அறிவியல் துளிகள்-21

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


81. மிதிவண்டியின் முன் கவடு (Front fork) வளைந்தும், பின் பக்கக் கவடு நேராகவும் இருப்பதன் காரணம் என்ன ?

மிதிவண்டியின் முன்கவடு நேராக இல்லாமல் வளைந்திருப்பது இரு காரணங்களுக்காக வரவேற்கப்படுகிறது. முதலாவது இஃது ஓர் அதிர்வுத் தாங்கியாகப் (Shock absorber) பணி புரிகிறது எனலாம். முன்பக்கமுள்ள கவடு வளைந்து இருப்பதால் வண்டிக்கு ஏற்படும் அதிர்ச்சி கைப்பிடியைச் (Handle) சென்று சேராமல் பெருமளவு தவிர்க்கப்பட்டுவிடுகிறது. மிதிவண்டி ஓட்டுபவரின் எடை, வண்டி ஓடும்போது ஏற்படும் உராய்வு (Friction), இவ்விசைகளுக்கான எதிர்வினை (Reaction) ஆகிய இவைகளுக்கிடையே உண்டாகும் பல்வேறு விசைகளும் சக்கரம் தரையைத் தொடுமிடத்தில் வெளியேறுவதற்கு, வளைந்த முன்பக்கக் கவடு துணைபுரிகிறது. இதனால் முன்சக்கரம் மேடுகளில் ஏறி இறங்கும்போது பக்கவாட்டில் திரும்பிவிடாமல் வண்டி உறுதியாக நிலைத்து இருப்பதற்கு வழி செய்யப்படுகிறது. எனவே முன் பக்கத்தில் வளைந்த கவடு இருப்பது, மிதிவண்டி உறுதியாக நிலைத்து நிற்கவும், அதனை எளிதாக, வசதியாக ஓட்டுவதற்கும் துணை புரிகிறது.

82. இரத்தக் காயம் ஏற்பட்ட பகுதியில் படிகாரத்தை (Alum) வைத்தால் இரத்தக் கசிவு நின்றுவிடுவது ஏன் ?

காயம் பட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிவதற்கு, அவ்விடத்திலுள்ள இரத்தக் குழல்கள் (Blood vessels) வெட்டப்படுவதே காரணம். இரத்தக் குழலில் வெட்டு சிறு அளவில் இருப்பின் இயற்கையான பாதுகாப்பு எதிர்வினையால் சிறிது நேரத்தில் இரத்தம் வெளியேறுவது நின்றுபோய் உறைகட்டி (Clotting) யாகிவிடும். இரத்ததிலுள்ள சில காரணிகள் (Factors) அதிலுள்ள புரோட்டானை நூலிழையாலான வலை போன்ற நுண்ணிய அமைப்பாக மாற்றுகிறது. இதுவே இரத்தக் கசிவைத் தடுக்கிறது. சில சமயங்களில் மேற்கூறிய வலைபோன்ற மாற்றம் சில வேதிப் பொருள்களால் குறிப்பாக உலோக அயனிகளால் (Metallic ions) உருவாக்கப்படும். படிகாரம் என்பது அலுமினியம் பொட்டாசியம் சல்பேட் எனப்படும் அணைவு உப்பு (Complex salt). படிகாரத்திலுள்ள பொட்டாசியம் இரத்தத்தின் உறைவை விரைவுபடுத்தி கசிவைத் தடுக்கிறது. மேலும் படிகாரத்தின் துவர்ப்பு (Astringent) காரணமாக இரத்தக் குழல் சுருங்கியும் இரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.

83. களைப்படைந்த கை கால் தசைகளை யாரேனும் அமுக்கிவிட்டால் இதமாக இருப்பது ஏன் ?

மிகுதியான வேலை அல்லது கடின உடற்பயிற்சி செய்தால் களைப்பு காரணமாக தசைகளில் வலி உண்டாகிறது. தசைகளுக்கு சாதாரண நிலையில் ஆற்றலை வழங்கும் அமைப்பு முறையால், அவை அதிக அளவு பணி செய்யும்போது போதுமான ஆற்றலை வழங்க முடிவதில்லை. இந்நிலையில் தசை உயிரணுக்கள் (Muscle cells) சக்கரைச் சிதைவு (Glycolysis) என்ற மாற்று முறையைக் கைக்கொள்ளுகின்றன; இம்மாற்று முறையின்போது உடலிலுள்ள சக்கரை, லாக்டிக் அமிலமாக(Lactic acid) மாற்றமடைந்து தசைகளில் சேமிக்கப் படுகிறது. இந்த அமிலமே மிகுதியான வேலை அல்லது கடின உடற்பயிற்சிக்குப் பின்னர் தசைகளில் வலி ஏற்படக் காரணமாக அமைகிறது. வலியின் காரணமாக அவதியுறும் தசைகளை உருவி மென்மையாக அமுக்கிவிட்டால், இரத்த ஓட்டம் அதிகரித்து சேமிக்கப் பெற்ற லாக்டிக் அமிலம் வெளியேற்றப்படுவதுடன் தேவையான உயிர்வளியும் (Oxygen) தசைகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு அழுத்திவிடுவதன் வாயிலாக, தசைகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் நரம்பு முனைகள் செயலூக்கம்பெற்று, அவை மூளையிலுள்ள உயிரணுக்களுடன் தொடர்பு கொண்டு வலி நீக்கத்திற்கான வேதிப் பொருள்களை வெளிக் கொணர்கின்றன. இம்முறைகளில் தசைகள் வலியும், களைப்பும் நீங்கப்பெற்று இதமான உணர்வைப் பெறுகின்றன.

84. ஓட்டப்பந்தய வீரர், ஓடத் துவங்கும் முன்னர், நின்ற நிலையில் இராமல், குனிந்த நிலையில் இருப்பது ஏன் ?

ஓட்டப்பந்தய வீரர் சமிக்கை வந்தவுடனே திடாரென ஓடத் துவங்குவதுடன், வேகத்தின் முடுக்கத்தையும் (Acceleration) அதிகரிக்க வேண்டும். பந்தய வீரர் நின்ற நிலையில் இருந்தால் கீழ்ப்புறம் வினை புரியும் அவரது உடல் எடை முழுதும், தரையில் இருந்து உண்டாகும் மேற்புற எதிர்வினையினால் (Reaction) சமன் செய்யப்பட்டு விடுகிறது. எனவே பந்தய வீரருக்கு ஓட்டத்தைத் துவக்குவதற்குத் தேவையான முடுக்கத்தைக் கொடுக்கும் ஒரே விசை, அவரது காலடியினால் தரையைத் தேய்த்துத் தள்ளிடும்போது தரையின் எதிர்வினையால் உண்டாகும் விசை மட்டுமே. இவ்விசை ஓட்டத்தை துவக்குவதற்குப் போதுமானதல்ல. இத்தகைய செயல் நாம் நடக்கும் போதும் உண்டாகிறது எனலாம். ஆனால் பந்தய வீரர் முதுகை வளைத்துக் குனிந்த வண்ணம் இருக்கும்போது உடல் எடையால் உண்டாகும் கீழ்நோக்கு விசை, தரையின் எதிர் வினையால் உண்டாகும் மேல் நோக்கு விசை ஆகிய இரண்டும் ஒரே வரிசையில் இருப்பதில்லை. எனவே ஒரு பகுதி, அதாவது உடல் எடையின் செங்குத்துப்பகுதி (Vertical) மட்டுமே தரையின் எதிர்வினையால் சமன் செய்யப்படுகிறது. உடல் எடையின் மீதமுள்ள கிடைப்பகுதி (Horizontal) எடையினால் உண்டாகும் விசை ஓட்டத்தைத் துவக்குவதற்குத் தேவையான முடுக்கத்தை அளிக்கிறது; எனவே பந்தய வீரரால் மிகுந்த வேகத்துடன் ஓட்டத்தைத் துவக்க முடிகிறது.

***

Email ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர