மனத்தின் வைரஸ்கள் -2 தொத்து நோய் தாக்கிய மனம்

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

ரிச்சர்ட் டாக்கின்ஸ்


(Viruses of the Mind , Richard Dawkins, 1991)3 .

தொத்து நோய் தாக்கிய மனம்

3 The Infected Mind

நான் ஏற்கெனவே, ஒரு குழந்தையின் எதையும் ஏற்றுக்கொள்ளும்படி அமைக்கப்பட்ட பச்சை மனத்தைப் பற்றி கோடிட்டுக் காண்பித்தேன். மொழியைக் கற்றுக்கொள்ளவும், பாரம்பரிய ஞானத்தை உறிஞ்சிக்கொள்ளவும் உதவும் இந்தக்குணமே, கன்யாஸ்திரிகளாலும், மூனி( ஒரு அமெரிக்கக் கொரியரின் சிறு மதம் – மக்கள் இதில் இணைந்தால் வெளிவர வழியின்று ஐக்கியமாகி விடுகிறார்கள். மொ பெ) களாலும் இதர ஏமாற்றுக்காரர்களுக்கும் இலக்காகி விடுகிறது. பொதுவாக நாம், செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறோம். நமது தலைக்குள் செய்திக்தகடுகளைச் செருகி செய்திப் பரிமாற்றம் செய்வதில்லை என்றாலும், நாம் சொற்தொடர்களையும், கருத்துக்களையும், நம் காதுகளாலும், கண்களாலும் பரிமாறிக்கொள்கிறோம். நாம் மற்றவரது உடை உடுத்தும் முறைகள், நடக்கும் விதம், போன்றவைகளைக் கவனித்து அதனால், பாதிக்கப்படுகிறோம். விளம்பரப் பாடல்களால் ஏமாற்றப்பட்டு, அவைகளால் பாதிக்கப்பட்டு பொருட்களை வாங்குகிறோம். இல்லையென்றால், ஒரு பணத்திலேயே குறியான ஒரு வியாபாரி, எதற்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவு பண்ணி பயனற்ற செய்திகளைப் பரப்ப வேண்டும் ?

ஒரு வைரஸ் (அல்லது எந்த ஒட்டுண்ணி பிரதியெடுப்பானும்) ஒரு நட்பான ஊடகத்திள் இருக்கத் தான் முயலும். ஊடகத்திற்கு வேண்டிய இரண்டு குணாதிசயங்கள் என்னவென்று யோசியுங்கள். முதலாவது, அந்த ஊடகம், ஒரு செய்தியை பிரதியெடுக்கத் தயாராக இருப்பது (அசல் தவறுகளோடு இருந்தாலும் பின்னர் திருத்தமாக பிரதியெடுப்பது). இரண்டாவது அந்த பிரதியெடுக்கப்பட்ட செய்திக்குள் இருக்கும் கட்டளைகளுக்கு தவறாமல் கீழ்ப்படிய ஆயத்தமாக இருப்பது. இந்த இரண்டுமே, ஒரு செல்லின் அமைப்பை ஒரு ஒட்டுண்ணி டி என் ஏவுக்கு ஆதரவாக ஆக்குகிறது. இதுவே, ஒரு கணினியை ஒரு கணினி வைரசுக்கு ஆதரவாக ஆக்குகிறது.

செல்லின் அமைப்பும், கணினியின் மின்னணு அமைப்பும், இது போல வைரஸ்-சினேகிதமாக இருப்பதில் மிகச்சிறப்பாக இருக்கின்றன. இதில் மனித மூளையை எப்படி ஒப்பிடலாம் ? பரிசுத்தமாக பிரதியெடுப்பதில், இவை ஒரு செல்லின் அமைப்பையும், கணினியின் மின்னணு அமைப்பையும் விட கொஞ்சம் கீழ் தான். இருப்பினும், மனித மூளைகள் நன்றாகவே பிரதியெடுக்கின்றன. இவற்றை டி என் ஏ வைரஸ் போல, பலமுறை புரூஃப் ரீடிங் செய்து சரியாக சுத்தமான பிரதியெடுக்கும் இயந்திரம் என்று சொல்லாவிட்டாலும் ஆர் என் ஏ வைரஸ் போலவாவது பிரதி எடுக்கின்றன என்று சொல்லலாம். மனித மூளையின், முக்கியமாக குழந்தையின் மூளையின் சரியாகப் பிரதி எடுக்கும் குணம், மொழியாலேயே பெறப்படுகிறது. பெர்ட்னார்ட் ஷா உருவாக்கிய பேராசிரியர் ஹிக்கின்ஸ் பாத்திரம், தன் காதைக் கொண்டு ஒரு லண்டன் வாழ் மனிதர் எந்தத் தெருவைச் சேர்ந்தவர் என்பதை சரியாக சொல்ல முடிகிறது. கதை உண்மையல்ல. இருப்பினும், நமக்கெல்லாம் இருக்கும் திறமையின் மிகைப்படுத்தலே அந்தக் கதாபாத்திரம் என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான். ஒரு அமெரிக்கரால், யார் அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியங்களிலிருந்து வருபவர் என்பதையும், மத்திய அமெரிக்காவிலிருந்து வருபவர் யாரென்பதையும், நியூ இங்கிலாந்துப் பகுதி ஆளை, மலைப்பக்கங்களிலிருந்து வரும் நபரிலிருந்து பிரிப்பதையும் தெளிவாகச் சொல்லமுடியும். ஒரு நியூயார்க் வாசியால், பேச்சை மட்டும் வைத்து ப்ரான்க்ஸ் பகுதியா, புரூக்லினா என்பதைச் சொல்லிவிடமுடியும். இது போல உலகத்தின் எந்த நாட்டிலும் இதைக் கண்டு சொல்ல குறிப்பிட்டவர்களால் இயலும். இது மனித மனம் நன்றாகப் பிரதியெடுக்க வல்லது என்பதையே குறிக்கிறது. இல்லையெனில் ஒரு பகுதியின் உச்சரிப்பு, அதை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு நிலையானதாக இருக்காது. ஒரு சில உச்சரிப்புத் தவறுகளும் வரும் என்பதையும் குறிக்கிறது. இல்லையெனில் உச்சரிப்பு பரிணாமம் அடையாது. இல்லையெனில் ஒரு மொழியின் பேச்சாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவே உச்சரிப்பார்கள். மொழி பரிணாமம் அடைகிறது. ஏனெனில் இதற்கு, நிலையான குணமும், ஓரளவு மாறும் குணமும் இருப்பதால்தான். இந்த இரண்டு குணங்களுமே ஒரு விஷயம் பரிணாமம் அடைய தேவையான குணாம்சங்கள்.

வைரஸ்-சினேகித சுற்றுச்சூழலுக்குத் தேவையான இரண்டாவது குணம் – அதாவது அந்த வைரசுக்குள் இருக்கும் கட்டளைகளை நிறைவேற்றுவது – செல்களையும், கணினிகளையும் விட மனித மூளைக்கு உண்மையில் குறைந்த அளவிலேயே இருக்கிறது. சில நேரங்களில் நாம் மற்றவர்களிடமிருந்து வரும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம், மற்ற நேரங்களில் அப்படிச் செய்வதில்லை. இருப்பினும், உலகம் முழுவதும், எத்தனையோ மதங்கள் இருந்தும், பெரும்பாலான குழந்தைகள் தங்கள் தாய் தந்தையரின் மதங்களையே பின்பற்றுகிறார்கள் என்பது முக்கியமான நடப்பு உண்மை. கும்பிடும் முறை, மெக்காவை நோக்கி வணங்குவது, தலையை ஒரு சுவரை நோக்கி தாளத்தோடு ஆட்டிக்கொண்டே இருப்பது, ஒரு பைத்தியக்காரனை போல நடுங்குவது, ‘மொழிகளில் பேசுவது ‘, — மதங்கள் அளிக்கும் இது போன்ற அனாமத்தான, அர்த்தமில்லாத உடல் ரீதியான அசைவுகள் ஏராளமானவை– போன்ற கட்டளைகளுக்கு மனிதர்கள் கீழ்ப்படிகிறார்கள். அடிமைத்தன உருவில் முழுக்க இல்லாவிட்டாலும், புள்ளிவிவரங்களின் படி, மிகவும் அதிகமான அளவு இவை கீழ்ப்படியப்படுகின்றன.

அதிக ஆபத்தில்லாத விஷயத்தைப் பார்ப்போமெனில், குழந்தைகளிடையே இருக்கும் ‘க்ரேஸ் ‘(craze) என்னும் குணம், காரணகாரியம் கடந்து, ஒரு தொத்து நோய் போலவே செயல்படுவதை பளிச்சென்று பார்க்கலாம். யோ-யோ, உடைகள், புதிதாக கடைக்கு வந்த ஒரு பொம்மை, இதனுடன் கூடவே வெளிப்படும் நடத்தைகள், பள்ளிகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் தீப்போல பரவுகின்றன. ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்குத் தாவுகின்றன. ஒரு தொத்து நோயுக்கும் இதற்கும் ஒரே வித்தியாசம் இது அவ்வளவு ஆபத்தானதல்ல என்பதுதான். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உள்ளே ஆயிரக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்திருந்தாலும், ஒரு பேஸ்பால் தொப்பி நேருக்கு மாறாக தலையில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்க முடியாது. ஆனால், இன்று நேருக்கு மாறாக வைக்கப்பட்ட பேஸ்பால் தொப்பி எல்லா இடங்களிலும் இருக்கிறது. இது எப்படிப் பரவியது என்பதை அறிய நாம் நிச்சயமாக தொத்து நோய் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் முறைகளையே உபயோகப்படுத்த வேண்டும். நாம் ‘முன்னமே நிச்சயிக்கப்பட்டது ‘ போன்ற விவாதங்களில் இணைய வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் தங்களது நண்பர்களது தொப்பி அணியும் முறைகளை காப்பியடிக்கும் படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று பேச வேண்டிய அவசியமும் இல்லை. புள்ளிவிவரப்படி, தொப்பி அணியும் பழக்கம் சுற்றி இருப்பவர்களது தொப்பி அணியும் பழக்கத்தால் பாதிக்கப்படுகிறது என்று சொன்னால் மட்டும் போதுமானது.

முக்கியமில்லாதவைகளாக இருந்தாலும், க்ரேஸ் என்கிற இவை நமக்கு மனித மனத்தை அறிந்து கொள்ள பல உபாயங்களை அளிக்கின்றன. முக்கியமாக குழந்தைகள் மனத்தை. இந்த குழந்தைகள் மனமே ‘செய்தி ஒட்டுண்ணி ‘க்கு தேவையான குணங்கள் கொண்ட ஊடகமாக இருக்கிறது. கணினி வைரஸ் போன்றதோர் செய்தி வைரசுக்கு, கணினியைப் போலவும் செல்லைப் போலவும் சிறப்பான ஊடகமாக இல்லாவிட்டாலும், மனித மனம் ஒரளவுக்கு நம்பிக்கைக்கு உகந்த ஊடகமாக இருக்கிறது.

ஒரு மனம் வைரஸால் பாதிக்கப்பட்டால், அந்த மனம் எப்படி உணரும் என்பதை யோசித்துப் பார்க்கலாம். இந்த வைரஸ் இன்றைய கணினி வைரஸ் போல, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வைரஸாக இருக்கலாம். அல்லது இது யாரும் வடிவமைக்காமல், செய்தி தவறாக பரிமாற்றம் செய்யப்படுவதால், மாறி, சிறப்பான வைரஸாக பரிணமித்திருக்கலாம். எப்படியாயினும், ஒரு பரிணமித்த வைரஸ் ஒரு நீண்ட வைரஸ் பரம்பரையின் வழித்தோன்றலாக இருக்கும். அப்படிப் பட்ட ஒரு வைரஸ் மிகவும் வெற்றிகரமான முறையில் தன்னைத் தானே பிரதியெடுப்பதில் வல்லமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மிகவும் சக்தி வாய்ந்த மனத்து வைரஸ்களின் வளரும் பரிணாமம் இரண்டு விஷயங்களைக் கொண்டது. மாற்றத்தால் (mutation) அதிக அளவு பரப்பும் குணத்தை அடையும் மனத்து வைரஸ்கள் அதிக எண்ணிக்கையில் பரவும். ஒன்றை ஒன்று தாங்கும் கருத்துக்கள் கூட்டணி அமைத்து (ஒன்றை ஒன்று அனுமதிக்கும், தாங்கும் ஜீன்கள் கூட்டணி அமைத்து ஜினோம்களாக ஆனது போல) கோட்பாடுகளாக ஆகும். (எதிர்காலத்தில் கணினி வைரஸ்களும் இப்படி கூட்டணி அமைக்கலாம்). பிரதியெடுப்பான்கள் ஒரு மனித மூளையிலிருந்து இன்னொரு மனித மூளைக்கு இப்படிப்பட்ட குழுமம் குழுமமாகச் செல்கின்றன. இப்படிப்பட்ட ஒன்றுக்கொன்று ஒத்துப்போகும் கருத்துக்களின் குழுமம் காலத்தில் வழியில் ஒரு சிந்தனைக்குழுமமாகக் கருதும்படிக்கு, ரோமன் கத்தோலிக்க மதம், மாயமந்திரவாதம் போன்ற பெயரும் கிடைக்கும். இந்த குழுமம் முழுவதையும் ஒரே வைரஸாகக் கருதுகிறோமா, அல்லது இந்த குழுமத்தில் உள்ள ஒரே ஒரு சிந்தனைத்துளியை வைரஸாகக் கருதுகிறோமா என்பது அதிக முக்கியம் இல்லை. ஒரு கணினி வைரசுக்கும் கணினி புழுவுக்கும் (worm) உள்ள வித்தியாசத்தைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை போல. எது முக்கியம் என்றால், தன்னைத் தானே பிரதியெடுக்கும் கருத்துக்களுக்காக இருக்கும் ஒட்டுண்ணிகளுக்கு நம் மனித மனம் நல்ல விளைநிலமாக இருக்கிறது என்பதும், நம் மனம் ஏற்கெனவே மிக அதிகமாக இது போன்ற ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதும்தான்.

கணினி வைரஸ்கள் போல, மனத்து வைரஸ்களும் தங்களது பலிகடாக்களால் அறிந்து கொள்ள முடியாதபடி மறைந்து கொள்ள முயற்சிக்கின்றன. நீங்கள் ஒரு வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், பெரும்பாலும் உங்களுக்கு அது தெரியாது. அது உங்களிடம் இருக்கிறது என்பதையும் நீங்கள் தீவிரமாக மறுப்பீர்கள். உங்களது மனத்தாலேயே உங்களது மனத்தைப் பாதித்த வைரஸை அறிவது கடினமாக இருக்கலாம். ஆனால் எப்படி அதனை கண்டுபிடிப்பது ? இது போன்ற ஒரு நோயாளிக்கு இருக்கும் வெளிப்படை அடையாளங்களை ஒரு மருத்துவ புத்தக ரீதியில் இதற்கு பதில் கூறுகிறேன்.

1. ஒரு சில விஷயங்கள் மிகவும் உண்மை, மிகவும் சரியானவை, மிகவும் நல்லவை என்ற மிகவும் ஆழமான, உள்ளார்ந்த வைராக்கியத்தால் நோயாளி உந்தப்படுகிறான். இந்த வைராக்கியத்துக்கு எந்த விதமான காரணமோ, நிகழ்கால உண்மைகளோ இந்த நோயாளியால் சொல்ல முடிவதில்லை. இருப்பினும், நோயாளி மிகவும் ஒப்புக்கொள்ள முடிந்த விஷயமாகவும் சரியான விஷயமாகவும் பார்க்கிறான். இந்த நம்பிக்கையை மருத்துவர்கள் ‘மத நம்பிக்கை ‘ (faith) என்று அழைக்கிறார்கள்.

2. எந்த விதமான ஆதாரங்களையும் காட்ட முடியாவிட்டாலும், தன்னுடைய அசைக்க முடியாத வலிமையான நம்பிக்கையே ஒரு நல்ல விஷயம் என்று கூறுகிறார். சொல்லப்போனால், குறைந்த ஆதாரங்கள் இருப்பதே சிறந்த மத நம்பிக்கைக்கு அடையாளம் என்றும் கூறுகிறார். (கீழே பார்க்கவும்)

‘ஆதாரங்கள் இல்லாததே நல்ல நம்பிக்கைக்கு அடையாளம் ‘ என்ற முரண்பாடான இந்த கருத்து வைரஸ் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்வதன் மூலம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் குணம். (This paradoxical idea that lack of evidence is a positive virtue where faith is concerned has something of the quality of a program that is self-sustaining, because it is self-referential (see the chapter “On Viral Sentences and Self-Replicating Structures ‘ ‘ in Hofstadter, 1985) இந்த கருத்து நம்பப்பட்டுவிட்டால், இதற்கு எதிரான எந்தக் கருத்தையும் இது தூக்கி எறிந்து விடுகிறது. ‘ஆதாரங்கள் இல்லாததே நல்ல நம்பிக்கைக்கு அடையாளம் ‘ என்ற கருத்து, இத்தோடு ஒத்துப் போகும் மத நம்பிக்கையுடன் இணைந்து குழுமமாக ஆகிறது.

3. இத்தோடு இணைந்த இன்னொரு அடையாளம் , ‘மர்மம் ‘(mystery) என்பதை நல்ல விஷயமாகப் பார்ப்பது. மர்மங்களை விடுவிப்பது நல்ல குணமல்ல. நாம் மர்மங்களை அனுபவித்து சந்தோஷப்பட வேண்டும். அந்த மர்மங்கள் உடையாமல் இருப்பதில் சந்தோஷப்பட வேண்டும் என்ற கருத்தாக்கம்.

எந்த மர்மத்தையும் விடுவிப்பது மனத்து வைரஸை அதிகம் பரப்புவதற்கு எதிரானதாக இருக்கும். ஆகவே ‘மர்மத்தை விடுவிக்காமல் இருப்பதே நல்லது ‘ என்ற கருத்தாக்கம், இத்தோடு ஒத்துப்போகும் மற்ற வைரஸ்களோடு இணைந்து இருப்பதில் ஆச்சரியமில்லை. உதாரணமாக ( ‘Mystery of Transubstantiation ‘ )கிறுஸ்தவ மதம் வலியுறுத்தும் உருமாற்ற மர்மத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு குறியீட்டு ரீதியில், அல்லது உவமான ரீதியில் நைவேத்திய மது (eucharistic wine) கிரிஸ்துவின் ரத்தமாகப் பார்க்கப்படுவதில் எந்த மர்மமும் இல்லை. ஆனால் ரோமன் கத்தோலிக்க மதத்தின் doctrine of transubstantiation என்ற கோட்பாடு இதை விட அதிகமாகக் கோருகிறது. முழு மதுவும் கிரிஸ்துவின் ரத்தமாக ஆகிவிடுகிறது; ஒயினின் தோற்றம் வெறும் விபத்துதான். ஒயின் ஒயின் போலத் தோன்றுவது ஒரு தற்செயல் தான் என்கிறது. “inhering in no substance ‘ ‘ (Kenny, 1986, p. 72).

Transubstantiation என்ற இந்தக் கோட்பாடு, ஒயின் உண்மையாகவே கிரிஸ்துவின் ரத்தமாக மாறிவிட்டதைக் குறிக்கிறது. இப்படி மாறிவிட்டதை நிரூபிக்க வேண்டுமென்றால், நாம் ‘உண்மையாகவே ‘ என்ற வார்த்தையின் அர்த்தத்தையே மாற்ற வேண்டும். ஒரு வார்த்தையின் பொருளை மாற்றுவது பெரிய பாவமில்லை. இருப்பினும், ஒரு விஷயம் உண்மையாகவே நடந்ததை அப்புறம் எப்படி சொல்வது ? அந்தோனி கென்னி, ஆரம்பகாலப் பூசாரியாக இருந்தபோது, தன்னையே ஆச்சரியப்படுத்திக்கொள்வதை அறிந்தார்.. ‘நான் பார்த்தபடி.. என்னுடைய தட்டச்சு இயந்திரம், transubstantiate ஆன பெஞ்சமின் டிஸ்ரேலியாக இருக்கலாம்.. ‘

ரோமன் கத்தோலிக்கர்கள், தவறே செய்யமுடியாத அதிகார மையத்தின் மீது வைத்திருக்கும் பெருத்த நம்பிக்கை அவர்களை இவ்வாறு ஒயின் இரத்தமாக ‘மாறி ‘ (transubstantiate) ஆகி விட்டதை ஒப்புக்கொள்ள வைக்கிறது என்பதே transubstantiation என்பதன் ‘மர்மம் ‘. இதனை ‘மர்மம் ‘ என்று கூறிவிட்டதும் எல்லாம் சரியாகப் போய்விட்டது என்பதைப் பாருங்கள். குறைந்த பட்சம், ஏற்கெனவே பின்னணியில் பாதிக்கப்பட்ட மனத்திடம் இது நன்றாகவே வேலை செய்கிறது. இதே போன்ற தந்திரமே, மூன்று தெய்வங்களின் மர்மமும் (“mystery ‘ ‘ of the Trinity). மர்மங்கள் தீர்ப்பதற்காக இருப்பவை அல்ல. அவை உங்களை அதிசயிக்கவைக்க உருவானவை. ‘மர்மமே நல்லது ‘ (mystery is a virtue) என்ற கருத்துருவாக்கம், கத்தோலிக்கர்களுக்கு உதவிக்கு வருகிறது. இல்லையென்றால் இது போன்ற ‘மூன்றும் ஒன்றே ‘, அல்லது ‘transubstantiation ‘ போன்ற பொது அறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை நம்புவதற்குக் கடினமாக இருக்கும். திரும்பவும், ‘மர்மமே நல்லது ‘ என்பது தன்னைத்தானே குறித்துக்கொள்ளும் ஒரு வளையம். ஹோஃப்ஸ்டடெர் சொன்னது போல, நம்பிக்கையின் மர்மமே, நம்புபவரிடத்தில் மர்மத்தைத் தொடர்ந்து நீடிக்க வைக்கிறது.

இந்த ‘மர்மமே நல்லது ‘(mystery is a virtue) கருத்துருவாக்கத்தின் மோசமான விளைவு டெர்ட்டுல்லியனின் ‘இது நிச்சயமான உண்மை ஏனெனில் இது நடக்கவே முடியாது ( “Certum est quia impossibile est ‘ ‘ It is certain because it is impossible ‘ ‘) என்பது. இங்கேதான் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது. லூயிஸ் கரோல் எழுதிய ‘வினோத உலகத்தில் அலைஸ் ‘ கதையில் அலைஸ், ‘ நடக்கமுடியாத விஷயங்களை நம்பமுடியாது ‘ என்று சொல்வதற்கு பதிலாக, கோபம் கொண்டு வெள்ளை ராணி ‘உனக்கு அவ்வளவு பயிற்சி இல்லை என்று நிச்சயமாகச் சொல்லுவேன். நான் உன் வயது இருக்கும் போது, ஒரு நாளைக்கு அரை மணிநேரமாவது நான் இதைச் செய்தேன். ஏன், காலையில் சாப்பிடுவதற்கு முன்னால், சுமார் 6 நடக்க முடியாத விஷயங்களைக்கூட நான் நம்பியிருக்கிறேன் ‘ என்று சொல்கிறாள். டாக்ளஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரமான, எலக்ட்ரிக் சாமியார், நம்ப முடியாத விஷயங்களை உங்களுக்குப் பதிலாக நம்புகிறார். இந்த சாமியாரை வாசகருக்கு அறிமுகம் செய்து வைக்கும் வேளையில், எல்லா தடயங்களுக்கும் மாறாக, உலகத்தின் எல்லாப் பொருள்களும் ஒரே ரோஜா வண்ணத்தில் இருப்பதாக நம்புகிறார். நிஜ வாழ்க்கையில் இருக்கும் சாமியார்களுக்கும் இந்த வெள்ளை ராணிகளுக்கும், எலக்ட்ரிக் சாமியாருக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்பதை உணரும்போது, இந்த வெள்ளை ராணிகளும் எலக்ட்ரிக் சாமியாரும் அவ்வளவு நகைப்புக்கிடமாக இருப்பதில்லை. ‘இது நிச்சயமாக நம்ப வேண்டும். ஏனெனில் இது அபத்தம் ‘ டெர்ட்டுல்லியன் மீண்டும். சர் தாமஸ் ப்ரொன் (1635) டெர்டுல்லியனை ஆமோதித்து மேற்கோள்காட்டி சொல்கிறார், ‘ஒரு நடைமுறையில் இருக்கும் மதத்துக்கு போதுமான நம்ப முடியாத விஷயங்கள் இல்லாமலிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் ‘ மேலும் ‘மிகவும் கஷ்டமான நிலையிலேயே என்னுடைய மத நம்பிக்கையை வெளிப்படுத்த விரும்புகிறேன். சாதாரண, கண்ணுக்குத் தெரியும் விஷயங்களின் காரணமாக அல்லாமல், வற்புறுத்தலையே என் மத நம்பிக்கைக்கு காரணமாக்க விரும்புகிறேன் ‘

ஒரு பத்து பந்துகளை கீழே விழாமல் தூக்கிப் போட்டுக்கொண்டிருக்கும் கழைக்கூத்தாடியை ஆச்சரியமாகப் பார்ப்பதைப் போல, இந்த பைத்தியக்காரத்தனத்தையும், சர்ரியலிஸ முட்டாள்த்தனத்தையும் பார்க்கும்போது, ஏதோ சுவாரஸ்யமான விஷயம்தான் நடந்துகொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதாவது மத நம்பிக்கையுள்ளவர்கள் தங்கள் எதிராளிகள் நம்பும் நடக்க முடியாத விஷயங்களை விட தாங்களால் அதிகம் நடக்க முடியாத விஷயங்களை நம்புவதில் ஒரு கெளரவமும் பெருமையும் இருப்பதாக இவர்கள் நினைப்பது போலிருக்கிறது. இவர்கள் மிக மிக அபத்தமான நம்பமுடியாத விஷயங்களை நம்புவதன் மூலம் தங்களது நம்பும் திறனை அதிகப்படுத்திக்கொண்டு, கொஞ்சம் நடக்க முடியாத விஷயங்களை நம்புவதற்கு தயார்படுத்திக்கொள்கிறார்களா ?

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, கார்டியன் பத்திரிக்கை (சூலை 29, 1991) ஒரு அழகான உதாரணத்தை தாங்கி வெளிவந்தது. ஒரு யூத மதகுரு சாப்பிடும் பொருள்களை பரிசோதித்து அவை யூத மத சம்பிரதாயத்தின் படி (கோஷர் என்று இது வழங்கப்படுகிறது) தயாரிக்கப்பட்டுள்ளதா என்று சான்றிதழ் வழங்குகிறார். இந்த மதகுருவின் பேட்டி அதில் வெளிவந்திருந்தது. இவர் சீனாவிலிருந்து வரும் மென்த்தால் என்ற பொருள் மிட்டாய்கள் தயாரிக்கப்பயன்படுகிறது. இந்த மென்த்தால் யூத மதப்பழக்கப்படி தயாரிக்கப்பட்டதா என்று இவர் ஆராய வேண்டிய கட்டாயம். இதற்காக சீனா போக வேண்டும். அதற்குப் பதிலாக இவர் அந்த மென்த்தால் தயாரிக்கும் நிறுவனத்துக்குப் பதில் எழுதினால் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ‘இந்தப் பொருளில் கோஷர் சேர்க்கப்படவில்லை ‘ என்று பதில் எழுதி விட்டார்கள். இந்த கோஷர் ஆராய்ச்சி மிகவும் மோசமான வேலை. ஏனெனில் எல்லாப் பொருள்களையும் அவைகளின் மூலம் வரை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று வருத்தப்படுகிறார் இந்த யூத மதகுரு. ஏன் இந்த அர்த்தமற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று பேட்டியாளர் கேட்டதற்கு அந்த யூத மதகுரு, ‘இதில் அர்த்தம் என்னவென்றால், இதில் ஒரு அர்த்தமும் இல்லை என்பதுதான் ‘ என்று பதில் சொல்கிறார்.

‘பெரும்பாலான கோஷர் சட்டங்கள் எல்லாம் காரணங்கள் சொல்லப்படாத கடவுளின் கட்டளைகள் என்பதுதான் நூறு சதவீத அர்த்தம். யாரையும் கொல்லக்கூடாது என்று சொல்வதைக் கேட்பது மிக எளிது. மிகவும் எளிது. திருடக்கூடாது என்பதைக் கேட்பது கொஞ்சம் கஷ்டம். ஏனெனில் சில நேரங்களில் நமக்கு ஆசை வரும். ஆகவே, நான் கடவுளின் பேச்சைக் கேட்கிறேனா இல்லையா என்பதை நிரூபிக்க முடியாது. ஆனால், மத்தியான நேரத்தில் பாலோடு, அரைக்கப்பட்ட மாமிசமும், பீச் பழங்களும் சாப்பிடக்கூடாது என்று சொன்னால் அது என்னை சோதனை செய்வது. நான் செய்யதன் ஒரே காரணம், எனக்கு அப்படிச் சொல்லப்பட்டிருப்பதுதான். இது சில நேரங்களில் கஷ்டமானது. ‘

ஹெலனா க்ரோனின் அவர்களோடு இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் ஜஹாவி அவர்களது முடக்குவாத தேற்றம் (handicap theory, Zahavi, 1975) இத்தோடு ஒத்துபோவதாகச் சொன்னார். பலகாலம் சிறப்போடு இருந்து, சில சமயம் கேலி செய்யப்பட்ட (Dawkins, 1976), ஜாஹாவி அவர்களது தேற்றம் சமீபத்தில் புத்திசாலித்தனமாக மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டிருக்கிறது (Grafen, 1990 a, b). இது பரிணாம உயிரியலாளர்களால் (Dawkins, 1989) மீண்டும் பேசப்படுகிறது. மயில்கள் தங்களது அபத்தமான எடை அதிகமுள்ள, அட்டகாசமான வண்ணங்கள் உள்ள வால்களை பரிணாம ரீதியில் வைத்துக்கொண்டிருப்பதன் காரணம், அவை அபத்தமான எடை உள்ளவை என்பதும், அட்டகாசமான வண்ணங்கள் கொண்டவை என்பதும் தான் என்று கூறுகிறார். அவை எடை அதிகம் உள்ளவையாக இருப்பதால் அவை ஆபத்தானவை. ஆகவே பெண் மயில்களுக்கு இவை மனத்தைக் கவர்பவையாக இருக்கின்றன. மயில் ஏறத்தாழ இதைத்தான் சொல்கிறது ‘பார் நான் எவ்வளவு வலிமையும் சக்தியும் உடையவனாக இருந்தால், இந்த ஆபத்தான வாலை என்னால் சுமந்து கொண்டு திரிய முடியும் ‘

சுயம்புவாக ஜாஹாவி சொன்னவற்றைப் பற்றி நாம் சரியாய்ப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்பியலான பரிணாமத் தேர்வு (Natural selection) எந்த பிரக்ஞை பூர்வமான முயற்சியும் இல்லாமல் நடந்து வந்திருக்கிறது என்பது சொல்லாமலே புரியும். க்ராஃபென் பழைஅய டார்வினிஸத்தைப் பின்பற்றிய ஒரு கணித மாதிரி வரைபடம் போல அளிப்பதும் இங்கே பொருந்தவே செய்கிறது. மயில்கள் வேண்டி விரும்பி இந்தச் சுமையைச் சுமப்பதாய்ச் சொல்ல வரவில்லை. இது வேண்டி விரும்பித் தான் செய்கின்றன என்றும் சொல்லலாம், தன்னிச்சையாய் நிகழ்வதாயும் சொல்லலாம். ஜஹாவியின் கோட்பாடு டார்வினிசச் சார்பில்லாமலேயே சரியாய்த் தான் இருக்கிறது. தன்னுடைய தேனை விளம்பரப் படுத்துகிற மலருக்கும் இர்ஹ்உ பொருந்தும். வாடிக்கையாளனை நைச்சியம் செய்கிற வியாபாரிக்கும் இது பொருந்தும்.

ஜஹாவி அவர்களது கருத்தின் அடிப்படை, பெண்களிடையே (அல்லது விளம்பரத்தை பெறுபவர்களிடையே) நம்பிக்கையின்மையை இயற்கைத் தேர்வு ஆதரிக்கிறது என்பதுதான். ஒரு ஆண் (அல்லது விளம்பரதாரர்) தன்னுடைய வலிமையைப் பெருமையடித்துக்கொள்வதை நியாயப்படுத்துவது உண்மையிலேயெ மோசமான ஊனத்தை சுமந்துகொண்டுதான். அதாவது உண்மையிலேயெ வலிமையுள்ளவனாலேயே தாங்கமுடிகிற ஒரு ஊனத்தை. இதனை விலையுயர்ந்த நியாயப்படுத்தும் நிலைப்பாடு ( principle of costly authentication ) என்று அழைக்கலாம். இப்போது விஷயத்துக்கு வருவோம். சில மதக் கோட்பாடுகள் கேலிக்கிடமானவையாக இருந்தும் அவைகளுக்கு ஆதரவு இருப்பது, அவைகள் கேலிக்கிடமானவை என்பதாலேயே என்று சொல்லலாமா ? அரைகுறையாக கடவுளை நம்புபவன் எவனாலும், கிரிஸ்துவின் உடலுக்கு ரொட்டி ஒரு குறியீடாக இருக்கிறது என்று நம்ப இயலும். ஆனால் ஒரு வடிகட்டின முழு முதல் கத்தோலிக்கராலேயே transubstantiation போன்ற ஒரு அபத்தத்தை முழுமையாக நம்ப முடியும். நீங்கள் எதையும் நம்ப முடியும் என்று நம்பினால் மட்டுமே, இந்த மக்கள் காரணம் கேட்காமல் நம்புவதை நல்ல விஷயம் என்று பார்க்கப் பழக்கப்பட்டிருப்பதை புரிய முடியும் (சந்தேக தாமஸ் கதையைப் படியுங்கள்)

நாம் மீண்டும் நோய்வாய்ப்பட்ட மனத்தின் வெளிப்பாடுகளைப் பற்றி பேசலாம்.

4. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர், எதிர் நம்பிக்கைகளுக்கு தீவிர எதிர்ப்பாளராகவும், ஏன் அந்த எதிர் மத நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களைக் கொல்லவும், கொலை செய்வதை ஆதரித்து பேசவும் முயல்வார். அதே போல, தானிருக்கும் மத நம்பிக்கைகளை ஒருகாலம் பின்பற்றி விட்டு பின்னர் உதறிவிட்டுச் செல்பவர்களை கொல்வதையும் ஆதரிப்பார். அல்லது திரிபுவாதிகளையும் (அதாவது இவர் கொண்டுள்ள மத நம்பிக்கைகளை சிறிது மாறுதலோடு பின்பற்றுபவர்கள்) கொல்லவும் அவர்கள் மீது வன்முறை அடக்குமுறையையும் ஆதரிப்பார். அதே போல, அவரது மத நம்பிக்கைகளுக்கு எதிர்காலத்தில் ஆபத்து தரக்கூடிய சில சிந்தனைகளையும் தீவிரமாக எதிர்ப்பார். (சில அறிவியல் உண்மைகள்)

நீண்ட வரலாறு கொண்ட இது போன்ற உதாரணங்களில் சமீபத்தியது, சிறந்த நாவலாசிரியரான சல்மான் ருஷ்டி அவர்களைக் கொல்வதாக பயமுறுத்திய நிகழ்ச்சி. இதை எழுதிய அதே நாள், சாத்தானின் கவிதைகள் புத்தகத்தை மொழி பெயர்த்த ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டார். இதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர், இதே புத்தகத்தின் இத்தாலிய மொழிபெயர்ப்பாளர் மீது கொலை முயற்சி நடந்தது. இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட ‘மனவருத்தத்துக்கு ‘, காண்டர்பரி கோவிலின் ஆர்ச் பிஷப் அவர்களும், இன்னும் பல கிரிஸ்தவ தலைவர்களும் தெரிவித்த ‘அனுதாபமும் ‘ (வாடிகன் விஷயம் நிச்சயமாக குற்றத்துக்கு துணை போகும் செயல்) இது போல நாம் முன்னமே பேசிய வெளிப்புற அடையாளங்களில் ஒன்றுதான். இந்த மதம் சம்பந்தப்பட்ட பிரமைகள், எவ்வளவுதான் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும், மதிக்க வேண்டும். ஏனெனில் அவை மதம் சம்பந்தப்பட்டவை.

கொலை என்பது மிகவும் தீவிரமானது. உண்மைதான். ஆனால், அதை விட தீவிரமான வெளிப்பாடு ஒன்று உள்ளது. அது தன் மதத்துக்காக தன்னையே தியாகம் செய்து கொள்வது. ஒரு போராளி எறும்பு தன்னுடைய ஜீன்கள் உள்ள மற்ற எறும்புகளைக் காப்பாற்ற வேண்டி தன்னையே தியாகம் செய்து கொள்வது போல, ஒரு இளம் அரபும், ஜப்பானியனும் சுவர்க்கத்துக்குச் செல்லும் விரைவு வழியாக தன்னைத் தானே தன்னுடைய மதத்துக்காக தியாகம் செய்து கொள்ள பயிற்றுவிக்கப்படுகிறான். இவனை உபயோகப்படுத்திக்கொள்ளும் தலைவர்கள் உண்மையிலேயெ மதத்தின் சார்பாக வீசப்படும் இந்த ‘தற்கொலைப்படை வைரஸ் ‘ தன்னுடைய சக்தியை இழந்துவிடுவதில்லை என்று நம்புகிறார்கள். தற்கொலையும், கொலையைப் போலவே இருபுறமும் கூர்மையான கத்தி. எதிர்காலத்தில் இந்த மதத்துக்கு மதமாற்றம் செய்யக்கூடிய மனிதர்கள் இதனால் ஓடிவிடலாம். அல்லது தன்னைப்பற்றியே சுய நம்பிக்கை இல்லாமல் இது போன்ற உபாயங்களை பின் பற்றும் மதத்தை கேவலமாக மதிப்பிடலாம்.

இன்னும் வெளிப்படையாக, இது போன்று தங்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் மதங்கள் நம்புபவர்கள் இல்லாமல் மறைந்தொழியலாம். மத நம்பிக்கை காரணமாக தற்கொலை செய்து கொண்ட ஒரு உண்மை நிகழ்ச்சி இதற்கு மோசமான உதாரணமாக இருக்கிறது. ‘மக்களின் கோவில் ‘ (People ‘s temple) மதப்பிரிவின் தலைவர் ரெவரெண்ட் ஜின் ஜோன்ஸ் தன்னுடைய ஆதரவாளர்களை எல்லாம் கூட்டிக்கொண்டு அமெரிக்காவிலிருந்து கிளம்பி குயானாவில் இருக்கும் ‘ஆசீர்வதிக்கப்பட்ட நிலத்தில் ‘ ஜோன்ஸ்டவுன் என்னும் இடத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் 980 பேரையும் (குழந்தைகள் முதலாக) சயனைடை குடிக்கச் சொல்லி இறந்து போனார். இந்த அவலமான நிகழ்ச்சி முழுவதுமாக ஆராயப்பட்டு ஸான்பிரான்ஸிஸ்கோ குரோனிகிள் பத்திரிக்கையில் வெளிவந்தது (Kilduff and Javers, 1978).

ஜோன்ஸ், ‘தந்தையார் ‘ தன்னுடைய மந்தையை அழைத்து சுவர்க்கத்துக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று சொன்னார்.

‘நாம் மீண்டும் சந்திக்கப் போகிறோம் ‘ அவர் உறுதியளித்தார் ‘இன்னொரு இடத்தில் ‘

அவரது வார்த்தைகள் அந்த கூடாரத்தின் ஒலிப்பெருக்கிகளில் வெளிவந்துகொண்டே இருந்தன.

‘இறப்பதில் மிகவும் பெருமை இருக்கிறது. எல்லோரும் இறப்பது மாபெரும் காட்சி ‘

இந்த ஜோன்ஸ், ஆரம்பகாலத்தில், தன்னைத்தானே ‘உலகத்திலேயே தான் ஒருவரே பாலுறவு கொள்ளும்படிக்கு அனுமதிக்கப்பட்டவர் ‘ என்று அறிவித்துக்கொண்டார். (அவரது மிக நெருங்கிய தோழர்களும் அனுமதிக்கப்பட்டார்கள்). ‘ஒரு செயலாளர் ஜோன்ஸ் அவர்களுக்காக வேலை செய்தார். அவர் கூப்பிட்டு, ‘புனிதத்தந்தையார் இதை செய்ய மிகவும் வெறுப்படைகிறார். ஆனாலும் என்ன செய்வது. அவருக்கு மிகவும் அவசரமாக தேவைப்படுகிறது.. நீங்கள் தயவு செய்து .. ‘ அவரது பலிகடாக்கள் பெண்கள் மட்டுமல்ல. ஒரு 17 வயது ஆணும் அடக்கம். ஸான்பிரான்ஸிஸ்கோவில் அவர் இருக்கும்போதே, இந்த சிறுவனை ஜிம் ஜோன்ஸ் இருக்கும் ஹோட்டலுக்கு அழைப்பார். அதே சிறுவன் சொன்னான், ‘நான் ஜிம் ஜோன்ஸ் மீது மிகவும் பெரிய மரியாதை வைத்திருந்தேன். அவர் என்னுடைய தந்தையை விட மேலானவர். அவருக்காக என் பெற்றோரையே கொலை செய்திருப்பேன் ‘. இந்த ரெவரெண்ட் ஜிம் ஜோன்ஸ் பற்றி முக்கியமாகச் சொல்ல் வேண்டியது – அவருடைய சுயநலத்தை விட, அவரைப் பின் பற்றியவர்களின் உலகமகா ஏமாளித்தனம்தான் மிகவும் முக்கியமாகப் பார்க்கவேண்டியது. இப்படிப்பட்ட உலகமகா ஏமாளித்தனம் இருக்கும்போது, மனித மனங்கள் மோசமான வைரஸ்களால் தாக்கப்படுவதற்கு ஏதுவாக இருக்கின்றன என்பதை நம்புவதில் என்ன கஷ்டம் ?

ரெவரண்ட் ஜோன்ஸ் சில ஆயிரம் மக்களை மட்டுமே ஏமாற்றினார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அவரது விஷயம் தீவிரமானது. அது கடலுக்குள் இருக்கும் பெரிய பனிப்பாறை மிகச்சிறிய நுனியை தண்ணீருக்கு மேலே நீட்டிக்கொண்டிருப்பதைப் போன்றது. மதத் தலைவர்களால் ஏமாற்றப்படுவதற்கு தயாராக இருக்கும் குணம் பரவலானது. ‘எனக்குப் பணத்தை அனுப்புங்கள். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு இன்னும் பல ஏமாளிகளை எனக்குப் பணம் அனுப்பும்படி வற்புறுத்தலாம் ‘ என்று யாரும் சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்ள முடியும் என்று நம்மில் மிகச்சிலரே பந்தயம் கட்டுவார்கள். ஆயினும், அமெரிக்காவில் எல்லா பெரும் நகரங்களிலும், ஒரு தொலைக்காட்சி கிரிஸ்தவ மதபோதகராவது தொலைக்காட்சியில் தோன்றி மேற்கண்ட எளிதாகத் தெரியும் நம்பிக்கைத் தந்திரத்தை செய்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இவர்களும் மூட்டை நிறையப் பணத்தோடு தப்பி விடுகிறார்கள். ஏராளமாக இருக்கும் ஏமாளிப்பட்டாளத்தைப் பார்க்கும்போது, பளபளவென்று உடையுடுத்திக் கொண்டிருக்கும் இந்த ஏமாற்றுக்காரர்களைப் பார்த்து அனுதாபப்படாமல் இருக்க முடியாது. ஆனால், எல்லா ஏமாளிகளும் பணக்காரர்கள் இல்லை என்பதையும், ஒரு அனாதரவான விதவையின் கடைசிப் பணத்தையும் சுரண்டி இந்த கிரிஸ்தவ மத போதகர்கள் கொழுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் வரை தான் அந்த அனுதாபம். ஒரு முறை நான் ஜஹாவி அவர்களது principle of costly authentication என்ற விலையுயர்ந்த நியாயப்படுத்தும் நிலைப்பாட்டையும் கேட்க நேர்ந்தது. இந்த மத போதகர் மிகவும் உணர்ச்சிகரமான நேர்மையோடு, ‘நீங்கள் எனக்குக் கொடுக்கும் நன் கொடை உங்களை மிகவும் ஏழையாக்கி கஷ்டப்படுத்தும் போதுதான் கடவுள் அந்த நன்கொடையை உண்மையிலேயே பாராட்டுவார் ‘ என்று சொன்னார். வயதான ஏழைகள் சக்கர நாற்காலியில் மேடைக்குக் கொண்டுவரப்பட்டு, தங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் கிரிஸ்தவ பிரச்சாரகரிடம் கொடுத்ததும் எப்படி அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள் என்று சாட்சியம் சொன்னார்கள்.

5. நோயாளி தன்னுடைய உறுதியான மத வைராக்கியங்களும் நம்பிக்கைகளும், தடயங்களால் இல்லாமல், முழுக்க முழுக்க தொத்து நோய் போலவே தன்னைப் பற்றியிருப்பதை உணரலாம். ‘எனக்கு ஏன் இந்த மத நம்பிக்கைகள் இருக்கின்றன ? ஏன் இன்னொரு மத நம்பிக்கைகள் இல்லை ? நான் உலகத்தின் எல்லா மதங்களையும் ஆராய்ந்து, எது எனக்கு உண்மையாகத் தோன்றுகிறதோ அதனை நான் கைக்கொண்டேனா ? ‘ என்று யோசிக்கலாம். நிச்சயமாக அது இல்லை. நீங்கள் ஒரு மதத்தைச் சார்ந்திருந்தீர்கள் என்றால், அந்தக் காரணம் புள்ளிவிபரப்படி, பெரும்பான்மை உங்களது தாய் தந்தையரின் மதமாக. உங்கள் தாத்தா பாட்டியின் மதமாகத்தான் இருக்கும். உயர்ந்த கத்தீட்ரல்கள், உணர்ச்சி பொங்கும் இசை, இதயத்தைப் பிழியும் கதைகள் எல்லாம் உதவுகின்றன என்பது உண்மைதான். ஆனால், எல்லாவற்றையும் விட முக்கியமாக உங்களது மதத்தை நிர்ணயிக்கும் விஷயம் உங்களது பிறப்பின் விபத்துதான். நீங்கள் இப்போது கொண்டிருக்கும், உணர்ச்சிப்பூர்வமாக நம்பும் நம்பிக்கைகள், நீங்கள் வேறொரு சூழ்நிலையில் வேறொரு குடும்பத்தில் பிறந்திருந்தால், முழுக்க முழுக்க வேறாக இருக்கும். தொத்து நோய் மாதிரிதான். நிரூபணம் அல்ல.

6. ஒரு நோயாளி தன்னுடைய தாய் தந்தையரின் மதத்தைத் தவிர வேறொரு மதத்தைச் சார்ந்தவராக இருக்கும் அபூர்வமான சூழ்நிலையிலும், காரணம் தொத்துநோய் முறைதான். அந்த நோயாளி உலகத்தின் எல்லா மதங்களையும் ஒன்று விடாமல் தீர ஆராய்ந்து, எல்லா விளக்கங்களையும் படித்து விட்டு அதில் சிறந்ததை கைக்கொண்டிருக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், புள்ளிவிபரப்படி, அவர் ஒரு தொத்து நோய் ஏற்கெனவே தாக்கிய ஒருவரிடமிருந்து (ஜிம் ஜோன்ஸோ, செயிண்ட் பாலோ, அல்லது ஜான் வெஸ்லியோ யாரோ) பெற்றுக்கொண்ட தொத்து நோய்தான் இது என்பதற்குத்தான் பெருத்த வாய்ப்பு இருக்கிறது. நாம் இங்கே சமதளத்தில் பரவும் தொத்து நோயைப் பற்றி (மீஸல்ஸ் போல) பேசுகிறோம். முன்பு நெட்டுக்குத்தாக பரவும் தொத்து நோய் பற்றிப் பேசினோம்( ஹண்டிங்டனின் கோரியா போல)

7. ஒரு நோயாளியின் உள்ளே தோன்றும் உணர்ச்சிகள் சாதாரண பாலுறவுக்காதல் காரணமாகத் தோன்றும் உணர்ச்சிகளுக்கு இணையாக இருக்கும். இது மிகவும் வலிமை வாய்ந்த மூளையைப் பாதிக்கும் சக்தி. சில வைரஸ்கள் இந்த சக்தியை உபயோகிக்கும் படி பரிணாமம் அடைந்திருப்பது ஆச்சரியமானதல்ல. பாலுறவு சந்தோஷம் அளிக்கும் அவிலாவின் புனித தெரஸா காட்சியைப் (St. Teresa of Avila ‘s famously orgasmic vision) பற்றி இங்கு மறுபடி குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். தத்துவவியலாளர் அந்தோணி கென்னி அவர்கள் transubstantiation மர்மத்தை முழுக்க முழுக்க நம்பும் மக்கள் பெறக்கூடிய சந்தோஷத்தைப் பற்றி நன்றாக எழுதியிருக்கிறார். ரோமன் கத்தோலிக்க மதகுருவாக அதிகாரம் பெற்றதும், முதல் சில மாதங்களில் தான் மத சடங்குகளை நிகழ்த்தும் போது பெற்ற தாங்க முடியாத சந்தோஷம் பற்றி விலாவாரியாக எழுதியிருக்கிறார். ‘பெரும்பாலும் சோம்பேறித்தனமாக படுக்கையில் படுத்திருக்கும் நான், இந்த அதிகாரம் வந்ததிலிருந்து மிகுந்த சந்தோஷத்துடன் துள்ளிக்குதித்து படுக்கையிலிருந்து எழுந்திருப்பேன். பொது மக்களுக்கு முன்னால் நான் சடங்குகளை நிகழ்த்தியதில்லைதான். ஒரு மூலையில் ஆரம்பகால மதகுருவாக இன்னும் பல இளைய மாணவர்களோடு செய்து கொண்டிருப்பேன். இருப்பினும், எனக்கு சந்தோஷத்தில் ஒரு வித்தியாசமும் இல்லை ‘

நான் கிரிஸ்துவின் உடலைத் தொட்டுக்கொண்டிருந்தேன். ஒரு மதகுருவுக்கும் கிரிஸ்துவுக்கு இடையேயான நெருக்கம். இது என்னை மிகவும் சந்தோஷத்துக்குள்ளாக்கியது. நான் சடங்குகளின் போது பேசும் பேச்சுக்குப்பின்னர் கிரிஸ்துவை பார்த்துக்கொண்டிருப்பேன். ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்துக்கொண்டிருப்பது போல. ஒரு மதகுருவாக என் ஆரம்ப நாட்கள் மிகவும் முழுமையானவையாகவும் சந்தோஷம் நிறைந்தவையாகவும் இருந்தன. மிகவும் விலை மதிப்பற்றது, எனினும் மிகவும் தூளாக உடைந்து போய்விடக்கூடியது, ஒரு தவறான கல்யாணத்தில் மாட்டிக்கொண்டதால் சட்டென்று முடிந்து போன காதல் விவகாரம் போன்றது (Kenny, 1986, pp. 101-2) என்ன புத்திசாலித்தனமான வெற்றிகரமான வைரஸ்! கென்னி இந்த வைரசும், தொடுகைமூலம் பரவுகிறது என்பதை கூறுகிறார். (பிஷபின் கையிலிருந்து புதிய மதகுருவின் தலைக்கு, என்று ஒரு விதத்தில் சொல்லலாம்)

கத்தோலிக்க மதக் கோட்பாடுகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மதகுருவும் தன் தலையில் ஆசியளித்து, மதகுருவாக்கிய குருவைத் தொடர்ந்து , காலத்தில் பின் சென்று, தன் ஆன்மீக வம்சாவளியை 12 அபோஸ்தலர்கள் மற்றும் அதற்கு முன்பு — இரண்டாம் ஜ்ஊலியஸ், ஐந்தாம் செலெஸ்டான்,கிரிகரி என்றெல்லாம் தம் வம்சாவளியை நிறுவலாம். (கென்னி 1986- பக் 101).

ஏன் அவர்கள் இப்படி வம்சாவளியை நிறுவுவதில்லை என்பது எனக்கும் வியப்புத் தான்.

(அடுத்தது: அறிவியல் ஒரு வைரஸா ?)

Series Navigation

ரிச்சர்ட் டாக்கின்ஸ்

ரிச்சர்ட் டாக்கின்ஸ்