புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

அருண் வைத்தியநாதன்


(http://arunviews.blogspot.com)

அமெரிக்கா முழுவதும் ஸ்டாவன் ஸ்பீல்பர்க்கின் டெர்மினலையும், பென் ஸ்டில்லர் நடித்திருக்கும் ‘டாட்ஜ் பால் ‘ என்ற நகைச்சுவைப்படத்தையும் தாண்டி, ஒரு விவரணப்படம் வசூம் மற்றும் பரபரப்பில் கலக்கித் தள்ளுகிறது என்றால் நம்ப முடிகிறதா உங்களால் ? நம்பித்தான் ஆக வேண்டும், மைக்கேல் மூரின் பாரன்ஹீட் 911 தான் அந்தப் பெருமைக்குரிய படம். கடந்த சனிக்கிழமை இரவு பத்து மணிக்காட்சிக்கு நான் மட்டும் தனியனாக சென்று இந்த அற்புதமான படத்தைப் பார்த்தேன். திரையரங்கில் பல காட்சிகளில் சிரிப்பொலி, சில காட்சிகளில் அமைதி, ஒரு சில காட்சிகளில் விசும்பல் சத்தம் என்று மக்களை அசைத்துப் போட்டது இந்த திரைப்படம்.

அமெரிக்க அதிபர் புஷ்ஷில் ஆரம்பித்து, துணை அதிபர் டிக் செனி மற்றும் காலின்பாவல் வரை, மேக் அப் செய்து கொள்வதில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. (எல்லாம் உண்மையான காட்சிகள் ..தொலைக்காட்சிக்கு உரை நிகழ்த்துவதற்கு முன்னால் தான் இந்த மேக் அப் சமாச்சாரங்கள்) அமெரிக்க அதிபர் புஷ் தேர்தலில் ‘தோற்றும் ‘ ஜெயித்த கதையில் தொடங்கி (அது ஒரு பெரிய கதை, மற்றுமொரு முறை எழுதுகிறேன்), புஷ்ஷுக்கும் செளதி எண்ணெய் அதிபர்களுக்கும் உள்ள உறவு வரை மைக்கேல் மூர் வறுத்தெடுக்கிறார். போர் என்றால் அது அமெரிக்காவில் உள்ள எத்தனைப் பெரும்புள்ளிகளுக்கு, வியாபார உத்தியாய் படுகிறது என்பதைக் காட்சிகளுடன் மைக்கேல் மூர் விளக்கும் போது, நெஞ்சு கொதிப்பதைத் தவிர்க்க முடியவில்லை!

ஈராக்கிய பெண்மணி தனது குடும்பத்தில் உள்ள ஐவரை இழந்து விட்டு, கதறும் காட்சி ஆங்கில எழுத்துக்களுடன் ஓடும் போது, மனசு லேசாகி விடுகிறது. ‘அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வோர் வீடும் நாசமாய்ப் போக வேண்டும்..அதற்கு அந்த ஆண்டவன் தான் அருள் புரிய வேண்டும் ‘ என்று அரற்றித் தள்ளுகிறார். சிறுவர்களும், சிறுமிகளும் கண்ணிழந்து, கைகளிழந்து ஈக்கள் மொய்க்க வலியில்அரற்றும் காட்சிகளைப் பார்க்கும் போது, போர் என்பது எத்தகையக் கொடூரமான விஷயம், அதுவும் ‘எந்த வித ஆதாரமுமில்லாமல், பொய்களின் காரணத்தால் ‘ ஜோடிக்கப்பட்ட போர் என்பது எத்தனை கேவலமான விஷமம் என்பது பளாரென்று அறைந்த வண்ணம் நமக்கு உணர்த்தப்படுகிறது. ஒஸாமா பின்லேடனின் உறவினர்களுக்கு மட்டும் தனி விமானம் கொடுக்கப்பட்டு, செப் 13 ஆம் தேதி பத்திரமாக அமெரிக்க அரசாங்கமே அனுப்பி வைப்பதைப் புட்டு புட்டு வைக்கிறார் மைக்கேல் மூர். அதாவது ‘எந்த விதமான கேள்விகளும் ‘ கேட்கப்படாமல், செளதி அரேபியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டதன் மர்மமென்ன என்றும் கேட்கிறார். இத்தனைக்கும் எந்த விமானமும் பறக்கக்கூடாது என்ற சட்டமும், தீவிரவாதிகளில் பதினைந்து பேர் செளதி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

புஷ், அவரது தந்தை புஷ்ஷினால் எப்படிப் பேணிக் காக்கப்படுகிறார்,அவரது அறிவுத்திறன் என்ன, செப்-11 ஆம் தேதி விமானம் முதல் கட்டிடத்தை இடித்தவுடன் எதுவும் செய்யாமல் அப்படியே உட்கார்ந்த வண்ணம் இருந்தபடி, குழந்தைகளுக்கு நர்சரி பாடல்கள் சொல்லித் தரும் ஒன்றும் அறியா புஷ் என்று புஷ்ஷின் முகமூடிகளை தைரியமாகக் கிழிக்கும் காட்சிகள் படத்தில் கொட்டிக் கிடக்கிறது. ‘வெச்சாக் குடுமி சரைச்சா மொட்டை ‘ என்ற ரீதியில், தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில், கண்டவர்களையும் கைது செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் போக்கையும் சாடத் தவறவில்லை. ஒரு உடற்பயிற்சி நிலையத்தில், பக்கத்தில் உள்ள நண்பரோடு அமெரிக்கர் ஒருவர், புஷ்ஷைப் பற்றி ஏதோ ‘நக்கலாய் ‘ சொல்லி வைக்க, அவரது வீட்டிற்கு FBI வந்து விசாரணை செய்வதை விவரிக்கும் போது, மைக்கேல் மூரின் நையாண்டி வசனங்கள் கலகலக்க வைக்கிறது.

அமெரிக்க வீரர்களில் ஒருவர், ‘கோரத்தை சகிக்க முடியாமல், பாடல்களைக் கேட்ட வண்ணம் தான் வெடிகுண்டெறிகிறோம். வீடியோ கேமில் மனிதர்களை சுடுவதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. மனிதர்கள் சதையும், ரத்தமுமாய் நமது கண் முன்னால் விழும் போது, மனதிற்கு கஷ்டமாய் இருக்கிறது! ‘ என்று கவலை தோய்ந்த முகத்தோடு சொல்லும் போது, அமெரிக்க வீரர்கள் சிலருக்கும் இந்தப் போரில் உடன்பாடில்லாதது தெரிய வருகிறது. மைக்கேல் என்ற இளம் வயது ராணுவ வீரர், அவரது தாய்க்கும் உறவினர்களுக்கும் எழுதிய கடிதத்தை, அவரது தாயார் கண்ணீர் மல்கப் படித்துக் காட்டுகிறார். பாசத்தோடு எழுதப்பட்டிருக்கும் சில வரிகளைப் படிக்கும் போது, அவரின் குரல் விம்முகிறது. ‘அம்மா…இந்தப் பாலைவனத்தில் நான் எதற்காக துப்பாக்கியோடு இன்னமும் நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. தயவு செய்து, அடுத்த முறை ‘புஷ் ‘ஷிற்கு வாக்களிக்காதீர்கள் ‘ என்ற வேண்டுகோளும் நடுவில் வருகிறது. இந்தக் கடிதம் வந்து சேர்ந்த சில நாட்களில், மைக்கேல் இறந்து விட்டதாய் செய்தி ராணுவத்திடம் இருந்து வந்தது என்று சொல்லும் போது, அந்தத் தாய் கதறுகிறார்.

அமெரிக்க அதிபர் புஷ்ஷால் ‘பேட்ரியாட் ஆக்ட் ‘ என்று ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அந்த சட்டத்தின் படி, தொலைபேசியை ஒட்டுக் கேட்பதில் ஆரம்பித்து, வங்கிக் கணக்கை அலசுவது வரை அரசாங்கத்திற்கு பல விஷயங்கள் தனி மனித விஷயத்தில் தலையிட முடியும் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது தனி மனித உரிமையைப் பாதிக்கிறது என்று பல குரல்கள் எழுந்த வண்ணமிருக்கின்றன. இதில் நகைச்சுவை என்னவென்றால், இந்த சட்டம் வேண்டும் என்று கையெழுத்திட்ட பலர் இந்த சட்டம் குறித்த எந்தத் தகவலையும் படிக்காமலேயே கையெழுத்திட்டுள்ளனர். மைக்கேல் மூர், அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஐஸ் விற்கும் வேனில் ஏறி, அந்த சட்டம் குறித்த தகவல்களை மைக்கின் மூலம் சத்தமாக அறிவித்தபடியே வரும் காட்சி, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

‘அமெரிக்கா போரில் இறங்க வேண்டும் ‘ என்று ஆதரவு தெரித்த 160 அரசியல்வாதிகளில் இருந்து, ஒரே ஒருவரின் மகன் (ள் ?! ?!) மட்டும் தான் ஈராக்கிற்குப் போர் நிமித்தமாக சென்றிருக்கிறார். மைக்கேல் மூர் ஒவ்வொரு செனட்டரிடமும் சென்று, ‘உங்களது மகனை நாட்டின் பாதுகாப்புக்காக போருக்கு அனுப்புவீர்களா ? ‘ என்று வழிமறித்துக் கேட்க, பலர் தலைதெறிக்க ஓடுவதும், ஒருவர் கை கூட குலுக்காமல் ஒளிந்து மறைவதும், அரசியல்வாதிகளின் சுயநலத்தை சுட்டெறிக்கிறது. இப்படியாக இன்னும் பல விஷயங்கள் ஒரு வித நையாண்டியோடும், பல சந்தர்ப்பங்களில் ஆணித்தரமாகவும் இந்தப் படத்தில் காட்சிகளோடு விவரிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் மூர் தனது சொந்தக் கருத்துக்களைத் திணிக்கிறார், இது அப்பட்டமான பொய் மூட்டை என்று ஆங்காங்கே புஷ் ஆதரவாளர்கள் குரல் கொடுத்த வண்ணம் தான் இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி..படம் சக்கை போடு போடுகிறது. என்னைப் பொறுத்தவரை, போரின் அடுத்தப் பக்கத்தைப் பற்றியோ, புஷ்ஷின் முரண்பாடுகளைக் குறித்தோ எந்த அமெரிக்க மக்கள் தொடர்பு சாதனத்திலும் வெளிவராத போது, அமெரிக்கர் ஒருவர் பல மிரட்டல்களையும், தடைகளையும் மீறி இப்படி ஒரு படத்தை எடுத்ததற்கே, பல சபாஷ்களைப் பெறுகிறார். நேற்று காலை நியூஜெர்சி எப்.எம் ரேடியோவில் கூட, ‘மைக்கேல் மூர் ஒரு 350 பவுண்டுள்ள STUPID BASTARD, அவர் கூடிய விரைவில் மாரடைப்போ அல்லது சர்க்கரை வியாதி வந்தோ இறந்து விடுவார் ‘ என்று கீழ்த்தரமாக அர்ச்சனை செய்தார்கள். புஷ் ஆதரவாளர்களால், இந்தப் படம் எழுப்பியிருக்கும் எழுச்சியையும், வசூல் ரீதியான வெற்றியையும், ஆரவாரமான வரவேற்பையும் ஜீரணிக்க முடியவில்லை. (எனது விமர்சனத்தையோ அல்லது பத்திரிக்கைகளில் திட்டி வருவதையோ பார்த்து எந்த முடிவுக்கும் வராமல், நீங்களே பார்த்து விட்டு, ஒரு முடிவுக்கு வாருங்கள். அது என்னவாக இருந்தாலும், முடிந்தால் நான்கு வரிகள் எழுதிப் போடுங்கள். இதில் ‘பார்த்து விட்டு ‘ என்பது முக்கியமான விஷயம்!)

இந்தப் படமானது ‘தீவிரவாதிகளால் பணம் கொடுக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது ‘ என்ற வதந்தியில் ஆரம்பித்து, படத்திற்கு எப்படியெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுத்தலாம் என்பது வரை…எல்லாம் முயற்சிக்கப்பட்டு, அவை தோல்வியும் அடைந்து, மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது போக, ‘அமெரிக்காவை வெறுக்கும் மைக்கேல் மூர் ‘ என்ற படம், ஒரு சிலரால போட்டிக்குத் தயாரிக்கப்பட்டு செப் 11 ஆம் தேதி அன்று வெளியிடப்பட இருக்கிறதாம். (இதற்கான வரவேற்பு, பாரன்ஹீட்டின் கால் சதவிகிதம் கூட இருக்காது என்பது எனது கணிப்பு) இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, முதல் பரிசை வென்ற போது….இருபது நிமிடம் அரங்கத்திலுள்ளவர்கள் எழுந்து நின்று கைதட்டினார்களாம். இது கேன்ஸ் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு சாதனை என்று சொல்கிறார்கள். மைக்கேல் மூர், எனும் அந்த தைரியமான கலைஞர், பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு நோய் நொடியின்றி வாழ வேண்டுமென்றும், இன்னும் பற்பல நல்ல திரைப்படங்களை எடுக்க வேண்டுமென்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

– அருண் வைத்யநாதன்

பின்குறிப்பு:- சமீபத்தில் நியூஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த பெர்க் என்ற அமெரிக்கர், ஈராக்கியர்களால் கடத்தப்பட்டுத் தலை துண்டிக்கப்பட்டது பெரும் பரபரப்புக்குள்ளானது. மைக்கேல் மூர் யதேச்சையாய் ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பேட்டி எடுக்கும் போது, பெர்க்கையும் பேட்டி எடுத்துள்ளார். ஏதோ ஒரு காரணத்தினால், படத்தில் அந்தப் பேட்டியானது இடம் பெறவில்லை. இந்த மாதிரியானதொரு தருணத்தில், படத்தின் பரபரப்புக் கருதி, மைக்கேல் மூர் நினைத்திருந்தால் அந்தப் பேட்டியை சேர்த்திருக்கலாம். ஆனால், மைக்கேல் மூர் அவ்வாறு செய்யாது, பெர்க்கின் குடும்பத்தாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘இந்தப் பேட்டி அடங்கிய காசெட்டை, பெர்க்கின் நினைவாக உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் ‘ என்று கூறிவிட்டாராம். அகமகிழ்ந்த பெர்க் குடும்பத்தினர், ‘Michael Moore is a class act! ‘ என்று பேட்டிக் கொடுத்துள்ளார்கள்.

—-

Series Navigation

அருண் வைத்தியநாதன்

அருண் வைத்தியநாதன்