கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

புதியமாதவி


‘எவரையும் நகலெடுக்காத தனிப்பார்வை, வாழ்வை அதன் இருளகற்றி விளக்கமுறக் காட்டும் அறிவுப்புலம், இனிமை நலம் காட்டும் புதுமொழி ‘ இவைதான் கவிஞர் தங்கம்மூர்த்தியின் கவிதைகள் என்று தன் அறிமுக உரையில் ஆணித்தரமாகச் சொல்கிறார் கவிஞர் முனைவர் பாலா.

‘நானும் நண்பர்களும் ‘ என்ற தொகுப்பின் முதல் கவிதையே கவிஞர் பாலாவின் அறிமுகத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது.

நண்பர்களைப் பற்றி, நட்பு பற்றி ஏன் நண்பர்களின் வேடத்தில் நடிப்பவர்கள் பற்றியும் பலர் தங்கள் கவிதைகளில் படைத்துவிட்டார்கள். அவர்களிலிருந்து நகலெடுக்காத தனிப்பார்வையுடன், யாதார்தத்தை ‘நச் ‘ என்று உரைக்கிற மாதிரி புதுமொழியில் இவர் படைக்கும் நண்பர்கள் உலகமெங்கும் உண்டு.

‘எதிரிகளும்

எதிரிகள் போலவும்

நண்பர்களும்

நண்பர்கள் போலவும்

நிறையப்பேர்

எனக்கு.

எதிரிகள்

ஒரேவிதம் தான்

அவர்கள் என்னை

ஒன்றும் செய்துவிட முடியாது.

நண்பர்களை

நினைத்தால் தான்.. ‘

இந்த மாதிரி பொதுமைப்பண்புகள் மட்டுமே கவிதை மொழியை உலக மொழியாக்கும் வல்லமைப் படைத்தது.

அம்மாவைப் பற்றி கவிதை எழுதாதக் கவிஞர்களே இருக்க முடியாது. அம்மா என்றவுடன் அன்பையும் தியாகத்தையும் கலந்து உருவகமாக்கிப் படைத்தக் கவிதைகள் நிறைய உண்டு. அம்மாவும் சாதாரணப்பெண்தான். வாழ்வின் எதார்த்த அலைகளில் அவளும் அடித்துச்செல்லப்படுகிறாள். கனவுலக அம்மாக்களின் பிம்பங்களை உடைத்து நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அம்மாக்களை, அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை, அவலங்களை, சொல்வதுடன் ஈடு இணையற்ற அம்மாவின் அன்பையும் சேர்ந்தே சொல்லி நிஜங்களுக்கு ஆராதனைச் செய்கிறார் கவிஞர்.

‘அம்மா

எழுதினார் பட்டியல்

பலகாரத்துக்கு.

எதையும் ஒதுக்காமல்

அப்படியே வாங்கணுமாம்.

….

….

எல்லோருக்கும் தித்திக்குதாம்

தீபாவளி

என்னைத்தவிர.

அம்மாவின் தீபாவளிப் பட்டியல் இன்றைய விலைவாசியில் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவனுக்கும் வலியாக மாறிவிட்ட அவலத்தைச் சொல்கிறது அவருடைய ‘வலி ‘என்ற கவிதை.

அம்மா இருக்கிறாள்

ஆயினும்

வழியும் கண்ணீரை நானே

துடைத்துக் கொள்கிறேன்..என்று ‘இளைப்பாற்றி ‘கவிதையில் சொல்லும்போது ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு அர்த்தங்களைப் படைக்கிறது இந்த வரிகள்.

நம்முடைய கண்ணீரைக் கண்டால் துடித்துப்போகும் அம்மா, நம் கண்ணீரைக் காணச்சகிக்காத அம்மா, நம் கண்ணீரைத் துடைக்க ஓடிவரும் அம்மா.. இருந்தும் அம்மாவுக்குத் தெரியாமலெயே எத்தனை முறை கண்ணீர் வடிக்கிறது நம் கண்கள். அந்த ஒவ்வொரு கணங்களையும் நினைக்க வைக்கிறது தங்கம் மூர்த்தியின் கவிதை வரிகள்.

கண்ணீரை மறைக்கலாம். ஆனால் அம்மாவின் நினைவுகளை..

‘அவ்வளவு ருசி

அம்மா பரிமாறிய

பழைய சோறு ‘

‘அம்மா

பொய்க்கோபத்தால்

அடிக்கவருகையில்

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ‘ என்கிறபோது அம்மாவின் அன்புக்கரங்கள் நம்மைத் தீண்டுகிறது.

காதலைப் பற்றிய இவருடைய கவிதையும் இதுவரை வந்த காதல் ஓவியங்களை எல்லாம் மரபுகளாக்கி அந்த மரபுகளை எல்லாம் கடந்த காலமாக்கிப் பிறந்திருக்கும் நவீனக்கவிதை. கணினி யுகத்தின் காதல் கவிதை.

காதலென்பது..

—-

ஒவ்வொரு நிமிடமும்

உன்னையே

நினைத்துக் கொண்டிருக்க

என்னால் இயலாது.

மனதை வருடும்

மயக்கும் வார்த்தைகளால்

வர்ணிக்கத் தெரியாது.

உல்லாச உலா வருவதும்

உனக்காகக் காத்திருப்பதும்

எனக்குச் சாத்தியமில்லை

உன்னில் என்னைத்

தொலைத்துவிட்டு

என்னை என்னால்

தேடிக்க் கொண்டிருக்கவும்

நேரமில்லை.

இம்மியளவும் தாமதித்தாலும்

இழக்க நேரிடும்

இயந்திர வாழ்க்கையில்

இயல்பாய்

இருக்கலாம்

வா!

காதலின்

புதிய அர்த்தத்துடன்.. ‘

காதலுக்கு புதிய அர்த்தம் சொல்லும் காதல் வரிகள்.

‘மழையில் நனைய ஆசைதான்

சட்டைப்பைக்குள்

அவளின் கடிதம் ‘ ‘

‘பட்டாம்பூச்சி பிடித்துக் கொடுத்தேன்

இறக்கை முளைத்தது

மகளுக்கு.. ‘

இந்தக் கவிதைகள் எல்லாம் குறும்படக்காட்சிகளாக மனக்கண்ணில் திரையிடப்படுகின்றன.

‘வயல்களை அழித்து

தியேட்டர் கட்டினார்கள்

நல்ல அறுவடை ‘

‘சிரிக்காமலே

குழி விழுகிறது

எங்களூர் சாலைகளுக்கு ‘

‘வீதியில் இறங்கிப் போராடத்

துணிந்தனர் பெண்கள்

தண்ணீர் லாரி.. ‘

சமூக அவலங்களை எள்ளல் பார்வையில் படைத்திருக்கும் இந்த நறுக்குகளில்தான் தங்கம்மூர்த்தி கோகினூர் வைரமாக மின்னுகிறார்.

அவர் தேர்ந்தெடுக்கும் கருப்பொருள், அதைப் பார்க்கும்பார்வை, அதை வெளிப்படுத்தும் கவிதைமொழி அனைத்துமே அவருடைய இந்த துளிப்பாக்களில்தான் கலை நேர்த்தியுடன் செதுக்கப்பட்ட சிற்பம் போல நிமிர்ந்து நிற்கிறது.

துடைக்க துடைக்க

உன் நினைவுகள்

ஒட்டடையாய்

என்ற வரிகள் வாசித்தவுடன்,

‘ஞாபகங்கள்

உனக்கு ஒற்றடை

எனக்கு வீடு ‘

என்ற கவிக்கோ அப்துல்ரகுமானின் கஸல் வரிகள் நினைவுக்கு வருகிறது. (மின்மினிகளால் ஒரு கடிதம்).

இதைப்போலவே பூக்காரி, ஊதி தூசி எடுக்கும் காதல், வேலைவாய்ப்புகள் குறித்த கவிதைகள் நிறைய நிறைய வந்துவிட்டன. தங்கம்மூர்த்தியின் கவிதைகளும் அதே பாதையில் பயணம் செய்கின்றன.

‘மிகை ‘ என்ற கவிதையில்

பக்தர்கள் விடவும்

கோயில்கள்

அதிகமாகி விட்டன.

கட்சிகளை விடவும்

தலைவர்கள்

அதிகமாகி விட்டார்கள்..

என்றெல்லாம் சொல்வது சரிதான். ஆனால்

‘மாணவர்களை விடவும்

பள்ளிகள்

அதிகமாகி விட்டன ‘

என்று சொல்வது இன்றைய சமுதாயத்தின் ஓர் உண்மையை மறைப்பதில் கொண்டுவிடும் அபாயத்தை ஏற்படுத்திவிட்டது.

இந்தியாவில் கல்வி அறிவில்லாதர்கள் இன்றும் 60 முதல் 70 விழுக்காடு. எல்லா மாநிலமும் இந்த அறுபது எழுபதுக்குள்தான் இன்றும். இதைப்போலவே அமைந்திருக்கிறது ‘சேதிகள் சொல்லுமா தேதிகள்.. ‘ என்ற நீண்ட கவிதையும். உலகத் தொழிலாளர்களின் மேதின நாள் உயர்ந்தது என்று சொல்வதற்காக

‘எல்லா தேதிகளையும்

சிறந்த தேதிகளென்று

சிலாகிக்க முடியாது ‘

என்று சொல்வதும் சரியல்ல.

இந்தக் கவிதை வெறும் சொற்கூட்டங்களில் கோஷமாகிவிட்டது. தொகுப்பில் மிகச் சிறந்த கருத்துகளையும் மிகவும் திறம்படக் கையாண்டிருக்கும் கவிஞர் இவைகளைத் தவிர்த்திருக்கலாம்.

அச்சுப்பிழைகள் இன்றி மிகச் சிறப்பாக வெளியிட்டிருக்கும் அநிகா பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.

தங்கம்மூர்த்தியின் கவிதைகள் நுண்ணிய வேலைப்பாட்டுடன் படைக்கப்பட்டிருக்கும் கவிதைப்பொன்னின் மின்னல்கள்.கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்.

கவிதைகளின் தொகுப்பு நூல்

தலைப்பு: தங்கம்மூர்த்தி கவிதைகள்.

பக். 112 விலை ரூ 60/

வெளியீடு: அநிகா பதிப்பகம்,

புதுக்கோட்டை 622 003

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை