பத்மநாபஐயர்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

யமுனா ராஜேந்திரன்


(லண்டன் நிருபம் பத்திரிகையில் வெளிவந்தது)

மனிதர்களின் அபரிமிதமான அன்பினாலும் உபசரிப்பினாலும் சில வேளைகளில் நமக்கு மூச்சு முட்டுவதுண்டு. குடும்ப விழாக்களிலும் நெருங்கிய நண்பர்களின் திருமணங்களிலும் இவ்வனுபவம் அடிக்கடி நேரும். நெரிசலை விட்டு வெளியெ வந்து மெலிதான இரவின் சீதளக் காற்றைத் தனிமையில் உள்வாங்கும் போது தனித்திருத்தலின் சந்தோசம் நமக்கு வாய்க்கும்.

ஐயர் இப்படித் தனித்திருந்து நான் பார்த்ததில்லை.

புத்தகங்களிடையில் பூக்கும் மனிதர் அவர். அலைகளை விலக்கிக் கொண்டே போனால் எங்கேனும் ஒரு எல்லையில் மணல் திட்டை நாம் பார்த்துவிடலாம். புத்தகங்களை விலக்கி விட்டுச்சென்று ஐயரைப் பாரப்பது என்பது கடினம். அவரது அறையில் புத்தகங்கனிடையில் அவரது சயனத்தை நாம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். படுக்கையறைக் கட்டில், சாப்பாட்டு மேசை, விரிந்த தரை, கூரையை முட்டும் அலமாரிகள், சமயலறைக்குப் போகும் இருபக்கமுமான வெளி என அறையின் திசை நான்கிலும் புத்தகங்கள் சரிந்தபடி, இரைந்தபடி ஐயர் அறையின் ஓரத்தில் புத்தகங்கள் விரிந்திருக்கும் கட்டிலில் அமர்ந்து கொண்டு நம்முடன் பேசுவார்.

புத்தகங்களின் புழுதிதான் உலகிலேயே ஐயருக்குப் பிடித்தமான வாசமாக இருக்க வேண்டும்.

ஐயர் அறுபதுகளையும் கடந்துவிட்டவர். சதா சர்வதேச நண்பர்களுடனும் இலக்கியவாதிகளுடனும் அலைந்து திரிந்து கொண்டேயிருப்பார். அவரது வீட்டில் தொலை பேசி அடித்தால் அவர் வீட்டில் இல்லை என அர்த்தம். தொலைபேசி அடிக்கவில்லை என்றால் வீட்டில் இருக்கிறார் என அர்த்தம் என்பது அவரது நண்பரிகளிடையில் பிரசித்தம். எப்போதாவது அவரது தொலைபேசி இணைப்பு நமக்குக் கிடைத்தாலும் அடுத்த அறையில் ஏதேனும் ஒரு நாட்டில் இருந்து வந்த இலக்கியவாதியோ ஊடகவியலாளரோ திரைப்பட இயக்குனரோ உறங்கிக் கொண்டிருப்பார்.

புத்தகங்களுக்கும் புத்தகங்கள் சார்ந்த மனிதர்களுக்குமெனவே தன் வாழ்வை அர்ப்பணித்துவிட்டவர் ஐயர்.

ஐயரை இருபது ஆண்டுகளாகத் தெரிந்து வைத்திருந்தும் இன்றும் கூட எனக்கு அவர் ஒரு புதிர் போலவும் விநோதமான மனிதர் போலவும் தான் தெரிகிறார். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததுண்டு. அவரது அரசியல் கலை இலக்கிய முற்சாய்வுகளிலும் எனக்கு முரண்பாடுண்டு. ஆனால் தனக்கு முற்றிலும் முரண்பாடான, தன்னை மிகவும் ஏசுகிறவர்களது எழுத்தாளர்களது புத்தகங்களைகை¢ கண்டாலும் கூட ஐந்து பிரதிகள் வாங்கி பிறருக்கு அனுப்புகிற அவரது மன நிலை வேறொன்றைத் தேடிச் செல்லும் துறவியின் மனநிலை போலத்தான் எனக்குத் தோன்றும்.

அந்த வேறொன்று என்பது பொதுவாகத் தமிழ் மீதான காதல், புத்தகம் ஒரு கலா சாதனம் எனும் அளவில் அதன் நேரத்தியின் மீதுள்ள நேசம், ஈழத்தமிழ்களின் படைப்புகளை உலகின் உச்சாணிக் கொம்பில் அமரத்த்திவைத்துப் பார்த்துவிட வேண்டும் எனும் அவரது மகா கனவு அல்லது பேராசை போன்றவையல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும் ?

ஈழப் போராட்டம் உக்கிரமடைவதற்கு முன்பாக அவர் தமிழியல் வெளயீடு;ட்டு நிறுவனத்தின் மூலம் வெளியிட்ட கவிதைத் தொகுப்புகள், ஓவிய நுால் போன்றவற்றோடு இற்றைய தினம் அவர் மீண்டும் கொணர்ந்திருக்கும் மு.புஷ்பராஜன், தா.பாலகணேசன் போன்றவர்களின் கவிதை நுால்கள் ஈழத்துப் பதிப்புத் துறையின் நேர்த்தி நோக்கிய பயணத்தின் மைல் கற்கள்எனில் அது மிகையில்லை.

ஐயர் ஒரு முழு நேர எழுத்தாளர் இல்லை. படித்துத் தீர்க்கிற இலக்கிய விமர்சகனும் இல்லை. ஆனால் அவரைத் தெரியாத காத்திரமான தமிழ் மொழிப் படைப்பாளர்கள் இல்லை. அவருக்கு என்ன அடைமொழி கொடுப்பது என்பதற்கு தமிழ் இலக்கியச் சொல்லகராதியில் பொறுத்தமான ஒரு சொற்றொடரும் இல்லை. அவர் இலக்கிய ஆர்வலர் மட்டுமில்லை. சுவைஞுர் மட்டுமில்லை.

ஒரு படைப்பின் பிரதியைச் செப்பினிடுவதிலுள்ள அனைத்துவிதமான நெறிசார்ந்த ஒழுக்கங்களையும் கடைபிடிக்கிற மிக நேர்மையான வாசகர் அவர்.

மேற்கில் ஒரு தேர்ச்சிமிக்க தொழில் துறையாக வளர்ச்சியுற்றிருக்கும் புத்தகச் செப்பமாக்கலைச் செய்யும் எடிட்டர் என்பதற்கான முழுத் தகமைகளும் அவருக்கு உண்டு. பிரதி செப்பமாக்கல் என்பது ஒரு தொழில் துறை தர்மம். அது ஒரு துறையாகத் தமிழில் வளராததாலும், அத்தகைய மேதைகள் தமிழில் உரிய கவனம் பெறாததாலும் ஐயர் போன்றவர்களை விளிக்க ஒரு சொல் தமிழில் இல்லை.

அருகிலிருந்து பார்த்த மனிதனாக ஐயரிடம் இரண்டு குணாதிசயங்களை நான் திட்டவட்டமாக அவதானித்திருக்கிறேன். ஐயரின் மனம் புறாவின் கூடு என அழைக்கப்பெறும் தபால் பெட்டிகளின் அடுக்கு போன்றது. அவர் மட்டுமே திறந்து பாரக்கும் தகமை பெற்றிருக்கம அந்த வெளியில் மற்றவருக்கத் தெரியாத பிறிதொருவரின் உலகத்தி;னுள் ஐயர் மட்டுமே ஆழ்ந்திருப்பார். பிறமனிதர்களிடையில் சு+ன்யவெளியெ இதனால் விட்டுவைக்கபட்டதாயிருக்கும். ஐயரின் பன்மன மனிதர்களினுடனான ஊடாட்டத்திற்கும்> பல்துறை கைநனைத்தலுக்கும் அவரது அப்பண்பே காரணமாகிறது என நினைக்கிறேன்.

இரண்டாவதாக மனத்தளவில் மிகுந்த மனிதாபிமானமும், அரசியலினால் பின்தள்ளப்பட்ட முரண்தர்க்க நீதியுணர்வும் அவருள் உறைவதை பல தருணங்களில் நான் கண்டிருக்கிறேன். தனிமனிதனாக அவர் நீதியுணர்விலிருந்து சருக்கிய தருணங்களிலும் அவரைச் செலுத்தியது துயர் தோய்ந்த ஈழத்து அரசியலுணர்வு என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.

நீண்ட நாள் நட்பு கொண்ட நண்பன் எனும் அளவில் அவர்பால் நெகிழ்வுடன் என்னை ஈர்த்து வைத்திருப்பது ஒன்ேறு ஒன்றுதான். நெருக்கடி காலத்தில் இடுக்கண் களையும் நட்பு ஐயரது நட்பு. இந்த மகத்தான மானுடப் பண்பை அவர் என்றுமே கொண்டிருக்கிறார். கலகலப்பும் சுறுசுறுப்பும் கொண்டு சதா புத்தகங்களைத் தேடி அலைந்து திரியும் ஐயரை இலண்டன் இலக்கியக் கூட்டம் எதிலும், கட்டாயம் நீங்கள் கண்டு புன்னகைக்கலாம்.

—-

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்