மாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

பாவண்ணன்


கடந்த எட்டு ஆண்டுகளில் கண்ணன் எழுதிய 21 கட்டுரைகள் ( காலச்சுவடு, தினமணி, உலகத்தமிழ், திண்ணை, புதிய பார்வை ஆகிய இதழ்களில் வெளிவந்தவை ) ‘வன்முறை வாழ்க்கை ‘ என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இக்கட்டுரைகள் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் ஏழு கட்டுரைகளும் இரண்டாம் பிரிவில் ஆறு கட்டுரைகளும் மூன்றாம் பிரிவில் எட்டு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. எல்லாக் கட்டுரைகளிலும் மையமாக வெளிப்படும் கருத்தாக்கமாக நிகழ்காலத்தில் வாழ்வின்மீது படிந்துவிட்ட கரிய நிழலான வன்முறை இடம்பெற்றுள்ளது.

முதல் பகுதியில் இடம்பெற்றுள்ள ‘இஸ்லாமிய அடிப்படைவாதம் : ஒரு பார்வை ‘ மிகமுக்கியமான கட்டுரை. வலுப்பெற்று வரும் தனிமைப்படுதல் / தனிமைப்படுத்தப்படுதலிலிருந்து தமிழ்ச்சமூகத்தின் இஸ்லாமியர்கள் உதறி எழுவதும் உயிர்ப்புடன் தம் வாழ்வைக் கட்டமைத்துக்கொள்வதும் இன்றைய அவசியத் தேவை என்னும் கருத்தை கட்டுரை மையமிட்டுக் காட்டுகிறது. புறச்சூழலோ இக்குரலுக்கு ஆதரவாக இல்லை. ஒருபுறம் சுயவிமர்சனங்களற்று வளர்ந்துவரும் இஸ்லாமியச் சமூகம். மறுபுறம் கட்டுப்பாடுகளற்று அச்ச்முகத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்படும் இந்துத்துவ வன்முறை. இந்துத்துவ எதிர்ப்பு என்னும் போர்வையில் இஸ்லாமியர்களுக்கு இடையே உருவான பல தவறான மனநிலைகள். மனநிலையின் பாதக அம்சங்களைச் சுட்டிக்காட்டுபவர்களை இந்துத்துவ வெறியாளர்களாகக் கருதப்படும் ஆபத்து. இயலாத நெருக்கடியான சூழலில் ஒரு கப்பல் மூழ்குவதைப்போல நேருக்குநேராக தேசமெங்கும் நிகழும் வன்முறை வெறியாட்டங்களின் விளைவுகளைக் கண்ட பதற்றத்துடன் கட்டுரையின் வரிகளை எழுதிச் செல்கிறார் கண்ணன். தொடக்கத்தில் இந்து அமைப்புகளும் கட்சிகளும் இஸ்லாமியர்கள்மீது நடத்திவரும் தாக்குதல்களை எதிர்த்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இயங்குவதற்கும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை ஆதரிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளைப் பல எடுத்துக்காட்டுகள் மூலம் நிறுவுகிறார் கண்ணன். பிறகு, அஸ்கர் அலி எஞ்சினீயரின் கருத்துகள் இயங்கும் திசை அடையாளப்படுத்தப்படுகிறது. ‘தமிழ்ச்சூழலில் முஸ்லிம்கள் தம் தற்காப்புக்கு என்ன செய்வது ? ‘ என்ற தலைப்பிலும் ‘எதிர்த்தாக்குதலின் அரசியல் ‘ என்னும் தலைப்பிலும் ஷாஜஹான் என்பவர் எழுதிய கட்டுரைகளில் இயங்கும் பிழையான தூண்டுதல் அம்சங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இஸ்லாமியச் சமூகமும் இந்தியச் சிந்தனையாளர்களின் சமூகமும் எதைச் சார்ந்து இயங்கவேண்டும் என்னும் முடிவை வாசகர்களின் விருப்பத்துக்கு விட்டபிறகு கட்டுரை நிறைவெய்துகிறது.

முதல் பகுதியில் மற்றொரு முக்கியமான கட்டுரை ‘குஜராத் மகாமசானம் : திராவிடக் கட்சிகள் எதிர்வினை ‘. நம் தமிழக அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள் இக்கட்டுரையில் அம்பலப்படுத்தப் படுகின்றன. கட்டுரையின் தொடக்கம் ஒரு கருத்தாக்கத்தை நம் பார்வைக்கு வைப்பதன் வழியாக அமைகிறது. ‘இஸ்லாமியர்கள் வாக்குவங்கி என்பது மிகமுக்கியமான அம்சம். மாநிலக் கட்சிகள் இந்த வாக்குகளுக்காவது அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும். கடும் அரசியல் போட்டி காரணமாக தமிழகத்திலும் கேரளத்திலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. ‘ இதுதான் அக்கருத்தாக்கம். இக்கருத்தாக்கத்தின் தோற்றத்துக்கும் தமிழகத்தின் உண்மை நிலைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பதிவு செய்கிறது கண்ணனின் கட்டுரை. இஸ்லாமியர்களின் ஆதரவை நாடும் எக்கட்சியும் தமிழகத்தில் இல்லை என்பது நிச்சயமாக அரசியலில் ஆபத்தான ஒரு நிலையைச் சுட்டும் செய்தியாகும். அதுமட்டுமல்ல, தலித்துகளின் ஆரவை விரும்பும் எந்தக் கட்சியும்கூட இன்று தமிழகத்தில் இல்லை என்பதையும் இத்துடன் சேர்த்துப் பார்க்கவேண்டும். ( பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை அமைப்பதில் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் குழம்பிக்கொண்டிருந்த தருணத்தில் வேட்பாளர்கள் யாரென்று தெரியாத சூழலிலேயே தமிழகத்தில் மட்டுமே அணிகளுடன் களத்தில் இறங்கிய தமிழகக் கட்சிகள் தம்முடன் தலித் கட்சிகளை இணைத்துக்கொள்ளவில்லை.) தலித்துகளும் முஸ்லிம்களும் இந்தக் கட்சிகளுக்குத் தேவைப்படாதவர்களாக / அந்நியப்பட்டவர்களாக ஏன் கருதப்பட்டார்கள் என்பது மிகமுக்கியமான அரசியல் கேள்வி. அமெரிக்காவின் ஒடுக்குமுறையைப்பற்றிய பார்வைகளை விரிவான விவாதத்துக்கு உட்படுத்தும் கட்டுரை ‘பயங்கரவாதத்தின் கனிகள் ‘.

இரண்டாம் பகுதியில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளில் முக்கியமானது ‘ஒரு அரசியல் பயணம் ‘. உள்ளூர் தாதா முன்னின்று நிகழ்த்தும் பேரணியால் விற்பனை மையத்தின் கண்ணாடி உடைந்துபோன செய்தியிலிருந்து தொடங்குகிறது இக்கட்டுரை. தாதாவின் பெயரை வெளிப்படையாகச் சொல்ல இயலாததால் இடுகுறிப்பெயராக மா.சு. என்று சுட்டிக்காட்டப்படுகிறது. பிறகு அந்த வட்டாரத்தில் மா.சு.வின் தோற்றமும் வளர்ச்சியும் எவ்விதம் நிகழ்ந்தன என்பதையும் செல்வமும் செல்வாக்கும் எவ்விதம் வளர்ந்தன என்பதையும் புனைகதைக்குரிய உத்திகளோடு அழகாகச் சொல்கிறார் கண்ணன். கட்டுரையின் முடிவில் அவருக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் அதற்கான குணங்கள் அவரிடம் முழுக்கமுழுக்க உள்ளதாகவும் சொல்கிறார். சமூகவியலின் அடிப்படையில் இத்தகு விளைவுகளுக்கான மூலகாரணங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஜனநாயகமயமாதலால் உருவாகும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து, செழுமைப்படுத்தி வனைக்கும் ஆற்றல் நம்முடைய ஆளும் வர்க்கத்திடம் இல்லையென்றும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று அரசியலில் பெரிய அளவில் ஈடுபாடு எதுவும் இல்லையென்றும் சமூகப்பொறுப்பற்ற சுயநல சக்திகளின் ஆதிக்கமே அரசியல் களத்தில் நிலவுகிறது என்றும் கவலையுடன் சொல்கிறார். தொடர்ந்து இந்த ஆதிக்கத்தைப் புதிய அடிமட்டத்திலிருந்து உருவாகி வரும் தலைவர்களால் எந்த அளவுக்கு மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தி இயங்கமுடியும் என்பது வருங்காலத்தில்தான் தெரியும் என்றும் சொல்கிறார். ‘ஒடுக்குமுறையின் அரங்கேற்றம் ‘ கட்டுரையிலும் ஏறத்தாழ இதே தொனிதான் வெளிப்பட்டிருக்கிறது.

இந்தத் தொனிக்கும் இதே பகுதியில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு கட்டுரையான ‘பொதுவாழ்வும் பொறுக்கிகளும் ‘ என்ற கட்டுரைக்கும் ஒரு தொடர்பு இருப்பதை வாசிக்கும்போது கண்டுகொள்ள முடிகிறது. தினமணி நாளிதழில் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘மூன்றாவது புதுவெள்ளம் ‘ என்னும் கட்டுரையின் சாரமும் சமூகப் பொறுப்பற்ற சுயநல சக்திகளின் ஆதிக்கமே அரசியல் களத்தில் நிலவுகிறது என்னும் கண்ணனின் கவலையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகவே தோன்றுகின்றன. இதனால் ஜெயமோகனின் சாரத்தைக் கட்டுடைக்க முற்படும் தர்க்க முயற்சிகள் செயற்கையான வாத முயற்சிகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. ஜெயமோகனின் கட்டுரை பொதுவாழ்வில் எவ்விதமான லட்சியமும் அக்கறையும் அற்ற சுயநல சக்திகள் ரஜினியை முன்னிலைப்படுத்தி வெள்ளமெனப் பெருக்கெடுக்கக்கூடும் என்று சொல்லும்போது கண்ணன் தீட்டிக்காட்டும் சித்திரம் ரஜினியை முன்னிலைப்படுத்தாமலேயே அத்தகு சக்திகள் பெருக்கெடுத்து நிரம்பிவிட்டதைச் சாட்சிப்படுத்துகிறது.

மூன்றாம் பகுதியில் இடம்பெற்றுள்ள ‘தமிழ் அடையாளத்தின் புதிய பரிமாணம் ‘ கட்டுரையும் ‘இலங்கை : அழிவும் உயிர்ப்பும் ‘ கட்டுரையும் மிக முக்கியமானவை. அடுத்த தலைமுறையினரிடம் தமிழையும் பண்பாட்டினையும் புகட்டிவிட முனையும் புலம்பெயர்ந்த தமிழர்களின் முயற்சிகளையும் விளைவுகளை பரிவுடன் பேசுகிறது ‘தமிழ் அடையாளத்தின் புதிய பரிணாமம் ‘ கட்டுரை. இலங்கையின் அழிவையும் உயிர்ப்பபையும் பேசும் கட்டுரையின் இறுதியில் இடம்பெறும் சிறுபான்மை ஆதிக்கம் பற்றிய பயம் எவ்வாறு பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு இலங்கை ஓர் எடுத்துக்காட்டு என்னும் குறிப்பு சிந்தனையைத் துாண்டுவதாக உள்ளது. இந்தியச் சூழலிலும் இதைப் பல்வேறு தளங்களில் இக்கருத்தைப் பொருத்தி நம்மால் அதன் விளைவுகளை யோசிக்கமுடியும். மாபெரும் வெற்றிகளைக் குவித்த ஒன்றாக மானுடக் கலாச்சாரத்தை வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஆனாலும் மனிதனுக்கு எதிராக மனிதனையே கலாச்சாரம் நிறுத்திய அவலம் மிகவும் கொடுமையான காட்சி. இஸ்லாம் அடிப்படைவாதம் முதல் இலங்கை இனவாதம் வரை உலகெங்கும் பரவியிருக்கிற பயங்கரவாதம் நிகழ்த்திக் காட்டும் வன்முறையில் மீண்டும் மீண்டும் இந்தக் காட்சியே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்தத் தளையிலிருந்து நம்மையும் நம் சூழலையும் விடுவித்துக்கொள்ளும் வழிமுறைகளைப்பற்றி எண்ணுவதற்குத் தூண்டுகோலாக கண்ணனின் நுால் அமைந்துள்ளது.

(வன்முறை வாழ்க்கை- கண்ணன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில் 629 001. விலை ரூ60)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்