எங்கே செல்கிறோம் ?

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

நா.இரா. குழலினி


முன்வைத்த காலின் ஆடுதசையின் மீது மொத்த உடலின் பாரமும் இறங்க அடுத்த அடியை எண்ணிடவும் பயமாயிருக்கிறது. முன் வைத்த ஒவ்வொரு அடியிலும் வரலாற்றின், வளர்ச்சியின், அறிவியலின், அரசியலின், கொள்கைகளின், நிறுவனங்களின், அரசுகளின், கோட்பாடுகளின், பேரரசுகளின் பேரபாயத்தை எதிர்கொள்ளும் முழுமையான சிக்கலுடனே செல்கிறது வாழ்க்கை.

சங்க இலக்கியங்களுள் குறிஞ்சிப்பாடலைப் படிக்காதவர்கள் பாவம், அவர்களை விட்டு விடுவோம். படித்தவர்களுள் பறம்பு மலையும் அதன் தொல்குடித் தலைவன் பாரியும் அவன் முல்லைக் கொடிக்காக ஈந்து வந்த தேரையும் அறிவர். ஆனால் அவர்களும் அறியாதது அந்தப் பாரியின் இரு பெண் குழந்தைகள். பாரி மகளிர் என அறியப்பட்ட அங்கவையும் சங்கவையுமான இருவரை, இருவரின் குரலை

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

எந்தையும் உடையோம் எம்குன்றும்

பிறர் கொள்ளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்று எறிமுரசின் வேந்தர்

எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே

என்றோ ஒருநாள் தன் இருபுறமும் அமர்ந்திட்ட இரு குழந்தைகளையும் தோள் சார்த்தி முழு வெண்ணிலவின் தண்மையைச் சுட்டி தன் சுற்றியுள்ள கொடியையும் மரத்தையும் சிற்றலகுக் குருகுகளையும் சுட்டிக்காட்டி இவைஇவை எம்முடன் பிறந்தன இவையெல்லாம் எம்முன் பிறந்தன இவையே எம் தங்கையும் தம்பியுமாய் உலகு நிறைத்தன என்று தம் மண்ணின் மணத்தை, அம் மண்ணின் மக்கள் மனத்தை பங்கு கொண்டானே அந்தப் பாரியின் மக்கள் இருவரின் குரலாய் அமைந்தது இந்தப் பாடல். அன்றைக்கும் இன்றைப் போன்றே முழு நிலா, ஆனால் தமிழ் நிலத்தின் மூவேந்தர்களின் அரசு விரிவாக்கலின் வெறியால் எம் தந்தை மீது போர் தொடுத்து எம் தந்தையை எதிர்த்து அவர்கள் பெற்ற வெற்றி எம் தந்தையையும் எம் குன்றத்தையும் பறித்துப் போட்ட பின் அன்றைய பொழுது போல் எம் குன்றின் மீது அமர்ந்து எமக்குக் கதை சொல்ல எம் தந்தை எம்முடன் இல்லை. அந்தக் குன்றும் எம்முடன் இல்லை. மலையும் கொடியும் மலரும் மணமும் எம் தந்தையின் அருகாமை தந்த வெம்மையும் ஏதொன்றும் இல்லை இன்று.

இந்தப் பாடலைத் தனித்து பாடும் பொழுது அவர்கள் எந்தப் பாலைநிலத்தில் முகம் அறையும் கொடுங்காற்றில் அவதிப்பட்டனரோ அன்றி பசியுடன் பாரியின் நண்பர் புலவர் கபிலருடன் எந்த புங்கைமர நிழலில் ஒருவாய் நீருக்கு வழியின்றித் தவித்திருந்தனரோ ? அவர்களை மணம் புரிந்து கொள்ள வேண்டி அன்றைய மலைக்குடிகளின் தலைவர்களான விச்சிக்கோ மற்றும் இருங்கோவேளின் முன் கபிலரால் நிறுத்தப்படும் போது அவர்களின் குனிந்த தலை மீண்டும் நிமிர்த்தவே முடியாது ஏன் போயிற்றோ தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒன்று விளஜகுகிறது, அன்றைப் போலவே இன்றைக்கும் அதிகாரமும் தேசியமும் சர்வதேசியமும் எம் வாழ்க்கையைக் கவிழ்த்துப் போட எத்தனிக்கும் பெருங்காதையின் வரலாற்றுத் தொடர்ச்சி.

ஆகஸ்டு 6 மற்றும் ஆகஸ்டு 9 ஆகிய இரண்டு தேதிகளும் உலகளாவிய மனிதநேயர்களால் மறக்க முடியாதவை. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நிகழ்ந்தவைகளை நம்மால் கேட்க மற்றும் பார்க்க முடியும். ஆனால் அனுபவிக்க முடியாது. அதை நேரடியாக உணர முடிந்த ஒருவர் திரு. ஹிச்சிக்கோஹச்சியா. ஒரு தொழில்முறை மருத்துவர். ஹிரோஷிமாவின் ‘ஹிபாகுஷாக்களில் ‘ (அணுகுண்டு வீச்சில் தப்பிப் பிழைத்தவர்களில்) ஒருவர். அணுகுண்டு வெடிப்பின் முழு விளைவுகளையும் தன் மருத்துவமனையிலிருந்து நேரடியாகப் பார்த்தவர். ‘தகரக்கூரைகள் பறந்தன. இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதென்பது ஒரு அற்ப விசயமாகவே இருந்தது. ஆனால் நிறைந்து கிடந்த மூத்திரம் மலம் மற்றும் வாந்தி ஆகியவற்றை அகற்றி அறைகளைஷ சுத்தப்படுத்துவது இயலாததாகவே போய்விட்டது. அது தாங்கிக் கொள்ள இயலாத காட்சி. மனிதர்களின் முகங்களும் கைகளும் எரிந்து வீங்கிப் போயிருந்தன. அவர்களின் தசைகள் ஈரமாகவும் சொதசொதப்புடனும் இருந்தன. தொட்டவுடன் கையோடு கழன்று வரும் சதைத் துணுக்குகள் இழிந்து கசிந்தன. காதுகள் உருகிப்போயிருந்தன. இறந்தவர்களின் உடல்களால் தீயணைப்புத் தொட்டிகள் நிரம்பி வழிந்தன. அவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டவர்களின் பிணங்களைஸ் போல காட்சியளித்தனர். எனது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளில் ஒருவருக்கும் பசியென்பதே இல்லாமல் போயிற்று. அவர்கள் விரைவாக சாவைத் தழுவினர். நாங்களும் அதற்காக வேண்டினோம். இரத்தம் இரத்தமாக வயிற்றுப் போக்கு ஏற்படுவது அதிகரித்தது. துப்புரவுப் பணியாள˜கள் இறந்தவர்களின் உடல்களின் எஞ்சியிருந்த பகுதிகளை எரித்துக் கொண்டிருந்தனர். எத்தகைய கோரக் காட்சி அது. மேலிருந்து பார்த்த போது கீழே உடல் முழுவதிலும் முடியை முற்றாக இழந்து இடுப்பு ஒடிந்த ஒரு நாய் முன்கால்களை மட்டும் அசைத்து, அசைந்து நகர்ந்து சென்றது ‘.

ஹிரோஷிமா நாகசாகி நிகழ்ந்த பத்தாண்டுகளுக்குப் பின்பு இனி யாருக்கும் அது நிகழக்கூடாது என்று நினைக்கும் அனைத்து மனிதர்களின் விருப்பத்தின் குறியீடாக துருக்கியக் கவிஞர் நசீம் ஹிக்மத்தின் கவிதை வெளியிடப்பட்டது. அணுகுண்டு வெடிப்பில் இறந்து போன ஒரு குழந்தை பேசுவது போல எழுதப்பட்டது அக்கவிதை.

உங்கள் கதவுகளைஜ் தட்டுவது நான்தான்

பலகதவுகளைஜ் தட்டுவது போல்தான் இதுவும்

ஆனால் என்னை யாரும் பார்க்க முடியாது

இறந்தவர்கள் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்கள்

நான் ஹிரோஷிமாவில் இறந்தேன் பத்தாண்டுகளுக்கு முன்பு

எனக்கு அப்போது ஏழு வயது

உங்களுக்குத் தெரியுமா இறந்தவர்கள் பின்னர் ஒருபோதும் வளருவதில்லை.

முதலில் தீ எனது தலைமுடியைக் கவ்வியது பின்

என் கண்கள் முகத்தினூடாக வழிந்தொழுகின

நான் கைப்பிடியளவு சாம்பலாகிக் காற்றில் அடித்துச் செல்லப் பட்டேன்

எனக்காக நான் எதையும் விரும்புவதில்லை ஏனெனில்

மரக்கட்டையாக எரிந்து போன ஒரு குழந்தையால்

மிட்டாய்களைஷ சாப்பிட முடியாது

உங்கள் கதவுகளைஜ் தட்டுகிறேன்

என் உறவினர்களே உங்கள் கையொப்பங்களுக்காக

குழந்தைகள் ஒருபோதும் இனி எரிந்துபோகாமலிருக்க

அவர்கள் மிட்டாய்களைஷ சாப்பிட வேண்டுமென்பதற்காக..

நீடித்த விரைத்த ஒரு பெரும் ஆண்மையின் குறியீடாக வெடித்தெறிந்த அந்த நாய்க்குடைக் காளானின் மலட்டுருவமான அணுகுண்டு வெடிப்பு ஒவ்வொரு அமெரிக்க அகத்தையும் தட்டிப் பார்த்தது. அந்த அணுகுண்டு வெடிப்பில் தொடர்புகொண்ட சிலர் மனநோயாளிகள் ஆயினர், பலர் அணுஆயுத எதிர்ப்பு இயக்கத்தில் உறுப்பினர்கள் ஆயினர்.

இந்தியாவில் பொக்ரான் அணுகுண்டு சோதனையின் குறியீட்டுப் பெயர் புத்தர் சிரித்தார், எவ்வளவு வக்கிரம் சார்ந்த குறியீடு. மொத்த மனித இனத்தின் அழிவிற்குத் துணைபோகக் கூடிய ஒன்றுக்கு வன்முறையை எதிர்த்தவரின் பெயர், அதுவும் சிரித்தாராம் ஒருமுறையல்ல இரண்டு முறை.. கூடங்குளஹ் அணுஉலைக் கட்டுமானத்தின் அடிக்கல் நாட்டு பூமிபூசைக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் புத்தரின் பிறந்த தினமான புத்த பூர்ணிமா. இவையெல்லாம் வெறும் தற்செயல், இவற்றுக்கும் எதற்கும் தொடர்பில்லை என வாதிடப் புகுபவர்களைஸ்ரீ கேட்கிறேன் ஏனிது நிகழ்ந்தது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சுவாயுக்கசிவினால் இறந்து போன ஆயிரமாயிரமான சக உயிரிகளின் உடலங்களின் மீது ஒரு காற்றைப் போலக் கடந்து சென்றது காலம். இன்று வரை அந்த விபத்தினால் உறவினர்களைஸ் பறிகொடுத்தவர் உடல் ஊனமுற்றோர் கால்நடைகளை இழந்தோர் ஆகியோருக்குக்ப் பொறுமையின் மகோன்னதங்கள் குறித்த ஆலோசனைகள் தவிர வேறு என்னதான் கிடைத்து விட்டது. குளிர்பதனம் செய்த அறைகளில் இருந்து யூனியன் கார்பைடு நிறுவன அதிபர் ஆண்டர்சன் தின்றுவிட்டுப் போட்ட கெண்டகி சிக்கன் எலும்புத் துண்டுகள் சன்னல்கள் தாண்டி வெளியே விழுகின்றன. அமெரிக்காவின் ‘அங்கிள் சாம் ‘ தன் கதகதப்பு நிறைந்த கைகுலுக்கலால் இந்தியாவின் ஆன்ம இடைவெளியை இட்டு நிரப்புகிறார்.

நர்மதா சரோவர் அணைக்கட்டுமானத்தை எதிர்த்த அனைத்து மக்கள் இயக்கங்களும் உச்ச நீதிமன்றத்தின் அமோகமான கிரேக்கக் கட்டுமானக்கலைக் கட்டிடங்களின் எதிரொலிப்பு நிறைந்த வழக்கமான சொற்கிடங்குகளின் வரிசைகளால் நிறுத்தி வைக்கப்பட்டன. அணையின் நீர் சூழ்தலால் வாழ்விழந்த ஆயிரமாயிரமான தொல்குடிகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு அகற்றப்பட்டு புதுதில்லியின் கேட்பாரற்ற அகதிகள் முகாம்களில் வெள்ளிக் கிண்ணங்களில் பால்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான விளையாட்டு மைதானங்களையும் கேளிக்கை மையங்களையும் கட்டித்தருமாறு அரசுகளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு முன் ஒரு முன்நிபந்தனையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பின்னர் அந்த அணை குறித்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சுற்றிலும் பளீரிடும் புகைப்படக் கலைஞர்களின் விளக்கு வெளிச்சத்திற்கு மத்தியில் தன்னுடைய வழக்கமான புன்னகையுடன் கையசைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கீதையின் கர்மயோகம் குறித்த சிந்தனையுடன் தியானத்தில் அமர்ந்து தேசத்தின் வளர்ச்சி குறித்து சிந்தித்திருக்கலாம். அணைகள் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. அவையன்றி பாசனம் இல்லை. வேளாண் வளர்ச்சி இல்லை. எனவே அணைக்கட்டுமானம் என்பது தேசக்கட்டுமானம் போன்றது. பெரும் வளர்ச்சிக்கு ஒரு சிலர் பலியாவது இயல்புதானே என்றெல்லாம் அவர்கள் பரப்புரை நிகழ்த்தலாம். உலகெங்கும் கட்டப்பட்ட பெரும் அணைகள் அனைத்தும் வண்டல் நிறைந்து இன்று பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறதே, காடுகள் மூழ்கி நீர்ப்பிடிப் பகுதிகள் பழுதாகி ஆறுகள் வற்றி வருவதுதானே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் யாருக்கும் கேள்வி கேட்க உரிமையில்லை ஏனெனில் இது ஜனநாயக நாடு. ஆனால் கங்கையின் குறுக்கே கட்ட உத்தேசிக்கப்பட்ட தெஹ்ரி அணைக்கட்டுமானத்திற்கு எதிராக விசுவ இந்து பரிசத் கடந்த காலங்களில் நடத்திய போராட்டம் மிக ஆன்மவயமானது. ‘கங்காமாதாவை நிறுத்துவது பாரத மாதாவை நிறுத்துவதற்கு ஒப்பாகும் ‘ எனவே தெஹ்ரி கைவிடப்பட வேண்டும் என்ற அசோக்சிங்காலின் பேச்சுக்கு ஒப்புதல் அளித்து தெஹ்ரி அணைக்கட்டுமானத்திற்குப் பணமில்லை என்று காரணம் சொல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.

இறால் பண்ணைகள் குறித்த விவாதங்களும் தமிழகத்தில் அமைந்த ஸ்டெரிலைட் ஆலையினால் விளையப்போகும் சூழல் கேடு குறித்த போராட்டங்களும் கொடைக்கானலில் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தினால் கொட்டப்படும் பாதரச நஞ்சுக்கு எதிரான போராட்டங்களும் இடையிடைக்காட்சிகளாக வந்து போயின. நஞ்சு நிறைந்தவை என்று ஆதாரங்களுடன் குற்றம்சாட்டப்பட்ட கோககோலாவும் பெப்சி கோலாவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுத்தி விடக்கூடாது என்ற கூடுதல் அக்கறையுடன் பாராளுமன்றத்தில் மட்டும் விற்பதற்குத் தடைசெய்யப்பட்டன.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் கதிரியக்கத்தால் கல்பாக்கம் சுற்றியுள்ள பகுதி மக்களிடையே பரவிவரும் பாலிடாக்டில் நோய்குறித்தும் கதிரியக்கச் சாவுகள் குறித்துமான கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியின் ஆய்வுகள் ஒரு இடது கைப் பெருவிரல் கீறலைப்போல ஒதுக்கப்பட்டன. அங்கே புதிதாக நிறுவப்பட உள்ள ஈனுலை தொழில்நுட்ப அடிப்படையிலான அணுஉலைகள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையின் மீதான கோவை மருத்துவர் இரமேஷின் விமர்சனங்கள் புறந்தள்ளஸ்பட்டன. அணுஉலை நிறுவுவதற்கு எதிராக காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்கண்டன் அவர்களின் பொதுநல வழக்கின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து அவர்களின் நேர விரயத்திற்காக ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதித்தது.

கூடங்குளஹ் அணுமின் நிலையக் கட்டுமானத்திற்கு எதிரான அனைத்து மக்கள் இயக்கங்களும் சட்டங்களின் சந்துகள் வழியாக முடமாக்கப்பட்டன. நிலவியல் துறையின் சகலவிதமான கருதுகோள்களுக்கும் உட்பட்ட நிலவியல் ஆய்வுகளுடன் பூகம்பம் நிகழ்வதற்கு சகலவிதமான சாத்தியங்களும் உள்ள கூடங்குளத்தில் புதிதாக அணுமின் நிலையம் கட்டுவதன் சிக்கல்களை முன்னிறுத்திய கோவை மருத்துவர் இரமேஷின் கூடங்குளஹ் பகுதி பூகம்பம் நிகழ சாத்தியமுள்ள பகுதி என்ற ஆய்வு முடிவுகள் மற்றும் சான்றாதாரங்கள் அணுசக்தித் துறையின் அதிகார நாற்காலிகளுக்கும் அதிகாரிகளின் குதங்களுக்கும் இடையே இட்டு நிரப்பப் பட்டு மூடப்பட்டு விட்டன.

இன்றைய இந்தியச் சூழலில் புதிதாகத் துவங்கியிருக்கிறது இரண்டு புதுக்கூறுகள். தேசிய நதிநீர் இணைப்பு குறித்த கதை ஒன்றும், சேது சமுத்திரத் திட்டம் குறித்த கதை ஒன்றும். இவை ஒன்றும் புதுக்கதைகள் இல்லையென்றாலும் பழைய கதைகளின் நீட்டித்த மீட்டுருவாக்கம் என்றாலும் இவற்றை எதிர்த்துச் சிலவாகவும் இவற்றை ஆதரித்துப் பலவாகவும் குரல்கள் பதிவாகி இருக்கின்றன என்றாலும் இனம் மானம் வெற்றி தேசியம் வளர்ச்சி தேசப் பாதுகாப்பு போன்ற பல்வேறு மிகப் பழைய குரல்களுடன் இவை இனங்காணப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. துறவி இராமேஸ்வரானந்தா சென்ற வருடம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். ‘சேது சமுத்திரம் திட்டத்தின் பழைய வரைவுகளால் கோதண்டராமர் கோயிலுக்கு ஆபத்து நேரலாம் எனவே வரைவுகள் மாற்றப்பட வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்று அன்றைய அரசு சற்றுத் தள்ளி வரைவுகளை மாற்றியமைத்தது. என்னைச் சுற்றியுள்ள பல்வேறு மீனவக் குடியிருப்புகளைஸ்ரீ காத்திட கோதண்டராமரைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை ‘ என்று.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழவேற்காட்டின் அரங்கம் குப்பத்தில் மீனவர்களுடனான கலந்தாய்வுக்காக மூன்று நாட்கள் தங்கியிருக்க வேண்டியிருந்தது. இரண்டாம் நாள் மாலை கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு சிப்பியை வாயில் வைத்து தன்னுடைய பண்ணு வலையை முடிந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் கத்தினார் ‘ஓய் மாப் வருதுப்பா பாடுக்கு கிளம்புங்க ‘ என. குப்பம் முழுவதும் உடனடியாகத் தயாரானது, மரங்கள் வலைகளுடனும் மக்களுடனும் கடலுக்குள் கிளம்பி விட்டன. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன விஷயமென்று கத்திய முதியவரிடமே சென்று கேட்டேன். பர்லாங் கணக்கா மொத்தமா மீன் கூட்டம் வருதும்மா அதான் கிளம்பச் சொன்னேன் என்றார் அவர். எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றேன் நான். என்னம்மா தண்ணியில வித்தியாசம் தெரியுதுல்ல அதான் கணக்கு என்றார். அவர் சென்று வெகுநேரம் கழித்தும் கரையிலிருந்தபடியே கடலை வெறித்துக் கொண்டிருந்தேன். எனக்கு எந்த வண்ண வேறுபாடும் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இது அவர்களின் களம். மொத்த வாழ்வையும் கடலிடம் முழுமையாக ஒப்புக் கொடுத்தபின் அவர்கள் கற்றுக் கொண்டது.

அடுத்த நாள் பழவேற்காட்டின் கழிமுகத்தைக் கடக்க மீனவப் பெண்களுடன் கட்டுமரங்களில் ஏறிச் சென்றபோது சொன்னார்கள் ‘காத்தும் சுழியும் நீரோட்டமும் மாறிக்கிச்சுன்னா நாம அஞ்சு நிமிசத்துல கடக்கிறத அரை மணிநேரம் கடக்க வேண்டியிருக்கும் ‘ என்று. அவர்களுக்கு மட்டும்தான் தெரியும் எப்போது எது நடக்குமென, அவர்களுடன் வெறுமனே அமர்ந்திருப்பதைத் தவிர வேறெந்த அறிவியல் கேள்விகளுக்கும் இடமில்லை என்று எனக்குப் புரிந்தது. ஆயிரமான ஆண்டுகளாய் ஒரு சூழலின் வாழ்வியக்கத்தோடு இணைந்து போயிருந்தவர்களின் அனுபவ அறிவு அது.

3500 அரிய உயிரினங்கள் நிரம்பியுள்ள மன்னார் வளைகுடாப் பகுதியும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இருக்கும் லட்சோப லட்சம் மீனவர்களுமாக இணைந்திருக்கும் இந்த வாழ்க்கை முறையைத் திடுக்கிடக் கலைக்கும் வேலையைத் துவங்கியிருக்கிறார்கள். கடலைத் தவிர வேறெதையும் அறியாத மக்களால் நிரம்பியுள்ள இந்தக் குப்பங்கள் இனி கள்ளக் கடத்தலுக்கும் அல்லது முழுநேர சாராயம் காய்ச்சுதலுக்கும் பயன்படுத்தப் படலாம், இன்னும் நிலை மோசமானால் விவசாயம் இழந்த சிறுகுறு விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் கிராமங்களில் மாற்று வழியில்லாமல் பாலியல் தொழிலுக்கு மாறியதைப் போலக் கூடச் சூழல் மாறலாம். மாற்று வழியில்லாத பட்டினிச் சாவுகளால் நிரப்பப்பட்ட ஆந்திர தமிழக விவசாயக் குடும்பங்களைஸ் போல இனி கடலோரக் குப்பங்களிலும் நிலை வரலாம். இதனாலெல்லாம் என்ன செய்வது நமக்கு வளர்ச்சி முக்கியம் என்கிறவர்களைஸ் பார்த்துக் கேட்க வேண்டியிருக்கிறது. ‘யார் அந்த ‘நமக்கு ‘ என்கிற வரையறையில் அடங்கியவர்கள் ? ‘.

2000 கோடி ரூபாய் மதிப்பில் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான கழகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். இதனால் மீனவர்களுக்கு ஏற்படப் போகும் நன்மைகள் குறித்து மீனவர்களிடம் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி,ஆர், பாலு விளக்குகிறார். சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கை (Environment Impact Assesment Report) மீதான பொதுமக்களின் விவாதங்களும் விமர்சனங்களும் இன்னும் நடைபெற்றுக் கொண்டிந்த அந்தச் சூழலில் இவர்களின் நடவடிக்கைகளும் அறிவிப்புகளும் முற்றிலுமாக பொதுப்புத்தியில் தங்கள் கருத்தைத் திணிக்கும் முயற்சியன்றி வேறென்ன.

1/3/2004 காலைச் செய்திகளின்படி இரண்டு முக்கிய நிகழ்வுகள் நம்முன் நிகழ்ந்துள்ளன. கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள அமோனியா உரத்தொழிற்சாலையால் ஏற்படக்கூடிய சுற்றுச் சூழல் சிக்கல்கள் குறித்த பொது நல வழக்கொன்றின் மீது கேரள உயர் நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட ஆலையின் தொழிலாளர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நேற்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்பே உச்ச நீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட பொறியியலாளர்கள் குழு ஒன்று தொழிற்சாலையை வேறிடத்திற்கு மாற்றுவதே ஒரே தீர்வு என்று பரிந்துரைத்த போதும் உச்ச நீதிமன்றம் அந்த ஆலை இயங்கலாம் எனத் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.என் காரே, நீதிபதி எஸ்.எச். கபாடியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்து ‘ரசாயன வாயுக் கசிவு, பூகம்பம், தீவிரவாதிகள் தாக்குதல் போன்றவை எதிர்பாராமல் நடக்கக் கூடியவை. தற்போது தொழிற்சாலையில் எல்லாவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளஸ் பட்டிருக்கின்றன. சமுதாயத்திற்கு ஏராளமான பயன்களை அளித்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஆபத்து ஒன்றை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோமேயானால், இன்று நாட்டில் அணைகள், அணுஉலைகள், மின் நிலையங்கள் போன்றவை தோன்றியிருக்க முடியாது. எதிர்பாராத விபத்திற்காக தற்போதுள்ள தொழிற்சாலையை மூடிவிட உத்தரவிட்டுள்ள கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்கிறோம் ‘ எனத் தீர்ப்பளித்தது.

அதே தினசரியின் இரண்டாம் பக்கத்தில் கூடங்குளத்தில் சுற்றுச் சூழல் ஆய்வு மையத்தைத் திறந்து வைத்து கூடங்குளஹ் அணுமின் நிலையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை என இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் திரு அருண் கதோத்கர் கூறியதாகவும் ‘சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுப்புறப் பகுதி மக்களின் பாதுகாப்பில் அணுமின் உற்பத்திக் கழகம் அதிகக் கவனம் செலுத்துகிறது. ராதாபுரம் யூனியனில் உள்ள 27 கிராம பஞ்சாயத்துகளுக்கும் கூடங்குள அணுமின் நிலையம் சார்பில் சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். மேலும் அனைத்துப் பஞ்சாயத்துகளுக்கும் கம்பியூட்டர் வசதி, சுகாதார முகாம்கள், குடிநீர் வசதி, பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளைஸ்ரீ கட்டிக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம் ‘ என்று இந்திய அணுமின் உற்பத்திக் கழகத் தலைவர் திரு எஸ். கே. ஜெயின் பேசியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

எனக்கு மிக எத்தனமாகச் சிரிப்பு வந்தது. தலையைப் பின்சாய்த்து கண்ணோரம் சுருங்க இதழ் கோண வாய்பிளந்த சிரிப்பு. சுற்றி இருக்கும் நபர்கள் திடுக்கிட்டுத் திரும்பும் அளவிலான அலையெழுப்பும் சிரிப்பு. சிரிப்பதைத் தவிர வேறு என்னதான் முடிகிறது என்னால் கூடுதலாக கண்ணோரம் வழியும் நீரைத் துடைப்பதைத் தவிர்த்து.

யாதொன்றுக்கும் தொடர்பில்லாத பின்குறிப்பு :

Theory of chaos சொல்கிறது :

ஒரு பட்டுப் பூச்சியின் ஏதொரு பிரக்ஞையுமற்ற சிறகடிப்பு ஏற்படுத்தும் காற்றலை மாற்றம் ஒரு புயலைத் தடுக்கவோ அன்றி உருவாக்கவோ முடியுமென.

அன்புடன்

நா.இரா. குழலினி

ஒப்புரவு (செப்டம்பர் அக்டோபர் 2004)

kuzhalini@rediffmail.com

Series Navigation

நா.இரா. குழலினி

நா.இரா. குழலினி