எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

This entry is part of 42 in the series 20060324_Issue

அறிவிப்பு


அண்மையில் மதுரையில் புதியகாற்று மாத இதழ்ின் சார்பாக சென்னையை சார்ந்த புதுப்புனல் புத்தக

வெளியீட்டாளர்கள் எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச்சிறுகதைகள் தொகுப்பு வெளியிடப்பட்டது. புத்தகத்தை வெளியிட்டு பேசிய எம்.ஜி.சுரேஷ், ‘புனைக்கதைகள் எழுதி எழுதித் தேய்ந்து விட்டன.தேய்ந்த கத்தியை மேலும் மேலும் தேய்த்து அதன் மொண்ணைத்தன்மையை நீக்கும் முயற்சி தான் இப்போது எங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

முஜீப் ரஹ்மான் தனது ‘தேவதைகளின் சொந்தக் குழந்தை ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பின் மூலம்,தமிழ்ப் புனைகதையை அதன் மொண்ணைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்க்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்றே சொல்லத்தோன்றுகிறது.

காஃப்கா,ஆந்த்ரே ழீத்,கொர்த்தஸார்,ஜே.ஆர்.ஆர்.டோல்கின் என்று விரியும் இவரது வாசிப்பு, எழுத்தின் பல்வேறு சாத்தியங்களை தேடி அலைவதைக் காட்டுகிறது.இந்த அலைச்சலே இவரை இது போன்ற சிறுகதைகளை எழுதுவதற்க்கு உந்தி இருக்கிறது என்லாம்.

பின் நவீனத்துவ கூறுகளில் ஒன்றான ‘புதியன களைதலும்,பழையன புகுதலும் ‘ என்ற செயல்பாடு இவரது கதைகளில் சாத்தியப்பட்டிருக்கிறது.நவீன எதார்த்த சிறுகதை மரபுக்கு எதிராக பழைய கட்டு கதை மரபை இவர் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்.இதனால் இக்கதைகள் பிரதியின் வேட்கையை ஒத்திப் போடுகின்றன.இந்த ஒத்திப்போடுதல் இக்கதைகளை நெடுநீளாய்வுக் கதைகளாக மாற்றுகின்றன.எனவே தன்னளவில் இத்தொகுப்பு தன்னை ஒரு பின் -நவீனச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக உருமாற்றிக் கொண்டு விடுகிறது.

இத்தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறுகதைகள் இருக்கின்றன.பதினாறும் பதினாறு விதமான கதைகள்.ஆனால் இவை எல்லாமே கட்டுக்கதை மரபுக்குரியவை.ஓயாமல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யதார்த்தக் கதை குவியலிலிருந்து வெளிப்படும் புழுக்கத்தையும் வெப்பத்தையும் தணிக்க வந்த கதைகளாகவே இவை எனக்குக் காட்சியளிக்கின்றன.சில கதைகளில் போர்ஹேயின் வாரிசாக முயற்சித்திருக்கும் இவர் சில கதைகளில் உம்ப்ர்டோ ஈகோவின் சீடராக மாற முயற்சித்திருக்கிறார்.

இக்கதைகள் பெருங்கதையாடல்களைத் தகர்க்கின்றன.குறுங்கதையாடல்களை விளையாட்டாக உருவாக்கிக் காட்டுகின்றன.இந்துக் கலாச்சாரம்,இஸ்லாமிய கலாச்சாரம் என்ற மையமும்,விளிம்பும் கலைக்கப்பட்டு ஒருவித பொதுமையான கலாச்சார வகைமையைக் கட்டமைத்துக் காட்டும் காரியத்தை இக்கதைகள் செய்கின்றன.

இத்தொகுப்பிலுள்ள பல கதைகள் ஏற்கனவே சிற்றிதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன.பரிசுகள் பெற்றிருக்கின்றன என்ற விஷயம் மனதுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.இல்லாவிட்டால் இது போன்ற முயற்சிகள் அருகிவிடக்கூடும்.

கடினமான கோட்பாடுகளை வாசிப்பவர்களுக்கு கதைகள் எழுத வராது.கதை எழுதுபவர்களுக்கு கோட்பாடுகளோடு

பரிச்சயம் இருக்காது.நண்பர் முஜீப்புக்குக் கோட்பாடுகளிலும் நல்ல தேர்ச்சி இருக்கிறது.கதை எழுதுவதும் கைகூடி வந்திருக்கிறது.இது ஒரு நல்ல இணைவு.

தமிழைப் பொறுத்தவரை பின் நவீனத்துவ எழுத்துக்களின் வருகை என்பது மிகக் குறைவே.கறாராகச் சொல்வதாக இருந்தால், தமிழில் ரமேஷ்-பிரேமினுடைய மற்றும் என்னுடைய பிரதிகள் நீங்கலாக, வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட பின்நவீனத்துவ பிரதிகள் என்று எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.இச்சூழலில் ஒரு நம்பிக்கையூட்டும் பின் நவீன எழுத்தாளராக முஜீப் ரஹ்மான் என் கண்களில் படுகிறார்.அவரது இத்தொகுப்பை ஒரு வெற்றி என்று என்னால்,தாராளமாகச் சொல்ல முடியும்.அவர் தொடர்ந்து இயங்கி மேலும் வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை. ‘

அய்ம்பதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கோணங்கி,ரமேஷ்(பிரேம்),தேவேந்திர பூபதி,யவனிகாஸ்ரீராம்,ஆதவன் தீட்சண்யா,உமாமகேஷ்வரி,சி.சொக்கலிங்கம்,ஹாமிம் முஸ்தபா,நட.சிவகுமார்,ஹெச்.ஜி.ரசூல்,எம்.ஜி.சுரேஷ்,ரவிச்சந்திரன் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

—-

Series Navigation