‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ பற்றி – பேராசிரியர் ரூமிக்கு பிரியமுடன்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

நேசகுமார்


முதலில் ஒரு தன்னிலை விளக்கம். ஒரு எளிய வாசகன் என்ற முறையில் நாகூர்ரூமி அவர்களின் புத்தகத்தில் நான் கண்ட பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை அவற்றின் நேரான விளக்கம் வேண்டி என் விமர்சனத்தில் எடுத்துக் காட்டியிருந்தேன். அதன் நோக்கம், ரூமியைப் பற்றியோ அல்லது அவர் மதத்தைப் பற்றியோ அவதூறுகளை அள்ளித் தெளிப்பது அல்ல. 1425 வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட வார்த்தைகளையும், அவ்வார்த்தைகளுக்கான விளக்கங்களையும் வைத்து, மனிதர்களிடையே எழுப்பப் படும் ஏராளமான சீனப் பெருஞ்சுவர்களை உடைப்பதற்கு, இத்தகைய ‘வார்த்தை ‘களைப் பற்றிய வார்த்தைகளால் ஆன விவாதங்கள் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன. என் கேள்விகளுக்கு ரூமி போன்றோர் அளிக்கும் நேர்மையான விளக்கங்கள் அவர் மதத்தைச் சேர்ந்தவருக்கே தொலைநோக்கில் பெரிதும் உதவும். இதை மனதில் கொண்டு தனிமனிதத் தாக்குதல்களை விடுத்து, சுற்றி வளைத்துச் சொற்களால் சுவர் எழுப்பாமல் நேரான விளக்கங்களை இனியாவது பேராசிரியர் ரூமி அவர்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் ஒன்று, நான் எழுப்பிய ஐயங்கள் எல்லாம் இன்று ஒவ்வொரு ‘காஃபிரும் ‘ உள்மனத்தில் கொண்டுள்ளதே. ஆனாலும் பலரும் இங்கு நன்கு தெரிந்த சில காரணங்களால் அவற்றைப் பொதுவில் கேட்க அஞ்சியுள்ளனர் என்பதே உண்மை. இனி ரூமி அவர்களின் பதில் மடலைப் பார்ப்போம்.

பேராசிரியர் ரூமி, இதில் நான் எழுப்பிய கேள்விகள் பலவற்றுக்கும் சாதுர்யமாய் பதிலைத் தவிர்த்து விட்டிருக்கக் காண்கிறேன். ஆனால் இந்த இறுதி இறைத்தூதர் விஷயத்தை மட்டுமே முதன்மைப் படுத்தி இருப்பதால் அதை முதலில் பார்க்கலாம்.

முஹம்மது அவர்கள் ‘நபி ‘ என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. அவர் இறுதித் தூதர் என்பது பெரும்பாலான முஸ்லீம்களின் நம்பிக்கை. இவற்றைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. ஆனால், நான் குறிப்பிட்டிருந்தது வேறு. இந்த ‘இறுத்ித்தூதர் ‘ விஷயம் திருக்குரானில் எங்குமே குறிப்பிடவில்லை என்பதை ரூமி அவர்கள் தம் புத்தகத்தில் குறிப்பிடவில்லை, கலிமாவில் வரும் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்பதைக் கூட அதன் நேரடியான அர்த்தமான, முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்பதிலும், தமது நம்பிக்கையான ‘இறுதித் தூதர் ‘ என்பதை ஏற்றி, கலிமாவுக்கு தவறான அர்த்தத்தை தனது புத்தகத்தில் [1] தந்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்கு விளக்கம் அளித்துள்ள ரூமி, திரும்பவும் வார்த்தை விளையாட்டு காட்டியிருக்கிறார்.

கலிமாவை அவர் திரித்து அர்த்தம் கூறியிருக்கிறார் என்பதைப் பற்றி எதுவும் கூறாமல், ‘இறுதித் தூதர் ‘ என்பது திருக்குரான் வசனம் 33:40 ல் குறிப்பிடப் பட்டுள்ளது என்று கூறி, ‘வ லா கின் ரஸூலல்லாஹி வ ஹாத்தமன் நபிய்யீன் என்பதற்கு அவர் இறைவனின் தூதரும், நபிமார்களில் இறுதியானவரும் ஆவார் என்றர்த்தம் ‘ எனக் கூறியிருக்கிறார். கூடவே, முஸ்லீம் சிறுவர்களுக்குக் கூட இந்த ‘காத்தமன் நபி ‘ பற்றித் தெரியும் என்ற விளக்கம் வேறு அளித்துள்ளார்.

காத்தமன் நபி என்றால் என்னவென்று முஸ்லீம் சிறுவர்கள் வேண்டுமென்றால், நம்பிக்கைககளை, வார்த்தைகளில் ஏற்றி தவறாகப் புரிந்து கொள்ளலாம். அதற்கு அர்த்தம் வேறு என்று நான் சொன்னால் கல்லால் கூட அடிக்கலாம். ஆனால், அரபி மொழியில் ‘அலிஃப், பே ‘ (அகரம்) முதற்கொண்டு அடியாழம் வரை தெரிந்த ரூமி, இத்தகைய மொழிபெயர்ப்புகளைத் தந்திருப்பதுதான் வியப்பளிக்கிறது. ‘ஹாத்தமன் நபி ‘ அல்லது நாகூர்ச் சிறார்கள் நன்கு அறிந்த ‘காத்தமன் நபி ‘ என்பதன் அர்த்தம் ‘ நபிகளின் முத்திரை ‘ (seal of the prophets) என்பதே . இதனை, பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள், ‘இறுதி ‘ என்பதைக் குறிக்குமுகமாகவே ‘முத்திரை ‘ என்ற வார்த்தை காணப்பட்டுள்ளது என்றே கருதுகிறார்கள். தீவிரவாத முஸ்லீம்கள் கூட ஹாத்தமன் என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு, முத்திரை என்றும், இது ‘இறுதி அல்லது கடைசி ‘ என்ற அர்த்தத்தில் வருகிறது என்று ஒப்புக் கொண்டு இதற்கு அர்த்தப் படுத்தும் போது ‘ (இறுதி) முத்திரை ‘ என்று இரு வார்த்தைகளையும் சேர்த்தே தான் குறிக்கின்றார்களே தவிர, ரூமியைப் போன்று ஒரேயடியாக அதை ‘இறுதி ‘ என்று மட்டுமே மொழியாக்கம் செய்வதில்லை.

சென்ற வார திண்ணையில் அருளடியான் என்பவர், தமிழில் குரானின் மொழிபெயர்ப்பு என்றொரு வலைத்தளத்தை பார்வைக்கு வைத்திருந்தார். அதில் காணப்படும் தி.கு வசனம் 33:40:

’33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். ‘[2]

இந்த மொழிபெயர்ப்பில் கூட இறுதி என்ற வார்த்தைக்குள் முத்திரை என்றே சேர்த்திருக்கிறார்கள். மேலும், ரூமியின் புத்தகத்தில் , இஸ்லாத்தைத் ‘தெளிவுபடுத்துகிற விஷயத்தை ரொம்ப அற்புதமாகச் செய்திருக்கிறார்கள் ‘ [3] என்று அவர் புகழ்கின்ற யூசுப் அலியும், பிக்தாலும், இந்த காத்தமன் நபிக்கு, முத்திரை என்றே மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள்[4]. மதவெறியர் மெளலான மெளதூதி கூட, இந்த காத்தமன் நபிக்கு இறுதித் தூதர் என்று அர்த்தப் படுத்திவிட்டு, பிற்சேர்க்கையாக, ‘முத்திரை ‘ என்ற நேரடி மொழிபெயர்ப்பு தவறு என்றே தாம் கருதுவதாகவும், நேர்மையுடன் கூறுகிறார்[5]. ஆனால், இந்த ‘முத்திரையை ‘ அவர் மறைக்கவில்லை.

ஆனால், தமது புத்தகத்தில் ‘இந்த நூலின் நோக்கம் முஸ்லீம்களுடைய நம்பிக்கைகளை, கலாச்சாரத்தை எல்லாம் எடுத்துக் கூறுவதல்ல, எந்தக் கூடுதல் குறைவும் இல்லாமல் உண்மையை அப்படியே எடுத்துக் கூறுவது ‘ என்று குறிப்பிட்டுவிட்டு [6], இந்த முத்திரையை இறுதி என்று அர்த்தப் படுத்திக் கொள்வது பெரும்பாலான இஸ்லாமியர்களின் நம்பிக்கைதான், இறுதி என்ற வார்த்தை நேரடியாக திருக்குரானில் குறிப்பிடவில்லை என்பதை மறைத்துவிட்டார் ரூமி. அரபியில், ‘அலிஃப், பே ‘ தமிழர்களுக்கு தெரியாது என்பதால், இந்த ‘காத்தமன் நபி ‘ யை ஒட்டிய நம்பிக்கையை, அரபி மொழியாக்கமாகத் திரித்துவிட்டு, அதை நான் சுட்டிக் காட்டிய பின்பும் கூட தனது திரிபை, நம்பிக்கைகளின் அடிப்படையை விளக்கி, படிப்போரைக் குழப்ப முயல்கிறார். நான் திருக்குரானில், இறுதி என்று குறிப்பிடவில்லை என்று தான் சொன்னேனே தவிர, முகமது நபியவர்கள்தாம் இறுதித் தூதர் என்ற பெரும்பான்மை முஸ்லீம்களின் நம்பிக்கையைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. இது விவரமாக, படிப்பவர்களைக் குழப்பும் உத்தி.

இதே பாணியை அவரது மற்ற வாக்கியங்களிலும் காணமுடிகிறது. திருக்குரானைப் பற்றிக் குறிப்பிட்டால், உடனே ஹதீதுகளுக்குள் அடைக்கலம் தேடுகிறார். புகாரி, முஸ்லீம், திர்மிதி என்றெல்லாம் அடுக்குகிறார். நான் திருக்குரானில் இப்படிக் குறிப்பிடவில்லை என்றுதான் சொன்னேனே தவிர, ஹதீதுகள் பற்றியெல்லாம் குறிப்பிடவில்லை. ஹதீதுகளை இங்கே இழுத்திருக்கின்ற ரூமி, இந்த ‘காத்தமன் நபி ‘ என்பதற்கு, முத்திரையுடைய நபி என்றொரு அர்த்தப்படுத்துதலை சிலர் முன் வைப்பதையும், அதற்கு ஆதாரமாக புகாரியின் பல ஹதீதுகளில், இந்த ‘முத்திரை ‘, முகமது நபியவர்களுக்கு தோள்களுக்கிடையே இருந்த ஒரு குறியீடு என்றும் கூறப்பட்டுள்ளதையும் கூறியிருக்கலாம். இந்த ‘காத்தமன் ‘ ஒரு டென்ட் பட்டனைப் போன்ற அளவில் இருந்ததாக பல ஹதீதுகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த சூரா அல்லாஹ்வினால் அருளப்பட்ட காலகட்டத்தையும் பார்க்க வேண்டும். அப்போது, அவர் தமது (வளர்ப்பு) மகனின் மனைவியான ஜைனப்பை திருமணம் செய்து கொண்டதால் பெரும் புகைச்சல் ஏற்பட்டிருந்தது. சொந்த மருமகளையே மணந்து கொள்ளும் இவர் ஒரு இறைத்தூதர் தானா என்ற சந்தேகம், முகமது நபியவர்களைப் பின்பற்றியோருக்கும், அவரது ஏனைய மனைவிகளுக்கும் கூட ஏற்பட்டிருந்தது. அத்தியாயத்தின் ஏனைய வசனங்களைப் படித்தால்[தி.கு 33:36,33:37,33:39,33:50], இந்தப் பிண்ணனியைப் புரிந்து கொள்ளலாம். இப்படி ஒரு குழப்பம் அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் மனதில் ஏற்பட்ட நிலையில், அவர் ஒரு நபிதான் என்று உறுதிப் படுத்தும் வகையில், அவரது தோள்களுக்கிடையே இருக்கும் இந்த ‘முத்திரை ‘ யைக் குறிப்பிட்டு அல்லாஹ் சொல்லியிருப்பது, அவர்களின் மனதில் நபியவர்களைப் பற்றி இருந்த குழப்பத்தை நீக்க உதவியது.இந்த வசனத்தில், முகமது நபியவர்கள் யாருக்கும் தந்தை கிடையாது, அவர் முத்திரையுடைய நபி (அல்லது நபிகளின் முத்திரை) என்றிருப்பதை கவனிக்க வேண்டும். அவர் ஒரு நபி ஆதலால், அவருக்கு மகன் என்று யாரும் கிடையாது. அவர் யாரை வேண்டுமானாலும் விவாகரத்து செய்யலாம், மணந்து கொள்ளலாம் [தி.கு 33:51], அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அவரை யாரும் கணக்குக் கேட்கக் கூடாது [தி.கு வசனம் 33:39] என்று அல்லாஹ் கூறியதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே இந்த ‘வார்த்தை ‘, கடைசி என்ற அர்த்தத்தில் இங்கு சொல்லப் படுவதற்கான எவ்வித முகாந்தி ரமுமே இல்லை.

மேலும், முகமது நபியவர்கள் பிறந்தபோது, ஒரு யூதர் தான் இந்த ‘முத்திரை ‘யை பார்த்துவிட்டு, இவ்வுலகில் தோன்றியிருக்கும் ‘நபி ‘ இவர்தான் என்று அறிவித்தார். இந்த ‘முத்திரை ‘யிலிருந்து ஒரு வித மணம் கமழ்ந்து கொண்டிருந்ததாகவும் நம்பப் படுகிறது. இந்த முத்திரையே அவரை நபியாக உலகிற்கு முதன் முதலில் அடையாளப் படுத்தியது. ஆகவே, இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ‘முத்திரை ‘ என்பது கடைசி என்ற அர்த்தத்தில் சொல்லப் படவில்லை என்றும், அது நேரடியாக முத்திரையை குறிக்கும் சொல்லே என்றும் பலர் கருதுகின்றனர். திருக்குரானில் பல இடங்களில், ‘முத்திரை ‘ என்பது மூடுவது என்ற அர்த்தத்தில் கூறப்பட்டிருந்தாலும், ‘சிறந்தது ‘ என்ற அர்த்தம் தொணிக்கும் வசனங்களும் உண்டு.

இந்த காத்தமன் நபிக்கான அர்த்தப் படுத்துதலை கேள்விக்குள்ளாக்கியதால், அஹ்மதி முஸ்லீம்கள் இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் எல்லாவித துன்புறுத்தலுக்கும் ஆளாகிவருகிறார்கள். பஹாவுல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட சில ஷியாக்கள், ஈரானில் ஏனைய ஷியாக்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தாங்கள் முஸ்லீம்களே இல்லையென்று கூறிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்கும் , இந்தியாவுக்கும் ஓடி வந்துவிட்டார்கள். நூர் பாக்-கை மாஹ்தி என்று நம்பும் ஜிக்ரிக்கள் (zikris) பலூசிஸ்தானில்(பாகிஸ்தான்) எல்லாவித வன்முறைகளுக்கும் இன்றும் ஆளாகிவருகின்றனர். இதில், ரசூல் (messenger) வேறு, நபி (prophet) வேறு, முகமது இறுதி நபிதானே ஒழிய, இறுதித் தூதர் கிடையாது என்று வாதிடும் முஸ்லீம்களும் உள்ளனர். சித்திக் ஹசன் தீன்தாரைப் பின்பற்றும் தீன்தார் அஞ்சுமன் முஸ்லீம்களும் இப்படியான பெரும்பான்மை நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டவர்கள்தாம் (ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலின் பேரில் கர்னாடகத்தில் சர்ச்சுகளில் குண்டு வைத்தது, ஆந்திராவில் டாக்டர்.அம்பேத்கரின் சிலைகளை உடைத்தது, தமிழகத்தில் தேவர்சிலை உடைப்புகளை நிகழ்த்தியது இந்த முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்ற சந்தேகம் உள்ளது). இது மட்டுமல்ல, எதிர்காலத்தில் காத்தான்குடி(இலங்கை) ரவுல் மெளல்வியைக் கூட யாராவது இறைத்தூதர் என்று நம்பவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது, திருக்குரானில் இருக்கும் இந்த இறுதித்தன்மையப் பற்றிய ‘இட ‘ வெளிதான்.

எப்படி முகமது நபியவர்கள் தமக்கு அடுத்த கலீஃபாவைத் தெளிவாகக் குறிப்பிடாதது, பிற்காலத்தில் ஏராளமான குழப்பங்களுக்கு வழிவகுத்து, இன்றளவிற்கும் ஷியா-ஷுன்னி என்று ரத்த ஆறை ஓட வைத்துக் கொண்டிருக்கிறதோ, அப்படியே, இந்தத் தெளிவில்லா வசனமும், இஸ்லாத்தில் பல பிரிவுகள் ஏற்பட வழிகோலுகிறது. திருக்குரான் சிறு சிறு விஷயங்களைக் கூடத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. தவறு செய்யும் பெண்களை சாகும் வரை வீட்டிற்குள்ளே அடைத்து வைப்பது [திருக்குரான் வசனம் 4:15] , மாற்று மதத்தினரின் பிடரியில் வெட்டுவது- விரல்களை வெட்டுவது [திருக்குரான் வசனம் 8:12], ஒரு ஆண் சாட்சி சொல்வது இரண்டு பெண்களின் சாட்சிக்கு சமம் [திருக்குரான் வசனம் 2:282], ஆண் பிள்ளைக்கு, பெண்களுக்கு கொடுப்பது போன்று இரண்டு பங்கு சொத்து கொடுக்க வேண்டும் [திருக்குரான் வசனம் 4:11] என்றெல்லாம் தெளிவாக பல விஷயங்களைப் பேசும் திருக்குரான், ‘முகமது நபிதான் கடைசி தூதர், அவருக்குப் பின் அல்லாஹ்வாகிய நான் வேறெந்த தூதரையும் உலகுக்கு அனுப்ப மாட்டேன் ‘ என்று தெளிவாகக் கூறியிருந்தால், இவ்வளவு குழப்பங்கள், வன்முறைகள் இஸ்லாமியர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்காது. ஆனால், திருக்குரான் இந்த விஷயத்தில் தெளிவாக எங்கும் குறிப்பிடாமல் போகவே, ஆளுக்காள் தாம்தான் நபி என்று கூறி ஏற்படும் குழப்பங்களை தீர்க்க நடைமுறைத்தீர்வாக, பெரும்பாலான முஸ்லீம்கள் இந்த ‘முத்திரை ‘ க்கான இப்படியான அர்த்தத்தைப் பயன் படுத்திக் கொண்டனர், பிறகு இதுவே அழுத்தமான நம்பிக்கையாக ஆயிற்று.

இந்தப் பிண்ணனியெல்லாம் தெரியாமல் ரூமி புத்தகம் எழுதியிருப்பார் என்று நான் எண்ணவில்லை. நியாயமாகப் பார்த்தால் பேராசிரியரான ரூமி, இதையெல்லாம் அவரது புத்தகத்தில் கோடிட்டுக் காட்டியிருக்க வேண்டும். அது கூடப் பரவாயில்லை. இதை நான் கேள்வி கேட்ட பிறகாவது, இப்படியெல்லாம் கருத்துக்கள் பல இருந்தாலும், முத்திரை என்பது இறுதி என்ற அர்த்தப்படுத்திக் கொள்வது தாம் சார்ந்துள்ள பிரிவின் நம்பிக்கை என்றாவது கூறியிருக்க வேண்டும். அதையும் செய்யாமல், முத்திரை என்ற நேரடி மொழிபெயர்ப்பையே மறைத்து, திரித்து அரபி மொழியாக்கம் செய்துள்ளார். இதைப் பற்றியும், இன்னும் அவரது புத்தகத்தில் காணப்படும் இஸ்லாமோபாஸிஸ்ட் கருத்துக்கள் ஒவ்வொன்றைப் பற்றியும், அத்தியாய வாரியாய் விவாதிக்கத் தயாராக உள்ளேன். பேராசிரியர் ரூமி முன்வருவாரா ? இந்திய மரபில் இப்படிப்பட்ட விவாதங்கள் காலம் காலமாக நடந்து வந்துள்ளன. மாற்றுக் கருத்துடையவர்களை துன்புறுத்தும் அபூசுஃபியான்களின் அராபியக் கலாச்சாரத்தை ஒதுக்கிவிட்டு, இந்தியக் கலாசாரத்தின் அடித்தளமாக காலம் காலமாக விளங்கிவருகின்ற , இந்த விவாத முறைக்கு ரூமி மாறுவாரா ?

இப்படியான திரிபுகளை மறைத்திருப்பது மட்டுமல்ல, தலைப்பில் நேசத்தைக் காட்டிவிட்டு, மடலில் வன்மத்துடனேயே பேசுகின்றார். ‘நேசகுமார்த்தனம் ‘, ‘வியாக்கியானங்கள் ‘ என்பதையெல்லாம் கூட வயதில் பெரியவர், உரிமையில் செய்த கிண்டல் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மரத்தடியில் எனது ‘வியாக்கியானங்களுக்கு ‘ எதிர்ப்பு வந்ததால், நான் இஸ்லாம் பற்றி எழுதுவதை நிறுத்தினேன் என்று போகிற போக்கில் சேற்றை வாரி இறைக்க முயன்றிருப்பது, அவரது நேர்மையின்மையையே காட்டுகிறது. மரத்தடி இணையக் குழு ஒன்றும் ஃபத்வா இடுபவர்களின் பாசறையல்ல. எனக்கு அங்கு எதிர்ப்பு எதுவும் ஏற்படவில்லை. மரத்தடி முஸ்லீம் அன்பர்கள் கூட, என்னிடம் விவாதித்துப் பின் அமைதியாகிப் போனார்களே தவிர யாரும் என்னை எதிர்த்து அடக்கிவிடவில்லை. கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரியிடம் நான் முதலிலேயே இன்னின்ன விஷயங்கள் சம்பந்தமாக ஆதாரங்களை வைக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு[7] அவற்றிற்கு பதிலிடுவதோடு நிறுத்திக் கொண்டேன்[8]. ரூமியின் திண்ணைக் குற்றச் சாட்டை அடுத்து, மரத்தடி குழுமத்திலேயே இதை விளக்கி ஒரு நீண்ட மடலையும் இட்டிருக்கிறேன்[9 ]. அதை இணை மட்டுறுத்துனரும் ஆமோதித்துள்ளார்[10]. மரத்தடி குழுவையும், என்னையும் பற்றி இப்படி திரித்துக் கூறும் ரூமி, அவரது கூற்றிற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அல்லது மரத்தடியில் நடந்தவைகளைப் பற்றி மாற்றிக் கூறியிருப்பதை நேர்மையுடன் ஒப்புக் கொள்ள வேண்டும். செய்வார் என எதிர்பார் க்கிறேன்.

மேலும், திருக்குரானைப் பொறுத்தவரை மூல மொழியில் இருப்பதுதான் குரானாகும், மொழிபெயர்ப்புகளை குரான் என்று முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்றும் ஒரு வகாபி தத்துவத்தையும் உதிர்த்திருக்கிறார்[11]. அரபி மொழிப் பண்டிதர்களே அர்த்தம் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கும் போது, குர் ஆனின் வசனங்களுக்கு அர்த்தம் இதுதான், அதுதான் என்று வாதித்துக் கொண்டிருப்பது போன்ற நேசகுமார்த்தனமான செயல் வேறெதும் இருக்க முடியாது என்றும் தனது ‘இஸ்லாமியத் தீர்ப்பை ‘ சொல்லியிருக்கின்றார். மேலும், திருக்குரானில் சந்தேகம் இருந்தால், தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இப்படி இங்கே சொல்கிற ரூமி, இத்தகைய மொழிபெயர்ப்புகளை, ‘விளக்கங்களை ‘ ஷாபானு வழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நிலை நாட்டுவதற்காக எப்படி வசதியாக பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்:

‘யூசுஃப் அலி, பிக்தால் போன்ற உலகப் புகழ்பெற்ற மொழி பெயர்ப்பாளர்களும் விரிவுரையாளர்களும், 02:241ல் வரும் சொற்றொடருக்கு ‘பராமரிப்பு ‘ என்றும் 02:236ல் வரும் சொற்றொடருக்கு ‘அன்பளிப்பு ‘, ‘கொடை ‘ என்பதாகவும்தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். ‘ [12].

இதே யூசுஃப் அலியும், பிக்தாலும், ‘காத்தமன் நபி ‘ என்பதை ‘நபிகளின் முத்திரை ‘ என்று மொழிபெயர்த்திருப்பதை நான் சுட்டிக் காட்டினால், அது ‘வியாக்கியான ‘ மாகிவிடுகிறது, ரூமி உபயோகப் படுத்தும் போது, அது ‘விளக்க ‘மாக ஆகுகிறது! இந்த இரட்டை நிலைப்பாட்டைத் தான் தனது புத்தகத்திலும் பயன் படுத்தியிருக்கிறார். அரபியில் அலிஃப், பே தெரியாமல், திருக்குரானைப் பற்றி நான் பேசுகின்றேன் என்று கூறுகிற ரூமி, எபிரானியில் அகரம் முதற்கொண்டு அந்தம் வரை படித்துத் தான், இயேசு கிறிஸ்து மீது தனது புத்தகத்தில் குறை சொல்கிறாரா ? இஸ்லாமும் அடிமைத்தளையும் என்ற அத்தியாயத்தில், அடிமைத்தளைக்கு எதிரான எந்த வெளிப்படையான கட்டளையும் இயேசுவிடமிருந்து வரவில்லை [13] என்று கூறிவிட்டு, பைபிளிலிருந்து பத்தி பத்தியாக அடிமைத்தளைக்கு ஆதரவான வசனங்களை எடுத்திட்டிருக்கிறார் [14].

மேலும், ‘ எஜமானனுக்கு முற்றிலும் வழிப்பட்டு அடிமைகள் நடக்க வேண்டும் என்றே கிறிஸ்துவம் கூறியது ‘ [15], ‘ அடிமைகளின் நிலையை மாற்றும் வகையில் கிறிஸ்துவம் எந்தக் குரலும் எழுப்பவில்லை ‘ [16], ‘ வெள்ளையனும் கருப்பனும் கர்த்தரின் ராஜ்ஜியத்தில் வேண்டுமானால் சமமானவர்களாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் இந்த உலக வாழ்வில் இல்லை ‘ என்பதே நாம் அறிந்த வரலாறு [17] என்றெல்லாம் அடுக்குகிறார். புத்தகத்தில், இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வந்த பேராசிரியர் ரூமி, இஸ்லாத்தை அறிமுகப் படுத்துவதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, சூஃபிக்களின் மெளன பாஷையை பயன்படுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால், புத்தகத்தின் முதலிலிருந்து முடிவு வரை, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், மற்ற மதங்களை இடிப்பது, தமது மனதின் கற்பனைகளையெல்லாம் மற்ற மதங்களின் பார்வையாக முன்வைப்பது, இந்துக்களின் அவதார நம்பிக்கைகளை அறிவுக்கு முரணானது என்பது, இயேசு நாதர் கடவுள் என்ற கிறிஸ்துவர்களின் நம்பிக்கையை கேலி செய்வது, முஸ்லீம்களை அழிக்க அமெரிக்காவும், இஸ்ரேலும், இந்துக்களும் கூடி செயல்படுகிறார்கள் என்று மறைமுகமாகக் குறிப்பிடுவது என்ற பாணியையே பின் பற்றியிருக்கிறார். பாலஸ்தீனத்தில் அமெரிக்க ஆதரவுடன் முஸ்லீம்களின் ‘கண்ணியம் ‘ அழிக்கப் படுவது[18], ‘டிசம்பர் ஆறு ‘ கள் [19], உலகிலேயே அதி பயங்கரவாத அரசு அமெரிக்கா தான் என்று ‘மேற்கோள்களின் ‘ மூலமாக எடுத்துரைப்பது[20], தமிழில் இருப்பது போல உயிரெழுத்துக்கள் இல் லாததே அரபி மொழியின் சிறப்பு [21] , புனித பைபிளில் முரண்பாடுகள் உள்ளன [22], மகாவீரரின் பிறந்த தினத்தன்று அசைவ உணவை சாப்பிடக்கூடாது என்ற வேண்டுகோள் – ஓர் கலாச்சார வன்முறை [23] , நான் வாளைக் கொண்டு வருவதற்காக வந்தேன் என்று பைபிளில் சொல்லியிருக்கிறது [24], ஐம்பதிலும் ஆசை வரும் என்ற டி.எம்.எஸ் பாட்டு [25] என்று இஷ்டத்துக்கு வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டு, தமிழறிந்த இஸ்லாமியச் சகோதரர்கள் படிக்கும் , படிக்கப் போகும் ஒரு புத்தகத்தில் நச்சு விதைகளை ஆங்காங்கே தூவிவிட்டு, இப்படியெல்லாம் எழுதியதை, குறிப்பிட்டு விமர்சித்தால், நபிகளாரின் காலத்திலேயே அவரது ‘வார்த்தைகளை ‘ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, திருக்குரானின் வசனங்களுக்கு ‘ஆன்லைன் மதராசாக்கள் ‘ தவறான விளக்கம் தருகின்றன, அரபி அல்லாத மொழியில் மொழிபெயர்த்தால் அது குரானே இல்லை, வார்த்தைகளின் சீனப் பெருஞ்சுவர்களை விட்டு விட்டு சூஃபிக்களின் மெளன வெளிக்கு வாருங்கள் என்றெல்லாம், வார்த்தைகளால் ஜாலம் காட்டுகிறார்.

பேராசிரியர் ரூமியிடம் நான் மேலும் இந்தக் கேள்விகளை கேட்க விரும்புகிறேன்: நபிகளாரின் வார்த்தைகளை, அவர் கூட இருந்த அரபிக்களே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனும் போது, ‘ஒரு முஸ்லீம் குர் ஆன், ஸூன்னா இந்த இரண்டின் அடிப்படையில்தான் இந்த உலக வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வை நாடவேண்டும் ‘ [26] என்று உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்களே இது சரியா ? இந்தப் பொதுக்குறிப்பை விளக்குவது போல உள்ளே பெண்களை அடிப்பது[27], ஜீவனாம்சம் தர மறுப்பது[28], விவாகரத்து செய்வது[29], அடிமைப் பெண்களோடு உறவு வைத்துக் கொள்வது[30] என்று எதற்கு எடுத்தாலும், திருக்குரானை ஆதாரமாகக் காட்டியிருக்கின்றீர்களே, இது உங்களுக்கு முரண்பாடாகத் தெரியவில்லையா ?

பேராசிரியர் ரூமி அவர்களே, அரபி மொழி அறிந்து, அதன் நுணுக்கங்களையெல்லாம் ஆய்ந்து தான் திருக்குரானைப் படிக்க முடியுமா ? அப்படியென்றால் தமிழ் முஸ்லீம்கள் எல்லோரும், அரபி மொழி கற்றால் தான் உண்மையான முஸ்லீமாக முடியுமா ? அரபி கற்று, ‘பிரிக் அன்ட் மோர்ட்டார் ‘ மதராஸாக்களில் உண்மையான இஸ்லாத்தைப் பயின்ற மாணவர்கள்(தாலிபன்) ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தினார்களே ஒரு இஸ்லாமிய தாண்டவம், அதுதான் உண்மையான இஸ்லாம் காட்டும் பாதையா ?

இந்த புனித ரமலான் மாதத்தில், நான் தினமும் சவுதி அரேபியாவின் அரசுத் தொலைக்காட்சியைப் பார்க்கிறேன். அதில், க ‘ஆபா வில் உலக முஸ்லீம்களெல்லாம் கூடும் போது ஓதும் திருக்குரானின் வசனங்களுக்கு, ஆங்கிலத்தில் அர்த்தத்தை ஓட விடுகிறார்கள், இதெல்லாம் நான் கொடுத்த ‘வியாக்கியானங்களை ‘யும் விட வன்முறை நிரம்பியனவாகவே உள்ளன. குரான் டிவி என்று ஒரு தொலைக்காட்சி சானல் பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகிறது, அதிலும் இதே கதைதான். இவ்வளவு ஏன், இங்கிருக்கும் தமிழ் இஸ்லாமிய வலைத்தளங்களில் கூட நபிகள் நாயகம் முஸ்லீம் அல்லாத பெண்களை தாக்குவதையும்[31], ஜிஹாத் தொடுப்பது[32], முஸ்லீம் அல்லாதோரைத் கொலை செய்து அவர்களது பொருட்களை அபகரித்துக் கொள்வது[33], முஸ்லீம்கள் தவிர மற்றவர்களை அரபு தீபகற்பத்தை விட்டுத் துரத்துவேன் என்றார் நபிகள்[34] என்பது போன்ற வசனங்கள் காணப்படுகின்றன. நான் திருக்குரானுக்கு தவறான ‘வியாக்கியானங்களை ‘, அரபியில் அகரம் கூடத் தெரியாமல் கூறுகிறேன் என்றால், இவற்றையெல்லாம் என்ன சொல்வது ? இவர்களும் உண்மையான இஸ்லாம் பற்றித் தெரியாமல் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், இத்தகு ‘விளக்கங்களை ‘ப் பற்றி உங்களது புத்தகத்தில் கண்டிக்கவே இல்லையே, அது ஏன் ?

வார்த்தைகளால் விஷத்தைப் பரப்பும் இந்தக் கலாசாரத்தைப் பற்றியும், உங்களின் புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப் பற்றியும் விமர்சித்தால், உடனே இத்தகைய ‘அறிவார்ந்த செயல்களின் விளைவு வெறுப்பையும் கசப்பையுமே விளைவிக்கும் ‘ என்று கூறி, அறிவார்ந்த எடுத்துக் காட்டுகளின் மூலம் என்னைப் போன்றவர்களை ‘ மெளனப் பெருவெளியின் அமைதியிலும் ஆனந்தத்திலும் திளைக்க ‘, அழைப்பு விடுக்கிறீர்கள். வார்த்தைகளால் உங்களது புத்தகம் முழுவதிலும் வெறுப்பையும், கசப்பையும் வெளிப்படுத்திவிட்டு, அதை சுட்டிக் காட்டுபவர்களுக்கு, இவ்வாறு சூஃபி அழைப்பு விடுப்பது முறையல்ல.

இஸ்லாத்தை எங்களுக்கு அறிமுகப் படுத்தும் உங்களது புத்தகத்தில் மட்டுமல்ல, இணையத்தில் விரவிக் கிடக்கும் உங்களது எழுத்துக்களில் எங்கு பார்த்தாலும் முரண்பாடுகளைக் காண்கிறேன். குஜராத் கலவரங்களுக்கு, சிவனையும், விஷ்ணுவையும் குறைகூறிப் ‘பாற்கடல் உறக்கம் ‘ பற்றிப் பாட்டெழுதிய நீங்கள்[35], பீறிட்டுத் தெறிக்கும் ரத்தத் துளிகளில் தெரிகின்றார்கள் இப்ராஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் என்று ரசூல் எழுதியவுடன், அது ‘அவமரியாதை ‘ (blasphemy) என்று வர்ணித்தீர்களே[36] அது முறையா ?

இந்துக்களின் கடவுள்களை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் கவிதையில் திட்டலாம், ஆனால் அதே சமயத்தில் உங்களது நபிமார்களை, நபிகளாரின் மனைவிகளை பற்றி கவிதைகளில் சாடுவதோ, விவாதிப்பதோ இஸ்லாமிய அவதூறு (blasphemy), அவர்களை நாய் என்று விளிப்பது, ‘ அப்படிப்பட்டவர்களை கொல்வதே சரி , அதைச் செய்ய ஒரு சாதாரண முஸ்லீமே போதும் ‘ [37] என்ற இரட்டை நிலைப்பாட்டை உங்களிடம் காண்கிறேன். இஸ்லாம் பற்றி சந்தேகம் என்றால், தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதே முறை என்று ‘நேச குமார்களுக்கு ‘ குறிப்பிடும் நீங்கள், உங்கள் புத்தகத்திலோ, அல்லது மடலிலோ ‘இஸ்லாம் பற்றி சரியாகத் தெரிந்த ‘ அறிஞர்கள் யார் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம். இஸ்லாம் பற்றி ‘சரியாகத் தெரிந்த மார்க்க அறிஞர்கள் ‘ யார் ? தேவ்பந்தி முல்லாக்களா ? பரேல்வி அறிஞர்களா ? ஷியாக்களின் இமாம்களா ? பின் லாடன்களா ? அல் உம்மா பாஷாக்களா ? காத்தான்குடி ரவுல் மெளல்விக்களா ? சவுதி முல்லாக்களா ? இஸ்மாயிலி போராக்களின் மதகுருக்களா ? யார் கூறுவது ‘சரியான இஸ்லாம் ‘ ?

1425 வருடங்களாக இருப்பது ஒரே விதமான இஸ்லாம்தான் என்று குறிப்பிட்டு இஸ்லாத்தின் பன்முகத்தன்மையை மறுதலிக்கும் நீங்கள், ஷியாக்கள், அதில் உள்ள பல்வேறு பிரிவுகள், அஹ்மதிக்கள், பரேல்விக்கள், வகாபிகள், சூஃபியிஸத்தை பின்பற்றும் முஸ்லீம்கள், சினிமாவில் முஸ்லீம் பெண்ணை இந்து ஒருவன் மணப்பதாகக் காட்டியதால் மணிரத்னம் வீட்டில் குண்டு வீசும் தீவிரவாதிகள் என்று யார் பின்பற்றுவதை, எந்த இஸ்லாத்தை உண்மையான, 1425 வருடங்களாக மாறாத இஸ்லாமாகக் கருதுகிறீர்கள் என்பதை புத்தகத்தில் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும். சரி, அதுதான் போகட்டும், இத்தருணத்திலாவது, தயை கூர்ந்து விளக்குங்கள்.

இறுதியாக ஒரு கேள்வி. இதற்காவது நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன். ‘புத்தகத்தில் ‘ எங்குமே, காஃபிர்களான எங்களைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று நீங்கள் குறிப்பிடவில்லை. சிலை வணக்கம் செய்யும் என்னைப் போன்றவர்கள், நாத்திகம் பேசிய (உங்களால் பல சமயங்களில் புகழப் பட்ட) பெரியார், நீங்கள் புத்தகம் எழுதினீர்களே பெருந்தலைவர் காமராஜர், உங்களை புத்தகம் எழுதத் தூண்டிய பா.ராகவன், பத்ரி ஆகிய இவர்களுக்கெல்லாம் அல்லாஹ்வின் கருணை கிட்டுமா ? நான் படித்த வரையில் திருக்குரானில் அல்லாஹ், முஸ்லீமாக மதம் மாறாதவர்கள், முகமது அவர்களை நபியென்று ஏற்றுக் கொண்டு இஸ்லாத்துக்கு கீழ்ப்படியாதவர்கள் ஆகியோர்களை எல்லாம் நரகத்தீயில் வாட்டி வதைப்பேன் என்று கூறுகிறாரே, இது பற்றி தங்களின் விளக்கம் என்ன ? இதை நான் கிண்டலாகவோ, குத்தலாகவோ கேட்கவில்லை. ஒவ்வொரு மூன்றாவது முஸ்லீமும் இஸ்லாமிய நாடுகளுக்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இந்தியாவில் உலகிலேயே இரண்டாவது பெரிய முஸ்லீம் சமுதாயம் உள்ளது. இந்நிலையில், எங்களைப் பற்றியெல்லாம் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள விழைகிறேன்.

தங்களது பதில்களை எதிர்நோக்கி,

– நேச குமார் –

[1] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 32

[2] – http://www.a1realism.com/tamilquran/The_Clans.htm

[3] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 14

[4] – http://www.usc.edu/dept/MSA/quran/033.qmt.html

[5] – http://www.masmn.org/Books/Abul_Ala_Mawdudi/The_Finality_Of_Prophethood

[6] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 13

[7] – http://groups.yahoo.com/group/Maraththadi/message/19611

[8] – http://groups.yahoo.com/group/Maraththadi/message/19873

[9] – http://groups.yahoo.com/group/Maraththadi/message/21166

[10] – http://groups.yahoo.com/group/Maraththadi/message/21177

[11] – http://www.thinnai.com/ar1028042.html

[12] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 425

[13] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 461

[14] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 460-461

[15] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 461

[16] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 460

[17] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 468

[18] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 58

[19] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 99

[20] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 137

[21] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 211

[22] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 47

[23] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 13

[24] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 78

[25] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 357

[26] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 27

[27] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 401

[28] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 414

[29] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 425

[30] – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : பக்கம் 465

[31] – தமிழ்இஸ்லாம்.காம் : இணைவைப்போர் மீது இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தும் போது அவர்களின் பெண்களும் குழந்தைகளும் கூட (சில நேரங்களில்) பாதிக்கப்படுவது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘ ‘அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களே ‘ ‘ என்று நபி(ஸல்) அவர்கள் (பதில்) கூறினார்கள் என ஸஅப இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்.

http://www.tamilislam.com/hadith/bulugul/chapter11.htm

[32] – தமிழ்இஸ்லாம்.காம்: http://www.tamilislam.com/hadith/bulugul/chapter11.htm

[33] – தமிழ்இஸ்லாம்.காம் : (போரில் எதிரியைக்) கொன்றவருக்கே கொலை செய்யப்பட்டவனுடைய பொருட்கள் சொந்தம் என நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என அவ்ஃப் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்.

[34] – தமிழ்இஸ்லாம்.காம் : முஸ்லிம்களைத் தவிர்த்து வேறெவரையும் விட்டு வைக்காத நிலை வரும் வரை யூதர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் நான் அரபு தீபகற்பத்தை விட்டு வெளியேற்றி விடுவேன் ‘ ‘ என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்.

[35] – http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/8051

[36] – http://www.thinnai.com/arts/ar1204033.html

[37] – http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/4311

Series Navigation

நேச குமார்

நேச குமார்