ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

பாவண்ணன்


ஜபல்பூர் நகரில் ஒரு பயிற்சிக்காக ஒன்றரை மாதம் தங்கியிருந்தேன். பயிற்சி நிலையத்தின் முகப்பில் மிகப்பெரிய புல்வெளி இருந்தது. ஏறத்தாழ மூன்று அங்குலம் உயரத்துக்கு முளைத்த புல்பரப்பு காற்று வீசும்போது மடிந்து மடிந்து நெளிவதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கும். நான் பார்த்த சமயத்தில் இரண்டு முதியவர்கள் உட்கார்ந்த நிலையில் தம் கையில் இருந்த களைக்கொத்தியால் ஒரு மூலையிலிருந்து புல்லை அகற்றிக்கொண்டிருந்தனர். அவ்விடத்தில் வேறு எதையேனும் உருவாக்க நிர்வாகம் நினைத்திருக்கக் கூடும் என்ற தோன்றியது. அது குளிர்காலம் என்பதால் பதினோரு மணிக்குத்தான் வேலை தொடங்கும். தேநீர் நேரம், உணவு நேரம், ஓய்வு நேரம் எல்லாம் போக மாலையில் வேலையை முடிக்கும்போது ஓரளவாவது புல்லைச் செதுக்கி ஓரமாகக் கூட்டி வைத்திருப்பார்கள். அதை எடுத்துப்போக ஒரு தள்ளுவண்டி வரும். சமச்சீரான வேகத்தில் இந்த வேலையைச் செய்து முடிக்க அவர்களுக்கு இரண்டு வாரங்கள் தேவைப்பட்டன.

இந்த இரண்டு வார இடைவெளியில் புல்வெளிக்குள் வேலையைத் தொடங்கிய இடத்தில் புல்முளைத்துத் தலையை நீட்டி அசைக்கத் தொடங்கிவிட்டன. ஒன்றிரண்டு நாட்கள் எந்த வேலையும் இல்லை. மறுநாள் காலையில் மீண்டும் அம்முதியவர்கள் கையில் களைக்கொத்தியுடன் அங்கே தோன்றி வேலை செய்யத்தொடங்கினார்கள். சீரான அவர்கள் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் களையை அகற்றும் வேகத்துக்கும் புல் முளைக்கும் வேகத்துக்கும் கண்ணுக்குப் புரியாத ஒரு விகித உடன்பாடு இருக்கக் கூடும் என்று தோன்றியது.

அந்த விசித்திரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சமயம் பார்த்துத் தங்கியிருந்த விடுதியின் காப்பாளரிடம் இதைப்பற்றிக் கேட்டேன். அவர்கள் வேலையே இதுதான் என்றும் வளாகம் முழுக்க வளர்ந்திருக்கும் புல்லை அகற்றுவதற்காகவே அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் சொன்னார் அவர். வட்டவெட்ட வளர்ந்தபடியிருக்கிறதே என்றும் அதற்கு நிரந்தரத் தீர்வு காண வழியில்லையா என்றும் கேட்டேன் நான். அவர் ஒரு கணம் என்னை மெளனமாக நிமிர்ந்து பார்த்தார். பிறகு, மெதுவான குரலில் ‘பயிற்சி நிலையம் இருக்கும் வரை புல்வளாகம் இருக்கும். புல்வளாகம் இருக்கும் வரை புல்லும் வளரத்தான் செய்யும். புல் வளர்ந்து காடாவதில் நிர்வாகத்துக்கு விருப்பமில்லை. அதை ஒழுங்கு படுத்துவது முக்கியமாக இருக்கிறது. வளாகமும் வேண்டும், அது ஒழுங்காகவும் இருக்க வேண்டும் என்கிறபோது இப்படிச் செய்விப்பதைத் தவிர வேறு வழியில்லை ‘ என்றார். எனக்குப் புரிகிற மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. மேற்கொண்டு நான் கேள்வி கேட்பதற்குள் காப்பாளர் வெளியேறிவிட்டார்.

ஊருக்குத் திரும்பிய பின்னர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது தற்செயலாக இதைப்பற்றிச் சொன்னேன். ஒரு நண்பர் அழகாக அதைப் புரியவைத்தார். ‘எல்லாம் சாதி அமைப்பு பற்றிய நம் பார்வையைப்போல இருக்கிறது ‘ என்றார் முதலில். பிறகு அமைதியாக, ‘இங்கே இருக்கிற எல்லாருக்கும் ஏதோ ஒரு விதத்தில் சாதி தேவைப்படுகிறது. சாதி அடையாளத்தை முக்கியமானது என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் சாதியின் தீமைகளை ஒழிக்கவேண்டும் என்று பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். சாதியின் தீமைகள் என்கிற தலைப்பில் பொதுவாக எல்லாரும் ஊக்கத்துடன் பேசுவார்கள். ஆனால் சொந்தச் சாதியைப்பற்றி சுயமாகவும் வாய்திறக்க மாட்டார்கள். அடுத்தவர்கள் செய்யும் விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எகிறிக்கொண்டு வருவார்கள். சாதி ஒழிப்பையும் பேசிக்கொண்டும் சாதியை வளர்த்துக்கொண்டும் ஒரே சமயத்தில் நம் நாட்டில் வாழ்வது சாத்தியம், நீங்கள் பார்த்த புல்வெளி வளாகம் போல ‘ என்றார். கன்னத்தில் யாரோ அறைந்து சொன்னதைப்போல இருந்தது எனக்கு. ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னர் அ.மாதவையர் எழுதிய ‘ஏணியேற்ற நிலையம் ‘ என்கிற சிறுகதையையும் இச்சம்பவத்தையும் ஏதோ ஒரு தருணத்தில் இணைத்துப் பார்த்தபோது என் புரிதல் விரிவடைவதைப்போல இருந்தது.

கதையின் முக்கியப் பாத்திரம் இராமலிங்கம். தொடக்கத்தில் காப்பிக்கடை நடத்தியவர். தற்செயலாக தேசத்தொண்டர் கூட்டத்தில் ஒருவராக மாறி, சுதந்தரத்துக்கான போராட்டங்களில் பங்கெடுத்துத் தற்செயலாக சிறைக்கும் சென்று வந்தவர். விடுதலையைத் தொடர்ந்து துவராடை பூணாத துறவியாகவே தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டவர். தன் சொந்த ஊர் போவதும் மனைவிமக்களைக் காண்பதும் அரிதான செயல்களாகிவிடுகின்றன. உயிர்வாழ்வதற்கான சொத்து இருந்ததாலும் பிள்ளைகள் கைக்குயர்ந்த நிலைக்கு வளர்ந்துவிட்டதாலும் அவர்களும் இவரைத் தொந்தரவு செய்வதில்லை.

ஜாமீன் கொடுக்க மறுத்ததால் நாலாவது முறையாக சிறைப்பட்டுத் திரும்பிய இராமலிங்கம் என்ன செய்வது என்று தெரியாமல் சாதி பேதங்களை வேரோடு களைந்து தமிழர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும் கடமையைக் கைக்கொள்ள நினைக்கிறார். தான் செய்யவேண்டிய தேசத்தொண்டு இதுதான் என்று தீர்மானமானதும் தன்னிடமிருந்த சிறுபொருளையும் பிறர் உதவியையும் கொண்டு ஏணியேற்ற நிலையம் என்னும் பெயரில் ஒரு ஆசிரமத்தை நிறுவுகிறார். சாதி ஏணியிலே கீழ்ப்படிகளில் இருப்பவர்களை மேலேற்றிவிடும் தன்மையினால் தன் ஆசிரமத்துக்கு அப்பெயரைச் சூட்டினார் இராமலிங்கம். எல்லாரும் சமமான இடத்துக்குச் சென்றபிறகு சாதிபேதங்கள் ஒழிந்துவிடும் என்பது அவர் கணக்கு.

ஆசிரமத்தில் 15 பேர் இருக்கின்றனர். அவர்கள் 13 வகையான சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் . அவர்களில் பெரும்பாலோர் இலவசச் சோற்றுக்கு வந்தவர்கள். தமக்கு மேற்பட்ட சாதியினருடன் இணைந்து வாழும் வாய்ப்புக்காக வந்தவர்கள் சிலர். தம்மைப் பிறர் தேச பக்தர்களாகவும் தைரியசாலிகளாகவும் மதித்துப் புகழவேண்டும் என்று கருதிவந்தவர்கள் சிலர். ஆசிரமச் சமையல் வேலைக்கு அவர் முதலில் ஒரு பிராமணச் சமையல்காரனை ஏற்பாடு செய்கிறார் ராமலிங்கம். அவன் சமைத்துப் பரிமாறியதை எல்லாரும் சாப்பிட்டு வருகின்றனர். பிறகு அவன் சமைப்பது ஆசிரமத்தின் நடுநிலை நியாயத்துக்குப் பொருந்தாது என்றெண்ணி ஒரு சைவ வேளாளப்பிள்ளையை அமர்த்துகிறார்.

ஆசிரமத்தில் தங்கி ஆசிரமத்து உணவை உட்கொண்டு வாழ்ந்த போதும் யாருக்கும் தத்தம் சாதிப்பற்றை உதறுவதற்கு மனமில்லை. நேரம் கிட்டும்பொழுதெல்லாம் தம் சாதிப்பெருமைகளை உயர்த்திப் பேசி மற்ற சாதிக்காரர்களைத் தாழ்த்திப் பேசுவது வழக்கமாகிவிடுகிறது.

ஒருமுறை ஏணியேற்ற நிலையத்துக்கு விஜயம் செய்கிறார் மகாத்மா காந்தி. இராமலிங்கத்தின் தேசச் சேவையைப் புகழ்ந்து பேசத் தம் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார். அவருடைய வாழ்த்தால் மனம் பூரிப்படைகிறார் இராமலிங்கம். ஆனால், அன்றிரவே அவர் மனம் உடையும்படி ஒரு சங்கதி நடந்துவிடுகிறது. அவரவர் சாப்பிடும் இலைகள், பாத்திரங்களை அவரவரே சுத்தம் செய்வதுதான் நிலையத்தின் வழக்கம். நிலைய உறுப்பினர்களில் ஒருவரான பழனி முதலி என்பவன் காய்ச்சலால் அவதிப்பட்டதால் அவன் உணவருந்திய பாத்திரத்தைக் கழுவும்படி தவசிப்பிள்ளையிடம் கேட்டுக்கொள்கிறார் இராமலிங்கம். உடனே அவனுக்குச் சாதி உணர்ச்சி பொங்கி எழுந்துவிடுகிறது. இராமலிங்கத்தைப் பார்த்துச் சத்தமிடுகிறான். அவனை மேற்கொண்டு வலியுறுத்த விருப்பமற்ற இராமலிங்கம் தானே அப்பாத்திரத்தைக் கழுவிவைக்கிறார். ஆனாலும் ஆத்திரம் தீராத தவசிப்பிள்ளை தன் கணக்கைத் தீர்த்துக்கொண்டு வெளியேறிவிடுகிறார்.

மறுநாள் பிரச்சனையின் தீவிரம் அதிகமாகிறது. வேறு சமையல்காரன் உடனடியாக அமையாததால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு தானே சமைக்கிறார் இராமலிங்கம். ஆனால் நிலையத்தில் வசித்தவர்களில் முக்கால் பங்கினர் அந்த உணவைத் தொட மறுத்து விடுகின்றனர். எல்லாரும் சத்தியாக்கிரகப் புலிகளாதலால் உடனே உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிடுகின்றனர். முதல்நாள் காய்ச்சலால் அவதிப்பட்ட பழனிமுதலியும் உண்ண மறுத்துவிடுகிறான். வேறு வழியில்லாமல் ஏணியேற்ற நிலையம் தானாகவே ஒரு முடிவைத் தேடிக்கொள்கிறது.

ஒரு சாதாரண பிரச்சனையை ஒட்டி ஒவ்வொருவரும் தத்தம் சாதிப்பெருமையை முன்வைத்து வாதிடும் சந்தர்ப்பத்தைக் கூர்மையாகப் பதிவு செய்கிறார் அ.மாதவையர்.

இவ்வளவு சாதிப்பெருமையை மனம் நிறையச் சுமந்திருக்கும் நபர்கள் சாதிபேதங்களை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிலையத்தில் ஏன் தங்க வந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. இலவசச்சோறும் இலவச இடமும் கிடைக்கின்றன என்பதன்றி வேறென்னவாக இருக்க முடியும் ? பிரச்சனை எழாதவரை நிலையத்தைச் சேர்ந்தவன் என்கிற பெருமையில் திளைக்கலாம். சோற்றுப்பிரச்சனையையும் இடப்பிரச்சனையையும் தீர்த்துக் கொள்ளலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். எவ்வளவு தன்னலம். பிரச்சனை உருவானதும் நிலையம் உடைந்தாலும் உடையலாமே தவிர தன் சாதிப்பெருமைக்குப் பங்கம் வர அனுமதிக்காத தன்னலம். இந்த ஏணியேற்ற நிலையத்தை நம் நாடாகவும் தங்க வந்தவர்களை நாமாகவும் இடம்மாற்றிப் பார்க்கும்போது நாம் எவ்வளவு பெரிய தன்னலப்பிறவிகள் என்பது சுருக்கென்று தைக்கிறது.

*

தேசிய விழிப்புணர்வில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர் அ.மாதைவையா. தேசிய உணர்வைத் தழைத்தோங்கச் செய்வதில் இவர் நடத்திய ‘பஞ்சாமிர்தம் ‘ என்னும் இதழ் பங்கு வகித்தது. ‘குசிகர் குட்டிக்கதைகள் ‘ என்னும் தலைப்பில் இவர் எழுதிய கதை முயற்சிகளைச் சிறுகதைகளாக ஏற்றுக்கொள்வதில் பலருக்குத் தயக்கமிருக்கலாம். ச்முக விமர்சனங்களுக்காகவே இந்த ஊடகத்தை இவர் பெரிதும் பயன்படுத்தினாலும் சிறுகதைக்குரிய நுட்பமும் ஒற்றைப்புள்ளியைச் சுற்றிக் கச்சிதமாகச் சம்பவங்களைக் கோர்த்துக்கொண்டு செல்கிற பாங்கும் இவருடைய கதைகளுக்கான முக்கியத்துவத்தை காலத்தைத்தாண்டி உணர்த்திக்கொண்டிருக்கின்றன. மாதவையரே நடத்திய ‘பஞ்சாமிர்தம் ‘ இதழில் ‘ஏணியேற்றம் ‘ என்னும் இக்கதை இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்