108 வது கவிதை எங்கே ?

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

பா.சத்தியமோகன்


நாடக ஆசிரியரும் கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் தன் மொத்த

படைப்புகளுக்கும் பயன்படுத்திய சொற்கள் பதினைந்தாயிரம் மட்டுமே. ஜான்

மில்டனுக்கு எட்டாயிரம் வார்த்தைகள் போதுமானதாக இருந்தது.

மிகப்பெரும்பாலருக்கு இரண்டாயிரம் முதல் மூவாயிரம் போதுமானதாக உள்ளது.

எழுத்தின் அழகியல் வார்த்தைகளின் எண்ணிக்கையில் அல்ல. அதன் அதன்

இடத்தில் அவற்றை பொருத்துவதாகும். இதனை சிறப்பாக பயன் படுத்தியவர்

சுந்தர ராமசாமி. “பழைய குயவர்கள் மறைந்து புதிய தச்சர்கள்

தமிழில் தோன்றட்டும்” என்று ஒரு வரி சுந்தர ராமசாமி எழுதியிருப்பார்

ந.பிச்சமூர்த்தியின் கலையும் மரபும் பற்றின கட்டுரையில். 107 கவிதைகள்

என்ற அவரது தொகுப்பு அவரது எழுத்தமைதியை நிரூபிக்கிறது.

அவர் எழுத்தில் அதிக அலட்டல் இருக்காது. நுட்பம் இருக்கும். சொல்லிச்

சொல்லியே ஒன்றை இழை பின்னி இறுதியில் ஒரு செய்தியைக் காணும்

நேர்த்தி இருக்கும். இளைய படைப்பாளிகளிடம் அவர் கோரியது அதிகமான

வாசிப்பை. ஜே.ஜே சில குறிப்புகள் பறேறி வியக்காதவர்கள்

இருக்கமுடியாது. பாராட்டியபடியே இருக்க வைக்கும் வெகு சில படைப்புகளில் அது

ஒன்று.

லாந்தர் கண்ணாடியில் கரிப்பூச்சைத் துடைத்தபின் எரியும் வெளிச்சம்போல

உண்மையின் வசீகரம் அவர் படைப்பில்காணுதல் யாவருக்கும் சாத்தியம்.

விருதாசலத்தில் எழுத்தாளர் இமையம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சு.ராவை

முதன்முதலக நேரில் கண்டேன். வந்திருந்த 15 பேரில் ஒருவனாக இரண்டே

இரண்டு கேள்விகள் கேட்டிருக்கிறேன். அவை என்னவென்று தற்சமயம்

ஞாபகமில்லை. ஆனால் பதிலளிக்க அவர் என்னை நோக்கியபோது அந்தக்

கண்களின் நிமிரல் அழகாக இருந்தது ஞாபகமிருக்கிறது.

பாரதி பற்றியும் திருக்குறள் பற்றியும் உச்சஸ்தாயி கலக்காத நடுநிலைத்

தனத்தோடு பாராட்டும் வார்த்தைகளை அவர் எழுதியிருக்கிறார்.”ரத்னாபாயின்

ஆங்கிலம்” கதையை சிலாகித்து எஸ்.ராமகிருஷ்ணன் 30.10.05 ஆனந்த

விகடனில் எழுத்தாளர் “சு.ரா- நாகர்கோவிலில் வசித்து வருகிறார்” என்று

எழுதியுள்ளார். அவர் இறந்த தகவல் அவரை அடையவில்லை போலும். அவர்

இறந்தார் என மனம் நம்ப மறுக்கிறது. உண்மை எழுத்தின் சக்தி அதுதான் .

சொல்லில் நனைதல் என எஸ். ராமகிருஷ்ணன் வர்ணித்தது சரியே. இனி அவர்

தமிழின் கோவிலில் இருப்பார் என்று எழுதும்படி நிகழ்ந்துள்ளது அவர் மரணம்.

பெரும்பாலும் அவர் தனது படைப்புகளில் கடைபிடித்த நேர்மை என்பது

பெரும்பாலும் பொறுப்பு சார்ந்தது. அதனைப் பயில்வதே இளம் படைப்பாளிகளும்

எதிர்கால எழுத்தாளர்களும் செலுத்த வேண்டிய காணிக்கை.

107 கவிதைகள் என்ற தொகுப்பு எழுதினார். 108வது கவிதையாக இனி அவர்

வாழ்வார் – இருப்பார் –உண்மை.

####

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்