பாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

பாவண்ணன்


கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளை தமிழ்க்கவிதையின் முகம் மாறிய காலம் என்று சொல்லலாம். பெண்கவிஞர்களின் பங்களிப்பும் இந்த மாற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட முடியும் . இந்த மாற்றத்தின் பதிவை அடையாளப்படுத்தும்வகையில் ‘பறத்தல் அதன் சுதந்தரம் ‘ தொகுப்பு அமைந்துள்ளது. தமிழகம், ஈழம், புலம்பெயர்ந்தோரின் வசிப்பிடங்கள் என விரிவடையும் தமிழ் பேசும் பிரதேசங்களிலிருந்து இக்கவிதைகள் திரட்டப்பட்டுள்ளன.

மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, கனிமொழி, ஒளவை, ஊர்வசி என கவிமொழியில் தேர்ந்த கவிஞர்கள் முதல் மிகச்சில கவிதைகளையே படைத்து கவிதைத் தளத்தில் தன் இருப்பை நிறுவிக்கொள்ளும் முயற்சியில் உள்ள இளம்படைப்பாளிகள் வரை பலரும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறார்கள். ஒரு கோணத்தில் தமிழ்க்கவிதையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இத்தொகுப்பு அடையாளப்படுத்துகிறது என்பது மிகையான கூற்றாகாது.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள தேவமகளின் ‘வாலாட்டிக் குருவி ‘ கவிதை வழங்கும் அனுபவம் மகத்தானது. கவிதையில் ஒன்றிரண்டு குறிப்புகள் மட்டுமே இடம்பெறுகின்றன. இவையே உறைந்திருக்கும் நம் மனத்தை அசைத்து பலவிதமான எண்ணங்களைப் பாய்ச்சிவிடுகின்றன. அடைபட்டிருக்கும் ஒரு வீட்டு ஜன்னலிலிருந்து தொடங்குகிறது அக்கவிதை. அது கண்ணாடி ஜன்னல். அதனாலேயே மறுபுறத்திலிருக்கும் வரிசைக் கம்பிகளின் பிம்பம் மிகத் துல்லியமாகத் தெரிகின்றது. இந்தத் துல்லியம் ஜன்னலை நெருங்கத் துாண்டுகிறது. கம்பிகளில் கால்வைக்கும் ஆசையை ஊட்டுகிறது. ஆனால் வாலாட்டிக் குருவியால் அக்கம்பியின்மீது கால்பதிக்க முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் கம்பியைக் குறிவைத்து உட்கார இறங்கி வழுக்கிவழுக்கித் தோற்கிறது. இவையே கவிதையில் இடம்பெறும் குறிப்புகள். இவை நாம் எண்ணற்ற சித்திரங்களை உருவாக்கிக் கொள்ளத் தூண்டும் சக்தியைக் கொண்டிருக்கின்றன. ஒன்றை நம்பி ஏமாற்றமடையும் ஒரு தருணத்தை நாம் எளிதாக கவிதையின் சித்திரத்தில் அடையாளம் காணமுடியும். அடுத்தது காட்டும் பளிங்கு என்னும் உவமை திருக்குறளில் கையாளப்படுகிறது. ஒரு புறத்திலிருக்கும் பொருட்களின் அமைப்பைத் துல்லியமாக மறுபுறத்துக்குக் காட்டும் சக்தியைக் கொண்டது கண்ணாடி. நெருங்கித் தொட்டுவிடக்கூடிய அளவுக்கு அருகில் இருப்பதைப்போன்ற தோற்றத்தையும் தரக்கூடியது. கண்ணாடியைத் திறந்து உள்ளே நுழைய வேறொரு விதமான விசை இயக்கப்படவேண்டும் என்னும் சூட்சுமத்தை அறிந்துகொள்ளவேண்டிய எதார்த்தம் பிம்பங்களின் துல்லியத்தைக் கண்ட வேகத்தில் பிடிபடுவதில்லை. இதனாலேயே இறங்கிக் காலுான்ற எண்ணுகிற ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. தோல்விகள் எப்படியாவது அப்புள்ளியைத் தொட்டுவிடவேண்டும் என்கிற ஆவேசத்தை ஊட்டி மீண்டும்மீண்டும் பறந்துவந்து கால்பதிக்கும் முயற்சியில் ஈடுபடத் துாண்டியபடி உள்ளன. துரதிருஷ்டவசமாக அதன் மனத்தின் கவனம் சூட்சுமத்தின்பால் குவிவதே இல்லை. கவிதையை வாசித்து முடித்ததும் இந்தத் தோல்விச் சித்திரத்தை உடனடியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தளம்மாற்றிப் பார்க்கத் துாண்டுகிறது. மனத்தின் துல்லியத்தை அறிந்துகொண்டுவிட்ட எண்ணங்களோடு ஆணை அணுகுகிற பெண்ணும் பெண்ணை அணுகுகிற ஆணும் துல்லியத்தைக் காட்டிய கண்ணாடியைத் திறந்துகொண்டு உள்ளே செல்லும் சூட்சுமம் அறியாமல் திகைத்து நிற்கிற தோற்றங்கள் அடுத்தடுத்து நெஞ்சை நிறைக்கின்றன. மனத்தின் துல்லியத்தை அறிவது வேறு, மனத்தைத் திறப்பது வேறு என்பதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களின் தோல்விச் சித்திரங்கள் அசைகின்றன. திறந்து நுழைய முடியாத குகையாக இந்த மனம் ஏன் இருக்கிறது என்பது விசித்திரமான புதிர். கவிதை பல இடங்களுக்கு இப்படி அழைத்துச் செல்கிறது.

கி.விஜயலஷ்மியின் ‘கல்லும் தண்ணீரும் ‘ என்னும் கவிதையும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு சித்திரம்தான். கல்லுக்கும் தண்ணீருக்கும் நிகழ்கிற ஒரு சின்ன உரையாடல் மட்டுமே இக்கவிதையில் இடம்பெறுகிறது. தன்னைத் தள்ளிக்கொண்டு போகாதே என்றும் தன்னை அரித்து முழுதுமாய் உருவத்தை இழக்கவைத்துவிடாதே என்றும் கல் தண்ணீரிடம் கோரிக்கை வைக்கிறது. உருட்டித் தள்ளுவது எதிரே நீளும் பாதையை வேகமாகக் கடப்பதற்காகவென்றும் பாறையைச் சிதைத்தும் துாளாக்கியும் உருவத்தை மாற்றுவது பள்ளத்தையும் மேட்டையும் சமமணல் படுக்கையாக்கவென்றும் தன்னுடைய தரப்பைச் சொல்கிறது தண்ணீர். இந்த உரையாடல் வழியாக உருவாகும் எண்ண அலைகளே கவிதையின் வாசக அனுபவமாக நெஞ்சில் நிறைகின்றது. இரண்டு தரப்புகளின் கூற்றுகளும் அதனதன் பார்வையிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளன. தன் சுயத்தை மற்றொன்றுக்கு அடையாளம் காட்டிக்கொள்வதாகவும் எடுத்துச் சொல்லலாம். கல், தண்ணீர் இரண்டின் முரண் இயக்கத்தின் விளைவான மணல்துகள் சமப்படுகையாக்கும் தன்மையைக் கொண்டிருப்பதை மேற்கண்ட உரையாடலை உற்றுக் கவனிக்கும்போது அறியமுடியும். எல்லாத் தருணங்களிலும், தனிப்பட்ட சுயத்தைவிட இரண்டு சுயங்களின் முரண்இயக்கத்தின் விளைவாகவே மானுட நாகரிகமும் சிந்தனை மரபுகளும் முன்னகர்ந்து வந்திருக்கிறது என்பதை எல்லாரும் அறிவோம். ஒரு சின்ன உரையாடல் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

திரிசடையின் ‘நேற்றைய கனவு ‘ என்னும் கவிதை தரும் அனுபவம் மறக்கமுடியாத ஒன்று. கவிதையில் பாதிக்கப்பட்ட ஒரு மனத்தின் நம்பிக்கை மிகுந்த குரல் வெளிப்படுகிறது. வெகுநாள் வருந்தி, வியர்வை சிந்தி கல்லுடைத்து வெயிலில் வெந்து பகிர்ந்துகொள்ள எவருமற்ற நிலையில் தனியே ஏறங்கி அழுது மனத்துக்குள் சிறுகச்சிறுகக் கட்டி முடித்திருந்த ஒரு பாலம் எதிர்பாராத விதமாக ஒருநாள் கனவில் தகர்ந்துவிடுகிறது. மீண்டும் அதைக்கட்ட காலமில்லாத மனத்துக்கு அமைதியில்லை. தவிப்பும் கலக்கமும் அதைக் கலங்க வைக்கிறது. மெல்லமெல்ல அது தன் குழப்பத்திலிருந்து தன்னையே மீட்டெடுத்துக் கொள்கிறது. தன் கனவை இன்னொரு மனம் அறியும் என்றும் தனக்காக அது தன் கனவில் அப்பாலத்தை மீண்டும் கட்டி எழுப்பும் என்றும் அமைதியைத் தேடிக் கொள்கிறது. அந்த நம்பிக்கை அத்தருணத்தைப் பொருள் பொதிந்ததாக்குகிறது. தான் கட்டியெழுப்பி இடையில் தகர்ந்த பாலம் கூட தனக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனம் கொண்டிருந்த நம்பிக்கையின் நீட்சிதானோ என்கிற வினா சுடர்விடுகிற நொடியில் வாசக மனம் அடையும் பரபரப்பு எளிதில் வார்த்தைகளால் வடித்துவிடக்கூடிய ஒன்றல்ல. தனக்கு முன்னால் வாழ்ந்த மனம், அதற்கும் முன்னர் இருந்து மறைந்த மனம் எனக் காலத்தைப் பின்னோக்கி நகர்த்திக்கொண்டு செல்லச்செல்ல அது காலத்தின் ஆதிப்புள்ளிவரைக்கும் சென்று நிற்கக்கூடும். அப்படியென்றால் தகர்க்கப்படமுடியாத பாலத்தை யாராலும் கட்டவே முடியாதா ? அது கனவாகமட்டுமே காலம்காலமாக நிலைத்திருக்க வேண்டுமா ? என எழும் கேள்விகளுக்கு எவ்விதமான விடையுமில்லை. அது கட்டி எழுப்ப நினைத்த பாலம் எது என்கிற கேள்வியை முன்வைத்தும் கவிதையை விரிவாக்கிக்கொண்டே போகமுடியும். பாலத்தை எழுப்ப நினைக்கும் மனம் ஆண்மனமா பெண்மனமா என்கிற கேள்வியை முன்வைத்தும் கவிதையின் தளத்தை விரிவாக்கமுடியும். தகர்த்த சக்தி எது என்னும் கேள்வியை ஒட்டியும் பலவேறு கேள்விகளை உருவாக்கும் சாத்தியமும் உண்டு. ஒவ்வொரு கட்டத்திலும் அவ்விரிவாக்கம் தரும் அனுபவமும் புதுமை நிறைந்ததாகவே இருக்கிறது. எளிதில் மறக்க முடியாத கவிதை.

ஊர்வசியின் ‘இடையில் ஒரு நாள் ‘ கவிதை ஆழ்ந்த துக்கத்தையும் மானுட வாழ்வின் அவலத்தையும் ஒருங்கே அனுபவமாக்கும் கவிதை. வேகவேகமாக மாற்றமடைகிற ஒரு நாடகக் காட்சிகள் போல கவிதையில் காட்சிகள் மாறுகின்றன. வாழ்க்கையின் இருப்பை போரோடு இணைத்து அர்த்தப்படுத்திக்கொள்கிற ஆண் வெகுகாலத்துக்குப் பிறகு வீட்டுக்கு வருகின்றான். அவன் வந்தது உண்மையா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்தவர்களைப்போல ஏதோ ஒரு உருவத்தில் யாரோ ஒருவர் வந்து வேவு பார்த்துச் செல்கிறார்கள். வாய்திறந்து பேச முடியாத மெளனத்துடன் இரவு முழுக்க அவள் அருகில் தங்கிவிட்டு மீண்டும் மறைவிடத்துக்குச் சென்றுவிடுகிறான். முரட்டுத்தனத்தோடு வீட்டில் நுழைகிற ராணுவக் கும்பலின்முன் அவளும் அம்மாவும் விசாரணைக்கு நிற்கிறார்கள். இரக்கத்தைத் துாண்டுகிற காட்சிகள். கூட்டிலிருந்து தவறிவிழுந்துவிட்ட அணில்குஞ்சைப்போல என்னும் உவமையைக் கையாள்கிறார் கவிஞர். கூந்தல் அவிழும்வரை விசாரணை என்னும் குறிப்பின்மூலம் தீண்டப்பட்டும் தள்ளப்பட்டும் தொட்டுத் துன்புறுத்தப்பட்டும் நிகழும் விசாரணையின் நிழலை உணர்த்திவிடுகிறது கவிதை. இடையில் ஒருநாள் வந்துபோனதன் விளைவாக ஒவ்வொரு நாளும் விசாரணையும் துன்பமும் தொடர்ந்தபடி இருக்கிறது. இந்த ஒருநாள் இடையில் வாராமல் போயிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. அப்போது நிம்மதி நிறைந்திருக்கும் என்று நம்புவதற்கு எந்தவிதமான தடயமும் இல்லை. அப்போதும் இதே துக்கமும் பதற்றமும் நடுக்கமும் துன்பமும் கவிவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லத் தோன்றுகிறது. காரணம் யுத்தச் சூழல். நிகழாத அந்த நாளை நிகழ்ந்ததாகச் சொல்லி கட்டாய விசாரணையை நிகழ்த்த அதிகாரக் கும்பலுக்கு கண்ணிமைக்கும் நேரமே போதும். காலம் காலமாக யுத்தம் நிகழ்ந்த எல்லா மண்ணிலும் விசாரணை என்னும் பெயரில் பெண்கள்மீது நிகழும் வன்முறையின் தடத்தையே இக்கவிதையில் காண்கிறோம்.

தன் நினைவின்மையை நொந்துகொள்ளும் ஒரு பெண்ணின் வாக்குமூலமாகப் பதிவுபெற்றிருக்கும் சுகந்தி சுப்ரமணியனின் கவிதையும் நல்ல அதிர்வுகளை எழுப்பவல்லது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவோ முக்கியமான தருணங்கள் நிகழ்ந்திருந்தும் எதையும் நினைவில் வைத்திருக்கமுடியாத நிலையில் வாழ்க்கை அவளை நிறுத்தியிருக்கிறது. நடமாடும் ஒரு பொம்மையின் நிலைக்கு அவள் வாழ்வைத் தள்ளிய ச்முகக் கூறுகள் என்னென்ன என்பதை முன்னிறுத்தி யோசித்துக்கொண்டே சென்றொமெனில் இக்கவிதை நம்மை வெகுதொலைவுக்கு அழைத்துச் செல்ல உதவக்கூடும்.

நீண்ட கவிதைகள் மட்டுமல்ல, தொகுப்பில் இடம்பெற்றுள்ள சின்ன மூன்று வரிகளைக் கொண்ட குறுங்கவிதைகள்கூட எண்ணங்களைக் கிளறுபவையாக உள்ளன. ‘இரவு முழுதும் விழுந்துவிழுந்து அழுதது மழை. பாறையின் கண்களில் ஈரம் ‘ என்னும் மித்ராவின் கவிதையொன்றை உடனடியான எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும். எதைச் சொல்லி அழுதிருந்தால் இந்தப் பாறையின் கண்களில் ஈரம் துளிர்த்திருக்கும் என்று ஒரு கேள்வியை வடிவமைத்துக் கொண்டால் இப்படிமம் பல சலனங்களை மனத்தில் உருவாக்குவதை உணரமுடியும். இதேபோன்ற தீவிரனமான சலனங்களை உருவாக்கவல்ல இன்னொரு சிறுகவிதை ‘பானைக்குள் நிலா தண்ணீர் தளும்புகிறது ‘ என்னும் இரா.மீனாட்சியின் கவிதை.

52 பெண்கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கியுள்ள இத்தொகுப்பில் இடம்பெறும் சின்னச்சின்ன ஓவியங்கள் கவிதைகளுக்கு நிகரான இனிய அனுபவத்தைத் தரக்கூடியவையாக உள்ளன. பதினோரு ஓவியர்களால் தீட்டப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் அனைத்துமே மிகச்சிறந்த தேர்வு என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இந்த ஓவியங்கள் இத்தொகுப்பின் வலிமையை அதிகரிக்கின்றன என்றே சொல்லவேண்டும். தொகுப்பை மிகச்சிறந்த முறையில் தொகுத்துள்ள கிருஷாங்கினிக்கும் மாலதி மைத்ரிக்கும் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது. அழகான முறையில் வெளியிட்டுள்ள காவ்யாவும் பாராட்டுக்குரியது.

( பறத்தல் அதன் சுதந்தரம் – இருபதாம் நுாற்றாண்டின் தமிழ்க்கவிதைகள். தொகுப்பாசிரியர்: கிருஷாங்கினி. உதவி ஆசிரியர்: மாலதி மைத்ரி. வெளியீடு: காவ்யா, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை-24. விலை: ரூ100)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்