சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
ஜெயமோகன்
இவ்வருடத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது தமிழில் ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியப் பரிசுகளை ‘யாரோ ஒருவருக்கு யாரோ சிலர் கொஞ்சம் ரூபாய் கொடுக்கிறார்கள், நல்ல காரியம் ‘ என்ற அளவுக்கு மட்டுமே புரிந்துவைத்துள்ள பாமரர்கள் ‘ ‘ பரிசுகளைப்பற்றி விவாதிப்பதா சேச்சே ‘ ‘ என்று முகம் சுளிக்கக் கூடும். கவிதை என எழுதபடுவதெல்லாமே கவிதைகளே என்ற இலக்கியப்புரிதல் உள்ள ‘பாதிவெந்த ‘ வாசகர்கள் ஒன்றும் புரியாமல் திகைக்கக் கூடும். ஆயினும் இலக்கியத் திறனாய்வாளனாகச் செயல்படும் ஒருவன் தனக்குத்தானே வரித்துக் கொண்ட கடமையின்படி இம்மாதிரி தருணங்களில் தன் கண்டனத்தை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளான். அது அவன் முன்வைக்கும் மதிப்பீடுகளை பதிவுசெய்யும் முறையாகும். ஆகவே எனது வன்மையான கண்டனங்களை சாகித்ய அக்காதமிக்கும் அதன் தேர்வுக்குழுவினரான கி ராஜநாராயணன், பத்மாவதி விவேகானந்தன் மற்றும் செல்லப்பன் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பரிசானது ஏற்கனவெ ரா.பி.சேதுப்பிள்ளை, அ.சீனிவாச ராகவன் ,எழில்முதல்வன் முதலிய கல்வித்துறையினருக்கும் கி வா ஜகன்னாதன், முதல் கோவி மணிசேகரன் வரையிலான தகுதியற்ற எழுத்தாளர்களுக்கும் வழங்கப்பட்டு ஒரு பரிசு என்ற முறையில் அதன் தகுதியை பெரிதும் இழந்துவிட்ட ஒன்றாகும். வாழ்ந்த காலத்தில் மெளனி, சி சு செல்லப்பா, ப சிங்காரம் முதலிய முன்னோடிகளுக்கு வழங்கப்படவில்லை என்ற குறையும் வாழும் படைப்பாளிகளான நீல பத்மநாபன் ,ஆ.மாதவன், ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி முதலிய பலர் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறையே. ஆனால் இவ்விருது பல சமயம் காலம் தாழ்த்தியேனும் முக்கியமான படைப்பாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பரிசு பெறும் ஒருவர் லா ச ராமாமிருதம், அசோகமித்திரன், கி ராஜநாராயணன், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன் வரிசையில் வைக்கப்பட்டுவிடுகிறார் . இதுதான் முக்கியமான சிக்கல்.
.
ஆகவே இப்பரிசு இன்னமும் பொதுவான வாசகர் மத்தியில் ஒரு அங்கீகாரமாகக் கருதப்பகிறது. எனவே திறனாய்வாளார்களால் உதாசீனம் செய்யப்பட இயலாத ஒன்றாக உள்ளது. அப்பரிசைப்பெறும் படைப்பாளியும் படைப்பும் வாசகக் கவனம் பெறுவது வழக்கமாக உள்ளது. இதைவிடப்பெரிய பரிசுகளான கலைஞர் விருது, ஆதித்தனார் விருது முதலியவற்றை எவரும் கவனிப்பதில்லை என்பதை இதன்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். இப்பரிசை ஒட்டி கருத்துச்சொல்வதும் பரிசை விமரிசிப்பதும் இதனாலேயே முக்கியமான விஷயமாகின்றன. மற்றபடி தமிழன்பனுக்கு அவர் சார்ந்துள்ள அமைப்பு முன்பும் காசை வாரி வழங்கியுள்ளது. அது இயல்பான விஷயம்தான். அதில் எவருக்கும் கருத்து இருக்க இயலாது.
இப்பரிசின் அமைப்பிலேயே சில சிக்கல்கள் உள்ளன. இப்பரிசை அளிப்பதில் கல்வித்துறையினருக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் உள்ளது. மலையாளம் முதலிய மொழிகளில் கல்வித்துறையில்தான் அழுத்தமான இலக்கிய மதிப்பீடுகள் உள்ளன. ஆகவே அங்கே முக்கியமற்றவர்களுக்கு விருது கிடைக்காமல் தடுக்கும் கவசமாக கல்வித்துறை உள்ளது. தமிழில் நேர் எதிர் நிலை. இங்கே கல்வித்துறை எவ்வித தகுதியும் இல்லாதவர்களால் நிரம்பியுள்ளது. 90 சத கல்வித்துறையினர் சுந்தர ராமசாமி அல்லது அசோகமித்திரன் பேரையே கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள் என்பதே உண்மை. இதை மீண்டும் மீண்டும் கண்டு கொண்டிருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் பக்கவியாபாரம் மற்றும் கல்வித்துறை ஊழல்கள் மூலம் பொருளீட்டுவதையன்றி வேறு எதையும் அறியமாட்டர்கள். இவர்களை வலைவீசிப்பிடிக்கும் எவரும் பரிசை வெல்ல முடியும் என்பதே இன்றைய நிலை. இப்போது நடுவர் குழுவில் இருந்த பத்மாவதி விவேகானந்தன், செல்லப்பன் இரு போராசிரியர்களையும் நான் அறிவேன். இலக்கியம் சார்ந்து எளிய புரிதல் கூட இல்லாதவர்கள் அவர்கள். கல்வித்துறைக் கட்சியாடல்களில் திளைப்பவர்கள். இவர்களுக்கு சாகித்ய அகாதமியில் ஊடுருவ இடமளித்த அதன் செயலர் பேராசிரியர் பாலா இவர்கள் அளவுக்குக்கூட இலக்கிய பரிச்சயம் இல்லாதவர். நூல்களைச் சுரண்டி அசட்டு நூல்கள் எழுதி கல்விவியாபாரத்தில் விற்பதையே இவர்கள் செய்துவருகிறார்கள். இதை துரதிருஷ்டமான விஷயம் என்றுதான் சொல்லவேண்டும்.
இரண்டாவதாக சாகித்ய அக்காதமி போன்ற பரிசை ஏதேனும் கட்சி அமைப்பைச் சார்ந்து செயல்படுபவர்கள் பெற்றுவிட முடியும் என்ற நிலை உள்ளது. இடதுசாரிகள் அதை அதிகமாகப் பெற்றது இதனாலேயே. தன் படைப்பை நம்பியே செயல்படும் ஒருவன் அங்கே நெருங்க இயல்வதில்லை. கேரளத்திலும் இது உண்டு. ஆனால் இப்படி பரிசுபெறுபவனுக்கு அது ஒரு இழிவாகவே கருதப்படும், இதழ்கள் நார்நாராகக் கிழித்து வீசிவிடும் என்பதனால் அம்மாதிரி முயற்சிகள் பொதுவாக நிகழ்வது இல்லை. தமிழில் சிற்றிதழ்களுக்கு வெளியே இம்மாதிரி போலிகளுக்கு பெரிய கண்டனம் எழுவது இல்லை. பிற ஊடகங்கள் எல்லா சாகித்ய அக்காதமி விருதுகளையும் ஒரேபோலத்தான் நோக்குகின்றன. சிற்றிதழிலும் பரிசு பெற்றவரை வாழ்த்துவது மட்டுமே மரபு என்று சொல்லும் அசடுகள் சிலர் இல்லாமல் இல்லை. ஆகவே எப்பாடுபட்டேனும்பரிசு என்று எப்போதும் சிலர் முயல்கிறார்கள். தமிழன்பன், கோவி மணிசேகரன், வைரமுத்து போல பலர் வெற்றியும் பெறுகிறார்கள்.
தமிழன்பன் வானம்பாடி இயக்கம் உருவாக்கிய பிரகடன மொழியை தீப்பொறி ஆறுமுகம் , திண்டுக்கல் லியோனி தரத்துக்கு கொண்டுசென்று ‘கவிதை ‘ எழுதியவர். அவருக்கும் கவிதைக்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்கும் என கவிதைகுறித்த ஆரம்ப அறிவு உடைய எவரும் நம்பமாட்டார்கள். அசட்டு சிலேடைகள் , சில்லறை மொழிவிளையாட்டுகள், கலீல் கிப்ரான் , வால்ட் விட்மனின் புகழ்பெற்றவரிகளின் இரண்டாம்தர தழுவல்கள் ஆகியவற்றின் கலவை அவர். அவரது கவிதைகளை இன்றைய நிலையில் தமிழில் தினமலர் வாரமலர் மட்டுமே பொருட்படுத்தி பிரசுரிக்க முடியும். இலக்கிய வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுவாசகர்களிடையேகூட அவருக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. கவிதைவாசகன் அவருக்கு நேர் எதிர் திசையில் நகர்ந்தால்மட்டுமே கவிதையைக் கண்டடைய இயலும்
திராவிடமுன்னேற்றகழகத்துடன் தமிழன்பனுக்கு உள்ள தொடர்ந்த உறவு மூலம் அவர் பெற்ற பல லாபங்களுள் ஒன்று இப்பரிசு. இலக்கியவாதியாக அவருக்காக வருத்தப்படுகிறேன். இப்படி ஒரு பரிசை ‘வென்ற ‘தன் மூலம் அவர் தன்னை மேலும் இழிவே செய்துகொண்டிருக்கிறார்.
****
மலையாள இலக்கியத்துக்காக இவ்வருடம் பரிசு பெற்றவர் பால் சகரியா. பாலா மாவட்டத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த சகரியா ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பெரும்படிப்பாளி. 1970களின் இறுதியில் எழுத வந்தார். தொடக்கத்திலேயே தன் தனித்தன்மை மூலம் இலக்கிய உலகை திசை திருப்பிய பெரும் அப்டைப்பாளி அவர். என் நோக்கில் கேரள நவீன இலக்கிய்த்தில் வைக்கம் முகமது பஷீருக்குப் பிறகு சகரியாவே முக்கியமானவர்.
நவீனத்துவம் அல்லது ‘ஆதுனிகத ‘ வின் கொடிபறந்த காலகட்டத்தில் இருத்தலியம் ஓங்கிபேசப்பட்ட சூழலில் ஒ.வி விஜயன், எம் முகுந்தன், காக்கநாடன் ஆகியோருக்குப் பின் எழுத வந்ந்தார் சகரியா. அவர்கள் தத்துவார்த்தமான கனம் கொண்ட, எதிர்ம்றை நோக்கு கொண்ட, கச்சிதமான வடிவம் கொண்ட ஆக்கங்களை உருவாக்கியபோது சகரியா நேர் எதிரான பாதையில் நடந்தார். ஒரு கதைக்கு இரு முடிவுகள் கொடுத்தார். கதையை ஒருவகை விளையாட்டாக மாற்றினார். பாப்பாக்கதைகளை திருப்பி எழுதினார். பைபிள் மொழியை மறுஆக்கம் செய்தார். வார இதழ் கதைகளை பகடி செய்து எழுதினார். பலவகையான மொழிநடைகளை கலந்து தன் தனிமொழியை அமைத்தார். அவரது பல கதைகளும் பிற்பாடு மெடாஃபிக்ஷன் என்று சொல்லப்பட்ட வடிவத்தில் அமைந்தவை. இவ்வாறாக பின் நவீனத்துவம் பேசபடாதபோதே கேரளத்துக்கு பின்நவீனத்துவத்தைக் கொண்டுவந்தவர் அவர்
அதேசமயம் சகரியா கேரள மண்ணில் ஆழ வேரூன்றிய கலைஞர். அவரது கதைகளில் பாலா மண்ணின் வேகமும் வேடிக்கையும் கலந்த மொழியை நாம் காண்கிறோம். மதத்தை உதறி ஆன்மீகமான நகர்வின் வழியாக கிறிஸ்துவை நெருங்கியவர் சகரியா. தல்ஸ்தோயின் வழிவந்தவர். நிகாஸ் கசந்த் சகீஸ், எமிலி ஜோலா, பேர் லாகர் கிவிஸ்ட், மேரி கெரெல்லி போன்றவர்களுக்கு நிகரானவர். அவர்களைவிட பலவகையில் மேலும் முக்கியமானவர்.
சகரியாவின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழில் வந்துள்ளன. எம் எஸ் [ யாருக்குத்தெரியும்- பால் சகரியா கதைகள். தமிழினி பிரசுரம்] ஜெயஸ்ரீ [சகரியா கதைகள், ] சுரா [ஆசாரியும் செங்கல்லும்] சுகுமாரன் [ இதுதான் என்பெயர் ] ஆகியவை பரவலாகப்பேசப்பட்ட கதைத் தொகுப்புகள். திண்ணையில் அவரது சில கதைகளும் நான் எழுதிய கட்டுரை ஒன்றும் முன்னரே பிரசுரமாகியுள்ளன.
சகரியாவை வாழ்த்துகிறேன். அவரது வாசகர்களும் அவரை வாழ்த்தலாம் [அவரது ஃபோன் எண் . 0471 2327873 ]
—-
jeyamoohannn@rediffmail.com
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.
- கடற்கோள்
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- பெரானகன்
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- கடலம்மா….
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- கடற்கோள்
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- பெரியபுராணம் – 24
- கவிக்கட்டு 42
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- கடிதம் டிசம்பர் 30,2004
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- ரெஜி
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- மெய்மையின் மயக்கம்-32
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- சங்கீதமும் வித்வான்களும்
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- பத்மநாபஐயர்
- சுனாமி
- சுனாமி
- கடிதம் டிசம்பர் 23,2004
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- ஒரு வேண்டுகோள்
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்