பாரதி இலக்கிய சங்கத்தின் மாதந்திர சந்திப்பு

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

திலகபாமா, சிவகாசி


சிறப்புரை: ந. சுசீந்திரன், விமரிசகர்(ஜெர்மன்)

சிவகாசியில் நடைபெற்ற பாரதி இலக்கிய சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வழக்கமான ஞாயிறு காலை தூக்கத்தை விடத்தயாராயில்லாது தாமதமாக வரும் உறுப்பினர்களுடன் ஆரம்பமானது. ஒவ்வொரு கூட்டத்தின் சிறப்பு அம்சமுமே நேரத்தோடு வந்து விடும் சிறப்பு விருந்தினர்கள் தான். இப்பொழுதும் அப்படியே காலை 10.30க்கு கூட்டம் கூட்டமாகவே ஆரம்பமானது.

படைப்பரங்கத்தில், சிவகாசியை சேர்ந்த பதி, , ஜெகதீஸ்வரன், கல்யாண சுந்தரம், சிவநேசன், வெள்ளைசாமி, கமலா, இலக்கியராஜா ஆகியோர் படைப்பரங்கத்தில் கவிதைகள் வாசிக்க இளம் படைப்பாளிகளின் மனம் நோகாமலும் ,உண்மை மறைக்கப் படாமலும் அழகான விமரிசனங்கள் தந்தார் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த விமரிசகரும் நல்ல மொழிபெயர்ப்பாளரும், படைப்பாளியுமான ந. சுசீந்திரன் அவர்கள்

தொடர்ந்து அவர் பேச்சு அனைவரையும் பெயர் சொல்லி அழைத்த நேசமுடன் ஆரம்பமானது. புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி பேசுமுன் புகலிடத்தமிழர்கள் பற்றியும் அவர்களுக்கிடையேயான வாழ்வியல் சிக்கல்கள் பற்றியும் அனுபவ பூர்வமான உண்மைகளை எடுத்துக் கூறினார்.

இடம் பெயர்வுகள் காலம் காலமாக தமிழர்களிடையே மட்டுமல்லாது உலகம் முழுவதுக்குமான மக்களிடையே அன்றும் இன்றும், என்றும் தொடர்ந்து நிகழ்வதுதான் என்றாலும் பொருளாதார ரீதியாகவும், பிற சமூகவியல் காரணங்களுக்காகவும் நடந்த இந்த இடம்பெயர்வுகள் ஏற்படுத்தாத முக்கியப் பதிவை, தாக்கத்தை இலங்கையில் அரசியல் காரணங்களால் நிகழ்ந்த இடம் பெயர்வுகள் நிகழ்த்தியிருகின்ரன. என்பது நிதர்சனம்.அதற்குச் சான்றே இந்த புகலிடத் தமிழ் , புகலிடத் தமிழ் இலக்கியம் என்கிற சொல்லாக்கங்கள்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக உலக முழுமையாகப் பல நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்து கொண்டுதான் மக்கள் இருகின்றார்கள். ஈழத்தமிழர்கள் லண்டன் நார்வே, கனடா, ஜெர்மன் என பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றிருக்கிறார்கள்.பெரும் பங்கு யுத்தத்தால், யுத்ததால் விழைந்த கொடுமைகளால் ஏற்பட்டவை.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்த கலாசாரங்களோடு இணங்கி வாழ்பவர்கள் ஒரு புறமும், இணங்க முடியாது தவிப்பவர்கள் ஒரு புறமும் என இருவேறு கலாசாரங்களில் வாழும் தமிழர்கள் இருக்கின்றனர்.ஈழத்து இளைஞர்கள் பெரும்பாலும் ஈழப் பெண்களை மண முடிக்கவே விரும்புகின்றனர். ஈழத்தமிழ்ப்பெண்கள் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஆண்களை சென்றடைய பொருள் தொலைத்து, உள்ளம் தொலைத்து, உடல் நலிவுற்று, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்தே சென்றடைகிறார்கள்,

இத்தகைய இன்னல்களும் கலாசார வேறுபாடுகளும் ஏற்படுத்திய பதிவுகளோடு வெளிவரத் துவங்கியது புகலிடத் தமிழ் இலக்கியங்கள்.வெளி நாடுகளில் இருந்தவர்களுக்கு தமிழும், தமிழ் மூலமாக ஏற்பட்ட ஒருங்கிணைப்பும் புகலிடத் தமிழ் இலக்கியம் வளர முக்கியப் பங்காற்றியது. ஒரு காலகட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. கட்சி, கருத்து வேறுபாடுகள் அதன் முக்கிய காரணமாயிருப்பினும், அதுவும் கூட புகலிடத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது எனலாம்.

அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் மீதுள்ள நடைமுறை ஈடுபாடு குறைந்து போனாலும், வாழும் தலைமுறையினரிடையே அது அவர்களின் தாய் நாடு, மண், உறவு தொலைத்து வந்த ஏக்கங்களை நிறைவு செய்யும் விதத்தில் பீ றிட்டுக் கிளம்பியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்றது கலந்துரையாடல். வெறும் உரையாக இல்லாது நல்ல அனுபவப் பகிர்வாக அக்கூட்டம் இருந்தது.

நன்றி கூறி கூட்டம் நிறைவுற்றதாய் அறிவிக்கப்பட்ட பின்னரும் வந்திருந்தவர்கள் இருந்த இடம் விட்டு நகலாது இருந்தது சுசீந்திரனின் உரை அவர்களுக்குள் ஒருவித அதிர்வையும், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியிருந்ததை தெரியப்படுத்தியது.

கூட்டத்திற்கு வந்திருந்த 90 வயதான மாறன் என்ற பெரியவர் முதல் தனுஷ்கோடி ராமசாமி, லஷ்மியம்மாள் கனகசபாபதி, பேராசிரியர்கள் போத்தி ரெட்டி, பொ.நா.கமலா, சிவநேசன் போன்றோர்கள் வந்திருந்தது நல்ல விடயமாக இருந்தது

mahend-2k@eth.net

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி