அறிவியல் மேதைகள் -மேடம் மேரி கியூரி (Madamme Marie Curie)

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


மேடம் மேரி கியூரி மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்; உலகத்தின் முதல் பெண் விஞ்ஞானி; கதிர்வீச்சு (radiation) என்ற அறிவியல் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர். அவரது கண்டுபிடிப்பான ரேடியம் (radium) பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது; பாக்டாரியா (Bacteria) மற்றும் நுண்ணிய கிருமிகளை அழிக்கக்கூடியது; விதைகள் முளை விடுவதைத் தடுக்கும் ஆற்றல் அதற்குண்டு; புற்றுநோய் மற்றும் சில தோல் நோய் சிகிச்சை களுக்குப் பயன்படக்கூடியது. இத்தகு சிறப்பான கண்டுபிடிப்பை உலகிற்கு அளித்த மேடம் கியூரி, பெண் என்ற ஒரே காரணத்திற்காகப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் படிப்பைப் படிக்கத் தடைசெய்யப்பட்டவர்.

கியூரி அம்மையாரின் குடும்பம் முழுதுமே அறிவியல் பணிக்காகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டது எனில் அது மிகையன்று. அவர் குடும்ப உறுப்பினர்களில் பலர் நோபல் பரிசு பெற்ற மேதைகள். கியூரி அம்மையாரே இரு முறை நோபல் பரிசு பெற்றவர்; அவர் கணவர் பீயர் கியூரியும் (Pierre Curie) ஒரு முறை அப்பரிசை வென்றார்; அவர் மகள் ஐரன் கியூரி (Irene Curie) மருமகன் ஃபிரெடெரிக் (Frederic) ஆகியோரும் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள். இவ்வாறு கியூரி அம்மையாரின் குடும்பத்தில் இரு தலைமுறையைச் சேர்ந்தோர் அறிவியல் பணியில் ஈடுபட்டு உலகப்புகழ் பெற்று விளங்கினர்.

கியூரி அம்மையார் தன் வாழ்நாள் முழுதும் கதிரியக்கப் (radioactive) பொருள்களுடனேயே பணிபுரிந்து வந்தமையால் 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் தனது 65 ஆம் வயதில் ரத்தப் புற்று நோய்க்கு இரையானார். ஆனால் இவ்வுலகில் அவர் ஆற்றிய அறிவியல் பணிகள் இறவாத புகழுடையவை.

மேடம் கியூரி 1867 நவம்பர் திங்கள் 7 ஆம் நாள் போலந்து நாட்டில் வார்ஸா (Warsaw) என்னும் ஊரில் பிறந்தவர். அவர் தந்தை உயர்நிலைப்பள்ளியில் இயற்பியல், கணக்குப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்; தாய் புகழ் பெற்ற பியானோ ஆசிரியை. கியூரியின் இளமைப் பெயர் மேரி ஸ்க்லோடோவ்ஸ்கா (Marie Sklodowska) என்பதாகும்; திருமணத்திற்குப் பின் மேடம் கியூரி என்றும் மேடம் மேரி கியூரி என்றும் அழைக்கப்பட்டார்.

கியூரி படிப்பில் மிகவும் சிறந்து விளங்கினார்; தனது 16 ஆவது வயதில் உயர்நிலைப்பள்ளித் தேர்வில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றார். சிறு வயது முதலே கியூரி சோம்பலின்றிக் கடின உழைப்பாளியாக விளங்கியவர். ஓய்வு நேரத்தில் கீழ் வகுப்பு மாணவர்களுக்குத் தனிப்பாடம் சொல்லிக் கொடுத்துத் தனக்கு வேண்டிய பணத்தைச் சம்பாத்தித்துக் கொள்ளுவார். கணக்கு, இயற்பியல், வேதியியல், வானநூல், இலக்கியம் ஆகியவற்றைப் பாடங்களாகக் கொண்டு நான்காண்டு காலப் பட்டப் படிப்பில் முதலாவதாகத் தேறினார்; பட்டமேற்படிப்பில் கணக்கை முக்கிய பாடமாகக் கொண்டு இரண்டாவதாகத் தேர்ச்சியுற்றார். மேற்படிப்புக்காக 1891 ஆம் ஆண்டு கியூரி அம்மையார் பாரீஸ் சென்றார். அங்கு பீயஜ் மின்சாரக் கோட்பாட்டைக் (Principle of Pieze Electricity) கண்டுபிடித்த ‘பீயர் கியூரி ‘ என்ற அறிவியல் அறிஞருடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர்; அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து, அதற்கு ஐரன் கியூரி (Irene Curie) எனப் பெயர் சூட்டினர். பின்னர் கணவன், மனைவி இருவரும் கதிரியக்கத் தாதுக்களுள் ஒன்றான பிட்ச்பிளெண்ட் (Pitchblende) என்ற பொருள் மீது ஆய்வுப்பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கதிர்வீச்சுத் துறையில் ஆய்வு செய்து வந்த பேராசிரியர் பெக்குரல் (Becqurel) என்பவரிடம் கியூரி 1896 ஆம் ஆண்டு உதவியாளராகச் சேர்ந்து அதே துறையில் இருவரும் ஆய்வு செய்து வந்தனர். “பிட்ச்பிளெண்ட் (Pitchblende) என்னும் தாதுப்பொருளிலிருந்து யுரேனியம் என்னும் தனிமம் கிடைக்கிறது; இத்தாதுவில் யுரேனியத்தைத் தவிர்த்து வேறொரு தனிமமும் இருக்கவேண்டும்; இத்தனிமம், ஒளித்தகடு (photoplate) போன்ற சில பொருள்களில் வினை புரிந்து இருளில் ஒளியை உண்டாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும்”, என்ற அறிவியல் முடிவுக்குப் பேராசிரியர் பெக்குரல் வந்திருந்தார்.

அந்நாளில் பிட்ச்பிளெண்ட் மிகவும் மதிப்பு வாய்ந்த, எளிதில் கிடைக்காத தாதுப்பொருளாக விளங்கியது; ஆஸ்திரியா நாட்டில் மட்டுமே இத்தாது கிடைத்து வந்தது. ஆனால் கியூரி அம்மையார் ஐரோப்பா முழுதும் ஆய்வு செய்து இத்தாதுப்பொருள் பொஹாமியா (Bohemia) நாட்டில் ஏராளமாக உள்ளது எனக் கண்டறிந்தார். கியூரியும் அவர் கணவரும் அந்நாட்டு அரசுடன் தொடர்பு கொண்டு பத்தாயிரம் கிலோ கிராம் பிட்ச்பிளெண்ட் தாதுப்பொருளை ஆய்வுப்பணிக்கு இலவசமாகக் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டனர்; அத்தாதுப்பொருள் கிடைத்தவுடன் கணவன் மனைவி இருவரும் மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு, பிட்ச்பிளெண்ட் தாதுவில் யுரேனியத்தைத் தவிர்த்து அடங்கியுள்ள வேறொரு தனிமத்தைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

1898 ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் ஒரு நாள் இரவு கியூரி தம்பதியினர் தங்கள் ஆய்வுக்கூடத்தில் நுழைந்தவுடன், மேற்கூறிய தனிமம் வைக்கப்பட்டிருந்த சோதனைக் குழாயிலிருந்து ஊதா நிற ஒளி வீசுவதைக்கண்டு திகைப்புற்றனர். ஆனால் ஆய்வுக்கூடத்தில் மெழுகுவர்த்திகளைக் கொளுத்தியவுடன் மேற்சொன்ன ஒளி மறைந்து போனதையும் கண்டனர். இருளில் ஊதா ஒளியைப் பரப்பிய அப்பொருளுக்கு ரேடியம் (Radium) எனப் பெயரிட்டனர். மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு பிட்ச்பிளெண்ட் தாதுவில் பிஸ்மத் (Bismuth) என்னும் தனிமத்தைத் தவிர்த்து ஒளிப்படப் படலத்தின் (photographic film) மீது வினைபுரியும் வேறொரு தனிமம் உள்ளது என்பதையும் கண்டறிந்தனர். அத்தனிமத்திற்குத் தன் தாய்நாடான போலந்தை நினைவுகூறும் வகையில் பொலோனியம் (Polonium) என்று கியூரி அம்மையார் பெயர் சூட்டினார்.

பிட்ச்பிளெண்ட் என்னும் தாதுப்பொருளில் பொலோனியம், ரேடியம் ஆகிய இரண்டும் ஒளிப்படலம் போன்ற பொருள்கள் மீது கதிர்வீச்சை உண்டாக்குவதற்கான அடிப்படைத் தனிமங்களாக (basic elements) விளங்குவதை கியூரி தம்பதியினர் ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்தினர். இம்மகத்தான அறிவியல் பணியைப் பாராட்டி 1903 ஆம் ஆண்டு அவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1906 ஆம் ஆண்டு கியூரியின் கணவர் பீயர் கியூரி சாலை விபத்தொன்றில் சிக்கி இறந்து போனார். இந்நிகழ்ச்சி கியூரி அம்மையாரின் சொந்த வாழ்க்கையிலும், அறிவியல் வாழ்விலும் சொல்லொணாத் துயரத்தை உண்டாக்கிவிட்டது. இருப்பினும் துயரத்தை மறப்பதற்கு மீண்டும் கதிர்வீச்சு ஆய்வுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு உழைத்தார்; ரேடியம் தனிமத்தைத் தூய்மைப் படுத்தி வெளிக்கொணர்வதில் வெற்றி கண்டார்; இப்பணிக்காக அவருக்கு நோபல் பரிசு மீண்டும் ஒரு முறை 1911 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. இவ்வாண்டில் தன் கணவரின் நினைவாக ‘மேரி கியூரி ரேடியம் நிறுவனம் (Marie Curie Institute of Radium) ‘ என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.

மேடம் மேரி கியூரி பெண்மைக்கே உரிய தாய்மைக்குணமும் அன்புள்ளமும் கொண்டவராக விளங்கினார். முதலாம் உலகப் போரில் துயரமுற்றவர்களுக்கு பேருதவி புரிந்தார்; அன்பும் ஆறுதலும் காட்டி அவர்களின் துன்பம் துடைக்க பெரும் சேவை செய்தார். இச்சேவையைப் போற்றி, அமெரிக்க அரசு கியூரி அம்மையாருக்குப் பரிசும் பராட்டும் வழங்கியது. ஒரு வேதியல் தனிமத்திற்கு கியூரியின் நினைவைப் போற்றும் வகையில் கியூரியம் (Curium) எனப் பெயர் சூட்டப்பெற்றது; கதிரியக்க அலகுகளில் (radioactivity units) ஒன்று, கியூரி (Curie) என அழைக்கப்படுகிறது.

**

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி மொழிக் கல்வித்துறை (தமிழ்) வட்டாரக் கல்வியியல் நிறுவனம் மைசூர் 570006

**

Dr R Vijayaraghavan BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர