சமகாலப் பெண் எழுத்து – ஒரு கலந்துரையாடல்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

சிவகாசி திலகபாமா


3.03.05 அன்று மாலை 5 மணிக்கு பெண்கள் ஆய்வு மையத்தில் ஏற்பாடாகியிருந்த சந்திப்பில் நிகழ்ந்த கலந்துரையாடல் இது. . கீழ் தளத்தில் ஒரு நூலகமும் மேல் தளத்தில் சந்திப்பதற்கான அரங்கமும் இருக்க அரங்கத்தில் சந்திப்பு நிகழ்ந்தது

என் படைப்புகளை அறிமுகம் செய்து வைக்கும் விதமாக எனது கவிதை தொகுப்பின் முன்னுரை நகலெடுத்து எல்லாருக்கும் கொடுக்கப் பட்டிருந்தது. அதை வாசித்தபடி வரவேற்புரையில் பேசிய செல்வி திருச்சந்திரன் அவர்கள் தனது உரையில் முன்னுரையை தொகுத்து பார்க்கின்ற போது வளர்ச்சி இருப்பதை பார்க்க நேருகின்ற போதும் முரண்பாடுகளையும் பார்க்க முடிகின்றது அந்த முரண்பாடுகள் இயற்கையானவை என்று கருதுகின்றேன். பெண் எழுத்துக்களைப் பற்றி பலவிதமான சர்ச்சைகள் இருந்து வருகின்றன. எப்படியாக மனதைப் புண் படுத்துகின்றார்கள் என்று இதற்கு முன் வந்திருந்த குட்டி ரேவதியூடான உரையாடலிடமிருந்து தெரிந்துகொண்டோம். சிறுகதை கவிதை போன்ற இரு துரைகளிலேயும் ஈடுபாடுள்ள கவிஞர் இங்கு வந்திருக்கின்றார். இந்தியாவில் சமகாலப் பெண் எழுத்துக்கள் பற்றி நம்மிடையே உரையாற்றுவார் என இடமளிக்க என்னுரை தொடர்ந்தது

முதலில் என்னை , என் கவிதைகளை அறிமுகம் செய்யும் விதமாக ஒரு கவிதையை வாசித்து விட்டு சமகாலப் பெண் எழுத்துகள் பற்றி என் பகிர்தலை முன் வைக்கலாமென்று நினைக்கின்றேன்

“நான் பாக்கிய சாலியென்று “ எனும் கூர்பச்சையங்கள் தொகுப்பிலுள்ள கவிதை வாசித்து விட்டு உரை தொடர்ந்தது.

என் கவிதையை நான் எப்படிப் பார்க்கிறேன். வாழ்க்கையோடு இணைந்த ஒரு விசயமாக. இந்த வாழ்வில் நான் சந்திக்கின்ற சந்திப்புகள் நிகழ்வுகள் எனக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள் இவையெல்லாம் தான் என் படைப்புகள் பாதிப்புகளை வெறுமனே மட்டும் பதிவு செய்கிறேனா என்றால் அது இல்லை. அதைத் தொடர்ந்து எனக்குள் நிகழ்கின்ற விசாரனைகள் நான் என்னாவாக இருக்கின்றேன். இந்த சமுதாயம் என்னை என்னவாகப் பார்க்கின்றது ,நான்எவ்வளவுதான் இந்த சமுதாயத்தில் இயல்பாக புறப்பட்டு வெளிக்கிடுகின்ற போதிலும் என்னை பால் இன , மத வேறு பாடுகளை களைந்து விடாத இந்த சமூகம் என்னை ஒரு பெண்ணாகத்தான் பார்க்கிறது .இந்த சமூகத்தின் ஒவ்வொரு பார்வையும் என்ன மனிதமாக விசாரணை செய்யாமல் பிறப்பால் நேர்ந்து விட்ட ஒரு வேறு பாட்டிற்காக என்னை குறைத்து மதிப்பிடுகிறது அல்லது உரிமைகள் மறுக்கப் படுகின்றன

இதில் நான் என்று நான் பேசுவது என்னைப்பற்றி மட்டும் அல்ல என்னுடன் மற்ற

சகோதரியையும் பற்றியும்தான். கவிதைகளில் வரும் நான் என்பது நானல்ல. அதில் வருகின்ற அனுபவங்கள் எனக்கு மட்டுமல்லாது பொது அனுபவமாக பரிணமிக்கின்றதை பார்க்க முடிகின்றது விசாரனைகள் மூலம் சில தீர்மானங்கள் எனக்குள் நிகழ்கின்றன. சமுதாயத்திற்கு என்னுடைய சிந்தனைகள் மூலம் , என்னுடைய எழுத்து மூலம் ஏதாவது ஒன்று சமூகத்திற்கு விட்டுவிட்டு போகணும்னு தோணுது இந்த சமூகம் பெண்ணாக பார்க்காமல் மனிதமாக பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று முன் வைக்க விரும்புகின்றேன்.. சமூகத்தில் ஏற்படும் எல்லா பிரச்சனைகள் , சண்டைகளைப்

பார்க்கும்போது ஏதாவது ஒரு விதத்தில் அடியில் ஒரு பெண்தான் நசுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். அதன் பின் விளைவுகளாகத்தான் இந்த பிரச்சனைகளை சண்டைகளை பார்க்கின்றேன். வெளியே தெரிகின்ற பிரச்சனை வேறாகவும் அடித்தளத்தில் இருக்கின்ற விசயம் வேறாகம் இருக்கின்றது. ஒரு பெண் தன்னுடைய பிரச்சனைகளை வெளிப்படையாக பேச முடிந்திருந்தால் அது அவளதுவாகவே பார்க்கப் பட்டு சரி செய்யப் பட்டிருக்கலாம் . ஆனால் பிரச்சனைகளை வெளியில் சொல்லமுடியாத சூழலும் இந்த சமூகம் நம் முன் வைக்கின்றது ஆக இப்படிப்பட்ட சமுதாயத்தில் பெண் இந்த பிரச்சனைகளை தனக்காக பேசி தீர்த்துவிட முடிந்திருந்தால் அது இன்னும் சந்தோஷமாக இருக்கும் . இந்த சூழலில் பெண் மொழி கவிதைகள் எழுதுகின்ற படைப்பாளிகலும் இதையே சொல்லுகின்றனர். அதை எதிர்க்கின்ற நாங்களும் வெளிப்படையாக பேச முடிவதில்லை எனும் குற்றச் சாட்டையே முன் வைக்கின்றோம் ஆனால் இது இரண்டும் ஒரே குற்றச் சாட்டாக இருந்த போதும் இரண்டின் களமும் வேறானதாக இருக்கின்றது . ஆனால் எல்லாத்தையும் வைத்து பார்க்கும்போது என்னை இந்த சமூகம் பொதுமையாக வைத்து பார்க்கத் தயராக இல்லை. என் தேவை இதுதான் என்று நான் வெளியில் சொல்கிறேன் என்றால் இந்த சமூதாயம் என் தேவையைத் தெரிந்து கொண்டு என்னை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது . இந்த சூழலில் என்னால் எப்படி தைரியமாக என் தேவையை பயப்படாமல் வெளியில் சொல்ல முடியும். அப்போ இந்த சமூதாயம் என்னை பொதுமைக்குள் வைத்து பார்க்கனும் உடைமைப் பொருளாய், போகப் பொருளாய் என்னை பெண் என்று பார்க்காமல் எனக்குள் இருக்கும் மனித இருப்பை உணர்ந்து பார்க்க வேண்டும் . அப்படியான பார்வையை உருவாக்காமல் மொழியில் மட்டும் மாறுதல் என்பது மலினப் புரிதல்களை கொண்டு வந்து விடும் என்பதுவே எங்கள் வாதம் நீங்கள் பெண்ணியம் அதிகமாக பேசுகிறீர்கள் என்று சொல்லும்போது எனக்கு சிக்கல்கள் வரும். நான் பெண்ணியம் பற்றி பேசவில்லை என்று அடித்துச் சொல்ல முடியும், இல்லை நான் எனக்கான மனித இருப்பைப் பற்றி பேசுகிறேன். Lady,s first ன்னு சொல்லும்போதே சார்ந்து இருக்க பழக்கப் படுத்துவது போல் தோண்றுகின்றது. நாம் எதை அடைகிறோமோ, அதை எந்தவித சலுகைகள் இல்லாமல் பெறமுடியும் என்ற உணர்வை கொண்டுவருவதை தடுப்பதாக தோன்றுகிறது ஆதலால் பெண்ணியம் என்ற வார்த்தையால் எனக்காக எந்த சலுகையும் இல்லை.

என்னுடைய கவிதைகளில் என்னுள் இருக்கும் மனித இருப்பைத்தான் என் படைப்புகள்

சொல்கின்றன. இந்த எழுத்துக்கள் வெளிப்படையாக பேசுகிறது என்பதில் பெண்ணுக்கு

நிஜமான விடுதலையை தருகின்றதா. இல்லை விடுதலை உணர்வையாவது தருகின்றதா ?.

மாலதி மைத்ிரி குறிப்பிட்ட கவிதைகளில் வீடுகளிலான இனம் , நடப்பட்ட

வீடுகள் போல் பெண்கள். பெண்ணை ஒரு அசையா சொத்தாக பார்க்கிறார் என்று

சொல்ல வருகின்றார். உண்மைதான் .ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை அடையாளம் காண்கின்றேன் ஆனால் அடுத்த வரிகளில் வீட்டிலுள்ள வாசல்கள் யோனி போலவும், சன்னல்கள் கண்கள் போலவும் என்று எழுதியுள்ளார் . பெண் என்று சொல்லும்போது

ஏன் உடல் உறுப்புகளை மட்டும் அடையாளப்படுத்துகிறார்கள் . ஏன் அவர்களுக்குள்

ஆண்களுக்குச் சமமான அறிவு இருக்கின்றது , ஆண்மை இருக்கின்றது ஆண்மை இருக்கிறது என்று நிரூபித்துக்காட்டினால்தான் ஆணும் பெண்ணும் சமமாக நிற்கமுடியும். ஆண்டாண்டு காலமாக ஆண்கள் பெண்களை ஆண் உடல் சார்ந்தவள் என்றுதான் பார்த்தார்களோ.

அதே பார்வையில் இன்னும் உடலைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லி நாமும் ஏன்

உறுப்புகளையே பேசித்திரிய வேண்டும் என்பதுதான் என் கேள்வி. மற்றபடி எந்த

தமிழ் வார்த்தைகளும் தீண்டத்தகாத வார்த்தைகள் அல்ல .

ஆதலால் அந்த வார்த்தைகள் உபயோகிகக்கூடாது , உங்கள் இச்சைகளை சொல்லக்கூடாது என்று இல்லை . ஆனால் இன்னும் இவ்வளவு காலமும் ஆண்சமுதாயம் பெண்களை உடல் சார்ந்த விஷயமாகத்தான் பார்க்கிறார்கள் . அதிலிருந்து வெளிக்கிளம்பிவர வேண்டும் என்ற நிலையில் , திருப்பி பெண்களே பெண்களை உடல் சார்ந்த பொருளாக, உடல் உறுப்புகளை மட்டும் ஏன் உணர்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விவாதம் . நாம் இதைத் தாண்டி வரவேண்டும் சமீபத்தில் மாலதி மைத்ரி ஒரு பேட்டியில் சுகிர்தராணியும், குட்டிரேவதியும், சல்மாவும் பெண் உடம்பை ஆணுக்கு ஒப்படைக்கின்ற அவஸ்தையைதான் பேசுகிறார்கள் என்று அவரே சொல்கிறார் .. சுகிர்தராணி தன் கவிதைகளில் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை என் தந்தைக்கு எதைச் சொல்லி ஞாபகப்படுத்த என்று எழுதியுள்ளார்.

திருமணம்தான் ஒரு பெண்ணுக்கு வாழ்வில் கடைசி எல்லையா ? அதையும்தாண்டி பெண்ணுக்கு என்று வாழ்க்கை இருக்கின்றது . பல இடங்களில் பெண்களுக்கு ஏற்படும்

கொடுமைகளை வெளியில் சொல்லனும்னுகூட தெரியாமல் இருக்கு . வன்முறைமூலம் நடப்பதை வெளியில் சொல்லிவிடலாம் . ஆனால் உணர்வுரீதியாக நடக்கும் கொடுமைகளை

வெளியில் சொல்லமுடியாததால் நிரூபிக்க முடியாமல் அவர்கள் உணர்வுகள் சிதைக்கப்படுகிறது . . ஆனால் அதை நிரூபித்து அந்த மனோபாவங்களைத் தட்டிக்கேட்கும் பிரக்ஞைகள் கூட பெண்ணிடம் எழவில்லை . அந்த உணர்வுச்சிதைவுகள் நம்மால் நிரூபிக்கமுடியாமல் இருக்கு.

ஆக அந்த உணர்வுச்சிதைவுகளைப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .

சிவகாசி ஜெயலட்சுமியைப் பற்றி எல்லாப் பத்திரிக்கையிலும் போட்டார்கள் .

அவளை எல்லாரும் உபயோகப் படுத்தி விட்டர்கள் ஆனால் அவளை உபயோகபடுத்தப் பட்டதற்கு எதிராக எந்த ஒரு பத்திரிக்கையும் செய்யவில்லை என்பதில் எனக்கு வருத்தம் இனிமேல் எந்த ஒரு பெண்ணாவது தனக்கு எதிராக இப்படி ஏதாவது நிகழ்ந்தால் வெளியே வந்து விடுவாள் என்று நினைக்கிறீர்களா ? .. பேச முடியாத அளவுக்கு பத்திரிக்கைகள் நன்மை அவளுக்கு செய்வதாய் சொல்லியே செய்து விட்டர்கள் உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை ஒரு பெண் எதிர் கொள்கிறாள் . ஆனால் உணர்வுச்சிதைவுகளை கண்டு கொள்ளாமல்தான் இருக்கிறாள் . பெண்கள் பொருளாதார ரீதியாக , அரசியல்ரீதியாக உலகமயமாக்கல் என்று எல்லா பிரச்சனைகள் அனைத்தும் பெண்கள் தலையில்தான் விழுகிறது . இதை யெல்லாம் உணர முடியாதவளாக, தனக்கான போராட்டத்தை நிகழ்த்துவதிலேயே காலம் கழிக்கக் கூடியவளாகவும், நிகழ்த்தி விட்ட போதும் அதுக்கான அங்கீகாரங்களை கோர இன்னும் பெண் ஆண் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கு எனும் மனோபாவங்களோடும் தான் வாழ வேண்டியிருக்கிறது . இந்த மனோபாவங்கள் ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் இருக்கின்றது.

ஒரு எழுத்தை நல்ல எழுத்து என்று தீர்மானிக்கக்கூடிய சக்தி இன்னும் பெண்களுக்கு வரவே இல்லை .

விசாலம் எழுதிய “மெல்லப் கனவாய் பழங்கதையாய்” நாவல் வாசிக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது . ஆனால் அந்த நாவலைப்பற்றி யாருமே பேசப்படவே இல்லை .

ஆனால் எஸ் ராமகிருஷ்ணன் எழுதினால் , கோணங்கி எழுதினால் பக்கம்பக்கமாக சிலாகிக்க ஆள் இருக்கிறார்கள் . பெண்களோட எழுத்தை நல்ல எழுத்து என்று பேசுவதற்கோ , யாரும் முன் வரவில்லை . அந்த நாவலில் நிறைய உரையாடல்கள் இருக்கு . அதனால் போரடிக்குதுங்கறது ,அவர்கள் வைக்கும் வாதம் . ஆமா போரடிக்கிற , அந்த சலசலக்கிற வாழ்க்கையைத்தான் பெண் வாழ்கிறாள் . அப்போ அதைத்தான் எழுதுவாள் . அதுதான் உண்மை . அவள் தனக்குத்தானே எத்தனைநாள்தான் பேசிக்கமுடியும் . அப்படி பேசறதையே எழுத்தாக்குறா கலைக்கான பிரயத்தனத்தை விட உண்மைகள் அதில் இருக்கு அதுதான் நிதர்சனம் .

அதில் இருக்கிற அரசியலை இவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் . பெண் எழுத்தில் அரசியல் இல்லை என்று மிகப்பெரிய விவாதமாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எது அரசியல் என்பதும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் . இந்த நாவலில் போரடிக்குதுன்னு சொல்றதும் , டயலாக் கூடிப்போச்சுன்னு சொல்றதும் ஒரு வகையான அரசியல் . கவனிக்காமல் அதை ஒதுக்குவதற்கான முயற்சியாகும் . இயக்கத்தில் போராடிக்கொண்டிருக்கும் பெண் கடைசியில் ஒன்னுமில்லாமல் போகிறாள் . திருமணத்தோடு வாழ்க்கையை நிரைவு செய்ததா கதைமுடிகிறது அப்போ காணமல் போகச்செய்றது யாரு . எழுதப் பட்டு பதிவாக்கப் பட்ட அரசியலையே காணமல் போகச் செய்யப் படுகின்றது . அப்போ எழுதப்படுகின்ற படைப்புகளை பெண்கள் இதுவரை னம் மேல் திணிக்கப் பட்டிருந்த் அடிமை மனோபாவம் தாண்டி படைப்புகள் பற்றி பேசவேண்டும் .

செல்வி :

முக்கியமான சில விஷயங்களைப்பற்றி பேசும்போது “நான்” என்று சொன்னால் அது நான் மட்டும் அல்ல , collective , நான் என்பது தனித்து இருக்க முடியாது . அது உண்மை .

பெண்ணை பெண் என்று பாராமல் பொதுமையாக பார்க்கிறது என்று சொன்ன விஷயம் மிகவும் பிடித்துள்ளது . அடுத்ததாக பெண் மொழி பற்றி பேசினீர்கள் . அதில் இந்த நாட்டு

கலச்சாரத்தைப்பற்றி பார்க்கும்போது மிகவும் சிறந்த காலாச்சாரம் என்று கூறிவிட முடியாது ,வித்யாசமாக இருக்கும் . எங்கள் சமுதாயம் முரண்பட்ட சமுதாயம்

திலகபாமா — பெண்கள் இரண்டு பேர் அந்நோந்நியமாக பேசிக்கொண்டிருப்பதை அவர்கள் வெளியில் போய் வேறுவிதமாக பேசிக்கொள்வதில்லை. ஆனால் அதுவே ஒரு பெண் ஒரு ஆண் நண்பரிடம் அந்நோந்நியமாக பேசுகிறாள் என்றாள் அதையே அந்த ஆண் நண்பர் வெளியில் போய் அதை வேறுவிதமாக என்னிடம் அவள் நல்லா பேசிவாளாக்கும் என்று பெருமையாகச் சொல்லுவதாய் தொடங்கி உடமையான பொருளாய் அடையாளப் படுத்தும் போக்கு இன்று எல்லாரிடமும் இருக்கு அதை மாற்ற முயற்சி செய்ய

வேண்டும் . பெண்கள் பிரச்சனைகளை பெண்கள் மட்டுமே பேசித்தீர்த்துக் கொள்கிறோம்

என்றாலும் திருப்பி பெண்கள் அந்த ஆண்களோடத்தான் வாழ வேண்டியிருக்கு . அப்போ

அவர்களிடம் meet பண்ணும்போது , பேசும்போது , எங்கள் படைப்புகளை வைக்கும்போது, என்னவாக அவர்கள் react பண்ணுகிறார்கள் நாம் எப்படி face பண்ணப்போகிறோம் என்பதுதான் நிதர்சனம் , அதுதான் உண்மை . பெண்ணை இன்னும் உடல்சார்ந்து பார்க்கப்படவேண்டாம் என்பதற்காக போராடிக்கொண்டிருப்பதை பின்னாடி இழுத்து போடுகிறது உடல் மொழி பேசுகின்ற படைப்புகள்.

உடல் மொழி பேசுகின்ற படைப்புகள் வெளிவந்ததற்கு மூலகாரணம் என்னவென்று பார்க்கப்போனால் இந்த ஆறு பெண்களுடைய முதல் தொகுப்புகளும் உடல் மொழி பேசுகின்ற படைப்புகளாக இல்லை . ஆனால் அந்த பெண் படைப்புகளின் முதல் தொகுப்புகள் எல்லாம் வித்தியாசமான களத்திலேயே வந்திருந்தன. ஆனால் தொகுப்புகள் எதுவும் பேசப்படவேயில்லை . கவனிப்பு பெறுவதற்க்கான உத்தியாகத்தான் இந்த உடல் மொழி கையாளப்பட்டுவிட்டது என்று எனக்குத் தோன்றுகிறது . இவர்கள் பாதை மாறியதற்கு இந்த சமுதாயமும் , நல்ல எழுத்து என்று தீர்மானிக்கின்ற ஆண் எழுத்தாளர்களே காரணம் . அதே சமயம் ஆனால் இந்த குறுகிய கால கவனிப்பு என்ன விளைவுகளை தந்துவிட போகிறது என்பதுதான் எனது கேள்வி . பெண்களுக்குள்ளே பேசி சரி செய்து கொள்வது என்று நீங்கள் சொல்வது எங்களை பெண் என்று காரணம் காட்டி ஒடுக்குவது பத்திரப் படுத்துவதற்காக இன்னொரு கூட்டுக்குள் அடைக்குமேயோழிய பொதுமைக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடாது . ஆனால் எங்களது இன்றைய தேவை பெண் என்று நீங்கள் பார்க்கும் பார்வையில் இருந்தும் , பெண் என்ற எனக்குள்ளான உணர்வுகளிலிருந்தும் வெளிக்கிளம்பி வெளிவரவேண்டும் . உங்கள் விமர்சனங்கள் எங்களை காயப்படுத்தினாலும் பரவாயில்லை . பொது விமர்சனங்களை தாங்கக்கூடியவர்களாக விமரிசனத்தில் ஒரு பக்க பார்வைகள் தான் இதுவரை சாத்தியமாகியிருக்கின்றது எனறு உணரவும் உணர்த்தவும் கூடியவர்களாக வர வேண்டும் என்பது முக்கியம் , நல்ல எழுத்தென்று தீர்மானிப்பவர்களாக இந்த பொதுமைக்குள்

வருவது மிக அவசியம் .

அனுஜா :–

எந்த சமுதாயத்தைப் பார்த்தாலும் ஆண்களின் கண்ணோட்டம் வித்தியாசமாக

இருக்கும் . கண்களின் வித்யாசத்தை மாற்றி அமைக்காமல் , நாங்கள் வெற்றி காண்பது என்பது சாத்தியமில்லை .

சாந்தி சச்சிதானந்தம் :–

நீங்கள் சொன்னதும் சரியாகத்தான் இருக்கு . இன்னொரு புறத்தால

பார்க்கப்போனால் ஒட்டுமொத்தமாக பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்கள் சம்பந்தமான

குறியீடுகள் எல்லாம் 2 ம் தரமாகத்தான் பார்க்கப்படுகிறது . நாம் கலாச்சார ரீதியாகவும்,

கோட்பாடு ரீதியாகவும் போராட வேண்டியிருக்கிறது . அவர்கள் எந்த குறியீடுகளை

2 – ம் தரமாக நினைத்தார்களோ அந்த குறியீடுகள் பற்றி பேசி , வரைந்து ,ஒரு

போஸ்டராக நெற்றியில் ஒட்டியோ ,நாங்கள் செய்ய வேண்டுமோ . இந்த நேரத்தில்

யோனி முலைகளைப்பற்றி அதை ஒரு குறியீடகவோ , விக்ரகமாகவோ மாற்ற வேண்டுமோ

என்ற சந்தேகம் வருகிறது .நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகிறது நாங்கள் ஏன்

உடல் ரீதியாக பார்க்கப்படவேண்டும் .பெண் ஏன் ஒரு மதத்தை ஆரம்பிக்க முடியவில்லை

என்ற கேள்விவும் இருக்கிறது . எங்களை ஏன் ஆன்மிகம் சார்ந்து பார்க்கப்படவில்லை .

தேவகெளரி :—

எதைக்காரணம் இட்டு அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று யோசித்தால்

உடல்தான் காரணமாகத் தெரிகிறது . அப்போ அதைப்பற்றி நாங்கள் பேசுவோம் . என்று இந்த பெண்கள் யோசித்திருக்கலாம்

சாந்தி சச்சிதானந்தம் :–

லிங்கம் கும்பிடுகையில் , ஏன் நாங்கள் யோனியை கும்பிடவில்லை .

அப்போ யோனியை தூக்கிவைத்துப்பேசி அதை கும்பிடவேண்டுமோ .

திலகபாமா :–

குறியீடுகளை மட்டுமே மாற்றுவதால் நமக்கான விடுதலை கிடைத்துவிடுமா ? நாம் குறியீடுகளை மாற்றும்போது, அல்லது எங்களுக்கானஹ்டை உருவாக்கும் போது, மீண்டும் ஏற்கனவே இருந்ததற்குள் விழுந்து விடத கவனம் தேவை

சாந்தி சச்சிதானந்தம் :–

மாற்றுவது எங்களது போரட்டத்தின் ஒரு அம்சம் . அது ஒரு பக்கம் , இது

ஒரு பக்கம் .

செல்வி :–

சுனாமியின் போது முதல் அலை பெண்களுடைய சேலைகளை அடிச்சுக்கொண்டுபோனது . நிர்வாணநிலையில் நின்ற பெண்கள் வெளியே வர வெட்கப்பட்டு அங்கேயே நின்றதால் அடுத்த அலையில் அள்ளுப்பட்டு போனார்கள் . அந்த சுனாமி அலையின் தாக்கத்திற்குப்பின் ஆண்கள் நிர்வாணமாக ஓடி தப்பியபோதும் , பெண்கள் உடையில்லாமல் வெளியே வர வெட்கப்பட்டு அழிந்துபோனார்கள் . அப்போ

இந்த சமூகம் எங்களை எப்படி பார்க்கிறது நாங்கள் எப்படி பார்க்கவேண்டும் என்பது

மிக முக்கியம் . அப்படியாகத்தான் யோனி , முலையைப்பற்றி பேசவேண்டியாதாயிருக்கிறதோ ,அல்லது காலத்தின் தேவையாக இருக்கலாம் . சில காலத்தின் பிற்பாடு மறையலாம் .இந்த

சொல்லாடல்கள் எப்படி எங்களை பின்னடைவு செய்ய வைக்கும் . பின்னடைவு செய்ய

செய்ய வைக்கும் என்பதால் எங்கள் உணர்வுகளை பேசாமல்தான் இருக்க வேண்டுமா .

திலகபாமா :–

கவிதைகளில் யோனி , முலை என் எந்த வார்த்தையும் தீண்டத்தகாதவை

அல்ல . ஆனால் பெண் உடல் ஆணுக்காக தவித்துக்கொண்டிருக்கிறது என்பதை நான்

ஏற்றுக்கொள்ளமுடியாது , தவறு என்று பேசுவேன் .

மாதவிடாயை மூன்று நாள் வெறு,மனே உடலுக்கு முடியாமல் போகிற ஒன்றாய் ஏன் பார்க்க முடியவில்லை. பிரச்சனை ஒன்றும் இல்லை , அதை ஒரு நோயாக , இயலாமையாக புகுத்துவது என்னால் ஏற்கமுடியாது . ஆணுக்கு மூன்று நாள் காய்ச்சல் இருக்கும்போது ஓய்வு எடுப்பது போலத்தான் . அதையே காரணம் காட்டி முன்

நிறுத்துவதும் , ஒடுக்குவதும் நான் கண்டிக்கிறேன் .

ஜெயபாலன் :–

உங்கள் பிரதான விவாதம்தான் என்ன ?

திலகபாமா :–

எங்களுடைய பிரதான விவாதம் இதுதானா என்று கேள்வி எழுப்புவதன் மூலம்

பிரதான விவாதம் எதுவாக இருக்கவேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்கிறீர்கள் . இந்த

எழுத்துக்கள் எழுத வந்திருப்பதன் மூலகாரணத்தை சிந்தித்து பார்ப்பது என்பது ஆதிக்க

மனோபாவங்களையும் அதன் பின் விளைவுகளையும் அடிமை மனோபவங்களை கண்டு கொள்வதாக நிச்சியமாக இருக்கும் .

ஜெயபாலன் :–

திலகபாமாவை யாரும் இங்கு அறிமுக படுத்தவில்லை என்று நினைக்கிறேன் .

சாந்திசச்சிதானந்தம் :–

உங்கள் கவிதைகளை நான் அதிகம் படிக்கவில்லை . ஆனால் ஈழத்தமிழ் கவிதைகளில் இந்த சொற்கள் பாவிக்கப் பட்டிருக்கின்றன

திலகபாமா :- ஆம் நானும் அந்த கவிதைகளை வாசித்திருக்கிறேன் பாவிக்கப்பட்ட சொல் அதன் வலியை பேசுகிறது . அந்த கவிதைகளை நாம் வலியோடு பார்க்கிறோம் . அந்த வார்த்தைகள் எதற்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மிக முக்கியம் . வார்த்தைகளைப்பற்றி நமக்கு பிரச்சினையில்லை . நாங்கள் கத்தி தூக்கத் தயராக இருக்கிறோம் , பயப்படவில்லை .ஆனால் அந்த கத்தியால் நாமே காயப்பட்டுக்கொள்ளவேண்டாம் என்பதுவே எனது கருத்து .

மயூரன் :–

மாலதி மைத்திரியின் தீராநதியில் நிர்வாணத்தை ஆயுதமாக வைத்து ஒரு

கட்டுரை எழுதியிருந்தார் . அதை வாசிக்கையில் சில விஷயங்கள் எனக்குப்பட்டது .

எதிர்நிலையான அணுகு முறைக்கு உடலை பயன்படுத்துவது என்பது , பெண் உடல் பற்றிய தாழ்வு சிக்கலைத்தான் ஆண் அதிகாரமாக மாற்றிக்கொள்கிறார்கள் .ஒரு விதமான

நம்பிக்கை எனக்கு இருக்கிறது .அப்படி இருக்கையில் நாங்கள் எதைவைச்சு

போகப்பொருளாக பார்க்கப்பட்டமோ அதையே ஆயுதமாக மாற்றிக்கொள்வது

என்பது மிக மிக அபாயகரமான நடவடிக்கை என்று நினைக்கிறேன் . இதை சாதரணமாக

முன்நிறுத்திவிடமுடியாது .எந்த அடக்கு முறைக்கு எதராக நாங்கள் முன்நிறுத்துகிறோமோ,

அந்த முன்நிறுத்துதல் சில நேரங்களில் பயங்கரமாக இன்னொரு முன்நிறுத்துதலின்

அடக்குமுறையாக மாறிவிடும் .

ஆண் ,பெண் முரன்பாடுகளைத்தாண்டி இன முரன்பாடுகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்ற சமூகத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் . அந்த

சமூகத்திலும் கூட , ஆண் , பெண் முரண்பாடு கொஞ்சம்கூட தீர்க்கப்படாமல்தான் இருக்கு .

தேசியப்போரட்டம் என்று ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொண்டு அதுவே பெண்ணுக்கான

விடுதலையைப் பெற்றுத்தராதா .

திலகபாமா :–

ஆண்களை திருத்துவது எங்களது சோலியல்ல . எங்களது முக்கியமான பிரச்சன்ன நாங்கள் யார் என்பது நாங்கள் உணர்ந்திருக்கிறோமா , எங்களை உணரவிட்டிருக்கிறீர்களா ? எழுத்துக்கள் எந்த இடத்திலாவது சிந்தனைத்தளத்தில் சிறிதளவாவது அசைத்திருக்கிறோமா ? . இதுதான் பிரதான விவாதமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது .

கெளரி :–

ஒரு கட்டதில் பெண்ணை காலங்காலமாக வந்த விழுமியம் அடிப்படையில் பெண்ணாக

பார்க்காமல் மனிதமாக பார்க்க வேண்டும் என்று சொன்னீர்கள் . அப்படி நீங்கள் சொன்னது மிகவும் பிடித்தது . அப்படி பார்க்கையில் 2 விஷயம் நடக்கப்பட வேண்டும் .

ஏற்கனவே நாங்கள் ஒரு வார்ப்புக்குள் இருக்கின்றோம் . பார்க்கப்படுகிறேன் என்று சொல்வதைக்காட்டிலும் எங்கள் இயல்புகளை எப்படி வெளிக்கொண்டுவரமுடியும் என்று

நினைக்கிறீர்கள் .

திலகபாமா :–

இந்த கேள்விக்கு என் வாழ்வு அனுபவத்திலிருந்து பதில் சொல்வது சரியாக

இருக்கும் என நினைக்கின்றேன் . சிறு வயதில் அப்பாகூட விவசாயத்திற்கு போகையில்,

இயல்பாகவே அவர் என்னவாக இருந்தாரோ அது எனக்கு பதிவானது . இயல்பாக

வளர்ந்த நான் அப்படி தொடரமுடியலை . 13 ,14 வயது ஆனபிறகு இந்த சமூக கட்டுப்பாடுகள் என் மேல் இயங்கத்தொடங்கியது .அதில் எழுந்த முரண்பாடு என்னை எழுதத்தூண்டியது . என்னை இயல்பாக உணருவது என்பது எனக்குள் சாத்தியப்பட்டு இருக்கிறது . யார் எப்படி பார்த்தாலும் எனக்குள் இருக்கும் இயல்பை தக்கவைத்திருக்கும் மனோநிலைமை வாய்த்திருக்கிறது .

புத்தக வெளியீடுகள் நடந்து முடிந்த இலக்கிய கூட்டங்களில் உங்களுக்கு

உதவியாக எல்லாவற்றிற்கும் அனுமதி அளித்த கணவருக்கு நன்றி என பெருமையாக

பேசுவார்கள் . அந்த இடத்தில் நாங்கள் அடித்து நிறுத்த வேண்டியிருக்கிறது . அதை மிகச்சாதரணமாக விட்டுவிட்டு போகலாம் . ஆனால் , இல்லை இந்த வேலை என்னால்

மட்டுமே / எங்களுடைய தனித்திறமையால் நிகழ்த்தப்பட்டது . யாரும் அனுமதி வழங்கியில்லை என்று சொல்வதின்மூலம் எங்கள் சுயச்சார்பை தயவு தாட்சன்யனம் இல்லாமல் நிறுவ வேண்டியாதயிருக்கிறது . என் கணவரை பொது சபையில் வைத்து பேச நேரிடுகிறதே என்று வருத்தப்பட்டால் விட்டுக்கொடுத்தால் என்ன நிகழ்கிறது என்றால் . கீழே அதைக் கவனித்துக்கொண்டிருக்கின்ற பெண் என்ன நினைப்பாள் . அவங்க வீட்டில் கணவர் விடுகிறார் போறாங்க , எங்க வீட்டுல விடுறதில்லை அதனால் போறதில்லை

என்று நினைக்கக்கூடிய சாத்தியம் இருக்கு . என் உணர்வுகளை சுருக்கவேண்டியிருப்பதால்

வெடித்து கிளம்பவேண்டியாதயிருக்கிறது . என் உடல்கள் எனக்கு துச்சம் , என் உணர்வுகளை சிதைப்பவர்களை ஒரு போதும் அனுமதிக்கமுடியாது . உடல்களை தீண்டிவிட்டு போனவர்களை என்னால் சாதரணமாக தட்டிவிட்டு போகமுடியும் . ஆனால்

என் உணர்வுகளை தீண்டியவர்களை அந்த இடத்திலே நிறுத்தி என்னால் பதில் அடி கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று நினைக்கிறேன் . இந்த இடத்தில்தான் உடலை கொண்டாடுகிறோம் என்ற நேரத்திலும் என் உடலை அற்றுப்போன ஒன்றாகத்தான்

நான் நினைக்க வேண்டிய கட்டாயம் நேருகிறது .

உடலை கொண்டாடுவது என்பதும் ஒரு சில கட்டத்தில் தேவையாக இருக்கிறது

கிராமத்தில் 18 – வயது திருமணமான பெண் திருமணமாகி 6 மாதத்தில் கணவன் இறந்து

போகின்றான் . அவன் இறக்கின்ற போது அவள் 4 மாத கர்ப்பினியாகயிருக்கிறாள் . அவளுக்கு மறுமணம் செய்து வைக்க தேவை வரும் என நினைத்த சுற்றத்தார்கள் அவளுக்கு

கருகலப்பு செய்துவிடுகிறார்கள் . அந்த பெண் அந்த கருகலப்புக்கு அனுமதியோ , எதிர்ப்போ எதுவுமே தெரிவிக்க இயலாத மனநிலையில் இருக்கிறாள் .அந்த இடத்தில் அந்த பெண்ணுக்கு தன் உடம்பு மீது தனக்கே அதிகாரமில்லாத நிலையில் இருக்கிறள் . என் உடம்பில் என் கருவை அழித்தால்தான் எனக்கு ஒரு வாழ்க்கை . திருமணம்தான் எனக்கான வாழ்க்கை இப்படியான நிலை வரும்போது என் உடலை நான் எப்படி பார்க்கிறேன் என்பது மிக்கியமென நினைக்கிறேன் . அந்த இடத்தில் உடலை கொண்டாட வேண்டிய தேவை இருக்கிறது . கருவைகலைத்தால்தான் என் வாழ்க்கையிருக்கிறது என்றால் வேண்டாம் தேவையில்லை என்று சொல்லக்கூடிய மனதிட்பம் தேவைப்படுகிறது .

பஸ்ஸில் ஒருவர் இடிக்க நேர்தல் , கம்பியில் இடிப்பதும் , என் மேல் இடிப்பதும்

ஒன்றுதான் என்ற நிலை உருவாகி , என் உடலை அற்றுபோகச் செய்ய வேண்டிய வேலை பார்க்க வேண்டியதாயிருக்கிறது . அப்போ எந்த இடத்தில் என் உடலை கொண்டாட வேண்டும், எந்த இடத்தில் அற்றுபோகச் செய்ய வேண்டும் என தீர்மானிக்க வேண்டும் . இதை தீர்மானமாகச் செய்தால்தான் நாம் கத்திமேல் நடப்பதை தடுத்து அடுத்த தலைமுறைக்கு சீர் செய்ய முடியும் .

ஜெயபாலன் :–

திலகபாமா எழுத்துக்களில் எல்லாம் இயல்பாக இருந்தது .காதல் , காமம் உட்பட .

அதை எழுதுவதில் அவருக்கு தடை எதுவும் இருப்பது எனக்குத் தெரியவில்லை . உடலை

இலக்கியத்திற்கு அவசியமில்லாத வகையில் சிலர் முதன்மை படுத்துகிறார்கள் என்று

கருதுகிறார் .

மாற்றுக் கருத்துக்களோடும் உரையாடக் கூடிய விதத்தில் அமைந்த இந்த கலந்துரையாடல் மிக நல்லதொரு உரையாடலாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வை பத்மா சோமகாந்தன் பெண்கள் ஆய்வு மையத்தோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்.

தேவகெளரி நன்றியுடன் சந்திப்பு இனிதே முடிந்ததாய் சொல்லப் பட்ட பின்னும் நிறைய விவாதங்களை கிளப்பியதாய் அமைந்திருந்தது, முடிவல்ல துவக்கம் என்பதை உணர்த்தியது .

தேவகெளரி நன்றியுடன் விழா இனிதே முடிந்தது .

—-

Series Navigation

சிவகாசி திலகபாமா

சிவகாசி திலகபாமா