மைக்ரோசாஃப்ட் செய்திகள்

This entry is part of 52 in the series 20040422_Issue


மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மின்னசோட்டா (அமெரிக்க மாநிலம்) அரசாங்கமும் ஒப்பந்தத்துக்கு வந்திருக்கின்றன.

ஐந்து வாரங்களுக்கு முன்னால், மின்னசோட்டா மாநிலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மீது மின்னசோட்டா குடிமக்கள் சார்பில் வழக்குத் தொடுத்தது. (இதனை கிளாஸ் ஆக்ஷன் சூட் என்று வழங்குகிறார்கள்)

ஏப்ரல் 20ஆம் தேதி இரு தரப்பும் நீதிமன்றத்துக்கு வெளியே ஒப்பந்தத்துக்கு வந்ததாக அறிவித்துவிட்டு இந்த வழக்கை மூடினார்கள். தன்னுடைய நிரலிகளுக்கு மிகவும் அதிகமாக விலைவைத்து மின்னசோட்டா மாநிலவாசிகளை ஏமாற்றுவதாக மின்னசோட்டா அரசாங்கம் வழக்குத் தொடுத்திருந்தது.

சமீபத்தில் மைக்ரோசாஃட் நிறுவனம் சன் மைக்ரோவுக்கு 2 பில்லியன் டாலர் பணம் கொடுத்து அதன் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கடந்த வாரங்களில் ஐரோப்பிய யூனியன் மைக்ரோசாஃப்ட் மீது தொடுத்த வழக்கில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு போட்டி நிறுவனங்களை நியாயமின்றி போட்டியிலிருந்து துரத்துவதாக வழக்குத் தொடுத்திருந்தது.

இந்த வழக்குகளில் ஜூரி எனப்படும் பொதுமக்கள் பிரதிநிதிகள், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் எவ்வாறு மற்றவர்களை பயமுறுத்துகிறார்கள் என்பதற்கான ஆவணங்களை கண்டார்கள்.

உதாரணமாக பில் கேட்ஸ் அவர்கள் சில்லுகளை உற்பத்தி செய்யும் இண்டெல் நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆண்டி குரோவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ‘கோ ‘ என்ற நிறுவனத்தில் பணம் முதலீடு செய்யவேண்டாம் என்று எழுதியிருக்கிறார். கோ நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் ஒரு எதிரி நிறுவனமாகப் பார்த்திருந்தது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஐயோவா, நியூ மெக்ஸிகோ, வெர்மாண்ட், நெப்ராஸ்கா, மஸாசூசெட்ஸ் அரிசோனா ஆகிய மாநிலங்களில் இதே போன்ற பொதுமக்கள் வழக்குகளை சந்திக்க இருக்கிறது. கூடவே விஸ்கான்ஸின், நியூயார்க், ஓஹையோ ஆகிய மாநிலங்களில் வழக்குகள் இருக்கின்றன. அங்கு நீதிபதிகள் இந்த வழக்குகளை நிராகரித்துவிட்டார்கள்.

மைக்ரோசாஃப்ட் 1.5 பில்லியன் டாலர் கொடுத்து டிஸ்டிரிக்ட் ஆஃப் கொலம்பியா, மற்றும் இதர 9 மாநிலங்களில் நடந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.

***

Series Navigation