ஓவியம் வரையாத தூரிகை

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

சிவகாசி திலகபாமா


எனக்குத் தெரிந்து என் பார்வைக்கு வந்ததில் கடந்த இரண்டாண்டுகளாக புதிய புத்தகங்களில் வாசிப்பின் மேல் ஒரு தொடர் சலிப்பு ஏற்படிருந்தது

நவீனம் , தீவிர இலக்கியம் எனும் பெயரில் ஒரு பக்கம் மேலைத் தேய நாடுகள் தூக்கி எரிந்த விடயங்களை இதுவரை இங்கு காணாத ஒன்றாக இருந்ததினாலேயே புதிய ஒன்றாக அல்லது மறைக்கப் பட்ட நிழலுக்குள்ளிருக்கும் விசயங்களை கட்டுடைத்து வெளிக் கொண்டு வருவதாக சொல்லி ஒருவகை அதீதங்களை கையிலெடுக்கும் போக்கு தரும் அதிர்ச்சியும் புதிதாய் தலையெடுக்கும் இளைஞர்களின் ஒட்டு மொத்த சிந்தனைப் போக்கை தான் கைக்கொள்ள நினைக்கும் அந்நிய நாடுகளின் ஆதிக்கங்களுக்கு , சிந்தனைகளை முளையிலேயே குறைப்பிரசவமாக்கிவிட அவர்கள் போடும் எழும்புத் துண்டுகளுக்காக விலை பேசும் இலக்கிய பத்திரிக்கை எனும் போர்வையில் நாட்டின் பெருமையை அடகு வைக்கும் இலக்கிய அறிவில்லாது ஏன் சமுதாய பிரக்ஞை துளி கூட இல்லாது வெறும் வியாபார தந்திரங்களில் “அடக்குமுறைக்கெதிராக, வன்முறைக்கெதிரான” எனும் கோசங்களின் பின் செயல்படும் சிற்றிலக்கியப் போக்கும் இவற்றை வன்மையோடு ஓன்று கூடி எதிர்த்து விட முடியா நேர்மையான சிந்தனையாளர்களின் இலக்கிய வாதிகளின் இயக்கவாதிகளின் ஒற்றுமையின்மையும் அவ்வொற்றுமையின்மையாள் அவர்கள் நல்ல விசயங்களை நிலை நிறுத்த முடியாமல் போன போக்கும் தந்திருந்த சலிப்புக்கிடையில் இன்னமும் அவ்வப் போது சில புத்தகங்கள் வந்து என் நம்பிக்கையை வலுப்பெறச் செய்கின்றன

ஓவியம் வரையாத தூரிகை கடந்த டிசம்பர் மாதம் சுனாமிக்கு முந்தின நாள் நான் இலங்கையில் இறங்கி தங்கிய காலத்தில் எனக்கு கிடைத்த புத்தகமிது

இப்பொழுதுதான் வாசிக்க சாத்திய மேற்பட இன்ப அதிர்ச்சி

எப்பொழுதும் இலங்கை படைப்புகள் என்றாலே அழகிய மொழி நடை தவிர்க்க இயலாதிருப்பது போலவே போர் அவலமும் புலம் பெயர் வாழ்வும் அதன் வலியும் இன்னமும் கூடுதலாக தொடர் புலம்பலின அவநம்பிக்கையும் நினைவுக்கு வரும் ஆனால் அதிலிருந்து முற்றிலும் வேறான ஒரு தொகுப்பு . இலங்கை போயிருந்த போது நான் உணர்ந்தேன் தேசிய விடுதலை போராட்டம் ஆயுதமேந்தி ஆணுக்கு நிகராக களத்தில் நின்ற போதும் பெண்களின் வாழ்வு கேள்விக் குறியோடு தான். போர் ஆண்களை களத்துள்ளும் , ஆயுதமேந்த விரும்பாதவர்களை வெளிநாடுகளிக்கும் தள்ளியது போல பெண்களுக்கு படிக்க வாய்ப்பும் தாய் வழிச் சமூகம் தன்னிச்சையக தந்திருந்த சுதந்திர உணர்வும் சாத்திய மேற்பட்ட போதும் ஆணுக்கான காத்திருப்பும் திருமணத்திற்கு , திருமணத்திற்கு பிறகும் என தொடர்வதால் எல்லா இடமும் பெண்களின் உணர்வுகள் சிதைக்கப் படுவது எந்நாளும் எல்லாராலும் நிகழ்ந்து கொண்டிருப்பதை காண்கையில் உண்டான மனவருத்தம் அவற்றுக்கு எதிராக பேனா ஏந்திய கவிதை துளிகளை வாசிக்கையில் உற்சாகத்தையும் தந்தது

கவிஞரைப் பற்றி எந்த விதமான முன்னுரைகளும் இல்லாததாலேயே கவிதையின் மூலமாக நேரடியாக கலப்பில்லாத ஒரு அறிமுகத்தை தந்து போவது சரியான ஒன்றாக இருக்கின்றது

எனக்குத் தோன்றுகிறது கவிதைகளில் சில வரிகளை உதாரணமாக சொல்லி இக்கவிதை தொகுப்பை விமரிசித்து விட்டு போக இயலாதென்று இதுவே இத்தொகுப்பின் வெற்றி. ஒவ்வொரு கவிதையிலும் ஏதானும் இருவரிகளை அல்லது ஒரு பத்தியையோ நான் உதாரணஞ் சொல்லி போக முடியாதவையாக இருக்கின்றது. இரு கவிதைகளை குறிப்பிட்டு என் விமரிசனத்தை முன் வைக்கலாம். இதிலிருக்கும் கவிதைகளை காதல் கவிதை , பெண்ணின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் கவிதைகள் என இருவகைப் படுத்தி அந்த இரண்டிலிருந்தும்

ஒரு மாதிரிகளை பகிரத் தரலாம் . இதிலிருக்கும் காதல் கவிதைகள் கூட

பெண்ணின் இருப்பை கேள்வி கேட்கின்றன.தேடுகின்றன பகிர வருகின்றன

சூரியனை பற்ற வைக்க

நிச்சயமாய்

எனது சந்தோசங்கள்

உன்னைக் காயப்படுத்தும்

என்று தான்

கண்ணீர்க் கூட்டுக்குள்

ஒரு துயரமாகவே

என்னை வாழவிட்டாய்

வலிமை மிகு நம்பிக்கைகள்

உதிர்ந்து போகும்படி

தோல்வியை நோக்கியே

துரத்துகிறாய்

மேலும்

உனக்குப் பொழுது போக்கவும்

எனக்குப் போராட்டமாகவும்

போஇ விட்டது

என் வாழ்க்கை

நீ கனவு காண்பதற்காக

என் கண்களைப் பறித்தாய்

நீ உலாவி மகிழ்வதர்காக

என் கால்களைத் தடுத்தாய்

தாழ்மையை

பற்றுதலை

உன் திமிர் பிடித்த அதிகாரங்கள்

தாட்சண்யமின்றி

தண்டித்தன

அன்பும் இரக்கமும்

வசீகரமும் பொருந்திய

என் இறகுகளைப் பிடுங்கி பிடுங்கி

உன் கறை படிந்த பற்களை

(இன்னும்)

எத்தனை காலத்திற்கு

தேய்த்துக் கொண்டிருப்பாய்

நிச்சயமாய்

எத்தனை தீப்பந்தங்களை

எறிந்தாலும்

சூரியனைப் பற்ற வைக்க

உன்னால் முடியாது

இதுவரை நமக்குள் படிமங்க:ள் உவமைகள் சொற்கள் மொழி என்று எல்லாவற்றிலும் ஆணுக்கானது பெண்ணுக்கானது என்று ஒரு பிரித்தல் நாமே அறியாமல் இருந்து கொண்டே இருக்கின்றது. நிலா நதி பூ என்று பெண்ணுக்கான உவமைகள் படிமங்கள் என்று இருந்து வந்திருந்த உவமைகள் மாற்றி சூரியனை பெண்ணுக்கான படிமமாய் யோசித்திருப்பது பெண்களுக்குள் தன்னை உணர்தல் நிகழ்ந்திருப்பதை காட்டுகின்றது உரிமைகளை யாரிடமும் கேட்டுப் பெறாமல் அதே நேரத்தில் தனக்குள் இருப்பதை உணரத் துவங்கியிருப்பதற்கான அடையாளமிது அதே போல் இன்னுமொரு கவிதையில் ஓவியமாக நானில்லை என்னும் உரத்த குரலும்

சட்டங்களால்

சிலுவையறையப் பட்டிருக்கும்

படிம மாற்றங்களை சிந்தனை மாற்றங்களாய் அடையாளப் படுத்துகிறது.

மொழி

தழும்புகளை செதுக்கிடும்

உளிகளின் சப்தங்களும்

கருநீல இருலில் தெறித்து விழுகின்றது

என அழகியலோடு கைகோர்த்து

இரக்கமற்ற திசைகளின் மேல்

தவறாமல் இயற்றப் படுகின்ற

வைகறை ஒவ்வொன்றுக்கும்

பூசி வருகிறது

கண் விரிந்த வாழ்வின்

தீய்ந்து கருகும்

அதே ஏக்கங்களை

என யதார்த்த கருகல் நிறத்தை வைகறைக்கும் பூசி நிஜத்தின் நிறத்தை பதிவு செய்து வெறும் ஒற்றை வாசிப்போடு நின்று விடாது மொழி வெறும் வார்த்தையாக நில்லாது அந்த வைகறை நிறமாக நாம் காணாத கருகும் ஏக்கங்களாக கண் முன்விரியத் தருகின்றது.

வழக்கமான் காதல் கவிதைகள்போல வெற்றுப் புலம்பல்களாக, காத்திருப்புகளாக இல்லாது பெண் உணர்வுகளை புரியத தருவதாய் , வாசிப்பில் சோகத்தின் இடையிலும் நினைந்து சுகிக்கக் கூடியதாய் இருக்கின்றது.

மலட்டு இரவு, மலட்டுச் சித்திரங்கள் எனும் வார்த்தைகள் வெகு இயல்பாய் பொருந்திப் போன போதும், அந்த சித்தரிப்பு இடம்பெறும் இடம் பெண்ணுக்கான இடமாகவே சொல்லப் பட்டிருப்பதால் காலம் காலமாக பெண்ணுக்கு மட்டுமே வழங்கப் பட்ட அந்த வார்த்தையை நாமும் அவ்வாறே கையாளனுமா எனும் கேள்வி எழுந்தது எனக்குள். பொதுமைக்குள் அந்த சொற்கள் பயன்படுத்தப் படாமல் பெண்ணுக்கான சிந்தனையை பேசும் போது வருவதாகவே அமைவதால் மீண்டும் இயலாமையை குறிக்கும் அந்த சொற்கள் பெண்ணூக்கானதாய் மட்டும் பார்க்கப் படும் நிறுவப் படும் அபாயம் தொடர்ந்து விட வாய்ப்பாக மாறி விடும் எனும் அச்சம் குறைந்த பட்சம் அந்த வார்த்தை தவிர்க்கப் பட்டிருக்கலாம். அல்லது பெண்ணுக்கான உணர்வைப் பேசுகையில் குறிக்கப் படும் சொல்லாக இருப்பதையாவது தவித்திருக்கலாம்

நான் அதிசயம் புதிரோ

ரகசியம் புதையலோஅல்ல

ஒழித்து புதைத்து விட்டு

பூதமாய் நீ காவல் காக்க

எனும் குரலில் வலி தொடரும் தன்னம்பிக்கை

திருத்தச் சட்டங்களாலும்

புதிய ஏற்பாடுகளாலும்

வேலிகளை விசாலப் படுத்தாமல்

விலகி நில்

எனச் சொல்லும் மனோ தைரியம் வாசிப்பவரையும் தொற்றிக் கொள்கிறது

மெளனச் சுமைக்குள்

ஜீவித வெடிப்புக்களுக்கிடையில்

கூடு பின்னிய

ஓவியச் சிலந்தி என

ஓவியம் வரையாத தூரிகையில் ஒளிந்திருக்கும் வண்ணங்கள் இந்தப் புவி நிரப்பும்

புத்தகத்தின் பெயர் : ஓவியம் வரையாத தூரிகை

ஆசிரியர்: அனார்

Series Navigation

சிவகாசி திலகபாமா

சிவகாசி திலகபாமா