சமீபத்தில் படித்தவை -3 : உமா மகேஸ்வரி , சுஜாதா, மனுஷ்ய புத்திரன் , யசுநாரி கவபத்தா, வெ சாமிநாதன் , நாஞ்சில் நாடன்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

ஜெயமோகன்


யாரும் யாருடனும் இல்லை [நாவல்]

உமா மகேஸ்வரி

தமிழினி வெளியீடு

உமாமகேஸ்வரி கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் ஏற்கனவே கவனிக்கப்பட்டவர் .அவரது முதல் நாவல் இது. இந்நாவலின் முக்கியமான சிறப்பம்சம் இது பெண்களுக்கு மட்டுமே உரிய அக, புற உலகை பெண்களின் கோணத்தில் காட்டுகிறது என்பது. முக்கியமான பலவீனம் புனைகதைகளுக்கு இன்றியமையாததான ‘ நிகழ்வுகள் பின்னி நகரும் ஓட்டம் ‘ இல்லாமல் அதிகமும் அசைவற்ற உதிரிச் சித்தரிப்புகளின் தொகையாக உள்ளது என்பது. அத்துடன் வாழ்க்கையை புனைவுலகுக்குள் ‘நிகழ்த்திக் காட்டவும் ‘ உமா மகேஸ்வரியால் இயலவில்லை. அவர் நிகழ்வுகளை அடர்த்தியாக சிறு சிறு அத்தியாங்களாகச் சொல்லிச் செல்லவே முயல்கிறார். உதாரணமாக நாவல் தொடங்கி பல பக்களுக்கு தனம் நோயுறுதல், பொன்னையாவின் பழைய கதை , அன்னம்மாவின் சமையலறை அதிகாரம் , ஊனமுற்ற சுப்பக்காவின் அவலநிலை என்ற தனித்தனிக் காட்சிகளாகவே உள்ளது. இந்த வடிவத்தின் காரணமாக நிகழ்வுகள் தாவித்தாவிச்செல்கின்றன. ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு அடுத்த நிகழ்ச்சி பல வருடங்கள் தாண்டி நிகழ்கிறது. அன்னம்மாவின் கதையே உதாரணம். ஒரு அத்தியாயத்தில் அவள் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தலைவி. அடுத்ததில் நோயாளி. நாவல் முழுக்க இந்தவகையான தர்க்கமற்ற துண்டுகள் தாவித்தாவி வருகின்றன. அவை நாவலில் உள்ள ஒரு கதைமாந்ந்தரின் பிரக்ஞையாலோ கதைசொல்லியின் சொல்லலாலோ இணைக்கப்படவில்லை.

இத்தகைய முக்கிய பலவீனங்கள் கொண்ட ஒரு படைப்பு வாசகனுக்கு ஈர்ப்பளிக்காமல் போகக் கூடும். ஆனால் இந்நாவல் மிக முக்கியமான வாசிப்பனுபவத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. தமிழிலக்கியத்தில் பலவகையிலும் மறுக்கமுடியாத இடம் கொண்ட ஆக்கம் இது. முதல்காரணம் கதாசிரியையின் வாழ்க்கைநோக்கு முதிர்ச்சியும் சமநிலையும் கொண்டதாக உள்ளது என்பதே .எந்தக் கதைமாந்தரும் மனச்சாய்வுகளுடனோ கண்டனங்களுடனோ காட்டப்படவில்லை. உக்கிரமான , கொடுமையான , மீறல்கொண்ட நிகழ்வுகள் வரும்போதுகூட அதிர்ச்சியோ கோபமோ உருவாக்கும் நோக்கம் இல்லாமல் வாழ்க்கையை விலகி நின்று நோக்கும் நடுநிலைமை வெளிப்படுகிறது. இளம் படைப்பாளிகளில் இது மிக மிக அபூர்வமானது. இரண்டாவதாக இந்நாவல் ஆணாதிக்கம் மேலோங்கிய கூட்டுக்குடும்ப அமைப்புக்குள் அடக்கப்பட்ட பெண்களின் மனங்கள் கொள்ளும் புழுங்கலை , இச்சைகளை, அதன் விளைவாக உருவாகும் பலவகையான மீறல்களையும் திரிபுகளையும் எவ்வித தயக்கமும் இன்றி சரசரவென்றுச் சொல்லிச்செல்கிறது. குறிப்பாக குணாவுக்கும் வினோதினிக்குமான ரகசிய உறவு உருவாகி வரும் விதமும் அதன் உணர்ச்சிநுட்பங்களும் நுணுக்கமாக காட்டப்படுகின்றன. இன்பம் என்று சமூகம் விதிக்கும் பாலுறவு , பிள்ளைப்பேறு , நகைகள் ஆகியவை எல்லாமே சுமையாகவும் வதையாகவும் மாறும் நிலை இயல்பாக உருவாகி வருகிறாது நாவலில். ஓயாத சமையலின் , உடல் வதைகளின் சித்திரமும் ஆசிரியை குறிப்பான கவனம் எடுத்துக் கொள்ளாமலேயே புனைவுருக்கொள்கிறது.

இந்நாவலில் உரையாடல்கள் அதிகம் இல்லை. அவை குறிப்பிடும்படி அமையவும் இல்லை. ஆனால் உணர்ச்சிகளைச் சொல்லும் நடையில் மிகுந்த கவித்துவமும் உக்கிரமும் கொண்ட வரிகள் பல உள்ளன. அவையே நாவலை உண்மையில் நம்முள் நிகழ்த்துகின்றன. பெண்களின் அகவுலகை எழுதிய ஆஷாபூர்ணாதேவியின் மகத்தான நாவல்களான ‘பிரதம பிரதிசுருதி ‘ ‘சுபர்ணலதா ‘ ஆகியவற்றை நினைவில் கிளர்த்துகிறது இந்நாவல்

====

ஸ்ரீரங்கத்துக் கதைகள் [சிறுகதைகள்]

சுஜாதா

உயிர்மைபதிப்பகம்

சுஜாதா அவரது இளமைப்பருவம் கழிந்த ஊரான ஸ்ரீரங்கத்தைப் பின்னணியாக்கி எழுதிய கதைகள் ஏற்கனவே சாவி, ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்து பரவலான வாசகக் கவனம் பெற்றவை. உயிர்மைப் பதிப்பகம் சீரான நூலாக இவற்றைத் தொகுத்துள்ளது. இளமைப்பருவத்தை எழுதும்போது எழுத்தாளர்களில் ஒரு துள்ளல் ஏற்படுவது உண்டு. குறிப்பாக அறுபதுக்குப் பிந்தைய வயதில் பல ஆசிரியர்கள் மிகுந்த ஆதுரத்துடன் இள்மைப்பருவம் நோக்கிச் செல்கிறார்கள். அந்தக் கோணம் புனைவுக்கு மிக உதவியானதும்கூட. சிறுவனாக நின்று பெரியவர்களின் உலகை வேடிக்கைபார்க்கலாம், புரிந்தும் புரியாததுமாக பெரியவர்களின் உலகில் புகுந்து வாழ்வின் விசித்திரங்களைக் காட்டலாம். அவ்வகையில் தமிழில் முதன்மையான இளமைப்பருவச் சித்தரிப்பு அசோகமித்திரனின் செகந்திராபாத் லான்சர் பாரக் சிறுகதைகள். முதியவர்களின் விசித்திர உலகுக்குள் நுழையும் சந்திரசேகரன் அடையும் தரிசனங்கள் தமிழிலக்கியத்தின் உச்சங்கள். சுந்தர ராமசாமியும் இளமைப்பருவ நினைவுகளை அடிப்படையாக்கி எழுதியிருக்கிறார். சமீபகாலமாக அவரது நாவலான குழந்தைகள் பெண்கள் ஆண்கள் மற்றும் சிறுகதைகள் இவ்வகைப்பட்டவையாக உள்ளன. சுஜாதாவின் ஸ்ரீரங்கம் கதைகள் அவ்வரிசையில் வருவது.

தமிழின் சிறந்த கதைச்சித்தரிப்பாளர்களில் ஒருவரான சுஜாதாவின் திறன் முழுக்கத்தெரியும் கதைகள் இவை. சிறு சிறு கோடுகள் மூலம் முழுக்காட்சியினையும் தீற்றிக்காட்டும் தேர்ந்த ஓவியன் போல சுஜாதா காட்சிகளையும் மனிதர்களையும் சொல்லிச்செல்கிறார்.மிகக்குறைவாகச் சொல்லப்பட்டு மிக வலுவாக உருவாகி வந்த கதாபாத்திரம் ரங்குவின் தங்கையான வத்சலாதான். துரைசாமி [ ஏறக்குறைய ஜீனியஸ்] ரா.விஜயராகவன் [ராவிரா] போன்ற விசித்திரம்தோய்ந்த கதைமாந்தரை அவர்களின் விசித்திரங்களைச் சொல்லி சித்தரிப்பது ஓரளவு எளிதென்றாலும் பெட்டிக்கடை ரங்கு ,சீனு போன்ற சாதாரணக் கதைமாந்தர்களை சிலசொற்களில் குணச்சித்திரம் விளங்கக் காட்டுவதென்பது புனைகதையாளனுக்குச் சவாலானதுதான். அதை மிக எளிதாகச் சுஜாதா நிகழ்த்தியிருக்கிறார். அதைப்போல எளிய சொற்களில் உருவாகும் காட்சிகளையும் குறிப்பாகச் சொல்லவேண்டும் . ‘கொள்ளிட ஜலக் கண்ணாடியில் நிலா தத்தளிக்க அவரை சுற்றி நாங்கள் உடகார்ந்துகொண்டோம்.. ‘ [ராவிரா] போன்ற வரிகள் அதை உருவாக்குகின்றன.

இக்கதைகளை நுட்பமும் உயிர்ப்பும் கொண்ட ஓர் உற்சாகமான உரையாடலாக எண்ணி வாசிக்கலாம். இவற்றின் இலக்கியத்தகுதி முழுக்க புனைவின் மேற்தளத்தின் சித்தரிப்பு அழகுகளில், வடிவக் கச்சிதத்தில் , கூறலின் தாவிச்செல்லும் வேகத்தில் மொழித்தொழில்நேர்த்தியில் உள்ளது .இலக்கியத்தில் இவற்றின் இடமும் முக்கியமேயாகும். ஆனால் முதல்தர இலக்கிய ஆக்கங்கள்ரைந்த மேற்தளத்திலிருந்து பலவகையான கற்பனைப்பயணங்களை வாசகனுக்குச் சாத்தியமாக்கும் மறைபிரதிகளை [sub text] கொண்டிருக்கும். சொல்லப்பட்டவை சொல்லப்படாத பலவற்றுக்கான பிரதிநிதிகளாகவே நிலைகொண்டிருக்கும். அத்தன்மை இக்கதைகளில் பொதுவாகக் காணப்படவில்லை என்றே சொல்லவேண்டும். பெரும்பாலான கதைகள் வணிகக் கதைகளுக்கே உரிய அங்கீகரிக்கப்பட்ட எளிய முடிவுகளைக் கொண்டவை. ‘ரகசியம் ‘ ‘சீனு ‘ ‘ அரசு பகுத்தறிவு சங்கம் ‘ ‘பாப்ஜி ‘ போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். ‘திண்ணா ‘ ‘ விஜிஆர் ‘ போன்ற கதைகள் நடைச்சித்திரங்கள். விதிவிலக்காக நுண்ணிய மறைபிரதி கொண்ட கதைகள் என ‘ பாதரசம் ‘ ‘என் முதல் சினிமா அனுபவம் ‘ ‘மாஞ்சு ‘ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். பாதரசம் கதையில் அந்த மோதிரத்தை நிறம் மாற்றும் ரசத்தை மனதின் நுண்ணிய ரசாயன மாற்றாங்களின் குறியீடாகக் கொண்டு வாசிக்கும் சாத்தியக்கூறை குறிப்பாகச் சொல்லலாம்.

ஆயினும் இத்தொகுதியில் முக்கியமான கதை ‘ மாஞ்சு ‘ . சுஜாதாவின் மிகச்சிறந்த ஒருசில சிறுகதைகளில் ஒன்று இது. தமிழின் சிறந்த சிறுகதைகளின் பட்டியலிலும் இதைச்சேர்க்கலாம். ஏதோ ஒருவகையில் ஜானகிராமனை நினைவுறுத்துகிறது அதன் உணர்ச்சிகளின் உலகம். ஆண்டாளின் மனதில் மூத்த மகன் அவன் தகுதியின்மை காரணமாகவே இடம் பிடித்திருக்கும் விதம் மட்டுமல்ல அவள் இளைய மகனின் மனதின் ஆற்றாமைகூட மனித மனம் இயங்கும் விதத்தின் சாத்தியங்களின் விரிவைக் காட்டுகிறது. இன்னொரு கோணத்தில் மாஞ்சு அவனது மிகவெற்றிகர அதிவேக ரஜோகுணத் தம்பிக்கு நேர் எதிர். அதை மந்தகுணம் என்றோ சத்வ குணம் என்றோ சொல்லலாம். ஆண்டாள் மனதுள் இளையவனின் வென்றடக்கும் வேகம் மீது அச்சமும் மூத்தவனின் அசைவின்மை மீது ஆழமான ஈர்ப்பும் இருந்ததா ? பல கோணங்களில் இம்மூன்று புள்ளிகளையும் இணைத்து இக்கதையை மீள மீள வாசிக்க முடியும். என் மனதில் ஏசு கூறிய ‘வழிதவறிய மைந்தன் ‘ குட்டிக்கதை மீண்டும் மீண்டும் வந்தபடி இருந்தது.

====

எப்போதும் வாழும் கோடை [ கட்டுரைகள்]

மனுஷ்யபுத்திரன்

உயிர்மை பதிப்பகம்

மனுஷ்யபுத்திரன் அவ்வப்போது எழுதிய கவிதை மதிப்புரைகளும் கவிதைகுறித்த கட்டுரைகளும் அடங்கிய சிறு தொகுப்பு இது. இதில் தன்னை ஒரு கவிதைவாசகராகவே அவர் உருவகம் செய்துள்ளார், கவிஞராக அல்ல. நவீனத் தமிழ்கவிதைகள் குறித்த மனுஷ்யபுத்திரனின் மதிப்பீடுகளில் பொதுவாக உள்ள கருத்துக்கள் என்று கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம். அ] தமிழ்க்கவிஞர்கள் கவிதைக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு மொழியில் குறிப்பிட்டவகையான படிமங்களைப் பயன்படுத்தி ஒரேவகையான வடிவில் எழுதுகிறார்கள் ஆ] அன்றாடவாழ்க்கையில் உள்ள எளிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் தமிழ்க்கவிதைகள் பேசுகின்றன இ] தமிழ்க்கவிதை புற உலகம் அற்றதாக அரசியல் உணர்வு அற்றதாக அந்தரங்கவெளிப்பாடாக மட்டும் உள்ளது ஈ] நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ் கவிதை மரபில் இருந்து இன்றைய அறிவுச்சூழலில் சிலவகையான அலங்காரங்களையும் ஒலியடுக்குகளையும் மட்டுமே பெற்றிருக்கிறது அவையே கவிதை என்ற பாமர நம்பிக்கையே உண்மையான கவிதை பரவலாக அங்கீகாரம் பெற தடையாக அமைகிறது. ‘ ‘ மொத்தத்தில் எளிய புகார்கள் எளிய வியப்புகள் எளிய துக்கங்கள் எளிய சபலங்கள் எளிய கனவுகள் எளிய துக்கங்கள் எளிய தத்துவங்கள் இவைதான் தமிழ் நவீனக்கவிதையை திரும்பத்திரும்பத் தீர்மானிக்கும் சக்திகள் ‘ [பக்16]

இந்நூலின் முதற்பகுதி பல்வேறு கவிஞர்களைப் பற்றிய மனுஷ்யபுத்திரனின் மதிப்பீடுகள். பிற்பகுதியில் கவிதைகுறித்த பொதுவான கருத்துக்கள். ஏன் நவீனக் கவிதை புரிவதில்லை என்ற கேள்வி தமிழ்ச்சமூகத்தில் கவிஞர்கள் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளவேண்டிய ஒன்று . அதற்கு விரிவான பதிலை சொல்லியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். தமிழில் அரசியல்கவிதைகள் இல்லாமலாகிவிட்ட நிலையைப்பற்றி ஆதங்கம் தெரிவிக்கிறது ஒரு கவிதை. [இக்கருத்தை 11 வருடம் முன்பு நான் ஒரு கட்டுரையில் எழுதி ஏராளமான வசைகளைப்பெற்றேன்] மனுஷ்யபுத்திரனைக்கவர்ந்த கவிஞர்களான ஆத்மாநாம் சுகுமாரன் ஆகியோரைப்பற்றிய கட்டுரைகள் இரண்டு உள்ளன. இவர்கள் இருவரின் மொழிப்பாதிப்பு அவர் கவிதைகளில் உண்டு.

கவிதைகுறித்த கறாரான பார்வையை வெளிப்படுத்தும் இக்கட்டுரைகள் கவிதைபற்றியெ பேச்சுகளே நிகழாத தமிழ்ச்சூழலில் முக்கியமானவையே. இக்கட்டுரைகளில் தெரியும் ஒரு பார்வையுடன் எனக்குள்ள முரண்பாட்டை மட்டும் சொல்லவேண்டியுள்ளது. மனுஷ்யபுத்திரனின் எதிர்பார்ப்பு பெருங்கவிஞன் , மகத்தான கவிதை என்ற அளவீடுகள் சார்ந்ததாக உள்ளது. ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளில் உலகம் முழுக்க கவிதையில் வந்துள்ள மாற்றத்தை நாம் கவனித்தால் இவ்வெதிர்பார்ப்பை சற்று மாற்றியமைக்கவேண்டும் என்று படலாம். வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகி அதன் சாரங்களுக்குள் செல்லக்கூடியவனும் , தான் வாழும் காலத்தின் மனசாட்சியின் குரலாக ஒலிப்பவனும் , தன் காலத்துக்கு அப்பால் வெகுதூரம் தள்ளி பார்க்கும் வல்லமை கொண்டவனுமாகிய பெருங்கவிஞன் ஷெல்லி ,கீட்ஸ் , விட்மான், பாரதி,தாகூர் ,குமாரன் ஆசான் காலகட்டத்துக்குப் பிறகு மெல்ல இல்லாமலாகிவருகிறான். இக்கவிஞர்கள் ஒருவகையில் தங்கள் சமூகத்தின் உணர்வுப்பூர்வமான தலைவர்கள். தத்துவவாதிகளாக, அரசியல்வாதிகளாக,ஆன்மீகவழிகாட்டிகளாக இருந்தவர்கள்.. இன்று எந்தக் கவிஞனுக்கும் இத்தைய அடைமொழிகள் பொருந்தாது. இது ஏறத்தாழ உலகம் முழுக்கவே உள்ள நிலை.

கவிதை ஓர் ஊடகவடிவம் என்ற நிலையில் அதற்கிருந்த பரவலான இடத்தை மெல்ல இழந்துவருகிறது. பாரதி கவிதையில் சொன்ன பற்பல விஷயங்களை இன்று நாம் கவிதையை கையாண்டு சொல்லமாட்டோம். ஊடகவடிவங்களின் பெருக்கமும் வளர்ச்சியும் நேற்றுவரை கவிதை கையாண்ட பல விஷயங்களை கவிதையை விட வலிமையாக சொல்லும் வாய்ப்புகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. இந்நிலையில் கவிதை ஒவ்வொரு ஊடகத்திலும் விடுபட்டுவிடும் நுண்ணிய ஆழ்தளத்தை மட்டும் நிரப்பக் கூடிய ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் எளிய தளங்களை ஆழ்ந்த உணர்வுகளுடன் பிணைக்கும் செயலைமட்டுமே அது ஏற்றெடுத்தாக வேண்டியுள்ளது. அரசியலில்கூட அரசியல் நிலைப்பாடுகளை, எதிர்ப்புகளை வெளிப்படுத்த இன்று கவிதை மூற்பட முடியாது. அரசியலின் நுண்ணிய சில தளங்களை மட்டுமே அது தொட்டுக்காட்ட இயலும். இந்நிலையில் கவிஞன் சமூகத்தின் முன் ஒரு உணர்வுபூர்வத் தலைவனாக நின்று அறைகூவமுடியவில்லை. அப்படி தன்னை கற்பனை செய்துகொள்வதே நவீனக் கவிஞனுக்கு சிரமம் அளிப்பது. அவன் தன்னை அன்னியனாக , தனியனாக, மெளனம் மூலம் சிலருடன் மட்டுமே பேசுபவனாக உருவகித்தாகவேண்டியுள்ளது. இது கவிதைகளில் வெளிபப்டுகிறது. சமீபகாலமாக கவனத்துக்கு வரும் கவிஞர்களின் ‘புழங்கிடம் ‘ மிகக் குறைவாகவே உள்ளது. ஆகவே இன்றைய மகத்தான கவிதைகூட அற்ப விஷயங்களை எளிய தளங்களைச் சார்ந்ததாக இருக்கலாம்.

இன்னொன்று எளிய கவிதைகளுக்கு இன்றைய வாழ்க்கையில் உள்ள இடம். கவிஞனாக, கவிதைக்கே என வாழ்வது பிரமிள் ,தேவதேவன் என சிலருக்கே சாத்தியமாகிறது. அதேசமயம் வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் பயணம்செய்துகொண்டு அவ்வப்போது தன் நுண்ணுணர்வை அல்லது உணர்வெழுச்சியை வெளிப்படுத்துவதற்கென மட்டுமே கவிதைக்குள் வருகிறவர்கள் ஏராளமாக உள்ளனர் . இவர்களுடைய கவிதைகளுக்கும் சமூகத்தின் கவிதைத்தளத்தில் முக்கிய இடம் உள்ளது. இவை மகத்தான கவிதைகளாக இல்லாமல்போகலாம். ஆனால் இவை மூலமே வாழ்க்கையின் பல்வேறுதளங்கள் கவிதைக்குள் வருகின்றன. கவிதை பரவலாக , ஒரு வாழ்க்கைக் கூறாக ஆகிறது. பெரிய கவிதைக்கான எதிர்பார்ப்பு இக்கவிதைகளுக்கு எதிரானதாக ஆகக் கூடாது.

====

மூங்கில் இலைப்படகுகள் [ ஜப்பானியச் சிறுகதைகள்]

யசுநாரி கவபத்தா

தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்

ஸ்னேகா பதிப்பகம்

யசுநாரி கவபத்தா தமிழில் ஓரளவு அறிமுகமான பெயர். அவரது ‘தூங்கும் அழகிகளின் இல்லம் ‘

ஏற்கனவே சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு வந்துள்ளது.[ உன்னதம் வெளியீடு] லதாராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் இந்நூல் அவர் எழுதிய உள்ளங்கை கதைகள் எனப்படும் குட்டிக்கதைகள் அடங்கியது. தமிழாக்கத்தில் இக்கதைகளைப் படிக்கையில் ஒரு பெரிய படைப்பிலக்கியவாதியைப் படிக்கும் மனவேகமும் நிறைவும் உருவாகவில்லை. பல கதைகள் மிகச்சாதாரணமானவை. ‘தங்கையின் துணிமணிகள் ‘ போல சில கதைகளே குறிப்பிடும்படியாக உள்ளன.

இதற்கான காரணமாக எனக்குப்படுவது ஒன்று மொழிபெயர்ப்பு. மூலத்தில் சிறப்பான மொழிச்சேர்க்கைகள் மூலம் இவை தங்கள் தொடர்புறுத்தலை நிகழ்த்திருக்கலாம்.— லா.ச.ராமாமிருதத்தின் கதைகள் போல. ஆங்கிலம் வழியான தமிழாக்கத்தில் அந்த அழகு முற்றாக விடுபட்டுவிடுகிறது. இரண்டாவதாக இவை உருவாக்கும் படிமங்கள் ஜப்பானிய வாழ்க்கையுடன் பிணைந்தவையாக இருக்கலாம். அவற்றை உணராதபோது கதைகள் மெளனமாகிவிடுகின்றன. வீளக்கங்கள் மூலம் தெரிந்துகொண்டாலும் அது உணர்தலாகிவிடாது.உதாரணாமாக ஒரு கதையில் ஒரு பெண்ணின் சீப்பு கீழே விழுந்து உடைவதாக வருகிறது. ஜப்பானியப் பண்பாட்டில் அது முக்கியமான படிமம், நமக்கு அல்ல.

உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் இருவகை உண்டு. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிநிதித்துவம் செய்வதன்மூலம் அப்புகழ் பெற்றவர்கள். மானுடம்தழுவிய நோக்கு மற்றும் நுண்ணுணர்வு மூலம் முக்கியத்துவம் பெற்றவர்கள். உதாரணமாக ஜேம்ஸ் ஜாய்ஸ். ஐரீஷ் பண்பாட்டில் ஊறிய யுலிஸஸ் போன்ற ஆக்கங்கள் ஐரோப்பிய மனங்களுக்கு மட்டுமே உரியவை. தல்ஸ்தோய் , தஸ்தயேவ்ஸ்கி, செகாவ், காஃப்கா, காம்யூ, ஐசக் பாஷவிஸ் சிங்கர், கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ் போன்றவர்கள் உருவாக்கும் புனைவுலகின் உணர்ச்சிகள், படிமங்கள், கூறுமுறை போன்றவற்றுக்கு ஒருவகையான மானுடப்பொதுத்தன்மை உள்ளது. இவர்களே உலகப்படைப்பாளிகள். கவபத்தா ஜப்பானியப் படைப்பாளி. ஜப்பானிய மனத்தை அறிய அவரைப் படிக்கலாம். ஆனால் நம்முடைய மனதை அறியவே நாம் தஸ்தயேவ்ஸ்கியைப் படிக்கிறோம். மலையாளாத்தில் மறைந்த விலாசினி [ எம் எஸ் மேனோன்] மூலம் ஜப்பானிய மூலத்திலிருந்தே கவபத்தாவின் ஆக்கங்கள் வெளியாகியுள்ளன . ஆங்கிலத்திலும் பேசப்பட்ட ஆக்கங்களைப் படித்திருக்கிறேன். ‘தூங்கும் அழகிகளின் இல்லம் ‘ தவிர எதுவுமே உலக அளவுக்கு முக்கியமான ஆக்கங்கள் அல்ல என்றே எனக்குப் படுகிறது.

====

என் பார்வையில் சில கதைகளும் சில நாவல்களும் [ திறனாய்வு]

வெங்கட் சாமிநாதன்

காவ்ராஜராஜன்பதிப்பகம் சென்னை

‘இவற்றை சம்பாஷணைகள் என்று சொல்லலாம். உறவுகள்,எதிர்வினைகள் என்று சொல்லலாம். ‘ என்று வெங்கட் சாமிநாதன் குறிப்பிடுகிறார். வெவ்வேறு காலகட்டங்களில் வெங்கட் சாமிநாதன் எழுதிய திறனாய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு இது. திறனாய்வின் மொழிநடை தத்துவத்தின் மொழிந்டையுடன் தொடர்புள்ள ஒன்றாகவே இருந்துவந்துள்ளது . அத்துடன் அது பேசுவது அகவயமான பேசுபொருளை என்பதனால் அதற்கு இலக்கியப் படைப்புகளுக்கு உரிய நடையின் பல சிறப்புக் கூறுகளும் உருவாகிவருகின்றன. திறனாய்வாளார்களின் இயல்புக்கு ஏற்ப அந்நடை மாறுபடும். ஆய்வுத்தன்மை மேலோங்கிய நடைகள் உண்டு. அந்தரங்க நடைகளும் உண்டு. இவற்றின் நீட்சியாகவே இன்று திறனாய்வுக்கு என்று ஒரு பொதுவான மொழிநடை உருவாகியிருக்கிறது. சாமிநாதன் அந்தநடையின் சாயலே இல்லாமல் எழுதுபவர். அவரது நடை தனக்குத்தானே பேசிக் கொள்வதுபோலவோ நெருக்கமான ஒருவருடன் அளவளாவுவது போலவோ உள்ளது.

இந்த நடைஒருவகையில் க.நா.சுவின் திறனாய்வுநடையின் அடுத்தபடியாகும். சி சு செல்லப்பாவிடம் சீட உறவு இருந்தபோதிலும்கூட திறனாய்வாளாராக வெங்கட் சாமிநாதன் க நா சுப்ரமணியத்தின் சீடரே. முற்றிலும் அந்தரங்கமான வாசிப்பனுபவங்களை சுயரசனையை மட்டுமே நம்பி திறனாய்வு செய்வது, சாதாரணமாகப் பேசுவது போல அவற்றை வெளிப்படுத்துவது, ஆராய்ந்து சொல்லுதல் மற்றும் வாதிட்டு நிறுவுதல் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதிருப்பது ஆகியவை க.நா.சுவின் இயல்புகள். இவையே வெங்கட் சாமிநாதனிலும் தொடர்கின்றன.

நேரில்பேசுவதுபோன்ற எழுத்துமூறை காரணமாக சாமிநாதனின் கட்டுரைகள் பல விஷயங்களை தொட்டுத்தொட்டு முறைமையே இல்லாமல் நகர்கின்றன. பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் கருத்துரைப்புகளாகவே நின்று விடுகின்றன. தாக்குதல்கள் சமநிலையை விட்டு மீறி பக்கவாட்டில் இஷ்டம்போல சஞ்சரிக்கின்றன. ஆகவே இக்கட்டுரைகளுக்கு கட்டுரைவடிவமேகூட அமையவில்லை. ஆனால் இத்தகைய ஓர் எழுத்துமுறை கடந்த முப்பாதண்டுகளுக்கும் மேலாக தமிழில் முக்கியமான விமரிசனக்குரலாக இருந்துவந்துள்ளது. தமிழின் ரசனையை உருவாக்குவதிலும் மதிப்பீடுகளைத் தீர்மானிப்பதிலும் பெரும்பங்காற்றியுள்ளது. அதற்கான காரணங்களும் இக்கட்டுரைகளில் உள்ளன.

முதல்காரணம் தன் ரசனையை மட்டுமே நம்பி அதன் அந்தரங்கக் குரலுக்கு செவிசாய்த்து எழுதியமைதான். சார்புகள் நம்பிக்கைகள் ஆகியவற்றை தாண்டி இப்படிச்செயல்படுவது எளிய விஷயமல்ல. இரண்டாவது விஷயம் இலக்கியம் என்பது ஒரு தொழிலோ கேளிக்கையோ அல்ல அது ஓர் சுயதேடல், தவம் என்ற உண்மையான நம்பிக்கை, அந்த நம்பிக்கையிலிருந்து எழும் தர்மாவேசம்.

வெங்கட் சாமிநாதனைப்பற்றி அவரது விமரிசனங்களால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக அவதூறை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் இடதுசாரிகள், பலவாறாக வசைபாடி வந்துள்ளனர். இக்கட்டுரைகள் அவ்வாறு பரப்பபட்டுள்ள அவதூறுச் சித்திரங்களுக்கும் சாமிநாதனுக்கும் இடையேயான தொலைவை தெளிவாகக் காட்டுபவை. சாமிநாதன் மணிக்கொடி காலகட்டத்து எழுத்தாளர்களை தூக்கிப்பிடிப்பவர் என்று சொல்லும் சிலர் உண்டு. இத்தொகைநூலில் மிக மிகக் கடுமையான கருத்து மணிக்கொடி எழுத்தாளரான ந,சிதம்பர சுப்ரமணியனின் ‘நாகமணி ‘ என்ற நாவலுக்கே அளிக்கப்பட்டுள்ளது. பிராமண எழுத்தாளர்களை சநாதனக் கூறுகளை ஆதரிப்பவர் என்று சொல்லப்பட்டதுண்டு. இக்கட்டுரைகளில் சாமிநாதன் கடந்த முப்பதாண்டுக்காலமாக பிராமண அழகியலுக்கு எதிரான குரல்களாக உயர்ந்துவரும் ஆக்கங்களை முதலில் அடையாளாம் கண்டு வரவேற்று முன்னிறுத்துபவராக தெரிகிறர். பரவலாகக் கவினிக்கப்படாத சொ தருமனின் தூர்வை, சோலை சுந்தரப்பெருமாளின் செந்நெல் ஆகிய நாவல்களைக்கூட அவரது விமரிசனம் முன்நிறுத்துகிறது. இடைவிடாது தொடரும் இந்த ரசனையின் குரலே இத்தொகுப்பின் சிறப்பம்சமாகும். கோட்பாடுகள் பல வந்து காலாவதியான இந்த கால்நூற்றாண்டில் ரசனையின் குரல் மட்டும் மழுங்காமல் நிற்கிறது.

====

நாஞ்சில்நாட்டு வெள்ளாளார் வாழ்க்கை [வரலாறு]

நாஞ்சில்நாடன்

காலச்சுவடு பதிப்பகம்

நாஞ்சில்நாடனின் இந்நூல் அவரது சாதியைப்பற்றிய ஒரு சுயவரலாறு. ஆனால் இத்தகைய ஒரு நூலில் நாம் சாதாரணமாகக் காணும் இரு கூறுகள் இதில் இல்லை. ஒன்று இது தன் சாதி குறித்த பெருமிதம் அல்லது தன்னுணர்வு எதையுமே வெளிப்படுத்தவில்லை. தன் சாதியின் வாழ்க்கைநிலைகள் பழக்கவழக்கங்கள் மனநிலைகள் ஆகியவற்றை நுட்பமாகவும் விமரிசனப்பாங்கிலும் சொல்லிச்செல்கிறார். சாதியின் மேட்டிமைப்புத்தி சோம்பல் முதல்யவற்றை சொல்லும்போது ஆழமான அங்கதக் குரல் அவரில் குடியேறிவிடுகிறது.இரண்டு வரலாற்று நூல்களுக்குரிய தகவல் அடுக்கிச்செல்லும் தன்மை இதில் இல்லை. முதல்தர புனைவிலக்கியவாதி ஒருவரின் கைகளால் எழுதப்பட்டது என்று ஒவ்வொரு வரியிலும் தெளிவாகும் ஆக்கம் இது. சரளமும் மொழிவிளையாட்டுகளும் நுட்பங்களும் கொண்ட நடையும் அங்கதமும் ஒரு புன்னகை மாறாமலேயே இதை படிக்கச்செய்கின்றன.

‘வெள்ளாளான் என்ற சொல் எந்தக்காலத்திலும் எனக்கோர் கவசமோ குண்டலமோ அல்ல. மாறாக வாகாக அடிவாங்கும் ஒரு மர்ம ஸ்தானம் ‘ என்று சொல்லும் நாஞ்சில் நாடன் தன் ஆக்கங்கள் வெள்ளாளார்களை இழிவுபடுத்துவன என்று ஒருதரப்பாலும் வெள்ளாளர்குரல் என பிறதரப்பாலும் வசைபாடப்படுவதைக் குறிப்பிட்டு ‘நீங்கள் தேடுவது யாராக இருந்தாலும் அது நான் அல்ல ‘ என்ற பிரெக்டின் வரியை முன்னுரையில் மேற்கோள்காட்டுகிறார்.

நாஞ்சில் நாடு என்று கூறப்படுவது இன்றைய குமரிமாவட்டத்தின் வடகிழக்குப்பகுதி. பழைய திருவிதாங்கூர் அரசின் ஒரு பகுதி. சங்ககாலம் முதலே இப்பெயர் உள்ளது. இதன் அமைப்பை விளக்கியபடி தொடங்கும் நாஞ்சில்நாடன் வெள்ளாளரின் வீடுகளின் அமைப்பு, ஊரின் அமைப்பு, திருமணமுறைகள், உணவுப்பழக்கங்கள், உறவுமுறைகள் , தெய்வங்கள் ஆகியவை குறித்த தகவல்களை விரிவாகச் சொல்கிறார்.பல தகவல்கள் நம்மை வியப்புக்குள் தள்ளுபவை. ‘சனிபிணம் தனிபோகாது என்பது பழமொழி. மதம் மாறியவர் இறந்துபோனபின் சவ அடக்கத்தில் -அது சனிக்கிழமை என்பதனால்- உபதேசியார் ஓதி முடித்த பிறகு அவர் மறுபுறம் பார்க்கையில் – அவர் வேண்டுமென்றேதான் வேறு புறம் பார்த்தாரோ என்னவோ- சடக்கென்று சவப்பெட்டிக்குள் உயிருள்ள சேவல்குஞ்சு ஒன்றை எறிவதை சமீபத்தில் பார்த்து வியப்படைந்தேன் . எந்த மதத்துக்குப் போனாலும் எந்த தேசத்துக்குப் போனாலும் மனம் தன் சொந்த சின்னங்களையும் பின்னங்களையும் துறப்பதில்லை போலும் ‘ என்று சொல்லும் இடம் ஓர் உதாரணம்.

நாஞ்சில்நாடனுக்கே உரிய கிராமத்து நகைச்சுவை இந்த நூலில் முக்கியமாக பல இடங்களில் வெளிப்படுகிறது.வேளாளர் மதம் மாறியபிறகும் அந்தோணிப்பிள்ளையும் மைதீண்பிள்ளையும் ஆகவே வாழ்வதை சொல்லிச்செல்லும் இடத்திலாகட்டும் , ‘குடிக்கிற தண்ணீரில் குறியை விட்டு ஆழம்பார்ப்பவன் வெள்ளாளான் ‘ என்ற பழமொழி சாதாரணமாக வந்துசெல்லும்போதாகட்டும் நம் மனம் ஒரு மலர்ச்சியை அடைகிறது. புனைகதை அளிக்கும் மலர்ச்சி அது. வரலாற்று நூலில் அது வருவது எழுத்தாளானின் சாதனையே.

—-

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்