காலந்தோறும் கலந்துறவாடும் மொழிகள்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

வெங்கட் சாமிநாதன்.


சரஸ்வதி ராம்நாத் அறக்கட்டளையின் தொடக்கவிழாவின் முதல் சொற்பொழிவாளனாக நான் அழைக்கப்பட்டுள்ளது எனக்குப் பெருமை. மொழிபெயர்ப்புகளுக்கு அவ்வளவாக கெளரவம் தராத காலம் இது. எப்போதும் இப்படி இருந்ததில்லை. ஆனால் நாம் இன்றைய தினத்தைப் பற்றித்தானே கவலைப்படவேண்டும் ‘ மொழிபெயர்ப்புக்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஏதும் தம் இலக்கியத்தை, சூழலை, பாதிக்கும் சக்தி இன்று இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில்–இந்நிலை முப்பதுக்களில், நாற்பதுக்களில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஐம்பது–அறுபதுக்களிலிருந்து நிலை மிகவும் மாறிவிட்டது. இம்மாறிய நிலையில், சரஸ்வதி ராம்நாத் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார். எந்த ஊக்கத்தில், என்ன பிரதிபலன் கண்டு தொடர்ந்து இக்காரியத்தில் ஈடுப்பட்டிருந்தார் என என் கண்களுக்கு பளிச்செனத் தென்படும்படி ஏதும் தெரியவில்லை. அவருக்கே தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன். ‘மொழிபெயர்ப்பாளர்கள் நிலவைப் போன்றவர்கள். வீட்டுக்குள் இழுத்துப் போர்த்தித் தூங்குபவர்களே அதிகம். யாரும் அண்ணாந்து நிலவைப் பார்ப்பதில்லை. ‘ என்று சொல்லி சரஸ்வதி ராமநாதன் தன் வேதனையை மறைத்துச் சிரிப்பார் என்று பாவண்ணன் எழுதியிருக்கிறார். தமிழருக்கு இம்மாதிரி வேதனையை மறைத்துச் சிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நிறைய அந்நிய மொழி படைப்புகளை, அநேகமாக ஹிந்தி வழியாக என்று எண்ணுகிறேன். தமிழுக்கு அவர் தந்திருக்கிறார். நிறைய தமிழிலிருந்தும் அந்நிய மொழியினருக்கு படைப்புக்களை அவர் எடுத்துச்சென்றிருக்கிறார்.

இப்போது கொஞ்ச வருடங்களாக தமிழின் வரண்ட நாடக நிலையைப் பற்றி நான் பேசி வந்திருக்கிறேன். தமிழில் நாடகத்துறையின் உயிர்ப்பிக்கும், தமிழனின் உள்ளிருக்கும் நடிப்புத்திறனின் மலர்ச்சிக்கும், வகை தரும் நாடகங்கள், இங்கு எழுதப்படவில்லை. ஒரு கோமாளிக் கூத்தாட்டம் நாடகம் என்றப் பெயரில் நடந்து வருகிறது எதை நான் நல்ல நாடகங்கள் என்று கருதுகிறேனோ அவை மொழிப்பெயர்க்கப்பட்டாவது தமிழுக்கு அளிக்கப்பட வேண்டும். அவை தமிழில் நாடக மேடை ஏற வேண்டும் என்று சொல்லி வந்திருக்கிறேன். அம்மாதிரியான நாடகங்களில் ஒன்று, தெரிந்தோ தெரியாமலோ சரஸ்வதி ராம்நாத்தின் மொழிபெயர்ப்புகளில் வந்துள்ளது. ஜயந்த் தால்வியின் ‘சந்தியா சாயா ‘ (மாலை நிழல்) என்ற மராத்தி நாடகம். தமிழில் நாடகத் துறையில் உள்ளோர் எவரும் இதைப் பற்றித் தெரிந்ததாகக் கூட காட்டிக் கொள்ளக்காணோம். பாவண்ணன் என்னிடம் ஒருமுறை சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார். கிரிஷ் கர்னாடின் நாடகங்கள் பலவற்றை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால் தமிழில் யாரும் அவற்றைப் பற்றி அக்கறைக் கொள்ளவில்லை. மொழி பெயர்ப்பதன் அர்த்தம் என்ன ? எதற்காக அவற்றை கன்னடத்திலிருந்தும் மராத்தியிலிருந்தும் தமிழுக்கு கொண்டு வருகிறோம்.

ஒரு காலத்தில் ரொம்ப பின்னோக்கி அல்ல, முப்பதுக்களில், நாற்பதுக்களில் வங்காளியிலிருந்து நிறைய மொழிப்பெயர்க்கப்பட்டன. ஸரத் சந்திரர், பங்கிம் சந்திரர், ரவீந்திரநாத் தாகூர் என இம்மொழிப்பெயர்ப்புகளுக்கு முந்திய தமிழின் பிரபலிய எழுத்துக்களையும் அதற்குப் பிந்திய எழுத்துக்களையும் பார்த்தால் தெரியும், இம்மொழிப்பெயர்ப்புகளின் தாக்கம் எத்தகையதாகயிருந்தது என. ஜனரஞ்சக, வணிகப் பத்திரிக்கைகளில் இவை வெளியாகின. த.நா.சேனாபதி, த.நா.குமாரஸ்வாமி, காஸ்ரீஸ்ரீ இவர்கள் எல்லாம் மற்ற தமிழ் எழுத்தாளர்கள் பெற்ற கெளரவத்தைப் பெற்றிருந்தனர். தமிழ் எழுத்துக்களில் குணச்சித்திரங்களும், பெண் பாத்திர வார்ப்பும், சம்பாஷணைகளும், இந் நாவல்களின் வருகையால் செப்பம் பெற்றன. இன்றைய வாசகத்தின் ராஷஸப் பெருக்கம் அன்று இருந்ததில்லை. இருப்பினும் மொழி பெயர்ப்புகள் ஆர்வத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன. படிக்கப்பட்டன. அந்நாட்களில்தான். அ.கி. ஜெயராமன் , பரந்தாமன் ஆகியோர் முயற்சிகளாலும், க.நா.சுப்பிரமணியத்தின் பரந்த படிப்பறிவின் காரணமாகவும், எத்தனையோ, ஐரோப்பிய ஆங்கில, அமெரிக்க Classics தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டன. பேர் லாகர்க்விஸ்ட் ஸெல்மா லாகர்லாஃப், என்ற பெயர்களை தமிழன் நா உச்சரிக்க முயற்சி எடுத்துக் கொண்டதென்றால் அது க.நா.சு காரணமாகத்தான். அவரது முயற்சி ஒரு புறம் இருக்க, அவற்றின் தேவையை பிரசுரகர்த்தர்களும், வாசகரும் நிர்ணயித்தனர். ஆர் ஷண்முக சுந்தரம் ஐம்பதுக்கு மேற்பட்ட ஹிந்தி, வங்க, படைப்புகளை மொழி பெயர்த்திருக்கிறார் என்று தெரிகிறது. தாரா சங்கர் பானர்ஜி க்கு ஞானபீட பரிசு கிடைத்தும், ஆர். ஷண்முக சுந்தரம் எனக்கு எழுதினார். பரிசு பெற்ற நாவலை வாங்கி அனுப்பும்படி, அவரது ஆர்வமும் செயல்முறையும் அப்படி இருந்தது.

ஸாகித்ய அகாடமியும், நேஷனல் புக் ட்ரஸ்டும் நிறைய மொழிபெயர்ப்புகளை தமிழுக்குத் தந்திருக்கின்றன. ஆனால், இந்த இரு நிறுவனங்களிலும் உள்ளவர்களுக்குத் தெரியும், தமிழில் மொழி பெயர்ப்புகளுக்கு சந்தை இல்லை என்று இவற்றால் தமிழ் இலக்கிய சூழலில், எழுத்தில் எத்தகைய தாக்கமும் இல்லை. இங்கிருந்து எழும் தேவையால் பிறந்தவையல்ல இம்மொழி பெயர்ப்புகள். இருப்பினும், சரஸ்வதி ராம்நாத்துக்கு நன்றி தெரிவிப்பது போல, இந்த நிறுவனங்களுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இதற்கு நேர் எதிராக, மராத்தியிலிருந்தும், கன்னடத்திலிருந்தும் தலித் எழுத்துக்கள் குறிப்பிடும் அளவுக்கு, அதாவது தமிழ் சூழலில் குறிப்பிடப்படும் அளவுக்கு, மொழி பெயர்ப்புகளாக வரத் தொடங்கியுள்ளன. இதே போல ஆப்பிரிக்க லத்தின்- அமெரிக்க படைப்புகளும்கூட. இவற்றில் லத்தின் அமெரிக்க படைப்புக்களை அவற்றின் மொழி பெயர்ப்புக்களைத் தனித்துக் குறிப்பிட வேண்டும். இவற்றின் பாதிப்பைப் பற்றியும், இம்மொழி பெயர்ப்புகளின் குணத்தைப் பற்றியும், சில சொல்ல வேண்டும். இவற்றின் பிரவாஹம் தலை கீழான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. உத்வேகத்திற்கு பதிலாக, பாவனைகள் உதவுவதில்லை. பரபரப்பு இதன் மற்றொரு பரிமாணம். இப்போதைய இதன் தாக்கத்தில், எனக்கு அதிக நம்பிக்கையில்லை. இதன் ஜீவன் இன்னும் எத்தனை காலத்திற்கு என்பதும் எனக்குள் கேள்வியாகவே இருக்கிறது ஆனால், ஆப்பிரிக்க படைப்புகளின், தலித் இலக்கியத்தின் வரவில் எனக்கு ஈடுபாடு அதிகமாக இருக்கிறது. இது சமீபத்திய பார்வையில் ஒரு நீண்ட காலத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், முதல் ஐந்து பத்துக்கள் எனக்கு மிகுந்த சுவாரஸ்யமான காலமாகவே படுகின்றது.

மொழிபெயர்ப்பு என்பது மிகுந்த உத்வேகத்தோடு நடந்த காலகட்டம் அது என்று தோன்றுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மொழிபெயர்ப்பிலும் தழுவலாகவும் தமிழுக்கு வந்தன. பேராசிரியர்களின் நாடகச்சுவை ஈர்ப்பினாலும், ஆங்கில/தமிழ் இலக்கிய ஈடுபாட்டினாலும் பிறந்தவை அவை. அத்தோடு, ப.சம்பந்தமுதலியாரின் நாடக மேடைத் தேவைகளினாலும். நிறைய சம்ஸ்கிருத நாடகங்கள், ஒரே நாடகத்திற்குப் பல மொழிபெயர்ப்புகள் என்று வந்தன. காளிதாஸனின் நாடகங்கள் பல மொழிபெயர்க்கப்பட்டன இவை நாடகங்களாகவே இருந்த காரணமும், யோசித்துக் கண்டறிய வேண்டிய சுவாரஸ்யமான தேடலாக இருக்கும். அந்த சமயம்தான் திருவிதாங்கூரில் பாஸ்கரரின் நாடகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பரத நாட்டிய சாஸ்திரம். ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை வேண்டியது. அதன் சுவடியும் திருவிதாங்கூரில்தான் கிடைத்தது. அந்த சமயத்தில்தான் 1905லிருந்து இருபதுக்களின் கடைசி வரை, ஒரு அதிசய நிகழ்வு காணக் கிடைத்தது. மகாபாரதம் முழுதும் சுமார் 8000 பக்கங்கள் பிரம்மாண்டம், தமிழில் 14-15 வால்யூம்களில் வெளியிடப்பட்டது. எந்த சந்தையை நோக்கி ? எந்த உத்வேகத்தின் தூண்டுதலில் இது நிகழ்ந்தது ? சாதாரணமாக சந்தை, வாசக வரவேற்பு, படித்தோர் எண்ணிக்கை இலக்கிய ஆர்வம் என்ற கணக்கிலெல்லாம், வர மறுக்கும் நிகழ்வு இது. இனி இம்மாதிரி ஒரு நிகழ்வு நாம் பார்க்கக் கிடைக்குமா என்பது சந்தேகம். இவ்வளவும் ஒரு 30-40 வருட கால நீட்சிக்குள் தான் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் கட்டமும், தேசிய போராட்டத்தின் கொதிநிலையும், சங்கீதம், நாட்டியம் போன்ற துறைகளில் நிகழ்ந்த சாதனைகளும் எல்லாமும் இக்காலகட்டத்தில் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு குவிந்து விடுகின்றன. ஒரு குட்டி மறுமலர்ச்சிதான். இருப்பினும் இவ்வளவு சாத்யங்களை அது உள்ளடக்கிக் கொண்டு விட்டது.

மொழிபெயர்ப்பு என்பதே நமக்கு ஆங்கில உறவு தந்தது. திருவாசகமும், திருக்குறளும் மொழிபெயர்க்கப்பட கிறிஸ்துவ மத குருக்கள் காரணமாக இருந்தார்கள். ஆல்பர்ட் ஸ்வைட்ஸரை திருக்குறள் வெகுவாகப் பாதித்திருக்கிறது, தன்னுடைய புத்தகமொன்றில் , (1952-ல் படித்தது, தலைப்பு ஞாபகம் வரவில்லை) திருக்குறளைப் பற்றி ஒரு அத்தியாயம் முழுதுமே பேசுகிறார். ஸர் வில்லியம் ஜோன்ஸ் மொழி பெயர்த்த ஸாகுந்தலம் நாடகம், ஜெர்மானியருக்கு எடுத்துச் சென்றது யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது மேற்கத்திய நாடுகளின் பார்வையில் ஆழப்பதிந்தது. முற்றிலும் ஒரு புதிய அநுபவமாக அது இருந்தது. மாக்ஸ் ம்யூல்லர் மொழிபெயர்க்க வேதங்களும் உபநிஷத்துக்களும், ஜெர்மானிய தத்துவ சிந்தனைகளை வெகுவாக பாதித்தது. உதாரணமாக ஆர்தர் ஷோப்பன் ஹோவர். பால் க்ளீ, வாஸிலி காண்டின்ஸ்கி, ஜான் மிரோ, போன்ற சைத்ரிகர்களின் சைத்ரிக உலகம், உபநிஷத்துக்களின் தாக்கம் பெற்றது. இது பற்றி எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. ஸாகுந்தலம் தன்னை எவ்வளவு கவர்ந்துள்ளது என்பது பற்றி பேசியிருக்கிறார். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் ? இதைத்தான் மொழிபெயர்ப்புகளின் பாதிப்பு என்கிறேன். இதேபோன்ற பாதிப்பு, 40க்களின் வங்க, ஹிந்தி நாவல்கள் தமிழ் எழுத்துக்களை பாதித்து குணமாற்றத்தைத் தந்தது பற்றி சற்று முன் சொன்னேன். கிரேக்க நாடகங்களை மொழி பெயர்த்த கில்பர்ட் முர்ரே, ரஷ்ய நாவல்களை, குறிப்பாக டாஸ்டாய்வ்ஸ்கியை மொழிபெயர்த்த கான்ஸ்டன்ஸ் கார்னெட், மற்றும் ஸ்காட் ஃபிட்ஜெரால்ட், போன்றவர்கள் தம் மொழிபெயர்ப்பின் பலத்திலேயே புகழ் பெற்றவர்கள். த. நா. குமாரஸ்வாமி, த. நா. சேனாபதி, கா. ஸ்ரீ. ஸ்ரீ போன்றவர்கள் தமிழ் எழுத்தின் சந்தர்ப்பத்தில் பெயர் பெற்றது போல.

மற்ற மொழிகளில் உள்ள படைப்புகளின் தாக்கம் என்று பேசும் பொழுது அது நேரடியான மொழி பெயர்ப்பின் வழியே தான் வரும் என்பது, நம் மரபில் இல்லாதது. முன்னர் நான் சொல்ல ஆரம்பித்தேன். மொழி பெயர்ப்பு நமக்கு ஆங்கிலேயரின் தொடர்பால் வந்தது என்று.

நமது மரபே வேறு. அந்நிய மொழி கற்போம். படைப்புகளைப் பரிச்சயப் படுத்திக் கொள்வோம். அவற்றை ஆழ உள்வாங்கிக் கொண்டு, நம் மொழியில் அவற்றை நாம் திரும்ப உருவாக்குவோம். இதை நாம் இன்று தழுவல் என்போம். தழுவல் என்று சொல்வது தவறு, தழுவல் என்பது எழுதுபவரின் திரும்ப உருவாக்கம் செய்பவரின், சிருஷ்டித் திறனை கணக்கில் எடுத்துக் கொள்ளாததாகும். இதை நாம் மிக வெற்றிகரமாக நூற்றாண்டு நூற்றாண்டுகளாக செய்து வருகிறோம்.

கம்பன் செய்துள்ளதை தழுவல் என்பதா, மொழிபெயர்ப்பு என்பதா ? இது தான் நம் மரபு. ஆனால் மொழி பெயர்ப்பு செய்யும் காரியத்தை மிக வெற்றிகரமாக இம்மரபு செய்துவிடுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பனின் செல்வாக்கை என்ன என்பது ? அது ஒரு சிகரம். உலக மொழிகளின் மிகச்சில சிகரங்களில் கம்பனும் ஒன்று.

தழுவல் என்று சொல்வது தவறு மாறாக அது, உள்வாங்கி, பின் வெளியிடு பெற்ற சிருஷ்டித் திறன் என்றேன்.

நம் எல்லோருக்கும் தெரியும். தமிழ் மொழியின் தமிழனின் மிகச்சிறந்த வரிகளாக, புறநானூற்றிலிருந்து கணியன் பூங்குன்றனாரின் கவிதை ஒன்று ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர் ‘ என்று தொடங்கி ‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ‘ என்று முடிகிறது. இது ஹிதோபதேசத்தில் வரும் ஒரு பகுதியின் எதிரொலி என்கிறார் கே. எஸ். ஸ்ரீனிவாசன், இதற்கு வையாபுரிப்பிள்ளையின் பின்பலமும் உண்டு. சரி, இன்னொன்று புறநானூற்றிலிருந்து இன்னொரு பாடல்.

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே.

இதில் கொஞ்சம் male chauvinism வாடை அடிக்கிறது. இருந்தாலும், இதற்கு மறுபதிப்பாக, அல்லது மூலமாக, எது மூலம் எது பதிப்பு என்பது நம் மனச்சாய்வுகளைப் பொருத்தது.

காமெ வ யதி வ ரன்னே

நின்னே வா யதி வ தலெ

யத்தாஷந்ஹொ விஹராந்தி

தம் பூமாம் ரணீயகம் (தம்ம பதம்)

இது விசாகன், புத்தரிடம் சாவகன் இருக்கும் காட்டைப் பற்றிக் கேட்டபோது சொன்னது.

காடாயிருந்தால் என்ன, வேற எதாகத் தான் இருந்தால் என்ன, நாம் வசிக்கும் பூமியை ரமணியமாக்குவது நாம்தான். என்று புத்தர் சொன்னாராம். ஆக அந்த காலத்தில், 2000 வருடங்களுக்கு மேலாக, பீஹாரின் ஏதோ ஒரு கோடியில் பேசப்பட்டதும், இங்கு தமிழ் பேசும் தெற்குக் கோடியில் பேசப்படுவதும் ஒன்று மற்றதன் அச்சான எதிரொலியாகத்தான் தோன்றுகிறது. ஆண்டி ராமசுப்பிரமணியம், தன் கட்டுரைகள் ஒன்றில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டின் புத்தமத நூலான ‘தேரி காதா ‘ வில் உள்ளதாக ஒரு பகுதியைச் சுட்டுகிறார். அதில் புத்த சன்யாசினி செய்யும் உபதேசம் சொல்லப்படுகிறது. ‘நீ கண்ணிருந்தும் குருடனைப் போல் நடந்து கொள்கிறாயே, திரையில் விழும் நிழல் உருவங்களை ஆர்வத்தோடு பார்க்கும் ஜனக்கூட்டத்தைப் போல கனவு போன்றே மாயையானவற்றின் மீது நீ இவ்வளவு பற்றுக் கொள்கிறாயே ‘ என்று சொல்வதாக இருக்கிறது. இங்கு சுட்டப்படுவது தோல் பொம்மலாட்டத்தின் நிழலை. இது தென்னாட்டில் மாத்திரமே அக்காலங்களில் பயிலப்பட்டது. இப்போதும் இது தென்னிந்தியருடனேயே ஐக்கியப்படுத்தப்படும் கலை. வடநாட்டில் எங்கும் தோல் பொம்மலாட்டம் இருந்ததாக செய்தியில்லை. பாலி மொழியில் இந்த பெளத்த நூலில் தோல் பொம்மலாட்டம் ஒரு உபதேசத்திற்கான திருஷ்டாந்தமாக பயன்படுகிறது.

வேறு எந்த இந்திய மொழியிலும்விட இராமாயணமும், மகாபாரதமும், தமிழில் தான், மொழிபெயர்ப்பு என்றில்லாவிட்டாலும், மறுபடைப்பு என்று சொல்லலாம். மற்ற இந்திய மொழிகளில் எல்லாம் இது நிகழ்ந்தது 15ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான். சங்க காலத்திற்கு சற்று முன்னால் எப்பவோ தமிழில் இராமாயணம் வந்தாயிற்று. இரண்டு இராமாயண வகைகள், ஒன்று ஜைன இராமாயணம். மகாபாரதமும் இரண்டு வந்தாயிற்று. குருஷேத்திரத்தில் நடந்த பாரதப் போரின் போது இருதரப்பு சேனைகளுக்கும் உணவளித்ததாக சேர மன்னன் புகழப்படுகிறான். இந்தப்பாடலே இக்காப்பியங்கள் எவ்வளவு ஆழமாக, தமிழ் சமூகத்தில் வேர் பாய்ச்சியிருந்தன என்பதற்கு சாட்சி அகப்பாடல்களுக்கும், காதாசப்தசதிக்கும் இடையே காணப்படும், ஒற்றுமைகள் நிறைய, யார் பெயரும் சொல்லப்படாமல், பாட்டுடைத் தலைவன், தலைவி தோழி இவர்களுக்குள்ளேயே குறிப்புணர்த்தல்களால் நடக்கும் காதல் நாடகம் தான், அகப்பாடல் ஒவ்வொன்றும் காதாசப்தசதியிலும் தமிழ் அகத்துறைப் பாடல்களிலும் பாடும் முறை, பாடல் உத்திகள், பாடப்படும் பொருள் இவை அனைத்தும் ஒன்றேயாக இருப்பது ஓர் புதிர். எதற்கு எது மூலம் ? எது, எதன் பிரதி ? அகப்பாடல்கள் பாடிய புலவர்கள் பலரின் பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இல்லை. ராஜபாளையத்திலிருந்து மு.கு.ஜகன்னாத ராஜா காதா சப்தசதியின் 700 பாடல்களிலிருந்து சுமார் 500 பாடல்களை பா வடிவிலேயே மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ஹால என்ற சதவாஹன மன்னன் தொகுத்தது இது. எது மூலம், எது பிரதி என்ற சண்டை ஒரு புறம் இருக்கட்டும், அகப்பாடல்கள் தமிழில் பக்திப்பாடல்களுக்கு, பக்தி இயக்கத்திற்கு வழி வகுத்தது, இன்னும் சரியாக பரிணாமம் பெற்றது என்று சொல்லவேண்டும். அதுவும் எத்தகைய பக்தி இயக்கம் ? இந்திய துணைக் கண்டம் முழுதுக்குமான, இலக்கியம், மொழி வளர்ச்சி, சிற்பம், நாட்டியம், சங்கீதம் போன்ற எண்ணற்ற கலைகளின் பிறப்பிற்கும், அதன் பின்னர் வந்த பல நூற்றாண்டுகளுக்கு, அவற்றின் வளர்ச்சப்ி பாதையையும் அமைத்துக் கொடுத்தது, பக்தி இயக்கம்தான் இது தமிழ் நாட்டின் கொடை.

ஆனால் சமஸ்கிருதத்தில், காதா சப்தசதியின் தாக்கம், பின் வந்த நூற்றாண்டுகளில் வெறும் காம ரஸப்பாடல்களுடனேயே நின்றுவிட்டது. எண்ணற்ற அமருசதகங்கள், சுபாஷ்தாணிகள் இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், மொழிபெயர்ப்பு என்று ஊடகம் இல்லாமலேயே, உள் வாங்கி பின் மறுஆக்கம் செய்தல் என்ற முறையில் எங்கெங்கோ நிகழ்ந்த இலக்கிய கலை ஆக்கங்கள் தமிழுக்கும், தமிழ் படைப்புகள் மற்ற மொழி பிராந்தியங்களுக்கும் பரவின. கொடுக்கல் வாங்கல், சாமிநாதய்யரின் சிலப்பதிகாரப் பதிப்பில், அடியார்க்கு நல்லார் பட்டியலிடும் நூல்கள். இசைப்பற்றி நாட்டியம் பற்றி, தன் காலத்தில் மறைந்த, தனக்குக் கிடைத்த நூல்களின் பட்டியல், அவரது 12ம் நூற்றாண்டு தமிழில் இருந்தது மறைந்தது என்றிருக்குமானால், தமிழ் அன்று மிக வளமான மொழியாகத்தான் இருந்திருக்கிறது. பரதனின் நாட்டிய சாஸ்திரம் மற்ற பிராந்தியங்களின் சங்கீத நடன முறைகளைப் பற்றி தேசி என்று விவாதிக்கிறது. காஷ்மீரத்து அபிநவ குப்தர் மத்திய இந்தியாவில் தேவகிரி நவாப் தர்பாரில் இருந்துக் கொண்டு தேவாரப் பண்களைப் பற்றி ஆராய்கிறார். அவருக்கு அவை கிடைக்கின்றன 13ம் நூற்றாண்டில். எப்படி ? 11ம் நூற்றாண்டில் கம்பன் பரதனின் சொற்களையே — (யதோ ஹஸ்தா, ததோ த்ருஷ்டி) ‘கை வழி நயனம் செல்ல, கண் வழி மனமும் செல்ல ‘ என்று பாடினால், அது மொழிப் பெயர்ப்பு திறனின் உச்சம் என்று சொல்ல வேண்டும். அவனுக்கு சமஸ்கிருதம் தெரியுமா ? பரதனைப் படித்திருந்தானா ? என்ற கேள்விகளை, அண்டை மாநிலமான தெலுங்கு தேசத்தில் என்ன எழுதப்படுகிறது என்று தெரியாத ஒரு காலத்தில் நாம் இருந்துகொண்டு கேள்வி எழுப்புவது சரி எனத் தோன்றுகிறது. ஆனால், பஞ்சாப் பிரதேசத்தில் பேசப்பட்ட பைஸாஸ மொழியில் எழுதப்பட்ட பிருஹத் கதா, தமிழில் கோவைப் பகுதியின் கொங்கு வேள் பெருங்கதையாகத் தந்திருந்தார் என்று புரிந்து கொள்ளும் அந்த நூற்றாண்டு தமிழகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது வேறு தமிழகம். எட்டாம் நூற்றாண்டு தமிழகம்.

இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது. பஞ்சாப் எங்கே ? தமிழ்நாடு எங்கே. தமிழனுக்கு பரிச்சயமாகியிருக்கக்கூடும் பிராகிருதமோ, வடமொழியோ கூட அல்ல. பைஸாஸம் இப்பரஸ்பர கொடுக்கல் வாங்கல் எப்படி நிகழ்ந்தது ? நாம், நம் ஆரம்ப வகுப்புகளில் நம் சரித்திர பாடங்களில் படித்திருக்கிறோம். இந்திய உப கண்டத்தின் குறுக்கே ஓடும் விந்திய மலைத் தொடரும், நர்மதை, தப்தி நதிகளும் நம் சரித்திரப் பிரவாகத்தை இரண்டாகப் பிரித்தன. வடநாட்டில் நிகழ்ந்த அந்நிய படை எடுப்புகளுக்கும் கொந்தளிப்புகளுக்கும் ஆளாகாமல் தென்னிந்தியா அமைதியாகவே இருந்தது, ஒப்பிட்டுப் பார்க்கும் போது என்று சொல்லப்பட்டது நமக்கு. என் அப்பா சொல்வார். அவரது இளமைக்காலத்தில், அதாவது 1910–20 க்களில் காசிக்குச் செல்பவர்கள் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் செல்வார்களாம் ஏனெனில் திரும்பி வருவது நிச்சயமற்றது. என் பாட்டி சொல்வாள் அவள் காலத்தில், திருநெல்வேலிப் பக்கம் இருப்பவர்கள் தஞ்சைப் பக்கம் உள்ள குடும்பங்களுக்கு தம் பெண்ணை கொடுக்கத் தயங்குவார்களாம். அவ்வளவு தூரதேசத்திலே யாராவது பெண்ணைக் கொடுப்பார்களா ? என்பார்களாம். இது இந்த நூற்றாண்டின் ஆரம்ப 10-20 மக்களைப் பற்றியது. கொங்கு வேளிரின் பெருங்கதை எழுதப்பட்டது எப்போது ? வையாபுரிப் பிள்ளை எட்டாம் நூற்றாண்டு என்று சொல்கிறார். சங்கராச்சாரியார் இந்தியா முழுதும் சென்று மடங்களை ஸ்தாபித்த காலம். இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே சேரமன்னன் ஒருவன் குருஷேத்திரப் போருக்கு சாப்பாட்டுப் பொட்டலங்கள் அனுப்பியிருக்கிறான்.

‘நில் ஆங்கு நில, ஆவரு, இவர் தரல் எல்லா ‘ நீ

நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய். இவ்வழி

ஆறு மயங்கினை போறி ‘ நீ வந்தாங்கே

மாறு ‘ என்று தலைவி , தலைவனை, அவன் மனதுக்குகந்த பரத்தையர் வீட்டுக்கே திருப்பி அனுப்புகிறார். இதே கேள்வியை இன்று கதக் ஆடும் நர்த்தகி, காஹே கோ மோரே கர் ஆயே, ‘ நீ ஏன் என் வீட்டுக்கு வந்தாய் ? ‘, என்ற பாட்டுக்கு ஆடுகிறாள். பெரியாழ்வார் இல்லையென்றால் தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் இல்லை. பாகவதம் இல்லை. பாகவதம் இல்லை எனில் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வடநாட்டில் மலர்ந்த பக்தி இயக்கமும் இல்லை. பக்தி இயக்கம் இல்லையெனில் பேச்சு மொழியாக இருந்த வட இந்திய மொழிகள் அத்தனையும் இலக்கிய மொழியாகப் போவதுமில்லை. பக்தி இயக்கம் தமிழ் நாட்டின் கொடை. மொழிபெயர்ப்பு என அன்று இல்லைதான். வாய்மொழி மரபில், மொழி பெயர்ப்பு எப்படி நிகழும் ? மறு ஆக்கங்கள் தான் நிகழும்.

வாய்மொழியில் சாத்தியமான, அன்றைய பரஸ்பர வளமூட்டல், இன்று நிகழ மறுக்கிறது இன்று. 2001-ல் நமக்கு மலையாளத்தில் என்ன நடக்கிறது என்று ஏதோ கொஞ்சம் தெரியும். தகழியும் எம்.பி.வாசுதேவ நாயரும். ஆனால் ஓ.வி. விஜயனைத் தெரியாது. ஆனால் மலையாளிகளுக்கு நம்மை அந்த அளவு கூடத் தெரியாது. ஆந்திராவில் என்ன நடக்கிறது என்பதே நமக்குத் தெரியாது. நம்மைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது.

சரஸ்வதி ராம்நாத் ஹிந்தி மொழியிலிருந்து தமிழுக்கு கொண்டு வர தன் வாழ்நாள் முழுதும் செலவிட்டார். அதில் கொஞ்ச நாட்கள் ஒதுக்கி தமிழிலிருந்து ஹிந்திக்குக் கொண்டு சென்றார். ஆனால் தமிழிலிருந்து ஹிந்திக்கும், ஹிந்தியிலிருந்து தமிழுக்கும் கொண்டு வர வாழ்நாள் முழுதும் வேண்டாம், ஒரு சில மாதங்களாவது செலவழித்தவர்கள் உண்டா ? பாவண்ணனை நமக்குத் தெரியும் அவரை கர்னாடுக்குத் தெரியும், சித்தலிங்கையாவுக்குத் தெரியும் இன்னும் பலருக்கு இப்படி. பங்களூரில் இருக்கும் உங்களையெல்லாம் கேட்க எனக்கு ஒரு கேள்வி உண்டு. தமிழிலிருந்து கன்னடத்துக்கும், கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தரும் கன்னடத்து பாவண்ணன் யாரையாவது உங்களுக்கு தெரியுமா ? தெரியாது என்றால். ஏன் தெரியாது ? அப்படி யாருமில்லை என்றால். ஏன் இல்லை ? அவர்களது கோப்பை நிறைந்து வழிகிறது. நமது காலி என்பதாலா ? அல்லது அப்படி அவர்கள் நினைப்பதாலா ?

***********

(மறைந்த மொழிபெயர்ப்பாளர் திருமதி. சரஸ்வதி ராம்நாத் அவர்களின் பெயரில் பெங்களூர் தமிழ்ச் சங்கமும் சரஸ்வதி ராம்நாத்தின் குடும்பத்தாரும் இணைந்து ஓர் அறக்கட்டளையை நிறுவி இருக்கிறார்கள். அதன் தொடக்க விழாவும் சரஸ்வதி ராம்நாத்தின் மொழி பெயர்ப்பு நாடகங்களின் தொகுப்பான ‘கடற்பறவைகள் ‘ (காவ்யா வெளியீடு) நூல் வெளியீட்டு விழாவும் பெங்களூர் தமிழ்ச்சங்க வளாகத்தில் 5.8.2001 அன்று நடை பெற்றது. அப்போது தமிழின் முக்கிய விமர்சகர்களுள் ஒருவரான வெங்கட் சாமிநாதன் அறக்கட்டளை சொற்பொழிவை நிகழ்த்தினார். அதன் கட்டுரை வடிவமே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. )

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்