வளவ.துரையன்
புலம் பெயர்ந்தோரின் படைப்புகளைப் படிக்கும் பொழுதெல்லாம் எனக்குக் காற்றின் மூலம் விதைபரவும் என்று சிறுவயதில் படித்ததுதான் நினைவுக்கு வருகிறது. முற்றிய காய்கள் வெடிக்கும். விதைகள் காற்று வீசும் திசையில் அடித்துச் செல்லப்படும். எங்கே போய் விழுகிறதோ அம்மண்ணில் ஊன்றி அந்த விதை அங்கே தன் குலத்தைப் புதுப்பிக்கும். இதுபோல்தான் அரசியல் வற்புறுத்தலினாலும் பொருள் தேடும் சூழலினாலும் படைப்பாளிகள் பலர் மாநிலம் விட்டு மாநிலம் என்றும் நாடுவிட்டு நாடு என்றும் குடிபுக நேர்கிறது. தம் சுயத்தை இழந்துவிடாமல் அங்கே கிடைக்கும் அனுபவங்களை அவர்கள் படைப்பாக்குகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் அ.முத்துலிங்கம்.
முத்துலிங்கத்தின் சிறுகதைகளை ஒருங்கே வாசிக்கும் போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் பன்முகத்தன்மை கொண்டனவாக விரிவது ஒரு சிறப்பம்சமாகும். மேலும் முன்கூறிய எடுத்துக்காட்டின்படி வீசப்பட்ட விதையானது செழிப்பான மண்ணில் வளர்ந்த செடியிலிருந்து வந்திருந்ததால்தான் புதிய இடத்தில் எத்தனை வசதிகள் இருந்தாலும் செம்மையாக முளைக்க முடியும்
நம் தமிழுக்கு இதிகாசங்கள், புராணங்கள், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள் என்ற தொடர்ச்சியான வளம்மிக்க மரபு உள்ளது. இவற்றைப் படித்து உணர்ந்த நவீன இலக்கியப் படைப்பாளிகளின் எழுத்தில் உள்ள மெருகை முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் காணமுடிகிறது. பெரும்பாலான கதைகளில் தொன்மங்களும் சங்க இலக்கியங்களும் விரவி வருவதைக் காணலாம்.
கந்த புராணத்தின் முதல் சொல்லான திகடசக்கரம் என்பதையே அவர் தனது சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாகச் சூட்டியுள்ளார். சங்கத் தலைவி காந்தள் போன்ற விரல்களால் தயிர் பிசைவதையும் உரும்புரித்தன்ன வெண்பெழு மருங்கிற் கடும்பின் கடும்பசி என்ற புறநானுாற்று வரிகளையும் தன் சிறுகதைகளின் ஊடே அவர் காட்டுகிறார்.
‘குங்கிலயக்கலய நாயனார் ‘ சிறுகதையில் ஒரு போதை வயப்பட்டவரைக் காட்டி, அதிலிருந்து அவரால் மீள முடியாததைக் காட்டும் முத்துலிங்கம் அதேபோல் பக்திப் போதையில் மூழ்கியவர்தாம் குங்கிலயக்கலய நாயனார் என்று உணரத் துாண்டுகிறார். ‘குந்தியின் தந்திரம் ‘ என்பது தொகுப்பில் அமைந்த மற்றொரு கதை. அதில் பல கணவன்மார்களை வரித்துக் கொண்டிருப்பதால் குந்தி பலரின் ஏளனப் பேச்சுக்கு ஆளாகிறாள். தன் மீது நிரந்தரமாக படிந்து விட்ட வசையிலிருந்து மீளும் வழிக்காக யோசித்து மனம் களைப்புறுகிறாள். இதன் முடிவாகவே திரெளபதையை மணந்து கொண்டு வரும் பாண்டவர்களிடம் ஐந்து பேரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிந்தே சொல்வதாகக் கட்டமைக்கிறார் முத்துலிங்கம். மேற்சொன்ன இரு கதைகளிலும் இரண்டு வெவ்வேறு பாத்திரங்கள் வெவ்வேறு இரு தருணங்களில் இயங்கும் விதத்தை நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இக்கதையைப் பாரதம் அறிந்த பெரியவர்கள் மன்னிப்பார்களாக என்று கதையின் முடிவில் அவர் எழுதியிருக்கிற பின்குறிப்புக்கு அவசியம் இல்லை என்று தோன்றுகிறது. ஒருவேளை பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியதாக இருக்கலாம். இன்றோ தொன்மங்களின் சாரமும் மையமும் கெடாமல் புதிய கோணங்களில் படைத்துக் காட்டத் தொடங்கி விட்டார்கள் நவீனஎழுத்தாளர்கள்.
முத்துலிங்கத்தின் மற்றொரு முக்கியக் கதை ‘பூமாதேவி ‘. ஞாபகங்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும் விலக்கி வைப்பதிலும் மனம் எடுக்கும் முடிவுகளில் காலமும் வாழ்வின் தளமும் வகிக்கும் பங்குகளை மெளனமாக முன்வைக்கிறது இக்கதை. சலவை எந்திரம் நம்மால் ஏற்படும் அழுக்குகளைப் பொறுத்துக் கொள்வதால் தந்தையும் மகளும் அதற்குப் பூமாதேவி என்று பெயர் சூட்டுகிறார்கள். கால ஓட்டத்தில் மகள் பெரியவளாகிறாள். மனப்பான்மை மாறுகிறது. தற்சயெலாகக் கண்ணில் பட்ட சலவைக் கூடத்தைக் காட்டி ‘அங்கை பார் பூமாதேவி ‘ என்று சொல்கிறார். மகளோ ‘வாட் டு யு மீன் ? ‘ என்று கேட்கிறாள். இக்கதையில் காரில் ஏறிய உடன் இருக்கையின் பெல்ட்டைக் கட்டிக் கொள்வது, அமெரிக்க அலுவலகத்தில் பணியாற்றும் மோசமான பெண், கெட்ட வார்த்தையே பேசும் கம்பெனி அதிபர், அமெரிக்க சாலைகள், வருகிறேன் என்று சொன்ன ஒப்பந்தத்தைக் காப்பாற்ற வேண்டிய நியதி என்று பல புள்ளிகளின் ஊடாக விரியும் கதை, இறுதியில் அழகான வடிவுடன் கச்சிதமாக உருவாகி விடுவது முத்துலிங்கத்தின் எழுத்தாளுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
‘மாற்றமா ? தடுமாற்றமா ? ‘ என்னும் கதையில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் கொழும்புக்குத் திரும்பும் ஒருவருக்கு ஏற்படும் அனுபவங்கள் நமக்கே ஏற்படுவதைப் போலவே உள்ளன. மாறாத விமான நிலைய சுங்க அதிகாரிகள், பிளாஸ்டிக் அரக்கன், சில்லறை கேட்கும் கடைக்காரர், வங்கியின் விநோத நடைமுறைகள், பெண்ணின் பேதைமை, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் இழுத்தடிப்புகள் என்று பல தளங்களைப் பேசி இவை ஏற்பட்டுள்ள மாற்றங்களா என்று கேள்வி கேட்கிறார் முத்துலிங்கம்
எந்தச் சூழலைத் தன் படைப்பில் காட்ட வருகிறாரோ, அதற்கேற்ப வாசகனையும் தயார்செய்வது இவருடைய தனித்தன்மையாகும். சோமாலியாவைக் களமாகக் கொண்ட கதையில் அந்நாட்டு ‘ச்சாட் ‘ என்னும் போதை இலை, அகாஸியா முள்மரம் ஆகியவை காட்டப்படுகின்றன. மேற்கு ஆப்பிரிக்கக் கதையில் கொலபஸ் என்னும் குரங்கு கட்டிங்கிராஸ் என்னும் பெருச்சாளி வருகின்றன. மேலும் ஆப்பிரிக்கர் முருங்கைக் காயைச் சாப்பிடமாட்டார்கள், அதை டெவில் ஸ்டிக் என்பார்கள் என்பதையும் கதையின் ஊடாக அவர் பதிவு செய்கிறார்.
எல்லாக் கதைகளிலுமே அங்கதம் கலந்த அவருடைய எள்ளல் நடையைக் காணமுடிகிறது. பெரிய அதிகாரிகளுடன் பேசுகையில் அதிகம் நீட்டக் கூடாதாம், சிக்கனமும் ஆபத்தாம். அதை ஒரு அழகிய பெண்ணின் உள்ளாடை போல அதிகமும் நீட்டாமல் மறைக்கவேண்டியதைக் கச்சிதமாக மறைப்பதுமாகவும் இருக்க வேண்டும் என்கிறார். சிறுநீர் பாயும் தூரத்துக்குக் கூட அவரை நம்புவதற்கு அந்த ஊரில் ஆள் கிடையாது என்பதும் சித்தப்பா நாற்பத்திரண்டு வயதைச் செலவழித்துவிட்டு மீதியை வைத்துக் கொண்டு காத்திருந்தார் என்று சாதாரணமாக எழுதிச் செல்வதும் இவருடைய தனித்திறமையைக் காட்டுகின்றன.
ஒருவனுக்கு ஒருபக்கம் வாதம் வந்து சூம்பி விடுகிறது. அவனைப் பார்த்து எங்கள் நாட்டிலும் இப்படித்தானே ஒரு பகுதி சூம்பிப் போய் போஷணை இல்லாமல் இருக்கிறது. மற்றப் பகுதி எல்லாம் நல்ல செழிப்பாக இரக்கும் போது எங்களுக்கு மாத்திரம இந்த மாதிரி ஆகிவிட்டதே என்று எழுதியிருப்பதைப் படிக்கும் போது வலி படர்வதைத் தவிர்க்க முடியவில்லை.
படைப்பாளன் எங்கு சுற்றினாலும் தன் அடையாளத்தை இழக்காமல் இருப்ப புரிய வைக்கப்படுகிறது. அதனால்தான் படைப்பும் வெற்றி பெற படைப்பாளனும் பாராட்டப்படுகிறான்.
***
தட்டச்சு: பாவண்ணன். paavannan@hotmail.com
- சொல்லுவதெல்லாம்
- என் கதை
- அழைப்பிதழ்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)
- யாருக்கும் நான் எதுவுமில்லை
- உதய கீதம்
- புதையல்
- வாழ்வும் கலையும்
- இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)
- அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்
- உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)
- அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- வளர்சிதை மாற்றம்
- குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்
- விரதம்
- சொல்லியிருந்தால்…
- தீவுகள்
- அன்பைத் தேடி…
- தேடல்
- முதல் சினேகிதி
- தன்னாட்சி.. ?
- மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்
- மன அஜீரணத்துக்கு மருந்து.
- வாழ்வும் கலையும்
- வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை
- தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்
- கணவன்
- சபா- தீபாவளி ஸ்பெஷல்