அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

சர்.சி.வி. இராமன் என்று அழைக்கப்படும் சந்திரசேகர வெங்கடராமன் நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். ஒளிக்கதிர்களின் விளைவுகளைப்பற்றி ஆய்வு செய்து அவர் கண்டுபிடித்த முடிவு ‘இராமன் விளைவு’ என்று இயற்பியல் துறையில் அழைக்கப்படுகிறது. இதற்காகவே 1930 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. “ஆய்வுக்கூடத்தில், ஆய்வுக் கருவிகளுக்கிடையில் எப்போதும் இருப்பதால் மட்டுமே ஒருவன் அறிவியல் மேதையாக மாறிவிட முடியாது; மாறாகத் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கூர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்; நவீன ஆய்வுக் கருவிகளைவிட, தற்சிந்தனையும், கடின உழைப்புமே அறிவியல் ஆய்வுக்கு இன்றியமையாத தேவைகளாகும்.” – இவையே சர்.சி.வி.இராமன் அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக விளங்கின.

இராமன் உயர்பதவிகளை எப்போதும் தேடிச் சென்றதில்லை; அறிவியல் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அறிவியலே அவர் போற்றி வணங்கும் ஆண்டவனாக விளங்கியது எனில் மிகையேதுமில்லை; மிகவும் எளிய, தூய்மையான வாழ்க்கையை மேற்கொண்டார்; இறுதிவரை ஓர் அறிவியல் மாணவராகவே வாழ்ந்தார். பெங்களூரிலுள்ள இராமன் ஆய்வு நிறுவனம் அவர் புகழை இன்றும் பறைசாற்றிக்கொண்டுள்ளது.

சர். சி. வி. இராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 7 ஆம் நாள் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்தார். தாயார் பெயர் பார்வதி அம்மாள்; தந்தையார் சந்திரசேகர ஐயர் கற்றறிந்த மேதை; உள்ளுர் கல்லூரி ஒன்றில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். எனவே இராமன் இளமையிலிருந்தே கல்விச் சூழலிலும், தன்னடக்கத்தோடும், எதையும் நுணுகி ஆராயும் பண்புடனும் வளர்ந்து வந்தார். துவக்கப்பள்ளிக் கல்வி முதற்கொண்டே எல்லா வகுப்புகளிலும் முதல் மாணவராக இராமன் திகழ்ந்தார். தனது 12 ஆம் வயதிலேயே மெட்ரிகுலேஷன் எனப்படும் பள்ளி இறுதித் தேர்வை எழுதி முடித்த சர்.சி.வி.இராமன் பட்டப்படிப்பில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். பின்னர் மேற்படிப்புக்கு அவரை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டும் எனப் பெற்றோர் விரும்பினர்; ஆனால் வெளிநாட்டுச் சூழல் ஒத்துவராது என மருத்துவர்கள் கூறிய அறிவுரையினால், சென்னை மாநிலக்கல்லூரியில், இராமன் தன் பட்டமேற்படிப்பைத் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு இயற்பியலில் எம். எஸ்சி. பட்டமேற்படிப்பை நிறைவு செய்தார்; அதே ஆண்டு ஐ.சி.எஸ். எனப்படும் இந்திய அரசாணைத் தேர்வில் வெற்றிபெற்று கல்கத்தாவில் கணக்கியல் துறையில் துணைப் பொது மேலாளராக நியமனம் பெற்றார். இப்பணியில் இராமன் அவர்கள் கடுமையாக உழைத்தாரே தவிர, அவருக்கு முழுமையான மனநிறைவு கிட்டவில்லை. கல்கத்தாவில் “இந்திய அறிவியல் ஊக்குவிப்புக் கழகம் (Indian Association for Cultivation of Sciences)” என்ற நிறுவனம் டாக்டர் மகேந்திரலால் சோரன் என்பவரால் துவக்ககப் பெற்றது; அவரைத் தொடர்ந்து அவரது மகன் திரு அமிர்தலால் சோரன் என்பவர் அதனை நிர்வகித்து வந்தார்; அஷ்தூஷ் முகர்ஜி என்பவர் அக்கழகத்தின் இயக்குநராக இருந்தார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் இந்நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்திற்குச் சென்று ஆய்வுப் பணியில் ஈடுபடுவது இராமன் அவர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது. இங்கிலாந்திலிருந்து வந்து அங்கு பணியாற்றிய பல அறிவியல் அறிஞர்களின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. அவர்களின் கடும் உழைப்பும், அறிவியல் ஆர்வமும் இராமனைக் கவர்ந்தன. இந்நிலையில் இராமன் தனது தந்தையாரை இழந்தார்; பின்னர் தான் பார்த்துவந்த அரசுப் பணியிலிருந்து விலகி, கல்கத்தா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

தமக்கு விருப்பமான பணியில் சேர்ந்தவுடன் இராமன் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்; ஆய்வுப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டார்; பிடில், மிருதங்கம், தபலா போன்ற பல்வேறு இசைக் கருவிகள் உண்டாக்கும் ஒலிகளைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்ற இராமன் “ஒலி அதிர்வுகள் (sound vibrations)” என்ற தலைப்பில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும், பன்னாட்டு அறிஞர்களுடன் தொடர்பு கொள்ளவும் இராமன் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டி இருந்தது.

1921 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பயணத்தின்போது, ஒரு முறை இராமன் கப்பலில் சென்று கொண்டிருந்தார். வானும், கடல் நீரும், பனி ஆறும் நீல நிறத்தில் இருப்பதைக்கண்ட இராமன், இவை ஏன் அந்நிறம் கொண்டுள்ளன என்பதை அறிய ஆர்வம் காட்டினார். பல ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் அதற்கான அறிவியல் காரணத்தைக் கண்டறிந்து வெளியிட்டார்.

மின் அறிவியல் துறையில் இராமன் அவர்களின் ஆய்வுப்பணியைப் பாராட்டி லண்டன் ராயல் கழகம் 1924 ஆம் ஆண்டு அக்கழகத்தின் உறுப்பினர் பதவி அளித்துப் போற்றியது. 1925 இல் ருஷ்ய அறிவியல் கழகத்தின் பாராட்டைப் பெற்றார். 1926 ஆம் ஆண்டு இராமன் அவர்கள் இந்திய இயற்பியல் இதழ் (Indian Journal of Physics) என்ற அறிவியல் இதழ் ஒன்றைத் தாமே தொடங்கி நடத்தி வந்தார். எக்ஸ் கதிர்களைப் (X-rays) பொறுத்தவரை காம்ப்டன் விளைவு (Compton Effect) உண்மையாக இருக்குமெனில், ஒளியைப் பொறுத்தும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையின் மீது 1927 ஆம் ஆண்டு முதல் இராமன் ஆய்வு செய்யத் தொடங்கினார். இக்கோட்பாட்டை மெய்ப்பிப்பதற்காக பாதரச வில்லிலிருந்து (mercury-arc) ஒரு-நிற ஒளியை (monochromatic light) ஒளிபுகக்கூடிய பொருள்கள் வழியே செலுத்தி அதன் மூலம் பெறப்படும் நிற நிரலை (spectrum) ஒரு நிற நிரல் காட்டியில் (spectrograph) பதிவு செய்தார். இந்நிற நிரலில் சில புதிய கோடுகளை இராமன் காண நேர்ந்தது. இவை இராமன் கோடுகள் (Raman Lines) என அழைக்கப்பட்டு பின்னர் இராமன் விளைவு (Raman Effect) எனப் பெயர் பெற்றது. வேதியியல் கூட்டுப்பொருள்களின் (Chemical Compounds) மூலக்கூறு அமைப்பைப்பற்றி அறிந்து கொள்ள இராமனின் மேற்கூறிய கண்டுபிடிப்பு பெரும் பங்கு வகிக்கிறது. நோய்கள் சிலவற்றைக் குணப்படுத்த லேசர் கதிர்களைப் பயன்படுத்துவதிலும், போரில் பயன்படும் பாதுகாப்புக் கருவிகளிலும் இராமன் விளைவுக்கு முக்கிய பங்குண்டு. தனது அறிவியல் கண்டுபிடிப்பில் இராமன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். ஒரு நிறுவனத்தை அமைத்து, அதன் வழியே இராமன் அவர்களின் ஆய்வுப்பணியை ஊக்குவிக்க, அன்றைய மைசூர் மாநில அரசு 25 ஏக்கர் நிலத்தை பெங்களூரில் அவருக்கு அளித்தது. இங்குதான் உலகப்புகழ் பெற்ற இராமன் ஆய்வு நிறுவனம் (Raman Research Institute) தற்போது அமைந்துள்ளது.

பல அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் சர் சி.வி. இராமன் அவர்களைப் போற்றிப் பாராட்டின. அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல் 1954 ஆம் ஆண்டு அவருக்குப் “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது. இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற சர்.சி.வி இராமன் அவர்களின் ஆன்மா 1970 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் அமைதியடைந்தது.

*****************************************

Dr R Vijayaraghavan

BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர