அ.முத்துலிங்கம் பரம்பரை -4

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

சிவஸ்ரீ


எங்களுக்கெல்லாம் மூளை மண்டைக்குள் ஒளிந்து கொண்டிருக்காம். எட்டாவது படிக்கும் போதே ஷாந்தா மிஸ் படம் வரைந்து காட்டினார். அவரே சொன்னதால் நம்பாமல் இருக்க முடியாது. நல்லவேளை, இந்த மூளை இப்படி ஒளியாமல், முந்திரிக்கொட்டை போல மூக்கை நீட்டிக் கொண்டிருக்கவில்லை. இருக்குமானால் மூளையில்லாதவர்களும், மூளை சிறுத்தவர்களும், ஒரு தலைப்பா கட்டிக் கொண்டோ, சில நடிகைகள் செய்வது போல்

‘ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க் கென்று

உன்னித் தெழுந்த தம் தடமுலைகளை ‘

சிலிக்கோன் பைகளைத் திணித்து உப்பச் செய்தோ, இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அப்படியெல்லாம் செய்துகொள்ளவும் யாராவது மூளையுள்ளவர்கள் சொல்லித் தரவேண்டும்.

ஆனால் எங்கள் அப்பத்தாவுக்கு மூளை எங்கயும் போய் ஒளியாமல் நாக்கிலேயே பல்லை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது காற்றாட. அதற்கு காற்று வீசவேண்டுமென்ற கரிசனத்தில் மூடாமலே வைத்திருப்பார் வாயை. எங்கள் பிரின்ஸி கூட பாடம் நடத்தும் போது, வெகு தூரம் பிரயாணப்பட்டு மூளையை அடைந்து, அங்கிருந்து சொற்களைப் பிடித்து வந்து நாக்கில் வைத்து மென்று மென்று துப்புவார் ஒவ்வொன்றாய். சிலசமயம் வகுப்புக்கு வெளியே போய் புகையை இழுத்து மூளைக்கு அனுப்பிக் கூட்டிக் கொண்டு வரச்செய்வார் வார்த்தைகளை. ஆனால் அப்பத்தாவுக்கு நாக்கிலேயே மூளை இருந்ததால் வாயைத் திறந்தவுடன் பாய்ந்து கொட்டும். முற்றத்தில் மழைத் தண்ணீர் ரொம்பியவுடன் தூப்பாயின் கல் குழவியைத் திறக்கும் நொடியில் லபக் லபக்கெனக் குதித்துப் பாயும் தவளைக் கூட்டம் போல் குதிக்கும் வார்த்தைகள் அப்பத்தா வாயிலிருந்து, ஒரே நேரத்தில் அத்தனையும் முண்டி அடித்துக் கொண்டு.

கோயில் வாசலில் விட்டுவந்த என் புதுச்செருப்பைக் களவெடுத்த ‘கூறு கெட்ட திருட்டுக் கும்பாயனை ‘ விரட்டிப் பிடித்து, அவனைப் பற்றி, அவன் வம்சத்தைப் பற்றி, அவனுக்குப் பிறக்கவிருக்கும் திருட்டுக் கழுதைகளைப் பற்றியெல்லாம் அரை நொடிக்குள் தெரிந்து வைத்துப் புட்டுப் புட்டு வைத்ததில், அவன் அப்பத்தா வார்த்தைகளில் காதலாகி, கசிந்துருகி, கண்ணீர் மல்கி, காலில் விழுந்தோடிப் போனான். இப்படிப் பேசிப் பேசித் தான் அப்பத்தா என் செருப்பைக் காப்பாற்றியது போலவே என் பெண்மை, மென்மை, அடக்கம், அச்சம், மடம், நாணம், வகைகளையெல்லாம் காப்பாற்றித் தந்தார். அவர் தான் எனக்கு, ‘நீ ஒரு பெண், ஆணில்லை ‘ என்று அவ்வப்போது உபதேசித்து வந்தார். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு என்றாவது நான் ஆணாகி விடாமல் காப்பாற்றி விட்டார்.

இப்படி எனக்குப் போல் ஒரு அப்பத்தா வாய்க்காததினாலேயே முத்துலிங்கத்தின் மகள் அப்படி ஒரு கேள்வி கேட்க, அதற்கு அவர் திகைத்துப் போக நேர்ந்தது. என் அப்பத்தாவென்றால் நாம் கேள்வி கேட்கும் முன்னமே எல்லா உண்மைகளையும் நியாயங்களையும் சொல்லிச் சொல்லி வைத்திருப்பார். ‘திகடசக்கர ‘த்தில், ‘மாற்றமா தடுமாற்றமா ‘வில் பெண் தலைகுனிந்து நடப்பது ‘ஒன்று தெரியாமை ‘, ‘மடமை ‘ என்று அவர் அறியாது முடிவு கட்டுவதற்குக் காரணமாய் ஒரு சம்பவம் நடக்கிறது. அது இது தான் :

//{ அப்போது ஒரு பதினேழு வயதுப் பெண் புத்தகக் கட்டுடன் வெளியிலே இருந்து வந்தாள். வழக்கமான சிலோன் உடுப்பு தான். அரைப் பாவாடையும் அதற்கு மேல் அணியும் பிளவுசும்; நீளமான கரு கருவென்ற பின்னல். தலையைக் குனிந்தபடியே விடு விடென்று உள்ளே போய் விட்டாள். ஒரு புன்சிரிப்பு, ‘ஹலோ ‘ ஒன்றுமே இல்லை. எனக்கு முன்பொரு நாள் என்னுடைய மகள் கேட்ட கேள்வி ஞாபகத்துக்கு வந்தது.

ஆபிரிக்காவில் ஒரு கிராமத்தில் இருந்த நாங்கள் விடியோவில் ஒரு தமிழ்ப் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். என்னுடைய மகள் பிறந்ததிலிருந்தே வெளிநாடுகளில் வளர்ந்தவள். அவளும் பொறுமையாக எங்களுடனிருந்து படம் பார்க்கிறாள். ஒரு இடத்தில் இடைமறித்து என்னை ஒரு கேள்வி கேட்கிறாள் என் மகள்.

அப்போது அவளுக்கு ஒன்பது வயது. முகம் எல்லாம் கண்கள். அதை இன்னும் அகல விரித்துக் கேட்கிறாள் :

‘அப்பா, இந்த கேர்ல்ஸ் (girls) எல்லாம் ஏன் குனிஞ்ச படி போகினம் ? ‘

என்னுடைய திகைப்பு அடங்கக் கொஞ்ச நேரம் சென்றது. பிறகு நான் சொல்கிறேன், ‘என் குட்டி மகளே, ‘சிலோன், சிலோன் ‘ என்று ஒரு நாடு இருக்கு. அங்கே நவரத்தினங்கள் எல்லாம் குவிந்து இருக்கும். மரகதம், வைரம், வைடூரியம், கோமேதகம், மாணிக்கம், பவளம், நீலம் என்று பலப்பல நிறங்களில் இரத்தினக் கற்கள். ‘

என் மனைவி குறுக்கிட்டு ‘புஷ்பராகம், புஷ்பராகம், அதை விட்டு விட்டார்களே ‘ என்று சொன்னாள்.

‘ஓ! புஷ்பராகம், அதையும் சேர்த்துக் கொள்; அவ்வளவு செல்வம் கொழிக்கும் நாடு. வீடு கட்டும் போது கூட அடிக்கல்லுக்குக் கீழே நவரத்தினங்களை யெல்லாம் ஒரு பிடி அள்ளிப் போட்டுத் தான் கட்டுவார்கள். ‘

‘இப்படிப் பட்ட சிலோனிலே பெண்கள் நடக்கும் போது குனிந்து பார்த்த படியே தான் நடப்பார்கள். கண்ணில் தட்டுப்படுகிற நவரத்தினங்கள் எல்லாவற்றையும் பொறுக்கிப் பொறுக்கி எடுத்து நகை செய்து வைத்துக் கொள்வார்கள். உங்களுடைய அம்மாவைப் பாருங்கோ, எத்தினை நகை செய்து வைத்திருக்கிறா! ‘

என்னுடைய மகள் என்ன லேசில் மசிகிறவளா ?

‘அப்ப ஏன் போய்ஸ் (boys) எல்லாம் நேரப் பார்த்தபடி போகினம் ? ‘

என் மனைவி என்னைப் பார்த்தாள், ‘மாட்டிக் கொண்டார்கள் ‘ என்பது போல. நியாயமான கேள்வி.

‘என் குஞ்சுப் பெண்ணே, அது என்னவென்றால் முன்னாலே போற கேர்ள்ஸ் எல்லாம் ரத்தினக் கற்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போவதால், பின்னால போற போய்ஸுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. அது தான் அவர்கள் கண்களை வேஸ்ட் பண்ணுவதில்லை. ‘ என்று சொன்னேன்.

}//

முத்துலிங்கத்தின் அந்தக் கதையில் வரும் சிலோன் பெண்ணைப் போலவே கல்லூரி விட்டு வீட்டுக்குள் போன போது தலையைக் குனிந்தபடியே விடுவிடென்று உள்ளே நுழைந்த போது, ஒருநாள், சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த இஞ்சினியர் இப்படி ‘ஹலோ ‘ கூட சொல்லவில்லையே என வருந்தவில்லை. ஏனெனில் அவர் எங்கள் ஊரிலிருந்து தானே அங்கு போயிருந்தார். வந்தவரிடம் சிங்கப்பூரிலேயே பெண், கிண் பார்த்து வைத்திருக்கிறாயா என அப்பத்தா கேட்க, ‘அது எப்படி முடியும், அங்குள்ள பெண்களுக்கெல்லாம் இப்படி உங்கள் பேத்தி போல வெட்கப்படத் தெரியலையே ‘ என்றார். அன்று தான் கல்யாணம் செய்யப்பட அடிப்படைத் தகுதியில் முக்கியமான ஒன்றைக் கற்றுக் கொண்டேன். இல்லாவிட்டால் எப்படிக் கல்யாணம் நடக்கும் ? கல்யாணம் செய்து ஒரு குழந்தையைப் பெற்றுப் போடா விட்டால் அப்பத்தா சொன்னது போல பெண் என்று நிரூபிக்க ஒரு சான்றும் இல்லாது போகுமே.

அதுவுமல்லாது குனியாமல் நிமிர்ந்து நடப்பது ஆபத்தை விளைவிக்கும். ஆபத்தை உருக்கொண்ட ஆண்களைக் காண நேரிடும். இந்த ஆண்கள் அநேக ஆபத்துக்களை அடக்கி வைத்திருப்பார்கள். எப்ப எதை ஏவுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் அனிச்சையாய் நடக்கும். அதில் முக்கியமான ஆபத்து முகப்பரு.

முகப்பருவை விடத் திறமை வாய்ந்த எதிரி வேறென்ன இருக்க முடியும் பதின்ம வயதில் ? இந்த ஆபத்திலிருந்தும் அப்பத்தா தான் காப்பாற்றினார். மூக்குத்தி குத்தி, நீளமாய் முடிவளரும் போது நான் பெரிய பெண்ணாகி விடுவேனென்று காத்திருக்க, ரெண்டும் நடக்காமலே பெரிய பெண்ணாகி விட்டதாய்ச் சொல்லி மூங்கில் தட்டிக்குள் மறைத்து வைத்து, எட்டிப் பார்த்து விடாதே என்றார் அப்பத்தா. எட்டிப் பார்த்தால் என்று நான் கேட்கும் முன்பே, யாரையாவது ஆம்பிளையைப் பார்த்தால் ‘மூஞ்சி மொகரையெல்லாம் பரு அள்ளிக் கொட்டி ஆம்பள மூஞ்சி மாரிக்கே ஆகிப் போயிரும் ‘ என்று சொன்ன பின்னால் எட்டிப் பார்க்கும் தைரியம் யாருக்கு வரும் ? பார்த்தே இராத பூச்சாண்டிக்கே, பயந்திருக்கிறோம், கண்ணாடியிலேயே பார்க்கக் கூடிய முகப்பருவுக்கு பயப்படவா முடியாது ? தட்டிக்குள் இருந்த முப்பது நாளும், வந்து வந்து மடியில் ஏறிக் கொள்ளும் சின்னுவையும், மடியில் ஏற்றிக் கொள்ளும் அப்பாவையும் கூட, அந்தத் தட்டியில் இருந்த ஓட்டை வழி எட்டிப் பார்க்காது இருந்து என் கன்னங்களைக் காப்பாற்றி விட்டேன்.

அதுமட்டுமில்லை, தமிழ்நாட்டில் கூட சிலோன் போல, சில இடங்களில் நவரத்தினங்கள் விளையத் தான் செய்கிறதாம். ஆனால் எங்கள் ஊரில் தலைகுனிந்து தேடிக் கொண்டே போனால் வைரமும், நவரத்தினங்களும் கொட்டிக் கிடந்ததில்லை. . கரடுமுரடான சரளைக் கற்களும், வழுவழுவென்ற கூழாங்கற்களும் தான் கிடக்கும். அவற்றையும் சொட்டாங்கல் விளையாடப் பொறுக்கி எடுத்து வந்து விடுவோம்.

நல்லகாலம், தலைகுனிந்து பார்க்கும் போது, அந்தக் கூழாங்கற்கள், குளத்தையோ, கண்ணாடியையோ போல தப்பித் தவறி, ஆண்கள் முகத்தைக் காட்டிவிடவில்லை. அந்தக் கூழாங்கற்களைப் பார்க்கும் போது Alfred Lord Tennyson தன் The Brook கவிதையில் எழுதியது போல் அவற்றைச் செதுக்கி, அங்கு உருட்டி வந்திருக்கக் கூடிய ஓடையின் வடிவும்,

I chatter over stony ways,

In little sharps and trebles,

I bubble into eddying bays,

I babble on the pebbles.

And draw them all along, and flow

To join the brimming river

For men may come and men may go,

But I go on for ever.

என்று பாடும் அதன் லயமும், அதை அழகாய்ச் சொல்லித் தந்த நிர்மலா மிஸ் முகமும் தான் தெரியும். கிரேக்கச் சொற்பொழிவாளர் டெமாஸ்தனீஸுக்கு ஆரம்பத்தில் இருந்த திக்கு வாய்க் குறையைச் சரிசெய்ய அவர் வாய்க்குள் சென்று, அவரின் தன்னம்பிக்கையோடு தோள் கொடுத்த கூழாங்கற்களின் திறமையும் தெரியும்.

ஆனால் ‘கட்டிங்கிராஸ் ‘ கதையில்

//{ பெண்கள் என்றால் எல்லாருமே பொறுக்கி எடுத்த இளம் குமரிகள் தான். கன்னங்கரேல் என்ற நிறம். இரும்பு உடம்பு. கால்களை முன்வைத்து உதைத்துப் பின்னுக்குப் போய் ‘ரிதம் ‘ தவறாத ஆட்டம். அவர்களுடைய பெரிய பின் பகுதிகள் இடம் வலமாய் அசைந்து நல்ல மனசையும் சங்கடப் படுத்தும். எங்கள் பக்கத்துப் பெண்களைப் போல தலைகுனிந்து பார்க்காது, கண்களும் மார்புகளும் நிமிர்ந்து தான் நிற்கும் }//

என்று முத்துலிங்கம் வர்ணிக்கும் ஆப்பிரிக்க வீராங்கனைகளை நாங்கள் மிஞ்சும் இடமும் உண்டு. அந்தக் காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் உண்டு. அங்கு காவல் காக்கக் கடவுளை அன்றி, பலரும் உண்டு…

தொடரும்… (அடுத்த வாரம்)

-சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ