அறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


லியோனார்டோ டா வின்சி, பத்து மனிதர்களின் ஆற்றலை ஒருங்கே கொண்ட பேரறிஞர் (ten men-in-one) என்று போற்றப்பட்டவர். டா வின்சி ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாளர், பொறியாளர், சிற்பி, ஓவியர், உடற்கூறியலறிஞர், கட்டிடவியல் நிபுணர், நகரமைப்பு வல்லுநர், புல்லாங்குழல் இசை மேதை, வடிவமைப்பாளர், போர்த்துறைப் பொறியாளர், இவ்வாறு பல்துறைப் பேரறிஞராக விளங்கியவர். பன்முகப் பயிற்சியும், பல்வகைப் பேரறிவும் கொண்ட லியோனார்டோ டா வின்சி பிரபஞ்ச மனிதர் (universal man) என்று போற்றப்பட்டார்; அப்பட்டப் பெயருக்கு முற்றிலும் அவர் பொருத்தமானவர் என்பதில் ஐயமேதுமில்லை. அந்த அளவுக்கு அவர் மூளை புதுப்புது கண்டுபிடிப்புகளாலும், உத்திகளாலும், கருவிகளாலும் நிறைந்திருந்தது. அவர் எழுதி வைத்திருந்த சுமார் 7,000 பக்கங்களும் உடற்கூறியல் உண்மைகள், போர் உத்திகள், குறியீடுகள், பறக்கும் எந்திரங்கள், சமிக்கைகள், வண்ண ஓவியங்கள், புதிர்கள், நகர்ப்புற வடிகால் அமைப்புகள் என்று வியப்பூட்டும் கதம்பக் களஞ்சியமாய்க் காட்சியளித்தன.

வசதி வாய்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கும் அவருடைய ஆசை நாயகிக்கும் 1452 ஆம் ஆண்டு ஏப்பிரல் 15இல் மகனாகத் தோன்றியவர் டா வின்சி. பின்னாளில் தாயார் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ள, டா வின்சி தந்தையின் பாதுகாப்பில் வர நேர்ந்தது; தந்தையார் ஃபிளாரன்சுக்குக் குடி பெயர்ந்தபோது, அங்கிருந்த சிற்றப்பாவின் அரவணைப்பில் பல்லாண்டுகள் வளர்ந்தார். தனது 14ஆம் வயதிலேயே மாதிரி வடிவமைப்பில் (modeling) மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் டா வின்சி; இதைக் கண்ட அவரது தந்தை ஆந்திரயா டெல் வெரோசியோ என்ற சிற்பியிடம் அவரைப் பயிற்சிக்கு அனுப்பினார். அங்கு டா வின்சி பல்துறைப் பயிற்சியும் பெற்றார். ஃபிளாரன்சில் இருந்தபோது, தமது முப்பதாவது வயது வரை பல்வேறு துறைகளில் கல்வி கற்பதிலும் பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

1482ஆம் ஆண்டு மிலன் நகர அரசருக்கு, டா வின்சி தமது பல்வேறு பயிற்சிகள் பற்றிக் குறிப்பிட்டு, தமது சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒரு விண்ணப்பம் எழுதினார். அரசரும் படைப் பிரிவில் போர்ப் படைப் பொறியாளராக அவரை நியமித்தார். அப்பதவியில் இருந்தபோது டா வின்சி வேதிப் புகை, கவச வாகனங்கள், ஆயுதங்கள், குண்டு மழை பொழியும் கருவிகள் எனப் பல்வேறு இராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். மிலனில் இருக்கும்போது நகரமைப்பாளராகவும், கட்டிடவியல் துறையிலும் கூட சேவை செய்தார். தெருக்கள், கால்வாய்கள், மாதா கோவில்கள், புற நகர்ப் பிரிவுகள், மக்கள் குடியிருப்புகள் எனப் பல்வேறு நகர்ப் பகுதிகளையும் வடிவமைத்துக் கொடுத்தார். 1495இல் தமது புகழ் பெற்ற “கடைசி விருந்து (Last Supper)” என்ற ஓவியத்தை வரையத் துவங்கி 1497இல் நிறைவு செய்தார்.

லியோனார்டோ 1499இல் வெனிஸ் நகருக்கு இடம் பெயர்ந்தார். அப்போது துருக்கி நாட்டுடன் மும்முரமாகச் சண்டை நடந்து கொண்டிருந்தது. போரில் துருக்கியை வீழ்த்துவதற்காகப் பல கண்டுபிடிப்புகளை லியோனார்டோ மேற்கொண்டார்; உத்திகளை வகுத்துக் கொடுத்தார். போர் வீரர்களுக்குக் குண்டு துளைக்காத சட்டைகள், எதிரிக் கப்பல் படைகளை அழிப்பதற்கான நீர் மூழ்கிக் கப்பல்கள், கண்ணி வெடிப் படகுகள் ஆகியன இவற்றுள் அடக்கம்.

கி.பி.1500க்குப் பிறகு டா வின்சி ஃபிளாரன்சுக்குத் திரும்பினார்; 1503இல் புகழ் பெற்ற மோனோ லிசா வண்ண ஓவியத்தை தீட்டத் துவங்கினார். அவரது ஓவியப் பணியரங்கத்தில் அமர்வதற்காக ஒவ்வொரு நாள் மாலையும் மோனோ லிசா வந்து சென்றார். மூன்றாண்டு கடின உழைப்பிற்குப் பின் 1506இல் ஓவியம் நிறைவு பெற்றது; ஓவியத்தைக் கண்ட டா வின்சி தன்னைத் தானே நம்ப முடியாமல் வியப்பிலாழ்ந்து போனார்; அந்த அளவுக்கு ஓவியம் அவரைக் கவர்ந்தது. அக்கவர்ச்சி கடந்த ஐநூறு ஆண்டுகளாக, பல கோடி மக்களிடம் நிலவி வருவதை நாம் அறிவோம். மேற்கூறிய ஓவியம் ஃபிரன்சு நாட்டிலுள்ள பொருட்காட்சி சாலையில் இன்றும் காட்சிப் பொருளாக இருந்து வருகிறது. மோனோ லிசா ஓவியத்தை வரைந்த பின்னர், டா வின்சி மிலன் நகருக்குத் திரும்பி 1506 முதல் 1513 வரை அங்கிருந்தார். அப்போது மிலன் நகரம் ஃபிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. அங்கு திருக்கோயிலில் வைத்து வணஙகத்தக்க ஓவியங்களைத் தீட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. குழந்தையுடன் இருக்கும் கன்னித்தாய் அவர் வரைந்த ஓவியங்களுள் ஒன்று.

பின்னர் 1513 இல் ரோம் நகருக்கு டா வின்சி சென்றார். தமது வாழ் நாளின் இறுதிப் பகுதியில் முதலாம் ஃபிரான்சிஸ் மன்னரின் விருந்தினராகத் தங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மன்னர், அவருக்கு ஓய்வூதியம் வழங்கித் தமது நாட்டில் இருக்கச் செய்தார். இறக்கைகளுடனும், மேலே சுழலும் விசிறியுடனும் கூடிய பல்வகைப்பட்ட பறக்கும் எந்திரங்களை வடிவமைத்து உருவாக்கினார் டா வின்சி. மனித உடலின் பல்வேறு பாகங்களையும் விளக்கமாக வரைந்து காட்டினார்; நீர்க் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார்; அந்நாளையப் பொறியாளர்களுக்கு உதவும் பொருட்டு, கட்டிடப் பொருள்களை மேலே தூக்கிச் செல்ல பளு தூக்கும் பொறியை வடிவமைத்துக் கொடுத்தார். பிரபஞ்ச மனிதர் என்று போற்றப்பட்ட லியோனார்டோ டா வின்சி 1519ஆம் ஆண்டு மே திங்கள் 2ஆம் நாள் இப்பூவுலக வாழ்வை நீத்தார்.

டாக்டர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD

Email: ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர