்டுகளிலேயே
மிக முக்கிய ஆண்டுகளாக இவற்றைக் கருதுகிறேன். இந்தப் பிள்ளைகளுடனேயே
ஐந்தாம் வகுப்பு வரை போக ஆசை.

– தங்கள் பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்