மீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது.

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

ஞாநி


அன்புள்ள நண்பர்களுக்கு

வணக்கம்.

1982ல் நான் சில நண்பர்கள் உதவியுடன் தொடங்கி, மூன்று இதழ்களுடன் நின்று போய், பிறகு 1985ல் மீண்டும் வெளியிட்டு ஏழு இதழ்களுடன் நின்று போன ‘தீம்தரிகிட ‘ இதழை மறுபடியும் வெளியிட விரும்புகிறேன்.

சொந்த முயற்சியில் பத்திரிகை நடத்துவது என்ற பரிசோதனையை 1987ல் வெளியிட்ட சென்னை நகரத்துக்கான ‘ஏழு நாட்கள் ‘ என்ற இதழுடன் நான் நிறுத்திக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் பத்திரிகை நன்றாக விற்பனையானது.(1982ல் முப்பதாயிரம் பிரதிகள் வரை விற்றோம்). கடை விரித்தோம் கொள்வாரில்லை என்ற நிலை இருக்கவில்லை. ஆனால் விற்ற பணத்தை வசூலிக்க முடியாமலும் போதுமான செயல்முறை மூலதனம் இல்லாமலும் முயற்சிகள் முடங்கிப் போயின.

இனி சொந்த முயற்சியில் பத்திரிகை வெளியிடுவது இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு அந்த முடிவை உறுதியுடன் பதினைந்து ஆண்டுகளாகப் பின்பற்றிவந்திருக்கிறேன். இப்போது ஏன் மறுபடியும் அந்தப் பரிசோதனையில் இறங்க வேண்டியதாகிவிட்டது ? சிரங்கு பிடித்தவன் கை போன்ற மன அரிப்புகள் காரணம் அல்ல என்பதை 15 ஆண்டு பிடிவாதமே காட்டும்.

தீம்தரிகிட இருபது ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டபோது அத்தகைய முயற்சிகளுக்கான தேவை இருந்த நிலை இன்றும் மாறிவிடவில்லை என்பது பொதுவான காரணம். அதை விட முக்கியமான காரணம் கடந்த ஓராண்டு காலமாக நான் சந்திக்கும், உணரும் ஒரு மாற்றம். நான் எப்போதும் பெரிய பத்திரிகைகளில் வேலை செய்வதை என் ஜீவிதத்துக்கான வழியாகவும், கருத்து வெளிப்பாட்டுக்கான வழியாகவும் சேர்த்தே செய்துவந்திருக்கிறேன். வருமானத்துக்காக வேறொரு வேலை, கருத்து வெளிப்பாட்டுக்கு இன்னொரு சாதனம் என்ற நிலையில் நான் இருக்கவில்லை.

கடந்த ஓராண்டாக நான் சந்திக்கும் நிலை இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் நான் சந்தித்திராதது. கருத்துச் சமரசங்கள் செய்துகொள்ளாமல் எனக்கு முழு நேர வேலையோ பகுதி நேர வேலையோ தமிழ் மீடியா சூழலில் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. தமிழில்தான் இயங்குவது என்று 22 ஆண்டுகள் முன்பு மேற்கொண்ட முடிவை மாற்றிக் கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. இதற்கு முன்பு எனக்கு முழுக் கருத்துச் சுதந்திரம் கொடுத்து நான் எழுத அனுமதித்த இதழ்கள் கூட இந்த ஓராண்டில் பல முறை என் கட்டுரைகளை, ஏன், கடிதங்களைக் கூட நிராகரித்தன. வெளியிட்ட ஓரிரு முறையும், சில பகுதிகளை நீக்கிவிட்டு வெளியிட நான் ஒப்புக் கொண்ட பிறகே வெளியிடும் நிலை.

இது பற்றிப் பலருடனும் பல முறை விவாதித்தபோது தெரிய வரும் உண்மை ஒன்றுதான். முன்னெப்போதையும் விட, இன்று மீடியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கான இடம் சுருங்கிக் கொண்டே வருகிற்து. இதற்குப் பல சமூக, அரசியல் காரணங்கள் உண்டு. சார்புகளை மீறிப் பல்வேறு கருத்துக்களும் குறிப்பாக, பொதுக் கருத்துக்களுடன் முரண்படும் கருத்துக்களும் வாசகர் முன்பு வைக்கப்பட வேண்டும் என்ற பார்வை மங்கிக் கொண்டே வருகிறது.

இந்தச் சூழலில்தான் ‘தீம்தரிகிட ‘ இதழை மறுபடியும் கொண்டு வர விரும்புகிறேன். முதல் இதழ் விழிப்பு உணர்வு தினமான ஏப்ரல் 1 அன்று வெளிவரவேண்டும் என்பது என் அவா. தொடக்கத்தில் இரு மாத இதழாக தீம்தரிகிட ஓராண்டில் ஆறு இதழ்கள் வெளிவரும். ஆண்டு சந்தா: ரூ 100/-.

வெகுஜன இதழ்களின் வாசகர்களின் தீவிரமான அறிவு, ரசனைத் தேடல்களுக்கான உணவாக, உந்துதலாக ‘தீம்தரிகிட ‘ இருக்க வேண்டும் என்ற ஆதி நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. சிற்றிதழ்களின் நோக்கம், செய்ல்பாடுகளிலிருந்து இது வேறுபட்டது என்பதால் முரண்பட்டது அல்ல.எந்த நல்ல விஷயமும் பலரையும் சென்றடைய வேண்டும்; நல்ல விஷயங்களை நாடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிரந்தரமான நோக்கம்.கதை, கவிதை, அரசியல், சமூகம், திரைப்படம், நாடகம், இசை, கலைகள் என்று சகல துறைகளிலும் எப்போதும் போல ‘தீம்தரிகிட ‘ அக்கறை செலுத்தும்.

இதை சாத்தியப்படுத்த, தொடக்கத்திலேயே குறைந்தபட்சம் ‘தீம்தரிகிட ‘ இதழுக்கு ஐநூறு சந்தாதாரர்களாவது தேவை. நீங்களும் உங்கள் முயற்சியினால் இன்னும் சிலரும் சந்தாதாரர்களானால், இது சாத்தியம்தான். ஐநூறு சந்தாதாரர்கள் மார்ச் 15க்குள் கிடைக்காவிட்டால் தீம்தரிகிட இதழை வெளியிடும் என் திட்டம் தளர்ச்சியடையும். அந்த நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதில் உங்கள் பங்கை நீங்கள் அவசியம் ஆற்றவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடனும் ‘ தீம்தரிகிட ‘ இதழில் வெளிவரும் கருத்துக்கள், படைப்புகளுடனும் நீங்கள் சில சமயம் உடன்படலாம்; சில சமயம் முரண்படலாம். ஆனால் தமிழின் வெகுஜன வாசகர்களின் தீவிரமான அறிவு, ரசனைத்தேடல்களை ஊக்குவிக்க, வளர்க்க உதவுகிற ஒரு களம் தேவை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், தயவு செய்து இந்த முயற்சியை ஆதரியுங்கள்.அடுத்த ஓரிரு வாரங்களில் உங்களுடைய, உங்கள் நண்பர்களுடைய மணியார்டர்கள் வந்து குவியட்டும். அவற்றை அஸ்திவாரக்கற்களாகக் கொண்டு நானும் நண்பர்களும் தீம்தரிகிட இதழை, கோபுரமாக இல்லாவிட்டாலும் சிறு குடிலாகவேனும் கட்டுவோம்.

நன்றி.

அன்புடன்

ஞாநி

‘தீம்தரிகிட ‘ இரு-மாத இதழ். தனி இதழ் விலை: ரூ 15.ஆண்டுக்கு ஆறு இதழ்கள். தனி இதழ் விலை: ரூ 15.ஆண்டு சந்தா:ரூ. நூறு. வெளிநாடுகளுக்கு: USD 20 (அ) ரூ 1000. மணியார்டர்கள், காசோலைகளை ஞானபாநு பதிப்பகம் என்ற பெயருக்கு அனுப்ப வேண்டிய முகவரி: ஞானபாநு பதிப்பகம், 22 பத்திரிகையாளர் குடியிருப்பு சென்னை 600 041. தொலைபேசி: 91 44 4901208 email:emtharikida@hotmail.com. Cheques and money orders to be drawn in favour of Jnanabanu pathippagam and sent to Jnanabanau pathippagam 22 journalists colony tiruanmiyur chennai 600 041, Tamilnadu,India.

Series Navigation

ஞாநி

ஞாநி