மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

பாவண்ணன்


சில ஆண்டுகளுக்கு முன்னால், தற்செயலாக ஒருநாள் தொலைக்காட்சியில் திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பரமணியனுடைய நேர்காணலைக் காண நேர்ந்தது. ‘முப்பது வருஷமா இந்தச் சினிமாத் துறையில இருக்கேன். எதிர்காலத்துல என்னப் பத்தி எங்கயாவது ஒரு பேச்சு வரும்போது ரொம்ப நல்ல மனுஷன் அவரு, அவரால யாருக்கும் எந்தக் காலத்திலயும் ஒரு தீங்கும் வந்தது கெடையாதுன்னு சொல்லணும். அப்ப நா இருக்கமாட்டேன். ஆனா அந்த மாதிரி ஒரு பேச்சு இருக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்ன்னு நெனைக்கறேன் ‘ என்று ஒரு கேள்விக்கான பதிலாக அவர் சொன்னார். அந்தப் பதில் எனக்கு மிகவும் முக்கியமாகப்பட்டது. அதைத்தொடர்ந்து வெகுநேரம் யோசித்தபடி இருந்தேன்.

வாழும் காலத்தில் நாம் ஒவ்வொன்றையும் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். நம் உற்றார் உறவினர்களின் முகங்கள், நண்பர்களின் முகங்கள், அலைந்து அலைந்து பார்த்த ஊர்களின் முகங்கள், பிடித்த இடங்கள், படித்த புத்தகங்கள், அணைக்கட்டுகள், அருவிகள், ஏரிகள், சோலைகள் எனப் பலவற்றை நினைவரங்கில் சுமந்தபடியே இருக்கிறோம். பார்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் நினைவிலிருந்து உள்முகமாக மேலே வரச்செய்து மனத்திரையிலேயே பார்த்துக்கொள்கிறோம். பல சமயங்களில் நாம் தொடக்கக் காலத்தில் பார்த்த ஒன்று எதார்த்தத்தில் சிதைந்தே போனாலும் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும் சித்திரங்கள் வழியாக அவற்றைத் தொடர்ந்து பார்த்தவாறு இருக்கிறோம். வாழ்வில் முதன்முதலாகக் காணநேர்கிற பல விஷயங்களை நம்மால் மறக்க முடிவதே இல்லை. அபூர்வமான பொக்கிஷயங்களாக அந்த நினைவுகள் பதிந்துவிடுகின்றன. நம் வாழ்க்கைக்குப் பிறகு அந்த நினைவுகள் என்ன ஆகும் ? நாமே ஒரு நினைவாக மாறிவிடுவோம். நம்மோடு பழகிய மற்றவர்கள் மனத்தில் அடிக்கடி வந்துபோகிற ஒரு நினைவாகிவிடுவோம். ஒருவருடைய வாழ்வில் இறுதியாக எஞ்சப்போவது இன்னொருவர் நெஞ்சில் இடம்பிடிக்கும் ஒரு நினைவாக மட்டுமே. ஒரு பிடி சாம்பலாக உடல் மாறுகிறபோது ஒரு கண நினைவாக நாம் வாழ்ந்த வாழ்க்கை மாறிவிடும். இப்படி யோசனைகளின் சரட்டைப் பிடித்தபடி சென்றால், இறந்த காலம் என்பதையும் சரித்திரம் என்பதையும் பலருடைய நினைவுகளின் தொகுப்பு என்று சொல்லிவிடலாம் என்று தோன்றியது.

பதினாறு வயதில் நான் எங்கள் கிராமத்தைவிட்டு வெளியேற நேர்ந்தது. அந்த வெளியிடத்தில் நான் கழித்த முதல்நாள் இரவு முழுக்க எனக்கு உறக்கமே வரவில்லை. எங்கள் கிராமம் மீண்டும் மீண்டும் என் நினைவில் அலைமோதியபடி இருந்தது. எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனும் ஆலமரங்களும் அரசமரங்களும் வேப்பமரங்களும் குக்குறுவான்களின் கூச்சலும் வேலிக்காத்தான் முட்புதர்களின் வந்து உட்காரும் மைனாக்களின் தாவலும் ஏரிக்கரையும் வறண்ட ஏரிக்குள் ஐந்தாறு மைலுக்கு நீண்டு செல்கிற ஒற்றையடிப்பாதையும் சின்னச்சின்னக் குட்டைகளும் அவற்றில் நீந்திக்களிக்கிற மாடு மேய்க்கிற சிறுவர்களும் சாணத்துக்காக மாடுகளின் பின்னால் வெயிலைப் பொருட்படுத்தாமல் கூடையுடன் நடக்கிற சிறுவர் சிறுமிகளும் காட்சிகளாக மாறிமாறி வந்துகொண்டே இருந்தார்கள். அவற்றை எப்போது மறுபடியும் பார்ப்போம் என்கிற எண்ணம் ஓர் ஏக்கமாக என் அடிமனத்தில் எழுந்தது. அக்காட்சிகளை மனத்துக்குள் அசைபோடுவது என்பது ஏதோ ஒரு வளர்ப்புப்பிராணியின் முதுகைத் தடவிக்கொடுத்தபடி செல்லம் கொஞ்சுவதைப்போல இருந்தது. அதைத் தொடர்ந்து நான் பார்க்க நேர்ந்த மலைகள், ஆறுகள், குன்றுகள், அருவிகள், குகைகள், மலைப்பாதைகள், விலங்குகள் எல்லாமே ஆழமான சித்திரங்களாக மனத்தில் உறைந்துவிட்டன.

மனத்துக்குப் பிடித்த இடங்களையொட்டி மட்டுமே இப்படிப்பட்ட நினைவுகள் உருவாகின்றன. நம்முடன் சுமந்து செல்லவேண்டும் என்கிற ஆர்வமும் அப்போதுதான் உருவாகிறது. பிடித்தமான ஓர் இடத்தை விட்டு நீங்கும் சூழலில் இந்த ஆர்வம் ஓர் ஏக்கமாகவும் மாறிவிடுகிறது. இந்த இடத்துக்கு மீண்டும் வரும் வாய்ப்பில்லை என்னும்போது இந்த ஏக்கம் இன்னும் பல மடங்காகிவிடுகிறது.

துங்கபத்ரா நதிக்கரையில் நாங்கள் குடியிருந்த பகுதியின் நினைவு ஏக்கத்தைத் துாண்டும் விதமாகப் பலநாள்களில் மூண்டெழுந்து விடுவதுண்டு. சளசளவென்றொடும் நதியும் கிழக்கில் ஓங்கி நிற்கிற பச்சைக் குன்றும் நினைவில் படரும்போது அப்படியே கண்களை மூடிக்கொண்டு அக்காட்சியைப் பார்த்தபடியே இருக்கவேண்டும் என்று தோன்றாத நாள்களே இல்லை. அக்காட்சி மனசிலெழும் போதெல்லாம் சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ சிறுகதையை வாசித்ததும் நினைவுக்கு வரும். நம்மைப்போலவே இன்னொருவரும் இருக்கிறார் என்ற எண்ணமும் கூடவே வரும்.

விடிந்தால் ஊரைவிட்டுக் கிளம்பிச் சென்றாக வேண்டும் என்கிற நிலையில் வாடகைக்குக் குடியிருக்கிற அறையின் முன்னால் இருக்கிற பால்கனியில் நின்றபடி வானத்தையும் நட்சத்திரங்களையும் தெருவையும் பார்த்தபடி நிற்கும் ஒருவனுடைய துக்கத்துடன் தொடங்குகிறது அவருடைய கதை. அவன் அந்த இடத்தில் தங் கியிருந்த காலத்தில் பார்க்கக் கிடைத்த காட்சிகளும் மனிதர்களும் அபூர்வமான அனுபவங்களாக அவன் மனத்தில் விரிவடைகின்றன. அவையனைத்தையும் இனியொருமுறை பார்க்க முடியாது என்கிற இழப்புணர்வில் மனம் மூழ்குவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

எதைஎதையெல்லாம் மறுநாள் முதல் பார்க்கவியலாமல் போகும் என்று நிதானமாக இருளில் பால்கனியில் நின்றபடி அசைபோடுகிறான் அவன். அவனுக்கு எந்தப் பெயரும் இல்லை. அவன் நம்மில் யாராவது ஒருவனாக இருக்கலாம். அதிகாலை நேரத்தில் பார்க்கக் கிடைக்கிற புறாக்களின் காட்சிதான் அவன் மனத்தில் முதலில் விரிவடைகிறது. பிறகு தாம் எப்போதும் விரும்பிப் பார்க்கிற ஜோடிப் புறாக்களை நினைத்துக் கொள்கிறான். பிறகு இரண்டு வீடுகள் தள்ளி உள்ள வீட்டின் முன்புறத்தில் உள்ள நீர்க்கிணற்றையும் அதில் நீர் எடுத்துச்செல்ல வரும் பெண்களையும் நினைத்துக் கொள்கிறான். தொடர்ந்து செங்கல்பட்டில் இருக்கிற தன் அண்ணன் வீட்டுக்குச் செல்லும் பஸ் பயணமும் நினைவில் மோதுகிறது.

பிறகு, செங்கல்பட்டு பழைய பஸ் ஸ்டான்ட் ஸ்டாப்பில் ஏறும் சமயத்தில் திருமணமானதன் அடையாளமாக புதுமஞ்சள் பொலியும் தாலிச்சரட்டை அணிந்த பெண்ணை நினைத்துக்கொள்கிறான். அவள் வண்டிக்குள் ஏறியதும் வண்டிக்கே ஒரு மங்களகரமான சூழ்நிலை வந்துவிடுவதாகத் தோன்றுவதையும் நினைத்துக்கொள்கிறான். இரவு பதினொன்று மணிவரையிலும் பக்கத்துவீட்டு வாசலில் சாய்வு நாற்காலியில் படுத்திருக்கிற ஐயரையும் நினைத்துக்கொள்கிறான். அப்புறம் காந்தி ரோட்டில் முன்புறம் செடிகள் நிரம்பிய வீடொன்றில் நித்தமும் பார்க்கநேரும் அழகிய பெண்ணொருத்தியின் முகத்தையும் நினைத்துக்கொள்கிறான். இந்த ஊரிலேயே அழகான பெண்ணாக அவளைத் தன் மனம் கொண்டாடியதையும் அசைபோடுகிறான். காந்தி ரோட்டிலேயே துண்டு சிகரெட்டுகளையும் பேப்பர்களையும் சேகரிக்கிற ஒரு கோவணாண்டியையும் நினைத்துக் கொள்கிறான். அத்தருணத்தில் திரைப்பட அரங்கிலிருந்து மருமதமலை மாமணியே என்ற பாட்டு கேட்கிறது. முதல் காட்சி முடிந்து இரண்டாம் காட்சி தொடங்க இருப்பதன் அடையாளம் அது. இன்னும் சற்று நேரத்தில், சினிமாவுக்குப் போயிருந்த, பால்கனிக்கு வடபுறம் இருக்கும் வீட்டில் குடியிருக்கும் ஒரு பள்ளி மாணவியும் அவள் தம்பியும் தாயாரும் வரக்கூடும் என்று நினைக்கிறான். அந்தச் சிறுபெண்ணின் வாழ்க்கைச் சூழலின் துயரங்கள் அவள் அகத்தில் படிந்து, அகத்திலிருந்து முகத்துக்கும் வந்திருப்பதாக அவன் எண்ணுவதுண்டு. வரும்போதே அந்தப் பெண் பால்கனியைப் பார்த்துவிட்டுச் செல்கிறாள். சில கணங்களுக்குப் பிறகு, அவன் அறைக்குள் சென்று தயாராக விரித்துவைக்கப்பட்டிருந்த படுக்கையில் படுக்கிறான்.

அவ்வளவுதான் கதை. வாசிப்பனுபவத்தை அதிகரிக்கும் விதத்தில் கதையின் தொடக்கத்தில் சில குறிப்புகள் இடம்பெறுகின்றன. அவன் அறையில் கோயில் மதிற்சுவர் உண்டென்றும் அச்சுவரில் நிறைந்திருக்கும் பொந்துகளில் புறாக்கள் வசிக்கின்றன என்றும் ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. பிறகு, புறாக்களுக்கென்றே கட்டிவிடப்பட்டவையாக இருந்து நாளடைவில் பொந்துகளாக மாறிப்போய்விட்டன என்றும் குறிப்பு வருகிறது. புறாக்களை நாம் காணும் காட்சிகளாகவும் மனிதர்களாகவும் நம் ஞாபகங்களைப் புறாக்கள் வசிக்கும் பொந்துகளாகவும் பொருத்திப்பார்க்க இக்குறிப்புகள் உதவுகின்றன. இது நம் வாசிப்பு அனுபவத்தை அதிகரிக்கும். தினந்தோறும் பல காட்சிகளைப் பார்த்தாலும் பல மனிதர்களைச் சந்தித்தாலும் அனைத்தையும் நாம் மனத்தில் உள்வாங்கிக் கொள்வதில்லை. சில விஷயங்களை மட்டுமே நம் மனம் உள்வாங்கித் தக்க வைத்துக்கொள்கின்றன. தேவைப்படும்போது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து அசைபோட்டுக்கொள்ளத் துணையாக இருக்கின்றன. புறாவின் சிறகுகள் நம் ஞாபகத்துக்குள் சதா காலமும் அலைந்துகொண்டே இருக்கின்றன.

கதையின் மற்றொரு இடத்தில் நிதானமான அசைவுகளோடு நகர்ந்து பூச்சிகளைப் பிடித்து உணவாக்கிக்கொள்கிற பல்லியொன்றின் காட்சி இடம்பெறுகிறது. ஏறத்தாழ மனத்தின் செய்கையும் இதையொத்ததல்லவா ? நிதானமிழக்காத மனம் பார்க்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக உள்வாங்கி ஞாபகத்தில் பதித்துக்கொள்கிறது. நம் ஞாபக அடுக்குகளின் வலிமை என்பது நம் நிதானத்தைப் பொறுத்ததாகும்.

பிறிதொரு இடத்தில் மூடி சற்றே தளர்வாக இருக்கும் தேங்ாகய் எண்ணெய்ப் பாட்டிலுக்குள் வந்து விழுந்து மிதக்கிற எறும்புகளைப்பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. பார்க்கிற காட்சிகளையெல்லாம் உள்வாங்கிப் பதித்துக்கொள்கிற திறந்த மனத்தின் செய்கையையே இக்குறிப்பு படிமமாக்கிப் பார்க்கிறது.

*

எண்பதுகளில் தெரியவந்த சிறுகதை எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவர் சுரேஷ்குமார் இந்திரஜித். கதையைக் கூறும் முறையில் புதிதுபுதிதான உத்திமுறைகளைப் பயன்படுத்திக்கொண்டே இருப்பதில் சலிக்காத முயற்சி உடையவர். 1981 ஆம் ஆண்டில் கணையாழி இதழில் ‘அலையும் சிறகுகள் ‘ என்னும் இச்சிறுகதை இடம்பெற்றது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்

1 Comment

Comments are closed.