சரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

வந்தியத்தேவன்


அதென்ன ஜெர்மனியைப் பற்றி இரண்டு பதிவுகள் ? இந்தியாவைப் பற்றி ஒன்றுமேயில்லையா என்பவர்க்காக இந்தப் பதிவு. 1971 ‘ல் நடந்த இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சியைப் பதிகின்றேன்.

1963 ‘ல் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். டயாப்லோ என்ற நீர்மூழ்கியை, பாகிஸ்தான் நான்கு வருட குத்தகைக்கு வாங்கியது. பின்னர் இந்த ஜூன் மாதத்தில் டயாப்லோவை பல்வேறு புதுப்பித்தல்களுடன் பி.என்.எஸ். காஜி என்று நாமகரணம் சூட்டி தனது கடற்படையில் சேர்த்துக் கொண்டது. காஜியில் மொத்தம் 28 நீரேவுகணைகள் (Tarpedoes). அக்காலகட்டத்தில் காஜி இந்திய கப்பற்படைக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்ததில் வியப்பேதுமில்லை.

காஜி பண்ணிய கோஜி (பித்தலாட்டம்)

1965 ‘ல் முதலாம் இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் காஜி போர்ப்பணியில் ஏடுபட்டது. 09/09/65 ‘ம் தேதியில் ஐ.என்.எஸ் (Indian Naval Ship) பியாஸ் என்னும் இந்தியக் கப்பலுக்கு ஒரு நீர்மூழ்கியின் சோனார் ‘செண்ட் ‘ கிடைத்தது. அது காஜியிடமிருந்து வந்த சோனார் எதிரொலிதான். காஜிதானென்று தீர்மானமாய்த் தெரியாததால், பியாஸ் பெரிய அளவில் தாக்குதல் தொடுக்கவில்லை. சும்மா ‘ஓடிப் போ ‘ என்பது போல் சில கண்ணி வெடிகளை வீச, காஜி தப்பியோடியது.

செப்டம்பர் பதினேழாம் தேதி, இந்தியா ஐந்து கப்பல்களைக் கொண்டு பம்பாய்க்கு தெற்கே காஜியைத் தீவிரமாய்த் தேடத்துவங்கியது. தேடுதலில் பல சோனார் தொடர்புகள் கிடைத்து, ஆங்காங்கு தாக்குதல்கள் நடந்தாலும் காஜிக்கு சேதாரம் ஏதும் நிகழவில்லை. ஒரே ஒரு நீர்மூழ்கி பல இந்தியக் கப்பல்களின் தூக்கத்தைக் கெடுத்தது.

இருப்பினும் காஜி பதில் தாக்குதல் ஏதும் தொடுக்கவில்லை. கண்ணாமூச்சி மட்டும் காட்டிக்கொண்டிருந்தது. ஆனால் 22/09/65 அன்று மொத்தம் 4 நீரேவுகணைகளை இந்தியக் கப்பல்களுக்கு எதிராக ஏவியதாய் காஜி தனது தாய்நாட்டிற்கு சேதி அனுப்பியது. உச்சபட்ச பொய்யாக இந்தியாவின் விரைவு போர்க்கப்பலான (Frigate) ஐ.என்.எஸ் பிரம்மபுத்திராவை தான் மூழ்கடித்ததாகவும் தம்பட்டம் வேறு அடித்துக் கொண்டது. இரண்டு நாட்கள் கழித்து இந்த வீர தீரச் செயலுக்காக காஜியின் கேப்டனுக்கு வீரப் பதக்கம் வழங்கி பாகிஸ்தான் கெளரவப்படுத்தியது. கொடுமையென்னவென்றால் பிரம்மபுத்திரா மீது எந்தத் தாக்குதலும் நடக்கவேயில்லை. போர் முடிந்த பின்னர் டெல்லியிலிருந்து பல்வேறு அயல்நாட்டுக் கப்பற்படை அதிகாரிகளை, பம்பாயிலிருந்த பிரம்மபுத்திராவிற்கு அழைத்து வந்து இந்தியாவிற்கு நிரூபணம் செய்ய வேண்டியதாயிற்று.

1971 — இந்தியா பாகிஸ்தான் யுத்தம்

முதலாம் போருக்குப் பின்னர், 1967 ‘ம் ஆண்டு காஜியின் அமெரிக்க குத்தகை ஒப்பந்தத்தை பாகிஸ்தான் புதுப்பித்தது. 1968 ‘ல் துருக்கி சென்ற காஜியில் கடற்கண்ணி வெடிகள் (Sea Mines) புதைக்கும் செயல்திறனும் சேர்க்கப்பட்டது. 24 செப்டம்பர் 1971 ‘ல் பாகிஸ்தானில் அவசர நிலை (Emergency) அமுலுக்கு வர யுத்தகால ரோந்துப்பணிக்கு காஜி தயாரானது. அக்காலகட்டத்தில் விமானந்தாங்கிக் கப்பலான INS விக்ராந்த் இந்தியாவின் கெளரவச் சின்னமாக விளங்கியது. இக்கப்பலை சேதாரப்படுத்தவும், முடிந்தால் மூழ்கடிக்கவுமெனெ காஜியின் கமாண்டர் ஜாபர் முகமது கானுக்கு கட்டளை பறந்தது.

சித்தகாங் சிக்னல் சிக்கல்

தாய்நாட்டின் கட்டளையை நிறைவேற்ற காஜி வங்காள விரிகுடா நோக்கிப் புறப்பட்டது. நீர்மூழ்கிகளுக்கு தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட எண்ணெய் பற்றி அறிய காஜி சித்தகாங் ‘கிற்கு (கிழக்கு பாகிஸ்தான்) சிக்னல் அனுப்பியது. இங்கேதான் பாகிஸ்தான் தவறு செய்தது. இந்த சிக்னலை எப்படியோ இந்தியா மோப்பம் பிடித்தது.கண்ணி வெடி அகற்றும் கப்பல் (Mine Sweepers) மற்றும் நீர்மூழ்கிகளுக்கே தேவையான எண்ணெய் பற்றி சித்தகாங்கில், பாகிஸ்தானின் சிக்னல் வந்தது ஏன் ? அக்கம் பக்கம் கண்ணி வெடி அகற்றும் கப்பல் வரமுடியாது. அக்கப்பல்களுக்கு கிழக்கு பாகிஸ்தான் கடற்கரையில் வேலையுமில்லை. அப்படியென்றால் காஜிதான் வங்காள விரிகுடா நோக்கி வந்துகொண்டிருக்க வேண்டுமென்று இந்தியா கணக்குப் போட்டது. அப்போது கிழக்கு கடற்தளத்தில் இருந்த விக்ராந்த்தைத் தேடித்தான் காஜி அலைந்து கொண்டிருக்கின்றதென்னும் இந்தியாவின் சந்தேகமும் ஊர்ஜிதமானது.

அப்போது கிழக்கு கடற்படையின் தலைவராக (FOCINC – Flag Officer Commanding in Chief) இருந்தவர் துணை அட்மிரல் என்.கிருஷ்ணன். இந்திய கப்பற்படை மொத்தம் மூன்று பெரிய இயங்கு தளங்களாக (Command) பிரிக்கப்படும். இவற்றில் கிழக்கு மற்றும் மேற்கு தளங்கள் சண்டை வந்தால் சமாளிக்கும் விதமாகவும் (Operational Commands), தெற்கு தளம் பயிற்சியை குறி வைத்தும் (Training Command) இயங்குகின்றன. விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படையின் தலைமைத்தளமாகவும், பம்பாய் மேற்கு கடற்படையின் தலைமைத்தளமாகவும் விளங்குகின்றது. இரண்டு தளத்திலும் பணியாற்றிய பாக்கியசாலி நான்.

பம்பாயில் அமைந்துள்ளது செயற்கைத் துறைமுகம். விசாகப்பட்டினமோ இயற்கைத் துறைமுகம். இயற்கைத் துறைமுகத்தில் ஆழம் இயல்பாக அதிகமாகையால் வெகு எளிதில் நீர்மூழ்கியானது (காஜி போல்), கடலுக்கு அடியிலேயே துறைமுகம் அருகில் வரை வரலாம். ஆனால் பம்பாயில் அது முடியாது. துறைமுகமருகே வர முயற்சித்தால் நீர்மூழ்கி தரையைத் தட்டிவிடும்.

மேலும் விசாகப்பட்டினம் துறைமுகம் மிகவும் குறுகலான நுழைவாயில் கொண்டது. காஜியின் திட்டப்படி, விக்ராந்த் விசாகப்பட்டினத்தில் மூழ்கியிருந்தால் துறைமுகத்திற்கே சீல் வைத்தது போலாகி விட்டிருக்கும். கிழக்குத் தளம் முழுதுமாக முடக்கப்பட்ட நிலையில் இந்திய கடற்படையையே பாகிஸ்தான் ஆட்டி வைத்திருக்கவும் முடியும்.

13 நவம்பர் 1971 ‘ல் கிழக்குத் தளத்திலிருந்து அனைத்து கப்பல்களையும் ‘போர்ட் எக்ஸ் ரே ‘ என்ற ரகசிய இடத்திற்கு செல்லும்படி அட்மிரல் கிருஷ்ணன் பணித்தார். இப்போது கிருஷ்ணனின் தலையாய பணி எப்படியாவது காஜியை, விக்ராந்த் இருப்பதாக நம்ப வைத்து, தனது எல்லைக்கு ஏமாற்றி அழைத்து வந்து தாக்கியழிக்க வேண்டுமென்பதே. கேட்பதற்கு கில்லி விளையாட்டுப் போல் எளிதாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத மாயாவியுடன் கண்ணாமூச்சி விளையாடுவது போல்தான் இந்த ஆட்டம்.

எப்படி எண்ணெய் சிக்னல் காஜியை சிக்கலில் மாட்டியதோ அதே வித்தையை தனக்கு சாதமாக இந்தியா கையாண்டது. விக்ராந்தில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் பணியாற்றினார்கள். விக்ராந்த் விசாகப்பட்டினத்தில்தான் இருக்கிறது என்பது போல் காட்டிக்கொள்ள, அந்நகரத்தில் மாலுமிகளுக்கான உணவுப் பொருட்கள் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டன. விசாகப்பட்டினம் பஜாரிலுள்ள பாகிஸ்தான் உளவாளிகள் இச்செயலால் ஏமாந்து போனார்கள். விக்ராந்த் இன்னும் விசாகப்பட்டினத்தில்தான் உள்ளது என்ற தவறான தகவல் பாகிஸ்தான் உளவாளிகள் மூலம் அழகாக விதைக்கப்பட்டது.

விசாகப்பட்டினத்தின் கரையோர மீனவர்கள் அனைவர்க்கும் நீர்மூழ்கியை இனம் கண்டு கொள்வதெப்படியென்ற வகுப்புகள் கப்பற் படையால் நடத்தப்பட்டன. போரில் யார் முந்திக்கொள்கிறாரோ அவர்களுக்கே வெற்றி மாலை. காஜியோ அகோரப்பசியுடன் அலைய ஆரம்பித்திருந்தது கிருஷ்ணனின் கவலைகளை அதிகரித்தது.

காஜிக்குப் பொறி வைத்த பின் தாக்கியழிக்க இந்தியாவின் நாசகாரிக் (Destroyer) கப்பலான ஐ.என்.எஸ். ராஜ்புத் பயன்படுத்தப்பட்டது. ஒரு விமானந்தாங்கிக் கப்பல் என்றுமே தனியாய் பயணிக்காது. பாதுகாவலுக்காக துணையாய் நாசகாரிக் கப்பல்கள், விரைவுக் கப்பல்கள் (Frigates), கடற்கண்ணி வெடி நீக்கும் கப்பல்கள் (Minesweepers), ஏவுகணைப் படகுகள் (Missile Boats) என்று குழுவாய்த்தான் போகும். அப்படி ஒரு குழு விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கிளம்புவது போன்ற பிரமை பாகிஸ்தானுக்கு உருவாக்கப்பட்டது. மேலும் விக்கிராந்திலிருந்து ஒரு மாலுமி தனது அன்னையின் உடல் நலம் விசாரிக்கும் ‘சும்மனாச்சுக்கும் ‘ தந்தி வேறு எதிரிகள் கையில் கிடைக்க பாகிஸ்தான் குஷியானது.

‘Go for the Kill ‘ என்று முழங்கியபடி காஜி தனது பயணத்தை தொடங்கியது. இதோ காஜியின் பயணத் தடங்கள்:

16 நவம்பர் 1971 – காஜி பம்பாயிலிருந்து 400 மைல்களுக்கு அப்பால் வந்தது

19 நவம்பர் 1971 – இலங்கை கடல்பரப்பில் மையம்

20 நவம்பர் 1971 – வங்காள விரிகுடா விஜயம்

23 நவம்பர் 1971 – சென்னைக்கருகே விக்ராந்த் வேட்டை

தான் பத்து நாட்கள் தாமதமாய் வந்தது சேர்ந்தது காஜிக்கு பாவம் தெரியாது. விக்ராந்த்தோ அந்தமான் தீவுக்கருகே பாதுகாப்பாய் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருந்தது.

காஜியின் தளத்தடம்

01 டிசம்பர் 1971 – மாலை சுமார் 4:00 மணியளவில் துணை அட்மிரல் கிருஷ்ணன் ராஜ்புத்தின் கமாண்டிங் ஆபீஸரான லெப்டினெண்ட் இந்தர் சிங்கிற்கு பாகிஸ்தானிய நீர்மூழ்கி (காஜி) பற்றி தகவல் தந்ததுடன், உடனே துறைமுகத்தை விட்டு வெளியே புறப்படும்படியும் கட்டளையிட்டார். அப்போது விசாகப்பட்டினமருகே திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டது போல் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது காஜி. இருட்டு, ராஜ்புத்தில் ரேடார்/சோனார் இயக்கம் நிறுத்திவைப்பு (RADAR & SONAR silence) வேறு காஜியின் குழப்பத்தைக் கூட்டின. விக்ராந்த் வருமென்று வழி மேல் விழி வைத்து காஜி கடலடியில் காத்திருந்தது.

03 டிசம்பர் 1971 – வங்காள விரிகுடாவில் வலம் வந்த ராஜ்புத், கடலில் நீர்மூழ்கி அவசரமாய் மூழ்கியதைப் (Emergency Dive) போல் வந்த நீர்க்குமிழிகளைக் கண்டது. எதற்கு சான்ஸ் எடுப்பானேனென்று போகிற போக்கில் இரண்டு கடல் கண்ணிகளை விதைத்துச் சென்றது.

03 டிசம்பர் 1971 – விடிகாலை சுமார் 00:15 மணியளவில் 2 பிரும்மாண்டமான வெடிச்சத்தம் கேட்டது. பூகம்பமோவென மக்கள் முதலில் சந்தேகப்பட்டனர். கிழக்குக் கடற்கரையில் இந்திய மாலுமிகள் வெடிச்சப்தத்தின் காரணம் கண்டுபிடிக்க ஆழ் கடலினுள் மூழ்கினார்கள் (Deep Sea Diving).

05 டிசம்பர் 1971 – 32 மீட்டர் ஆழத்தில் காஜி சமாதியானது தெரிய வந்தது.

காஜி எவ்வாறு மூழ்கியது ? காஜியை மூழ்கடித்தது ராஜ்புத்தின் கடல் கண்ணி வெடிகளா ?

வெடிச்சத்தம் மற்றும் ராஜ்புத் பயணித்த தேதி இரண்டையும் சீர்தூக்கி, மேற்கண்ட கருத்தை சில வல்லுநர்கள் மறுக்கிறார்கள். காஜியில் வெடிச்சத்தம் கேட்டது 3 டிசம்பர் 0:15 மணிக்கு. காஜியிலிருந்து மீட்கப்பட்ட கடிகாரமும் அதே மணித்துளியில் நின்று போய் விட்டிருந்தது. ஆனால் ராஜ்புத் கண்ணிவெடி விதைத்த நேரம் தெளிவாக தெரியவில்லை என்றும் அவர்கள் வாதிட்டார்கள்.

ஒரு வேளை விக்காராந்திற்காக தான் விதைத்த கண்ணி வெடிகளிலேயே சிக்கி காஜி அழிந்திருக்குமோ என்பது இரண்டாவது யூகம். கிட்டத்தட்ட 3 கண்ணிகளை 30 மீட்டர் ஆழத்தில், 150 மீட்டர் இடைவெளியில் விதைத்திருந்தது காஜி. இந்த வெடிகள் தனக்கு மேல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கப்பலோ, நீர்மூழ்கியோ கடந்தபின் வெடிக்கத் தயாராகிவிடும். அப்படிப் பார்த்தால் ராஜ்புத்தின் கண்ணி வெடிகள், காஜியின் கண்ணி வெடிகளைக் கடந்து சென்றிருக்கக்கூடும். அப்போது தயாரான (armed) காஜியின் வெடிகள், காஜி அவற்றை கடந்தபோது வெடித்திருக்கலாம்.

இக்கூற்றையும் முற்றிலுமாக ஏற்க முடியாது. கடலடியில் வீழ்ந்து கிடந்த காஜியின் ஹல் எனப்படும் மேற்பகுதியை ஆராய்ந்த போது, அது வெளிப்புறமாக வாய் பிளந்து கிடந்தது. வெளிப்புற கண்ணி வெடி தாக்கியிருந்தால் மேற்பகுதி உள்புறமாக நசுங்கியிருக்க வேண்டும். வெளிப்புறமாக வாய் பிளந்திருந்ததால் காஜியின் உள்புறமாக ஏதாவது வெடித்திருக்க வேண்டும். நீர்மூழ்கிகள் நீருக்கடியில் இயங்குவதற்கு பேட்டரிகளைப் பயன்படுத்தும். அந்த பேட்டரிகளை சார்ஜ் செய்யும்போது கணிசமாக ஹைட்ரஜன் வாயு வெளிப்படும். எனவே பேட்டரி அறையில் ஒரு சிறிய பொறி ஏற்பட்டால் கூட போதும், பெரிய அளவில் வெடி விபத்து நிகழ்ந்து விடும். காஜி ஹைட்ரஜன் விபத்தால் வெடித்து மூழ்கியிருக்க சாத்தியக் கூறுகள் உண்டு. ஆனால் அப்படியேதேனும் நடந்திருந்தால் காஜியினுள்ளே கிடைத்த மாலுமிகளின் சடலங்கள் இன்னும் கருகியிருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை.

வெறும் கண்ணி வெடி மட்டுமே காஜி மூழ்கிவிட காரணமில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து. காஜியின் உள்புறம் ஏதேனும் தீ விபத்து நிகழ்ந்த்திருக்கவும் சாத்தியக் கூறுகள் உள்ளன. அதுவும் நீரேவுகணைப் பகுதியில் வெடி விபத்து நடந்திருந்தால் விளைவைப் பற்றி வினாவே எழாது.

பல காரணிகளை சீர் தூக்கி ஆராய்ந்தால் காஜி இவ்வாறு மூழ்கியிருக்கலாம் என்று அவதானிக்கலாம்:

1. விக்ராந்தை விசாகப்பட்டினத்தில் தேடிக்கொண்டிருந்த காஜி, துறைமுகம் அருகே கண்ணி வெடிகளை விதைக்க ஆரம்பித்தது.

2. டிசம்பர் மூன்றாம் தேதி நள்ளிரவு தானிருக்கும் இடத்தை இனங்கண்டு கொள்ள கடலுக்கு வெளியே எட்டிப் பார்த்தது.

3. அப்போது ராஜ்புத் கப்பல் காஜியின் கண்ணில் (பெரிஸ்கோப்) அல்லது காதில் (சோனார்) ப(கே)ட்டிருக்க வேண்டும். வேறு வழியின்றி கண்ணிவெடிகளை போட்டது போட்டபடி மீண்டும் கடலுக்குள் அவசர டைவ் செய்திருக்க வேண்டும். ஏனெனில் துறைமுகத்திலிருந்து கடல் நோக்கி ராஜ்புத் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.

4. காஜியின் உடனடி டைவால் விளைந்த நீர்க்குமிழிகளைப் பார்த்த ராஜ்புத் எதற்கும் இருக்கட்டுமென்று 2 கண்ணி வெடிகளை வீசிவிட்டுப் போனது

5. இந்த வெடி காஜிக்கு மிக அருகே வெடித்திருக்கலாம். ஏற்கெனவே அவசர டைவ் அடித்துக் கொண்டிருந்த காஜியில் இதனால் தீப்பிடித்திருக்கலாம். அல்லது காஜி பலமாகத் தரையை நோக்கித் தள்ளப் பட்டிருக்கலாம்.

6. தீயானது டார்பிடோ மற்றும் கண்ணிவெடி சேமிக்கப்பட்ட அறையை அடைய, காஜியில் பெரிய வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம்.

7. அல்லது ராஜ்புத் கண்ணிவெடி கடக்கும்போது, கடந்த எண்ணிக்கையின் கணக்கின்படி காஜி புதைத்த கண்ணிவெடி வெடித்திருக்கலாம். அதனால் காஜியில் தீ விபத்து நடந்து மூழ்கியிருக்கலாம்.

இப்படியாக காஜி மூழ்கியதற்கு பல கதம்ப கருத்துக்கள் உலவுகின்றன. இக்கருத்துகளைத் தாண்டி இந்தியக் கப்பற் படையின் மதிநுட்பமும், தந்திரமும், திட்டமிடுதலுமே காஜியை ஏமாற்றி, கடைசியில் 82 பேருடன் மூழ்கடித்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காஜி பயம் கலைந்ததால் விக்ராந்த் முழுசுதந்திரமாய் கிழக்கு பாகிஸ்தான் நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வழியும் ஏற்பட்டது. 1971 யுத்தத்தில் இந்தியா மகத்தான வெற்றியடைந்தது வரலாறு.

வாழ்க கப்பற்படை !!! ஒளிர்க இந்தியா !!!

t_sambandam@yahoo.com

http://vanthiyathevan.blogspot.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்