உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் (காளிந்திசரண் பாணிக்கிரஹியின் ‘நாய்தான் என்றாலும் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 67)

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

பாவண்ணன்


புருஷோத்தமன் பயந்த சுபவாமுள்ள ஓர் அதிகாரி. அவருக்கு மூன்று பெண்கள் இருந்தார்கள். மூவருமே வளர்ந்து திருமணத்துக்குக் காத்திருந்தார்கள். நண்பரும் தம்மால் முடிந்த அளவில் பல முயற்சிகளை எடுத்தபடி இருந்தார். எல்லா முயற்சிகளும் இதோ நல்லபடி முடிந்துவிட்டது என்கிற மாதிரி வேகவேகமாக நடக்கும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடியும். நிரந்தரமான வருத்தமாக இந்தப் பிரச்சனை அவர் மனத்தைத் தாக்கியது. ஒரு பக்கத்தில் இந்த வேதனையுடன் அலுவலகத்தில் வேறொரு விதமான வேதனையையும் அவர் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.

அலுவலகத்தில் புருஷோத்தமனுக்கு மூத்த அதிகாரியாக இருந்தவர் ஒரு தெலுங்குக்காரர். அவருடைய மகன் வயதில் இருப்பவர். புருஷோத்தமனுடைய பயந்த அடங்கிய சுபாவத்தைப் பயன்படுத்திக்கொண்டு பணமீட்டுகிற பல தவறான செயல்களைச் செய்யவைப்பதில் கில்லாடியாக இருந்தார் அவர். மாலை வேளைகளில் சந்திக்கும்போதெல்லாம் அவர் இதைப்பற்றியே புலம்பத் தொடங்கினார். செய்த தவறுகளுக்காக அவர் நெஞ்சம் பதறுவதை உணரமுடியும். குளமாவதைப்போல கண்களில் நீர் கோர்த்துக்கொள்ளும். ‘இந்தக் கையாலே இப்படிச் செய்ய வைக்கிறானே பாவி ‘ என்று தலையிலேயே அடித்துக்கொள்வார்.

இந்த இம்சையிலிருந்து தப்பிக்க அவர் முன்னால் இரண்டு வழிகளிருந்தன. அதிகாரியின் தவறான எந்த வார்த்தைக்கும் கட்டுப்படாமல் மறுப்பதன் மூலம் நாளடைவில் அவராலேயே எங்கேயாவது மாற்றப்பட்டுப் போய்விடுவது ஒரு வழி. அல்லது தாமே ஏதேனும் கோரிக்கையைக் கொடுத்து மாற்றல் வாங்கிக்கொண்டு செல்வது மற்றொரு வழி. புருஷோத்தமன் இரண்டையும் செயல்படுத்த இயலாத நிலையில் இருந்தார். திருமண வயதில் உள்ள மூன்று பெண்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுப் புதிய இடத்துக்குச் சென்று தனியாக இருக்க அவருக்கு விருப்பமில்லை. போகிற இடத்துக்கு எல்லாரையும் அழைத்துச்செல்லவும் தயக்கமிருந்தது. அவருடைய அடுத்த பதவி உயர்வு இன்னும் சில மாதங்களிலேயே வரும்போல இருந்தது. அப்போது மாற்றல் நிச்சயம் என்கிற நிலையில் குறுகிய கால அவகாசத்தில் இரண்டு மாற்றல்களால் நேரக்கூடிய நடைமுறைச் சிரமங்களை நினைத்துப் பின்வாங்கினார். பதவி உயர்வுக்கான வேளையில் தம் திறமை பற்றிய ரகசியக்குறிப்பை எழுதவேண்டியவர் அந்த அதிகாரியே என்பதால் தம்முடைய அவசர முடிவால் காரியத்தைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வையும் அவர் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தச் சமயத்தில்தான் தமிழ்ப்புத்தாண்டு பிறந்தது. விடுமுறை நாள். அந்த அதிகாரியே புருஷோத்தமனைத் தொலைபேசியில் அழைத்து ‘என்னப்பா வருஷப்பொறப்புக்கெல்லாம் கூப்பிட மாட்டியா ? கூப்பிட்டு ஒருவேளை சாப்பாடு போட்டால் குறைந்துபோயிடுவியா ? நான் தனியாகத்தானே இருக்கேன் ‘ என்று சொன்னார். சங்கடத்தோடு அதிகாரியின் கோரிக்கையை அவர் ஏற்று விருந்துக்கு அழைக்க வேண்டியதாயிற்று. விருந்துக்கு வந்தவரை மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்தவும் வேண்டியதாயிற்று. காணாததைக் கண்டமாதிரி அவர் அந்தப் பெண்களிடம் சிரித்துப் பேசி வழிந்ததை மன அழுத்தத்துடன் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று. அன்றுமுதல் அவரை அலுவலகத்தில் பார்க்கும்போதெல்லாம் ‘என்ன புருஷோத்தமன், எப்படி இருக்கறீங்க ? நித்யா எப்படி இருக்காங்க ? மஞ்சுளா, விமலா எல்லாம் எப்படி இருக்கறாங்க ? ‘ என்று மிகவும் சகஜமாகக் கேட்கத்தொடங்கிவிட்டார். ‘எதுக்குங்க புள்ளைங்கள வீட்டுலயே போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க. ஆபீஸ் பக்கம் வரச் சொல்லுங்க. இங்கதான் ஏகப்பட்ட கம்ப்யூட்டர் இருக்குதே, எங்கயாவது உக்காந்து கத்துக்கிடட்டும். இன்டர்நெட் வசதி இருக்குது. புதுசா புதுசா பல விஷயங்களைத் தெரிஞ்சிக்கலாமே ‘ என்று வலியுறுத்துவதும் வழக்கமாகிவிட்டது. ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இந்தத் தொல்லைகளில் தினந்தினமும் அகப்பட்டு அவர் தவியாயத் தவித்தார். பார்க்கும்பொழுதெல்லாம் அவரை அமைதிப்படுத்துவதே என் வேலையாயிற்று.

ஒருநாள் மாலைவேளையில் வாகனத்தில் பக்கத்துாரில் இருந்த அலுவலகத்துக்குப் போய்விட்டு இருவரும் திரும்பிக்கொண்டிருந்தார்கள். புருஷோத்தமனை வீட்டிலேயே இறக்கிவிட்டுச் செல்வதாகச் சொன்னார் அதிகாரி. புருஷோத்தமனுக்கு உள்ளூர அந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. ஆனால் நேரிடையாக மறுப்பது எப்படி என்ற தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார். வாகனம் ஓடிக்கொண்டிருந்தது. வழியில் எதிர்பாராத விதமாக அவர்கள் அலுவலகத்தில் எழுத்தராக இருந்த ஜனகராஜ் தென்பட வாகனம் நிறுத்தப்பட்டது. அதிகாரி அவரை அருகில் அழைத்துப் பேசினார். பேச்சுவாக்கில் அவருடைய வீடு அங்கே அருகில் இருப்பதாக அறிந்துகொண்டார். ‘என்னப்பா வீட்டுக்கு கூப்பிட்டு ஒரு காப்பி கூட தரமாட்டியா ? ‘ என்றபடி எழுத்தருடன் கிளம்பத் தயாரானார். அதற்கு இடம்கொடுக்காத ஜனகராஜ் அவசரமாக ஒரு குடும்ப வேலையை முன்னிட்டு வெளியே சென்றுகொண்டிருப்பதாகவும் பிறகு பார்ப்பதாகவும் சொல்லிவிட்டு நகர்ந்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்றார் அதிகாரி.

தன் வார்த்தைகளும் மறுக்கப்படும் என்பதை முதன்முதலாக உணர்ந்த நிலையில் முகம் வெளிறிப் போனார் அவர். அந்தச் சூழல் கொடுத்த துணிச்சலில் வாகனத்தில் ஏறாமல் புருஷோத்தமனும் ஏஒருத்தர்கிட்டே கடன் கேட்டிருந்தேன். அவர் வீடு இங்கதான் பக்கமா இருக்குது. இன்னிக்கு வரச்சொல்லியிருக்காரு. அவரப் பாத்துட்டு ‘பொறுமையா வீட்டுக்குப் போயிடுவேன். ஒங்களுக்கு எதுக்கு சிரமம் ? நீங்க கிளம்புங்க சார் ‘ என்றபடி பதிலை எதிர்பாராமல் திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார்.

சின்னக் குழந்தையைப்போல மகிழ்ச்சியுடன் அவர் இச்சம்பவத்தைப்பற்றிப் பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அதிகாரியின் வார்த்தையை மீறி அவர் செய்தது இந்த ஒரு செயல் மட்டுமே. வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவர் செய்தது தொண்ணுாற்றி ஒன்பது இருக்கும். அவற்றையெல்லாம் நினைத்துக்கொள்ளும்போது பெரிய அதிகாரியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பிள்ளையைப்போல வளர்த்த மானையே வெட்டிக் கறியாக்கிச் சமைத்துப் பரிமாறிய ஜமீன்தாரரின் கதையொன்றும் நினைவுக்கு வரும். அந்தக் கதையின் தலைப்பு ‘நாய்தான் என்றாலும் ‘. கதையை எழுதியவர் காளிந்திசரண் பாணிக்கிரஹி என்னும் ஒரிய எழுத்தாளர்.

கதையில் அல்பியோன் என்னும் நாயும் ஜாலி என்னும் மானும் இடம்பெறுகின்றன. இரண்டும் ஒரு ஜமீன்தாரால் வளர்க்கப்படுகின்றன. வேலைநேரமெல்லாம் முடிந்த பிறகு தன் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள பரந்த புல்வெளிகளில் அவர் காலாற நடக்கும்போது தம் விளையாட்டுகளால் அவையிரண்டும் அவருக்கு ஆனந்தம் ஊட்டும். ஜமீன்தாரின் அருமை மகளும் அவற்றுடன் மிகவும் நெருக்காக இருப்பவள். தன் நேரத்தில் பெரும்பகுதியை அவ்விலங்குகளுடன் ஆடிக் கழிப்பவள் அவள்.

ஜமீன்தாருடைய எஸ்டேட் காட்டில் ஒரு விருந்தினர் மாளிகை எழுப்பப்பட்டிருந்தது. வேட்டையாட வரும் ஐரோப்பிய அதிகாரிகளை அவர் அங்கேதான் தங்கவைத்து உபசரிப்பது வழக்கம். கதையின் தொடக்கத்தில் அவருடைய பழைய நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தம் குடும்பத்துடன் வேட்டைக்கு வர இருப்பதாகத் தகவல் சொல்லி அனுப்புகிறார்.

அவர் வருகைக்கு நான்கு நாட்களுக்கு முன்னமேயே மாளிகை தயார் நிலையில் வைக்கப்பட்டது. காட்டில் கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. தேவைப்பட்ட பொருட்கள் ஆட்களை அனுப்பி வரவழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நாளில் விருந்தினர் வந்து இறங்குகிறார்கள். வந்தவர்களுடன் ஜமீன்தாரும் ஆனந்தமாகப் பொழுதைப் போக்குகிறார். எல்லா நிகழ்ச்சிகளும் திட்டமிடப்படுகின்றன. இரவை விருந்தினர் மாளிகையில் கழித்துவிட்டு மறுநாள் காலை சிற்றுண்டிக்குப் பிறகு காட்டுக்குப் புறப்படுவது என்று முடிவாகிறது.

வேட்டையாடும் இடம் ஜமீன்தாரின் வீட்டிலிருந்து பதினான்கு மைல்கள் தொலைவில் இருக்கிறது. காலையில் விருந்தாளிகள், ஜமீன்தார், வேட்டை நாய்கள், ஜமீன்தாரின் செல்லப்பிராணிகளான ஜாலி, அல்பேன் என ஒரு படையே கிளம்புகிறது. உல்லாசமும் சந்தோஷமுமாகக் கிறிஸ்துமஸை ஒட்டிய ஐந்து நாட்கள் வேகவேகமாகக் கழிகின்றன. அந்தத் தனித்த காட்டில் விருந்தாளிகள் அனைவரும் நன்கு உபசரிக்கப்படுகிறார்கள். ந்தாம் நாள் பகல் உணவை முடித்துக்கொண்டு ஜமீன்தாரும் டி..ஜி.யும் வேட்டைக்குப் புறப்படுகிறார்கள். பல முறைகள் குறி தவறுகின்றன. அவர்களால் ஒரு பறவையைக்கூடச் சுட்டு வீழ்த்த முடியவில்லை. விலங்குகளோ கண்ணில் அகப்படவே இல்லை.

பொழுது இருள்கிறது. அதே நேரத்தில் வலிமையான அளவில் மழையும் பிடித்துக்கொள்கிறது. காட்டுக்குள் காற்றின் சத்தம் அமானுஷ்யமாகக் கேட்கிறது. சிரமத்துடனும் ஜாக்கிரதையுடனும் அவர்ளக் தம் பாதையைத் தேடிக் கண்டறிந்து நடக்கிறார்கள். ஒருவழியாக அவர்கள் கூடாரத்தை அடையும்போது மணி இரவு எட்டாகிறது. கூடாரத்தில் இரவு உணவுக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் இருக்கிறது. மறுநாள் காலை கிளம்ப வேண்டியிருந்ததாலும் வேட்டையில் அகப்படும் விலங்கின் கறியைச் சமைத்துவிடலாம் என்கிற எண்ணத்திலும் எதையும் சமைக்கவில்லை. கடுமையான மழையிலும் புயலிலும் பதினான்கு மைல்கள் தொலைவில் உள்ள வீட்டுக்குச் சென்று சாப்பாடு எடுத்துவரவும் வழியில்லை. என்ன செய்வது என்று புரியாமல் எல்லாரும் குழம்புகிறார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் உருவான பிரச்சனை ஜமீன்தாரைப் பெரிதும் சங்கடத்துக்குள்ளாக்குகிறது.

திடாரென்று டி.ஐ.ஜி.ஐயா பேசத்தொடங்கி ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். அவசரத்துக்கு வீட்டுக்குள்ளேயே வளையவரும் மானைக்கொன்று கறிசமைக்கும் திட்டம் அது. அப்பேச்சே ஜமீன்தாரை நடுங்க வைக்கிறது. ஆனாலும் அவசரமாக அதை மறைத்துக்கொண்டு ஏஆஹா, அதற்கென்ன, நல்ல திட்டம், அப்படியே செய்துவிடலாம்ஏ என்று ஒப்புக்கொள்கிறார்.

அல்பியோனும் ஜாலியும் முகத்தோடு முகம் வைத்துப் படுத்துக்கொண்டிருக்கின்றன. வேலைக்காரன் மாதியாவைத்தவிர வேறு யாரும் அவற்றை நெருங்கமுடியாது. அவனே அங்கு வந்து ஜாலியை இழுத்துச்செல்கிறான். வலுக்கட்டாயமாக ஏன் அப்படி இழுத்துச்செல்கிறான் என்பது அல்பியோனுக்குப் புரியவில்லை. குழப்பத்துடன் பின்தொடர்கிறது. டி.ஐ.ஜி.யின் கையில் இருக்கும் கத்தியைக் கண்டதும் அதற்குச் சந்தேகம் வலுக்கிறது. ஆனாலும் அருகில் ஜமீன்தார் இருக்கும்போது எதுவும் நடக்காது என்கிற நம்பிக்கையில் சில வினாடிகளைக் கழிக்கிறது. சூழல் நெருக்கடிக்குள்ளாவதை உணர்ந்ததும் அது குரைக்கத் தொடங்குகிறது. கட்டிவைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை உதறும் முயற்சியில் தன் எதிர்ப்பைக் காட்டுகிறது. பரிதாபமாகத் தன்னை நோக்கிப் பார்க்கும் ஜாலியின் கண்கள் அதற்கு வெறியைத் துாண்டுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவருகிறது. முதலில் எதிர்ப்பட்ட சமையல்காரனைக் காயப்படுத்துகிறது. டி.ஐ.ஜியும் பிறரும் அஞ்சி ஓடுகின்றனர். ஆனால் அதனால் ஜாலியைக் காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் வேலைக்காரன் மாதியா அதைப்பிடித்து ஒரு மரத்தில் இறுக்கமாகக் கட்டிவிடுகிறான். அதன் கண்ணெதிரிலேயே ஜாலி கொல்லப்படுகிறது. இதயத்தைப் பிளப்பதைப்போல அலறுகிறது அல்பியோன். அன்று இரவு எல்லாருக்கும் அந்த மானுடைய மாமிசமே பரிமாறப்படுகிறது. பெருத்த மனப்போராட்டத்துடன் அந்த விரந்தில் ஜமீன்தாரும் கலந்துகொள்கிறார்.

காலையில் அவர்கள் வீட்டுக்குக் கிளம்புகிறார்கள். அந்த இடத்தைவிட்டு வரமறுக்கிறது அல்பியோன். வலுக்கட்டாயமாக இழுத்துவரப்படுகிறது. அந்த நாயின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது ஜமீன்தாருக்கு. அல்பியோனைவிடத் தான் கீழானவன் என்கிற எண்ணம் அவரை வாட்டியெடுக்கிறது. மனத்துக்குள் புலம்புகிறார். ஜாலி எங்கேப்பா என்று கேட்கிற மகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

அன்றுமுதல் நோய்ப்படுக்கையில் விழுகிறார் ஜமீன்தார். அல்பியோன் உணவுண்ண மறுக்கிறது. சந்தர்ப்பம் பார்த்துத் தப்பியோடித் தன் ஜாலி உயிரைவிட்ட இடத்தில் மணிக்கணக்கில் நின்று கிடக்கிறது. மீண்டும் அது மாளிகைக்குக் கொண்டுவரப்படுகிறது. மிகுந்த கண்காணிப்பையும் மீறி மறுபடியும் ஓடிப்போய்விடுகிறது. அதைக்கண்டுபிடிக்கவே முடியவில்லை.

தொடர்ந்து கவலைக்கிடமாகிவடும் ஜமீன்தாரின் உடல்நிலை மெல்லமெல்லத் தேறுகிறது. மறுஜென்மம் எடுத்ததுபோல. ஆனாலும் ஜாலி எங்கேப்பா என்கிற மகளின் கேள்வியும் அல்பேனியனுடைய குரைப்பும் அவர் மனத்துக்குள் ஒலித்தபடியே இருக்கின்றன. ஒரு நாய்க்கு இருக்கும் நெருக்கத்தின் பாசம் கூட மனிதனான தன்னிடம் இல்லாமல்போனதைக் குறித்துப் பெரிதும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறது அவர் மனம்.

கதையின் தொடக்கத்திலேயே ஜமீன்தாரைப்பற்றிய சித்தரிப்புக் குறிப்புகளில் நேரத்துக்குத் தகுந்தபடி ஆடை அணிந்துகொள்ளும் வழக்கமுள்ளவர் என்கிற குறிப்பும் இடம்பெறுகிறது. அவருடைய உறுதியில்லாத மனத்தை வெளிப்படுத்தக்கூடிய முக்கியமான குறிப்பு. ஒருபுறம் துாய சுதேசிக் கதராடைகள் அணிந்து மக்களுடன் காட்சியளிப்பவர் மறுகணத்தில் ஐரோப்பியர்கள் முன்னிலையில் அவர்களைப்போலவே ஆடையணிந்து காட்சியளிக்கவும் தயங்குவதில்லை. இந்த உறுதியற்ற மனமே அவருடைய எல்லாச் செயல்களிலும் வெளிப்பட்டபடி இருக்கின்றன. ஆசையாய் வளர்த்த தன் மானைக்கொன்று இரவுணவைச் சமைக்கும் யோசனையை ஆங்கில விருந்தாளி முன்வைத்தபோது அவரால் மறுக்க முடியாமல்போவதற்கு இந்த ஊசலாட்டமே காரணம்.

இந்த ஊசலாட்டம் மனித மனத்தில் இடம்பெறக் காரணம் என்ன என்று கதைக்கு வெளியே யோசிக்கும்போது ஓர் உண்மையைக் கண்டறியலாம். விலங்குகளுக்கு ஐந்தறிவென்றும் மனிதர்களுக்கு ஆறறிவென்றும் சொல்வார்கள். ஆறாவது அறிவு ஒருவகையில் மனிதகுலத்துக்கு விதிக்கப்பட்ட சாபம். நட்பிலும் பகையிலும் விலங்குகளிடையே காணப்படும் வெளிப்படைத்தன்மை மனிதர்களிடையே இருப்பதில்லை. எதையும் வெளிப்படையாகச் செய்வதற்கும் சொல்வதற்கும் இயலாத ஊமைகளாகவும் ஊசலாடும் மனம்கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள் மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்களுக்குள்ள தன்னலம் சார்ந்த கணக்குகள். ஆங்கிலேயன் அதிகாரி. நினைத்ததைச் சாதிக்கும் வலிமை கொண்டவன். வீணாக அவனைப் பகைத்துக்கொள்வது ஜமீனுக்கும் நல்லதல்ல, தனக்கும் நல்லதல்ல என்று எடைபோடுகிறது மனம். சுயமரியாதை பறிபோகிற சந்தர்ப்பங்களில் கூட தம் ஊசலாட்டத்திலிருந்து மீள்வதில்லை அவர் மனம். இந்தத் துரதிருஷ்டத்தின் பொறியை நுட்பமாக அடையாளம் காட்டுவதைக் கதையின் வலிமையென்று சொல்ல வேண்டும்.

*

இந்திய மொழிகளில் முக்கியமான சிறுகதையாசிரியர்கள் அனைவரின் கதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுத் ஏதற்கால இந்தியச் சிறுகதைகள்ஏ என்கிற தலைப்பில் மூன்று பகுதிகளாக 1961 ஆம் ஆண்டில் சாகத்திய அகாதெமி வெளியிட்டது. இவற்றில் முதல் பகுதியில் காளிந்திசரண் பாணிக்கிரஹியின் கதை இடம்பெற்றுள்ளது. பின்னர் இம்மூன்று தொகுப்புகளும் அசோகமித்திரனுடைய நெறிப்படுத்தலின் கீழ் பல மொழிபெயர்ப்பாளர்கள் சேர்ந்து இயங்கி 1992 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமியால் தமிழில் கொண்டுவரப்பட்டன. அப்போது இதே சிறுகதை திலகவதியால் மொழிபெயர்க்கப்பட்டது. காளிந்திரசண் பாணிக்கிஹி ஒரிய மொழியின் புகழ்பெற்ற சிறுகதையாசிரியர். கூட்டுக்குடும்பத்தின் சிதைவைச் சித்தரிக்கும் இவர் நாவல்கள் எல்லா மொழியிலும் வரவேற்கப்பட்டன. தமிழிலும் இவரது ‘மண்பொம்மை ‘ என்கிற நாவல் வெளியானது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்