பாவண்ணன்
சுகந்தி சுப்ரமணியனுடைய கவிதைகள் சின்னச்சின்ன காட்சிகளால் நிறைந்தவை. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ஒரு பெருமூச்சு வெளிப்படுகிறது. கதறல் கேட்கிறது. மெளனமான அழுகையின் கண்ணீர்த்தடம் படர்ந்து உலர்ந்திருக்கிறது. ஆற்றாமையும் இயலாமையும் மாறிமாறி வெளிப்பட்டபடி உள்ளன. அக்கவிதைகளைப் புனையத்தூண்டிய புள்ளிகள் இவையாகவே இருக்கக்கூடும். வாசிப்பின்பொழுது மீண்டும் கண்டடையப்படுகிற இப்புள்ளிகள் வழியாக விரிவிடைகிற அனுபவம் பல தளங்களைநோக்கி நம் எண்ணங்களைத் திருப்பிவிடுகின்றது. இதுவே சுகந்தியின் கவித்துவ வெற்றி. சிற்சில இடங்களில் காட்சிகளைத் தீட்டிக்காட்டுவதில் வெளிப்படும் அவசரமும் எழுதிய கவிதைகளுக்குத் தலைப்பிடக்கூட நேரமற்ற பதற்றமும் பலவீனங்கள்.
நதி போகும் இடத்தை அறியும் ஆவலை நெஞ்சம்முழுக்க நிறைத்திருக்கும் இளம்பெண்ணொருத்தியைச் சித்தரிக்கும் கவிதை வாசகனுடைய மனத்தில் உடனடியாக பதிந்துவிடக்கூடியது. நாற்புறச்சுவருக்குள்ளேயே குளியலை முடித்துக்கொள்கிற வயதில் இருப்பவள் பால்யகாலத்தில் பூப்பறிப்பு நோன்புக்காக தோழிகளுடன் சென்ற ஆற்றை நினைத்துக்கொள்கிறாள். பால்யம் முதலாகவே அவளைத் தவிக்கவைக்கிற கேள்வி தொடர்ந்து அவளை அறியாமையின் விளிம்பிலேயே நிறுத்திவைக்கிறது. திருமணத்துக்குப் பிறகு அதே கேள்வியை கணவனிடம் கேட்கிறாள். ஐம்பது மைல் தள்ளிப்போய் ஆறு போகுமிடத்தில் ஓர் அணையைக் காட்டி அதுவரைக்கும்தான் தனக்கும் தெரியும் என்கிறான். விடைகிட்டாத கேள்வி அவளிடமே தங்கிவிடுகிறது. ஆறும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஆறு எங்கே செல்கிறது என்னும் ஒற்றைக் கேள்வியை ஒட்டியே இக்கவிதை தொடங்கினாலும் கவிதை கொடுக்கிற அனுபவம் பெண்ணுலகின் ஆழ்மனத்தில் விடையற்றுத் துடித்துக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான கேள்விகளின் படிமமாக மாற்றிப் பார்க்கிறது மனம். வாழ்க்கை என்பது என்ன ? சமூகம் என்பது என்ன ? கவிதை என்பது என்ன ? எல்லாவற்றிலும் என் பங்கு எந்த அளவு ? எந்த எல்லைவரை எனக்கு அனுமதி உண்டு ? இப்படி ஏராளமான கேள்விகள். அரைநுாற்றாண்டுக்கு முன்னால் இப்படிப்பட்ட கேள்விக்கு ‘எது எங்கே போனால் உனக்கென்ன, மூலையில் கிட ‘ என்பது பதிலாக இருந்திருக்கக்கூடும். சில நுாற்றாண்டுகளுக்குமுன்னால் ஒருவேளை இப்படி கேட்பதற்கு வாய்ப்பே அற்ற சூழலே இருந்திருக்கக்கூடும். இன்று அக்கேள்வியை மதித்து அணைக்கட்டுவரையாவது அழைத்துச்சென்று காட்டும் ஆண் கிடைத்திருக்கிறான். அவ்வளவுதான். இருபது நுாற்றாண்டுகளுக்குப் பிறகாவது பெண் மீது ஒரு சின்னக் கரிசனம் பிறந்திருக்கிறது. அவளுக்கு விடையளிக்கவேண்டியது தன் கடமை என்று எண்ணும் ஆண் பிறந்திருக்கிறான். ‘எதுவரைதான் இந்த நதி போகும், வா இருவரும் சேர்ந்தே சென்று பார்க்கலாம் ‘ என்று சொல்லத்தக்க ஆண் உருவாவதற்கு இன்னும் பல ஆண்டுகள் கழியவேண்டும்போலும்.
இக்கேள்வி முன்வைக்கப்படுகிற முறை மிகமுக்கியமானதாகத் தோன்றுகிறது. முதலில் இக்கேள்வி அவள் மனத்துக்குள்தான் தோன்றுகிறது. பிறந்தவீட்டில் இருந்தவரைக்கும் யாரிடமும் சுதந்தரமாக இக்கேள்வியை அவள் கேட்டதாக குறிப்புகள் இல்லை. கேட்க இயலாத சூழலாகவோ அல்லது கேட்டும் பயன்விளையாத சூழலாகவோ அவள் பிறந்தவீடு இருந்திருக்கக்கூடும். திருமணத்துக்குப் பிறகுதான் அக்கேள்வியை அவள் தன் கணவனிடம் கேட்க முடிந்திருக்கிறது. ஒரு பெண் தன் கேள்விக்கான விடையை ஓர் ஆணை அணுகித்தான் அறியவேண்டியதுள்ளது என்னும் நிலை எத்தனை மோசமானது. தன் கேள்விக்கான விடையை தானே தேடி அறிவதற்கான கல்வி அல்லது வாய்ப்புகளை ஒரு சமூகம் மறுத்தே வந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் தருணமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். ஒரு சின்னக்கேள்வியை ஒட்டி உருவாகும் ஒரு கவிதை ஆண்-பெண் உறவையொட்டியும் பெண்-சமூகம் உறவையொட்டியும் எண்ணத்துாண்டும் அளவுக்கு வலிமை கொண்டதாக இருக்கிறது. கவிதையை இப்படி அசைபோடஅசைபோட பல எண்ணங்கள் எழுந்தபடி இருக்கின்றன.
தன் நினைவின்மையை நொந்துகொள்ளும் ஒரு பெண்ணின் மனப்பதிவாக வெளிப்படும் ஒரு கவிதையும் நல்ல வாசிப்பனுபவம் தரக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. பிரசவத்தின்போது தன் குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த முகம் நினைவில் இல்லை. முதல் கர்ப்பம் பற்றிய செய்தியை யாரிடம் முதன்முதலாகச் சொன்னோம் என்பதுவும் நினைவில் இல்லை. பள்ளியில் அரிச்சுவடி சொல்லித்தந்த முகம் நினைவில் இல்லை. விளையாடும் இடத்தில் ருதுவான கணத்தில் ஆறுதலாக கைப்பிடித்து அழைத்துவந்த முகமும் நினைவில் இல்லை. எல்லாத் தருணங்களுக்கும் அவற்றுக்கே உரிய முக்கியத்துவம் இருந்தும் எதுவும் நினைவில் இல்லை என்று கவிதை முடிகிறது.
வலிமிகுந்த ஆற்றாமையின் ரகசியக்குரல் நம் செவியில் விழுந்த கணத்தில் அந்த வேதனையை நாமும் உணர்கிறோம். ஒரு வெற்றுத் தாள்போல நினைவின்மைகளின் தொகுதியாக ஒரு பெண்ணின் மனம் அமைந்துபோயிருக்கும் விதம் அதிர்ச்சியாக இருக்கிறது. உடலின் இயக்கம் பிறர் விதிக்கும் கட்டுப்பாடுகள் சார்ந்ததாக உள்ளது. மனமோ எந்த இயக்கமுமற்று தரிசாகக் கிடக்கிறது. இயக்கமற்ற மனம் கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணத்துக்குச் சமம். அப்படியென்றால் பெண்ணின் வாழ்க்கை என்பது உடலளவில் உயிர்ப்புள்ளதாகவும் மனத்தளவில் உயிரற்றதாகவும் அமைந்த ஒன்றுதானா ? நித்தமும் நடமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் பலரோடு பழகிக்கொண்டும்தான் இங்கே பெண்ணின் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்றே எடுத்துக்கொள்வோம். பல முக்கியமான தருணங்கள் அவள் வாழ்விலும் நிகழ்ந்தே வந்திருக்கின்றன என்றும் வைத்துக்கொள்வோம். ஆனாலும் எந்தத்தருணமும் அவள் மனத்தில் பதியாமல் போவதற்கான காரணம் எதுவாக இருக்கலாம் ? ‘இதைஇதை மட்டுமே நீ நினைவில் வைத்துக்கொண்டால் போதும், மற்ற எதையும் மனத்தில் பாரமாக ஏற்றிச் சுமக்கவேண்டாம் ‘ என்றொரு குரல் புறத்திலிருந்து கட்டுப்படுத்தியபடி இருக்கக்கூடும் என்பது ஒரு காரணமாக இருக்கலாம் . ஆணுக்குத் துணையாக நிழல்போல இருந்து காரியமாற்றும் பெண்ணுக்கென்று தனிப்பட்ட நினைவுகள் தேவையில்லை என்று எண்ணங்களால் மேலாண்மை செய்யப்படுவது மற்றொரு காரணமாக இருக்கலாம். ‘தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு ‘ என்பது சுகந்தியின் இன்னொருகவிதையில் இடம்பெறும் வரி. தானியமற்ற வெற்றுக்குதிர்போல எந்த நினைவுமற்று இருப்பதாலேயே மனக்கதவுக்கு தாழின் அவசியம் இல்லாமல் போயிற்றா ? ‘மனத்தைத் தொலைத்து பேயாய் அலைகிறேன் ‘ என்றொரு வரி மற்றொரு கவிதையில் இடம்பெறுகிறது. ‘என்னைக்கொன்று இந்த மண்ணில் ஏற்கனவே புதைத்தாயிற்று ‘ என்னும் வரி சுகந்தியின் மற்றொரு கவிதையில் காணப்படுகிறது.
மானுட குலத்தின் நினைவுத்தொகுதியே வரலாறு. எந்தச் சமூக வரலாற்று நூலிலும் மனிதர்களின் இதயத்துடிப்புகள் ஒலித்தபடியே உள்ளன. ஆண்களும் பெண்களும் இணைந்ததுதான் சமூகம் உருவாகிறது என்பது நம் நம்பிக்கை. ஆண்களின் மனஉலகம் ஏராளமான நினைவுத்தடங்களால் நிறைந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக, பெண்களின் மனஉலகிலோ ஒற்றை நினைவுகூட இல்லை. உலகவாழ்வில் சமபாதியாக வாழ்கிற பெண்குலத்தின் நினைவுச்சுவடுகளே வரலாற்றில் இல்லாமல் போகுமளவுக்கு புறக்கட்டுப்பாடுகள் அழுத்திக்கொண்டுள்ளன என்னும் சாரமே நம் அசைபோடல்களில் நாம் வந்து நிற்கிற புள்ளி. கசப்பு மிகுந்ததாகவே இப்புள்ளி தோன்றினாலும், இதை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பது முக்கியமான கேள்வி.
‘அமைதி ‘ என்ற தலைப்பிலமைந்த கவிதையும் நல்ல அனுபவத்தைத் தரக்கூடிய ஒன்று. இக்கவிதையின் இறுதிவரிகள் மிகமுக்கியமானவையாகத் தோன்றுகின்றன.
‘வழியும் நிலவின் ஒளிவெள்ளத்தில்
தேங்கிக்கிடக்கும் குளம்
கேட்பாரற்ற அமைதியில் ‘
ஒளிபொழியும் நிலவு ஒருபுறம். தேங்கிக் கிடக்கும் குளம் மறுபுறம். ஒன்று அழகு. மற்றொன்று அழகற்றது. ஒன்று இயங்கும் தன்மை கொண்டது. மற்றொன்று எந்த இயக்கமுமற்றுத் தேங்கிக் கிடப்பது. ஒன்று வானில். மற்றொன்று மண்ணில். எது எங்கே எப்படி இருந்தபோதும் இரண்டுமே தன்னை அமைதியாக மட்டுமே வெளிப்படுத்திக்கொள்கிறது. அமைதியாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறவரைதான் அதற்கு இடமுண்டுபோலும். இப்படி இந்தப் படிமங்களைப் பிரிக்கப்பிரிக்க இவையனைத்தும் இருவேறு தன்மையுள்ள பெண்களின் சித்திரங்களோ என்னும் எண்ணம் எழுகிறது. எப்படிப்பட்ட தன்மை உள்ள பெண்ணானாலும் அமைதியை வெளிப்படுத்தும் பெண்ணுக்கு மட்டுமே வரவேற்பு இருக்கும்போலும். அமைதியை உடைக்கிற பெண்ணை என்ன செய்யும் என்னும் குறிப்பு கவிதையில் இல்லை. எண்ணங்களின் அணைக்கட்டை ஒரேவீச்சில் உடைத்தெறிந்துவிட்டு கவிதை முற்றுப்பெற்றுவிடுகிறது. கேள்விகளின் தடத்தையொட்டிச் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறோம் நாம்.
இப்படி எடுத்துச்சொல்ல சிறப்பான கவிதைகள் இத்தொகுதியில் பல உண்டு. கவிதை ததும்பும் மனநிலையில் பிறந்த ஒன்றிரண்டு வரிகளை இன்னும்இன்னும் மேலெடுத்துச் செல்லவியலாமல் தாழ்ந்து சரிந்துவிடும் சில கவிதைகளும் உண்டு. அவை முக்கியமல்ல என்றாலும், அத்தகு படிகளின் மீதேறி நின்றபடிதான் சுகந்தியின் சிறப்பான கவிதைகள் ஒளிர்கின்றன.
(மீண்டெழுதலின் ரகசியம்- சுகந்தி சுப்ரமணியன், யுனைடெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86)
- கடிதம் அக்டோபர் 14,2004
- கீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு
- உரத்த சிந்தனைகள்- 3
- ஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்
- கிஷன் பட்நாயக் – 1930 – 2004
- காற்றினிலே வந்த கீதங்கள்
- சுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்
- அ.முத்துலிங்கம் பரம்பரை -4
- மக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை
- ஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘
- கடிதம் 14,2004
- கடிதம் அக்டோபர் 14,2004
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2 (நிறைவு)
- அக்டோபர் 14,2004
- ஓவியர் நடிகர் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004
- விளையாட ஒரு பொம்மை
- பெரியபுராணம் — 13
- குழந்தைத் தனமாய்..(ஹைக்கூ)
- கவிதைகள்
- என்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை
- பூரணம்
- மெய்மையின் மயக்கம்-21
- பெரிய பாடம்
- பருவக்கோளாறு
- கடல் தாண்டிய உறவுகள்
- நீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41
- வாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு
- ஆதித்தனார் 100: அஞ்சலி
- டைரி
- விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்
- ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்
- முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்
- யஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)
- தாவோ க்ஷேத்ரத்தில் போகேண்டதெங்ஙனெ ? (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )
- ஊனம் உள்ளத்தினுள்ளா ?
- கவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு
- தவிக்கிறேன்
- ‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)
- என் நிழல்
- குகன் ஓர் வேடனா ? ?..
- கவிதை
- சரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)
- மறுபிறவி மர்மம்
- கல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்