அறிவியல் துளிகள்-23

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


நீர்வேட்கை மிகுந்த நிலையில் பலரும், வெதுவெதுப்பான பானங்களைவிட, குளிர்ந்த நீர் அல்லது பானங்களை, விரும்பிப் பருகுவது ஏன் ?

மூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களாலான (Nerve cells) வேட்கை மையம் (Thirst center) எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும்போது மேற்கூறிய வேட்கை மையத்தில் அது உணரப்பெற்று நமக்கு நீர் வேட்கை உண்டாகிறது. தொண்டை உட்பகுதியின் மென்தோல் (lining) வறண்டு போகும்போதும் வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப்பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும்போது தண்மையடைந்து வறட்சி தணியப்பெறுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும்போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும்போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுகிறது.

சமையல் பாத்திரங்களை, சாம்பலைப் பயன்படுத்தி எவ்வாறு தூய்மையாகக் கழுவ முடிகிறது ?

விறகோ அல்லது கரியோ எரிக்கப்பட்டு சாம்பல் உண்டாகிறது. காரத்தின் (Alkaline) மிச்சங்களும், சிலிக்கா (Silica) போன்ற கழிவும் சேர்ந்ததே சாம்பலாகும். இந்தக் காரக் கூட்டுப்பொருளில் கலந்துள்ள காரபனேட்டுகள் (Carbonates) தூய்மையாக்கும் பணிக்குக் காரணமாக அமைகின்றன. சாம்பலைக் கொண்டு தேய்த்துக் கழுவும்போது பாத்திரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் பிசுபிசுப்புப் பொருள்களும், அழுக்குகளும் நீக்கப்பெறுகின்றன. மேலும் பொடியான சிலிக்காத் துகள்கள் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்கு களையும், பிசுப்புப் பொருள்களையும் சுரண்டி நீக்குவதுடன், கழுவிய பின்னர் பாத்திரங்கள் தூய்மையாகவும் பளபளப்பாகவும் காட்சியளிக்கவும் துணை செய்கின்றன.

கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் ஏன் வேகமாக ஓட முடிவதில்லை ?

கைகள், கால்கள் ஆகியவை முன்னும், பின்னும் ஒருங்கிணைந்து இயங்குவதால் நம்மால் நடக்கவும் ஓடவும் முடிகிறது. சாதாரணமாக நின்றுகொண்டிருக்கும் போது உடலின் ஈர்ப்பு மையம் (Centre of gravity) நமது காலடியில் விழும்; இதனால் நமது உடல் சமநிலையில் நிற்க முடிகிறது. நடக்கும்போதும், ஓடும்போதும் கால்கள் இயல்பு நிலையில் இருந்து மாற்றமுறுவதால் ஈர்ப்பு மையம் முன்னோக்கிச் செல்லும். இந்நிலையில் நமது கைகள் கட்டப்பட்டிருக்குமானால், உடலின் சமநிலை தடுமாறி கீழே விழ நேரிடும். இயல்பாக நடக்கும்போதோ, ஓடும்போதோ, இந்நிலை ஏற்படாதற்குக் காரணம், நமது கை கால்கள் முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குவதனால், ஈர்ப்பு மையம் உடலின் அடிப்பகுதியிலேயே நிலைபெற்றிருக்குமாறும், அதனால் உடலின் சமநிலை தடுமாறாதவாறும் பார்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் கைகள் கட்டப்பட்ட நிலையில் நடக்கும்போதும், ஓடும்போதும் மேற்கூறிய சமநிலை பராமரிக்கப்படுவதில்லை. எனவே அந்நிலையில் ஓடுவதோ அல்லது நடப்பதோ மிகவும் கடினமான செயலாகிவிடுகிறது.

குவார்ட்ஸ் கடிகாரம் (Quartz clock) அப்பெயரால் வழங்கப்படுவதற்கு என்ன காரணம் ?

குவார்ட்ஸ் என்பது ஒருவகைப் படிகக் (Crystal) கல் அல்லது பளிங்குக் கல்; இதனைக் குவார்ட்ஸ் கடிகாரங்களின் இதயம் என்று கூறலாம். இப்படிகம் பீசோ மின்சாரம் (Piezo electricity) எனும் பண்பைக் கொண்டுள்ளது. இதன்படி மாறு மின்னோட்டம் செலுத்தப்படும் போது மேற்கூறிய படிகம் நிலையான அதிர்வெண்ணில் அதிரும். சாதாரண சுவர் மற்றும் கைக் கடிகாரங்களில் சுருள்வில்லால் (spring) இயக்கப்படும் சமநிலை அலைவுச் சக்கரம் (Balanced oscillating wheel) உள்ளது. இச்சக்கரம் கடிகார முள் நகர்வதற்கும், சரியான நேரத்தைக் காட்டுவதற்கும் காரணமாக அமைகிறது. குவார்ட்ஸ் கடிகாரங்களில் அப்பணியைச் செய்வதற்கு குவார்ட்ஸ் படிகங்கள் பயன்படுத்தப் பெறுகின்றன. இதிலுள்ள அலைவு மின்சுற்றில் (Oscillating electric circuit) படிகங்களின் இயல்பு அதிர்வெண்ணுக்கு இணையான அதிர்வெண்களைக்கொண்ட அலைவு நிகழ்த்தப் பெறுகிறது. இதனால் கடிகாரத்தின் முழு அமைப்பும் படிகத்தின் அதிர்வுக்கு இணையான அதிர்வெண்களைக் கொண்டதாக அமையும். இவ்வாறு நிலையான அதிர்வைப் பெறுகிற படிக அமைப்பின் அலைவு மின்னழுத்தத்தால் பற்சக்கரத் தொடரில் (Gear train) இணைக்கப்பட்டுள்ள மிகச் சிறு அளவிலான மோட்டார் இயக்கப்பெறுகிறது. இம்மோட்டார் நொடி, நிமிடம், மணி ஆகிய வற்றைக் காட்டுகின்ற கடிகார முள்களை நகர்த்தி கடிகாரத்தை ஓடச் செய்கிறது. இதனாலேயே இவ்வகைக் கடிகாரம் குவார்ட்ஸ் கடிகாரம் என்று அழைக்கப்படுகிறது.

***

Dr R Vijayaraghavan BTech MIE MA MEd PhD

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர