சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

ஜெயமோகன்


1] காலச்சுமை – ராஜ் கெளதமன்

[தமிழினி பதிப்பகம் சென்னை]

சிலுவைராஜ் சரித்திரம் சுயகதை நாவலுக்கு அடுத்த பகுதியாக ராஜ்கெளதமன் எழுதிய இந்நாவல் முதல் நாவலைப்போலவே சரளமான வாசிப்புத்தன்மையும் அந்தரங்கசுத்தியின் ஒளிகொண்ட கூறுமுறையும் கொண்ட முக்கியமான ஆக்கம். சிலுவைராஜ் கல்லூரி ஆசிரியராகி மணமாகி குழந்தைபெற்று பெண்ணுக்கு மணமுடித்து அனுப்பி தன் அலைச்சல்கள் ஒடுங்கி தன்னுள் நிறைய முயல்வதுவரை வரும் கதை. இந்தியமொழிகளில் தலித் இலக்கியம் உருவானபோது முக்கியத்துவம் பெற்றவடிவம் தன்வரலாறுதான். தயாபாவார்[ மராட்டி] சித்தலிங்கய்யா [கன்னடம்] ஆகியோரின் தன்வரலாறுகள் புகழ்பெற்றவை . ஊரும் சேரியும் என்ற தலைப்பின் பாவண்ணன் மொழிபெயர்ப்பில் சித்தலிங்கய்யாவின் தன்வரலாறு தமிழில் வெளிவந்துள்ளது. இவ்வருடம் மட்டும் தமிழில் தலித் தன்வரலாறுகள் என்று சொல்லத்தக்க இரு நூல்கள் வந்துள்ளன. ஜானு [ தொகுப்பு .பாஸ்கரன் மொழியாக்கம் எம் எஸ். காலச்சுவடு பதிப்பகம்] சூதான் -எச்சில் [ ஓம்பிரகாஷ் வான்மீகி தமிழாக்கம் வெ கோவிந்தசாமி . விடியல் பதிப்பகம் ] ராஜ்கெளதமனின் தங்கை பாமா எழுதிய கருக்கு தன்வரலாற்றுத்தன்மை கொண்ட நாவல்.

இவற்றிலிருந்து முக்கியமான ஒரு வேறுபாட்டை ராஜ்கெளதமனின் இந்நாவல்கள் கொண்டுள்ளன. அறச்சீற்றம் , தன்னிரக்கம், அடையாளச்சிக்கல் ஆகிய தலித் பிரச்சினைகளைப் பேசும்போதே தீவிரமான ஒரு சுயவிமரிசனப் பண்பும் எள்ளலும் இவற்றில் வெளிப்படுகிறது. தன்னை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக தன்னை அவிழ்த்துப் பார்க்க யத்தனிக்கும் நூல்கள் இவை. தன் உளச்சிக்கல்கள் அடையாளச்சிக்கல்கள் தவறுகள் பிழைகள் எதையுமே ஆசிரியர் மறைக்க முயலவில்லை. அரசு வேலையில் நுழைந்ததுமே சிலுவை தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையை நுகரவே முயல்கிறார். அதில் திளைக்கிறார். தன் கடந்தகால வாழ்விலிருந்து துண்டித்துக் கொள்ளவே விழைகிறார்.

நாவல் முழுக்க சமகாலத்துச் சூழல் தலித்துக்களுக்கு அளிக்கும் ஆழமான சங்கடங்களும் கசப்புகளும் ‘போகிறபோக்கில் ‘ சொல்லிச் செல்லப்படுகின்றன. புனைவுச்சாயலே இல்லாத வாழ்வனுபவங்களாக வை இருப்பதனால் அவை அளிக்கும் அனுபவம் நேரடியானதாக மனதைப் பாதிக்கிறது. இரு இடங்கள் அந்த சாதாரணத்தன்மையைத்தாண்டி உக்கிரமாக உள்ளன. சிலுவையின் மகள் பத்தாம்வகுப்புவரை தன் சாதி என்ன என்றே அறியாமல் வளர்ந்துவிட்டு பத்தாம் வகுப்பில் சான்றிதழில் பதிவுசெய்யும்போது பறையர் என அறிய நேரும்போது கொள்ளும் அதிர்ச்சியும் அழுகையும் ஆழமாக மனதைப் பாதிப்பவை. ஒரு சிறுமனம் நூற்றாண்டுகளின் பாரத்தை உணரும் இடம் அது. தந்தை இட ஒதுக்கீடு அளிக்கும் நல்வாய்ப்புகள் பற்றி சொல்வதைகேட்டு தன்னை பறையர் என குறிப்பிட அனுமதிக்கும் அவள் மாநிலத்திலேயே இரண்டாமிடம் பெற்று தேறி வரலாறு தன்மீதுவிடுக்கும் சவாலை எதிர்கொள்வது அடுத்த இடம் . இவ்விரு இடங்களுக்கும் நடுவே இன்னொரு மகத்தான நாவல் ஒளிந்துள்ளது.

தன் இரண்டாம் மகளின் மரணத்தை தொடர்ந்து சிலுவை அடையும் ஆழமான உளநெருக்கடியும் துயரமும் தனிமையும் நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளமையாலேயே மனதைப் பாதிக்கின்றன. அம்மகள் இறப்பதை பலவருடம் முன்பே சோதிடர் சொல்லியிருப்பதை நாத்திகனான சிலுவை நினைவுறும் இடம் வாழ்வின் முடிவுறா விந்தைகளை சுட்டுவது.

இந்திய தலித் தன்வரலாறு நூல்களில் இவ்விரு நூல்களும் முதலிடம் பெறுகின்றன என்று நான் எண்ணுகிறேன். பாவனைகளும் மிகைகளும் இல்லாத நேரடித்தன்மைமூலம் அடையபப்டுவது இதன் வெற்றி

====

இரவு

எல்லி வீசல்

தமிழாக்கம் ரவி இளங்கோவன்

தமிழினி பதிப்பகம் சென்னை

ஹிட்லரின் நாஜி வதைமுகாமில் வாழ்ந்து மீள நேர்ந்த எல்லி வீசலின் நேரடியான எளிமையான நெஞ்சை உலுக்கும் தன்வரலாறு இது . சரளமாக ரவி இளங்கோவன் மொழியாக்கம் செய்திருக்கிறார். மனித மனம் எந்த உச்சத்துக்கு செல்லக்கூடுவது என்பதைக் காட்டும் மகத்தான படைப்புகள் உண்டு. அது எந்த எல்லைவரை கீழிறங்கக் கூடியது என்பதைக் காட்டும் பெரும் ஆக்கம் இது. மனித மனத்தின் பல அடிப்படை இயல்புகளை நெருக்கடிகளில் அது நடந்துகொள்ளும் முறையைக் காட்டுவதன் மூலம் குறிப்புணர்த்துகிறது . நாஜி வதைமுகாம் செய்திகள் வந்து சேர்ந்தபோது யூதர்கள் அவற்றை நம்பவில்லை. வேண்டுமென்றே நம்ப மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வின்ப் சக்கரத்தை மாற்றிச் சுழற்ற விரும்பவில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை எல்லா நிலையிலும் எப்படியோ உருவாக்கிக் கொள்கிறார்கள். பிற உறவுகள் அனைத்துமே அழிந்துபோகும் உச்ச நெருக்கடிகளில் உதிர உறவுகள் மட்டுமே ஓரளவாவது எஞ்சுகின்றன. தாக்குப்பிடிப்பதற்கான மனித எல்லை என்ன என்பதைக் காட்டுவது இந்த மானுட ஆவணம். கடவுளின் மரணத்தை எல்லி ‘நேரடியாகக் ‘ காணும் இடம் உக்கிரமானது.

வதைமுகாமில் உணவை வீசி எறிந்து கைதிகள் அவற்றுக்காக அடித்துக் கொண்டு உயிரிழப்பதை கண்டு ரசிக்கிறார்கள் நாஜிகள். விடுதலையான பிறகு சுற்றுலாபோகும் எல்லி அமெரிக்கப் பெண்பயணி ஏழைச்சிறுவர்களுக்கு காசுகள் போட்டு அவர்கள் அவற்றுக்காக அடித்துக் கொள்வதைக் கண்டு ரசிக்கிறாள். அவளிடம் காசுபோடாதே என்று கண்ணீஇர் மல்க மன்றாடும் எல்லியிடம் ‘எனக்கு தானம் செய்வது பிடிக்கும் ‘ என்கிறாள் அவள். சமீபத்திய லக்னோ ‘விபத்து ‘ மனதில் எழுந்தது. வதைமுகாம்களை ஜெர்மானியர் நிறுவியிருக்கலாம். அப்படி வரலாற்றுச் சந்தர்ப்பங்கள் அமைந்தன ,அவ்வளவுதான். அவற்றை நிறுவுவதற்கான அனைத்து அடிப்படை தீமைகளும் நாம் அனைவரிடமும் உள்ளன

====

பெயரற்ற யாத்ரீகன்

ஜென் கவிதைகள்

தமிழாக்கம் யுவன் சந்திரசேகர்

உயிர்மை பதிப்பகம் சென்னை

கன்பூஷிய மதத்தின் வெளிப்பாடாக அமைந்த மகத்தான சீன மரபின் நீட்சியே ஜென் மரபாகும் . சீன மரபின் அனைத்து சிறப்புக் கூறுகளையும் நாம் ஜென் கவிதைகளில் காணலாம். முக்கியமாக அடர்த்தி மிக்க மெளனம் கொண்ட குறைந்த சொற்கள் மூலம் குறிப்புணர்த்தி நிற்கும் தன்மை மற்றும் இயற்கையை முன்னிலைபப்டுத்தி வாழ்க்கையைப் பேசும் தன்மை ஆகியவை. அடிப்படையில் இவ்வியல்புகள் அனைத்துமே சீனப் பண்பாட்டை, குறிப்பாக கன்பூஷியத்தை , சர்ந்தவையே. ஜென் மரபு பெளத்தம் என்று சொல்லப்பட்டாலும் அதன் மையக்கூறுகள் இந்திய பெளத்தம் சார்ந்தவையல்ல. இந்திய பெளத்தம் தர்க்கத்தை முக்கியப்படுத்திய ஒருவகையான தத்துவநிலைபாடாகவே இருந்துள்ளது . அதன் இலக்கியங்களில் இயற்கைக்கு முக்கிய இடம் இல்லை. தத்துவார்த்தமாகப் பார்த்தால்கூட அது இயற்கையை நிராகரித்து வெறுவெளிையை [சூனியம்] அறிவகத்தை [ விக்ஞானம் ] முன்வைப்பதாகவே இருந்தது . ஜென் சீனப் பெருமரபின் இறுதி வெளிச்சம் அல்லது தூறல்.

ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் அதன் மூலம் ஆங்கிலத்துக்கும் ஏற்பட்ட வரலாறுசார்ந்த உறவின் காரணமாக ஐம்பதுவருடம் முன்னரே ஜென் ஐரோப்பியர் பார்வைக்கு வந்து அவர்கள் வழியாக நமது கவனத்துக்கும் வந்தது .உலகம் முழுக்க நவீனக் கவிதையை ஜென்கவிதைகள் நேரடியாக பாதித்தன. சொல்லாமல் உணர்த்தும் கலையை, இயற்கையை படிமங்களாக்கும் கலையை கற்பிப்பதில் ஜென் கவிதைகளுக்குச் சமானமான மேலை கவிமரபு இல்லை.

தமிழில் ஜென் கவிதைகளை மொழிபெயர்க்க முதன்மைத் தகுதி கொண்டவர் யுவன் சந்திரசேகர். அம்மரபின் தத்துவம் மீதான ஆழமான பலகால ஈடுபாடு அவருக்கு உண்டு. அம்மரபின் மெளனம் மிக்க சொல்நுட்பத்தை தன் கவிதைகளில் தானும் பயில்பவர்.இசைமூலம் வெகுதூரம் செல்லத்தக்க மனம் கொண்டவர் ஆகவேஒரு ஜென் குருவின் காலடியில் அமரும் தகுதிகள் கொண்டவர். ஆனால் யுவனின் சொந்தக் கவிதைகளில் ஜென் கவிதைகளில் உள்ள இயற்கைவெளிப்பாடு இல்லை என்பது ஆர்வமூட்டும் முரண்பாடுதான்.

ஏறத்தாழ் இருநூறு ஜென் கவிதைகள் கொண்ட இந்த பெருந்தொகை இவ்வகையில் முதல் முயற்சி. ஜென் கவிதைகளின் மெளனம் சற்றும் சிதறாமல் மொழியாக்கம் செய்துள்ள யுவன் சந்திரசேகர் பனித்துளியை அதே வானத்து ஒளியுடன் கையிலேந்தும் கலையை நிகழ்த்தியிருக்கிறார். தமிழில் கவிதை மொழியாக்கத்தில் நிகழ்ந்த சாதனைகளுள் இதுவும் ஒன்று.

மொழியாக்கம் மூலத்தின் அடர்த்தியையும் மெளனத்தையும் இழக்காமலேயே தமிழ் வாய்மொழியின் அன்றாடத்தன்மையை அடைந்திருக்கிறது.

‘எதிரொலியின் சத்தத்தை பேசுவது யாராம் ?

கண்ணாடியில் பிம்பத்தை தீட்டுவது யாராம் ? ‘

என்றவரியில் உள்ள மென்மையான கொஞ்சல் தமிழுக்கே உரியது, மூலத்தில் உள்ள மென்மையின் வளர்ச்சிநிலை அது. பல இடங்களில் சொற்றொடர்களை முறித்து அடுக்குவதில் சிறு சுதந்திரங்களை எடுத்துக் கொண்டு நுண்ணிய விளைவுகளை உருவாக்குகிறார்.

‘நதியோட்டத்தில்

மிதந்துசெல்லும் கிளையில்

பாடிக் கொண்

டிருக்கின்றன

புச்சிகள் இன்னமும் ‘

என்றவரிகளில் பாடிக்கொண்டிருக்கின்றன என்று ஒற்றைவரியாக இருந்திருந்தால் ஒரு காட்சியாக ஒரு துளி நிகழ்வாக அது நம் மனதில் பதிந்திருக்கும் . அச்சொற்றொடரை முறித்ததன் மூலம் அதை ஒரு தொடர் நிகழ்வாக நமக்குக் காட்ட முடிந்துள்ளது.

இக்கவிதைகள் நம்முள் மீட்டும் மெளனம் குறித்து ஜென் கவிதைகளின் பொதுதத்துவத்தின் பின் புலத்தில் விளக்கும் எம் யுவனின் அழகிய முன்னுரை முக்கியமான ஒன்று. ஜப்பானியர் வரைந்த பிறகு ஓவியங்களை கழுவி உலர்த்தி நிறங்களை மென்மையும் ஒளியும் கொண்டவையாக ஆக்குவதை ஊட்டியில் கண்டிருக்கிறேன். அத்தகைய கழுவிய நிறத்தில் நூலின் அட்டையை அமைத்திருப்பதிலும் , முதல்பாதம் பதிக்க முற்படும் கன்றின் ஓவியத்தை அட்டைக்கு தெரிவுசெய்திருப்பதிலும் உள்ள கவனம் வாழ்த்துகளுக்கு உரியது.

====

தென்குமரியின் கதை [வரலாறு]

அ.கா.பெருமாள்

தமிழினி பதிப்பகம் சென்னை

டாக்டர் அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல் குமரிமாவட்ட வரலாறை விரிவாக எடுத்துக்கூறும் முழுமையான நூல். சங்ககாலம் முதல் தொடங்கி சுதந்திரப்போராட்டம் வரை வருகிறது இதன் எல்லை. ஆய் மன்னர்களின் கல்வெட்டுகளிலும் சிதறால் குறத்தியறையாரின் சமண சாசனத்திலும் தொடங்கும் கதை நேசமணி தலைமையில் குமரிமாவட்டம் உருவாகி தமிழகத்துடன் இணைந்த காலத்துமுக்கியநிகழ்வுகள் வரை வந்து நிறவுபெறுகிறது. அ.கா. பெருமாளுக்கு சாதகமாக அமையும் கூறுகள் இரண்டு. ஒன்று வெகுகாலம் முன்னரே கிறித்தவ மதபோதகர்கள் வந்து காலூன்றிய பகுதி இது என்பதனால் வரலாறு பதிவுசெய்யப்படுதல் இங்கே முன்னரே தொடங்கிவிட்டது. இரண்டு கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, கெ. கெ.பிள்ளை, கெ. என். சிவராஜ பிள்ளை போன்ற முக்கியமான வரலாற்றாய்வாளர்களால் குமரிமாவட்ட வரலாறு ஏற்கனவே பல வகைகளில் ஆராயப்பட்டுவிட்டது.

அ.கா.பெருமாள் அவர்களின் பங்களிப்பு இரு முனைகளில் உள்ளது. ஒன்று சின்னஞ்சிறு தகவல்களையெல்லாம் தொகுத்து வரலாற்றின் உள்ளறைகளை ஆராய அவர் முயல்கிறார். உதாரணமாக குமரிமாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் கணக்குகள், அவை தோண்டப்பட்ட வருடங்கள், அவற்றை தோண்டியவர்கள் குறித்த தகவல்கள் வரலாற்றுக்கு அளிக்கும் நுட்பமான பங்களிப்பை குறிப்பிடலாம். இரண்டு அ.கா.பெருமாள் அடிப்படையில் ஓர் நாட்டாரியலாளர் என்பதனால் நாட்டாரியல் தகவல்களை வரலாற்றாய்வுக்கு பலவகைகளிலும் பயன்படுத்துகிறார். உதாரணமாக மார்த்தாண்டவர்ம எட்டுவீட்டுப் பிள்ளைகளின் குடும்பப் பெண்களை மீனவர்களுக்கு கொடுத்தமை குறித்து கிடைக்கும் ஒரே தகவல் நாட்டார் பாடல்களில்தான் உள்ளது.

இவ்விரு கூறுகளின் விளைவாக இது ஒருவகை மாற்று வரலாறாக உள்ளது. இந்திய வரலாறு தமிழ் வரலாறு என்றெல்லாம் எழுதப்படும் பெருவரலாறுகள் பொதுவான போக்குகளை முதன்மைப்படுத்தி அவற்றின் அடிப்படையில் வரலாற்றை எழுத முற்படுகையில் இவ்வகை வரலாறு சிறிய , உள்ளூர்த் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு வரலாறை உருவாக்குகின்றன.ஈரு வரலாறுகளுக்கும் பாடங்களே மாறுபடுகின்றன. உதாரணமாக பெருவரலாறில் நாயக்க மன்னர்கள் பெரும் கோயில்களைக் கட்டிய பேரரசர்களாக வருகிறார்கள். இவ்வரலாறில் அவர்கள் ஈவிரக்கமின்றி கொள்ளையடிக்கும் ராணுவத்தலைவர்களாக வருகின்றனர். நாட்டார் பாடல்களில் வடுகர்கள் எவ்வகையான வெறுப்புடன் சித்தரிக்கபட்டுள்ளனர் என்பதை பெருமாள் விரிவாக விளக்குகிறார். பெருவரலாறு மன்னர்களின் வரலாறாக இருகையில் இது மக்கள்வாழ்க்கையின் வரலாறாக உள்ளது

அ.கா. பெருமாளின் இந்நூல் ஆய்வாளர்களுக்கு மேல்செல்ல பலவகையான தொடக்கப்புள்ளிகள் கொண்டது. குமரிமாவட்டத்தில் குறவர்கள் , பரதவர்கள் ஆட்சியாளர்களாக இருந்த செய்தியை இதில் காண்கிறோம். சாதிகள் சாதாரணமாக கலக்கின்றன, மறைகின்றன. உதாரணமாக சோழனின் கைக்கோளப்படையாக இருந்த முதலியார்கள் அகதிகளாக குமரிமாவட்டத்துக்கு வந்து தொழில்தேடி நெசவாளர்களாக ஆனபோது சாதியில் தாழ்ந்த நெசவாளர்பிரிவாக மாறினார்கள் என்று காண்கிறோம். இன்னொரு ஆர்வமூட்டும் தகவல், தலித்துக்களை மட்டுமல்ல நாயர்களையும் வேளாளர்களையும் கூட அன்று அடிமைகளாக விற்று வாங்கியுள்ளனர் என்பதற்கான ஆவணச்சான்று. இவர்கள் புழுக்க வேளாளர் புழுக்கநாயர் என்று தனிப்பிரிவாக மாறுகின்றனர். விசித்திரமான பற்பல சான்ருகள் பக்கம்தோரும் வந்தபடியே உள்ளன. தமிழக வரலாற்றையே வேறு கோணத்தில் பார்க்க இது உதவும்.

இவ்வாறு வட்டார வரலாறுகள் விரிவாக எழுதப்பட்டு அவற்றின் தொகுப்பாக தமிழக , இந்திய வரலாறு உருவாக்கப்படுமென்றால் உருவாகும் சித்திரமே வேறாக இருக்கும். இன்றைய அவசிய தேவை அது. அவ்வகையில் இது ஒரு முன்னோடி முயற்சி.

====

சிற்றகல்

சிறுபத்திரிகை கவிதைத் தொகுப்பு

தொகுப்பு பூமா ஈஸ்வரமூர்த்தி லதா ராமகிருஷ்ணன்

அருந்ததி நிலையம் வெளியீடு

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் எழுதப்படும் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்துப் பார்க்க வசதியான தொகுப்பு. ந/ பிச்சமூர்த்தி, மயன்[ க.நா.சு] முதலிய முதல் தலைமுறை புத்துகவிஞர்களும் அசதா அமிர்தம் சூர்யா போன்ற நான்காம் தலைமுறை இளைய கவிஞர்களும் இடம்பெறும் விரிவான தொகுப்பு . தொகுப்பில் தொகுப்பாளர்களின் கடுமையான உழைப்பு தெரிகிறது. ஆனால் தமிழ்க் கவிதை இன்று எப்படி ஒரு வெற்றுக் கைப்பழக்கமாக பெரும்பாலானவர்களிடம் உள்ளது என்ற மனப்பதிவையே இது உண்மையில் உருவாக்குகிறது. தேவதேவன் போன்ற தீவிரமான கவிஞர்கள் [அவரது ஒரு கவிதைதான் உள்ளது] எழுதும் சூழலிலேயே கவிதையே அல்லாத வெற்று வரிகளை மடித்துப்போடுபவர்களும் மண்டியிருக்கிறார்கள். இத்தொகுப்பில் உள்ள பெயர்களில் முக்கால்வாசிபேரை கழித்துவ்ட்டால்தான் நாம் கவிதையைப்பற்றியே பேசமுடியும். என்ன நடக்கிறது இங்கே என்று காட்டும் ஒரு ஆவணம் எனலாம். அதற்குமேல் ஒன்றுமில்லை இத்தொகுப்பு.

====

ஆயிரம் சிறகுள்ள மோகம் [திரைக்கதை]

[டேஞ்சரஸ் லையஸன்ஸ்]

ரோஜர் வாடிம்

தமிழாக்கம் ரவி இளங்கோவன்

தமிழினி பதிப்பகம் சென்னை

பியர் அம்ரோஸ் சோடர்லா தெ லாக்ளா எழுதிய நாவலை ஒட்டி ரோஜர் வாடிம் எழுதிய திரைக்கதையின் தமிழாக்கம். ஒருபக்கம் படத்தின் காட்சிகளும் மறுபக்கம் கதையுமாக படம் பார்க்கும் உணர்வை அளிக்கிறது திரைக்கதை. பாரீஸ் உயர்குடிக் குடும்பமொன்றில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பாலியல் சுதந்திரத்தை அளித்துக் கொண்டு வாழமுயன்று உருவாகும் வன்முறையை நுட்பமான உளவியல் சித்தரிப்புகளுடன் விளக்கும் கதை. வால்மாண்ட் மரியனை படிப்படையாக வீழ்த்தும் காட்சிகளில் தேர்ந்த உள அவதானிப்பு உள்ளது

====

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்