அனுபவக் குறிப்புகளும் ஆனந்தமும்(சிகரங்கள் – வளவ.துரையனுடைய கட்டுரைத்தொகுதி நுால் அறிமுகம்)

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

பாவண்ணன்


(சிகரங்கள் – வளவ.துரையன். கட்டுரைத்தொகுதி. முத்துப் பதிப்பகம், 27, வில்லியம் லே-அவுட், இரண்டவது தெரு, கே.கே.சாலை. விழுப்புரம் – 605602)

‘சங்கு ‘ என்கிற சிற்றிதழின் வழியாகவும் தாமரை, செம்மலர், கணையாழி ஆகிய இதழ்களில் கடந்த சில ஆண்டுகளாக எழுதிவரும் கதைகள் வழியாகவும் சிறுபத்திரிகை இலக்கியச் சூழலில் அறிமுகமானவர் வளவ.துரையன். தாயம்மா என்கிற சிறுகதைத்தொகுப்புக்குச் சொந்தக்காரர். உரைநடை இலக்கியத்தை நோக்கிய இவரது பயணம் சற்றே காலம் தாழ்ந்ததென்றாலும் மரபு இலக்கியத்தின் ஊடாகக் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருப்பவர். அப்பயணத்தில் அவருக்குப் பார்க்கக் கிடைத்த காட்சிகளும் தங்கக் கிடைத்த தடாகக் கரைகளும் சோலைகளும் ஏராளமானவை. குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என ஐவகை நிலங்களின் வழியாகப் பரவி விரியும் எல்லாச் சாலைகளிலும் மாறிமாறிச் செய்த பயணங்களால் தம் அனுபவச் செல்வத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார் வளவ.துரையன். பயண அனுபவங்களால் மனம் கனிந்த குடும்பப் பெரியவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அனைவரையும் நிலவொளி வீசும் முற்றத்திலோ அல்லது கதகதப்பான படுக்கையைச் சுற்றியோ உட்கார வைத்துக்கொண்டு கதைகதையாகச் சொல்வதைப்போல சங்க இலக்கிய வாசிப்புப் பயணத்தில் கிடைத்த தம் அனுபவங்களைக் கட்டுரைகளாகவும் சொற்பொழிவுகளாகவும் அவ்வப்போது முன்வைத்தவற்றை இப்போது தொகுத்து நுாலாக்கியிருக்கிறார்.

இத்தொகுப்பில் ஒன்பது கட்டுரைகள் உள்ளன. பரிபாடல், முல்லைப்பாட்டு, மலைபடுகடாம், சூளாமணி, நந்திக்கலம்பகம் ஆகியவற்றைப்பற்றி விரிவான அளவில் ஆறு கட்டுரைகளும் சங்க இலக்கியத்தில் உழவு, கடவுள் வாழ்த்து, காதல் என்கிற தலைப்புகளில் பொதுவான முறையில் மூன்று கட்டுரைகளும் உள்ளன. பாடல்களில் கண்ணுக்குப் புரியாத விதத்தில் அமைந்துள்ள அழகையும் நயத்தையும் எல்லாக் கட்டுரைகளும் புதிதாக ஒன்றைக் கண்டடைந்த ஆனந்தத்தோடு சொல்லிச் செல்கின்றன. தாம் தேடித் தேடி அனுபவித்தவை என்கிற அளவற்ற மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அவரது சுட்டிக்காட்டலில் காணப்படுகின்றன. தம் பயணத்தில் ஒன்றிரண்டு பள்ளங்களும் சரிவுகளும் பொருத்தமின்மைகளும் கூட அவர் பார்வையில் நிச்சயம் பட்டிருக்கக்கூடும். ஆனால் அவற்றை வெளிப்படுத்துவதையும் பதிவு செய்வதையும் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார் வளவ.துரையன். பூவும் பழமும் இருக்கிற இடத்தில் முள்ளும் காயும் இருக்கக்கூடும் என்கிற உண்மையைச் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை என்கிற எண்ணமாக இருக்கக்கூடும்.

தொகுப்பின் எல்லாக் கட்டுரைகளிலும் விவரிப்பு முறை ஒரே விதத்திலேயே அமைந்துள்ளது. வரிகளின் ஊடே விரிவடையும் திசைகள், மனத்தைக் கவர்ந்த சில வரிகள், அவற்றின் அழகு என்று அடுக்கிக்கொண்டே செல்லும் விவரணைப்போக்கில் இத்தொகுப்பின் நடை அமைந்துள்ளது. ஒன்றைச் சுட்டும்போது அதற்கு இணையாக வேறொரு நுாலில் வேறொரு சந்தர்ப்பத்தில் படித்த உவமைகளையோ உருவகங்களையோ எந்தத் தயக்கமுமில்லாமல் நினைவுபடுத்திச் சொல்கிறார் வளவ.துரையன். விலகிச் சென்று மீண்டும் இணைந்து கொள்ளும் இத்தன்மையால் கட்டுரைகளின் சுவாரசியம் கூடுகிறதே தவிர குறைவதில்லை. காலத்தைத்தாண்டிப் பலவிதமான புதுப்புது பொருள்களை உருவாக்கிக்கொள்வதற்கு ஏதுவாகச் சங்கப்பாடல்களில் ஏராளமான அளவில் அமைந்த உவமைகளையும் உருவகங்களையும் படிமங்களையும் நயம்பட எடுத்துரைத்த அந்தக்கால உரையாசிரியர்கள் முதல் நா.பார்த்தசாரதி வரை நீளுகிற பட்டியலில் வளவ.துரையனையும் சேர்க்க முடியும். ‘கல் ஏசு கவலை ‘, ‘மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி ‘ , ‘அவரவர் ஏவலாளனும் நீயே அவரவர் செய்பொருட்டு அரணமும் நீயே ‘ என அங்கங்கே எடுத்தாளப்படும் வரிகள் மனத்தில் பசுமையாகப் பதிகின்றன. எண்ணுந்தோறும் புதுப்புது அர்த்தங்கள் தருபவை இவை.

மலைபடுகடாம், நந்திக்கலம்பகம் ஆகியவற்றைப்பற்றிய கட்டுரைகளைத் தொகுப்பின் முக்கிய அம்சங்களாகக் குறிப்பிடலாம். மலைபடுகடாம் விரித்துரைக்கும் காட்சிகள் தரும் அனுபவம் மிக உயர்வானவை. ஒருபுறம் கவிஞன். மறுபுறத்தில் யானைகளைப்போல படுத்துக்கிடக்கின்றன மலைகள். மறுபுறத்திலிருந்து தன் காதை வந்தடையும் ஒவ்வொரு ஒலியையும் நுட்பமாகப் பதிவுசெய்தபடி செல்கிறான் கவிஞன். அந்த ஒலி எழுப்பக்கூடிய உணர்வலைகளையும் மனப்படிமங்களையும் கற்பனைச்சித்திரங்களையும் புனைந்தபடி நீள்கின்றன அவன் வரிகள். ஒன்றைத்தொட்டு மற்றொன்று, அதைத்தொட்டு இன்னொன்று என நீண்டபடியே செல்கிறது கற்பனைச்சங்கிலி. இருபது வகையான ஓசைகள் பட்டியலிடப்படுகின்றன. இவற்றை எழுப்பவல்ல பதின்மூன்று வகையான இசைக்கருவிகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றின் அமைப்பை விவரிக்கும் போக்கில் மேலும் சில சித்திரங்கள் தீட்டிக்காட்டப்படுகின்றன. கற்பனைச்சாத்தியப்பாடுகள் மிகுந்த இப்பாடலை வளவ.துரையனுடைய கட்டுரை சிறப்பான முறையில் அறிமுகப்படுத்துகிறது. நம்மைச் சுற்றியும் எத்தனையோ விதமான ஓசைகள் நித்தமும் எழுந்தவண்ணம் உள்ளன. கடற்கரை ஓசைகள், பேருந்துகளில் ஒலிக்கும் ஓசைகள், சந்தை ஓசைகள், புகைவண்டி நிலைய ஓசைகள் என அப்பட்டியலை விரித்துக்கொண்டே செல்லலாம். எந்தத் தொடர்ச்சியும் இல்லாமல் துண்டுதுண்டாகக் காதில் விழும் இந்த ஓசைகளின் அபூர்வக்கலவை கலைடாஸ்கோப் வழியாக உருவாக்கிக் காணவல்ல புதுப்புதுச் சித்திரங்களுக்கு நிகரானது. இத்தகு அபூர்வங்கள் நம்மைச்சுற்றி ஒவ்வொரு கணமும் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. நம் அவசரத்தாலும் அலட்சியத்தாலும் நாம் இழக்கிற ஆனந்தத்தின் அளவு அதிகமானது. கைநழுவி விழுபவை வைரக்காசுகள் என்கிற எண்ணமில்லாமல் இருக்கப் பழகிவிட்டோம். ஏதோ ஒரு தயக்கம் அல்லது அச்சம்தான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. நம்மைச் சுற்றியெழும் குரல்களில் நம்மை அச்சுறுத்தும் குரலோ அல்லது தோல்வியடையச்செய்யும் கர்ஜனையோ இருக்கக் கூடும் என்கிற பதற்றத்தால் எதற்கும் காதுகொடுக்காமலேயே இருக்கப்பழகிவிட்டோம். ஒரு குரலை அச்சுறுத்தும் ஒன்றாகவோ கர்ஜனையாகவோ நம்மால் எப்படி அடையாளப்படுத்த முடிகிறது ? இதே அச்சுறுத்தலையும் கர்ஜனையையும் நாள்தோறும் மற்றவர்களை நோக்கி நாமும் வீசிப் பழகியதாலேயே, அந்தக் குரலின் முதல் ஒலிஅலையைக் கேட்டதுமே அடையாளம் தெரிந்துவிடுகிறது. இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எளிது. பாம்பையும் பூவையும் ஒரே விதமான ஆச்சரியமான பார்வையுடன் பார்க்கும் குழந்தையைப்போல நம் மனம் மாறுவதுதான் ஒரே வழி. கவிஞன் அடிப்படையில் குழந்தை. அதே சமயத்தில் ஆழ்ந்தகன்ற அனுபவங்களாலும் அறிவாலும் ஞானி. அதனால்தான் எந்தத் தயக்கமுமின்றி ஒரு மலையின் அருகில் நின்று தன்னை வந்தடையும் எல்லா ஒலிகளையும் எந்தப் பேதமும் இல்லாமல் ஒரு கவிஞனால் பதிவு செய்ய முடிகிறது. ஓசையின் வழியாகப் பல ரகசிய உள் கதவுகள் திறக்கத்திறக்க வேகவேகமாக அவன் பயணிக்கவும் சாத்தியமாகிறது. இதைப்பற்றிய வளவ.துரையனின் சித்தரிப்பு வாசிக்கிறவர்களையும் கவிஞர்களாக மாற்றத் துாண்டும் வகையில் உள்ளது.

நந்திக்கலம்பகத்தின் முரண் ஒரு சிறுகதைக்குரிய தன்மையோடு வெளிப்பட்டுள்ளது. நந்திவர்மனைக் கொல்ல முயற்சிசெய்து தோற்ற மாற்றாந்தாய் மக்களில் ஒருவன் அறம்வைத்துப் பாடுவதில் தேர்ச்சி பெறுகிறான். பலம்காட்டித் தோற்கடிக்க இயலாதவனைப் பாடல்களால் தோற்கடிக்க எண்ணுகிறான். பாடல்களை எழுதியபின் கவிஞன் மனம் மாறிவிடுகிறது. பாடல்களை உருவாக்கிய உத்வேகம் அடங்கியதும் அவன் மன ஆவேசமும் அடங்கிவிடுகிறது. மனம் மாறி ஓருராகப் பிச்சைக்காரனாக அலைகிறான். ஏதோ ஓர் ஊரில் ஒரு கணிகையின் ஆசைக்காகக் கைவசம் இருந்த பாடல்களில் ஒன்றையெடுத்துப் பாடிக்காட்டுகிறான். தற்செயலாக அதைக்கேட்ட ஊர்க்காவலர்கள் அச்செய்தியை அரசனிடம் சொல்கிறார்கள். பாட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்தைப்பற்றிக் கவலைப்படாத அரசன் அக்கவிஞனை வரவழைத்து எல்லாப் பாடல்களையும் பாடும்படி கேட்டுக்கொள்கிறான். பாடல்களின் முடிவில் அரசனுடைய உயிர் பிரிகிறது. அடுத்தடுத்து ஆர்வமெழுப்பியபடி நீளும் இக்கலம்பகத்தை வளவ.துரையனுடைய கட்டுரை சிறப்பான முறையில் அறிமுகப்படுத்துகிறது.

மரபின் மறுவாசிப்புக்கான அவசியத்தைப்பற்றி தெளிவாகவும் விரிவாகவும் இந்நுாலுக்காக எழுதப்பட்டுள்ள ஜெயமோகனுடைய முன்னுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. செவ்வியல் படைப்புகளை வரையறை செய்துகொள்வது முதல் அவற்றின் வாசிப்பினால் காணத்தக்க ஆழமான அனுபவங்கள் வரை எடுத்துரைக்கிறது அவர் முன்னுரை. மரபு இலக்கியச் சிகரங்களை அறிமுகப்படுத்தும் நுாலுக்கு அமைந்த முன்னுரையும் அழகான சிகரமாக ஒளிவிட்டபடி உள்ளது.

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்