போபால் விஷ வாயுவில் பல்லாயிரம் பேர் பலியாகிப் பதினெட்டு ஆண்டுகள்….! (Bhopal Union Carbide Pesticide Plant Gas Disaster, A Revi

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டு வீழ்ச்சிக்கு அடுத்த படியான இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! அணு ஆயுதங்கள் வெடித்து, ஜப்பானில் இறந்தவர் எண்ணிக்கை 300,000 பேரைத் தாண்டி விட்டது! அங்கு காயமுற்றோர், கதிரடி பெற்றோர், சந்ததி ஊனமுற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா!

செர்நோபிள் விபத்தில் உடனே இறந்தவர் 31 நபராயினும், மிகையானக் கதிரடியில் பாதிக்கப் பட்டவர் எண்ணிக்கை 600,000 நபருக்கும் மேல் என்று அறியப் படுகிறது! அண்டை ஊர்களில் பொழிந்த கதிர்த் தீண்டலால், சுமார் 135,000 மக்கள் வேறு ஊர்களில் குடியேற ராணுவ பஸ்களில் தூக்கிச் செல்லப் பட்டனர்! பல வருடங்கள் கழித்துக் கதிர் ஐயோடினில் [Radioiodine] பாதிக்கப்பட்ட 1800 குழந்தைகள் தைராய்டு புற்றுநோய் தாக்கப் பட்டதாகவும், அந்தக் குழுவில் பத்துக் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இப்போது அறியப் படுகிறது!

உலக வரலாற்றில் முதன்மை பெற்ற விஷ வாயு விபத்து!

போபாலில் கசிந்து வெளியேறிய மிக் வாயுவில் [Methyl Isocynate (MIC)] 1984 இல் உடனே மாண்டவர் 3000 பேர் என்றும், சில நாட்களில் மடிந்தவரையும் சேர்த்தால் 8000 என்றும், இன்று வரை [2002] மரண மடைந்தவர் 16,000 எண்ணிக்கையை மீறி விட்டதாகவும் போபால் அகிலவலை முகப்பு ஒன்று சமீபத்தில் அறிவித்துள்ளது! 150,000 பேருக்கு மேல் மிக் வாயுவை உட்கொண்டு பலர் குருடாகிப் போனார்! பலர் முடமாகிப் போனார்! பலர் சுவாசப் பாதைகளில் பாதிக்கப் பட்டார்! மிஞ்சிய பேர் பல வித நோய்களில் [Fibrosis, Brochial Asthma, Chronic Obstructive Airways Disease, Emphysema, Recurrent Chest Infections, Pulmonary Tuberculosis] பல்லாண்டுகள் வேதனை யுற்றார்! முடிவாகக் காய முற்றோர் 500,000 எண்ணிக்கையைத் தாண்டி விட்டதாகக் கணக்கிடப் பட்டுள்ளது என்று 2002 செப்டம்பரில் புதிய அகிலவலை அறிக்கை ஒன்று கூறுகிறது!

மேலும் கர்ப்பவதிகள் கருச்சிதைவாகிப் பட்ட இன்னல்கள், செத்துப் பிறந்த சிற்றிளம் மதலைகள், அங்க ஈனத்தில் பிறந்த குழந்தைகள், மாந்தர் புப்புசப் பாதிப்புகள், நரம்பியல் திரிபுகள் [Nervous Disorders] போன்ற குறைபாடுகள், முரண்பாடுகள் போபால் மருத்துவ மனைகளில் ஆயிரக் கணக்கில் பதிவாகி யுள்ளன! போபால் பலியாளிகளின் நோய்களை ஆராய்ந்த ஓர் ஆய்வுப்பணியில் [A Research Study] இராசயனக் கூடத்தின் அருகில் வாழ்ந்த பெண்டிரின் தாய்ப்பாலில் பாதரசம், ஈயம், ஆர்கானோ குளொரைன் [Mercury, Lead, Organo-Chlorines] இருந்ததாக, 2002 பிப்ரவரி கிரீன்பீஸ் அறிக்கை [Greepeace Report] ஒன்று கூறுகிறது!

இம்மூன்று பெரும் கோர நிகழ்ச்சிகளை ஆராய்து பார்த்தால், இரசாயன நச்சுப் பண்டம், அணு ஆயுத வெடிப்புக் கதிரிக்கப் பொழிவுகளைப் போன்று ஒரே மாதிரி மரணத்தையும், மக்களுக்கு உடல் நோய்களையும், சந்ததிப் பாதிப்புகளையும் தருகிறது! அணுகுண்டு வீழ்ச்சிக்குப் பின், அமெரிக்க அரசு ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாக்கியில் கதிரடி பட்டோருக்குத் தொடர்ந்து மருத்துவப் பணி செய்ய முன்வந்தது! அதுபோல் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு சற்று தாமதமாகப் பட்டாலும், ரஷ்ய ராணுவம் பாதிக்கப் பட்ட மக்களுக்குச் சிறப்பாகப் பணி புரிந்தது! ஆனால் போபால் இரசாயன விபத்துக்குப் பிறகு போதிய மருத்துவ மனைகள் இன்றி, மருத்துவக் கண்காணிப்புகள் இன்றி, பாதிக்கப் பட்டோர் நஷ்ட ஈடு நிதி உதவி கிடைக்காமல், பட்ட துன்பங்களைக் குறிப்பிடப் பக்கங்கள் போதா! சட்ட விதிச் சண்டைகளில் பாரத அரசும், அமெரிக்க உரிமையாளி யூனியன் கார்பைடு கம்பெனியும் [Union Carbide Corporation (UCC)] மாட்டிக் கொண்டு, பாதிக்கப் பட்ட பாமர மக்களைக் கவனிக்காது பல்லாண்டுகள் வேதனையில் துடிக்க விட்டு விட்டனர்!

பாரத அரசுக்கும், யூனியன் கார்பைடு நிர்வாகத்தும் நடந்த நீதி மன்றப் போட்டி வாதங்களில் முடிவில் தீர்வான நஷ்ட ஈடுத் தொகை 470 மில்லியன் டாலர் பணம் பங்கிடப்பட்டுப், பலியான குடும்பங்களுக்கோ அல்லது நோயில் பாடுபடும் பாமர மக்களுக்கோ சரியான நேரத்தில் அளிக்காமல் போனது, ஒரு தனிச் சோகக் கதை!

போபால் இரசாயனக் கூடத்தில் எப்படி விபத்து நேர்ந்தது ?

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலை நகரான போபால் 900,000 மக்கள் தொகை கொண்டு, பாரத் கன மின்சார யந்திரங்கள் [Bharat Heavy Electricals Ltd (BHEL)] போன்ற தொழிற்துறை உடைய மாநகரம்! அமெரிக்காவின் யூனியன் கார்பைடு உதவியால் [Union Carbide Corporation] 1981 இல் பூச்சி கொல்லி [Pesticide] தயாரிக்கும் இரசாயனக் கூடம் ஒன்று போபாலில் நிறுவ முடிவானது. அதில் யூனியன் கார்பைடுக்கு 51% பங்கு, பாரத அரசுக்கு 26% பங்கு, மற்றும் 24000 இந்தியருக்கு 23% பங்கு உரிமை. முக்கியமாக பூச்சி கொல்லிக்கு தேவையான மிக் இரசாயனத்தை [Methyl Isocyanate (MIC)] ஆக்கவும், அதைச் சேமிக்கவும் கூடம் இயங்குகிறது. பிரதம மூலத் திரவம் மிக்குடன் கார்பன் டெட்ராகுளோரைடு [Carbon Tetrachloride], மற்றும் ஆல்ஃபா நஃப்தால் [Alpha-Naphthol] இரண்டையும் இணைத்தால் பூச்சி கொல்லி மருந்தை உண்டாக்கலாம்.

Bhopal Pesticide Plant

அவற்றில் மிக் இரசாயனமே மிகவும் வீரிய மானது! கொடிய விஷத்தன்மை [Highly Toxic] கொண்டது! நீருடன் கலந்தால் தீவிர வெப்பத்தை வெளியாக்க [Violent Exothermic Reaction] வல்லது! யூனியன் கார்பைடு இயக்க நெறி நூலில், ‘தோல், கண்கள், புப்புசங்கள் ஆகியவற்றில் தீவிர எரிச்சல் ஊட்டி, [Fatal Pulmonary Edema] மிக் மரண மூட்டும் விஷ இரசாயனம் ‘ என்று எச்சரிக்கை செய்கிறது!

1984 டிசம்பர் 2 ஆம் தேதி [ஞாயிற்றுக் கிழமை] இரவு 9:30 மணிக்கு இரண்டாம் ஷிப்ட் அதிகாரியின் உத்தரவுப்படி, பணியாளி ஒருவன் பிளாஸ்டிக் பைப்பைக் கழுவத் துவங்கினான்! போபால் கூடத்தில் 15000 காலன் கொள்ளவு கொண்ட மூன்று மிக் கலன்களில் [E610, E611, E619] இரண்டில்தான் எப்போதும் மிக் திரவம் இருக்க வேண்டும். ஒரு கலன் அவசியம் காலியாய் இருக்க வேண்டும். அன்றைய தினத்தில், இயக்க நெறிக்கு முரணாக மூன்று கலன்களிலும் [E610, E611, E619] ஏனோ மிக் இருந்தது! மிக் இருந்த கலனை [E610] இணைக்கும் வால்வை மட்டும் மூடி, அவன் நீரைச் செலுத்தினான். பராமரிப்புப் பணியில் வாடிக்கையாகப் பைப்பைக் கழுவப் பயன் படுத்திய நீர் எதிர்பாராதவாறு, 13000 காலன் மிக் தங்கிய கலனில் [Tank E610] கசிந்து போய்க் கொட்டி விட்டது! வால்வுகளில் சில சமயம் கசிவு நேர்வதால், இயக்க நெறிப்படித் வட்டத் தட்டை இடையில் நுழைத்து [Isolation with Blind Flange] கலன் தனித்து விடப் பட வேண்டும்! அன்று பணியாளி தட்டை அமைத்துக் கலனைத் தனித்திடவும் இல்லை! தவறான அம்முறையை அதிகாரிகள் கண்டு கொள்ளவும் இல்லை! பைப்பைக் கழுவ நீர் திறக்கப் பட்டு செலுத்தப் பட்டது! இதுதான் பணியாளி செய்த இமாலயத் தவறு! விபத்தை உண்டாக்கத் தூண்டிய மாபெரும் தவறு!

மிக் கலனின் அழுத்தம் மெதுவாக 2 psi ஆனது! 11 மணிக்கு இரவு ஷிப்ட் குழு வந்தது. அப்போது அழுத்தம் 10 psi ஆகக் கலனில் ஏறியதைக் காட்டிய அழுத்த மானியை, நோக்கிய இயக்குநர் நம்பாது புறக்கணித்தனர்! அது அடுத்த மனிதத் தவறு! 12:40 நள்ளிரவில் அழுத்தம் 40 psi ஆக உச்ச நிலை அடைந்து, தாங்க முடியாத கலன் உப்பி உடைய ஆரம்பித்த போது, ஆட்சி அறை இயக்குநர் [12:45 A.M.] கண்ணுக்குத் தெரிந்தது! அத்துடன் கலனின் உஷ்ணமும் அதிகமாக ஏறி விட்டிருந்தது! மிக் வாயு வெளியேறிப் பலரது கண்களில் எரிச்சல் உண்டாகி, அனைவருக்கும் முதல் எச்சரிக்கை தந்தது! இயக்குநர் யாவரும் மிக் எழுச்சியைத் தடுக்க அங்கு மிங்கும் ஓடினர்! ஆனால் தாமதமாகி விட்டது! விஷ வாயு கட்டுப்படுத்த முடியாத நிலையில் காட்டுத் தீபோல் பெருகி விட்டது! திடாரென 120 அடி உயரப் புகை போக்கியில் 10 அடி உயர வெள்ளை முகில் குப்பெனக் கிளம்பியது! 12:50 மணிக்குத் தீயணைப்புப் படையினர் அழைக்கப் பட்டுக் கூடத்தில் நுழைந்தனர்! முகிலின் மீது நீர் வெள்ளம் அடிக்கப்பட்ட போதிலும் குறையாது, வெண்முகில் மீறிக் கொண்டு 110 அடி உயரத்துக்கு பூதமாய் உருவெடுத்தது! காற்றைவிடக் கனமான விஷ வாயு முகில், தாழ்ந்து காற்றுப் போக்கில் தரை மட்டத்தில் பரவ ஆரம்பித்தது!

இரசாயனக் கூடப் பணியாளிகள் யாவரும் கண்ணெரிச்சல் தாங்காது வெளியே ஓடினர்! சிலர் மட்டும் அபாயத்தைக் கையாளத் தங்கினர். 1:30 மணிக்கு மிக் அபாய வாயு எச்சரிக்கை சங்கு இயக்கப் பட்டது! எப்போதும் கேட்ட சங்க நாத மானதால், யாரும் அதை அபாய அறிவிப்பாகக் கருதவில்லை! உறங்கும் மக்களை ஆரவாரப் படுத்த விருப்ப மின்றி, ஊதிய சங்கும் 15 நிமிடத்தில் நிறுத்தப் பட்டது! உறங்கிக் கொண்டிருந்த ஆயிரம் ஆயிரம் பாமர ஏழை மக்கள் அவரது படுக்கையிலே மாண்டனர்! சிலர் விழித்துக் கொண்டு கண்ணெரிச்சலில், நெஞ்சரிச்சலில் வீட்டை விட்டு வெளியே ஓடினர்! காற்றடிக்கும் திசையை ஆவேசத்தில் உணராமல், விஷ வாயு முகிலை நோக்கி ஓடி அதன் அசுர அணைப்பில் மடிந்தனர்! அருகில் இருந்த மருத்துவ மனைகள் யாவும் நிரம்பின! ஏழை மாந்தர் கண்ணெரிச்சல், தீவிரத் தோல் அரிப்பு, சுவாசிக்கத் திணறிப் புப்புசப் பாதை நெரிப்பில் நரக வேதனை உற்றனர்! ஆயிரக் கணக்கில் மானிடரும் உயிரினங்களும் நொடிப் பொழுதில் சடலங்கலாய் ஆயின! நூற்றுக் கணக்கில் இறந்தவரை இராப் பகலாய் தொடர்ந்து எரிக்க வேண்டியதாயிற்று! ஆயிரக் கணக்கான ஆடு மாடுகள் செத்து அவற்றையும் பேரளவில் பெரு நெருப்பில் எரிக்க வேண்டியதாயிற்று!

போபால் நகரை ஓர் நரக பூமியாய் மாற்றியது விஷ வாயு!

இரசாயனக் கூடத்தைச் சுற்றி உள்ள ஊர்கள் ஜயப்பிரகாஷ் நகர், காசி காம்ப், சோலா கென்சி, ரயில்வே காலனி ஆகியவற்றில் வாழ்ந்த மக்கள் யாவரும் விஷ வாயுவுக்குப் பலியாயினர்! பலியானவர்களில் பலர் வறுமை மிக்க ஏழைப் பாமர மக்கள்! போபால் நகர மாந்தர் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் கசிந்த 40 டன் மிக் விஷ வாயு பல மைல் வட்டாரத்தில் தனது பாசக் கயிற்றை வீசியது! மிக் வாயு சுவாசிக்கும் காற்றை விடக் கனமானதால், அது முழுவதும் தளப்பரப்பை ஒட்டியே நிலவி, நான்கு மணி நேரம் தனது நாச வேலைகளைச் செய்ததால், போபால் நகரம் போபால் நரகமாய் மாறியது! தூக்கத்திலே சுமார் 4000 பேர் மாண்டதாக ஓர் அறிக்கை கூறுகிறது! கண்ணிழந்தவர், மற்றும் நோயுற்றவர், காயமடைந்தவர் இன்றுவரை 400,000 பேர் என்று அதே அறிக்கையில் காணப் படுகிறது!

கிணற்று நீரில் விஷ வாயு கலந்து குடிப்பதற்குத் தகுதி அற்றதாய் ஆனது! உலக உடல்நலப் பேரவை [World Health Organization WHO 1993], அமெரிக்காவின் சூழ்வெளிப் பாதுகாப்பு ஆணையகம் [US Environmental Protection Agency EPA 1999] ஆகிய இரண்டும் வரையறை யிட்ட அளவு நெறிகளைத் தாண்டிப் பல ரசாயன விஷப் பண்டங்கள் நீரில் கலந்திருந்தன! கிணற்று நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில் கிடைத்த விளைவுகள்:

1. கார்பன் டெட்ராகுளோரைடு [Carbon Teterachloride] 1705 மடங்கு [WHO]….682 மடங்கு [EPA]

2. குளொரோபார்ம் [Chloroform] 13 மடங்கு [WHO]….260 மடங்கு [EPA]

3. டிரைகுளோரோஎதேன் [Trichloroethane] 3 மடங்கு [WHO]….50 மடங்கு [EPA]

4. டெட்ராகுளோரோஎதேன் [Tetrachloroethane] 9 மடங்கு [EPA]

5. டைகொளோரோபென்ஸீன் [Dichlorobenzene] 3 மடங்கு [WHO]….11 மடங்கு [EPA]

மேற்கூறிய இரசாயன திரவங்கள் உண்டாக்கும் நோய்கள்:

1. இரத்த சம்பந்தமான நோய்கள் 2. ஈரல், கல்லீரல், குடல், கிட்னிப் பாதகங்கள் 3. இரத்தப் புற்று நோய் தோல் புற்று நோய், பிறப்புறுப்பு, மூத்திரப்பை புற்று நோய் 4. நரம்பியல் திரிபுகள் 5. தீவிரத் தலைவலி, வாந்தி, மயக்கம், பேச்சு மூச்சு நீங்கி வீழ்ச்சி, இறுதியில் மரணம்.

Chemical Poisons in Water

இரசாயன விஷ வாயு கசிந்து பேரழிவு உண்டாகக் காரணங்கள்:

போபால் விஷ வாயுக் கசிவு மாபெரும் மனிதத் தவறுகளாலும், பாதுகாப்பு யந்திரங்கள் பல இயங்காமல் பராமரிப்பில் முடங்கியதாலும், உலக வரலாற்றிலே நிகழ்ந்த மிகப் பெரும் இரசாயன விபத்தாக முடிந்து விட்டது! யூனியன் கார்பைடு இரசாயனக் கூடத்தில் மிக் திரவத்தின் அழுத்தம் மீறி, விஷ வாயு வெளியேற ஒன்பது முக்கிய காரணங்கள் கண்டு பிடிக்கப் பட்டன!

1. பிரதம காரணம்: கூடத்தில் வெறுப்புடன் வேலை செய்யும் பணியாளி ஒருவன், வேண்டு மென்றே தற்காலிகப் பைப் ஒன்றை மிக் கலனுடன் இணைத்து, ஏராளமான நீரைச் செலுத்தியதால் அழுத்தம் மிகையாகிக் கலனின் பாதுகாப்புத் தகடு [Rupture Disc] உடைந்து விஷ வாயு வெளியேறக் காரண மானது!

2. பராமரிப்பு ஏதும் முறையாகச் செய்யாததால், மிக் கலனில் இருந்த உஷ்ண, அழுத்த மானிகள் [Temperature & Pressure Gauges] காட்டும் அளவுகளை யாரும் மெய்யென்று நம்புவதில்லை! விபத்தன்று கலன் அழுத்தம் மெய்யாக ஏறியபோது பணியாளர் அதைக் கவனித்தாலும் நிஜம் என்று எடுத்துக் கொள்ள வில்லை!

Biological Effects

3. மிக் கலனின் உஷ்ணத்தைத் தணிக்கும் குளிர்விப்புச் சாதனம் [Refrigeration Unit] சில நாட்களாக ஏனோ நிறுத்தமாகிக் கிடந்தது! அது இயங்கிக் கொண்டிருத்தால், அன்று நீர் தீண்டப் பட்டதும் மிக்கின் உஷ்ணம் ஏறி யிருக்காது! அதனால் அழுத்தமும் மிகையாகி யிருக்காது!

4. வாயு சுத்திகரிப்புச் சாதனம் [Gas Scrubber] மிக் உற்பத்தியை நிர்மூல மாக்குவது [Neutralize MIC]! அன்று அச்சாதனமும் பராமரிப்புக்காக நிறுத்தமாகி யிருந்ததால், மிக் வாயு உற்பத்தியைத் தவிர்க்க முடியாது போயிற்று! அச்சாதனம் இயங்கி யிருந்தால், 75% உற்பத்தி குன்றி 40 டன்னுக்குப் பதிலாக 10 டன் மிக் வாயுதான் வெளியாகி யிருக்கும்!

5. சுத்திகரிப்புச் சாதனத்தில் [Gas Scrubber] தப்பி வெளியாகும் மிக் வாயுவை எரித்து இல்லாமல் செய்யும் விரி புகை போக்கி [Flare Tower] துருப்பிடித்த பைப்பை மாற்ற தட்டு இடையீடு நுழைக்கப் பட்டு அமைப்பிலிருந்து தனித்து விடப் பட்டிருந்தது [Isolated inserting a Blank]!

6. மிஞ்சிய வாயுவை நிர்மூல மாக்கும் நீர்த்திரை [Water Curtain] விரி புகை போக்கியின் உச்சியை நெருங்க முடியாதவாறு தாழ்ந்து போனதால், மிக் முகில் உப்பிக் கொண்டு கிளம்பியது!

7. மிக் சேர்ந்துள்ள கலன் E610 குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிரம்பிக் காலியாக இருக்க வேண்டிய நிரம்பி வழியும் மற்ற கலனிலும் மிக் தங்கி யிருந்ததால், அழுத்தம் மித மிஞ்சிப் பெருக ஏதுவானது!

8. மிக் கலனில் உஷ்ணமும், அழுத்தமும் ஏறிக் கொண்டு போகும் போது தேவையான எச்சரிக்கை ஒலி, விட்டு விட்டு மினுக்கும் சிவப்பு அபாய ஒளி ஏதும் இராசயனக் கூடத்தில் இல்லாததால் பணியாளிகளோ, ஆட்சி அறை இயக்குநர்களோ யாரும் விபத்தின் வருகையை முன்னறியாமல் போயிற்று!

9. பூச்சி கொல்லி [Pesticide] இரசாயனக் கூடத்தின் அருகே வாழும் மக்களின் கவனத்தைக் கவர பயிற்சியின் போது ஊதும் சங்க நாதம் இருக்கிறது! அபாய அறிவிப்புக்கு மட்டும் எச்சரிக்கையாக ஊதும் தனிச் சங்க நாதம் எதுவும் இல்லாது, ஒரு மாபெரும் தவறு! காதைத் துளைக்கும் வண்ணம் அலறும் அபாயச் சங்கு நாதம் எதுவும் இல்லாததால் இரவில் படுக்கையில் உறங்குவோரும், விழித்திருந்தோர் பலரும் செத்து மடிந்தார்கள்! பயிற்சிக்காக ஊதும் சங்கு அன்றைய இரவில் ஒலித்த போதும், பாமர மக்கள் அதைத் ‘தீவிர அபாய அறிவிப்பு ‘ என்று கருதித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வில்லை!

10. பூச்சி கொல்லியைக் கையாளும் பாதுகாப்பு முறைகள் யாவும் ஆங்கிலத்திலே எழுதப் பட்டு, அம்மொழி அறியாதவருக்கு இந்தி மொழியில் எழுதப்பட வில்லை! யூனியன் கார்பைடு உரிமை நிர்வாகிகள் அபாயக் கொல்லி தயாரிக்கும் இராசயனக் கூடத்தைப் பற்றி ஆதி முதலே அருகில் வாழும் மக்களுக்குப் போதிய பயிற்சியோ, அறிவிப்போ எதுவும் அளிக்க வில்லை!

11. போகப் போக படிப்புக் குறைந்த ஆட்கள் சேர்க்கப் பட்டதாலும், போதிய பயிற்சிகள் இந்தி மொழியில் அளிக்காததாலும், இரசாயன ஏற்பாடுகளின் இயக்க முறைகள், பாதுகாப்பு நெறிகள் எதுவும் தெரியாமல் பணியாளிகள் குருட்டுப் போக்கில் வேலை செய்து வந்தார்கள்! அருகில் வாழும் எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களுக்கு அபாய சமயத்தில் எப்படித் தப்புவது என்று வாயால் கூட பாதுகாப்பு வழி முறைகள் அறிவிக்கப்பட வில்லை!

விஷ வாயுப் பொழிவில் கர்ப்பிணிகளுக்குத் தீங்குகள்

போபால் சுல்தானியா ஜனதா மருத்துவ மனையில் பணி புரியும் டாக்டர், நர்ஸ் கூறியவற்றை எல்லாம் தொகுத்து வெளியிட்ட ‘ஒரு குழந்தை பிறக்கிறது ‘ என்னும் புத்தகத்தில் டிம் எட்வெர்ட்ஸ் [ ‘A Child is Born ‘ By: Tim Edwards] கூறுவது: பிரசவ அறை நர்ஸ் 1985 ஜூலையில் குறிப்பிட்டது இச்சம்பவம். ஒரு குழந்தை பிறந்தது. அலற வைக்க நர்ஸ் மதலையைத் தட்டியதும் குரல் எதுவும் வரவில்லை! டாக்டர் சுருண்டு கிடந்த தாயின் மருத்துவத் தாளைப் பார்த்தார். மதலை நீல நிறத்தில் தொய்ந்து நான்கு பவுண்டு எடையுடன் செத்துப் பிறந்தது என்று எழுதப் பட்டிருந்தது! காத்துக் கிடக்கும் அறையில் இருந்த உற்றார் கோவென்று அழும் குரல் நெஞ்சைத் தொட்டது! டாக்டர் அடுத்த பிரசவ அறைக்குள் நுழைந்தார். அங்குள்ள நர்ஸ் ‘விஷ வாயுப் பலியின் அடுத்த குழந்தை ‘ என்று தந்தையிடம் கூறியது டாக்டர் காதில் விழுந்தது!

Mothers ‘ Milk Poisoned

போபால் விபத்து நேர்ந்து 7 மாதங்களுக்குப் பிறகு ‘ரித்து ஸாரின் ‘ என்னும் செய்தி தயாரிப்பாளி [Reporter Rithu Sarin] நூற்றுக் கணக்கான பெற்றோர்களின் அவலச் செய்திகளைக் கேட்டு ‘போபாலின் சிசுக்கள் ‘ [ ‘The Babies of Bhopal ‘] என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்!

போபாலின் சிசுக்கள்! விஷ வாயுக் குழந்தைகள்!

இராசயனக் கூடத்திற்கு அரை மைல் வட்டாரத்தில் வாழ்ந்து, விஷ வாயு கசிந்த சமயத்தில் கர்ப்பிணியான பெண்டிர் 865 பேரை உளவி வினாவியதில், 43% பிள்ளைகள் பிறக்கும் போதே செத்துப் பிறந்தன! உயிரோடு பிறந்த 486 குழந்தைகளில் 14% முப்பது நாட்களுக்குள் இறந்து போயின! போபால் விபத்து நேர்வதற்கு ஈராண்டுக்கு முன்பு 2.6%-3% பிள்ளைகளே அவ்வாறு முப்பது நாட்களில் இறந்தன! அதாவது மிக் விஷ வாயுவின் பாதிப்பால் 1987 இல் அவ்வித மரணங்கள் ஐந்து மடங்காய்ப் பெருகி யுள்ளன! ஒரு மாதத்தைக் கடந்து வாழும் மதலைகளும் உயிர் பிழைக்கும் என்ற உத்திரவாத மில்லை! அப்பிள்ளைகளில் மூன்றில் ஒன்றுதான் உயிர் பிழைத்தது! பல மதலைகள் அங்க ஈனமுடனே பிறந்தன! விஷ வாயு தாக்கிய தாயின் வயிற்றிலே செத்துப் பிறக்கும் பிள்ளைகளின் மெய்யான சாவுக் கணக்கு வீதம் 50%!

2002 செப்டம்பர் 14 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவ மனையில் போபால் பலியாளிகளின் மதலைகளைச் சோதித்த ஆய்வாளர் கணேஷ் கூறியது: அங்க ஈனமுடன் பிறந்த சில பிள்ளைகளுக்கு மூன்று கண்கள்! சில குழந்தைகளுக்கு எல்லா விரல்களும் சேர்ந்திருந்தன! சில சிசுக்களுக்கு ஆறு விரல்கள்! ஒரு பெண் பிள்ளையின் பாதம் அடுத்ததை விட ஐந்து மடங்கு பெரிதாகக் காணப் பட்டது! ஆண் மதலைகளின் பிறப்புறுப்பில் ஒரே ஓர் உருண்டை [One Testicle]! சிலவற்றுக்குக் கோணிப் போன சிரசுகள்! சில பிள்ளைகளுக்குப் பெருத்த மூளை முறிவு, மிகையான உடல் ஒச்சங்கள் [Retardation & Down ‘s Syndrome or Mongolism]! ஆய்வாளர் கணேஷ் மிக் விஷ வாயுவில் பாதிக்கப் பட்டோரின் நீண்ட கால இனமுறிவு விளைவுகளை [Long Term Genetic Defects] ஆராய்ந்து சேமித்து வருவதாக டிம் எட்வெர்ட்ஸிடம் கூறினார். ‘வாயு மதலைகள் ‘ [Gas Babies] என்று மேற்கூறிய மாதிரிப் பிறப்புகளை பெயரிட் டழைத்தவர், ஆய்வாளர் கணேஷ்!

ஆறு மைல் சுற்றுப் புறத்தில் வாழ்ந்து, மிக் விஷ வாயு தாக்கியோரில் 71% நபர்கள் ஓராண்டு கழித்து இன மூலவிகள் முறிவு [Chromosomal Damage] பெற்றுள்ளது அறியப் பட்டது! விபத்துக்கு முன்பு இனமூலவி முறிவுகள் 21% நபருக்கு இருந்திருக்கிறது!

Hunger Strike in New York

பாரத அரசுக்கும், யூனியன் கார்பைடுக்கும் நஷ்ட ஈடுத் தொகையில் போர்!

ஆரம்பம் முதலே யூனியன் கார்பைடு தனது மேற்கு வெர்ஜீனியா கூடத்தின் [West Virginia Plant] பாதுகாப்பு நெறிநிலைகளைப் [Safety Standards] போபால் கூடத்திலும் அழுத்தமாகப் புகுத்தாதது மாபெரும் தவறு! போகப் போக போபால் கூடத்தின் இயக்க நெறிகள், பராமரிப்புப் பணிகள், பாதுகாப்பு முறைகள் யாவும் சரிவரக் கண்காணிக்கப் படாது தேய்ந்து கொண்டே வந்தன! போபால் விபத்து மனிதத் தவறில் தூண்டப் பட்டாலும், விபத்து விளைவுகளின் முழுப் பொறுப்பையும் யூனியன் கார்பைடு ஏற்றுக் கொண்டது!

போபால் கோர நிகழ்ச்சியில் சுமார் 4000 நபர் முதலில் மடிந்தனர். ஆனால் பலர் ஆயிரக் கணக்கில் காயப்பட்டு, நோய்வாய்ப் பட்டு சுமார் 500,000 பேர் நஷ்ட ஈடு நிதிக்குத் தகுதி பெற்றவர் என்று கணக்கிடப் பட்டது! இந்திய அரசு முதலில் யூனியன் கார்பைடு கார்பொரேஷனிடம் கேட்ட 3.3 மில்லியன் டாலர் தொகை, பலரது வெறுக்குள்ளாகி புறக்கணிக்கப் பட்டது! ஆனால் 1984 பிப்ரவரில் பாரத அரசு, முடிவாக யூனியன் கார்பைடு தர முன்வந்த 470 மில்லியன் டாலர் தொகையை ஒப்புக் கொண்டது!

Supreme Court of India

1989 பிப்ரவரி 24 ஆம் தேதி யூனியன் கார்பைடு நிர்வாகம் 470 மில்லியன் டாலர் முழுத் தொகையையும் பாரத அரசின் கையில் கொடுத்துக் கணக்கைத் தீர்த்துக் கொண்டது! வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில் நிதி யிட்டு நிலைநாட்டப் படுவதை ஆதரிக்க, பல விஷ வாயு இன்னல்களை மூடி மறைத்து, யூனியன் கார்பைடு நிர்வாகத்தைப் பாரத அரசு மறைமுகமாய்த் தழுவிக் கொண்டதாகப் பின்னால் அறியப் படுகிறது!

கடும் நோயுற்ற 400,000 போபால் மக்களைப் பராமரித்துச் சிகிட்சை செய்ய, யூனியன் கார்பைடு 1991 அக்டோபரில், பாரத உயர்நீதி மன்ற உத்தரவின்படி 17 மில்லியன் டாலர் செலவில் ஒரு பெரும் மருத்துவ மனையைப் போபாலில் கட்ட ஒப்புக் கொண்டது! பின்னால் யூனியன் கார்பைடு அத்தொகையை 20 மில்லியனாக அதிக மாக்கித் தனது பங்குச் சீட்டுகளை [Share Capital] விற்று மேலும் 54 மில்லியன் டாலரைப் புதிய மருத்துவ மனைக்கும், பழைய மருத்துவ மனைகளுக்கும் பரிவு மிகுந்து அளித்தது! புதிய மருத்துவ மனை பல்லாண்டுகள் கழித்து 2000 ஜூலையில் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் திறக்கப் பட்டு, 2001 ஆண்டு முதல் போபால் மக்களுக்குக் கண், புப்புசம், இருதயம் ஆகியவற்றில் சிகிட்சை செய்து வருகிறது.

2002 ஆகஸ்டு மாதம் போபால் நீதி மன்றம் யூனியன் கார்பைடு நிறுவகத்தின் முன்னாள் அதிபதி வாரன் ஆன்டர்ஸனை [Warren Anderson, Chairman & CEO] போபால் படுகொலைக் குற்ற விசாரணைக்கு இழுத்து வரப் பாரத அரசுக்கு ஆணை யிட்டது! அதைக் கேட்டதும் அமெரிக்காவில் இருந்த வாரன் ஆன்டர்ஸன் தன் இல்லத்திலிருந்து ஓடிப்போய் எங்கோ தலை மறைவாக இருந்தார்! 2002 செப்டம்பர் மாதம் கிரீன்பீஸ் இயக்கவாதியான [Greenpeace Activists] கணேஷ் நாச்சர் [Ganesh Nochur] ஆன்டர்ஸன் லாங் தீவில் [Long Island, NY] ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டு பிடித்து, பாரத உள்நாட்டுத் துறை, பாரத உயர்நீதி மன்றம், அமெரிக்க நீதித் துறையகம் [US Justice Dept] ஆகியவற்றுக்குத் தகவல் அனுப்பினார்! ஆனால் பாரத அரசு ஆன்டர்ஸனின் படுகொலைக் குற்றத்தைக் குறைத்து, நிர்வாகப் ‘புறக்கணிப்பு ‘ [Negligence] என்று அறிவித்து மெளனமாய் இருந்து விட்டது!

Bhopal Survivers Hunger Strike in New York

தற்போது டெள கெமிக்கல் கம்பேனி [Dow Chemical] யூனியன் கார்பைடு நிறுவகத்தை வாங்கிக் முழு உரிமை [100%] கொள்கிறது. 2002 மே மாதம் டெள கெமிகல் அதிபதி மைக்கேல் பார்க்கர் [Michael Parker CEO] நாச மடைந்த போபால் இரசாயனக் கூடத்தைச் சுத்தம் செய்யும் பொறுப்பை மேற்கொண்டு, ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கும் ‘போபால் பலியாளிகளின் நிதியைப் ‘ பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறி யிருக்கிறார்!

போபால் விபத்தில் நகராட்சி, மாநில அரசு, மத்திய அரசு கற்கும் பாடங்கள்

உலக வரலாற்றிலே முதல் இடத்தைப் பெறும் போபால் விபத்து நேராமல் தவிர்த்திருக்க வேண்டிய ஓர் நிகழ்ச்சியாகும்! அபாய கரமான இராசயன விஷத்தைப் பயன்படுத்தி, பூச்சி கொல்லி மருந்தை உற்பத்தி செய்யும் ஒரு கூடம், கல்லூரிப் படிப்பில்லாத, முறையாக பயிற்சி பெறாத அரைகுறை அறிவுள்ள பணியாளிகளால் இயக்கப் பட்டு வந்தது, மன்னிக்க முடியாத மாபெரும் தவறு! அந்த இமாலயத் தவறுக்கு முதல் பொறுப்பாளி யூனியன் கார்பைடு நிர்வாகம்! அடுத்து குற்றம் சாட்டப் படுவது, மத்திய பிரதேச மாநில அரசு! மூன்றாவது குற்றவாளி கட்டுப்பாடு மேற்பார்வையில் கண்காணிக்கத் தவறிய மத்திய அரசு!

1. அன்னிய நாட்டு நிதி நிறுவகங்கள் பாரத கலாச்சாரச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தமது இந்தியப் பங்கு தொழிற் துறைகளை இயக்க வேண்டும். அதற்கு ஆங்கிலத்தோடு அங்குள்ள மாநில மொழிகளிலும் பயிற்சி முறைகள், பாதுகாப்பு நெறிகள், அபாய காலப் பிழைப்பு வழிகள் ஆகியவற்றை இயக்குநர்களுக்கும், அருகில் வாழும் பொது மக்களுக்கும் அடிக்கடி அறிக்கை மூலம் புகட்டி நினைவூட்ட வேண்டும்.

2. அபாய வேளைகளில் இயக்குநர் பொறுப்பு, நகராட்சின் பொறுப்பு, மாநில அரசின் பொறுப்பு ஆகியவை யாவும் எழுத்தில் எழுதப் பட்டு அதிகாரிகள் கையொப்பமிட வேண்டும்!

3. இரசாயனக் கூடங்களுக்கு அருகே அபாய வேளைகளில் நபர்களுக்குச் சிகிட்சை செய்ய போதிய அளவு மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டுப் பணி புரிய டாக்டர்கள், நர்ஸ்கள் அழைக்கப்பட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

4. இரசாயனக் கூடங்களை இயக்குவோர் பணியின் நுணுக்கத்துக்கு ஏற்றபடி கல்லூரிப் பட்டதாரிகளோ, தொழிற் கல்லூரி டிப்ளோமாக்களோ அல்லது உயர்நிலைப் பள்ளி முடித்தவர்களோ அவர்கள்தான் நியமனமாக வேண்டும்! அவர்கள் அத்தனை பேருக்கும் முழுப் பயிற்சி ஆங்கிலத்திலோ அன்றி மாநில மொழியிலோ அளிக்கப்பட வேண்டும். பயிற்சி முறைகள் அடிக்கடி புதுப்பிக்கப் பட்டு, இயக்குநர் குழுவுக்கு மீண்டும் புகட்ட வேண்டும்!

5. கூடத்தைச் சுற்றி யுள்ள ஊர்ப் பொது மக்களுக்குத் தனியாக அடிக்கடி அறிவிப்பும் பயிற்சியும் தேவை! எழுதப் படிக்கத் தெரியாத நபருக்கும் அபாய வேளைகளில் பிழைத்துக் கொள்ள என்ன வேண்டும் என்பதைத் திரைப்படம், டெலிவிஷன் மூலமாய் கற்பிக்க வேண்டும்! தனிப்பட்ட அபாய ஒலிச் சங்க நாதம் ஒன்று, அபாய வேளைகளை அறிவிக்கத் தயாராக அமைக்கப்பட வேண்டும்! அந்த அபாயச் சங்கு ஊதினால் ஐந்து வயதுப் பிள்ளைகளுக்கும் அதன் முக்கியத்துவம் தெரியும் வண்ணம், பயிற்சியின் திறமை அமைய வேண்டும்!

தொழில் நுணுக்க நிறுவனங்கள் கற்க வேண்டிய பாடங்கள்

அணு உலைகளிலோ, இரசாயனக் கூடங்களிலோ அன்றி தொழிற் சாலைகளிலோ பாதுகாப்பாகப் பணி புரிய கீழ்க் காணும் பனிரெண்டு நெறி முறைகள் பிறழாது கடைப்பிடிக்க வேண்டும்!

1. பணியின் திட்டம் [Work Plan] படங்களுடன் எழுதப் பட்டு, விபரம் அறிந்த மேலதிகாரி ஒருவர் அதைத் துருவிச் சோதித்துக் கையெழுத்திட வேண்டும்.

2. பணி துவங்கு முன், பணிக் குழுவினர் அனைவருக்கும் அடுத்தடுத்து நிகழும் அல்லது எதிர்பார்க்கப் படும் விளைவுகளைக் கூறி அவற்றைக் கையாளத் தேவைப்படும் பாதுகாப்பு முறைகளைப் புரியும் வண்ணம் விளக்க வேண்டும்.

3. பணி புரியும் போது மேற்பார்வையாளி அடிக்கடிக் கண்காணிக்க வேண்டும். ஆட்சி அறையில் உள்ள இயக்குநர் அதே சமயம் பராபரிப்புப் பணிகளால் ஏதும் மாறுபாடு விளைகின்றதா என்று அளவு மானிகளை நோக்கி வர வேண்டும். பணி நிகழும் போது எழும் எச்சரிக்கை ஒலிகள், விளக்கு ஒளிகள் உடனே ஆராயப் பட வேண்டும். நிலைய அதிபதி அடிக்கடி கூடத்தில் உலவி, பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்று உளவு செய்ய வேண்டும்.

4. அடிக்கடி தொடர்பு கொள்ள டெலிஃபோன் அல்லது மொபைல் போன் [Cellular Phones] பணி புரிவோர் கைவசம் இருக்க வேண்டும். குழுவில் ஒருவன் எப்போதும் பணியின் முன்னேற்றம், தாமதம், தவறுகள், எதிர்பாரா விளைவுகளை உடனே ஆட்சி அறை இயக்குநருக்கு அறிவிக்க வேண்டும்.

5. பணியாளிகள் வேலையின் வளர்ச்சி, விளைவுகள், சாதன மாற்றம், செய்த சோதனைகள் ஆகியவற்றை ஒவ்வொரு ஷிஃப்டிலும் குறிப்புத் தாள்களில் பதிவு செய்ய வேண்டும்.

6. எதிர்பாரா விபத்துகள் நேர்ந்தால் எப்படித் தடுப்பது, எவ்விதம் தப்புவது என்பது குழுவினருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஓரளவு தீயணைப்புத் திறமையும் அவர்களுக்குத் தேவையானது.

7. அபாய சமயத்தில் எரிசக்தி, மின்சாரம், இரசாயன சக்தி, சேமிப்பு வாயு அழுத்தம் [Energy, Electric Power, Chemical Energy, Stored Energy like Pnuematic System] போன்ற ஏற்பாடுகளைத் தனித்து நிறுத்தி விடத் [Isolation of Energy Hazards] தெரிய வேண்டும்.

8. ஒரு துறைத் தொழிலாளி, அடுத்துத் தொடரும் வேறொரு துறைத் தொழிலாளிக்கு முழு விபரங்களை ஒளிமறை வின்றி எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். உதாரணமாக யந்திரத்துறைப் பணியாளி, மின்சாரப் பணியாளிடன் பணிநெறித் தன்மையுடன் [Professional Relationship] உறவாட வேண்டும்.

9. தொழிற்சாலைகள் 24 மணி நேரமும், ஏழு நாட்கள் தொடர்ந்து இயங்கி வருவதால், ஷிஃப்ட் மாற்ற நேரத்தில், விபரங்களை எழுதிப் பதிவு செய்து, முறைப்படி உரையாடிப் பொறுப்பைக் கைமாற்ற வேண்டும்.

10. புதிய பணியாளியை நிஜப்பணியிலே பங்கேற்க [Train on-the-Job] வைத்துப் பயிற்சி அளிக்க வேண்டும்.

11. பணி நடக்கும் போதும், முடிவிலும் சோதிக்கும் போது, ஆய்வு செய்ய தனிக்குழுவினர் அமைக்கப் பட வேண்டும். அணு உலை, இரசாயனக் கூடங்களில் உடல்நலப் பாதுகாப்புக் குழு [Health Scientists] வேலையாளிகளின் உடல்நலத்தைச் சோதித்துப் பதிவு செய்கிறது.

12. இயக்குநர், பராமரிபாளர், கூலி ஆட்கள் அனைவருக்கும் இயக்க நெறிகள், முறைபாடுகள் [Operating Policies & Principles] புரிந்திருக்க வேண்டும். படிப்பில்லாத, புரிய முடியாத நபர்கள் பணி செய்தால், அவர்கள் முழு நேரமும் மேற்பார்வையாளரால் கண்காணிக்கப் பட வேண்டும்.

பாரத மாந்தரின் அறிவுத் திறம், ஆக்கத் திறன், பாதுகாப்புத் திறம்

உலக வரலாற்றிலே முதல் இடத்தைப் பெறும் போபால் விஷ வாயு விபத்து 1984 இல் நேராமல் தவிர்த்திருக்க வேண்டிய ஓர் நிகழ்ச்சியாகும்! ஆயிரக் கணக்கான மக்களின் மரணத்துக்கும், உடல்நோயில் பல்லாண்டுகள் மாந்தர் வேதனைப் பட்டதற்கும், மனிதத் தவறுகள், பராமரிப்புப் பழுதுகள், யந்திரப் பழுதுகள், கண்காணிப்பு புறக்கணிப்புகள், மேற்பார்வை இல்லாமையே காரணங்கள்! அவை யாவும் நேராமல் தடுக்க நெறிகள், முறைபாடுகள், வழிகள் கண்ணெதிரே இருந்தும் அவை கடைப்பிடிக்கப் படாமல் போனது, மன்னிக்க முடியாத குற்றம்! ஆனால் பாரத நாடெங்கும் படித்த, திறமையான, நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளும் மனிதக் களஞ்சியம் நிரம்பி யுள்ளது! அறிவுக்கும், திறமைக்கும் சவால் விடும் விஞ்ஞானத் தொழிற்துறை நுணுக்கங்களைச் சாமர்த்தியமாகக் கையாளும் வலுவும், வைராக்கியமும் அநேக பாரத வாலிபரிடம் உள்ளன. அந்த வாலிபர்களுக்கு முறைப்படி பயிற்சி அளித்து, யந்திர சாதனங்களை ஒழுங்கில் பராமரித்துக் கவனமாக மேற்பார்வை செய்திருந்தால், போபால் நிகழ்ச்சி போல் ஓர் கோர விபத்து பாரதத்தில் உண்டாகி யிருக்காது! பிரான்ஸின் போர்த் தளபதி நெப்போலியன் ஒருமுறை கூறியது, ‘ தோல்விக்குக் காரணம், முறை கெட்ட போர் வீரர்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானது! ஆனால் நெறி கெட்ட போர்த் தளபதிகளின் நடத்தையால் ஏற்பட்டது தோல்வி என்று சுட்டிக் காட்டுவதுதான் மெய்யானது! ‘

தகவல்கள்:

1. Fatal Gas Release at Bhopal, Dec 1984. The Industrial Operator ‘s Handbook by H.C. Howlett II [1995]

2. Bhopal Health Disaster Continues to Unfold, The Lancet www.bhopal.net [14 September 2002]

3. Bhopal Disaster Chronology, Settlement, Union Carbide Aid & Relief Efforts, As of November 2002 www.bhopal.com

4. The Babies of Bhopal By: The Indian Sunday Magazine [28 July 1985]

5. A Child is Born By: Tim Edwards [Sep 14, 2002]

6. Epidemiological & Experimental Studies on the Effects of MIC (Methyl Isocynate) on the Course of Pregnancy, Environmental Health Perspectives By: D.R. Varma [1987]

7. Bhopal Disaster TED Case Study #233 www.american.edu/TED/Bhopal.htm

****

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா