வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

K. ரவி ஸ்ரீநிவாஸ்


பாரதப் போர் முடிந்து பாண்டவர்கள் வென்ற பின் குந்தி தனியே வாழக் காட்டிற்கு செல்கிறாள்.அத்தனிமையில் தன் வாழ்வின் தருணங்களை, வெற்றிகளை, தோல்விகளை, உறவுகளை, பிரிவுகளை அவர் மீள்பார்வை செய்வதை ஒரு நபர் நிகழ்வாக நிகழ்த்தினார் அனிதா சந்தானம். பரசுராம் ராமமூர்த்தியின் பிரதிக்கு அனிதா உயிரூட்டினார் என்பது மிகையல்ல.

குந்தி பாண்டவர்களின் தாய், மகாராணி, வாழ்வில் ஏற்ற இறக்கங்களைக் கண்டவள். ஒரு ராஜகுமாரியாக பிறந்து மகாராணியாக, பின் பாண்டவர்களுடன் வனவாசம் சென்றவள். அவள் தன் வாழ்வை ஒரு பெண்ணாக மீள்பார்வை செய்யும் போது எழும்பும் கேள்விகளையும், அவளின் புரிதல்களையும் நம்முன் வைக்கிறது இப்பிரதி. குந்தியின் வாழ்வில் அசாதாரணமான துயர்களும், எதிர்பாரா திருப்பங்களும் உண்டு. பல வருடங்கள் கழித்து தன் முதல் குழந்தையை கர்ணனைக் காண்பது, அவன் தம்பியினால் கொல்லப்படுவது, பாண்டுவும், அவன் மனைவி மாதுரியும் ஒருவர் பின் ஒருவராக மரிப்பது, உடலுறவு கொள்ள முடியாத கணவனுக்கு வாரிசுகளைத் தருவது என்று பல நிகழ்ச்சிகள். இவற்றில் ஒரு பெண் என்ற விதத்தில் குந்தி பெற்ற அனுபவங்கள், அவை அவளுள் எழுப்பும் கேள்விகள், மானுட உறவுகள் குறித்த விசாரணை எனப் பலவற்றைத் தொட்டுப் பேசுகிறது பிரதி. ஒரு கட்டத்தில் குருஷேத்திரப் போரினை கண்ணனோ அல்லது திருதிராஷ்டிரனோ ஏன் தடுக்கவில்லை என்று கேட்கும் குந்தி இன்னொரு சந்தர்ப்பத்தில் தானும் அதை தடுக்கவில்லையே என்று கூறுகிறாள். ஒரு ராஜகுமாரியாக அவள் கண்ட கனவுகள் பாண்டுவுடனான திருமணத்தினால் பொய்த்துப் போகின்றன.ஆனால் விசுவாமித்திரர் தந்த மந்திரமோ அவளை இந்திரனின் அம்சமாக, சூரியனின் அம்சமாக என குழந்தைகள் பெற, வம்ச விருத்திக்கு உதவுகிறது. எது இயற்கையாக நடக்க வேண்டுமோ அது நடக்க வில்லை. பாண்டுவுக்கு கிடைத்த சாபத்தின் விளைவு அது. கூடினால் மரணம் என்ற சாபம் பாண்டுவையும், மாதுரியையும் காவு கொள்கிறது. குந்தி தனி மரமாகிறாள். மாதுரி எத்தகைய பேரழகி என்று வியக்கும் மாதுரி அவளுக்கு மந்திரத்தினைச் சொல்லித் தருகிறாள். அவளும் தன் பங்கிற்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுத் தருகிறாள். ஆண்கள் நடத்தும் ஆட்டத்தில் பெண்கள் பகடைக்காய்களா, இதில் பெண் ராணியாக இருந்தாலும் அவளும் பகடைக்காயாகவே பயன்படுகிறாள், அவளுக்கென்று தெரிவுகள், விருப்பங்கள் இல்லையா, ஒரு சுயம் இல்லையா, தனித்துவமான ஆளுமை இல்லையா – இப்படி பல கேள்விகள் அவளின் அந்திம காலத்தில் மனதில் நிழலாடுகின்றன. தனிமையில் தன் வாழ்க்கைப் பயணத்தின் அர்த்தத்தினை, அது இறுதியில் எங்கு செல்கிறது என்பது குறித்த கேள்விகளை தனக்குள் எழுப்புக் கொள்ளும் குந்தி தனிமையில் சுதந்திரமான தனிமையில், ஒரு நீண்ட பயணம் வாழ்க்கை என்பதை கண்டறிவதாக, தன் சுயத்தினை அறிய விழையும் தேடலாக பிரதி அமைந்துள்ளது.

சின்னா என்ற கிளிக்கு தன் கதையை தனிமையில் காட்டில் வாழும் குந்தி கூறுவதாக நிகழ்வு

தொடங்குகிறது. குந்தியின் வாழ்க்கையின் பல கட்டங்கள் , அனுபவங்கள் குந்தியால் விவரிக்கப்படுகின்றன, அச்சமற்ற இளம் பெண் குந்தி, சுதந்திரமாய் திரியும் சிறுமி, ராஜகுமாரியாக

தனியே தோழியின் சொல் கேட்டு ஒரு குன்றில் ஏறும் குந்தி, சூர்யன் தான் அழைத்ததும் வந்ததை எண்ணி வியப்புறு அறியாப் பருவப் பெண், பெற்ற குழந்தையைப் போரில் இழந்து பாசத்தில் துடிக்கும் தாய், திரெளபதியும் சூதாட்டத்தில் பணயம் வைக்க்படும் ஒரு பொருளா எனப் பதறும் மாமியார், தன் கணவனின் இரண்டாவது மனைவியிடம் நேசம் காட்டும் தோழி, சூர்யனுடான உறவினை எண்ணி உரிமையுடன் சூரியனை அழைக்கும் பெண் என்று குந்தி என்ற ஆளுமையின் பல பரிமாணங்களை நம்முன் நிறுத்துகிறது இந்த நிகழவு. குந்தியின் மனத்திற்கும், உடலுக்கும் இங்கு சமமான முக்கியத்துவம் தரப்பட்டது. சூர்யன் குந்திக்கும் வெறும் ஆதவன் மட்டுமல்ல, ஒரு குழந்தையைத் தந்தவன் மட்டுமல்ல. சூரியனிடம் அவள் பெற்ற இன்பம், சூரியனை அவள் தனக்கு நெருங்கியவனாகக் காண்பது, கர்ணன் குறித்து நம் குழந்தை என்று சூரியனிடம் அவள் கூறுவது, வாயுவைப் பற்றி அவள் கூறுவது – இவற்றை நிகழ்த்திக் காட்டும் போது உடல் என்பதற்கு தேவையான முக்கியத்துவம் தரப்பட்டது. அனிதா பல பாவங்களை உடல்

மூலம் மிக அழகாக வெளிப்படுத்தினார். அரங்க வெளியினை சிறப்பாக பயன்படுத்தினார்,

உடலின் அசைவுகளும், குரலும் ஒத்திருந்ததால் எழுத்துப் பிரதி வேறொரு பரிமாணத்திற்கு

எடுத்துச் செல்லப்பட்டது. அனிதா தன் உடலை மிக நளினமாக பயன்படுத்தினார் அங்கு போலி வெட்கம், நாணம் இல்லை. உடலின்பம் எழுப்பும் பரவசங்களைக் காண்போர் முன் கொண்டு வந்தார் அனிதா. உடலின் வலிகளும், சுகங்களையும் அனிதா நன்றாக வெளிப்படுத்தினார்.

குந்திக்கு திரெளபதி குறித்து பெருமிதம் இருக்கிறது. ஐவருக்கு மனைவியாக இருந்த அவள்

பத்தினிதான் என்று கூறும் குந்தி, தன் நிலையையும் அங்கு நினைவு கூறுகிறாள். தனக்கென்று

பெற்றுக் கொண்ட குழந்தை எப்படிப்பட்டவன் என்று பூரிப்படைகிறாள். அதே சமயம் அண்ணன்

போரில் தம்பியால் கொல்லப்படும் துயர சம்பவமும், பெரும் போரும் அவள் மனதில் ஆறாதப் புண்களுக்கு காரணமாகின்றன. நம் மகன் கர்ணன் இல்லையே என்று சூர்யனிடம் புலம்புகிறாள். இப்போர்கள் யாருக்காக எதற்காக கேவலம் மண்ணிற்காகவா என்று பொரும்புகிறாள். வேறொரு சமயம் காட்டெருமையை புலி கொல்வது இயற்கை நியதி அதற்கு பயப்படலாமா என்று கேட்கிறாள். தான் வெறும் பகடைக்காயல்ல, யுத்தத்தில் தனக்கும் பங்கு உண்டு என்பதை

ஒப்புக்கொள்கிறாள், ஆனால் வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்கும் போது தானும் சூழ்நிலையின் கைதியோ என்று எண்ணுகிறாள். அனைத்தும் முடிந்துவிட்டன, தான் அனைத்தையும் பார்த்து

விட்டேன் என்று வாழ்வின் அந்திம காலத்தில் கூறும் குந்திக்கு துணை தனிமை, சுதந்திரமான

தனிமை. அவள் அவளாக இருக்க முடியும் என்பதை உறுதி செய்யும் தனிமை. அவள் உறவுகளிலிருந்து விலகி தன்னும் மேற்கொள்ளும் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உறவுகள் முன் நிறுத்தும் தெரிவுகள், வினைகள் எதிர் வினைகள், வெற்றிகள், தோல்விகள் மூலம் தன்னைக் கண்டடைய முயல்கிறாள்.

இத்தேடலில் தன் சுயத்தினை கண்டறிய முயலும் குந்தி, விழிப்புணர்வு கொண்டவளாக தேடலே பயணம், தேவை புதிய பார்வையும், புரிதலும், தெளிதலும், புதிய கண்ணோட்டத்தில் இருத்தலுமே என்று உணர்கிறாள். அப்போது தனிமை சுமையில்லை, சுதந்திரமான தனிமை ஒரு சரியான தெரிவு, இப்போது தேவை அனைததையும் நிராகரிப்பதல்ல, கடந்து செல்லுதல் என்பதை அறிகிறாள். அந்த புரிதலில் விரக்தி இல்லை, வெற்றி இல்லை, தோல்வி இல்லை. அவள் இப்போது ராணியல்ல, தாயல்ல, குந்தி, ஆம் அந்த உறவுகளைக் கடந்து விட்ட ஒரு ஆளுமை குந்தி எனும் தனித்துவமான் ஆளுமை. சென்றதினி மீளாது என்பதறிந்து இன்று புதிதாய் பிறந்த குந்தி அவள்.

இது குந்தியின் கதை மட்டுமல்ல, ஒரு விதத்தில் உறவுகளின் நிர்பந்தங்களில், பகடைகாயாக

பயன்படுத்தப்படும், பிரிவினையும், துயரையும் தவிர்க்க முடியாத நிலையில் உள்ள, சூழ்நிலைக் கைதியாகவும், பல சமயங்களில் விழுமியங்களை, விதிகளை மீற முடியாமலும், சில சமயங்களில்

அவை போலி என்று தெரிந்து அவற்றினை நிலை நாட்ட விரும்பும் பெண்களின் கதையும் கூட.

அனிதா இப்பிரதியினை சிறப்பாக கையாண்டார். தெளிவான உச்சரிப்பு, குரலில் ஏற்ற இறக்கங்கள் மூலம் பாவங்களை வெளிப்படுத்தியது, தெளிவான உச்சரிப்பு, உடல் பாவங்கள் மூலம் உணர்வுகளை வெளிக்கொணர்ந்தது என்று அவர் நிகழ்த்திய விதத்தில் பாராட்டதக்க அம்சங்கள் பல இருந்தன. பொருத்தமான உடை அலங்காரமும், ஒப்பனையும் நிகழ்விற்கு உறுதுணயாக இருந்தன. வயதான குந்தியாகத் தோன்றும் போது ஒப்பனை இன்னும் கொஞ்சம்

பொருத்தமாக இருந்திருக்கலாம்,

ஒரே நபர் இது போன்ற பிரதியை நிகழ்த்திக்காட்டுவது என்பது எளிதல்ல. இப்பிரதியினை

எழுதி இயக்கிய பரசுராம் ராமமூர்த்தி, தொழில்நுட்ப நெறியாள்கை செய்த சுந்தர், இசை

அமைத்த டேவிட், ஒளியமைத்த ராஜ்குமார் , அனிதாவுடன் இணைந்து ஒரு சிறப்பான

நிகழ்வினை சாத்தியமாக்கினர். இது வரை இரு முறை அரங்கேற்றப்பட்டுள்ள இப்பிரதி

இவ்வாண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியில் சில கலை விழாக்களில் இடம் பெறவுள்ளது.

வனப்பிரஸ்தம்

குந்தி பாத்திரமேற்றவர் – அனிதா சந்தானம், நடிகை, நடனக்கலைஞர், நடன ஆசிரியர்

மற்றும் நிகழ்கலை விமர்சகர் (பெங்களூர்)

பிரதியாக்கம்-இயக்கம் பேரா.பரசுராம் ராமமூர்த்தி மதுரை காமராஜர் பல்கலைகழகம்

தொழில் நுட்ப இயக்கம் – முனைவர் சுந்தர் காளி (நடிகர், இயக்குனர், நாட்டுப்புறவியலாளர்,

விரிவுரையாளர் காந்தி கிராமநிகர் நிலைப்பல்கலைக்கழகம் )

அரங்கமைப்பு, ஒளியமைப்பு – ராஜ்குமார் (டி.வி,எஸ் லக்ஷ்மி மெறிக் மேல்நிலைப்பள்ளியில் நாடக ஆசிரியர்)

இசை- டேவிட் (இசை அமைப்பாளர், ஆசிரியர் மதுரை)

நேரம் – 70 நிமிடங்கள்

—-

ravisrinivas@rediffmail.com

Series Navigation