வாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

பாவண்ணன்


முப்பது வயது வரை கிராமத்தில் தாயுடன் வசித்தவன் ஹெக்டே. தந்தை இல்லாத குடும்பம். பாக்குமரங்கள் அடர்ந்த சொந்தத் தோப்பு இருந்தது. பால்தரும் பசுக்கள் பத்து. குடும்பத்துக்குத் தேவையான நெல்லைப் பயிரிட்டு எடுத்துக் கொள்ளும் அளவு சிறிய வயலுமிருந்தது. பாசனத்துக்கு ஊரைச் சுற்றிக் கால்வாய்கள் இருந்தன. இனிய கிராம வாழ்க்கையை இழக்க மணமின்றி அங்கேயே காலத்தை ஒட்டிக் கொண்டிருந்தான். ஒருநாள் மங்களூரிலிருந்து வந்த யாரோ ஒரு உறவுக்காரரிடம் மகனுடைய திருமணத்துக்குப் பெண் பார்க்கும்படி கேட்டிருக்கிறாள் ஹெக்டேயின் தாய். ‘இந்த தோப்பு கீப்பு எல்லாம் வேண்டாம், முதலில் லட்சணமாய் அரசாங்க வேலைக்குப் போகச் சொல்லு அவனிடம், அதே வருஷத்தில் ராஜாத்தி மாதிரி பெண்ணோடு வருகிறேன் ‘ என்றிருக்கிறார் உறவுக்காரர்.

ஹெக்டேவுக்கு அரசு வேலையைத் தேடிக் கொள்ளும் கல்வித் தகுதியெல்லாம் உண்டு. விருப்பமில்லாமல்தான் தாயுடன் கிராமத்தில் ஆனந்தமாகக் காலம் தள்ளி வந்தான். அம்மாவின் அன்பில் கரைந்து விடுபவன் அவன். வேலை பார்த்தால்தான் பெண் கிடைப்பாள் என்றால் அந்தப் பெண்ணே வேண்டாம் என்று வாதாடினான் தாயிடம். ஆனால் தாய் விடவில்லை. கெஞ்சிக் கெஞ்சி ஒப்புக்கொள்ள வைத்தாள். விண்ணப்பித்துத் தேர்வெழுதிய மூன்றாம் மாதமே வேலை கிடைத்து விட்டது. பெங்க்ளுரில் ஒரு வங்கிக் கிளையில் வேலை. தாயை விட்டுப் பிரிய மனமில்லை ஹெக்டேவுக்கு. கூடவே வருமாறு அழைத்தான். அவளுக்கோ தோப்பை யார் பொறுப்பில் விட்டு வருவது என்கிற கவலை அரித்தது. மகனை வாழ்த்தி அனுப்பினாள். பெண்ணுக்கு உத்தரவாதம் அளித்த உறவுக்காரரும் வந்து வாழ்த்தினார். கைவசம் இருந்த நாலைந்து பெண்களின் படங்களைக் காட்டினார். ஹெக்டேவுக்கு எரிச்சல். பேசவில்லை. மகனுடைய திருமணம் எப்படியும் நடந்துவிடும் என்று தாய் நிம்மதி கொண்டாள்.

ஹெக்டே கிளம்பும் தருணத்தில் தாய் அவனிடம் தன் ஆசையைச் சொன்னாள். தொலைபேசி வசதி வராத காலம் அது. வாரம் ஒரு கடிதம் அவன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவள் ஆசை. அக்கடிதம் அவன் இல்லாக் குறையை நீக்கி விடும் என்பது அவள் நம்பிக்கை. அதன் வழியாக தான் உயிர்வாழ்வதற்கான மூச்சுக் காற்றைச் சுவாசித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் அவளுக்கு. மகன் மறுக்கவில்லை. கண்டிப்பாகச் செய்வதாக வாக்களித்து விட்டுப் புறப்பட்டான். பார்க்கிறவர்களிடமெல்லாம் தன் தாயைப் பார்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

பெங்களூரில் அறையெடுத்துத் தங்கினான். நகரம் முதலில் மிரட்சியாக இருந்தது. பிறகு, மெல்ல மெல்ல ஈர்ப்பை வெளிப்படுத்தியது. இறுதியில் காந்தமாக இழுத்துக் கொண்டது. ஆச்சரியப்படத்தக்க வகையில் பாக்குத் தோட்டம், கால்வாய், பசுக்கள் எல்லாவற்றையும் சுத்தமாக மறந்தான் அவன். தொடக்கத்தில் சில மாதங்கள் தொடர்ந்து வாராவாரம் கடிதம் எழுதிக் கொண்டிருந்த பழக்கம் தற்செயலாக நின்றது. முதலில் இரு கடிதங்களுக்கான இடைவெளி ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதமானது. அப்புறம் இரண்டு மாதங்கள் வரை நீண்டது. ‘என்னப்பா அம்மாவுக்குக் கடிதம் எழுதலையா ? ‘ என்று கேட்டால் ‘என்ன எழுதறது போ, எழுதனதையே எழுதி எழுதி அலுத்துப் போச்சுப்பா ‘ என்று சலித்துக் கொண்டான்.

ஆறு மாதம் கழித்து ஒரு தந்தி வந்தது. தற்செயலாக அந்தத் தந்தியை நான்தான் வாங்கினேன். அவன் தாய் மாரடைப்பில் மரணமடைந்து விட்டாள். என் தலையில் இடி விழுந்ததைப் போலிருந்தது. நண்பனுக்குத் தகவலைச் சொல்லும் பொறுப்பு என்னுடையதானது. ஆட்டோ பிடித்து அவன் வங்கிக்கு ஓடினேன். வெளியே அழைத்து விவரத்தைச் சொன்னேன். அப்படியே உறைந்து போனான். ஒரேகணத்தில் பழைய பாக்குமரத்துக்காரனாக மாறிப் போனான். குலுங்கிக் குலுங்கி அழுதான். நானே வங்கி அதிகாரியிடம் பேசி விடுப்பெடுக்க வைத்து ஊருக்கு அழைத்துச் சென்றேன். எட்டுமணிநேரப் பயணத்தில் அவன் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது. ‘பாவிடா நான் பாவி. வாரம் ஒரு லெட்டர் போடச்சொல்லி ஆசைப்பட்டாங்க அம்மா. அதக்கூட ஒழுங்கா செய்யாத பாவிடா நான் பாவி ‘ என்று புலம்பியபடி வந்தான். ‘அதுக்காகவெல்லாம் ஒருத்தவங்க உயிர் போவுமா, சும்மா வாடா ‘ என்று அமைதிப்படுத்தி அழைத்து வந்தேன். ஊரில் இறங்கி வீட்டை அடைந்த பிறகுதான் விஷயம் தெரிந்தது. கடிதம் வராமையே ஒரு நோயாகி அவளைப் பலி வாங்கி விட்டது.

அம்மா -மகன் உறவைப் பற்றிய கதைகள் இதிகாசங்களிலும் புராணங்களிலும் நுாற்றுக்கணக்கில் பரவிக் கிடக்கின்றன. ‘அம்மாவாகிய நீ சொன்னால் நான் கேட்க மாட்டேனா ? ‘ என்று அன்றலர்ந்த முகத்துடன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் சென்றவன் ராமன். ‘என் உயிரே போனாலும் நாக அஸ்திரத்தை அர்ஜூனன் மீது இரண்டாம் முறை ஏவ மாட்டேன் ‘ என்று தாய்க்கு வாக்குறுதி கொடுத்தவன் கர்ணன். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்பது, ஒரு மகனுக்கு மகிழ்ச்சி தருகிற சங்கதி ஆகும். அதை நிறைவேற்ற முடியாமல் போகும் போது அவனிடம் குற்ற உணர்வு அதிகரிக்கிறது. உதாசீனத்தால் நிறைவேற்றாதவர்களிடம் அக்குற்ற உணர்வு மேலும் அதிகரிக்கிறது.

ஹெக்டேயின் குற்ற உணர்வு நினைவுக்கு வரும்போதெல்லாம் நினைவில் படரும் ஒரு கதை அசோகமித்திரனுடைய ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘. கதையில் ஓர் இளைஞன் வருகிறான். அம்மா வளர்க்கும் மகன். அலுவலகத்துக்குக் கிளம்பும் மகனிடம் அன்று ‘சீக்கிரமாக வரமுடியுமா ? ‘ என்று கேட்கிறாள் அம்மா. காரணம் கேட்டதும் அன்று மாலை ஏதோ திரைப்படத்துக்குப் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் செல்ல இருப்பதாகச் சொல்கிறாள். அம்மா மீது பாசம் உள்ள பிள்ளைதான் அவன். அவள் விருப்பங்களை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று விரும்புகிறவன்தான். ஆனாலும் அன்று இருந்த மனநிலையில் ‘அதெல்லாம் ஒன்னும் பாக்க வேண்டாம் ‘ என்று படபடத்து விடுகிறான். அம்மா எந்த எதிர்வினையும் புரிவதில்லை.

மேலுக்குத்தான் அவன் வாய் அப்படிப் பேசியதே தவிர, உள்ளூர மாலையில் விரைவாக வீட்டுக்குச் சென்று அம்மாவை அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணுகிறான். தாமதமாகத்தான் அன்று சனிக்கிழமை என்றும் அரைநாள்தான் வேலை என்றும் புரிகிறது. வீட்டுக்குத் திரும்புவதில் பிரச்சனையே இருக்காது என்று நினைத்துக் கொள்கிறான். ஆனால் அவன் நினைத்ததற்கு நேர்மாறாகவே எல்லாம் நடக்கிறது. வீட்டை விட்டுக் கிளம்பும் போது நிறையப் பணத்துடன் கிளம்பியதாக எண்ணிக் கொண்டது எவ்வளவு பெரிய பிழை என்று தோன்றுகிறது. வெறும் ஆறணா மட்டுமே கையில் இருக்கிற சூழலில் நண்பனுடன் காப்பி அருந்திவிட்டு ஐந்தணாவைச் செலவழித்து விடுகிறான். கையில் ரயிலுக்குச் சீசன் டிக்கட் இருக்கிற நம்பிக்கை. திடுமென ரயில்வண்டித் தடத்தில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு ரயில் ஓடவில்லை. பஸ்ஸில் புறப்பட பணமில்லை. நேரம் கழியக்கழிய அவன் குற்ற உணர்வு பெருகுகிறது. அம்மாவின் வேண்டுகோளின்படி விரைவாகத் திரும்ப முடியாமல் போகுமோ என்ற எண்ணம் அரிக்கிறது. அருகில் இருக்கிற நண்பனுடைய முகம் நினைவுக்கு வர, அவன் வீட்டைத் தேடி ஓடுகிறான். போன இடத்தில் நண்பன் இல்லை. திரைப்படத்துக்குச் சென்று விட்டதாகச் சொல்கிறாள் அவன்மனைவி. பணம் புரட்ட வேற வழி தோன்றவில்லை. அதற்குள் இருட்டு சரிந்து விடுகிறது.

வீட்டுக்குத் திரும்பிய போது அது வழக்கமான நேரமாக இருந்தது. வாசலில் அம்மா உட்கார்ந்திருந்தாள். அர்த்தமில்லாமல், ‘ஏன் அம்மா சினிமாவுக்குப் போகவில்லையா ? ‘ என்று கேட்கிறான். அவள் நிதானமான குரலில் ‘எங்கே போகிறது ? ‘ என்கிறாள். அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை. அவளுக்குக் கோபித்துக் கொள்ளக் கூடத் தெரியவில்லை. அவனுக்குள்ளும் உள்ளூர என்னென்னமோ பொங்கிப் பொங்கி வருகிறது. தாமதத்துக்கான காரணங்களையும் விரைவில் வர எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் சொல்ல விரும்புகிறான். ஆனால் சொல்லவில்லை.

இறுதிக் காட்சி முக்கியமானது. கைகால் கழுவிக் கொண்டு வருகிறவனிடம் ‘பிளாஸ்க்கில் காப்பி வைத்திருக்கிறேன். சாப்பிடு ‘ என்கிறாள் அவள். இத்துடன் கதை முடிந்துவிடுகிறது. காலையில் சாப்பிடும் போது வறுத்த ‘சுண்டல் போடட்டுமா ? ‘ என்று கேட்டதும் அவள்தான். இரண்டு விஷயங்களையும் இணைத்துப் பார்க்கும் போது தன் கடமையில் அவள் காட்டுகிற ஈடுபாட்டையும் அவற்றைச் செவ்வனே செய்கிற ஒழுங்கும் மிளிர்வதைப் பார்க்கலாம். ஒருமுனையில் அவள் தன் கடமைகளைச் சரியான முறையில் நிறைவேற்றுவதையும் மறுமுனையில் மகன் தன் கடமையைச் செய்வதில் ஈடுபாடு இருந்தாலும் தடுமாறுவதையும் காணும்போது கதையின் சூட்சும விளக்கம் மேலும் புரியத் தொடங்கும்.

*

சிறுகதைகளில் தமக்கென ஒரு விசேஷ பாணியைக் கொண்டவர் அசோகமித்திரன். தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர். சூட்சுமமும் எளிமையும் இணைந்த இவரது கதைகள் வாழ்வின் ஒரு முக்கிய தருணத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவதைப் போல இருந்தாலும், அடிப்படையில் வாழ்வியல் சார்ந்த முக்கியமான கேள்வியை முன்வைத்த தேடலை நோக்கமாகக் கொண்டிருக்கத் தவறுவதில்லை. கரைந்த நிழல்கள், தண்ணீர், பதினெட்டாவது அட்சக்கோடு ஆகிய முக்கிய நாவல்களையும் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்பகளையும் வெளியிட்டிருக்கிறார். 1958 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘ என்னும் இக்கதை இவரது தொடக்ககாலக் கதைகளுள் ஒன்று. அவரது கதைகளைக் காலவரிசைப்படி வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டு நர்மதா பதிப்பகம் வெளியிடத் தொடங்கிய முதல்தொகுப்பில் (1996) இடம்பெற்றுள்ளது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்