துக்கத்தில் பிறந்த சிருஷ்டி (இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டார்களா ? – 3 -புஷ்கின் எழுதிய ‘அஞ்சல் நிலைய அதிகாரி ‘ )

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

பாவண்ணன்


நாங்கள் கர்நாடகத்தில் குடியேறிய பிறகு நண்பரான ஒருவருடன் எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. அவரும் தமிழகத்திலிருந்து கால் நுாற்றாண்டுக்கு முன்னர் வந்து குடியேறியவர். மாதத்துக்கு ஒரு முறையாவது பார்த்துப் பேசிக் கொள்வோம். பல விசேஷ தினங்களுக்கு அவர் எங்களை அழைப்பதுண்டு. நாங்களும் சென்று கலந்து கொண்டு திரும்புவோம். அவருக்கு ஒரே மகள். பார்க்க அழகாக இருப்பாள். அவள் சார்ந்து அவருக்குப் பல கனவுகள் இருந்தன. ஒரே சமயத்தில் அவளுக்குக் கணிப்பொறிப் பயிற்சி, நடனம், இசை, ஓவியம் எல்லாத் துறைகளிலும் பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆர்வத் துடிப்பான பெண் அவள். எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினாள். படிப்பு முடிந்த கையோடு கணிப்பொறி நிலையம் ஒன்றில் வேலை கிடைத்தது. தனக்குக் கிடைத்த சம்பளத்தை விடத் தன் பெண் வாங்கி வரும் சம்பளம் அதிகம் என்று நண்பர்களிடம் சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். நாங்கள் எப்போது வீட்டுக்குச் சென்றாலும் அப்போதுதான் பார்த்த ஏதாவது புதிய படத்தைப் பற்றி வாய் ஓயாமல் பேசுவாள் அந்தப் பெண். படத்தை நுட்பமாகப் பார்க்கும் குணம் அவளுக்கு இருந்தது. அதைப் பற்றி விரிவாகப் பேசும் ஞானமும் இருந்தது.

இடையில் ஏதோ வேலை நெருக்கடி. மூன்று நான்கு மாதங்கள் பார்க்கவில்லை. மனைவி ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள். நேரில் பார்த்துக் கொள்ளலாம் என்று தொலைபேசியிலும் பேசாமல் நாட்கள் கடந்தன. ஒரு ஞாயிறு அன்று திட்டமிட்டு உடனே கிளம்பி விட்டோம். வழக்கமாகத் திறந்தே இருக்கும் அவர்கள் வீட்டு வாசல்கதவு மூடியிருந்தது. எங்காவது வெளியே சென்று விட்டார்களோ என்று தயக்கம் கொண்டேன். அவநம்பிக்கையுடன்தான் அழைப்புமணியை அழுத்தினேன். சிறிது இடைவெளிக்குப் பிறகு நண்பரே வந்து திறந்தார். துவண்டிருந்தார். எங்களை எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் முகம் காட்டியது. கலகலப்புக்குக் குறைவில்லை என்றாலும் ஏதோ உற்சாகம் வடிந்த நிலையில் இருந்தார்.

நான் பேச்சு வாக்கில் அவர் பெண்ணின் பெயரைச் சொல்லி ‘எங்கே அவளைக் காணவில்லை ? படம் ஏதாவது பார்த்தாளா ? ‘ என்றேன். அவரும் அவர் மனைவியும் தடுமாறிப் போனார்கள். வார்த்தை வராமல் இரண்டொரு நிமிடங்கள் தடுமாறிய பிறகு ‘இனிமே என்ன படம் பாக்கப் போறா ? நமக்கே பெரிசா படம் காட்டிட்டு போயிட்டா ‘ என்றார். சொல்லும் போது அவர் குரல் குழறியது. அது என்னை நிலைகுலைய வைத்தது. ஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது என்று உடனே பேச்சை வேறு திசையில் திருப்பி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தானாகவே பேச்சு அவளைப் பற்றியதாக மாறி விட்டது. அவள் தனக்குப் பிடித்தமான ஒருவனைத் திருமணம் செய்து கொண்டாள் என்றும் வீட்டை விட்டுச் சென்று விட்டாள் என்றும் சொன்னார். தொடர்ந்து அரைமணிநேரம் அவளைப் பற்றிப் புலம்பத் தொடங்கி விட்டார். என் புதிய சமாதானப் பேச்சு எதுவும் எடுபடவில்லை.

காலம் அவர் மனப்புண்ணை ஆற்றும் என்று எண்ணியிருந்தேன். ஆனாலும் அவர் துயரம் குறைந்தபாடில்லை. மெல்ல மெல்ல அவர் உடல் இளைத்து வந்தது. முன்னைக் காட்டிலும் அதிகமாக தன் பெண்ணைப் பற்றிப் பேசத் தொடங்கினார். ஆனால் வைராக்கியமாக அவளைச் சந்திக்கவோ அல்லது அவள் தம்மைச் சந்திக்க அனுமதிக்கவோ மறுத்தார்.

‘ஏன் இவர் தன்னை இப்படி கஷ்டப்படுத்திக் கொள்கிறார் ? ஏதோ கல்யாணம் நடந்தாயிற்று. வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது தவறாகவே இருக்கட்டும். அதற்காக அதையே இன்னும் எத்தனை காலம் நினைத்து நினைத்துப் புழுங்குவது ? விட்டுத் தள்ளி விட்டு வேறு வேலை பார்க்கக் கூடாதா ? நீங்கள் என்ன நண்பரோ ? ஒரு வார்த்தை சொல்லக்

கூடாதா ? ‘ என்றாள் என் மனைவி.

‘அது அவ்வளவு சுலபமில்லை. நீ இம்சை என்று சொன்னாயே. இப்போது அந்த இம்சைதான் அவர் மகள் ‘ என்றேன்

‘ஏதாவது புரிகிற மாதிரி சொல்லுங்கள் ‘

‘தன் மகளை அவர் உயிருக்குயிராக நேசித்தது நமக்குத் தெரியும். அவள் போய்விட்டாள். அது மிகப்பெரிய அதிர்ச்சி. அந்தத் துக்கத்தை அவரால் முதலில் தாங்க முடியவில்லை. அந்தத் துக்கத்தை முதலில் ஆற்றிக் கொள்ளத்தான் மகளுடைய நடவடிக்கை பற்றிப் பிரஸ்தாபிக்கத் தொடங்கினார். அந்தப் பேச்சு ஒரு கட்டத்தில் தன் எதிர்மறைத் தன்மையை இழந்து விட்டது. அதாவது அந்தப் புலம்பல் மகளைப் பற்றிய வெறுப்பை கொட்டும் உரையாடலாக இல்லாமல் வெறுப்புக்கு இணையான நேர்நிலை செயல்பாடாக மாறி விட்டது. எதிர்நிலைச் செயல்பாடாக அவர் கொட்டிய வசைகளில் கலந்திருந்த வெறுப்பு மெல்ல மெல்லக் கரைந்து, அந்த வசைகளை உதிர்ப்பதன் வழியாக வெற்றிடத்தில் தன் மகளை உருவாக்க முயன்று அந்த உருவத்துடன் உரையாடத் தொடங்கி விட்டார். வசைகள் வெறுப்பை உதிர்க்கும் நோக்கத்துடன் அல்லாமல் மகளை உருவாக்கிக் கொள்ளும் ஆசை நோக்கத்துடன் உதிரத் தொடங்கி விட்டன. வசைகள் மீது முதலில் ஈடுபாடு பிறந்திருக்கும். பிறகு, வசைகள் ஒரு கொஞ்சல் போல மாறி விட்டிருக்கும். நண்பர் அடைந்தது இந்த மனநிலையைத்தான். இது ஏதோ அவர் திட்டமிட்டு எடுத்த முடிவல்ல. ஏதோ மனக்கலக்கத்தில் இந்த வழியைக் கண்டுபிடித்து தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ளத் தொடங்கி, அதுவே இப்போது பழகி விட்டது. இப்போது அவருக்குத் தேவை மகள் அல்ல. அவளே நேரில் வந்தால் கூட அவர் பொருட்படுத்தாமல் போகக் கூடும் ‘

மனைவி வாய்திறந்து எதுவும் சொல்லாமல் என் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தாள்.

மனைவிக்கு மேலும் விளங்க வைக்க நினைவுக்கு வந்த கதை புஷ்கினுடைய ‘அஞ்சல் நிலைய அதிகாரி ‘. அக்கால ருஷ்யாவில் அஞ்சல் நிலைய அதிகாரிகள் அஞ்சல் சேவையைத் தவிர வேற சில சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்கள். அதாவது வழிப்போக்கர்கள் தங்கிச் செல்ல அறைகள் கொடுத்து உதவுதல் , உணவுக்கு வழிவகை செய்தல், அவர்களுக்குத் தேவையான பயணக் குதிரைகளை ஏற்பாடு செய்தல், வண்டிகள் ஏற்பாடு செய்தல் எனப் பல பணிகள் செய்தார்கள். இக்கதையில் இடம்பெறும் அஞ்சல் அதிகாரிக்கு துானியா என்றொரு மகள் உண்டு. மிகவும் துறுதுறுப்பானவள். வரும் விருந்தினர்கள் அவளிடம் பேசாமல் செல்வதில்லை. தங்குதலில் ஏற்படும் சிறுசிறு இடைஞ்சல்களையும் அவள் சிரிப்பைக் கேட்டுப் பொருட்படுத்துவதில்லை.

துானியாவின் சேவையில் மனம் பறிகொடுத்த கதைவிவரணையாளர் சில ஆண்டுகளுக்குப் பின் அதே வழியில் செல்லும் போது மறுபடியும் அதே இடத்துக்குச் செல்கிறார். துானியா அப்போது இல்லை. ஆர்வத்தின் வேகத்தில் ‘துானியா எங்கே ? ‘ என்று கேட்கிறார். மனமுடைந்த அதிகாரி சொல்வதைப் போல கதை விரிகிறது. யாரோ தங்க வந்த வழிப்போக்கன் துானியாவிடம் மனம் பறிகொடுத்து விடுகிறான். உடல்நலம் சரியில்லை என்று சொல்லி மூன்று நாட்கள் தங்குகிறான். காதல் வளர்கிறது. புறப்படும் முன்னர் ‘தேவாலயம் வரை வர முடியுமா ? ‘ என்று துானியாவைப் பார்த்துக் கேட்கிறான். ‘ஐயா என்ன கடித்துத் தின்னவா போகிறார், போய் வா ‘ என்று அதிகாரியே அப்பாவித் தனத்துடன் அனுப்பி வைக்கிறார். அவள் அவனோடு ஊரைவிட்டே சென்று விடுகிறாள். அதிகாரி மனம் உடைந்து விடுகிறார். உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகிறார். தேறிய பிறகு விடுப்பு எடுத்துக் கொண்டு பீட்டர்ஸ்பர்க் சென்று சந்திக்கிறார். இளைஞன் பணத்தைத் தந்து அனுப்புகிறான். மகளைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அடுத்தநாள் பலவந்தமாக உள்ளே நுழைந்து சென்றபோது, பார்த்ததும் அதிர்ச்சியில் மகள் மயங்கி விழ மீண்டும் வெளியேற்றப் படுகிறார் அதிகாரி. வேறு வழியின்றி, ஊருக்குத் திரும்பி வந்து விட்டதாகச் சொல்லி அழுகிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழியே செல்லும் விவரணையாளர் அதிகாரியின் மரணத்தை அறிகிறார். கல்லறைக்கு வழிகாட்ட வரும் சிறுவன் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் இரண்டு பிள்ளைகளுடன் இதே கல்லறைக்கு வந்து சென்றாகச் சொல்கிறான். அவள் துானியாவாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

துானியா வளர்ந்த பெண். என்றாவது ஒருநாள் திருமணம் செய்து கொள்ளப் போகிறவள். அதிகாரியே ஏற்பாடு செய்திருந்தால், இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்துச் செய்திருக்கலாம். அவளாகச் செய்து கொண்டதால் சற்றே முந்திவிட்டது. சமாதானமடைய நினைத்திருந்தால் அதிகாரி இவ்வாறு நினைத்து மனஅமைதியுற்றிருக்கலாம். ஆனால் அவரால் முடியவில்லை. துானியாவின் பிரிவு முதலில் துக்கமாகி, அந்தப் பிரிவின்பாற்பட்ட புலம்பலே துானியாவின் உருவமாக மாறி விடுகிறது. இது ஒரு தோற்றம்தான். தொடர்ந்து புலம்புவதன் வழியாக துானியாவை கண்முன்னால் சிருஷ்டித்துக் கொள்கிறார் அதிகாரி. அவரைப் பொறுத்த வரைக்கும் புலம்பல் துக்கமல்ல, மானசிகமாக, ஒருவகை சிருஷ்டி

அதுவரை பொறுமையாகக் கதையைக் கேட்ட மனைவி ‘இது ஒருவகை நஷ்டஈடு என்கிறீர்களா ? ‘ என்று சட்டெனக் கேட்டாள். சொல்ல வந்த விஷயம் அவளுக்குப் புரிந்ததை நினைத்து நிறைவேற்பட்டது.

*

ருஷ்யாவின் மாபெரும் தேசியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் அலெக்சாந்தர் புஷ்கின். படைப்புலகில் தன் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே அவர் இறந்து போனார். அப்போது அவருக்கு முப்பத்தெட்டு வயது. நாடோடிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய கவிதைகள் மிகவும் முக்கியமானவை. லியோ தல்ஸ்தோய் எழுதிய குறிப்பில் புஷ்கினுடைய ‘பெல்கின் கதைகள் ‘ முக்கியமான நுால் என்று குறிப்பிடுகிறார். இவருடைய ‘காப்டன் மகள் ‘ தமிழில் ஏற்கனவே மொழபெயர்க்கப்பட்டிருக்கிறது. நா.தர்மராஜன் அவர்களின் மொழிபெயர்ப்பில் ராதுகா பதிப்பகத்தின் வெளியீடாக 1983ல் வந்த ‘அலெக்சாந்தர் புஷ்கின் தேர்நதெடுக்கப்பட்ட நுால்கள் ‘ என்னும் புத்தகத்தில் ‘அஞ்சல் நிலைய அதிகாரி ‘ கதை இடம் பெற்றுள்ளது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்