கற்பனையும் சித்தரிப்பும் : எம். யுவனின் ‘கைமறதியாய் வைத்த நாள் ‘

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

பாவண்ணன்


கடந்த பதினைந்து ஆண்டுகளாக கவிதை எழுதிவரும் எம்.யுவன் தமிழின் முக்கியக் கவிஞர்களுள் ஒருவர். யுவனுடைய கவிதைகள் புதுமைநாட்டம் நிறைந்தவை. கற்பனையின் கதகதப்பைக் கொண்டவை. எதையும் வினோதமான முறையில் சொல்லிப் பார்க்கும் ஆர்வம் நிரம்பியவை. அதிகாலை நடைக்கு நிகரான உற்சாகத்தால் நிரம்பிவழிபவை. தம்மை நெருங்கும் வாசகனோடு உரையாடுவதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் ஏராளமான சங்கதிகளுடன் காத்திருப்பவை.

யுவன் கவிதைகளில் பலவிதமான கற்பனைக்கோலங்கள் இடம்பெறுகின்றன. அவருடைய கற்பனையும் மொழியும் ஒன்றையொன்று செழுமைப்படுத்திக்கொள்கின்றன. கற்பனையைத் துல்லியப்படுத்துவதற்கு மொழி மிக லாவகமாக வளைந்துகொடுக்கிறது. மொழியின் பாய்ச்சலில் புத்துணர்ச்சி நிரம்பியிருக்கும் வகையில் கற்பனை அருவி பொங்கிப் பாய்கிறது. கற்பனையும் சித்தரிப்பும் வெவ்வேறு விகிதாச்சாரங்களில் கலந்து உருவான ஒன்றாக ஒளிர்கிறது யுவனுடைய கவிதை உலகம்.

கற்பனையில் அவர் கட்டியெழுப்பும் சித்திரங்கள் அல்லது காட்சிகள் ஒரு கவிதை வாசகனாக எனக்கு எப்போதும் உவப்பைத் தருபவை. அவர் கற்பனையில் பறக்கும் கம்பளத்தில் வந்திறங்கும் ராஜகுமாரி இடம்பெறுகிறாள். அப்பா சொன்ன கதையில் இடம்பெற்ற சிங்கம் காட்சி தருகிறது. நாம் தோன்றும் முன்பே புறப்பட்டு, நம்மோடும் நகர்ந்து, நமக்கும் அப்பால் செல்லும் நதி இடம்பெறுகிறது. கைமாற்றாய் ஒரு நாளைக் கடன்வாங்கிச் சென்றுவிட்டு திரும்பித் தருகிற கடவுளும் வருகிறார். ஆனால் இக்கற்பனையை யுவன் கட்டியெழுப்புவது எதார்த்த உலகின் இழிவுகளை அல்லது சிக்கல்களை நோக்கித் திசைதிருப்பும் செயலாகவே தோன்றுகிறது. எதார்த்தத்தை விமர்சனத்துக்குள்ளாக்குகிற கச்சிதமும் தர்க்க ஒழுங்கும் ஒருங்கே பொருந்திய கற்பனைச் சித்திரங்களைக் கட்டி எழுப்பும் ஆற்றல் யுவனுடைய மிகப்பெரிய பலம். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அந்த இணைப்பை உருவாக்க இயலாமல் சரிந்துபோவது பொதுவான பலவீனம்.

43 கவிதைகள் இடம்பெற்றுள்ள இத்தொகுப்பில் சில கவிதைகள் தலைப்பிடப்பட்டவையாகவும் சில கவிதைகள் தலைப்பற்றும் காணப்படுகின்றன.

ஒரு கவிதையில் எதற்கும் பெயர் சூட்டிப் பார்க்கிற ஒருவனும் பெயர்களுக்கு எதிரான மாபெரும் கலகத்தின் கடைசிப் போராளியாக இருக்கவல்ல இன்னொருவனும் இடம்பெறுகிறார்கள். உலகில் உள்ள அனைத்துக்கும் பெயர் சூட்டிவிட்டதாக மனிதன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே பெயரிடப்படாத பல விண்மீன்கள் வானில் கண்சிமிட்டுகின்றன. பெயர்சூட்டியவனின் எலும்பு மட்கி மண்ணோடு மண்ணாகக் கிடக்கும்போது பெயர்களுக்கு எதிரானவனின் பிம்பம் விண்மீனில் ஒளிர்கிறது. கற்பனையில் விளைந்ததாக இக்காட்சியை எடுத்துக்கொண்டாலும் ‘பெயர் ‘ என்பதற்கு இணையானதாக வேறு எதையாவது வாழ்வில் பொருத்திப் பார்க்கமுடியுமா என்றொரு கேள்வியை முன்வைத்து கவிதை இன்னொருமுறை தன்னை எழுதிக்கொள்வதுபோலத் தோன்றுகிறது. காதலன் என்பது ஒரு பெயர். கவிஞன் என்பது இன்னொரு பெயர். செல்வந்தன் என்பது மற்றொரு பெயர். சிந்தனையாளன் என்பது பிறிதொரு பெயர். பைத்தியக்காரன் என்பதுவும் ஒரு பெயர்தான். சூட்டிக்கொள்கிறவனுடைய தலையை இந்தப் பெயர்கள் பெரும்பாரமாக அழுத்தி நசுக்குகின்றன. கலப்பையைச் சுமக்கிற மாடுகளாக மாற்றிவிடுகின்றன. சுதந்திரம் என்னும் பேச்சுக்கே இடமில்லை. பெயர்களின் சுமையிலிருந்து விலகி நிற்கும்போது மனம் சுதந்திர வெளியில் விருப்பம்போலப் பறக்கிறது. ஆகாயப்பறவைகள் எதையும் விதைப்பதுமில்லை, அறுவடை செய்வதுமில்லை என்னும் வாசகம் நினைவுக்கு வருகிறது. சுதந்திரம் இருக்கும் இடத்தில்மட்டுமே இன்பத்துக்கும் இடமிருக்கிறது. ஒரு கற்பனையாக சித்திரமென்றாலும் அது எழுப்பும் கேள்வியகளைப் பின்பற்றி ஒரு வாசகனால் வெகுதொலைவு செய்ய இயலும் என்று தோன்றுகிறது.

இத்தொகுப்பில் மிகமுக்கியமான படைப்பாக ‘வந்தேறி ‘ கவிதையைச் சொல்லலாம். ஓர் ஓவியத்துக்கு நிகரான துல்லியமான சித்தரிப்பு மட்டுமே இக்கவிதையில் உள்ளது. என்றாலும் அது எழுப்பும் எண்ண அலைகள் ஏராளமானவை. பேருந்துப் பாதையை ஒட்டி இயங்குகிற ஓர் அலுவலகக் கட்டடவாசலிலிருந்து இக்கவிதை தொடங்குகிறது. தொடர்ச்சியாக பல ஆண்டுகள் வேலைசெய்து அலுவலகத்திலேயே வேரூன்றிவிட்ட ஒருவனைப்பற்றிய அறிமுகமும் பெயர்ப்பலகைக்கு அருகே மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு மரத்தைப்பற்றிய அறிமுகமும் ஒரே தருணத்தில் மிக இயல்பாக முன்வைக்கப்படுகிறது. நெருப்பைப்போல வெயில் தகிக்கும் கோடை நாட்களில் மரத்தையும் மனிதனையும் ஒரேவிதமான சோர்வு கவ்வுகிறது. மாநகராட்சியின் கருணையால் அவ்வப்போது ஊற்றப்படும் நீர்மட்டுமே அதற்கு வாய்க்கிறது. கிளைகள் அடிக்கடி கழிக்கப்படுகின்றன. வாகனங்கள் வெளியேற்றும் கரும்புகை மரக்கிளைகள்மீது அடர்த்தியாகப் படிந்திருக்கிறது. இவ்விதமான சின்னச்சின்ன குறிப்புகளோடு மெல்லமெல்ல நகரும் கவிதை முடிவுப்புள்ளியை நோக்கிப் பாய்கிறது. கவிதையின் இறுதியில் யாரும் எதிர்பாராதவண்ணம் அபூர்வமாக மழை பொழிகிறது. அந்த மழையின் குளிர்ச்சியில் சின்னக்காளானொன்று மரக்கிளையின் இடுக்கில் அரும்பிச் சுடர்கிறது. மனிதனும் மரமும் வெவ்வேறு புள்ளியில் சோர்ந்து நிற்கிற தொடக்கக்காட்சியோடு காளான் துளிர்விட்டு நிற்கிற மரத்தின் காட்சியைமட்டுமே இணைத்துப் பார்க்கும்போது, மரத்தின் உருவத்தில் அற்புதமான ஒரு மாற்றத்தை உருவாக்கிவிட்ட மழையால் மனிதனின் நடவடிக்கைளில்மட்டும் ஏன் எந்த மாற்றத்தையும் உருவாக்க இயலாமல் போனது என்ற கேள்வி துளிர்க்கிறது. மனிதனுக்கு இணையான சோர்வு மரத்துக்கும் இருக்கிறது. எண்ணற்ற இழப்புகளையும் எதிர்கொள்கிறது. ஆனால் துளிர்ப்பதும் உதிர்வதும் மாறிமாறி நிகழும் சம்பவங்களே என்னும் அடிப்படை உண்மை மரத்துக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. வனஞாபகம் அதன் நெஞ்சில் உறைந்திருக்கிறது. விழும் ஒவ்வொரு இலையும் நாளை மீண்டும் துளிர்க்கும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கையை அது பற்றியிருக்கிறது. அதன் சோர்வு ஒரு பாவனைதானே தவிர உண்மையல்ல. அது உண்மையல்ல என்பதை, கிடைத்த நீரை உறிஞ்சி துளிர்த்து நிற்பதன்மூலம் புலப்படுத்தவும் செய்கிறது. ஆனால் அலுவலகத்தில் வேரூன்றியிருக்கும் மனிதனோ வாழ்வின் அனுபவங்களிலிருந்து எதையும் கற்றவனாகத் தெரியவில்லை. புத்துணர்ச்சி, கலகலப்பு, ஆனந்தம், நிறைவு என்ற எவ்விதமான ஆதிஞாபகமும் அவன் நினைவில் இல்லை. ஒரு மரத்துக்கு இருக்கக்கூடிய ஞாபகம்கூட ஒரு மனிதனுக்கு இல்லாமல்போய்விட்ட துக்கமும் கசப்புணர்ச்சியும் கவிதையில் எஞ்சியிருக்கின்றன. மனிதர்களை ஞாபகசக்தி அற்றவர்களாக மாற்றியவை எவை என்பது முக்கியமான கேள்வி. கவிதைக்கு வெளியே நிற்கக்கூடிய இக்கேள்வியின் முன் கவிதை வாசிப்பனுபம் நம்மை நிற்கவைக்கிறது.

கற்பனையும் சித்தரிப்பும் ஒருங்கே கச்சிதமாகப் பொருந்திய படைப்புகளில் முக்கியமான கவிதை ‘கடைசி நண்பன் ‘. இல்லாத கோட்டின் இந்தப் பக்கம் ஒருவனும் அந்தப் பக்கம் இன்னொருவனும் நிற்கிற இரண்டு நண்பர்களைப்பற்றிய சித்தரிப்புடன் தொடங்குகிறது இக்கவிதை. ‘இல்லாத கோடு ‘ என்பது அழகான பிரயோகம். கோடு விழுந்த பிறகு யாரும் நண்பர்களாக இருக்கமுடிவதில்லை. நெருங்கிய நண்பர்களுக்கிடையே கோடு என்ற சொல்லுக்கே இடமில்லை. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது யாராவது அல்லது ஒருவரின் முன்னிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் வேகத்தைத்தான் இல்லாத கோடு என்னும் தற்காலிகப் பிரயோகம் சுட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். தற்காலிகமான ஆவேசம், அடக்கமுடியாத எரிச்சல், தன்னை மறந்த பதற்றம், புண்பட்டுவிட்ட துக்கம் என ஏதோ ஒன்றுதான் இல்லாத கோடு படர்வதற்குக் காரணமாகிவிடுகிறது. கோட்டுக்கு அருகிலேயே நின்றபடி அவர்கள் சொற்கள் பாசத்தோடு ஒன்றையொன்று தழுவிக்கொள்கின்றன. ஆனால் அவர்களது நிழல்கள் ஒன்றையொன்று குதறிக்கொள்கின்றன. பிறகு பிரியமுடன் ஒரு தேநீரை அருந்திவிட்டு சிகரெட் புகைத்தபின்னர் கைகுலுக்கி விலகிச் செல்கிறார்கள். மீண்டுமொருமுறை பெறமுடியாதபடி அன்பைப் பறிகொடுத்த துக்கத்துடன் ஒருவனும் ஏக்கத்தின் சோர்வோடு இன்னொருவனும் எதிர்எதிர் திசைகளில் நடக்கிறார்கள். இல்லாத கோட்டின் விளிம்புகளில் நின்று மோதிக்கொள்ளும்போது நட்பு மரணமடைந்துவிடுகிறது. கவிதையின் தொடக்கத்தில் துண்டுதுண்டாக இருக்கும் இரு குறிப்புகள் இப்போது கூடுதல் கவனம் பெறுகின்றன. கனவில் சுரக்கும் பால் பற்றியது ஒரு குறிப்பு. முலைக்காம்பில் துளிர்த்திருக்கும் வெள்ளைத் தாதுவைப்போலவே கள்ளியின் விளிம்பிலும் வெள்ளைத்தாது துளிர்த்திருக்கிறது என்பது இன்னொரு குறிப்பு. இக்குறிப்புகள் முழு நம்பிக்கையுடன் மலரமுடியாத நட்பின் வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டுகின்றன. எல்லா இடங்களிலும் சந்தேகத்தின் தடங்கள் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பொய்யும் உண்மையும் பிரித்தறியமுடியாதபடி ஒரே உருவத்தோடு உலவுகின்றன. நேற்றைய மலர் இன்றைய சருகு என இறதியில் இடம்பெறும் மற்றொரு குறிப்பு சந்தேகத்தின் இருப்பு தவிர்க்க இயலாதபடி படர்ந்துவிட்ட வாழ்வின் அவலத்தை முன்வைக்கிறது. நேற்றைய நண்பர்கள்தாம் இன்று ஒருவரையொருவர் அடித்துக்கொள்கிறார்கள். நேற்று கைகோர்த்து உலவச் சென்றவர்கள் இன்று ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொள்கிறார்கள். நேற்று அன்பின் மேன்மைகளுக்குத் தம்மை அடையாளமாக காட்டிக்கொண்டவர்கள் இன்று அநாகரிகமான முறையில் வெட்டிக்கொண்டு ரத்தம் சிந்த மரணமடைகிறார்கள். நண்பர்கள் என நம்பி ஆரத் தழுவுவது இனிமேல் சாத்தியமில்லையா ? முற்றிலும் எதிரிகள் என ஒருவரை விலக்கிவைப்பதும் சாத்தியம்தானா ? கோடே இல்லாத ஒரு வாழ்வை நம்மால் வகுத்துக்கொள்ளவே முடியாதா ? பெருமூச்சோடு ஒவ்வொரு கேள்வியும் வெளிப்பட்டபடி இருக்கிறது.

நண்பர்களைப் பெறமுடியாமலும் பெற்ற நட்பைத் தக்கவைத்துக் கொள்ளமுடியாமலும் ஏக்கத்தில் தடுமாறும் சித்திரத்தின் புதிர், உள்ளிருந்து ஆர்ப்பரிக்கும் மிருகத்தின் குரலை அடையாளம் காட்டுகிற இன்னொரு கவிதையில் அவிழ்கிறது. எதிரில் வரும் எந்தப் பெண்ணோடும் உறவுகொள்ளத் துாண்டியும் எதிராளி அயரும் நேரத்தில் சொல்லாலாவது கொல்லும்படித் தூண்டுகிற மிருகத்தின் குரலை தற்செயலான ஒரு கணத்தில் கண்டடைகிறவனை விவரிக்கிறது கவிதை. ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கும் மிருகங்கள் ஆர்ப்பரித்தபடி இச்சையின் திசையில் செலுத்தும் நிலையில், நட்பு நலம் பேணுதல் என்பது சாத்தியமற்ற செயலாகத்தானே இருக்கும். மிருகமும் மனிதனும் பறவையும் பாறையும் பனியும் வெயிலுமாக மாறிமாறி மனம் வெளிப்படுவதாலேயே அதன் பிம்பங்களும் அதே கணக்கில் வெளிப்படுகின்றன. மாறிமாறி வெளிப்படும் பிம்பங்களின் குவியலுக்கிடையே தன்னுடைய பிம்பம் எது என்று பிரித்துக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத மானுடனின் குரல்தான் மற்றொரு கவிதையில் ‘பிம்பக் குவியலில் பொறுக்கி எடுத்தவற்றில் எது எனது முகம் ? ‘ என்று கேள்வியாக வெளிப்படுகிறது.

( கைமறதியாய் வைத்த நாள்- எம். யுவன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமனியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை. ரூ.50 )

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்