பண்டை காலத்து யானைகளின் பூர்வ வடிவக் கண்டுபிடிப்பு உளவுகள். பூகோள ஜனனியின் காந்த துருவங்கள் இடமாற்றம் [Pole Reversal in the Geod

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


தூண் போன்ற

ஆலமரக் கால்களும்,

நீண்டு மேல்வளையும் கொம்பும்,

புடலங்காய்த் தும்பிக்கையும்

பூண்டு

பனியுகத்தில் தோன்றிய

பண்டைக் காலத்து யானைகள்

கண்மூடிப் போனாலும்,

கலியுகத்து வேழங்களாய் மீண்டும்

புத்துயிர் பெற்று

பொலிவோடு பிறந்தன,

பூமியிலே!

‘பூகோள காந்த துருவங்கள் பல்லயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏன் எதிர்மாற்றம் அடைகின்றன என்பது விஞ்ஞானிகளுக்குப் புதிராகவும், வியப்பாகவும் இருந்து வருகிறது! பூமியின் கொந்தளிக்கும் உட்கருவை உளவு செய்த சமீபத்திய விஞ்ஞான ஆராய்ச்சிகள், அடுத்து வரும் யுகத்தில் துருவத் திருப்ப மீட்சி எப்படி ஆரம்பமாகும் என்பதை விளக்கும் புதுவழி முறைகளைக் காட்டியுள்ளன! ‘

காரி கிளாட்ஸ்மையர் & பீட்டர் ஓல்ஸன் (Scientific American April 2005)

‘கடற்தளப் பாறைகள் மீது காந்தத் திருப்பங்கள் எழுதப்பட்டு வருவதை அறிவதன் மூலம், பில்லியன் ஆண்டுகளாக நூறு தடவைக்கும் மேலாக நேர்ந்த பூமியின் காந்தத் துருவத் திருப்பங்கள் மெய்யென்று நம்ப முடிகிறது! பூகோளத்தின் துருவங்கள் ஒவ்வொரு 100,000-300,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பமாகி மீள்கின்றன! கடந்த திருப்பம் 250,000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாகத் தெரிகிறது! அந்த யுகத்தின் எண்ணிக்கையில் பல்வேறு காலத்தைக் குறிப்பிடுவதில் பல கருத்து மாறுபாடுகள் உள்ளன. ஆனால் பரிதியின் காந்தத் துருவங்கள், பூமி போலின்றி பதினொன்று வருடங்களுக்கு ஒருமுறை திருப்பமடைகின்றன ‘.

ஸமோல்ஸிஸ் [Xamolxis (பிப்ரவரி 16, 2005)]

முன்னுரை: பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய டைனோசார்ஸ் போன்ற நிலத்துவ விலங்கினங்கள் ஒரே யுகத்தில் மாய்ந்து போனதைப் போலின்றி, அவற்றுக்குப் பின்னால் பிறந்த மாம்மத் இனங்களின் வம்சாவளி பல மில்லியன் வருடங்கள் விருத்தியாகிக் கலியுக யானைகளாய் மேம்பட்டு வந்திருப்பது விந்தையிலும் விந்தையே! 1999 இல் சைபீரியா பனிப்பாறைக் குழியில் தோண்டி எடுக்கப்பட்ட ஜர்காவ் மாம்மத் [Jarkov Mammoth] யானையை ஹெலிக்காப்டர் மூலம் தூக்கி, கடங்கா நகரின் பனிக் குகைக்குக் [Khatanga Town Cave] கொண்டு வந்தார்கள். அப்பணிக்கு இரும்புத் துளைக் கருவிகளைக் கொண்டு 23 டன் கடின பனிப்பாறையைப் பிளக்க வேண்டியதாயிற்று! 2000 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் விஞ்ஞானிகள் பல கூந்தல் உலர்த்திகளைப் [Hair Dryers] பயன்படுத்தி, ஏறக்குறைய ஓராண்டு காலமாக மாம்மத் உறைந்து போயிருக்கும் பனிக்கட்டியை உருக்கினார்கள். 20,000 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாம்மத் யானையின் உடற்தோல் மீண்டும் காற்று வெளிக்குக் காட்சி யானது!

பூமியின் வடதென் காந்தத் துருவங்கள் ஒவ்வொரு 100,000-300,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பமாகி மீள்கின்றன! கடந்த பூகாந்தத் திருப்பம் 250,000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாகத் தெரிகிறது! அந்த யுகத்தின் எண்ணிக்கையில் பலர் பல்வேறு காலத்தைக் குறிப்பிடுவதில் கருத்து மாறுபாடுகள் உள்ளன. பூகோளத்தின் காந்தத் துருவங்கள் திருப்பத்தால் என்ன என்ன கேடுகள் விளையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை! பூகோளக் காலநிலையோ அல்லது கடலடி நீரோட்டமோ காந்தக் களத்தால் எந்த மாறுதலும் அடைவதில்லை! ஆனால் துருவப் பிரதேச வானில் விளையாடும் விண்ணொளித் தளத்தில் [Location of Aurora Activity] மாறுதல் உண்டாவதால், மின்காந்தத் தகவல் போக்குவரத்து ஏற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்படும்!

சைபீரியன் பனிக்களத்தில் குட்டி மாம்மத் கண்டுபிடிப்பு

1997 இல் சைபீரியாவில் வாழும் டோல்கன் மான் வேட்டையாடிகள் [Dolgan Reindeer Herders] பூமியில் துருத்திக் கொண்டிருந்த மாம்மத்தின் இரட்டைக் கொம்புகளைக் கண்டுபிடித்துப் பிரென்ச் பூதளத் தேடுநர், பெர்னார்டு பியூகிஸ் [Explorer, Bernard Buigues] என்பவரிடம் காட்டினர்கள். பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பு பாதாளக் குழியில் விழுந்து மாண்டுபோய், பனி மூடிய மாம்மத் யானைதான் அது! பூர்வீக மாம்மத் முழு உடம்பைக் காணப் பாடுபட்ட பெர்னார்டு, டோல்கன் இனத்தவர் உதவியால் 1999 ஆண்டில் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஜர்காவ் மாம்மத்தைப் [Jarkov Mammoth] பனிக்காட்டில் தோண்டி எடுத்து அகில நாட்டுக் காட்சிக்கு ஏற்பாடு செய்தார்.

முழுவடிவ ஜர்காவ் மாம்மத் சைபீரியாவில் கண்டுபிடிப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே, 1977 இல் சைபீரியன் தங்கச் சுரங்காளர் பாதாளப் பனித்தடாகம் ஒன்றில் 40,000 வருடங்களுக்கு முன் மூழ்கிப் பனியில் உறைந்த போன தீமா குட்டி மாம்மத்தைக் [Dima Baby Mammoth] கண்டார்கள். ஜர்காவ் மாம்மத்தை விட இரட்டை மடங்கு வயதுடைய குட்டி தீமா இருபதாம் நூற்றாண்டு பூதளவாதிகள், உயிரியல் வாதிகள் ஆகியோர் உளவுக்குரிய ஒரு சிறந்த பூர்வீகப் புதையாலாகக் கருதப்பட்டது! ஆனால் தீமா 3 அடி (90 செ.மீ) உயரமும், 2 அடி (60 செ.மீ) நீளத் தும்பிக்கையும், தந்தக் கொம்பு இன்னும் முளைத்து வெளிவராத இளைய உடம்பையும் கொண்டது. தீமா மாம்மத் குட்டி யானை, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யன் விலங்கின விஞ்ஞானக் காட்சிக் கூடத்தில் [Russian Academy of Science Zoological Museum, St. Petersburg] யாவரும் காண வைக்கப் பட்டிருக்கிறது.

தீமா முதன்முதல் அகில தேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்த மாம்மத் குட்டி விலங்கு. குட்டி மாம்மத் மெலிந்து காணப்பட்டு மரண மடைந்த சமயத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததாக சோதித்த போது விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். குட்டி யானை வயிற்றில் எவ்வித உணவும் இல்லாமல் பட்டினி கிடந்து செத்திருந்தது. உடலைப் பாரஸைட் கிருமிகள் [Parasites] அரித்துத் தின்றிருந்தன! ஜப்பானிய விஞ்ஞானிகள் தீமாவை மூவடிவ உள்நோக்கு உளவில் [CAT Scan (Computed Axial Tomography)] ஆராய்ந்து, அதன் இதயத்தை மூவடிவ மாடலாகத் [3D Computer Model of the Heart] தயாரித்தனர். 40,000 ஆண்டுகளுக்குப் பிறகும் குட்டி யானையின் இரத்தச் செல்கள் [Blood Cells] செம்மையாக இருந்தன! அமெரிக்க விஞ்ஞானிகள் காய்ந்து போன குட்டி மாமத்தின் இரத்த செல்களையும், தற்காலத்தில் வாழும் யானைகளின் இரத்த செல்களுடன் ஒப்பிட்டு, மாமத்துகள் ஆசிய யானைகளின் பூர்வீகத் தோன்றலாக இருக்கலாம் என்றும், ஆஃப்பிரிகன் யானைகளை ஒத்தவை அல்ல வென்றும் நிரூபித்துள்ளனர்!

வட அமெரிக்காவில் வாழ்ந்த மாம்மத்துகள், மஸ்டொடான்கள்

பூர்வீக யானைகளின் வமிசாவளியான மாம்மத்துகள், மஸ்டொடான்கள் [Mammoths & Mustodons] ஆகிய இரண்டினங்களும் ஒரே காலத்தில் வட அமெரிக்காக் கண்டத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்தன என்று சான்றுகள் மூலம் அறியப்படுகின்றது. 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்து மாம்மத்துகள் வட அமெரிக்காவில் கால்வைத்துப் பின்னால் பூத வடிவம் பெற்ற கொலம்பியன் மாம்மத்தாக பெரிதாயின. அமெரிக்கன் மஸ்டொடான்கள் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, கடந்த 10,000 வரை வாழ்ந்ததாக அறியப்படுகின்றன. மாம்மத்துக்கும் மஸ்டொடானுக்கும் இடையே மிக்க வேறுபாடுகள் இருந்தன. மஸ்டொடான்கள் மாம்மத்துகளை விடக் குள்ளமானவை; தட்டையான மண்டை ஓடுகளைக் கொண்டவை; நீண்ட தாடை எலும்பைப் பெற்றவை; குட்டையான, வளைவு குறைந்த தந்தக் கொம்புகளை உடையவை; நீண்ட பருத்த உடம்பையும், நேரான பின்புறத்தையும் கொண்டவை. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மாம்மத்துகள் வாழ்ந்த காலத்திற்கும் முற்பட்டு மஸ்டொடான்கள் ஐரோப்பா, ஆசியாவிலிருந்து வட அமெரிக்காவில் பயணம் செய்ததாகத் தெரிகிறது. காட்டுப் பிரதேசங்களில் மரக்கிளைகள், தண்டுகளைத் தின்று மஸ்டொடான்கள் பிழைத்தன. ஆனால் மாம்மத்துகள் இலைகள், புல்லைத் தின்று வாழ்ந்தன.

ஆஃப்பிரிகாவில் தோன்றிய தற்காலப் பரம்பரை யானைகள்

இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் 2 மில்லியன் யானைகள், மத்திய ஆஃப்பிரிக்காவில் நடமாடி வந்தன! தற்போது 21 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் சுமார் 600,000 யானைகளே உலவி வருகின்றன! விலை மிக்க தந்தங்களுக்காக அநேக யானைகள் சட்டத்தை மீறி வேட்டையாடப் படுவதே குறைவுக்குக் காரணம். ஆசிய யானைகள் அவற்றினும் குறைவாக 40,000 எண்ணிக்கையில் உள்ளன! மெய்யான யானைகள் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்பிரிகாவில் தோன்றின. ஒரு மில்லியன் வருடங்களுக்குப் பிறகு, யானைகள் மூன்று பிரிவாகப் வகுக்கப்பட்டன. ஒரு பிரிவு ஆஃப்பிரிக்காவிலே தங்கி நவீன ஆஃப்பிரிகன் யானைகளின் பரம்பரை ஆனது. மற்றொரு பிரிவு ஆசியாவுக்குள் (இந்தியா, தாய்லாந்து) புகுந்து, படிப்படியாக தற்போதைய பொலிவான யானைகளாய் உருமாறின. மூன்றாவது பிரிவுதான் மாம்மத்துகளாய் இருந்தன. பலர் கருதுவதுபோல் தற்கால யானைகளின் முன்னோடிப் பரம்பரை மாம்மத்துகள் அல்ல. அவைக் கலியுக யானைகளின் இணையாகச் சமகாலத்தில் தோன்றி வசித்த பூத விலங்கினங்கள். அவை 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவை வந்து சேர்ந்தவை.

ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா ஆகிய இரு கண்டங்களைத் தவிர மற்ற பூதளக் கண்டங்களில் குறைந்தது 300 விதமான புரொபோஸிடியான்கள் என்னும் பூர்வீக யானைப் பரம்பரைகள் [Proboscideans] இருந்ததாக அறியப்படுகின்றன. அவற்றில் தற்போது இருவித இனங்களே பிழைத்திருக்கின்றன. அவை 1. ஆஃப்பிரிகன் யானை இனம் [Loxodonta Africana]. 2. ஆசிய யானை இனம் [Elephus Maximus]. உலகில் எல்லாவற்றையும் விட எண்ணிக்கையில் மிகுந்து வாழும் நிலத்துவ விலங்கினங்கள், ஆஃப்பிரிகன் யானைகளே! அவற்றில் பூத வடிவமான யானை 13 அடி உயரமும் [4 மீடர்] 16,500 பவுண்டு [7500 கி.கிராம்] எடையும் கொண்டது! அதே சமயத்தில் ஆசிய யானைகள் 10 அடி உயரம் [3 மீடர்] 11,000 பவுண்டு [5000 கி.கிராம்] எடையும் கொண்டவை. ஆஃப்பிரிகன், ஆசிய யானைகளின் வேறுபாடுகளைக் கூறுவது மிகவும் எளிது. தட்டையான நெற்றியும், முறம்போல் அகன்ற பெரிய (5 அடி) காதுகளும் பெற்றவை, ஆஃப்பிரிகன் யானைகள். ஆசிய யானைகள் கும்பா வடிவான சிரசைக் கொண்டு, சிறிய காதுகளை உடையவை. காட்டு யானைகள் போல் கடுமையாக ஆஃப்பிரிகன் யானைகள் தோன்றும் போது, ஆசிய யானைகள் காண்பதற்கு அழகாகவும் மகத்தான தோற்றமும் கொண்டுள்ளன.

பூர்வீக மெக்ஸிகோவில் புகழ்பெற்ற ஆல்மெக் நாகரீகம்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்காவின் பூர்வீக மெக்ஸிகோ பிரதேசத்தில் [Prehispanic Mexico] ஆஸ்டெக் சாம்ராஜியம் [Aztec Empire], மாயன் ஆட்சி [Mayan Kingdom] ஆகியவை சிறப்பாக இருந்த காலங்களில், ஆல்மெக் நாகரீகமே [Olmec Culuture] அவர்கள் அனைவரது தாய்க் கலாச்சாரமாக [Mother Culture] இருந்தது என்று அறியப்படுகிறது. சிந்து சமவெளியின் ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகம், எகிப்தின் நாகரீகம் ஆகிய முற்போக்கான நாகரீகத்தைப் போன்றது, மெக்ஸிகன் ஆல்மெக் நாகரீகம். அப்பகுதிகளில் 170 மேற்பட்ட நாகரீக நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன! ஆல்மெக் குடியினர் கணித வல்லுநராகவும், வானியல் ஞானிகளாகவும் இருந்தனர். அவர்கள் துல்லியமான ‘காலநிரல் அட்டவணைகளை ‘ [Calendars] ஆக்கினார். லவெண்டாவில் ரிபெக்கா கன்ஸாலஸ் [Rebecca Gonzalez at La Venta], ஸான் லொரான்ஸோவில் ஆன் கல்லியன் [Ann Guillien at San Lorenzo] ஆகியோர் இருவரும் 1957 இல் ஆல்மெக் இனத்தார் வாழ்ந்த லவெண்டா, ஸான் லொரான்ஸோ பகுதிகளில் புராதனச் சின்னங்களின் கதிர்க் கார்பன் கால நிர்ணய முறையைக் [Radiocarbon Dating] கையாண்டு, மெக்ஸிகோ வளைகுடா மக்கள் கி.மு.1200-1500 ஆண்டுகளில் வாழ்ந்திருப்பதைக் காட்டியுள்ளார்கள்.

1862 இல் வரலாற்று மகிமை பெற்ற மாபெரும் ஒற்றைக்கல் சிற்பத் தலை [Monolithic Stone Head] ஒன்று மெக்ஸிகோ வளைகுடாக் கரையில் உள்ள வெராக்ருஸ் [Veracruz] மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. அவ்வாறு வெவ்வேறு முகம் கொண்ட பல சிற்பத் தலைகள், சிரக்கவசம் [Helmet] பூண்டு மத்திய அமெரிக்காவில் தோண்டி எடுக்கப் பட்டன. 3000 ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற மன்னர்களாய் அரசாண்டவருக்கே அவ்விதம் சிற்பத் தலைகள் செதுக்கப்பட்டன என்று அறியப்படுகிறது. பின்னால் தோண்டி எடுத்த பெருங்கற் தலைகள் [Megalithic Heads] ஆஃப்பிரிகர் முகத்தை ஒத்திருப்பினும், கம்போடியா, பிலிஃபைன்ஸ் நாட்டு மக்களைப் போல் தெரியும் ஆல்மெக் நாகரீக மாந்தர், நேராக ஆஃப்பிரிக்காவிலிருந்து வந்தவர் என்று சொல்வதற்கில்லை!

ஸ்டர்லிங், ஃபிலிப் டிரக்கர், லவெண்டா நகரில் தோண்டிய போது, 106 அடி [32 மீடர்] உயரமுள்ள ஒரு பிரமிட் பீடத்தைக் கண்டார்கள். அதைச் சுற்றிலும் குழி தோண்டியதில் மகத்தான சாதனங்களையும், மனித சமாதிகளையும் கண்டார்கள். வரலாற்றுச் சின்னங்கள், பளபளப்பான ஜேடு கத்திகள் [Polished Jade Celts], பன்னிறக் களிமண் தரைகள் [Coloured Clay Floors], பச்சைக்கல் பொம்மைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றுடன் புதைப்பட்ட ராஜ சமாதிகள் குழிவெட்டில் இருப்பதைக் கண்டார்கள்! லவெண்டாவில் 6 அடி உயரமும், 5 அடி அகலமுள்ள மாபெரும் ஒற்றைக்கல் சிற்பத்தலை ஒன்றும் கண்டுபிடிக்கப் பட்டது!

பூமியின் காந்த துருவங்களில் மீளும் இடமாற்றம்

‘தற்போது பூகாந்தத் திரிபுகள் [Magnetic Declinations] கிழக்குத் திசை நோக்கிச் சீரான கதியில் திரும்பி ஓரளவு மாறி வருவது மெய்யான நிகழ்ச்சியே! மின்கணனி மாடல்கள் அந்த மாறுபாட்டைத் துல்லியமாக முன்னுரைக்கின்றன. பூகாந்தத் திரிபுகள் பூகோளச் சுழற்சிக்குச் சார்பாகவும் [Earth ‘s Spin], உட்கருவின் கனல் குழம்பில் உண்டாகும் கொந்தளிப்பு மேற்சுற்றின் [Convection of Magma in the Interior] விளைவாகவும் ஏற்படுகின்றன. வடதென் துருவங்களின் இடமாற்றங்கள் பலமுறைப் பூர்வீக யுகங்களில் நேர்ந்திருக்கலாம் என்னும் நியதியைப் பல பூதளவாதிகள் இப்போது நம்புகிறார்கள். இனியும் துருவங்கள் அவ்விதம் இடம் மாறலாம் ‘, என்று ஆர்கான் தேசீய ஆராய்ச்சிக் கூடத்தின் விஞ்ஞானி டேவிட் குக் கூறுகிறார்.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் 26 தேதி முதல் பரிதியிலிருந்து ஒன்பது பேரளவு வெடிச் சிதறல்கள் [Major Solar Eruptions] நேர்ந்துள்ளன! பரிதிப் படரொளித் துணுக்கு வீச்சுகள் [Coronal Mass Ejections (CME)] இருமுறைப் பூகோளத்தைத் தாக்கி உரசியுள்ளன! அவ்விதத் தாக்கல் பூகோளக் காந்தவெளியை [Earth ‘s Magnetosphere] மோதி எல்லாவித மின்காந்த, மின்சாரத் தகவல் போக்குவரத்துகளைப் பாதித்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக அந்தப் படரொளி வீச்சு, பூமியை நெருங்குவதற்கு முன்பே அப்பால் விலகிச் சென்று விட்டது! ரஷ்ய

ஆராய்ச்சிகளின்படி 1963 ஆண்டு முதல் பரிதியின் காந்தத்தளம் [Sun ‘s Magnetic Field] இரட்டை மடங்கு மிகையாகி விட்டது என்று அறியப்படுகிறது. அதனால் பூமியைத் தவிர அளக்கும் வகையில் காந்ததளம் சிறிதேனும் உள்ள அனைத்து அண்ட கோளங்களிலும் காந்ததள ஆற்றல் அதிகமாகி விட்டது! ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக பூகாந்ததளம் சிறிது, சிறிதாகக் குறைந்து வரும் போக்கே காணப்படுகிறது. பூகோளத்தின் காந்ததள ஆற்றல் அக்காலங்களில் மற்ற கோளங்களைப் போன்று மிகையாவதற்குப் பதிலாக, ஏன் குறைந்து கொண்டு வருகிறது ? ஏன் நமது பூமி அவ்விதம் மாறுபடாமல் தடுக்கப்பட்டுப் பாதுகாக்கப் படுகிறது ? இவ்வினாக்களுக்கு பதில்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

(தொடரும்)

தகவல்கள்

1. Atlantic: Driving Continents Apart. Pacific The Vanishing Ocean -Reader ‘s Digest Atlas of the World [1992]

2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

8. Continental Drift, Geology & Oceanography. [Several Internet Articles]

9. Everyday Geography By: Kevin McKinney (1993)

10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

16 Physical Earth By: National Geographic Society [1998]

17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

18 National Geographic Picture Atlas of our World [1990]

19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

20 The Evolution of the Sumatran Earthquake Fault System By: Andy McCarthy. [July 9, 2002]

21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

25 Reader ‘s Digest Publication: The Living Earth Book of Deserts By: Susan Arritt [1993]

26 Physical Earth, By: National Geographic Society, Millennium in Maps [1998]

27 Birth of the Himalaya By: Roger Bilham. [NOVA PBS Home (Nov 2000)]

28 Rodinia Web Site: http://www.peripatus.gen.nz/paleontology/Rodinia.html (Jan 27, 2005)

29 Historical Geology Rodinia & Pannotia By: Erin McKenna (Spring 2005)

30 Rodinia & Pannotia By: Christopher Scotese (2000)

31 The Origin of Life -Plants & Animals By The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

32 The New American Desk Encyclopedia (1989)

33 Geographical Atlas of the World, Tiger Books International [1993]

34 Ice Age Mammoth By: Barbara Hehner [2001]

(Mammoth Picture Credits: Mark Hallet)

35 Atlas of the World, Helicon Publication [2001]

36 Mesoamerican Cultures – Olmec Civilization (1200-400 B.C.) [www.crystalinks.com/olmec.html]

37 Magnetic Pole Reversal By: David Cook (Argonne National Laboratory)

38 Magnetic Pole Reversal By: Zue-Starr Livingstone (Nov 22, 2003)

39 Magnetic Pole Reversal By: Xamolxis (Feb 16, 2005)

40 Scientific Ameriacn, Probing the Geodynamo By: Gary Glatzmaier & Peter Olson (April 2005)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 6, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா