டா(Da) — திரைப்பட விமர்சனம்

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

சேதுபதி அருணாசலம்



சில புத்தகங்களைப் பார்த்தவுடன், அந்த புத்தகத்தைப் பற்றியோ, எழுத்தாளரைப் பற்றியோ எந்த விவரமும் தெரியாமல், ஏதோ உள்ளுணர்வால் உந்தப்பட்டு நாம் வாங்கிவிடுவோம். அப்படி எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாங்கப்பட்ட புத்தகம் நன்றாக அமைந்துவிட்டாலோ, அதைப் போன்றதொரு சந்தோஷம் இருக்கவே முடியாது. ஏதோ நம் ‘கண்டுபிடிப்பு’ என்ற சந்தோஷமும், பெருமையும்
மனதில் அலைமோதும். அப்படி நான் வாங்கி சந்தோஷப்பட்ட புத்தகம் ‘Don’t read this book if you are stupid’. டைபர் ஃபிஷர் (Tibor Fischer) என்ற இங்கிலாந்து எழுத்தாளரின் சிறுகதைத் தொகுதி. பொதுவாகவே பின்நவீனத்துவ எழுத்து என்றாலே, எல்லோரும் ரசிக்கும்படி எளிமையாக இருக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது என்பது போன்ற கருத்து பலரிடம் இருக்கிறது.
பின்நவீனத்துவப் படைப்புகளும்  எளிமையாக இருக்கமுடியும் என்பதற்கான ஒரு உதாரணம் டைபர் ஃபிஷரின் இந்த சிறுகதைத் தொகுதி. பரந்துபட்ட தளங்களும், ஒரு மாயக்கள்ளன் போல எல்லா இடங்களிலும் விரவியிருக்கும் நகைச்சுவையும் சாதாரண சிறுகதைகளை, நல்ல சிறுகதைகளாக உயர்த்தியிருக்கின்றன.
புத்தகங்களைப் பொருத்தவரை இந்த உள்ளுணர்வுகளின் சோதனை முயற்சிகளை எளிதாக மேற்கொள்ளலாம். ஆனால், விலை உயர்ந்த டிவிடி (DVD)-க்களில் சோதனை முயற்சிகள் செய்யும் தைரியம் எனக்கின்னும் வரவில்லை. வெகு அரிதாகத்தான் நான் அந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன்.
அப்படி நான் வாங்கியதற்காக சந்தோஷமும், பெருமையும் கொள்ளும் திரைப்படம் “டா” (Da). அயர்லாந்தில் நான் தங்கியிருந்தபோது, ஐரிஷ் இசை, புத்தகங்கள், திரைப்படங்கள் இவற்றைப்  பற்றி அறிந்து கொள்ளவேண்டுமென்று ஆர்வம் (அல்லது ஆர்வக்கோளாறு?) இருந்தது. கெர்ரி (Kerry) என்ற மிக அழகான ஊருக்கு நான் சென்றிருந்தபோது, அங்கிருந்ததொரு கடையில் என் கண்ணில் பட்டது இந்த ‘டா’ திரைப்பட டி.வி.டி. அட்டையிலிருந்து இத்திரைப்படத்தின் ‘மூலம்’ ஒரு அயர்லாந்துக்காரர் எழுதிய நாடகம் என்று தெரிந்து கொண்டவுடன், யோசனை செய்யாமல் வாங்கினேன்.
வீட்டுக்கு வந்தபின், ஒரு அலட்சிய மனோபாவத்துடன் தான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலேயே, படத்தின் டைட்டில் இசை என்னைக் கட்டிப்போட்டுவிட்டது. ஐரிஷ் நாட்டுப்புற இசையையும், மேற்கத்திய க்ளாஸிகல் இசையையும் மிக அழகாக ஒருங்கிணைத்திருந்தார் இசையமைப்பாளர். இசையமைப்பாளருக்கு பாக்(Bach)-கின்
பாதிப்பு இருந்தது நன்றாகத் தெரிந்தது. (அது ஒருவிதத்தில் சந்தோஷம் தருவதாகவும் இருந்தது). டைட்டில் முழுவதும் கேமரா ஒரு அறையிலிருக்கும் மூக்குக்கண்ணாடி, பேனா, பழங்காலத்து ஐரிஷ் டைஜஸ்ட் புத்தகம், புகை பிடிக்கும் பைப், மேசை விளக்கு, சுவரிலிருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை மிக மெதுவாக விழுங்கியது. டைட்டில் முடிந்தவுடன் மீண்டும் ஒருமுறை ரீவைண்ட் செய்து கேட்டேன்; பார்த்தேன். டைட்டில் இசை, படக்காட்சி – இந்த இரண்டு மூலமாகவே மிகப்பெரும் உணர்வுகளை இந்தத் திரைப்படம் என் மனதில் ஏற்படுத்திவிட்டதை உணர்ந்தேன். சினிமாவை ஒரு விஷுவல் ஊடகமாகப் புரிந்து கொண்ட ஒரு இயக்குநரால் மட்டுமே, அது போன்றதொரு உணர்வுக் கட்டமைப்பு சாத்தியம்.
இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எல்மர் பெர்ன்ஸ்டெய்ன் (Elmer Bernstein) ஒரு மிகப் பிரபலமான ஹாலிவுட் இசையமைப்பாளர் என்று பிறகு தெரிந்து கொண்டேன். 14 முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ஒரு முறை வெற்றியும் பெற்றிருக்கிறார்.
டைட்டில் முடிந்தது. படத்திற்குள் வருவோம்.
அயர்லாந்தில் கதைக்களமாகக் கொண்ட இத்திரைப்படம் அமெரிக்கத் தயாரிப்பு நிறுவனத்தால் 1988-இல் தயாரிக்கப்பட்டது. திரைப்படத்தின் இயக்குநர் மாட் க்ளார்க் (Matt Clark).
அயர்லாந்தில் அப்பாவை ‘டா’ என்று அழைப்பார்கள். எனவே படத்தின் தலைப்பிலிருந்தே இந்தப் படம் ஒரு அப்பாவைப் பற்றியது என்று புரிகிறது. படத்தின் கதை மிகவும் சாதாரணமான ஒன்று. தன் அப்பாவின் சாவுக்குத் தன் பூர்விக ஊருக்கு வரும் நடுவயது மகன் சார்லி, தன் அப்பாவைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.
அப்பாவின் சாவு என்றதும் ஏதோ பிழியப் பிழிய சோகம் சொட்டும் படம் என்று நினைக்க வேண்டாம். சோகம் என்பது மருந்தளவுக்குக் கூட வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. அப்பா இறந்த செய்தி அமெரிக்காவிலிருக்கும் மகனுக்குத் கிடைத்தவுடன், ‘ஓ’ என்று அழுவதோ, கத்திப் புலம்புவதோ, கண்ணில் நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, அதைக் கீழே சிந்தாமல் வசனம் பேசும் வித்தைகளெல்லாமோ காட்டவில்லை. மகன் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி ‘அவர் போய்விட்டார்!’ (He is gone!) என்கிறார். அவ்வளவே!
ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, ஒரே ஒரு மகன் இவர்களுக்கிடையேயான உறவை வெகு இயல்பாக, பொதுவாக நம் வீட்டிலெல்லாம் இயல்பாக நடக்கும் விஷயங்களைக் கொண்டு காண்பித்திருக்கிறார்கள். அப்பா, மகன் உறவு என்றதுமே, அதில் அடிதடி, குத்து வெட்டு என்ற வன்முறை இலக்கணங்களோ, ‘இது ஒரு பாசப்போராட்டம்’ என்ற போஸ்டர் விஷயங்களோ இல்லை. ஒரு சிறுவன் வளர்ந்து
இருபது வயது ஆகும் வரை ஒரு நான்கைந்து சம்பவங்களைக் காட்டியிருக்கிறார்கள்.
சாதாரண கதை, எளிமையான கதை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். இப்படிப்பட்ட சம்பவங்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு கதைக்குத் தேவைப்படும் முக்கியமான விஷயங்கள் யாவை?
நல்ல திரைக்கதை. நடிகர்களின் திறமையான பங்களிப்பு.
இங்கேதான் நம்மை வியப்பிலாழ்த்துகிறார் இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் ஹூ லியோனார்ட் (Hugh Leonard). இத்திரைப்படம் ஒரு நாடகத்தை மூலமாகக் கொண்டது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த நாடகத்தை எழுதியவர் இந்த லியோனார்ட்தான். அந்த நாடகமும் இவரெழுதிய ‘ஹோம் பிஃபோர் மிட்நைட்’ (Home before midnight) என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதை கிட்டத்தட்ட லியோனார்ட்டின் சுயசரிதை என்று சொல்கிறார்கள்.
நாடகமாக்கப்பட்ட புதினத்தைத் திரைப்படமாக எடுப்பதில் என்ன பெரிய ஆச்சரியம் என்றுதானே யோசிக்கிறீர்கள்? ஆச்சரியம் இந்தத் திரைக்கதையில்தான். தன் அப்பாவின் சாவுக்கு அயர்லாந்துக்கு வரும் மகன், அடக்கி வைக்கப்பட்ட துயரத்தாலோ என்னவோ, தன் அப்பா தன்னுடனே இருப்பது போல் உணர்கிறார். அவரைப் பார்க்கிறார். அவருடன் பேசுகிறார்.
அதுமட்டுமில்லாமல், தன் இளமைக்காலத்தில் நடந்த விஷயங்களை ஒரு மீள்பார்வை போல் தன் முன்னே நடக்கக் காண்கிறார். அதில் தானும் ஒரு பாத்திரமாக இருக்கிறார். தன் அப்பாவிடம், ‘பார்.. உனக்கே நல்லா இருக்கா? ஒரு சின்னப் பையனைப் போய் இப்படி படுத்தி எடுக்கிறீர்களே? உன்னால்தான் அவன் மனசு ஒடிஞ்சு போய்ட்டான்’ என்றெல்லாம் சொல்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு சிக்கலான திரைக்கதையை, கொஞ்சம் இழை பிசகினாலும், மகனுக்கு மனநோய் என்று எல்லோரும் தப்பாக நினைத்துவிடக்கூடிய ஒரு விஷயத்தை மிகத் திறமையாக திரைக்கதையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் லியோனார்ட். படத்தின் மிகப்பெரிய பலம் இந்தத் திரைக்கதை. இந்தப் படத்தின் நாடக வடிவம், பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறது.
இப்படி மகனே ஒரு பாத்திரமாகவும் அமைந்து, பெற்றோரின் பார்வை, ஒரு சிறுவன்/இளைஞனின் பார்வை இரண்டையும் ஒரு மூன்றாம் மனிதராக நின்று ‘வேடிக்கை’ பார்க்கிறார். நிறைய இடங்களில் அப்பா (பெற்றோர்) மேல் கோபப்படுகிறார்; பரிதாபப்படுகிறார்.
இதில் எழுபது வயது அப்பாவாக நடித்திருப்பவர் பெர்னார்ட் ஹ்யூக்ஸ் (Barnard Hughes). அப்படி ஒரு இயல்பான நடிப்பு. எல்லார் வீட்டிலும் இருப்பது போன்ற கொஞ்சம் அசட்டு அப்பா. அப்படியே வாரி அணைத்துக்கொள்ளலாம் போன்று நடித்திருக்கிறார். அடுப்பிலிருந்து டீ பாத்திரத்தை வெறும் கைகளால் தூக்கி விட்டு, ‘உஃப்.. உஃப்’ என்று ஊதுவதாகட்டும், தன் மனைவி முன்னே மகனைத் திட்டுவது போன்று நடிப்பதாகட்டும்.. அப்பா ஒரு அப்பப்பாதான்!
ஒரு காட்சி.
மகனை வேலைக்கு எடுப்பதற்காக வீட்டுக்கு ஒரு கம்பெனி முதலாளி வருவதாகக் கூறியிருக்கிறார். அம்மா, மகனைத் திட்டி அவனுக்கு சற்றும் பிடிக்காத, தானே தைத்ததொரு ‘தொள தொள’ சட்டையைக் கண்டித்து மாட்டிவிட்டு, டைனிங் டேபிள் மேல் டீ, பிஸ்கட் எல்லாம் வைத்து தயாராக இருக்கிறார். அப்பாதான் அசட்டு அப்பாவாயிற்றே! ‘நீ, ஏதாவது பேசினே… அவ்வளவுதான்..’ என்று சொல்லி மூலையில் இருக்கும் ஒரு ஸ்டூலில் அவரை சாத்தி வைத்திருக்கிறார்கள். அவரும் ‘தேமே’ என்று உட்கார்ந்திருக்கிறார். முதலாளியும் வந்து விட்டார். அம்மா, மகன், முதலாளி மூன்று பேரும் டைனிங்
டேபிளில் உட்கார்ந்திருக்கிறார்கள். வெறுமனே ‘ஈ’ என்று சிரித்துக் கொண்டிருக்கும் அப்பா, பேச்சு சுவாரசியத்தில் உரையாடலுக்குள் நுழைந்து விடுகிறார்.
சும்மா இருப்பாரோ?
ஒரு உப்புப்பெறாத விஷயத்துக்காக முதலாளியிடம் சண்டையும் போட்டுவிடுகிறார். ‘போய்யா.. நீயும் உன் சர்ச்சிலும்… எத்தனை அப்பாவி ஐரிஷ் மக்களைக் கொன்று குவித்திருக்கிறான்? இதற்கு ஹிட்லர் எவ்வளவோ மேல்!’ என்றெல்லாம் புரட்சி வசனம் பேசுகிறார்.
கண்ணாலேயே எரித்துவிடுவது போல் மனைவி பார்க்கும்போதுதான், தான் எல்லை மீறிப் போய்விட்டது அவருக்குத் தெரிகிறது. மீண்டும் ‘தேமே’ என்று முகத்தை மாற்றிக்கொண்டு பாவமாக ஸ்டூலில் சென்று அமர்கிறார்.
முகத்தில் என்ன ஒரு அப்பாவித்தனம்! அடடா! இந்தத் திரைப்படத்தின் நாடக வடிவத்திலும் இவர்தான் அப்பா. அதற்காக சிறந்த நடிகர் விருதும் வென்றிருக்கிறார்.
மகனாக நடித்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் மார்ட்டின் ஷீன் (Martin Sheen). இவரும் ஒரு நல்ல குணச்சித்திர நடிகர். ‘டா’ திரைப்படத்திலும் மிக இயல்பாக, உறுத்தாமல் நடித்திருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் டொரீன் ஹெப்பெர்னும் (Doreen Hepburn) மிக நன்றாக நடித்திருக்கிறார்.
இங்கே திரைப்பட இயக்குநரின் பங்களிப்பு எங்கே வருகிறது? அயர்லாந்தின் ஒரு சிறு நகர வாழ்க்கையை மிக அழகாகப் படமாக்கியதில் வருகிறது.
ஒரு புத்தகத்தில், ஒரு ஊரைப் பற்றியோ, நகரைப் பற்றியோ, வார்த்தைகளால் பக்கம் பக்கமாகச் சொல்லப்பட்ட விஷயத்தை திரையில் கொண்டுவருவது ஒரு இயக்குநரின் திறமையைப் பொருத்தது. ஆனால் ஒரு திரைப்படத்தில், அந்த சூழலைக் கொண்டு வருவது வார்த்தைகளால் சொல்வதைப் போல எளிதான விஷயம் அல்ல. (திரைப்படமாக்கப்பட்ட பல்வேறு தமிழ் நாடகங்களில், கதை நடைபெறும்
சூழலுக்கோ, ஊருக்கோ எந்த முக்கியத்துவமும் இராது. பாலச்சந்தர், விசு ஆகியோரின் திரைப்படங்கள் நாடகங்களின் நீட்சியாகவே இருந்தன. ஒரு நாடகத்தை மேடையில் நடிக்காமல், கேமரா முன் நடித்திருப்பார்கள்).
அயர்லாந்தின் ஒரு சிறு நகரத்தில் தங்கியிருந்த என்னால், இயக்குநரின் இந்தத் திறமையை எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. முதன் முதலாய் அந்த நகரத்தைக் காட்டும் ஒரு காட்சியே அதற்கு சாட்சி. அந்திக் கருக்கலில் தன் வீட்டுக்கு சுள்ளி பொறுக்கிக் கொண்டு ஒரு வண்டியில் வைத்து தள்ளிக்
கொண்டு ஓடுகிறான் சிறுவன். இருட்டுவதற்குள் வீடு சென்று சேர வேண்டுமென்ற அவசரம் அவனுக்கு. அவனுடைய அப்பாவும், அம்மாவும் வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அம்மா வீட்டுக்கும், வாசலுக்குமாய் நடந்து கொண்டிருக்கிறாள். சிறுவன் அந்த நகரின் ஒரு எல்லையிலிருந்து மலைப்பாதை
போல் வளைந்து நெளிந்து ஓடும் நன்றாகச் செப்பனிடப்பட்ட சாலையில் வண்டியைத் தள்ளிக்கொண்டு ஓடுகிறான்.
அந்தப்பாதையின் மேடான இடத்திலிருந்து அந்தக்காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கீழே வளைந்து, நெளிந்து ஓடும் பாதை. அதில் வண்டியைத் தள்ளிக்கொண்டு ஓடும் சிறுவன். பாதையின் இன்னொரு புறம் அயர்லாந்தின் எல்லா சிறு நகரங்களிலும் இருக்கும் ஒரு அழகான கோட்டை போன்ற
அரண்மனை.
சிறுவன் பார்வையிலிருந்து நடு வயதிலிருக்கும் மார்ட்டின் ஷீன் பின்னணியில் பேசுகிறார்: “என் அம்மா எனக்காக வாசலில் காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் முன் கையை இன்னொரு கையால் தடவி தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கிறாள். அவளிடம் நான் சொல்லவேண்டும் – கவலை வேண்டாம் அம்மா… நான் இதோ இங்கேதான் இருக்கிறேன். நகரின் கடைசி திருப்பத்துக்கு
வந்துவிட்டேன்”.
பின்னணியில் எல்மர் பெர்ன்ஸ்டெய்னின் அற்புதமான இசை.
இந்தக் காட்சியை ஒரு வளைந்து, நெளிந்து செல்லும் பாதை, வழிமேலிருக்கும் ஐரிஷ் அரண்மனை இதெல்லாம் இல்லாமல் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஒரு நாடகத்தில் இந்தச் சூழலைக் கொண்டு வருவதும் மிகக் கடினமான விஷயம். இங்கேதான் இயக்குநர், தன்னை அழுத்தும் ஒரு வெற்றி பெற்ற நாடகத்தை விட்டு மேலெழும்பி வருகிறார்.
திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ஒரு நாயும் இடம் பெறுகிறது. சார்லி தன் சிறுவயதில் ஆசையாக வளர்த்த ஒரு நாய் அது. அதற்கு ஒரு தனிப்பட்ட குணாதிசயம் என்னவென்றால், அந்த நாய்க்கு சர்ச், பாதிரியார், கன்னியாஸ்திரிகள் இப்படி மத சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் பிடிக்காது.
வெளியே செல்லும்போது எங்காவது வழியில் கன்னியாஸ்திரிகள், பாதிரியார் இப்படி யாரையாவது பார்க்க நேரிட்டுவிட்டால் அவ்வளவுதான்.. தலை தெறிக்க ஓடும்படி துரத்தும்! மிகவும் கடுப்பாகிப்போகும் சர்ச் உறுப்பினர் ஒருவர் சார்லியின் வீட்டுக்கு வந்து நாயைக் ‘கண்டித்து’ வைக்கும்படி சொல்லிவிட்டுப் போகிறார்.
1960-களில் அயர்லாந்தில் சரிய ஆரம்பித்த கத்தோலிக நம்பிக்கைகளையும், கட்டுபெட்டித்தனமான கத்தோலிகக் கோட்பாடுகளின் மேல் மக்களுக்கு எழுந்த வெறுப்புணர்வுகளையும் இந்த நாய் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கதாசிரியர்/இயக்குநர்.
(“நம் வீட்டிலேயே கொஞ்சமாவது புத்திசாலியாக இருந்தது அந்த நாய் மட்டும்தான்.. அதைப்போய் கொல்லப்பார்த்தாயே?” – என்று தன் அப்பாவிடம் கேட்கிறார் நடுவயது சார்லி! இந்த வசனத்தைக் கேட்டபின் முதல் காட்சியில் சார்லி (மார்ட்டின் ஷீன்) “I survived Catholic school” என்ற வாசகம்
இருக்கும் டி-ஷர்ட் அணிந்திருப்பது தற்செயலான நிகழ்வாகத் தோன்றவில்லை.)
இந்தப் படத்தில் அப்பா, மகனுக்கிடையேயான உறவைக் காண்பிக்க, மனதை அழுத்தும் எந்தவிதமான உத்திகளும் கையாளப்படவில்லை. இருப்பினும் இது ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் என்று சொல்லாமலேயே, நம்மை திரைப்படம் முடியும்போது ஒரு கணத்த மனத்துடன் எழுந்திருக்க வைத்துவிடுகிறார்கள்.
இத்தனைக்கும் கதைப்படி சார்லி, தன் அப்பாவின் உண்மையான மகன் கூட கிடையாது. தத்துக்கெடுக்கப்பட்ட பிள்ளைதான். அது தெரிந்ததிலிருந்து சார்லியால் தன் அப்பாவிடம் இயல்பாக இருக்கமுடியவில்லை. ஆனால் அவரை மிகவும் நேசிக்கவும் செய்கிறான்.
சார்லியின் அப்பா ஒரு சாதாரண தோட்டவேலைக்காரர். தன் மகனைவிட பல மடங்கு வயது முதிர்ந்தவர். உலகத்தின் பார்வையில் அவரொரு முட்டாள். நாகரிகமோ, இங்கிதமோ தெரியாதவர். விடலைப் பருவத்துக்கே உண்டான முதிர்ச்சியின்மையால் தன் அப்பா மேல் மேற்சொன்ன காரணங்களால் அடிக்கடி எரிச்சலடைகிறான் சார்லி. (அதற்காக அப்பாவை ஒரு மிக நல்லவராக, அப்பாவியாக நியாயப்படுத்தி ‘பாவ’ உணர்ச்சியை நம்மிடம் உருவாக்கும் பம்மாத்து வேலைகளெல்லாம்
செய்யப்படவில்லை).
அயர்லாந்தின் அந்த சிறுநகரிலேயே இருந்தால் தன் அப்பா போல் தானும் பிழைக்கத் தெரியாதவனாகிவிடுவோம் என்ற எண்ணமும் அவனுக்கு ஏற்படுகிறது. ஊரைவிட்டுக் கிளம்பி அமெரிக்கா சென்று ஒரு பெரிய நாடகாசிரியனாகிறான். ஊரைவிட்டு வந்துவிட்டாலும், அம்மாவும் இறந்துபோய் தனி ஆளாக இருக்கும் அப்பாவைத் தன்னுடன் வந்து தங்கும்படி வற்புறுத்துகிறான். ஆனால் “அமெரிக்காவில் நீண்ட நாள் வாழ்வதைவிட, அயர்லாந்தில் சாவதே மேல்” என்று
அவர் மறுத்துவிடுகிறார். இறுதிவரை தன் அன்பையும் அவரிடம் சார்லியால் வெளிப்படுத்தமுடியவில்லை. ஒரு கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையாக இருப்பினும், தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்ட தன் அப்பாவுக்குத் தான் பட்டிருக்கும் கடன், எந்தவிதத்திலும் திருப்பித் தர முடியாதது என்ற குற்ற உணர்வில் மருகிப்போகிறார் நடுவயது சார்லி.
திரவியம் தேடுவதற்காக கிராமத்திலிருக்கும் என் வயது முதிர்ந்த தந்தையை விட்டுப் பிரிந்திருக்கும் என்னால் என்னை இப்படத்துடன் எளிதாகத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது. திரைப்படம் முடிந்து நீண்ட நேரம் என் அப்பாவைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப்போயிருந்தேன்.
வளர்த்து ஆளாக்கிய நம் பெற்றோருக்கு நாம் பெற்றிருக்கும் கடன், சார்லி நினைத்ததைப் போல வெறும் பொருளதவியால் திருப்பித் தரப்படக்கூடியதா என்ன? பொதுவாகவே, உணர்ச்சிவசப்பட்டெல்லாம் என் பெற்றோரிடம் பேசிவிடாத நான், அன்று இந்திய நேரம் இரவு 11 மணி ஆகியிருந்தாலும், இருக்கட்டும் என்று ஃபோன் செய்து இரண்டு வார்த்தை பேசிய பின்தான் இத்திரைப்படத்திலிருந்து வெளிவரமுடிந்தது.
இந்த உணர்வுகள் எல்லாமே, இப்படத்திலிருந்து நாமாகப் பெற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள். மற்றபடி நடுவயது சார்லியாக வரும் மார்ட்டின் ஷீனின் நடிப்பு, அவர் கண்ணுக்குத் தென்படும் அவருடைய இறந்துவிட்ட அப்பா, அப்பாவின் அசட்டுத்தனங்கள், படம் நெடுக விரவியிருக்கும் நகைச்சுவை ஆகியவை டைபர் ஃபிஷரின் சிறுகதைத் தொகுப்பைப் போல் படத்தை எளிமையாக இருக்கும் நல்ல படைப்பாகக் காட்டியிருக்கின்றன.
******
sethupathi.arunachalam@gmail.com
******
இக்கட்டுரை எழுத உதவியாக இருந்த வலைத்தளங்கள்:
(i)     http://www.imdb.com/title/tt0094934/
(ii)    http://en.wikipedia.org/wiki/Da_(play)
(iii)   http://movies.nytimes.com/movie/review?res=940DE4DF123DF93AA15757C0A9…
(iv) இத்திரைப்படத்தின் டைட்டில் இசையை டிவிடி-யிலிருந்து rip செய்து இங்கே
இட்டிருக்கிறேன். http://www.savefile.com/files/1278531

Series Navigation

சேதுபதி அருணாசலம்

சேதுபதி அருணாசலம்