எனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

பாவண்ணன்


திருமண வீட்டுக்குச் சென்றால் தானே மாப்பிள்ளையாக இருக்கவேண்டும் என்றும் சாவு வீட்டுக்குச் சென்றால் தானே பிணமாக இருக்கவேண்டும் என்றும் நினைப்பவன் அவன் என எல்லா ஊர்களிலும் யாராவது ஒருவரைச் சுட்டிக்காட்டி மக்கள் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் எல்லாத் தருணங்களிலும் தன் முக்கியத்துவத்தை உணர்த்திக்கொண்டே இருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இயற்கையாகவே அப்படி ஒரு பெயர் உருவாகிவிடுகிறது.

எனக்குத் தெரிந்த ஊரிலும் அத்தகையவர் ஒருவர் இருந்தார். அதிர்ஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ அந்த ஊரின் பஞ்சாயத்து போர்டின் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட் டிருந்தார். அவர் குணநலன்களைப் பட்டியலிட வேண்டுமெனில் ஒரு புத்தகமே எழுதவேண்டும். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தன் முக்கியத்தை நிலைநாட்டிக்கொண்டே இருப்பார் அவர். அதே சமயத்தில் எல்லாச் சந்தர்ப்பங்களையும் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளவும் அவர் தவறமாட்டார். எந்தப் பேச்சைக் கேட்கநேர்ந்தாலும் எந்தச் காட்சியைக் காணநேர்ந்தாலும் எந்தச் செயலைச் செய்யநேர்ந்தாலும் அதை எந்த அளவுக்குத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் மனம் கணக்கிட்டபடியே இருக்கும். ஊரில் அவர் கலந்துகொள்ளாத ஒரு விழாவை யாருமே நடத்திவிட முடியாது. அந்த அளவுக்குக் கண்காணிப்பு நிகழ்ந்தபடி இருக்கும். ஊரில் ஒருவாரமோ அல்லது பத்துநாள்களோ அவர் இல்லாமல் போகலாம். ஆனால் அந்த இடைவெளியில் ஒவ்வொரு மணிநேரத்திலும் என்னென்ன நடக்கிறது என்கிற தகவல்கள் அவரைத் தேடிப் போய்க்கொண்டே இருக்கும். ஊரின் ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் அவரை வாழ்த்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். வருக வருக என்று வரவேற்கும் சுவரொட்டிகள். அவர் பிறந்த நாளுக்கு வாழ்த்துரைக்கும் சுவரொட்டிகள். தன் பிறந்தநாளுக்கு ஆசிகளைக் கோரும் சுவரொட்டிகள். எல்லாவற்றிலும் கூப்பிய கைகளுடன் அவர் காட்சியளிப்பார். மாவட்டச் செய்திப்பக்கங்களில் அவரது புகைப்படங்கள் இடம்பெறாத நாளே இருக்காது.

ஒருமுறை அந்த ஊரில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இறந்துவிட்டார். வாழ்நாள் முழுக்க அவரை எதிர்த்தே வாழ்ந்தவர் அவர். அவரது சாவுச்சடங்குக்கு இவர் செல்லமாட்டார் என்றே எல்லாரும் எண்ணியிருந்தார்கள். வாழும் காலத்தில் இருவரிடையேயும் அந்த அளவுக்குக் கசப்பு வழிந்துகொண்டிருந்தது. யாருமே எதிர்பாராத ஒரு கணத்தில் கையில் ஆளுயர மாலையை எடுத்துக்கொண்டு தன் வீட்டிலிருந்து நடந்தே சென்று அமரரானவருக்கு மாலையிட்டு வணங்கி ஒருநிமிடம் மெளனம் காத்தார். கலங்கிய கண்களுடனும் தழுதழுத்த குரலுடனும் அன்று அவர் ஆற்றிய இரங்கல் உரை கூடியிருந்த தொண்டர்களை உருக்கிவிட்டது. காலமெல்லாம் கல்லைப்போல காட்சியளித்த இவரது மனத்திலா இவ்வளவு ஈரம் என எல்லாரும் நெகிழ்ந்தார்கள். மறுநாள் செய்தித்தாளில் அவரது படமும் ஆற்றிய உரைக்குறிப்பும் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது. மறைந்த தலைவரைப்பற்றிய செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு மரணத்தின் தருணத்தில் தோழைமையை உணர்ந்து கலங்கி உணர்ச்சிவசப்பட்டு நிகழ்த்திய உரைக்கு முதலிடம் தரப்பட்டிருந்தது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த ஊரில் வாழ்ந்த கவிஞர் ஒருவருடைய பொன்விழாவைக் கொண்டாட எண்ணிய அவரது நண்பர்கள் சிறிய அளவில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தபடி இருந்தார்கள். செய்தி தலைவரின் காதுகளை எட்டியது. விழாக்குழு நண்பர்களை அழைத்துவரச் சொன்னார். ஒரு கவிஞரைப் பெற்றெடுத்த தம் ஊரின் பெருமையை வெளியுலகுக்கு எடுத்துக்காட்ட இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்றும் கவிஞரைப்போன்ற இலக்கியவாதிகளை ஊக்கப்படுத்துவது தம்மைப்போன்றவர்களின் ச்முகக்கடமை என்றும் பலவாறு சொல்லித் தன் பங்குக்கு ஆயிரத்தொரு ரூபாய் கொடுத்தனுப்பினார். இது விழாக்குழு நண்பர்களை மிகவும் குழப்பமுறச் செய்துவிட்டது. உடனே நிகழ்ச்சிநிரல் மாற்றியமைக்கப்பட்டு அவரையே பாராட்டுக்குழுத் தலைவராக அமைத்துவிட்டனர். நிகழ்ச்சியன்று அவரே கவிஞருக்குப் பொன்விழா மாலை அணிவித்துக் கெளரவித்தார். தமிழ் இலக்கியத்திலேயே திருக்குறளையே தாம் அதிக அளவில் விரும்புவதாகவும் அதுபோல ஒரு நீதிநுால் உலகிலேயே இல்லையென்றும் சொல்லிக் கைத்தட்டலைப் பெற்றார். தனக்குப் பிடித்த திருக்குறளை விரும்புகிறவர்கள் அனைவாரயுமே தாம் உறவினர்களாக ஏற்றுக்கொள்வதாகவும் போற்றுவதாகவும் முழங்கினார். பொன்விழா நாயகனையும் அவரையும் இணைத்ததுகூட அந்தத் திருக்குறளே என்றும் சொன்னார். அரங்கில் அவருக்கு இலக்கியக் காவலர் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசவந்தவர்கள் அனைவரையும் சம்பிரதாயத்துக்காக கவிஞரைப்பற்றி ஒரு வார்த்தை பேசிவிட்டு தலைவரைத் துதிபாடத் தொடங்கினார்கள். எல்லாத் துதிகளும் முற்றுப்பெற இரண்டுமணிநேரம் ஆனது. மறுநாள் காலை வெளியான செய்தித்தாள்களில் கவஞருடைய படம் சிறிதாக ஓரமாகவும் தலைவர் படம் மையத்திலும் வெளிவந்திருந்தன.

அவரைப்பற்றி ஏராளமாகச் சொல்லிக்கொண்டே செல்லலாம். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் கணக்குப் பிசகியது கிடையாது. குறிபார்த்து இலக்கை வீழ்த்துவதைப் போல நடந்துகொள்வார். எந்த நேரத்தில் எக்கட்சியில் இருந்தால் அதிகம் லாபமுண்டோ அந்த நேரத்தில் அக்கட்சியில் அவர் இடம்பெற்றிருப்பார். கட்சி மாறுவதில் எவ்விதமான மனக்கூச்சமும் அவருக்கு இருந்ததில்லை. தன் அந்தஸ்தும் முக்கியத்துவமும் எங்கும் எதிலும் குறையக்கூடாது என்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது.

ஒரு சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் ஒருவரை நாம் மிக எளிதாகச் சுயநலக்காரன் என்று குறிப்பிடலாம். ஒரு கூட்டமே அத்தகு நோக்கத்துடன் இயங்கினால் அதை என்ன பெயர்சொல்லி அழைப்பது ? ஒரு தேசமே அப்படி நடந்தால் அதை என்ன பெயர்சொல்லி அழைப்பது ? அத்தகு கேள்விகளை மனம் உருவாக்கிக்கொள்ளும் தருணங்களில் ஒரு பழைய கதையொன்று மனத்தில் அலைமோதும். நிறுவனம், ஊடகம், அரசியல்வாதிகள் என நாட்டின் எல்லாத் தட்டுகளைச் சேர்ந்தவர்களும் சுயநல வேடத்துடன் அலையும் மனப்போக்கைப் பதிவு செய்த கதை அது. ஆழத்தில் துக்கம் மண்டிய அங்கதத்தன்மையுடன் அக்கதையை எழுதியவர் கே.ஏ.அப்பாஸ்.

இந்தியா விடுதலையடைந்த தினமான ஆகஸ்டு பதினைந்தாம் நாள் அன்று பிரஜாபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராமு என்பவனுடைய மனைவி லாஜூ ஒரே சமயத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்றெடுக்கிறாள். அவளுக்குப் பிரசவம் பார்த்த தாதியான லாடு என்பவள் மூலம் வெளியுலகத்துக்கு விஷயம் காட்டுத்தீயைப்போலப் பரவுகிறது. முதலில் அக்கிராமத்தினர் அனைவரிடையேயு ம் செய்தி உடனடியாகப் பரவுகிறது. சிலர் ஐந்து குழந்தைகளைச் சுமந்து பெற்ற லாஜூவைப் பாராட்டிப் பேசுகின்றனர். மற்றும் சிலர் ஐந்து குழந்தைகளுக்கு அவள் தாயாவதற்கு ராமுவின் ஆண்மையே காரணம் என்று போற்றுகின்றனர்.

அன்று பிரஜாபுரத்திலிருந்து கடிதங்கள் எடுத்துச் சென்ற அஞ்சல் சேவகன் அச்செய்தியைத் தன் அஞ்சல் அதிகாரிக்குத் தெரியப்படுத்துகிறான். அஞ்சல் அதிகாரி தனது பக்கத்துவீட்டில் வாழ்ந்த டாக்டர் கந்தன்லாலிடம் கூறுகிறார். அச்சமயத்தில் டாக்டரிடம் மருந்து வாங்க வந்திருந்த நகர காங்கிரஸ் குழுவின் தலைவரான லாலா பன்ஸிதர் அதைக் கேட்டுக்கொள்கிறார். அன்று நடைபெற்ற சுதந்தர நாள் பொதுக்கூட்டத்துக்குச் செல்லும் வழியில் அவரைச் சந்திக்க வருகிறார்கள் தேச தீபம் பத்திரிகை நிரூபர்கள். கூட்டம் முடிய நேரமாவதால் பேச இருக்கும் செய்தியை முன்கூட்டியே கொடுத்துவிட்டால் அச்சுக்கு அனுப்பிவிடலாம் என்று சொல்கிறார்கள். பேச்சுக்காகத் தயார்செய்து வைத்திருந்த உரையை நிரூபர்களிடம் கொடுக்கிறார் லாலாஜி. போகிற போக்கில் ஐந்து குழந்தைகள் பிரசவச் செய்தியையும் பத்திரிகைக்காரர்களிடம் சொல்கிறார். மறுநாள் தேச தீபத்தில் அவரது சொற்பொழிவு இடம்பெறுவதற்கு மாறாகப் பாரத அன்னைக்கு ஒரு விவசாயி மனைவியின் காணிக்கை என்கிற தலைப்பில் ஆகஸ்டு பதினைந்தில் ஐந்து குழந்தைகள் ஈன்றெடுத்த செய்தி வெளியாகிறது.

தேச தீபத்திலிருந்து இந்தச்செய்தி பிரஸ் டிரஸ்டு வழியாகவும் இதர செய்தி வட்டாரங்களின் வழியாகவும் இந்தியாவின் 750 பத்திரிகைகளில் பிரசுரமாகின்றது. சில மணிநேரங்களில் இச்செய்தி உலகெங்கும் பரவுகிறது. ஒவ்வொரு பத்திரிகையும் இச்செய்தியை ஒவ்வொரு கோணத்தில் பார்த்தெழுதி செய்திகளை வெளியிடுகின்றன. வாரப் பத்திரிகையான தேசசேனை ஒரு ஆவேசம் மிகுந்த கட்டுரை ஒன்றை எழுதி வெளியிடுகிறது. ‘ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்து நமது சகோதரியான லாஜூ நமது மானத்தைக் காப்பாற்றிவிட்டாள். இன்றுவரை நாம் கனடாவின் முன்னிலையில் வெட்கித் தலைகுனிந்திருக்கிறோம். கனடாவில் வேடன் பரம்பரையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரே சமயத்தில் பிறந்த ஐந்து பெண்குழந்தைகளைப் பெற்றதே உயர்ந்த பதிவாக இருந்தது. அப்பதிவை மூன்று ஆண்குழந்தைகளையும் இரண்டு பெண்குழந்தைகளையும் ஈன்றெடுத்த இந்தியப் பெண் உலக அரங்கில் நம் மதிப்பை உயர்த்திவிட்டாள் ‘ என்று செய்தி வெளியிடுகிறது. ராஷ்டிரிய சேவகன் என்னும் இதழும் மக்கள் கெஜட் என்னும் சோஷலிசப் பத்திரிகையும் வெவ்வேறு கோணங்களில் அச்செய்தியை அலசி எழுதி வெளியிடுகிறது. உடனே கம்யூனிஸ்ட் வாரப் பத்திரிகையான சிவப்பு வணக்கம் மக்கள் கெஜட் பத்திரிகையைத் தாக்கி எழுதுகிறது. ‘நாட்டில் உணவுப் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது என்றால் அதற்குக் காரணம் நேருவின் தவறான கொள்கையாகும் என்றும் தெலுங்கானாவிலிருந்து தாஷ்கண்ட் வரை சமாதானத்தை வஒிரும்பும் மக்கள் தம் சேனையில் ஐந்து செந்நிறச் சிப்பாய்களை அதிகப்படுத்தியற்காக விவசாயத் தம்பதியினரை வாழ்த்துகிறது ‘ என்றும் எழுதி வெளியிடுகிறார்கள். சங்கர்ஸ் வீக்லி ஒரு கார்ட்டுன் பிரசுரிக்கிறது. ஒரு உழவனின் மனைவி ஐந்து பிள்ளைகளை வைத்துக்கொண்டு உணவு கேட்கிறாள். அதைக் கண்டு உணவு அமைச்சரான முன்ஷியின் காந்திக் குல்லாய் காற்றில் பறக்கிறது. அகில இந்திய மகளிர் மாநாடு லாஜூ டே கொண்டாடப் போவதாக அறிவிக்கிறது. அகில இந்திய இந்துமகாசபையின் தலைவர் இந்து தர்மத்துக்குத் தம்பதியிர் புரிந்த சேவையைப் பாராட்டி அறிக்கை வெளியிடுகிறார். லக்னோ, நாகபுரி, பம்பாய் முதலிய பல நகரங்களின் பிரசவ மருத்துவமனைகளுக்கு லாஜூவின் பெயர் சூட்டப்படுகிறது. அமர்நாத் யாத்திரையிலிருந்து திரும்பிய சாமியார், ‘இருபத்தோரு நாள் யாகம் செய்தபிறகு ஒரு உழவனுக்கு ஐந்து குழந்தைகள் பிறக்கும். அதில் ஒரு குழந்தை கிருஷ்ணபகவானின் அவதாரமாகும் ‘ என்கிறார்.

ஒரு வாரம் கழித்து இந்தியாவில் ராமு-லாஜூ மண்டல் என்கிற பெயரில் ஒரு கழகம் தொடங்கப்படுகிறது. அதன் சார்பாக ஒரு துாதுக்கோஷ்டி தில்லியிலிருந்து அனுப்பப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது. கழகத்தின் செலவுக்காக ஒரு லட்ச ரூபாய் வறுலிக்கப்படுகிறது. துாதுகோஷ்டிக்கு ஏழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். இக்கோஷ்டி பதின்மூன்றாயிரம் ரூபாய் வாடகையில் ஒரு விமானம் அமர்த்திப் பயணத்தைத் தொடங்குகிறது. விமானம் மூலம் பீம்நகர் வரை வந்து அங்கிருந்து பேருந்து மூலம் பிரஜாபூரை அடைகிறது. அக்குழுவினருடன் பல நிரூபர்களும் புகைப்படக்காரர்களும் வருகிறார்கள்.

ராமு-லாஜூ தம்பதியினரின் குடிசையைக் கண்டுபிடித்து நெருங்குகிறது துாதுக்குழு. வாசலில் கஞ்சா குடித்துவிட்டு அரைமயக்கத்திலிருந்த ராமு ஆரவாரம் கேட்டு வெளியே வருகிறான். கூட்டத்தினரைக் கண்டு ஏன் என்ன என்று விசாரிக்கிறான். உடனே துாதுக் கோஷ்டியின் தலைவரான திருமதி நீலகண்ட சுபாரி வாலா வாழ்த்துரை வாசிக்கத் தொடங்கிவிடுகிறாள். வசூல் செய்த பணத்தில் வாங்கிவந்திருந்த ஆடைகளையும் பொம்மைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறார். போதையில் அவர்களைப் பார்த்துச் சிரிக்கிற ராமு ‘பொம்மைகள், துணிகள், செல்லுங்கள். அவர்களுக்கு நீங்களே அணிவியுங்கள் ‘ என்று கூச்சலிடுகிறான். பிறகு குடிசைக்குள் திரும்பி ‘லாஜூ,லாஜூ.ஏன் அழுகிறாய் ? பார் உனது குழந்தைகளுக்காக இவர்கள் என்னென்வெல்லாம் வாங்கி வந்திருக்கிறர்கள் பார். இவர்களுக்குப் பால் கிடைக்கவில்லை. மருந்து கிடைக்கவில்லை. கூரை ஒழுகி நிமோனியா பிடித்து இவர்கள் இறந்துபோனார்கள். என்றாலும் கவலைப்படவேண்டாம். செத்தபிறகு போட்டுப்பார்க்க பட்டுத்துணிகள் கிடைத்திருக்கின்றன ‘ என்று சிரிக்கிறான். துாதுக் கோஷ்டியினர் ஒன்றும் புரியாமல் குடிசைக்குள் நுழைந்து பார்க்கிறார்கள். லாஜூ தனது முகத்தை மூடியவாறு புலம்பி அழுதுகொண்டிருக்கிறாள். ஈரமான தரையின்மீது சிறுசிறு ஐந்து சடலங்கள் கிழிசலான துணியால் சுற்றப்பட்டுக் கிடக்கின்றன.

இது ஒருவிதமான அங்கதம். எடுக்கவேண்டிய நடவடிக்கை எடுக்கப்படாமலும் கவலைப்படவேண்டிய விஷயங்களுக்குக் கவலைப்படாமலும் மெத்தனமாக இருக்கும் ஆள்களைக் கண்டு மனம் அடைகிற எரிச்சலால் உருவாகும் அங்கதம். சிரிப்புக்கடியில் துக்கம் இழையோடுகிறது. பல்வேறு தட்டுகளில் வசிக்கும் பல்வேறு தரப்பினர்களும் தம்மை முதன்மையானவர்களாகக் காட்டிக்கொள்ள விழையும் ஊக்கத்தைத் தோலுரிக்கும் வேகத்தில் கதையின் ஒவ்வொரு வரியும் எழுதப்பட்டிருக்கிறது.

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்றவளுக்கு எது முதல்தேவை ? அது அவளிடம் இருக்கிறதா ? இல்லையெனில் கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா ? இக்கேள்விகளை ஒட்டி யோசித்தலும் செயல்படுவதுமே அவளுக்கும் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாறாக, கதையில் என்ன நிகழ்கிறது ? பிரசவச் செய்தி ஓர் உலக அதிசயச் செய்தியாக உருமாற்றப்பட்டு கவனஈர்ப்புக்குரிய விஷயமாக அதைப் பல தளங்களில் முன்னிலைப்படுத்துவதன் மூலம் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் முனைப்புள்ளவர்களாக எல்லாரும் மாறிவிடும் ேசுாகம் அரங்கேறுகிறது. பிரசவித்த தாயை இந்தியாவின் படிமமாகவும் மரணமுற்ற குழந்தைகளை வாழ வழியற்ற ஏழை மக்களின் படிமமாகவும் தளம்மாற்றிப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது மேலும் விரிவுகொள்கிறது கதை.

*

முத்த தலைமுறையைச் சேர்ந்த இந்தி எழுத்தாளர்களுள் முக்கியமானவர் கே.ஏ.அப்பாஸ். திரைப்படத்துறையிலும் சாதனை செய்தவர். 1956 ஆம் ஆண்டில் அவருடைய நான்கு சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘திரும்பி வாருங்கள் பாபு ‘ என்கிற தலைப்பில் ஸ்ரீமகள் கம்பெனியாரால் வெளியிடப்பட்டது. தமிழில் மொழிபெயர்த்தவர் முக்தார். இதே ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களால் கே.ஏ.அப்பாஸின் மேலும் சில சிறுகதைகள் ‘குங்குமப்பூ ‘ என்கிற தலைப்பிலும் ஒரு நெடுங்கதை ‘அஜந்தா ‘ என்கிற தலைப்பிலும் மொழிபெயர்க்கப்பட்டு 1956 ஆம் ஆண்டிலேயே இன்பநிலையத்தாரால் வெளியிடப்பட்டன.

————————

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்