வட அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் நேரும் ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம்!

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


‘புயலுக்குப் பின் பூகம்பம்! பூகம்பத்துக்குப் பின் கிளம்பும் தீப்பொரிகள்! தீக்கனலுக்குப் பிறகு அடங்கும் மெல்லிய குரல்கள்! என்னை உனக்கு அடையாளம் தெரிகிறதா ? ‘

கிங்கிஸ் முதல் நூல், பழைய கிப்ரூ மறை [The First Book of the Kings, Old Testament]

முன்னுரை: பூகம்ப நிகழ்ச்சி மானிடத் தோற்றத்தின் நிலையாமையை நிரூபிக்கும் இயற்கையின் திருவிளையாடல்களில் ஒன்று! முப்பது வினாடிக்கு ஒருமுறை பூமா தேவி தன் தோளைச் சற்று அசைக்கிறாள்! ஆண்டுக்கு ஒருதரம் 7 ரிக்டர் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு பூகம்பம் ஒன்றும், மற்ற அளவுகளில் 18 நில ஆட்டங்கள் நேராலாம் என்றும் புள்ளி விபரம் கணிக்கப் பட்டுள்ளது! விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தி நிலநடுக்க வருகையை எதிர்பார்த்து அறிவிக்க முடியுமே தவிர, மனிதரின் அசுர ஆற்றலில் பூமியின் ஆட்டத்தைத் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது!

வட அமெரிக்க மாநிலங்களில் ஓயாத நிலநடுக்கங்கள்

வட அமெரிக்காவின் கிழக்கிலும், மேற்கிலும் சில பகுதிகளில் பயங்கரப் பூகம்பங்கள் பல நேர்ந்துள்ளன! காலிஃபோர்னியா மாநிலத்தில் பள்ளிகொண்ட ஸான் ஆன்டிரியா நிலநடுக்கப் பழுதுத் தொடர் [San Andrea Fault Line] தெற்கே காலிஃபோர்னியா வளைகுடாவில் துவங்கி, 800 மைல் தூரம் பாம்புபோல் படர்ந்து, ஸான் பிரான்ஸிஸ்கோவிற்கு வடக்கே உள்ள மென்டோசினோ முனை வரை [Cape Mendocino] நீண்டு செல்கிறது. அந்தப் பழுதுத் தொடர்ப் பகுதியில் அடுத்தடுத்து 1838, 1857, 1865, 1872, 1892, 1906, 1952, 1989, 1992 ஆண்டுகளில் நிகழ்ந்த ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பங்கள் முறையே 7.0, 7.9, 8.3, 7.6, 7.8, 8.3, 7.3, 7.1, 7.3 ரிக்டர் அளவில் எழுந்து மீண்டும் மீண்டும் தாக்கிச் சேதம் விளைவித்துள்ளன!

1994 ஜனவரி 17 ஆம் தேதி நார்த்ரிட்ஜில் [Northridge] நேர்ந்த 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில், லாஸ் ஏஞ்சலஸில் 680,000 மக்கள் மின்சாரப் பரிமாற்றம் இழந்தனர்! 40,000 பேர் நீர்வசதி இழந்தனர்! எரிவாயு, குடிநீர், மின்சாரம், டெலிஃபோன் தொடர்புகள் யாவும் அற்றுப் போயின! எரிவாயுக் குழாய்கள் வெடித்துக் கட்டிடங்கள் தீப்பற்றி ஒரு பிரளயக் காட்சிபோல் தோற்றம் அளித்தது! இக்கட்டுரை குறிப்பாக அதற்கு முன்பு நிகழ்ந்த, 1989 ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பத்தின் கோர விளைவுகளை ஆராய்ந்து அறிந்த சில அனுபவங்களைக் காட்டுகிறது! பணச் செழிப்பும், பண்டச் செழிப்பும் மிகுந்து, ஆடம்பரம் நிரம்பி வழியும் சொர்க்க பூமியான, காலிஃபோர்னியா கடற்கரைப் பகுதிகளில் அடிக்கடி நேரும் பூகம்பங்களின் நிஜக் கோரக் கதைகளில் ஒன்றை விளக்கிக் கூறுகிறது!

தென்னமெரிக்க வட அமெரிக்கப் பிணைப்பு நிலநடுக்கச் சங்கிலி!

உலகப் பூதளப் படத்தில் நிலநடுக்கப் பிரதேசங்களின் விந்தையானச் சங்கிலித் தொடுப்பைக் காணலாம்! குறிப்பாகத் தென்னமெரிக்க முனையில் மேற்குக் கரையோரம் ஆரம்பித்து, சில்லி, பெரு [Chille, Peru] நாடுகள், அடுத்து மத்திய, வட அமெரிக்காவில் மேற்கே தொடர்ந்து காஸ்டரிகா, நிகராகுவா, மெக்ஸிகோ, காலிஃபோர்னியா, வாஷிங்டன் மாநிலங்கள் வழியாக அலாஸ்காவைக் தொட்டு நிலநடுக்கச் சங்கிலி ஜப்பான், சைனா, வட இந்தியா, இந்தோனேசியா, மத்திய ஆசியாவில் ஈரான், அடுத்து ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் நாடுகளோடு முடிகிறது!

உலகத்திலே பதிவான மிகப் பெரிய உச்ச நிலநடுக்கம் 9.5 ரிக்டர் அளவில், மேற்கத்திய சங்கிலித் தொடர் போக்கில் 1960 ஆம் ஆண்டு தென்னமெரிக்கா சில்லியில் நிகழ்ந்திருக்கிறது! அப்பெரும் பூகம்ப ஆட்டம் 100 மெகாடன் அணு ஆயுத வெடிப்பு ஆற்றலுக்கு நிகரானச் சேதங்களை ஏற்படுத்தியது! அதுபோல் பசிபிக் தொடரில் 18 மில்லியன் மக்கள் தொகை நிரம்பி வழியும் மெக்ஸிகோ நகரத்தில் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் 19 இல் நேர்ந்த 8.1 ரிக்டர் அளவு பூகம்பத்தில், 10,000 பேர் மாண்டனர்! 50,000 நபர் காய மடைந்தனர். 250,000 மக்கள் வீடிழந்தனர்! 800 கட்டிடங்கள் தரைமட்டமாயின! 5 பில்லியன் டாலர் நாணய மதிப்பு விரையம், மெக்ஸிகோவில் ஏற்பட்டது!

வட அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிதாய்ச் சொல்லப்படும் ஸான் பிரான்ஸிஸ்கோ 1906 ஆண்டு நிலநடுக்கம் 8.3 ரிக்டர் அளவில் நேர்ந்து 700 மாந்தர் இறந்ததுடன், 400 மில்லியன் டாலர் சேதாரங்களை ஏற்படுத்தியதாக அறியப்படுகிறது! அமெரிக்காவில் நேர்ந்த (7.3-9.2) ரிக்டர் அளவுப் பெரு நிலநடுக்கம் 27 எண்ணிக்கையில் 11 அலாஸ்கா, 9 காலிஃபோர்னியா, 3 மிஸ்ஸெளரி மாநிலங்களில் நிகழ்ந்தவை! 1811-1812 ஆம் ஆண்டுகளில் நியூ மாட்டிரிட், மிஸ்ஸெளரியில் (8.1, 8.0, 7.8) ரிக்டர் அளவில் முறையே மூன்று பெரும் நிலநடுக்கங்கள் நேர்ந்துள்ளன!

சார்லஸ் ரிக்டரின் நிலநடுக்க ரிக்டர் அளவுகோல்

பூகம்பத் தீவிரக் [Magnitude] கணிப்பு, நிலநடுக்க இயல்பின் வடிவுக்கு ஓர் துல்லியமான அளவியலைக் காட்டும். பூகம்பத்தினால் ஏற்படும் சிதைவுகளைப் புறக்கணித்து, வெறும் நிலநடுக்க ஆற்றலின் வீரியத்தை மட்டும் பூகம்பத் தீவிரம் குவிந்து நோக்குகிறது. நிலநடுக்கத் தீவிரத்தை ‘ரிக்டர் அளவில் ‘ [Richter Scale] குறிப்பிடுகிறார்கள். நிலநடுக்கப் பதிவுக் கருவியைக் கண்டு பிடித்த காலிஃபோர்னியா நிலநடுக்கவாதி, சார்லஸ் ரிக்டர் [Seismologist, Charles Richter] பெயரே, அதற்கு வைக்கப் பட்டுள்ளது. நிலநடுக்க மானிகளில் பதிவாகும் அதிர்வு அலைகளின் ‘வீச்சு அகற்சியைப் ‘ [Amplitude of the Waves] பூகம்ப வீரியத்தைக் குறிப்பிடும் ஓர் அளவெண்ணாக எடுத்துக் கொள்ளலாம். பூஜியத்திலிருந்து மேலே கிளம்பி, தீவிர எண்ணிக்கை 10 ஏற்றத்தில் உயர்கிறது. அதாவது தீவிர நிகழ்ச்சி 5 என்பது, தீவிர நிகழ்ச்சி 4 வீரியத்தை விட 10 மடங்கும், தீவிர நிகழ்ச்சி 3 விட 100 மடங்கும் மிகையாகச் சுட்டிக் காட்டும் லாகிருத அடுக்கைப் [Logarithmic Scale] பின்பற்றுவது.

பூகம்பத் தீவிரம் வேறு. நிலநடுக்க ஆற்றல் வேறு. ரிக்டர் 5 அளவு நிலநடுக்க ஆற்றல், ரிக்டர் 4 அளவு ஆட்ட சக்தியை விட 30 மடங்கு மிகுந்தது. அதுபோல் ரிக்டர் 5 அளவு, ரிக்டர் 3 அளவு ஆற்றலை விட 30×30=900 மடங்கு அதிகமானது. அதாவது இந்த லாகிருத அடுக்கு நிலநடுக்க அளவியலில், ஒவ்வொரு புள்ளியும் 30 மடங்கு ஏற்ற ஆற்றலைக் குறிக்கும்.

1989 இல் நிகழ்ந்த ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம்

1989 அக்டோபர் மாதம் 17 ஆம் நாளன்று மாலை 5 மணிக்கு 62,000 பேர் கான்டில்ஸ்டிக் பூங்காத் திடலில் [Candlestick Park] உலக விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தைக் காண அமர்ந்துள்ள போது, ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா தளப்பரப்பில் [San Francisco Bay Area] வாகன ஓட்டங்கள் ஆறாக ஓடும் சமயத்தில், 7.1 ரிக்டர் அளவு பூகம்பம் திடாரென்று தாக்கியது! அது அபாயக் கண்காணிப்பு வாதிகளுக்குக் கடும் தலை வேதனையை அளித்தது! அந்தக் கோர நிலநடுக்கம் பூமியில் 20 வினாடிகள்தான் நீடித்தது!

பூகம்ப ‘உலுக்கு மையம் ‘ [Epicenter] ஸான் பிரான்ஸிஸ்கோவிற்கு 60 மைல் தெற்கே தோன்றி பெரும் அலைகளை உண்டாக்கியது! ஆனால் ஆட்டத்தின் அதிர்வுகள் 400 மைலுக்கு அப்பால் தென்கோடி ஸான் டியாகோவிலும் [San Diego], நெவேடாவுக்கு மேற்குத் திசையிலும் உணரப்பட்டன! முதல் ஆட்டத்துக்குப் பிறகு 5.2 ரிக்டர் அளவில் பின்னதிர்ச்சி [Aftershock] அதிர்வுகள் 37 நிமிடங்கள் நீடித்தன! விஞ்ஞானிகள் ஸான் ஆன்டிரியா பழுதுத்தொடர் நெடும்போக்கில் [San Andrea ‘s Fault Line] வளைகுடாப் பகுதியில், நேரப் போகும் அக்கடும் நிலநடுக்கத்தை முன்பே அனுமானித்து முன்னறிவித்திருந்தனர்!

பூகம்பத்திற்கு இரையாக 62 பேர் மாண்டனர்! ஸான் பிரான்ஸிஸ்கோவில் 27 இடங்களில் தீப்பற்றி மூன்று நாட்கள் தீயணைக்க முடியாமல் சுமார் 8 சதுரமைல் பரப்புகள் தீய்ந்து போயின! 520 பிளாக்குகள் தீயிக்கு இரையாகி, 25 மைல் நீளம் மின்வண்டிக் கேபிள்கள் [Streetcar Cables] எரிந்து போயின! முக்கியமாக ஸான் பிரான்ஸிஸ்கோ-ஓக்லண்டு வளைகுடா, கான்கிரீட் இரும்புப் பாலத்தின் ஒருபாகம் துண்டிக்கப் பட்டது! ஓக்லண்டு பகுதியில் மாநிலப் பிணைப்பு ஸைப்பிரஸ் பெருவீதி [Interstate Cypress Freeway] I-880 சிதைந்து தகர்க்கப் பட்டுப் பல உயிரிழப்புகள், மனிதக் காயங்கள் ஏற்பட்டன! ஸான் ஜோஸை இணைக்கும் பெருவீதி I-280 பேயாட்டம் ஆடி, சில துண்டுப் பகுதிகள் பிளந்து எம்பி, ஒன்றுடன் ஒன்று மோதித் துணுக்குகள் ஆயின!

சுமார் 3700 பேர் படுகாய அடைந்தனர்! 12,000 நபர்கள் புலம்பெயர வேண்டியதாயிற்று! இடிந்து போன 18,000 இல்லங்களில் 963 வீடுகள் தவிடு பொடியாயின! மற்றும் உடைந்த 2600 வாணிபக் கட்டிடங்களில், 147 தகர்ந்து தரைமட்டமாயின! ஸான் பிரான்ஸிஸ்கோவில் 350,000 நபர்கள் உணவு கிடைக்காது திண்டாடினர்! மொத்தச் சேதார மதிப்பு 7 பில்லியன் டாலர் நிதி விரையம் ஆனதாக கணிக்கப் படுகிறது! அதில் ஏறக்குறைய பாதி மதிப்பு [3 பில்லியன் டாலர்] ஸான் பிரான்ஸிஸ்கோ நகரில் சிதைந்ததாகத் தெரிகிறது!

ஸான் பிரான்ஸிஸ்கோ மெரினா மாவட்டம், ஸான்டா குரூஸ் நடுநகரப் பசிபிக் பூங்கா அங்காடி [Santa Cruz Town Pacific Park Mall] மற்றும் உலுக்க மையத்தின் அருகாமைத் தளங்களில் உள்ள பல மாளிகைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன! ஸான் பிரான்ஸிஸ்கோ ஓக்லண்டு பகுதிகளில் சுற்றி யிருக்கும் நீர் உறிஞ்சிய நிலப் பாகங்கள், கடல் மூலம் வந்த அதிர்வு அலைகளால் பெருமளவு அடிபட்டுச் சேதமுற்றன! அத்தகையச் சேதார விளைவுகளைப் போல், 1985 ஆண்டு நிகழ்ந்த மெக்ஸிகோ நகரப் பூகம்பத்தில் கடல் அலை அதிர்வுகள் உண்டாக்கியதாக அறியப்பட்டது!

உலுக்கு மையத்திலிருந்து 30 மைல் வடமேற்கே ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழக உட்பரப்பில் [Stanford University Campus] 60 கட்டிடங்கள் பலவிதத்தில் தகர்ந்தன! பல்கலைக் கழகத்துக்கு நிதி விரையம் 160 மில்லியன் டாலர் எனக் கணக்கிடப் பட்டது! ஸான்டா குரூஸ் மலை பங்களாக்கள் குலுக்கப் பட்டு பிளவு பட்டன! சில தரை மட்டமாயின! ஸான்டா குரூஸில் நிதி விரையம் 350 மில்லியன் டாலர் என்று யூகிக்கப் படுகிறது!

பூகம்பத்தின் பின்னதிர்ச்சிகளும், தளப்பரப்புப் பாதிப்புகளும்

பூகம்பத்தின் ‘உலுக்கு மையம் ‘ [Epicenter] ஸான் ஆன்டிரியா பழுதுத் தொடரின் ஒரு துண்டில், ஸான்டா குரூஸ் மலையில் லோமா பிரைடாவுக்கு [Loma Prieta] அருகில் அமைந்தது! கலிஃபோர்னியா நிலநடுக்கங்களின் குவிமைய ஆழங்கள் சாதாரணமாக (4-6) மைலாக இருந்தாலும், 1989 பூகம்பத்தின் ‘குவிமைய ஆழம் ‘ [Focal Depth] சற்று நீண்டதாக 11 மைல் என்று கணிக்கப் பட்டது! முதல் குலுக்கலுக்கு 2.5 நிமிடங்களுக்குப் பிறகுத் தீவிரம் 5.2 ரிக்டர் அளவு பின்னதிர்ச்சி [Aftershock] அதிர்வுகள் உண்டாயின! அது மட்டுமல்ல. அதன்பின் ஆயிரக் கணக்கான பின்னதிர்வுகள் பதிவானது அறிய வந்தது! ஒரு வாரம் சென்று தீவிரம் >2.5 ரிக்டர் அளவுள்ள 300 நடுக்கங்கள், தீவிரம் >4.0 ரிக்டர் அளவுள்ள 20 ஆட்டங்கள் நிகழ்ந்தன வென்றும் பதிவுகள் மூலமாகத் தெரிய வந்தது!

லாஸ் கடாஸின் [Los Gatos] வட திசையில், 11 எண் பெருவீதிக்கு அருகிலிருந்து, வாட்ஸன்வில் [Watsonville] தென்புறம் 101 எண் பெருவீதி வரைப் பின்னதிர்வுத் தொடர்ச்சியின் நெடும்போக்கு சுமார் 25 மைல் நீண்டது! இந்த தளப் பகுதிகளில்தான் மிகப் பெரும் சேதார விளைவுகள் ஏற்பட்டன. இந்தப் பிரதேசம் 2 முதல் 11 மைல் ஆழ நீட்சியில் பிரதம அதிர்ச்சித் தளத்துடன் இணைந்துள்ளதாக நம்பப் படுகிறது.

பூமியின் மேற் தளத்தில் 20 மைல் நீட்சியில், 2 அடி முதல் 4 அடி வரைப் பூதள ‘ஏற்ற இறக்கங்களை ‘ [Displacements] இத்தனை அளவு ரிக்டர் தீவிரம் [7.1] உண்டாக்கலாம் என்று பொதுவாக எதிர்பார்க்கலாம். அவ்வித மின்றி விட்டுவிட்டுப் பல இடங்களில் பிளவுகள் தெளிவற்றுக் காணப் பட்டன! வழக்கமாக இல்லாமல், பூகம்பத் தாக்கல் வெகு ஆழத்தில் [11 மைல்] ஏற்பட்டதால், படுக்கைப் பாறை முறிவுத் தொடர்ப் போக்குத் [Bedrock Rupture Propagation] தடைபட்டு, மேற் தளத்தைத் தாக்க இயலாமல் போனது.

பூகம்பத்தினால் பற்றி எழுந்த பெருந்தீ விபத்துகள்

நிலநடுக்கத்தால் 22 கட்டிடங்களில் தீப் பற்றியது! பூகம்ப தாக்கலுக்குப் பிறகு அடுத்த ஏழு மணி நேரங்களில் சுமார் 500 இடங்களில் நெருப்புகள் எழுந்ததாக அறியப் படுகிறது. அவற்றை அணைக்க பல தீயணைப்புப் படையினர் இராப்பகலாகப் பணிபுரிந்த போது, 300 தீயணைப்பாளிகள் விடுமுறையில் இருந்தோரும், பணிமுடிந்தோரும் அவருடன் சேர்ந்து தீயணைப்பில் கலந்து கொண்டனர்.

ஸான் பிரான்ஸிஸ்கோ விமான தளத்தில் நிலநடுக்கத்தால் எரிவாயு கசிந்து பேரளவில் தீப்பற்றியது! அபாய கால ஜனனியை இயக்கும் புரோபேன் எரிவாயுப் பைப் [Propane Gas Pipe on the Emergency Generator] உடைந்ததால், மரக் கிடங்கு ஒன்றில் [Lumber Yard] பெரும் நெருப்புப் பற்றி எரிந்தது. பைப்பில் பீறிட்ட புரோபேன் வாயுவில் நெருப்பு தொடர்ந்து அருகில் இருந்த வீடுகளிலும் தீப் பற்றியது. மாரினா மாவட்டத்தில் [Marina District] ஜெஃப்பெர்ஸன், டிவிஸாடெரோ தெருக்கள் சேரும் இணைப்புப் பகுதியில் பெருந்தீ பிடித்தது. பேரளவில் எழுந்த பெரும் நெருப்புகள் சில மூன்று மணி நேரத்தில் அணைக்கப் பட்டன!

சில சமயங்களில் எரியும் கட்டிடங்கள் உள்ளே வெடிப்புகள் ஏற்பட்டு, தீயணைப்பு நீர் பிணைப்புக்குழல் [Water Hydrant] உடைந்து போனது! நகராட்சி தீயணைப்பு நீர் பரிமாற்றப் பைப்புகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டு, சில இடங்களில் நீரடிப்பு அற்றுப் போனது! தீயணைப்புச் சுருள் பைப்புகளில் கட்டடத் துணுக்குகள் உடைந்து விழுந்து, அவை சில சமயம் துண்டிக்கப் பட்டன!

ஸான் பிரான்ஸிஸ்கோக்கு அப்பால் பெர்க்கிலியில் [Berkeley] கார்ப்பழுது பார்க்கும் கட்டிடத்தில் இருந்த கெமிகல் திரவங்களில் பெரும் நெருப்பு பற்றியது! நல்ல வேளை, ஓக்லண்டு கட்டிடங்களில் தீப்பற்ற வில்லை! ஸான்டா குரூஸ் மாவட்டத்தில் 24 கட்டிடங்களில் தீப்பற்றிச் சாம்பலாய்ப் போயின!

1989 பூகம்பத்தில் அறிந்து கொண்ட புதுப் பாடங்கள்

1. உலுக்கு மையத்துக்கு [Epicenter] அப்பாற்பட்ட தளப்பரப்புகளில் ஏற்பட்ட தகர்ப்புகள் அங்குமிங்கும் விலகி யிருந்தன! பலவீனமான மண்தரைகளில் நிலநடுக்கத்திற்கு ஒவ்வாமல் கட்டிய பழைய வீடுகள்தான் நொருங்கி விழுந்தன!

உலுக்கு மையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்பாராமல் சிதைந்தவை மிகச் சொற்பம்! சேதாரங்கள் பல இடங்களில் நிரம்பி இருந்தன! குறிப்பாக ஹாலிஸ்டர், ஸான்டா குரூஸ், வாடன்ஸ்வில், லாஸ் கடோஸ் [Hollister, Santa Cruz, Watonsville, Los Gatos] போன்ற தளங்களில் பழைய விதிகளில் கட்டப்பட்ட

வீடுகள், மரச்சட்ட வீடுகள், உறுதியாக்கப் பட்ட காங்கிரீட்டில் கட்டப் படாத மாளிகைகள், மட்டரகத்தில் கட்டப்பட்ட வீடுகள் போன்றவையே இடிந்து விழுந்தன!

2. ஸான் பிரான்ஸிஸ்கோ, ஓக்லண்டு நகர் மத்திமத் திடல்களில் விழுந்த பழைய வீடுகள், இடைத்தட்டு உயர மாளிகைகள் கூறும் விபரங்கள் என்ன ? ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வீதம் [Frequency], விழுந்த இல்லங்களின் ‘உச்சயியல் அதிர்வு வீதத்துக்கு ‘ [Resonant Frequency] ஒத்து விட்டதால், அவை பேயாட்டம் ஆடித் தகர்த்து விடப்பட்டன.

3. உலுக்கு மையத்துக்கு அப்பாற் கடந்த தளங்களில் நடுக்கங்கள் மெலிந்து போனதால், சாதாரண வீடுகள், உறுதிப்படாத மாளிகைகள், மரச்சட்ட இல்லங்கள் கூட கீழே விழாமல் தப்பிக் கொண்டன! அல்லது சிறிது முறிவுகளுடன் பிழைத்து விட்டன!

4. 1989 பூகம்பம் பேரழிவை விளைவித்தது! கட்டடக்கலை, பாலம் அமைப்பு, பெருவீதித்துறை எஞ்சினியர்களும், நிலநடுக்க நுணுக்கவாதிகளும் இது போன்ற கோர நிகழ்ச்சிகளை எதிர்நோக்கி இருப்பினும், பொதுமக்கள் இத்தகைய கடும் தாக்குதலுக்குத் தயாராக இருக்கவில்லை என்பது தெரிய வந்தது! ஆயினும் எல்லா விபத்து சமயங்களில் ஒத்துழைப்பது போல், காயமடைந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி, எரியும் நெருப்புகளை அணைப்பதில் முன்வந்து பணியாற்றினர்.

5. மரணங்களுக்கு முக்கிய காரணம், முற்றிலும் முறிந்து தகர்ந்த ‘ஸைப்பிரஸ் மேற்போக்குப் ‘ [Cypress Overpass] பாலம்! நிலநடுக்கத்தின் தீவிரம் அதிக மாயினும் இவற்றைத் தவிர மற்ற மனித மரணங்கள் மிகவும் குறைவு.

6. நிதிவளம், வாணிபம், மக்கள் தொகை பெருத்து வருவதால், காலிஃபோர்னியாவில் அடுத்து வரப்போகும் பெரும் பூகம்பத்தால் மாந்தர் இறப்பு, பொருட்செலவு, நாணயச் செலவு, மனிதக் காயங்களின் எதிர்பார்ப்பு, 1989 இல் நேர்ந்த இழப்புகளை விட 10 மடங்கு மிகையாக விளையும் என்று அனுமானிக்கப் படுகிறது!

7. காலிஃபோர்னியா போன்ற நிலநடுக்க அபாயப் பகுதிகளில் பூகம்பத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத கட்டிடங்கள், மாளிகைகள், காங்கிரீட் பாலங்கள், மாநில இணைப்பு வீதிகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன! அமெரிக்க அரசு, மாநில அரசுகள், மற்றும் மாநிலத் தனியார் நிறுவனங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டிடங்களையும், வீடுகளையும் ஆக்கும் திட்டங்களில் முழு மனதுடன் மூழ்கிப் பணிபுரிய வில்லை என்பது தெரிய வந்தது!

8. மின்சார உற்பத்தி நிலையங்கள் பூகம்பத்தைத் தாங்கி இயங்கினாலும், நிலநடுக்க சமயங்களில் மின்சாரப் பரிமாற்றம், எரிவாயு அனுப்பல், குடிநீர் அழுத்தம் துண்டிக்கப் பட்டதால், அபாயத் துணை ஏற்பாடுகள் [Emergency Power Supply] பல இடங்களில் அமைக்கப்பட வேண்டும் என்று அறிய வந்தது!

9. நிலநடுக்க விஞ்ஞான அறிவு பொதுநபர், அரசாங்க ஆணையாளர், தனியார் வாணிப வல்லுநர் ஆகியோர் அனைவருக்கும் புகட்டப் படவேண்டும் என்று 1989 பூகம்ப அனுபவம் எடுத்துக் காட்டியது! தீயணைப்புப் படை, காவல் வாரியம், முதலுதவி, மருத்துவப் பணியகம், போக்குவரத்து வாகனம் ஓட்டும் நபர்கள் அனைவருக்கும் பூகம்பப் பராமரிப்பு, பாதுகாப்பு, பணியமைப்பு முறைகளில் அடிக்கடி பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவானது.

வட அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் தாக்கும் பூகம்பங்கள்!

1906 ஆம் ஆண்டு ஸான் பிரான்ஸிஸ்கோவில் நேர்ந்த 8.3 ரிக்டர் அளவுப் பேரளவுப் பூகம்பத்தாலும், பிறகு பெருந்தீயிலும் 3000 பேர் உயிரிழந்தனர்! 28,000 வீடுகள் இடிந்து தகர்ந்தன! அடுத்து 1922, 1952, 1959, 1980, 1989, 1992 ஆண்டுகளில் நிலநடுக்கங்கள் மீண்டும் மீண்டும் வருகை தந்து, அங்கே அழிவை உண்டாக்கின!

பிரபஞ்சம் கண்ணிமைப் பொழுதில் ஒரு பெரு வெடிப்பில் தோன்றி விரிந்து கொண்டே போவதாய் அறியப்படுகிறது! 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உண்டான சூரிய மண்டலத்தில் நெருப்பும், நிலமும், நீரும் சேர்ந்து உண்டைக் கட்டிகளாய், தனித்தனித் தட்டுகளாய்ப் புவியின் உட்கரு ஈர்ப்பியல்பால், பேரளவு வேகத்தில் இழுக்கப்பட்டுச் சீரழிந்த முறையில் உருண்டு திரண்டு, பூமியின் தோள்மீது ஒட்டிக் கொண்டவை! வில்போல் முறிக்கப்பட்ட அந்த வளை தட்டுகளின் அமுக்க இழுப்புகள் தளரும் போதோ அல்லது துண்டிக்கப்படும் போதோ கவட்டை இரும்புபோல், அவை பூமியின் மேற்பரப்பை உதைக்கின்றன! அதிர்வுகள் ஓய்ந்தபின், அடுத்து ஓர் தூண்டல் எம்பி பட்ட இடத்திலே படும்! கெட்ட குடில்களே கெடும்! நிலநடுக்கப் போர் தொடுப்பால், பூமியில் அதிர்வுகள் கடல் அலைகள் போல அடுத்தடுத்து வந்து மனித இனம் மடியும்!

தகவல்கள்:

1. San Francisco Earthquake History 1915-1989 www.sfmuseum.org/alm/quakes3.html

2. The Loma Prieta Earthquake 1989 Part I & II www.johnmartin.com/earthquakes

3. San Andreas Quakes show Cyclical Pattern. www.sfgate.com/cgi-bin University of California Study [Jan 9, 2004]

4. Plate Tectonics, The Cause of Earthquakes

5. Earthquakes Magnitude & Gutenberg Richter Law http://simscience.org/crackling/

6. Britains Geological Society Earthquake Reports www.earthquakes.bgs.ac.uk/hazard/faq1.htm

******************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா