பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

பாவண்ணன்


வாடிவாசல் திறக்கப்பட்டதும் சீவப்பட்ட கொம்புகளுடன் இடமும் புறமும் ஆவேசமுடன் தலையைச் சிலிர்த்தபடி கண்களில் வெறி ததும்பப் பாய்ந்துவரும் அடங்காத காளையின் வருகையுடன் படக்காட்சி தொடங்குகிறது. முழுப்படத்தின் படிமமாக அக்காட்சி அமைந்துவிடுகிறது. ஏராளமான கேள்விகளை உடனடியாக அலையலையாக எழுப்புகிறது அக்காளையின் தோற்றம். ஒரு போட்டிக்காக ஏன் காளை தயார் செய்யப்படுகிறது ? அதன் கொம்புகளைச் சதாகாலமும் சீவி வண்ணம்பூசி மின்னவைத்துப் பார்வையாளர்களை மிரளவைப்பது எதற்காக ? அதைக் கண்ணால் பார்த்ததுமே மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடவேண்டும் என்று காளைக்குரியவன் ஏன் நினைக்கிறான் ? அதை வெல்லாமல் விடுவதில்லை என்று காளைக்கெதிராக ஏன் மனிதன் சவால் விடுகிறான் ? சம ஸ்தானமும் சம பலமும் இல்லாத மனிதனும் காளையும் ஏன் மோதிக்கொள்ள வேண்டும் ? மோதலில் அடைகிற வெற்றி வென்றவனை அமைதி கொள்ளச் செய்கிறதா ? அல்லது மேலும் மேலும் வெற்றிகளைக் குவிப்பதற்காகச் சிலிர்த்துக்கொண்டு நிற்கிற காளைகளைத் தேடி எதிர்கொள்ளச் செய்கிறதா ? நடந்தது வெறும் விளையாட்டுப் போட்டி என்றால் மோதலில் அடையும் தோல்வி மனிதனை எதற்காக அவமானமாக உணரச் செய்கிறது ? பட்ட அவமானத்திலிருந்து மீள்வதற்காக மீண்டும் மீண்டும் காளைகளுக்கு அவன் ஏன் கொம்பு சீவிக்கொண்டே இருக்கிறான் ? மனிதனை மோதி மிதிப்பதில் உண்மையாகவே காளைகள் விரும்புகின்றனவா ? மனத்தில் இத்தகு கேள்விகள் மிதந்துகொண்டிருக்கும்போதே மோதல் தொடங்கிவிடுகிறது.

காளை வன்முறையின் படிமம். மனிதர்களுக்குள் ஆழப் படர்ந்திருக்கும் வெறுப்பின் படிமம். பழிதீர்க்கக் காத்திருக்கும் ஆவேசத்தின் படிமம். கண்ணில் படுபவர்களின் தரமோ நிறையோ ஒரு காளைக்குப் பொருட்டே அல்ல. நிகழும் அதன் ஒவ்வொரு வருகையின்போதும் வயிறு மிதிபட்டுச் குடல் சரிய விழுகிறார்கள் சிலர். நெஞ்சில் குத்துப்பட்டுச் சரிகிறார்கள் சிலர். கையும் கால்களும் முதுகும் உடைபட்டு ஒதுங்குகிறார்கள் சிலர். ஒரு கணத்தில் மரணம் கோரநடனம் ஆடி ஓய்கிறது. ஏராளமான பிணங்களை மண்ணில் வீழ்த்தியபிறகே காளையின் ஆட்டம் ஓய்கிறது.

வாசல் திறந்ததும் சிலிர்த்துக்கொண்டு பாய்ந்துவரும் காளையைப்போல படம்முழுக்க மனிதர்கள் தனியாகவும் கும்பலாகவும் பாய்ந்துவரும் காட்சிகள் ஏராளமாக இடம்பெறுகின்றன. தேவர் சார்பாக ஒரு கும்பல். நாயக்கர் சார்பாக ஒரு கும்பல். தீய ஜெயலர் சார்பாக ஒரு கும்பல். நல்ல ஜெயிலர் சார்பாகவும் ஒரு கும்பல். சிறைக்குள் கள்ளச்சரக்கு விற்பவர்களுடைய முரட்டுத்தனத்துக்கு அஞ்சி அவர்கள் சார்பாக ஓடிவரும் ஒரு கும்பல். எதிர்ப்படுபவர்கள் சிறு தயக்கத்துக்குக் கூட இடமின்றி வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள். ஒவ்வொரு முறையும் மண்ணில் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. படத்தில் திருநீறு பொலியும் நெற்றியுடன் பலர் இடம்பெறுவதைப் பார்க்கிறோம். இம்முகம் ஒவ்வொன்றும் வர்ணம் பூசப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளையை நினைவூட்டியபடி உள்ளதைத் தவிர்க்க முடியவில்லை.

அடங்காத ஒரு காளையாக விருமாண்டியும் வலம்வருகிறான். ஒரே ஒரு வித்தியாசம் அவனை யாரும் ஏவி விடமுடியாது. யாருடைய ஏவலுக்கும் கட்டுப்பட்டவன் அல்ல அவன். யார்மீதும் அவனுக்கு வெறுப்பில்லை என்பது ஒரு காரணம். அன்புக்குப் பணிந்து ஒரு பசுவைப்போல மாறிவிடக்கூடியவன் என்பது மற்றொரு காரணம். போட்டியில் பல பேருடைய குடல்சரியக் காரணமாக இருந்த காளையையே நில் என்றால் நிற்பதற்கும் வா என்றால் வருவதற்கும் பழக்கிவைத்திருக்கிற அன்னலட்சுமியின் அன்பில் அவனும் கரைந்து நிற்கிறான். அந்த அன்னலட்சுமியையே வன்முறைக்குப் பறிகொடுத்ததால் ஆவேசமுற்று அரிவாள் எடுக்கவேண்டியவனாகிறான். அப்போதும் கையையும் காலையும் வெட்டுவதற்குத்தான் அவன் அரிவாள் ஓங்குகிறதே தவிர யாருடைய தலையையும் சீவி வீழ்த்த உயரவில்லை. ஆனால் சூழல் 24 கொலைகளுக்கு மூல காரணமானவனாக அவனைச் சித்தரித்துச் சிறையில் அடைத்துவிடுகிறது. அவன் சுயநினைவுடன் நிகழ்த்தும் ஒரே கொலை சிறையில் தன் எதிரியின் குரல்வளையை ஆட்காட்டி விரலாலேயே சிதைத்து அழிப்பது மட்டுமே. அது கூட ஒரு மனிதனுடைய செய்கையைப்போல இல்லை. தன் கொம்பை மனித உடலுக்குள் செலுத்துகிற ஒரு காளையின் செய்கையைப்போலவே உள்ளது.

ஒரு காளையின் குணம் விருமாண்டியிடம் பதிந்திருப்பதை உறுதிப்படுத்தப் பல காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. சற்றே பரிவு நிறைந்தவனாக இருந்தாலும் எந்தவிதமான நாசுக்கும் இல்லாத மனிதன் அவன். நுாற்றுக்கணக்கில் மனிதர்கள் கூடியிருக்கிற ஒரு இடத்தில் மின்கம்பத்தில் ஏறி நின்று இடுப்பையும் கையையும் அசைத்துச் சிரிக்கிற முதல் காட்சியிலிருந்தே அவனுடைய நாசுக்கற்ற சுபாவம் வெளிப்படத் தொடங்குகிறது. கூட்டாளிகளுடன் குடித்துவிட்டு வாகனத்தில் முன்பக்கத்தில் தொங்கிக்கொண்டே பயணம் செய்யும் அவனுடைய குணம், இறந்துபோன தன் அப்பத்தாவைத் துாக்கிவைக்கக் கட்டப்பட்ட பாடையைக் காலால் உதைக்கும் வேகம், நிலம் விற்க மறுப்பதைக்கூட ஒருவித சவாலாகவும் எகத்தாளமாகவும் பேசி எரிச்சலுாட்டும் போக்கு, பந்தியில் கைகழுவாமல் உட்கார்ந்துச் சோறு பரிமாறுவகிறவளிடம் போடு போடு என்று கூச்சமின்றி கேட்டு வாங்குவது, கைகழுவத் தண்ணீர் ஊற்றுகிறவளின் முந்தானையிலேயே கையைத் துடைத்துக்கொள்ள முனைவது, தழுவும்போதும் வெளிப்படும் முரட்டுத்தனம் எனத் தொடர்கிற குணம் சிறைக்குள் நேர்காணல் எடுக்க வருகிறவளைப் பார்த்து உள்பாடியின் அளவைக் கேட்கும் காட்சி வரை தொடர்கிறது. மாட்டுத்தனம் மண்டியிருக்கிற அவனை அன்னலட்சுமி மட்டுமே தன் அன்பால் பணியவைக்க முடிகிறது. அவள் இல்லாத வாழ்வை வெறுமை மண்டிய ஒன்றாக அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் வாக்கியம் பொருள் பொதிந்த ஒன்று.

அழகியலோடு எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பலவற்றைச் சொல்ல முடியும். பெளர்ணமி இரவில் தெய்வத்தைச் சாட்சியாக வைத்துத் திருமணம் செய்துகொண்டு விருமாண்டியும் அன்னலட்சுமியும் ஊரைவிட்டோடும் காட்சி குறிப்பிடத்தக்க ஒன்று. பால்போலப் பொழியும் வெளிச்சமும் திட்டுத்திட்டாகக் கரைந்திருக்கும் இருளும் கலந்த புறஉலகம் ஒருபக்கம். மாசற்ற அன்பின் ஒளியால் வழிநடத்தும் அன்னலட்சுமியின் அருகாமையால் உண்டாகும் ஆனந்தமும் எதிரிகளின் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என்கிற பதற்றத்துடன் சின்னச்சின்ன அசைவுகளைப் பார்க்க நேர்வதால் உருவாகிற அச்சமும் முயங்கிய அகஉலகம் மறுபக்கம். அதைப் படமாக்கியுள்ள விதம் நேர்த்தியாக அமைந்துள்ளது. ஒரு குளத்தில் நெருக்கமாகக் குளிக்க நேர்வதால் உண்டாகும் நெருக்கத்தைத் தொடர்ந்து உறவுகொள்ளும் ஆர்வத்தோடு பாறையின் மறைவில் ஒதுங்கிய தருணத்தில் கூட் டம்கூட்டமாக மாடுகள் செல்லும் அரவத்தைக்கேட்டு ஆசையை உதறித்தள்ளிவிட்டு வெளியேறத் துாண்டுகிற அச்சஉணர்வு அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரைவிட்டு வெளியேறும் காட்சியில் ஒரு இடத்தில் ஆட்டுமந்தையும் மற்றொரு இடத்தில் மாட்டுமந்தையும் இடம்பெறுவது முக்கியமான குறியீட்டுத் தன்மையுடன் உள்ளது. அந்த ஆடுகளும் மாடுகளும் அந்த இரவோடு இரவாக வளர்ந்த இடத்தைவிட்டு எங்கோ கண்காணாத இடத்தில் கசாப்புக்கடைக்காரனுடைய அரிவாளுக்குப் பலியாக ஓட்டிச் செல்லப்படுகின்றன. உள்ளூர அது மரணத்தைநோக்கி அவை மந்தைமந்தையாக நடக்கின்றன. அந்த ஆட்டையும் மாட்டையும்போல அன்னலட்சுமியும் விருமாண்டியும் மரணத்தைநோக்கி நடக்கிறார்கள் என்கிற உண்மை அக்காட்சியின் வழியாக நம்மை வந்தடையும்போது நம்மையறியாமல் பதற்றம் கொண்டுவிடுகிறோம்.

ஒரு காட்சியில் வன்முறையின் உச்சமாக ஒருவன் கொல்லப்படுகிறான். அருகில் ஏணையில் உறங்கும் அவனுடைய குழந்தை ஒரே கணத்தில் கிணற்றுக்குள் வீசி எறியப்படுகிறது. ஐயோவென்று அலறியபடி கிணற்றுக்குள் விழுந்து, குழந்தையின் சடலத்துடன் ஓரமாக ஒதுங்கி அழுதபடி இருக்கும் அவளைக் காப்பாற்றுகிறான் விருமாண்டி. இறுதிப்பகுதியில் அடைக்கலம் தந்த நாயக்கரின் இல்லத்திலிருந்து வாகனத்தின் அடிப்பகுதியில் தொங்கியபடி தப்பித்துச் செல்கிறான் விருமாண்டி. சோதனையிடும் காவலர்களின் பார்வையில் அவன் அகப்பட்டுவிடாதபடி, தரையில் விழுந்த லத்தித்தடியை எடுக்கக் குனிகிற காவலனை ஓடோடிவந்து தடுத்து தானாகவே எடுத்துத் தருகிறாள் அதே பெண். பென்ஹர் படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி மனத்தில் எழுகிறது. அடிமையாக நடத்தி அழைத்துச் செல்லப்படும் பென்ஹருடைய தாகத்துக்கு ஏசுநாதர் ஒரு தருணத்தில் தண்ணீர் வழங்குகிறார். அதே ஏசுநாதர் சிலுவையைச் சுமந்தபடி நடையிடும் சமயத்தில் நாவறட்சியால் தவிக்கும்போது பென்ஹர் தண்ணீர் வழங்குகிறான். நாம் எப்போதோ உள்ளன்போடு செய்கிற ஒரு சிறிய நன்மையின் பலன் நெருக்கடியான ஒரு கட்டத்தில் நமக்கு நாம் எதிர்பாராத மற்றொரு தருணத்தில் கிட்டும் என்பது உலகெங்கும் நிறைந்த நம்பிக்கையின் பிரதிபலிப்புதான் இக்காட்சிகள். கதையின் ஓட்டத்துக்குப் பொருந்திப்போகும் வகையில் திறமையோடு இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது பாராட்டத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கையின் மறுவடிவம்தான் தீமையின் பலனும் தொடர்ந்துவந்து தாக்கும் என்பதாகும். பொய்ச்சாட்சி சொல்லி நாயக்கர் தொடுத்த வழக்கை ஒரு கட்டத்தில் உடைக்கிறான் விருமாண்டி. இன்னொரு கட்டத்தில் விருமாண்டியே அன்னலட்சுமியைக் கற்பழித்துக் கொன்றதாகப் புனையப்பட்ட வழக்கில் குற்றவாளியாக நிற்கிறான். அவர்களுக்கு அன்றைய இரவில் திருமணம் நடைபெற்றது என்பதற்கு ஒரே சாட்சி, அதை நடத்திவைத்த பூசாரி. ஆனால் அவன் அப்படி ஒரு திருமணத்தைத் தான் செய்து வைக்கவேயில்லை என்று பொய் சொல்லும்போது அன்னலட்சுமியைக் கற்பழித்துக்கொன்ற வழக்கு உறுதிப்பட்டு விடுகிறது. அப்போது வாயைப் பொத்திக்கொண்டு ஊமையாக அழும் விருமாண்டியின் கண்ணீர் பூசாரி பொய்சொல்லிவிட்டானே என்பதற்கா ? முன்னொரு சமயத்தில் தான் சொன்ன பொய்யை நினைத்தா ? அந்த இடம் அமைதியாக நழுவிப்போவது அழுத்தமாக எடுக்கப்பட்டு உள்ளது.

வாழ்வில் வன்முறைக்கான காரணம் என்ன என்று எதையாவது வரையறுத்துச் சொல்ல முடியுமா என்கிற திசையை நோக்கிச் சிந்திக்கித் துாண்டுகின்றன பல காட்சிகள். ஒரு இடத்தில் அது நிலத்துக்கான பேராசையாக இருக்கிறது. மற்றொரு இடத்தில் அது நிலைநாட்டிக்கொள்ள விரும்பும் வெற்றுப் பெருமையாக இருக்கிறது. தன் சொல் மதிக்கப்படவில்லை என்பதால் புண்பட்ட அகம்பாவத்தின் சீற்றமாக ஒரு கட்டத்தில் இருக்கிறது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டமாக இன்னொரு கட்டத்தில் இருக்கிறது. இதுதான் என்று சுட்டிக்காட்டவியலாத வகையில் நிரந்தரமற்ற வடிவத்துடன் பல்வேறு இடங்களில் வன்முறை நீக்கமற நிறைந்துள்ளது. கதையின் இறுதிப் பகுதியில் சிறையில் நடைபெறும் வன்முறைக் காட்சியை முன்வைத்து இதைப் புரிந்துகொள்வது எளிது.

மாரடைப்பால் இறந்து போன குற்றவாளியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு நடக்கும் உண்ணாவிரதத்துடன் தொடங்குகிறது அக்காட்சி. குழப்பம் மிகுந்த இக்கட்டத்தில்தான் சிறைக்குள் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ள போதைப்பொருட்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் சோதனையைத் தொடங்குகிறார் சிறை அதிகாரி. எக்கச்சக்கமான விலையுள்ள போதைப் பொருட்களை மீட்டுக் கொள்வதற்கான அவசரத்தில் அவற்றைக் கடத்தியவர்கள் எந்த வன்முறைக்கும் தயாராக இருக்கிறார்கள். வழக்கமாக கையூட்டு வாங்கிக்கொண்டு கண்டும் காணாமல் விடும் இளம் அதிகாரி, மூத்த அதிகாரியைக் கொன்றுவிடுமாறும் சிறைக்கலவரத்தின் தொடர்ச்சியாக அதைச் சித்தரிப்பது எளிது என்றும் சொல்லி அவர்களுக்குள் படர்ந்து கொதித்துக்கொண்டிருக்கும் வன்முறையைத் துாண்டிவிடுகிறான். யாருமே எதிர்பாராத வகையில் தன்னுடைய பேச்சு பதிவு செய்யப்படுவதாலும் பதிவு செய்தவர்கள் தப்பித்து ஓட முயற்சி செய்வதாலும், அவர்களைக் கொன்று ஒலிநாடாவைக் கைப்பற்ற இன்னொரு திசையில் வன்முறையைத் துாண்டிவிடுகிறான் அதே இளம்அதிகாரி. தன் தந்திரங்களை மீறி அவர்கள் வெளியேறவிடக்கூடுமோ என்கிற பதற்றம் அவனைக் குழப்பத்துக்கு ஆளாக்குகிறது. அவர்களைப் பிடிக்க விருமாண்டியைத் துாண்டுகிறான். அவனுடைய பிரதான எதிரியான கொத்தாளத் தேவரைப் பலிவாங்கிக்கொள்ளத் தகுந்த சூழலை உருவாக்கித் தருவதாக ஆசை காட்டுகிறான். அப்படியும் அவன் மனம் அடங்கவில்லை. அதே காரணத்துக்காக வேறொரு திசையில் கொத்தவாலையும் துாண்டுகிறான். விருமாண்டியைக் கொல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக அவனுக்கும் ஆசை காட்டுகிறான். எல்லாவற்றையும் சிறைக்கலவரத்தின் தொடர்ச்சியாகக் காட்டிவிடலாம் என்று திட்டமிடுகிறது அவன் மனம். மூத்த அதிகாரி கொல்லப்பட்டதுமே, அவன் வகுக்கிற வியூகத்தின்படி விருமாண்டியும் பேட்டியாளர்களும் அவர்களுக்கு ஆதரவான கைதிகளும் எதிர்ப்படுகிறவர்களைச் சாய்த்தபடி தப்பித்து ஓடுகிறார்கள். கொலை கூடாது, வன்முறை கூடாது என்று சொல்கிற பேட்டியாளரான பெண்மணியும் தப்பிக்கும் அவசரத்தில் கைக்குக் கிடைத்த ஆயுதத்தால் தடுக்க வருகிறவர்களைத் தாக்கியபடி ஓடுகிறாள். கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்த காவல் படையினரில் ஒருவன் கொல்லப்படுகிறான். அவன் பிணம் ஒரு பந்தைப்போல சிறைமதிலைத் தாண்டி வெளியே வந்து விழுகிறது. வன்முறையை அதன் உச்சத்தை நோக்கி அழைத்துச் செல்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளூரச் செயல்படுவதை அக்காட்சி துல்லியமாகப் படம்பிடித்திருக்கிறது. வன்முறையின் மூலகாரணம் இதுதான் என்று சுட்டிக்காட்ட நிரந்தர உருவமும் குணமும் இல்லை என்கிற புள்ளியை நோக்கி செயலற்ற நிலையில் மீண்டும் நகர்ந்து வருகிறோம் நாம்.

அப்படியென்றால் வன்முறை என்றால் என்ன ? அது எங்கே உறைந்திருக்கிறது ? வன்முறை ஓர் உணர்வுநிலை.அது சகல மனிதர்களிடமும் ஆழ்மனத்தில் படர்ந்திருக்கிறது. அதன் துாண்டுதலுக்கு இரையாகிறவர்கள் மிருகமாகிறார்கள். அதைப் பொருட்படுத்தாத ஒருசிலர் மட்டுமே மனிதர்களாக இருக்க முடியும். அன்னலட்சுமி அத்தகையோரில் ஒருத்தி. அதிர்ஷ்டவசமாக அவளை அடைந்த விருமாண்டி துரதிருஷ்டவசமாக அவளை இழந்து தவிப்பதில் பொதிந்திருக்கிற துக்கம் அடர்த்தியானது.

இரண்டு ஊர்களையும் சார்ந்த இரு முக்கியஸ்தர்களின் தனிப்பட்ட சுபாவங்களைச் சித்தரிக்கும் காட்சிகள் முக்கியமானவை. வன்முறையில் குழந்தையையும் அன்னலட்சுமியையும் பறிகொடுத்து மனம் பேதலித்துப்போன பெண் என் கொழந்தய திருப்பிக்குடு என்று கையையும் காலையும் உதைத்துக்கொண்டு அழும்போது குற்றஉணர்வால் தலைகுனிகிறார் முக்கியஸ்தர். தன்பொருட்டு நிகழ்ந்துவிட்ட மரணங்களைத் தடுக்கமுடியவில்லையே என்கிற வேதனை அவருடைய முகத்தில் நிழலாடுகிறது. சொந்த அண்ணன் மகளான அன்னலட்சுமியின் கழுத்திலிருக்கும் தாலியை அறுத்துத் தன் ஏவலாளனை மறுபடியும் கட்டவைத்து, அவளுடன் இன்பம் துய்க்குமாறு துாண்டுகிறார் இன்னொரு முக்கியஸ்தர். அந்தக் கொடுமையைக் காணச் சகிக்காமல் அவருடைய மனைவியே கைகூப்பித் தடுக்குமாறு வேண்டுகிறாள். அவளை அடித்துத் தள்ளுகிற அந்த முக்கியஸ்தரின் முகத்தில் தன் வெற்றிக்காக எதையும் செய்வதற்கு அஞ்சாத வெறி தாண்டவமாடுகிறது. வாழ்நாள் எதிரியான மற்றொரு முக்கியஸ்தரைக் கொன்றபிறகும் கூட அடங்காத நெருப்பாகப் படர்கிறது அவர் வெறி.

எதற்காக இந்த வெறி ? எங்கெங்கே படர்ந்திருக்கிறது இது ? எதற்காகச் சதாகாலமும் வெறப்பும் வன்மமும் நிறைந்தவனாக அலைந்தபடி இருக்கிறான் மனிதன் ? விடையை அறுதியிட்டுச் சொல்லமுடியாத புள்ளிதான் கதையின் மையம். மரணதண்டனைக் குறிப்புகள், அதற்கான நேர்காணல்கள், பின்னோக்குக் காட்சிகள் என்கிற உத்திச் சட்டகத்துக்குள் அது கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. எல்லாக் காட்சிகளிலும் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. தமிழ்த் திரைப்பட உலகுக்கு இப்படம் ஒரு முக்கியமான வரவு.

——————-

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்