ஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

அலெக்ஸ் கிர்பி


சுதந்திரமான சில அறிவியலறிஞர் ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் பொதுமக்களின் சிறுநீரில் ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு யுரேனியம் இருப்பதை கண்டறிந்து கூறியிருக்கிறார்.

1991 வளைகுடாப் போரின் போது அமெரிக்க போர்வீரர்கள் தெரிவித்த உடல் உபாதைகள் போலவே இந்த பொதுமக்களும் தெரிவிப்பதை இவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். இவர் டாக்டர். அஸப் துரகோவிக். இவர் கனடாவில் இருக்கும் யுரேனியம் மெடிக்கல் ரிஸர்ச் செண்டரில் பணிபுரிகிறார்.

மற்ற ஆராய்ச்சியாளர்கள் புதுவிதமான கதிரியக்க ஆயுதம் ஆப்கானிஸ்தானத்தில் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

டிப்லீட்டட் யுரேனியம் எனப்படும் கதிரியக்கம் அற்ற யுரேனிய மூலக்கூறுகள் மூன்றில் இரண்டு வளைகுடாப் போரில் பணிபுரிந்த அமெரிக்க போர்வீரர்களின் உடலில் அதிகமான அளவு இருப்பதை இவர் ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்.

மே 2002 இல் இவர் ஆஃப்கானிஸ்தானத்துக்கு ஒரு குழுவை அனுப்பி அங்கு பொதுமக்களை பேட்டி எடுத்தும் மற்றும் பரிசோதனைகள் பண்ணியும் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்.

அமெரிக்க கூட்டணி நாடுகள் இந்த பகுதிகளில் கதிரியக்கம் உள்ள யுரேனியமும், இன்னும் விஷ யுரேனிய உலோகக்கலவைகளும் போர்தளவாடங்களிலும், குண்டுகளிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது என்று கூறுகிறார்.

நங்கார்ஹர் பிரதேசம் ஆஃப்கான் போரின் போது மிகவும் குறிவைக்கப்பட்ட பிரதேசம். இங்கு பூகம்பம் போல அதிர்வு ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டுகளையும், குகைகளை உடைக்கும் ஆழமாக சென்று வெடிக்கக்கூடிய குண்டுகளையும் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த பகுதியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் வளைகுடா போரின் போது அமெரிக்கப்போர் வீரர்கள் குறிப்பிடும் அனைத்து நோய் அடையாளங்களையும் இந்த மக்கள் பெற்றிருப்பதாக பேட்டிகளின் போது தெரியவந்திருக்கிறது. இவர்கள் மிக அதிகமாக யுரேனியம் தூளை சுவாசித்ததால் இந்த நோய் அடையாளங்களை இவர்கள் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த கருத்தை பரிசோதிப்பதற்காக, இந்த ஆராய்ச்சி நிறுவனம், பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 ஆஃப்கானிஸ்தானியர்களது சிறுநீரை சுதந்திரமாகச் செயல்படும் ஒரு இங்கிலாந்து பரிசோதனைச்சாலைக்கு அனுப்பி வைத்தது.

சிறுநீரை அனுப்பிய அனைத்து மக்களுமே யுரேனிய தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. 1999இல் வளைகுடாப் போரின் போது அமெரிக்கவீரர்கள் உடலில் இருந்த யுரேனியத்தைவிட 100லிருந்து 400 மடங்கு அதிகமான யுரேனியம் ஐஸோடோப்பு மூலக்கூறுகள் இவர்கள் உடலில் இருக்கின்றன என்று கூறுகிறார். ஆஃப்கானிஸ்தானத்தில் இருக்கும் மற்ற பிரதேசங்களிலும் இதே போன்ற ஒரு பாதிப்பு இருந்தால், நாம் ஆஃப்கானிஸ்தானத்தில் ஒரு மாபெரும் பொது சுகாதார நாசத்தை எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு தலைமுறையும் இதன் மூலம் பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்.

இந்த அறிக்கை, ஆஃப்கானிஸ்தானத்தில் பணியாற்றிய உதவி நிறுவன பணியாளர்கள் மற்றும் ஆஃப்கானிஸ்தானத்தில் பணியாற்றிய அமெரிக்க வீரர்கள் அனைவருக்கும் இப்படிப்பட்ட யுரேனியத்தாக்குதல் இருக்கும் என்று கூறுகிறது. துரகோவிக் அவர்களது பரிசோதனை எந்த பாதிப்பும் இல்லாத மூன்று ஆஃப்கானிஸ்தானர்களது சிறுநீரை அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களது சிறுநீரை அளந்திருக்கிறது. பாதிப்பற்றவர்களில் 9.4 நானோகிராம் யுரேனியம், ஒரு லிட்டர் சிறுநீரில் இருக்கிறது

ஆனால், நங்கர்ஹர் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த 17 பேர்களின் சிறுநீரிலும் 315 நானோகிராம் இருக்கிறது. சிலர் ஜலாலாபாத்திலிருந்து வந்தவர்கள். சிலர் காபூலிலிருந்து வந்தவர்கள். சிலர் டோராபோரா பகுதியிலிருந்தும், சிலர் மஜார்-ஈ-ஷரிப் பகுதியிலிருந்தும் வந்தவர்கள். ஒரு 12 வயது பையனின் உடலில் 2031நானோகிராம் இருந்தது. அமெரிக்கப் பொதுமக்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச யுரேனியம் அளவும் 12 நானோகிராம் ஒரு லிட்டருக்கு.

செப்டம்பர் 2002இல் இரண்டாவது குழு ஆஃப்கானிஸ்தானத்துக்குச் சென்று ஆராய்ந்தது. இது இன்னும் அதிகமான அளவு மக்களை பரிசோதித்து முந்தைய பரிசோதனை முடிவுகளை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது என்றும் கூறுகிறார்.

இந்த பரிசோதனைமுடிவுகள் பல அறிவியல் பத்திரிக்கைகளுக்கு பிரசுரத்துக்கு என அனுப்பப்பட்டுள்ளன

‘ஆஃப்கானிஸ்தானத்தில் எந்தவிதமான எண்ணெய் தீயும் இல்லை. எந்த பூச்சிக்கொல்லியும் தெளிக்கப்படவில்லை. யாருக்கும் எந்தவிதமான தடுப்புமருந்தும் கொடுக்கப்படவில்லை. இவைகளைத்தான் வளைகுடாப்போர் நோய் அடையாளங்களின் காரணங்களாகச் சொல்லிவருகிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானத்து பொதுமக்களுக்கு எல்லாவிதமான வளைகுடா போர்வீரர்கள் நோய் அடையாளங்களும் இருக்கின்றன. புதுவகை யுரேனிய ஆயுதங்களை இங்கு பிரயோகித்திருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்களது மூளையை கொஞ்சம் உபயோகப்படுத்திப்பாருங்கள் ‘ என்று இவர் கூறுகிறார்.

இங்கிலாந்து தான் எந்தவிதமான யுரேனிய ஆயுதங்களையும் ஆஃப்கானிஸ்தானத்தில் உபயோகிக்கவில்லை என்று கூறுகிறது. அமெரிக்காவும் அப்படியே கூறுகிறது.

Series Navigation

அலெக்ஸ் கிர்பி

அலெக்ஸ் கிர்பி